முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளது. அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (53 வயது) அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டு. இப்பதிவில் இக்குளவியின் தாக்கத்திர்ற்கு உள்ளான ஒருவர் ஏன் இறக்க வேண்டும் என்பது பற்றி சட்ட மருத்துவ ரீதியில் அலசுவோம். பல நோயாளிகள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படும் பொழுது வைத்தியர்களுக்கு உரிய தகவல்களை வழங்குவதில்லை உதாரணமாக முதலில் தேனீ தான் குத்தியது என்பார்கள் சிறிது நேரத்தில் உறவினருடன் கைத்தொலைபேசியில் கதைத்து விட்டு கூறுவார்கள் டொக்டர் தேனீ அல்ல குளவியே குத்தியது என்பார்கள். கீழே உள்ள படமானது தேனிக்கும் குளவிக்கும் உள்ள உருவவியல் அடிப்படை வேறுபாடுகளை விளக்குகின்றது.

தேனீ மற்றும் குளவிக்கு இடையே உள்ள முக்கிய தோற்ற மற்றும் பண்பு வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- உடல் அமைப்பு: தேனீக்கள் பருமனான மற்றும் உருண்டையான உடல் அமைப்பைக் கொண்டவை. குளவிகள் மெலிந்த உடலையும், மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் மிகக் குறுகிய “இடுப்பு” (narrow waist) பகுதியையும் கொண்டுள்ளன.
- உடல் முடி (Fuzziness): தேனீக்களின் உடல் முழுவதும் மென்மையான முடிகள் (fuzzy) காணப்படும். குளவிகள் பொதுவாக முடி இல்லாமலும், பளபளப்பான மென்மையான தோலுடனும் (shiny/smooth) காணப்படும்.
- நிறம்: தேனீக்கள் பொதுவாக பழுப்பு கலந்த மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். குளவிகள் பிரகாசமான மஞ்சள் மற்றும் கருப்பு நிற வரிகளுடன் (bright yellow bands) அதிக எடுப்பாகத் தெரியும்.
- கால்கள்: தேனீக்களின் பின்னங்கால்கள் தட்டையாகவும், மகரந்தத்தைச் சுமந்து செல்ல “மகரந்தக் கூடை” (pollen basket) போன்ற அமைப்பைக் கொண்டும் இருக்கும். குளவிகளின் கால்கள் மெலிந்து, உருளை வடிவில் இருக்கும்.
- கொடுக்கு (Stinger): தேனீக்கள் ஒருமுறை கொட்டியவுடன் அவற்றின் கொடுக்கு உடலிலிருந்து பிரிந்துவிடும், இதனால் அவை இறந்துவிடும். குளவிகள் தங்களது மென்மையான கொடுக்கைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பலமுறை கொட்டும் திறன் கொண்டவை.
- உணவு: தேனீக்கள் பூக்களிலிருந்து தேன் மற்றும் மகரந்தத்தை மட்டுமே உண்ணும் “சைவ” பூச்சிகள். குளவிகள் மற்ற பூச்சிகளை வேட்டையாடி உண்ணும் “அசைவ” பண்பு கொண்டவை.
பொதுவாக தேனீயானது மனிதன் ஆனவன் அதன் கூட்டினை கலைக்கும் பொழுது தான் தாக்கும் . ஆனால் குளவியானது மனிதனை தேடிச்சென்று தாக்கும் இயல்பு உடையவை.குளவியானது மனிதனை தாக்கும் போது தேனீயினை விட அதிகளவு நச்சினை உட்செலுத்தும் அத்துடன் அதன் நச்சானது மிக்க வீரியம் கூடியது. எனவே சிகிச்சை அளிக்கும் வைத்தியர்ளுக்கு என்ன குத்தியது என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும்.
தேனீயானது வாயின் கொடுக்கினால் குத்தும் அதேவேளை குளவி உடலின் பின்புறத்தில் உள்ள கொடுக்கு (A sting is delivered by a posterior, tapered, needle like structure designed to inject venom). மூலமும் மனித உடலில் நச்சிணை பலதடவை உட்செலுத்துகின்றன.

இலங்கையில் உள்ள மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய குளவி இனங்கள்

