வருட இறுதியில் பொதுவாக நீண்ட விடுமுறை நாட்களில் குறைந்த ஆளணியுடன் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வேலைசெய்யும் பொழுது அதிகளவு நான் அவதானித்த மரணம் Holiday heart syndrome எனப்படும் நோய் நிலையினால் ஏற்படும் மரணங்கள். இவை குறிப்பாக வருட இறுதியில் நடைபெறும் மதுபான விருந்துகளுடன் தொடர்புபட்டவை. Holiday heart syndrome (ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்) என்பது அதிக அளவு மது அருந்திய (binge drinking) பிறகு 12 தொடக்கம் 36 மணித்தியாலங்களில் ஏற்படும் இதய துடிப்பு சீர்குலைவு (atrial fibrillation) நிலையாகும், இது பெரும்பாலும் விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் தோன்றுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. முக்கியமாக மது அருந்தி போதையின் உச்சத்தில் இந்த நோய் நிலைமை வருவதில்லை. மேலும் நெஞ்சு படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் பொழுது உறவினர்கள் மது அருந்தியமையால் தான் இவ்வாறு ஏற்படுகின்றது என்பதினை அறிவதில்லை இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க காலதாமதம் ஏற்படுகின்றது அதனால் மரணம் சம்பவிக்கின்றது.

ஏற்படுவதற்கான காரணங்கள்
அதிக மது உட்கொள்ளல் இதய செல்களின் எலக்ட்ரோலைட்டுகளை மாற்றுவதன் மூலமும், கேட்டகோலமைன்களை அதிகரிப்பதன் மூலமும், இதய தசை மின் சமிக்ஞைகளை அதாவது கணத்தாக்கம் கடத்துதலை (cardiac conduction ) நேரடியாகப் பாதிப்பதன் மூலமும் இதய மின் இயற்பியலை (cardiac electrophysiology) சீர்குலைக்கிறது. எப்போதாவது மது அருந்துபவர்கள் கூட இந்த ஆபத்தை எதிர்கொள்கின்றனர், மது அருந்திய 12-36 மணி நேரத்திற்குப் பிறகு அறிகுறிகள் உச்சத்தை அடைகின்றன. நீரிழப்பு, அதிகமாக சாப்பிடுவது, அதிகமாக உப்பு உட்கொள்ளல், கொழுப்பு உணவுகள், தூக்கமின்மை மற்றும் குளிர் போன்ற காரணிகள் பண்டிகை காலங்களில் இந்த பாதிப்பை அதிகரிக்கின்றன.
அறிகுறிகள்
அதிகளவு மது அருந்திய பின்னர் இதய படபடப்பு, மூச்சுத்திணறல், சோர்வு, மார்பு வலி, மயக்கம் போன்றவை 12-36 மணி நேரத்தில் தோன்றும்; கடுமையான நிலைகளில் ஸ்ட்ரோக் அபாயம் உள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்
ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் தடுப்புக்கு முக்கிய நடவடிக்கைகள்
- விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் அதிக அளவு மது அருந்துவதை தவிர்க்கவும்
- ஒரே அடியாக மதுவினை தொடர்ச்சியாக அருந்தாமல் நேர இடைவெளிகளில் அருந்த வேண்டும் மேலும் அதிகளவு நீர் அருந்தல் வேண்டும்.
- உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் சாப்பிடவும்.
- அறிகுறிகள் (படபடப்பு, மூச்சுத்திணறல்) தோன்றினால் உடன் மருத்துவரை அணுகவும்.
- உப்பு, கொழுப்பு உணவுகளை குறைத்து, பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்ளவும்.
- உடற்பயிற்சி தொடர்ந்து செய்து, தூக்கத்தை 7-8 மணி நேரம் பெறவும்.
- புகைப்பிடிப்பை முற்றிலும் நிறுத்தவும்
இவ்வாறான மரணங்களில் உடற் கூராய்வு பரிசோதனைகளின் போதுள்ள முக்கிய சவால் இரத்தத்தில் உள்ள மதுபானத்தின் அளவு மற்றும் ஏனைய முடிவுகள் யாவும் சாதாரண அளவில் அல்லது இல்லாமல் இருக்கும்.
நன்றி
