அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியில் இரு நாய்கள் கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் எச்சங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பரவலான சந்தேகங்கள் எழுந்தன அதாவது குறித்த நாய்களின் இறைச்சி புதுவருட கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட வேறு இறைச்சிகளுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்பட்டிருக்கலாம் என்று. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனை ஒத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது. அதாவது பசுக்கன்று ஒன்று இறைச்சி ஆக்கப்பட்டுள்ளது என வதந்தியான தகவல் பரவியத்தினால் ஏற்பட்ட கலவரத்தில் ஒருசிலர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் துண்டுகளாக்கப்பட்ட இறைச்சியின் தோற்ற இயல்புகளை வைத்து இது இன்ன மிருகத்தின் இறைச்சி என்று கண்டு பிடிப்பது மிகமிக கடினம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இறைச்சி போன்றவற்றிற்கு DNA பரிசோதனை செய்யப்படும். மேலே விபரிக்கப்பட்ட இந்தியாவில் நடந்த சம்பவத்தில் குறித்த இறைச்சி மாதிரிகள் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அது ஆட்டின் இறைச்சி என நிரூபிக்கபட்டது.
ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அல்லது இதனை ஒத்த சம்பவங்கள் நிகழ்வது அதிகம். அதாவது தடைவிதிக்கப்பட்ட, அரிதான விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடல், உறுப்புக்களுக்காக விலங்குகளை கொல்லல் முக்கியமாக கொம்பிற்காக காண்டா மிருகம் (Rhino), செதில்களுக்காக எறும்பு தின்னிகள் (Pangolins) போன்றன சட்ட விரோதமான முறையில் கொல்லப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேட்டைகாரர்கள் அல்லது கடத்தல் காரர்கள் அவ்விலங்குகளின் இறைச்சிகளை சிறிய துண்டுகளாகவே கடத்துவார்கள் அல்லது காண்ட மிருக கொம்பு /எறும்பு தின்னியின் செதில் போன்றவற்றினை சிறு துகள்களாக அல்லது பவுடர் ஆகவே கடத்துவார்கள். ஏனெனில் இலகுவாக இனம் காண்பதினை தடுப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப ஆகும். மேலும் இவ்வாறன சட்ட விரோத செயற்பாடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளும் என்பது வெளிப்படையான விடயம்.
எனவேதான் மேற்குறித்த நாடுகளில் இவ்வாறன விலங்கு எச்சங்களை DNA பரிசோதனை செய்து அது எந்த விலங்கு, எந்த இனத்திற்கு உரியது போன்ற (உதாரணம் கறுப்பு காண்டா மிருகம், வெள்ளை காண்டா மிருகம், இந்திய காண்டா மிருகம்) போன்ற தகவலைகளை எல்லாம் கண்டு பிடித்து, தப்பிக்க முடியாதபடி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குகின்றனர்.
RhODIS, அல்லது காண்டாமிருக DNA குறியீட்டு அமைப்பு என்பது தனிப்பட்ட காண்டாமிருகங்களை விவரக்குறிப்பு செய்வதன் மூலம் காண்டாமிருக வேட்டையாடுதலை எதிர்த்துப் போராடுவதற்காக பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் கால்நடை மரபியல் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தடயவியல் DNA தரவுத்தளமாகும். சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதல் வழக்குகளில் உயிரியல் மாதிரிகளிலிருந்து இனங்கள், தோற்றம் மற்றும் தனிநபர்களை அடையாளம் காண்பதன் மூலம் வனவிலங்கு தடயவியலில் DNA சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கருக்கள் அல்லது சிதைந்த எச்சங்கள் போன்ற உருவவியல் அடையாளம் தோல்வியடையும் போது இது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை வழங்குகிறது. இலங்கையில் மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ இவ்வாறன DNA தரவுத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
நன்றி