அடுத்து குளவி குத்தி மரணம் எவ்வாறு நிகலுகின்றது என்பது பற்றி பார்ப்போம். உண்மையில் மரணமானது உட்செலுத்தப்பட்ட நச்சானது உடலில் ஏற்படுத்தும் ஒவ்வாமை தாக்கத்தினாலும் அதன் நச்சியல் இயல்பினாலும் ஏற்படுகின்றது. அதாவது சில மரணங்கள் ஒவ்வாமையினால் மட்டுமே ஏற்படும் சில மரணங்கள் நச்சியல் தாக்கத்தினால் மட்டுமே ஏற்படும். ஆனால் பல இறப்புக்கள் மேற்கூறிய இரண்டினதும் சேர்க்கைகள் காரணமாகவே ஏற்படுகின்றது.
ஒவ்வாமைத் தாக்கம் எனப்படும் பொழுது சாதாரணமாக தோலில் ஏற்படும் எரிவு, வீக்கம் (local allergic reaction) போன்றவற்றில் இருந்து சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும் தாக்கம் ( anaphylatic shock) வரை இருக்கும். இங்கு ஒவ்வாமையினால் மரணம் நிகழும் பொழுது உட்செலுத்தப்பட்ட கொடுக்குகளின் எண்ணிக்கை அதாவது குத்திய குளவிகளின் எண்ணிக்கைக்கும் தொடர்பு இருக்காது. ஒருசில குளவிகள் குத்தினாலே மரணம் சம்பவிக்கும். மாறாக குளவியின் நச்சின் (Toxic effect) இயல்பால் மரணம் நிகழ வேண்டும் எனில் குறிப்பிடத்தக்க அளவில் குளவிகள் குற்ற வேண்டும். உதாரணமாக மனிதனை 500 தொடக்கம் 1200 வரையான தேனீக்கள் குற்றினாலே செலுத்தப்பட்ட நஞ்சின் விளைவாக மரணம் சம்பவிக்கலாம் (The human LD50 for honey bee stings has been estimated to be between 500-1200 stings)
இவ்வாறு அதிகளவு குளவிகள் குற்றும் பொழுது அதிகளவு நஞ்சேற்றல் (mass envenomation) ஏற்பட்டு உடனடியான சிறுநீரக செயலிழப்பு (acute kidney injury), தசைகளில் ஏற்படும் அழற்சி (rhabdomylysis), மற்றும் இரத்தம் அழிவடைதல் (Haemolysis) போன்ற பல்வேறு பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.
மாரடைப்பு வந்த நோயாளிகளுக்கு குளவியனது குற்றும் பொழுது அவர்களுக்கு புதிதாக மாரடைப்பு அல்லது இருதய துடிப்பில் ஒழுங்கின்மை (arrhythmia) போன்றன ஏற்பட்டு இறப்பு ஏற்படும். மேலும் நாடி மற்றும் நாளங்களில் குருதி கட்டிப்படல், பாரிச வாதம், மூளையினுள் இரத்த கசிவு…..என பல்வேறு நோய் நிலைகளை குளவியின் நஞ்சானது உருவாக்க வல்லது மேலும் Kounis syndrome என்ற வகையில் புதிதாக மாரடைப்பு கூட வரலாம்.
இது தவிர குளவியானது கலைத்து கலைத்து குத்தும் பொழுது மனிதர்கள் விபத்துக்கு உள்ளாகி அல்லது கிணறு போன்ற குழிகளில் விழுந்து அல்லது பனை போன்ற உயரமான மரங்களில் இருந்து விழுந்து இறந்த சம்பவங்களும் உண்டு.
குளவிகள் குற்றின் நோயாளியை வீட்டில் வைத்து குற்றிய இடத்திற்கு சுண்ணாம்பு அல்லது புளி பூசுதல் அல்லது விச கடி வைத்தியர்களின் சிகிச்சை போன்ற பாரம்பரிய முறைகளின் மூலம் சிகிச்சை அளித்தல் பல சந்தர்ப்பங்களில் உயிர் ஆபத்தினை உண்டு பண்ணியுள்ளது. ஏனெனில் நான் இங்கு விஞ்ஞான ரீதியில் உடலியல் தொழில் பாடுகளை கண்காணிக்க முடியாமையே ஆகும். மேலும் இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகள் காரணமாக வைத்தியசாலையில் காலதாமதமாகவே அனுமதிக்கப்படுவர் இதன் காரணமாக அவர்கள் உயிர் ஆபத்திணை எதிர்நோக்குவர். மேலும் சிறுவர்களும் வயோதிபர்களும் குளவி கலைத்து குத்தும் பொழுது அவர்களால் இலகுவில் தப்பி ஓட முடிவதில்லை இதன் காரணமாக குளவிகளின் தாக்குதலினால் இவர்களே அதிக பாதிப்பினை எதிர்கொள்ள நேரிடுகின்றது.
குளவியின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எவ்வாறு?
குளவி கடியைத் (Wasp Sting) தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான வழிமுறைகள் இதோ:
1. அமைதியாக இருத்தல்
- பதற வேண்டாம்: உங்கள் அருகே குளவி வரும்போது கைகளை வீசுவதோ அல்லது அதை அடிக்க முயற்சிப்பதோ கூடாது. உங்கள் வேகமான அசைவுகள் குளவிக்கு அச்சுறுத்தலாகத் தெரியும், இதனால் அது உங்களைக் கொட்டும்.
- மெதுவாக நகரவும்: குளவி உங்களைச் சுற்றி வந்தால், மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள்.
2. ஆடை மற்றும் வாசனை திரவியங்கள்
- நிறங்கள்: பிரகாசமான வண்ணங்கள் (மஞ்சள், சிவப்பு) மற்றும் பூக்கள் போட்ட ஆடைகளைத் தவிர்க்கவும். வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.
- உடல் பாதுகாப்பு: தோட்டம் அல்லது புற்கள் நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது நீண்ட கை சட்டைகள் மற்றும் காலணிகளை (Shoes) அணியுங்கள்.
3. சுற்றுப்புறப் பாதுகாப்பு
- குப்பைத் தொட்டி: குப்பைத் தொட்டிகளை எப்போதும் மூடி வைத்திருங்கள்.
- கூடுகளைத் தொடாதீர்கள்: உங்கள் வீட்டின் ஓரத்திலோ அல்லது மரத்திலோ குளவிக் கூடு இருப்பதைக்கண்டால், அதை நீங்களே அகற்ற முயல வேண்டாம். தொழில்முறை நிபுணர்களை அணுக வேண்டும்
4. இயற்கை வழிமுறைகள்
- புதினா எண்ணெய்: புதினா (Peppermint oil) அல்லது யூகலிப்டஸ் எண்ணெயைத் தெளிப்பது குளவிகளை அந்த இடத்திற்கு வரவிடாமல் தடுக்கும்.
- செடிகள்: உங்கள் வீட்டின் அருகில் துளசி, புதினா அல்லது சிட்ரோனெல்லா (Citronella) செடிகளை வளர்ப்பது குளவிகளை விரட்ட உதவும்.
நன்றி
