அறிவோம் தெளிவோம்

பல மிகைப்படுத்தப்பட்ட விஞ்ஞானரீதியான அல்லாத தகவல்கள் சமூகத்தில் பரவிவரும் நிலையில், வீதி ஓரத்தில் நெல் காயவிடப்படுவதினால் ஏற்படுகின்ற தீங்கான சுகாதார விளைவுகள் என்ன,  விஞ்ஞான ரீதியாக சாத்தியமா என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

1. Polycyclic (Poly Aromatic) Hydrocarbons – PAHs என்றால் என்ன ?

போலிசைக்ளிக் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHகள்) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணைந்த பென்சீன் வளையங்களால் ஆன ஒரு பெரிய கரிம சேர்மக் குழுவாகும். அவை முக்கியமாக கரிமப் பொருட்களின் முழுமையற்ற எரிப்பின் போது உருவாகின்றன. இவற்றின் முக்கிய இயல்புகள்  தட்டையான, இராசயன ரீதியில் நிலையான வளைய அமைப்புகள்,  தண்ணீரில் குறைவாகவும் , கொழுப்புகளில் அதிகளவில்  கரையக்கூடியது. நிலையான மாசுபடுத்திகள் அதாவது  காற்று, மண், உணவு மற்றும் திசுக்களில் நீண்ட காலம் இருக்கும்.

2.  PAH குழுவில் அடங்கியிருக்கும் இரசாயன பொருட்கள் யாவை? இவை யாவும் புற்று நோயினை உண்டு பண்ணுமா?

இல்லை. அனைத்து PAH-களும் புற்று நோயினை ஏற்படுத்துவன  அல்ல.

👉 உயர் மூலக்கூறு எடையுடைய (High molecular weight) PAH-களே முக்கியமாக புற்றுநோய் உண்டாக்குகின்றன.

காரணம்:

•          PAH-கள் உடலில் Cytochrome P450 மூலம் மாற்றம் அடைந்து

•          Reactive diol-epoxide உருவாக வேண்டும்

•          அவை DNA-வுடன் இணைந்தால் மட்டுமே புற்றுநோய் ஏற்படும்.

PAH  இல் பல இரசாயன பொருட்கள் இருக்கின்றன (படத்தினை பார்க்கவும்) இவற்றில் முக்கியமானது Benzo[a]pyrene என்ற சேர்வை ஆகும். இது வகுப்பு 01 வகையினை சேர்ந்த புற்று நோயாக்கியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

INTERNATIONAL AGENCY FOR RESEARCH ON CANCER

🔴 Group 1 – Carcinogenic to humans  (நிச்சயமாக புற்று நோயினை உருவாக்கும்) உதாரணம் –  Benzo[a]pyrene

🟠 Group 2A – Probably carcinogenic (மனிதர்களில் வரையறுக்கப்பட்ட சான்றுகள் இருக்கின்றன ஆனால்  சோதனை விலங்குகளில் போதுமான சான்றுகள் இருக்கின்றன அத்துடன்  மனித புற்றுநோய்க்கான முக்கிய பண்புகளை தரவுகள்  வலுவாகக் காட்டுகின்றன. உதாரணம் – Dibenz[a,h]anthracene

🟡 Group 2B – Possibly carcinogenic (ஒரே ஒரு ஆதாரம் மட்டுமே உறுதியான அளவிற்கு உள்ளது.  வரையறுக்கப்பட்ட மனித சான்றுகள், அல்லது போதுமான விலங்கு சான்றுகள், அல்லது வலுவான தரவு  சான்றுகள், ஆனால் 2A ஐப் போல இணைந்து அல்ல. இது பொதுவாக 2A ஐ விட பலவீனமான அல்லது அதிக நிச்சயமற்ற ஆதாரங்களை பிரதிபலிக்கிறது). உதாரணம் – Benz[a]anthracene, Benzo[b]fluoranthene, Benzo[k]fluoranthene, Indeno[1,2,3-cd]pyrene

🟢 Group 3 – Not classifiable (மனிதர்களிடம் கிடைக்கும் சான்றுகள் போதுமானதாக இல்லாதபோதும், விலங்குகளிடம் உள்ள சான்றுகள் போதுமானதாக இல்லாதபோதும் அல்லது குறைவாகவே இருக்கும் போதும், தரவு சான்றுகள் ஒரு முடிவை எடுக்க போதுமானதாக இல்லாதபோதும் பயன்படுத்தப்படுகிறது. இது “பாதுகாப்பானது” என்று அர்த்தமல்ல; தற்போதைய தரவுகள் முகவரை புற்றுநோய் காரணி அபாயமாக வகைப்படுத்த போதுமானதாக இல்லை என்று அர்த்தம்.

