உடல் அரிப்பினை நீக்க கருவிகளை பயன்படுத்தும் நவீன பசு

வேரோனிகா (Veronika) என்ற 13 வயது பசு, ஆஸ்திரியாவில் ஒரு செல்லப்பிராணியாக வளர்ந்து வருகிறது. இது கருவிகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் பசு என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வேரோனிகா குச்சிகள், துடைப்பங்கள் மற்றும் பிரஷ்களைப் பயன்படுத்தி தனது உடலில் அரிப்பு ஏற்படும் இடங்களைத் தேய்த்துக் கொள்கிறது.  கடினமான தோலுக்கு பிரஷ் பகுதியையும், மென்மையான வயிற்றுப் பகுதிக்கு அதன் கைப்பிடிப் பகுதியையும் மாற்றிப் பயன்படுத்தும் புத்திசாலித்தனம் இதற்கு உள்ளது.

இது தற்செயலானது அல்ல, திட்டமிட்டு செய்யப்படும் செயல் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தனது நாக்கைச் சுருட்டிப் பிடித்து கருவிகளைக் கையாள்வதில் இது அதிகத் திறமை பெற்றுள்ளது. இது சிம்பன்சிகள் மற்றும் மனிதர்களுக்கு மட்டுமே இருக்கும் ஒரு மேம்பட்ட அறிவாற்றல் நிலையைக் காட்டுகிறது.

பண்டைய காலத்தில் ஆவுரஞ்சிக் கல்லின் பயன்பாடு

சங்க இலக்கியங்களில் ஆவுரஞ்சிக் கல் (ஆதீண்டு குற்றி) பற்றிய நேரடி மற்றும் மறைமுகக் குறிப்புகள் தமிழர்களின் கால்நடைப் பண்பாட்டையும், அறச்சிந்தனையையும் பறைசாற்றுகின்றன. “ஆ” என்றால் பசு, “உரோஞ்சுதல்” என்றால் உரசுதல் என்று பொருள். மாடுகள் தண்ணீர் குடித்த பிறகு அல்லது மேய்ந்து முடித்த பின் ஏற்படும் “தினவு” (அரிப்பு) போக்க இந்தக் கற்களைப் பயன்படுத்தியதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

பண்டைய தமிழகத்தில் செய்யப்பட்ட 32 வகைஅறங்களில் ஒன்றாக இது போற்றப்பட்டது. விலங்குகளின் உடல் அரிப்பை நீக்குவதற்காகக் கல்லினை நட்டு வைப்பது ஒரு நற்செயலாகக் கருதப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

சங்க இலக்கியச் சான்றுகள்

  1. பொருநராற்றுப்படை: கரிகால் வளவனின் கொடைத்திறம் மற்றும் நாட்டின் வளத்தைச் சொல்லும்போது, பசுக்கள் தங்களை உராய்ந்து கொள்ளும் வகையில் தூண்கள் (ஆதீண்டு குற்றி) அமைக்கப்பட்டிருந்ததை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இது ஒரு நாட்டின் செழிப்பிற்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது.
  2. பத்துப்பாட்டு: பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படை மற்றும் மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் ஊர் மந்தைகளில் மாடுகள் ஓய்வெடுக்கும் இடங்கள் மற்றும் அவை உராய்ந்து கொள்ளும் கற்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  3. தொல்காப்பியம்: தொல்காப்பியத்தின் புறத்திணையியலில், பசுக்களைக் கவர்தல் (வெட்சி) மற்றும் மீட்டல் (கரந்தை) போன்ற செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆநிரைகளே செல்வமாகக் கருதப்பட்ட அக்காலத்தில், அவற்றின் நலனுக்காகச் செய்யப்பட்ட அறங்களில் ஆவுரஞ்சிக் கல்லும் ஒன்று.
  4. சிலப்பதிகாரம்: ஐயை வழிபாட்டின் போது “ஆதீண்டு குற்றி” அல்லது மாடுகள் உராய்ந்து கொள்ளும் தூண்கள் பற்றி இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.

ஆவுரஞ்சிக் கல் வடிவம் மற்றும் அமைவிடம்

இவை பொதுவாக 3 முதல் 4 அடி உயரமுள்ள, வழவழப்பான மேற்பரப்பைக் கொண்ட கருங்கல் தூண்களாக இருக்கும். பல நூற்றாண்டுகளாக மாடுகள் உராய்ந்ததால் இவை தேய்ந்து மெருகேறி இருக்கும். சில கற்களில் தர்மம் செய்தவரின் பெயரோ அல்லது குறியீடுகளோ செதுக்கப்பட்டிருக்கலாம். பெரும்பாலும் பழைய ஊர் மந்தைகள், நீர் நிலைகள் அல்லது மாடுகள் கூடும் பொது இடங்களில் இவை காணப்படுகின்றன. சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் (கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர்) சங்க கால மக்களின் மேய்ச்சல் நிலப் பண்பாட்டையும், விலங்குகள் மீதான அவர்களின் அக்கறையையும் வெளிப்படுத்துகின்றன.

