மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யானை வேலி மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நிலமட்டத்தில் இருந்த யானை வேலி கம்பியிலிருந்து வந்த மின்சாரம் தாக்குதலே மேற்குறித்த இருவரின் மரணத்திற்கும் காரணமாய் அமைந்தது. அத்துடன் மின்சார வேலியில் அகப்பட்டவரை காப்பாற்ற சென்ற நபரே மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ளார்.

இலங்கையில் மின்சார வேலி (Electric Fence) விபத்துக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிக்கக்கூடியவை. குறிப்பாக மனித-யானை மோதல் (Human-Elephant Conflict – HEC) காரணமாக அமைக்கப்படும் சட்டவிரோதமான மின்சார வேலிகளே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. இலங்கையில் நிகழும் மொத்த மின்சார விபத்து மரணங்களில் (Electrocution), சுமார் 40% முதல் 45% வரை காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார வேலிகளாலேயே ஏற்படுகின்றன. 2023-இல் மட்டும் 488 யானைகள் உயிரிழந்துள்ளன. இது வரலாற்றிலேயே மிக அதிகமான எண்ணிக்கையாகும். இதில் சுமார் 72 யானைகள் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளன.

மின்சார வேலிகள் உயிரைக் கொல்லும் நோக்கம் கொண்டவை அல்ல, அவை எச்சரிக்கை செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு உயிர் இழப்பு ஏற்படுகிறது என்றால், அந்த வேலி முறையாக அமைக்கப்படவில்லை அல்லது விதிகளுக்குப் புறம்பாக நேரடியாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். மின்சார வேலி (விபத்துக்களைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான முக்கியமான தகவல்கள் இதோ:
1. சான்றளிக்கப்பட்ட எனர்ஜைசரை(Energizer) பயன்படுத்துங்கள்
மின்சார வேலியை ஒருபோதும் வீட்டின் நேரடி மின்சாரத்துடன் (AC Mains) இணைக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட Fence Energizer கருவியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்தக் கருவி மின்சாரத்தை “பல்ஸ்” (Pulse) முறையில், அதாவது விட்டு விட்டு மிகக்குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கும். இது ஒருவரைத் தூக்கி எறிய உதவுமே தவிர, மின்சாரத்தோடு ஒட்டிக்கொள்ளச் செய்யாது.
2. முறையான புவித்தொடுகை (Grounding/Earthing)
புவித்தொடுகை சரியாக இல்லாவிட்டால், மின்சாரம் தேவையற்ற இடங்களில் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தும். குறைந்தது 3 மீட்டர் ஆழத்திற்கு முறையாக ‘எர்த்’ (Earth) கம்பிகளை அமைக்க வேண்டும். இது மின்சுற்றை ஒழுங்குபடுத்தி, தேவையற்ற விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும்.
3. எச்சரிக்கைப் பலகைகள் கட்டாயம் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்)
வேலியில் மின்சாரம் இருப்பதை மற்றவர்கள் அறியச் செய்வது அவசியம். ஒவ்வொரு 10 மீட்டருக்கும் ஒருமுறை “அபாயம் – மின்சார வேலி” என்ற எச்சரிக்கை வாசகம் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) எழுதப்பட்டிருக்க வேண்டும். மஞ்சள் நிறப் பின்னணியில் கறுப்பு எழுத்துக்களுடன் மின்னல் குறியீடு இருக்க வேண்டும். இது குழந்தைகள் மற்றும் வழிப்போக்கர்கள் தெரியாமல் வேலியைத் தொடுவதைத் தடுக்கும்.
4. கம்பி வகை மற்றும் தளர்வு
வேலியில் முட்கம்பிகளை (Barbed wire) பயன்படுத்தக் கூடாது. மென்மையான கம்பிகளை (Plain wire) மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் முட்கம்பி ஒருவரின் உடையில் அல்லது உடலில் சிக்கிக்கொண்டால், மின்சார அதிர்ச்சியில் இருந்து அவர் விடுபட முடியாமல் போக வாய்ப்புள்ளது.
5. உயரம் மற்றும் அமைப்பு
குடியிருப்பு பகுதிகளில், மின்சாரம் பாயும் கம்பிகள் தரையிலிருந்து குறைந்தது 1.5 முதல் 2 மீட்டர் உயரத்தில் இருக்க வேண்டும். இது சிறிய குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகள் தெரியாமல் தொடுவதைத் தவிர்க்கும்.
யாராவது மின்சாரத்தில் சிக்கியிருந்தால் என்ன செய்வது?
- நேரடியாகத் தொடாதீர்கள்: உங்கள் கைகளால் அவர்களைத் தொட்டால் உங்களுக்கும் மின்சாரம் பாயும்.
- மின்சாரத்தை நிறுத்துங்கள்: முதலில் மெயின் சுவிட்ச் அல்லது எனர்ஜைசரை அணைக்கவும்.
- மரக்கட்டையைப் பயன்படுத்துங்கள்: மின்சாரம் பாயாத உலர்ந்த மரக்கட்டை அல்லது பிளாஸ்டிக் குழாயைக் கொண்டு அவர்களை வேலியில் இருந்து விலக்கி விடவும்.
சட்ட நிலைப்பாடு
- இலங்கையில் பலர் மின்சார வயர்களை நேரடியாக 230V மெயின் லைனில் இணைக்கிறார்கள். இது மனிதர்களையும் யானைகளையும் உடனடியாகக் கொல்லும் இவ்வாறு வீட்டின் மெயின் மின்சாரத்தை நேரடியாகப் பயன்படுத்துவது மின்சாரசபை சட்டத்தின் பிரகாரம் இலங்கையில் சட்டப்படி குற்றமாகும்.( Sri Lanka Electricity Act, No. 20 of 2009)
- தாவர விலங்கினப் பாதுகாப்புச் சட்ட (Fauna and Flora Protection Ordinance – No. 02 of 1937 & Act No. 22 of 2009) பிரகாரம் யானை போன்ற விலங்குகள் இவ்வாறு அமைக்கப்பட்ட வேலியில் சிக்கி உயிரிழந்தால் அது பிணையில் வெளிவரமுடியாத பாரிய குற்றமாக கருதப்படுகின்றது
எனர்ஜைசர்கள் (Energizer) இலங்கையில் 20,000 ரூபாயில் இருந்து விற்பனையாகின்றன. இவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு வழங்கும் தூரம், சோலார் வசதி என்பவற்றினை பொறுத்து விலை வேறுபாடடையும். இவற்றினை வாங்கி பொருத்துவதன் மூலம் நாம் பிறரின் உயிரினை பாதுகாக்கலாம் அத்துடன் எம்மையும் சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்கலாம்.
நன்றி
