மெய்ப்பொருள் காண்பது அறிவு

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மக்களிடையே கணிசமான செல்வாக்கு செலுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட கருத்துக்கள் காரணமாக பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட ஏற்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு கூட சமூக வலைத்தளத்தில் பரப்பட்ட செய்திகளே காரணமாகவே ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. அண்மையில் பல செய்திகள் வலைத்தளங்களில் எவ்வித முகாந்தரங்கள் இன்றி பகிரப்படுகின்றன. இவற்றில் பல எவ்விதமான விஞ்ஞானரீதியான அல்லது மருத்துவ ரீதியான உண்மைத்தன்மையும் அற்றவை மற்றும் பலர் தமது குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பகிர்கின்றனர். உதாரணமாக   சிலவற்றினை கீழே தருகின்றேன்

1. அண்மையில் இங்கிலாந்தில் கீத் சூரியபுர என்ற இலங்கையர் நூறு முகப்புத்தக பக்கங்களை திறந்து அதனுடாக குடியேற்ற வாசிகளுக்கு எதிரான மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை , பொய்யாக AI தொழில் நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட படங்களுடன் பரப்பினார். இதன் மூலம் அவர் 300,000 அமெரிக்க டாலர்களை முகநூல் நிறுவனத்தில் இருந்து வருமானமாக பெற்றுக்கொண்டார்.

2. அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவு 1000 இற்கும் அதிகமான பகிர்வுகளை தாண்டியது. அதில் குறிப்பிட்டிருந்த விடயம் மின்னல் தாக்கும் முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று. உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (  ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. மின்னலில் இருந்து தப்பிப்பதற்காக வேறுபல முறைகள் உண்டு.

மேலும் தற்காலத்தில் AI இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட  ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

3. மேலும் ஓர் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது யாதெனில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் போன்ற நகரங்களில் தற்பொழுது சுவாசிக்கும் காற்றின் தரம் வீழ்ச்சியடைகின்றது இது முக்கியமாக வாகனங்கள், தொழிற்சாலைகள் காரணமாக ஏற்படுகின்றது என பதிவிடப்பட்டிருந்தது மேலும் வாகன பாவனையினை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது  ஆனால் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் மேற்குறித்த நகரங்களில் தொழிற்சாலைகள், வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவாகும் அத்துடன் மேற்படி நகரங்களில் காற்று மாசுபடுதலுக்கு முக்கிய காரணம்   தற்போதைய வடகீழ் பருவ பெயர்ச்சி காற்றின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் இருந்து மாசுக்கள் நகர்ந்து இலங்கையினை அடைகின்ற நிலையே ஆகும்.

இவ்வாறு பல சமூக வலைத்தள பதிவுகளை நாம் கூறலாம். உண்மையில் சரியான தகவல்கள் சிறிய தூரம் செல்வதற்கு முன்னர் பொய்யான தகவல்கள் உலகை பலமுறை சுற்றி வந்துவிடுகின்றன.  இவ்வாறு பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் (முகநூல், you tube …) மக்களை திசை திருப்பும் நோக்குடனும் தமக்கு வருமானம் ஈட்டும் வகையிலும் பதிவு செய்யப்படுகின்றன. இறுதியாக பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்களே மேலும் சமூக வலைத்தளங்களில் நிலவும் alogur  காரணமாக குறித்த தவறான தகவல்கள் பலரினை சென்றடைகின்றது எனவே சாதாரண பொதுமக்கள் உண்மை நிலையினை அறிய விரும்பினால் குறித்த விடயம் சம்மபந்தமான துறை சார் நிபுணர்கள் மற்றும் கருத்து கூறுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவங்களின் வலைத்தளம், முகநூல் … போன்றவற்றில் இருந்து சரியான தகவல்களினை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறான ஓர்  நிலைமையினை கருதியே 2000 வருடங்களுக்கு முன்னரே வள்ளுவர் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று கூறினார் அதாவது எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.         

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.