கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வெல விபத்தினை ஏற்படுத்திய குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதுபானத்தினை அருந்திய நிலையில் வாகனத்தினை ஓட்டியதாகவும் போலீசார் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி அவருக்கு மதுபானம் உட்கொண்டு இருக்கின்றாரா என்று கண்டறியும் பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறுவிதமான குற்ற சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இப்பதிவில் breathalyzer எனப்படும் பலூன் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது, அதன் மூலம் எவ்வாறு இரத்தத்தில் இருக்கும் மதுபானத்தின் அளவினை கண்டுபிடிக்கலாம், எந்த காலப்பகுதியில் இந்த பரிசோதனை பொசிட்டிவ் ஆக இருக்கும் … போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு விளக்குகின்றது.

நாம் அருந்தும் மதுபானம் ஆனது களம், இரைப்பை , சிறுகுடல் போன்றவற்றினால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கும் (உறிஞ்சப்படும் வீதமானது பல்வேறுபட்ட காரணிகளில் தங்கியுள்ளது) இவ்வாறு இரத்தத்தில் கலக்கும் மதுபானம் ஆனது உடலின் பல்வேறு அங்கங்களுக்கு செல்லும். அவ்வாறே நுரையீரலுக்கும் சென்றடையும். இவ்வாறு சென்றடைந்த மதுபானமானது நுரையீரலின் சுவாச சிற்றறையில் உள்ள வளியுடன் ஓர் இரசாயன சமநிலையில் (Henry’s Law gas–liquid equilibrium).இருக்கும். அதாவது இரத்தத்தில் உள்ள மதுபானம் சிற்றறை மென்சவ்வின் ஊடாக கசிந்து நாம் சுவாசிக்கும் வளியுடன் தொடுகையில் இருக்கும். இந்நிலையில் நாம் எமது நுரையீரலில் இருக்கும் காற்றினை / வளியினை வெளியில் வெளிச்சுவாசத்தின் மூலமாக பலமாக ஊதி வாயினால் அதனை பலூன் என்றழைக்கப்படும் — கருவியினுள் செலுத்துகின்றோம் அப்பொழுது அச்சுவாச காற்றில் இருக்கும் மதுபானம் (alcohol ) பலூன் கருவியில் இருக்கும் உணரியில் பட்டு மின்சாரத்தினை உருவாக்கும் (Electrochemical method) அம்மின்சாரம் ஆனது மதுபானத்தின் அளவுக்கு விதசமத்தில் இருக்கும். இந்நிலையில் கருவியில் ஏற்கனவே இருக்கும் கணனி புரோகிராம் (program) மூலம் இரத்தத்தில் உள்ள மதுபானத்தின் அளவு மறைமுகமாக கணிக்கப்படும் . சில கருவிகளில் Infrared Spectroscopy என்ற அமைப்பு மூலம் வெளிச்சுவாச வளியில் உள்ள மதுபானத்தின் அளவு கணிக்கப்பட்டு இரத்தத்தில் உள்ள அளவிற்கு மாற்றப்படும்.
1. பலூன் கருவியில் பெறப்படும் வாசிப்பு வெளிச் சுவாச வளியினுடையதா அல்லது இரத்தத்தின் உடையதா?
தற்போதுள்ள கருவிகளில் உள்ள prograam பிரகாரம் வெளிச்சுவாச வளியில் உள்ள மதுபானத்தின் அளவு கணிக்கப்பட்டு இரத்தத்தில் உள்ள மதுபான அளவுக்கு மாற்றப்பட்டே கருவியில் வெளிக்காட்டப்படுகின்றது .
2. எவ்வாறு இரத்தத்தில் உள்ள மதுபான அளவு கணிக்கப்படுகின்றது?
சாதாரண சுகதேகியில் மதுபானம் அருந்திய பின்னர் மதுபானம் இரத்தம் மற்றும் சுவாச சிற்றறையில் இருக்கும் சமநிலை விகிதாசாரம் Blood : Alveolar air = 2100 : 1 ஆகும். சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதமே இது. ஆனால் இவ்விகிதம் 1700 : 1 தொடக்கம் 2400 : 1 வரை என்ற எல்லைக்குள் வேறுபடும்
BAC (இரத்தத்தில் மதுபானத்தின் அளவு )=Breath alcohol concentration (வெளிச்சுவாச வளியில் மதுபானத்தின் அளவு )×2100 என்ற சூத்திரத்தினை அடிப்படையாக கொண்டே இரத்தத்தில் மதுபானத்தின் அளவு கணிக்கப்படுகின்றது.
3. இலங்கையில் சாரதிகளில் அனுமதிக்கப்பட்ட மதுபானத்தின் அளவு என்ன?
இலங்கை மோட்டார் வாகன சட்ட விதிகளின் பிரகாரம் இரத்தத்தில் 80mg /100ml என்பதே அனுமதிக்கப்பட்ட மதுபான அளவு ஆகும்.
4. பலூன் சோதனை நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு முடிவுகளை காட்டுமா?
ஆம். பலூன் பரிசோதனையானது ஏற்கனவே கூறியவாறு எமது நுரையீரலில் இரத்த மதுபானம் மற்றும் சிற்றறையில் உள்ள வளி என்பனவற்றிற்கு இடையில் இரசாயன சமநிலை ஏற்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சமநிலை கடைசியாக மதுபானம் அருந்தி 20 தொடக்கம் 60 நிமிடங்களின் பின்னரே ஏற்படும். இந்நேர இடைவெளியின் முன்னர் செய்யப்படும் பரிசோதனை எதிர் மறையான விளைவினையே தரும். மேலும் நாம் உட்கொள்ளும் மதுபானம் ஆனது 06 மணித்தியாலங்களில் முற்றாக எமது உடலில் இருந்து வெளியேற்றப்படும் இதன் காரணமாக 06 மணித்தியாலங்களின் பின்னர் செய்யப்படும் பலூன் பரிசோதனைகள் எதிர் மறை விளைவினையே தரும் மேலும் கடைசி மதுபானம் அருந்தி 1-2 மணித்தியாலங்களின் பின்னர் இரத்தத்தில் மதுபானத்தின் அளவு குறைய தொடங்கும் இந்நிலையில் பலூன் சோதனை எதிர் மறை விளைவினை தரலாம். இதன் காரணமாகவே கடைசி மதுபானம் அருந்தி 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் பலூன் பரிசோதனை மேற்கொள்ள சிபாரிசு செய்ய படுகின்றது.