உதாரணம் – Naphthalene, Phenanthrene, Anthracene

அனைத்து பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAH) புற்றுநோய் உண்டாக்குவதில்லை. 4–7 அரோமேட்டிக் வளையங்கள் கொண்ட உயர் மூலக்கூறு எடையுடைய PAH-கள், குறிப்பாக benzo[a]pyrene, புற்றுநோய் உண்டாக்குபவை ஆகும்; குறைந்த மூலக்கூறு எடையுடைய PAH-கள் பொதுவாக புற்றுநோய் உண்டாக்காதவை.

3. PAH சூழலில் இருந்து மனிதனை அடையும் வழிகள் (Routes of exposure)

1️⃣ மூச்சு வழி (Inhalation) – மிக முக்கியம் அத்துடன்  மிக அதிக ஆதாரம் உள்ள வழி (High scientific evidence)

உதாரணம் – சிகரெட் புகை, தீ விபத்து புகை,வாகன புகை, தொழிற்சாலை புகை, நிலக்கரி புகை, விறகு, பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள்  எரியும் பொழுது உருவாகும் புகை

ஏற்படும் புற்று நோய்கள் – நுரையீரல் புற்றுநோய் (மிக முக்கியம்), குரல்வளை புற்றுநோய்

2️⃣உணவு வழி (Ingestion) –  அதிகளவு விஞ்ஞாரீதியான ஆதாரம் இல்லை (moderate scientific evidence)

உதாரணம் – சுட்ட / கருகிய உணவுகள்

ஏற்படும் புற்று நோய்கள் – வயிறு, குடல், கல்லீரல்

3️⃣ தோல் வழி (Dermal exposure) – விஞ்ஞான மற்றும் வரலாற்று ஆதாரம் நிறைய உண்டு

உதாரணம் -Chimney sweepers ஏற்படும் விதைப்பை புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய்

4. ஏன் PAH இணை உன்பதினை விட சுவாசிப்பது  அதிக புற்றுநோயை உண்டாக்கும்?

PAHகள் புகை மற்றும் நுண்ணிய துகள்களில் உள்ளன, சுவாச சிற்றறையினை  நேரடியாக அடையும். சுவாச சிற்றறை அதிகளவு மேற்பரப்பு உடையது இதன் காரணமாக இரத்தத்தில் விரைவான உறிஞ்சுதல் நடைபெறும் இறுதியில் நுரையீரல் திசுக்களில் வலுவான DNA சிதைவினை உண்டுபண்ணி புற்று நோயினை உருவாக்கும். பென்சோ[a]பைரீன் IARC குழு 1 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெளிவான டோஸ்- விளைவு  (dose – response relationship ) உறவுமுறை நீருபிக்கப்பட்டுள்ளது

5. PAH உணவுச் சங்கிலியில் (Food chain) தேங்குமா?

ஆம், PAH உணவுச் சங்கிலி வழியாக செல்லும். ❌ ஆனால் தானியங்களில் (grains) முக்கியமாக தேங்காது. காரணம்:

  • PAH-கள் lipophilic (கொழுப்பு விரும்பும்)
  • தானியங்களில் கொழுப்பு குறைவு
  • பெரும்பாலும் surface contamination மட்டும்

சங்கிலி வழியாக PAH அதிகமாக தேங்கும் உணவுகள்

  • மீன் (குறிப்பாக bottom-feeding fish)
  • மாமிசம்
  • பால், முட்டை
  • கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்
  • Smoked food

தார் வீதியில் உலர விடப்படும் நெல் மணிகளின் மேற்பரப்பில் நிச்சயம் PAH என்பது இருக்கும் ஆனால் உமியினை நீக்கும் பொழுது பெருமளவு (70-80%) நீக்கப்படும் மேலும் தீட்டும் பொழுது மேலும் கணிசமான அளவு PAH நீக்கப்படும். மேலும் உணவின் மூலம் சேரும் PAH இன் அளவு உடலில் தீங்கான விளைவுகளை ஏற்படுத்த வல்லதா என்பது கேள்விக்குறியே.

