மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும்

கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான  நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன  போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது.

மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன  முற்றாக  நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூளையின் செயற்பாடு நிறுத்தப்படல் இறப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு முதலில் நிறுத்தப்படுவதினை தொடர்ந்து இருதய மற்றும் சுவாச செயற்பாடுகள் நிறுத்தப்படும் உதாரணம் தலையில் நிகழும் துப்பாக்கி சூடு. மருத்துவத் துறையில் மனிதனின் இறப்பை பின்வரும் 03 வகைகளாக பிரிக்கலாம்.

1. உடலியல்/மருத்துவ மரணம் (Somatic/Clinical Death): இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் மூளை செயல்பாடு ஆகியவற்றின் முழுமையான, மீளமுடியாத நிறுத்தம். மரணித்த நேரம் என்பது  உயிர்ப்பித்தல் சாத்தியமற்றதாக மாறும் புள்ளியைக் குறிக்கிறது.

2. மூளை மரணம் அல்லது மூளைச்சாவு (Brain Death) : பல்வேறு காரணங்களினால் மூளை அதனுடன் இணைந்த மூளைத்தண்டு  இறத்தல். இதயம் இயந்திரங்களால் தொடர்ந்து துடித்தாலும், மூளைத் தண்டு உட்பட அனைத்து மூளை செயல்பாடுகளின் நிரந்தர இழப்பு மீளமுடியாததாகக் கருதப்படுகிறது.

3. கல/மூலக்கூற்று மரணம்( Cellular/Molecular Death): ஆக்ஸிஜன் குறைந்து உடலியல் இறப்புக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஏற்படும் தனிப்பட்ட செல்கள் மற்றும் திசுக்களின் மரணம். இரத்த ஓட்டம் முற்றாக தடைப்படும் இடத்து அதாவது  ஓட்ஸிசன் இல்லாதவிடத்து மனித மூளையின் கலங்கள் 3 தொடக்கம் 7 நிமிடங்கள் முற்றாக இறந்து விடும், இருதய கலங்கள் 3 தொடக்கம் 5 நிமிடங்களில் இறந்துவிடும் அவ்வாறே தசைகளில் உள்ள கலங்கள் பல மணித்தியாலங்களில் இறக்கும். 

பல சந்தர்ப்பங்களில் உடற்கூராய்வு பரிசோதனைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் என்னிடம் வினவும் முக்கிய கேள்வி யாதெனில் தூக்கு மாட்டி 5 நிமிடத்தில் நாம் தூக்கு கயிற்றினை வெட்டி அகற்றி விட்டொம், நீரில் வீழ்ந்து சில நிமிடங்களில் தூக்கி விட்டொம் ஏன் இறந்து விட்டார் என்பதே ஆகும். அதற்பொழுது உங்களுக்கு விளங்கும் உடலில் முக்கிய அவயவங்களான மூளை மற்றும் இருதயம் போன்றவற்கு 5 நிமிடங்கள் இரத்தம் அல்லது ஓட்ஸிசன் முற்றாக தடைப்பட்டால் இறப்பு நிகழும் என்பது. 

 மூளைச்சாவு, இச்செயற்பாட்டின்பொழுது சில சந்தர்ப்பத்தில் மூளையின் தண்டுவடம் (brainstem) உயிர்ப்பான நிலையில் இருக்கும் அதன் காரணமாக மூளை தண்டு வடத்தில் காணப்படும் சுவாச, இருதயத்தினை கட்டுப்படுத்தும் பகுதிகள் வேலை செய்யும் இதன் காரணமாக குறித்த  நபரின் இருதயம்  துடித்துக் கொண்டிருக்கும் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசத்தினை மேற்கொண்டு கொண்டிருக்கும். ஆனால் மூளை மீள இயங்க முடியாதவகையில் இறந்திருக்கும். சில சந்தர்ப்பத்தில் மூளை தண்டுவடம் இறந்தால் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகளை நாம் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளலாம்

சட்ட ரீதியாக (Transplantation Of Human Tissues Act (No. 48 of 1987)ஒருவரின் மூளை இறந்து விட்டால் அவர் சாவடைந்தவராகவே கருதப்படுவார். எனவே தான் மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து  சிறுநீரகம் போன்ற அவயவங்கள் பெறப்பட்டு  மற்றவர்களுக்கு மாற்றிவிடு செய்யப்படுகின்றன. எனவே மேற்படி செயற்பாட்டினை நாம் சட்டரீதியாக சவாலுக்கு  உட்படுத்த முடியாது.

இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து பல்வேறுபட்ட உடல் அவயவங்கள் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்படும். தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் இவ்வாறு உடல் உறுப்புக்களை தானம் செய்யவதில் முன்னிலை வகிக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை கண் (விழிவெண்படலம்) வழங்குவதில் முன்னிலை நாடாக திகழ்கின்றது. குறிப்பாக பௌத்த மதம் இவ்வாறான உடல் உறுப்பு தானங்களை ஊக்குவிக்கின்றது. சைவ மற்றும் ஏனைய மதங்களில் அவ்வாறான ஊக்குவிப்புக்கள் இல்லை. இதன் காரணமாக மேற்குறித்த மதத்தினரின் மூலம் உடல் உறுப்பு தானங்கள் மற்றும் இரத்த தானம் உட்பட குறைவாகவே நடைபெறுகின்றது.

சைவசித்தாந்த கோட்பாடுகளும் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்பு தானமும்

சைவ சித்தாந்த தத்துவத்தில் முக்கிய இடம் பெறுவது முப்பொருள்கள் ஆகும். அவையாவன பதி, பசு, பாசம் என்பனவே ஆகும். அந்த வகையில் பதியை அடுத்துள்ள நிலையில் உள்ளது பசுவாகும். பசுவானது ஆன்மா, ஆத்மா, உயிர், அனேகன், ஜீவன், ஜீவாத்மா மற்றும் சதசத்து என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உடலை இயக்கக்கூடிய கண்ணிற்குத்தெரியாதொரு சூக்குமப்பொருளே ஆன்மாவாகும். சித்தாந்திகளிக் கருத்துப்படி உடலை இயக்கும் சக்தியே ஆன்மாவாகும்.

சைவ சமயத்தின்படி, உடல் என்பது நிலையற்ற, அழிவுக்குட்பட்ட பொருள், அது ஆன்மாவைத் தாங்கும் ஒரு வாகனம். மாறாக, ஆன்மா என்பது நிலையான, அழிவற்ற, அழிந்துபோகாத ஒரு சாராம்சம். இது உடலை இயக்கும் சக்தி, அறிவின் இருப்பிடம், மற்றும் வாழ்வின் ஆதாரமாகும்.

எனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து சிறுநீரகம், ஈரல் … போன்ற உடல் அங்கங்களை அகற்றுவதினால் அவரின் ஆன்மாவினை நாம் அழிக்க முடியாது மாறாக உடல் அவயவங்களை அதாவது உடலை  இயக்கும் சூக்கும சக்தியான ஆன்மாவினை நாம் வேறு உடலுக்கு மாற்றுவதன் மூலம் குறித்த நபரினை சில காலம் பூமியில் வாழ வழிசெய்யலாம் அதாவது இறந்தவரின் ஆத்மாவினை இன்னொருவரின் உடலில் வாழ வழிசெய்யலாம். உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வாமாக சிந்திப்போம்.

நன்றி      

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.