5. மேற்கத்தேய நாடுகளில் எவ்வாறு இப்பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது?
1. வீதியோரங்களில் – சந்தேகத்திற்கு உரிய சாரதிகளை இனம் காண பயன்படுகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை இலகுவாக சட்ட சவாலுக்கு உட்படுத்தப்படலாம்.
2. போலீஸ் நிலையங்களில் – கைதுசெய்யப்பட்ட சாரதி போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு வாய் கொப்புளிக்காமல், நீர் அருந்தாமல், உணவு அருந்தாமல் மற்றும் புகைப்பிடிக்காமல் 60 நிமிடங்கள் வரை காத்திருக்க வைக்கப்பட்டு, முதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 20 தொடக்கம் 60 நிமிடங்களில் உணர் திறன் மிக்க பலூன் கருவியினால் மேற்கொள்ளப்படும். இதன் முடிவு நீதி மன்றிற்கு போலீஸாரினால் சமர்ப்பிக்கப்படும்.
3. ஆய்வுகூடத்தில் – போலீஸ் நிலையத்தில் பெறப்படும் பலூன் பரிசோதனை முடிவினை சாரதி ஏற்றுக்கொள்ளாத விடத்து இரத்தம் பெறப்பட்டு ஆய்வுகூடத்தில் பகுப்பாய்வு செய்யப்படும். இலகுவாக சட்ட சவாலுக்கு உட்படுத்த முடியாது.

6. எவ்வாறான உடற் காரணிகளினால் பலூன் பரிசோதனை முடிவானது பாதிக்கப்படலாம்?
நுரையீரல் நோய்கள், அதிக சுவாச வீதம், குறைந்த சுவாசம், உடல் வெப்பநிலை, பற்களின் ஈறுகளில் அல்லது வாயில் இருக்கும் மதுபானம் போன்றவற்றினால் பாதிக்கப்படலாம்.
நன்றி
