ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுகிறார் அல்லது சிறை வைக்கப்படுகின்றார் என்றால் அவரது நலனுக்கும் பாதுகாப்புக்கும் சிறைத்துறை மற்றும் நீதி அமைச்சு உட்பட்ட நீதித்துறை பொறுப்பாகின்றது. இலங்கையில் பொதுவாகவே பொறுப்புக் கூறல் விவகாரம் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்பதால் சிறைத் துறையிலும் கைதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறைத் துறையோ நீதித் துறையோ நீதி அமைச்சோ பொறுப்பேற்பதில்லை. இந்தப் பின்புலத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாத காரணத்தால் சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ – 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரை இலங்கை சிறைகளில் குறைந்தது 168 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 155 பேர் நோய்களாலும், ஒன்பது பேர் தற்கொலையாலும் இரண்டு பேர் சிறைச்சாலைகளில் தாக்குதல்களாலும், இரண்டு பேர் சிறைச்சாலைகளில் விபத்துகளாலும் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் சிறைச்சாலைகளில் பராமரிப்பு வசதிகளில் கடுமையான பலவீனம் இருப்பதாகவும் பெரும்பாலான இறப்புகள் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ நிலைமைகள் மற்றும் போதுமான மருத்துவ தலையீடு இல்லாததால் ஏற்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் கைதிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வலுக்கட்டாயமாக உட்கொள்வதும், அடிப்படை மருத்துவ சேவையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதும் இந்த நிலைமையை தீவிரமாக அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகவும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த மாதமும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் பொழுது சாவடைந்தார் மேலும் அதே பகுதியினை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக சகோதரியினால் கூறப்படும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு என்ன நடந்தது என்ற நிலவரம் இன்னமும் வெளிவரவில்லை.
“மறியல் சாலை மரணங்கள் (custodial deaths) ” என்பது ஒருவர் கைது செய்யப்பட்ட கணத்தில் இருந்து விடுதலையாகும் வரை சம்பவிக்கலாம். இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறான மறியல்களில் நடைபெறும் சகல மரணங்களும் மஜிஸ்திரேட் நீதவானினால் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உடலங்கள் உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே தான் சட்ட வைத்திய அதிகாரிகள் இவ்வாறு நடைபெறும் மறியல் மரணங்களை பற்றிய விசாரணைகளில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
மேற்குறித்த அறிக்கையின் பிரகாரம் பெரும்பாலான மரணங்கள் இயற்கை நோய்களால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒருவர் இவ்வாறான மறியல்களில் இருக்கும் பொழுது ஏற்படும் மன அழுத்தம், போதிய சிகிச்சை வசதி இன்மை… போன்ற பல்வேறு காரணங்களினால் அவருக்கு ஏற்கனவே இருக்கும் இயற்கை நோய் நிலைமை அல்லது இனம் காணப்படாமல் இருந்த நோய் நிலைமை அதிகரித்து மரணத்தினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறு மறியல் சாலைகளில் இருக்கும் பொழுது டெங்கு, கொரோனா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டும் இயற்கை மரணம் சம்பவித்து இருக்கின்றது.
மேலும் தற்போதைய காலப்பகுதியில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை என்றும்மில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக போதைப்பொருள் அல்லது மதுபானத்திற்கு அடிமையானவர்கள் மறியலில் வைக்கப்படும் பொழுது அவர்களினால் போதைப்பொருள் அல்லது மதுபானத்தினை நுகரமுடியாமல் போகும் அதன்காரணமாக Delirium எனப்படும் சித்த பிரமை உருவாகும். இந்த நோய் நிலைமை உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசர சிகிச்சை நிலையாகும். தாமதமாகும் பொழுது மரணத்தினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறான நோய் நிலைமையின் பொழுது ஏற்படும் நடுக்கம், பதட்டம், சமநிலை குழப்பம் என்பன காரணமாக நிலத்தில் வீழ்வதன் காரணமாக கூட மரணம் சம்பவிக்கலாம். மேலும் இவ்வாறானவர்களை கைது செய்யும் பொழுது அவர்கள் பலசந்தர்ப்பங்களில் தமது உடைமையில் மறைத்து வைத்திருக்கும் போதைப்பொருளினை பொலிஸாருக்கு தெரியாமல் விழுங்கிய நிலையில் அது அதிகளவு நஞ்சாதலினை ஏற்படுத்தி மரணத்தினை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கைது மற்றும் மறியல் என்பவற்றினால் ஏற்படும் அதீத மன அழுத்தம் காரணமாக பலர் சிறைச்சாலை மற்றும் போலீஸ் நிலையங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். உண்மையில் இவ்வாறன தற்கொலை மரணங்களை தடுப்பது என்பது சவால் மிக்கது. பல சந்தர்ப்பங்களில் தமது சேட்டினை கழற்றி கதவின் கைப்பிடியில் தூங்கிய சம்பவங்கள் நிறையவே உண்டு.
சில சந்தர்ப்பங்களில் போலீஸ் மற்றும் சிறைச்சாலை போன்றவற்றில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள், சித்திரைவதைகள் காரணமாகவும் இறப்பு நிகழ்ந்துள்ளது எனவே மறியல் மரணங்கள் நிச்சயமாக விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட வேண்டும் அத்துடன் இவ்வாறான மரணங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும்.
நன்றி
