மருத்துவ உலகில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது நோயாளிகளிடத்திலிருந்து பல்வேறுவிதமான சம்மதங்கள் பெறப்படும். சில சந்தர்ப்பங்களில் நோயாளியின் வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த சிகிச்சையினை வழங்காது விடும்பொழுது கூட சம்மதம் பெறப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து சுகாதார துறை ஊழியர்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சம்மதம் முக்கியமானது ஆகும். நோயாளியின் உரிய சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் வைத்திய பரிசோதனைகள் சட்ட ரீதியில் தனிநபர் தாக்குதலாகவே கருதப்படும்.
பல சந்தர்ப்பங்களில் இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் சிக்கலான சத்திர சிகிச்சைகள், நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை போன்றவற்றினை மேற்கொள்ளும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் சம்மதம் வேண்டப்படும் ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் குடும்பம் என்பது சமூகத்தில் ஓர் முக்கியமான கட்டமைப்பு ஆகும். மேலும் குறித்த நோயாளியினை வைத்தியசாலையில் இருந்து விடுவித்த உடன் குடும்ப உறுப்பினர்களே பாரமெடுத்து பராமரிப்பார்கள் மாறாக மேலைத்தேச நாடுகளில் தனிநபர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் இதன் காரணமாக நோயாளி விரும்பும் பொழுது தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் நோயாளியின் நோய்நிலைமை, சிகிச்சை முறைகள் பற்றி அறிவிக்கப்படும். மேலும் மேலைத்தேச நாடுகளில் நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பராமரிப்பது குறைவு.
இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் இதுவரை காலமும் கணவன் அல்லது மனைவிக்கு நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சையினை மேற்கொள்ளும் பொழுது கணவனாயின் மனைவிக்கும், மனைவியாயின் கணவனுக்கும் தெரியப்படுத்தி வைத்தியசாலையில் அவர்களின் சம்மதமும் வாங்கப்படுவதே வழமை. ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை வாசெக்டமி எனவும் பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை LRT (Ligation and Recession of Tubes) எனவும் அழைக்கப்படுவது யாவரும் அறிந்தமையே.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் இவ்வாறு நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சைக்கிளை மேற்கொள்ளும் பொழுது வாழ்க்கை துணையின் சம்மதத்தினை அதாவது வாழ்க்கைத்துணையின் சம்மதத்தின் பொருட்டு அவர்களின் கையெழுத்தினை பெறத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட முன்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பெண்களின் உரிமைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என பெண்ணியல் வாதிகளினால் கூறப்படுகின்றது .
சுற்றறிக்கையின் எதிர்கால தாக்கம்
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தனிநபர் உரிமைகளினை அதாவது பெண்களின் உரிமைகளை விட குடும்பத்திற்கு சமூக, கலாச்சார மற்றும் சமய ரீதியில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே பல குடும்ப பெண்கள் எவ்வளவோ வேதனைகள், அவமானங்கள்… போன்றவற்றினை தாங்கி வாழ்ந்து வருகின்றனர். மேலைத்தேச நாடுகளில் “My Car My Petrol” என்று கூறுவார்கள் அதன் அர்த்தம் எனது கார் எனது பெற்றோல் அதாவது நான் உழைத்து வாங்கிய கார் மற்றும் பெற்றோல் நான் அதனை எவ்வாறும் பயன்படுத்துவேன் அல்லது பயன்படுத்தாமலும் விடுவேன். அதனை மற்றவர்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறு மேலைத்தேச நாடுகளில் தனிநபரின் உரிமைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு தனி நபரின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரணமாக குடும்ப அமைப்பு குறித்த நாடுகளில் சிதைவடைந்துள்ளது. இந்நிலையில் கண்முடித்தனமாக மேலை நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை கண்முடித்தனமாக பின்பற்ற தொடங்கினால் நிச்சயம் விபரீதமான சமூக விளைவுகள் ஏற்படும்.

குடும்ப திட்டமிடல் என்பது இலகுவாக சொல்வதானால் எத்தனை பிள்ளைகள் வேண்டும், பிள்ளைகளுக்கு இடையே எத்தனை வயது வித்தியாசம் விட வேண்டும் போன்ற விடயங்களே ஆகும். அதன் ஒரு பகுதியே தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை. குடும்ப திட்டமிடல் என்பது குடும்பத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவு. இவ்வாறான ஓர் முக்கியமான விடயத்தில் தனி ஒருவர் தீர்மானம் எடுப்பது பிரச்சனையிலேயே முடியும்.
நன்றி