மாடுகள் ஏன் உடலைத் தேய்க்கின்றன? (Ethological explanation)

மாடுகள் கல், மரம், தூண் போன்ற பொருட்களில் தங்கள் உடலை அடிக்கடி தேய்ப்பதை நாம் பொதுவாகக் காணலாம். இந்த நடத்தை (self-grooming behaviour) ஒரு சாதாரண செயல் போல தோன்றினாலும், அதற்கு பின்னால் பலஉடல் சார்ந்த (physiological) மற்றும்நடத்தை சார்ந்த (ethological) காரணங்கள் உள்ளன. இந்த நடத்தை மாடுகளின் உடல் ஆரோக்கியம், தோல் பாதுகாப்பு மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணி கட்டுப்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

1. அரிப்பு (Pruritus)

மாடுகளில் உடலைத் தேய்க்கும் மிக முக்கியமான காரணம்அரிப்பு உணர்வுஆகும். தோலில்உண்ணி (ticks), பேன் (lice), ஈபோன்ற வெளிப்புறஒட்டுண்ணி இவை இருப்பதால், தோலில் histamine release ஏற்படுகிறது. இதன் விளைவாக, மாடுகளுக்கு அரிப்பு உணர்வு உண்டாகிறது.

இந்த அரிப்பை குறைக்க, மாடுகள் கல் அல்லது மரம் மீது உடலைத் தேய்க்கின்றன. தேய்த்தல் மூலம்sensory relief கிடைக்கிறது.இந்த செயல் ஒரு reflex behaviour ஆக தொடங்கி, பின்னர் அனுபவத்தின் மூலம் உருவாகும் learned behaviour ஆக மாறுகிறது.

2. முடி உதிர்வு (Shedding behaviour)

பருவமாற்ற காலங்களில், குறிப்பாககோடை காலத்தில், மாடுகளின் பழைய முடி உதிரத் தொடங்கும். இந்த பழைய முடிகளை அகற்றஉடலைத் தேய்க்கும் நடத்தை காணப்படுகிறது.இந்த செயல் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும், புதிய முடி வளர்ச்சிக்கு உதவவும் செய்கிறது.

3. தோல் தூண்டல் (Cutaneous stimulation)

உடலைத் தேய்ப்பதன் மூலம் தோலில் ஒரு வகையான mechanical stimulation ஏற்படுகிறது. இதன் விளைவாக:

  • தோலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்
  • Sebaceous glands செயல்பாடு தூண்டப்படும்
  • சுரக்கும் எண்ணெய் (sebum) தோலில் சமமாகப் பரவும்

இதனால் தோல் வறட்சியின்றி பாதுகாக்கப்பட்டு, மொத்த தோல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

4. ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கையை  குறைத்தல்

மாடுகள் தொடர்ந்து உடலைத் தேய்ப்பதால்

  • வெளிப்புற ஒட்டுண்ணிகள்  அகற்றப்படுகின்றன
  • ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை (parasite load) குறைகிறது

இது இரசாயன மருந்துகள் இன்றி நடைபெறும் ஓர் இயற்கை மருத்துவம் ஆகும்.

இயைவாக்கம் மற்றும் கூர்ப்பு

ஆவுரஞ்சிக் கல் என்பது மாடுகளின் அரிப்பைத் தீர்க்க மனிதன் செய்த உதவி. ஆனால் வேரோனிகா, மனித உதவி இன்றித் தானே ஒரு பொருளைக் கருவியாக மாற்றித் தன் அரிப்பைத் தீர்த்துக்கொண்டது வியப்பான பரிணாம வளர்ச்சியாகும்.

பொதுவாக சிம்பன்சிகள், காகங்கள் மற்றும் யானைகளிடம் மட்டுமே காணப்படும் “கருவி பயன்படுத்தும் திறன்” ஒரு பசுவிடம் நிரூபிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.

வேரோனிகா ஒரு பண்ணை விலங்காக இல்லாமல், செல்லப்பிராணியாக 13 ஆண்டுகள் சுதந்திரமான சூழலில் வாழ்ந்ததால், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள இதற்கு வாய்ப்பு கிடைத்ததாக The Guardian இதழ் குறிப்பிடுகிறது.

உயிரினங்களின் இயைவாக்கம் (Adaptation) மற்றும் கூர்ப்பு (Evolution) ஆகிய இரண்டிலும் சூழல் காரணிகள் (Environmental Factors) மிக முக்கியப் பங்காற்றுகின்றன. இவை இயற்கைத்தேர்வினை (Natural Selection) தீர்மானிப்பதன் மூலம் உயிரினங்களில் மாற்றங்களை உண்டாக்குகின்றன. சாதாரணமாக ஓர் பசுவிற்கு உடல் அரிப்பினை போக்குவதற்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாதவிடத்து அவை மாற்று வழிகள் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ள விளையும் என்பதே இயற்கையின் வழிகாட்டுதல் ஆகும்.

நன்றி

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.