முக்கியமான விடயம் நெல் மணிகளினால் உடலில் சேரும் PAH அளவினை விட நாம் சிகரெட் புகைக்கும் பொழுதும், வீதியில் வாகன புகையினை சுவாசிக்கும் பொழுதும், குப்பைகள்/பிளாஸ்டிக் /டயர்  மற்றும் விறகினை எரிக்கும் பொழுது சுவாசிக்கின்றோம் என்பதே கசப்பான உண்மை  

6. Bitumen என்றால் என்ன? Bitumen புற்று நோயினை ஏற்படுத்துமா?

கச்சா எண்ணை சுத்திகரிப்பின் பொழுது இறுதியில் எஞ்சும் கருப்பு பொருள். வீதி தயாரிப்பில் பயன்படுகின்றது. (Coal tar ≠ Bitumen)

Bitumen (தின்ம நிலை) ❌ புற்றுநோய் உண்டாக்கும் என நிரூபிக்கப்படவில்லை. ஆனால் வீதி புனரமைப்பின் உருக்கப்படும் Bitumen இல் இருந்து வெளியேறும் Bitumen ஆவி (Bitumen fumes) அதாவது PAH இணை அதிகளவில் கொண்ட புகை மூக்கின் ஊடாக நுகரப்படும் பொழுது புற்று நோயினை உருவாக்கலாம் (Possibly carcinogenic)

IARC வகைப்பாடு:

•          Bitumen → Group 3

•          Bitumen fumes → Group 2B

📌 ஆபத்து: மூச்சு வழி

7. போடப்பட்ட தார் வீதியில் இருந்து எவ்வளவு காலத்திற்கு PAH வெளியேறும்? (Bitumen-இல் இருந்து PAH எவ்வளவு காலம் வெளியேறும்)

⏱️ காலப்பகுதி வாரியாக:

🔥 0–2 வாரங்கள் ⭐⭐⭐

  • மிக அதிக PAH வெளியிடப்படும்
  • வீதியிற்கு அண்மையில் போடப்பட்ட தார்
  • புற்று நோய் தாக்கம் அதிகம்

🌡️ 2 வாரம் 3 மாதம் ⭐⭐

  • PAH குறைகிறது
  • இன்னும் அளவிடக்கூடியது

🌧️ 3–12 மாதம்

  • UV, மழை, oxidation
  • காற்றில் PAH மிகக் குறைவு

🛣️ >1 ஆண்டு

  • காற்றில் PAH release இல்லை
  • Inhalation cancer risk இல்லை

📌 முக்கியக் கோட்பாடு

தார் வீதியில் இருந்து PAH சூழலுக்கு வெளியேறுவது என்பது வெப்பநிலையில் தங்கியுள்ளது. தார் ஆனது 150 – 180 வரையான செல்ஸியஸ் வெப்பநிலையில் உருக்கப்பட்டே ஊற்றப்படுகின்றது.  இந்நிலையில் மீண்டும் அது உருகி PAH இணை வெளியேற்றுவது விஞ்ஞான ஏறத்தாள ஒரு வருடத்தில் முற்றாக நின்று விடும்

8. வாகன புகையில் இருந்து வெளியேறும் பார உலோகங்களான கட்மியம் , ஈயம் போன்றன அரசியல் ஊடுருவுமா?

மேற்குறித்த பார உலோகங்கள் உணவு சங்கிலி வழியாகவே அரிசியில் சேர்கின்றன. வாகன புகை உமியினை துளைத்து சென்று அரிசியில் சேர்வதினை நீருபிப்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான சான்றுகளும் இல்லை. மேலும் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் நாட்பட்ட சிறுநீரக நோய் பாதித்த பிரதேசங்களில் நடாத்தப்பட்ட ஆய்வுகளில் அங்கு விளையும் அரிசி, தாமரைக்கிழங்கு, திலாப்பியா மீன் போன்றவற்றில் பார உலோகங்கள், பூச்சிநாசினிகள் .. போன்றன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

9. வீதியில் நெல் உலர விடுவதினால் ஏற்படும் ஏனைய சுகாதார பிரச்னைகள்?

விலங்குகளின் மலம் கலக்கப்படல் – வீதியின் மேற்பரப்பில்  நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக மலைக்கழிவில் உள்ள கிருமிகள் இறந்து விடும். மேலும் நெல்லினை உடைக்கும் பொழுது மலத்தின் ஏனைய கழிவுகள் நீக்கப்படும். இறுதியாக சோறு ஆக்கப்படும் வெப்பநிலையில் ஓர் நோய்க்கிருமியும் சோற்றில் இருக்காது.

வீதி விபத்துக்கள் –  வீதியில் நெல் உலரவிடுவதன் காரணமாக  விபத்துக்கள் நடைபெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் உலர விட்டதன் காரணமாக மட்டுமே விபத்து நடைபெற்றது என்றால் அது உண்மை அல்ல. ஓர் விபத்திற்கு எப்பொழுதும் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

PAH, தார் , பார உலோகங்கள் கலக்கப்படுகின்றமை – ஒரேயொரு தடவை அதுவும் அண்ணளவாக 05 அல்லது 06 மணித்தியாலங்கள் என்ற குறுகிய நேரத்தில் உலர விடப்படுகின்றமை அதுவும் பழைய வீதிகளில், எவ்வாறு உடல் நலத்திற்கு தீங்கான அளவிற்கு மேற்படி பதார்த்தங்களை அரிசியில் சேர்க்கும் என்பது குறித்து முறையான விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இல்லை. மேலும் இயந்திரங்களில் உலர்த்தும் பொழுது மண்ணெண்ணை பாவிக்கப்படுகின்றது அதன் பொழுது உருவாகும் PAH நெல்லில் கலக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன, நெல்லினை அவிக்கும் பொழுது எரியும் விறகில் இருந்து உருவாகும் PAH நெல்லில் கலக்காது என்பதற்கான உத்தரவாதம் என்ன

 10. ஏன் இப்பொழுது தான் இந்த பிரச்சனை?

2009 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் பொருளாதார தடை காரணமாக மிக குறைந்தளவு விளைச்சல் கிடைத்தது. ஆனால் இன்று அவ்வாறல்ல பல மடங்கு அதிக விளைச்சல் ஓர் ஏக்கரில் இருந்து கிடைக்கின்றது. இதன் காரணமாக உலர விட போதிய தளங்கள் இல்லை. மேலும் மனிதக்கூலி, வாகன கூலி  அதிகமாக உள்ளதன் காரணமாக மக்கள் கார்ப்பட் வீதிகளை பயன்படுத்துகின்றனர்.

இலகுவான சுருக்கம்

நச்சியலில் (toxicology) பயன்படுத்தபடும் சில தத்துவங்களை விளங்கிக்கொண்டால் நாம் மேற்குறித்த விடயத்தினை மேலும் இலகுவாக விளங்கலாம்

  • ஒரு பொருள் விஷமா இல்லையா என்பதை தீர்மானிப்பது அதன் அளவுதான் (“The dose makes the poison”)
  • விஷப் பொருளுடன் தொடர்பு இருந்தாலே விஷ விளைவு வரும் என்பது இல்லை (“Not all exposure leads to toxicity”)
  • உடலுக்குள் நுழையும் வழி விஷ விளைவைக் தீர்மானிக்கும் (“Route determines toxicity”)
  • இரசாயன கட்டமைப்பு உடலியல் விளைவுகளை தீர்மானிக்கும் (“Chemical structure determines biological effect”)
  • கொழுப்பில் கரையும் பொருட்கள் உடலில் தேங்கும் (“Lipophilic substances bioaccumulate”)
  • ஒரு பொருள் விஷமாக மாறுவதற்கு அனுசேபம்  தேவைப்படலாம் (“Toxicity depends on metabolism) (PAH தானாக விஷமல்ல ஆனால் நுரையீரல் மற்றும் ஈரலில்  CYP450  இனால் diol-epoxide ஆக மாற்றப்படுகின்றது, diol-epoxide DNA சேதாரத்தை உண்டு பண்ணி புற்று நோயினை உருவாகின்றது)
  • வெப்பநிலை விஷ வெளியீட்டை மாற்றும் (“Temperature influences toxicity”)

ஆக்கம்

Dr.K.Vaasuthevaa

MBBS, DLM, MD in Forensic Medicine (Special interest in Toxicology), PGD in toxicology

உசாத்துணை

1. IARC Monograph Vol. 92

2. IARC Monograph Vol. 103

3. “Evaluation of the Health Risks of PAHs in Food” – WHO publication

4. Agency for Toxic Substances and Disease Registry – Toxicological Profile for Polycyclic Aromatic Hydrocarbons (PAHs)

5. Reddy’s Essentials of Forensic Medicine & Toxicology

6. Klaassen – Casarett & Doull’s Toxicology

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.