தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் – ஏன்?

கடந்த சில நாட்களாக இலங்கையில் பெற்றோல், டீசல் போன்றவற்றிற்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று தமது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புகின்றனர் இந்நிலையில் மோட்டார் சைக்கிள்கள் தாமாகவே தீப்பற்றி எரிந்த  சம்பவங்கள் நாட்டில் ஒரு சில பதிவாகியுள்ளன. இவ்வாறன நிலையில் ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன,அவற்றினை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

மோட்டார் சைக்கிளில் தீப்பற்றுவது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இது பெரும்பாலும் எரிபொருள் கசிவு, மின்சார குறுக்குச்சுழற்சி, இயந்திர அதிகவெப்பம், விபத்து அல்லது தீவைத்தல் போன்ற காரணங்களால் நிகழ்கிறது.

  1. முழு டேங்க் (Full Tank) நிரப்பினால் ஏன் தீப்பற்றலாம்?

மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்புவது சில சூழ்நிலைகளில் தீப்பற்றும் அபாயத்தை அதிகரிக்கலாம். இது பெரும்பாலும் வெப்பவிரிவு(Thermal Expansion), ஆவி உருவாகுதல்(Vapor Formation), அழுத்தம் அதிகரித்தல்(Pressure Build-up), மற்றும் கசிவு(Overflow) காரணமாக நடைபெறும். பெட்ரோல் (Gasoline) என்பது குறைந்த தீப்பற்றும் வெப்பநிலை (Low Flash Point) கொண்டது, அதிக ஆவியாகும் தன்மை உடையது, காற்றுடன் கலந்து எளிதில் வெடிப்பு கலவையை உருவாக்கக்கூடியது இதனால் சிறிய தீப்பொறியும் தீப்பற்றும் நிகழ்வைத் தூண்ட முடியும்

வெப்பவிரிவு மற்றும் அதன்விளைவு

ஒரு மோட்டார் சைக்கிள் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டால், அதன் உள்ளே காற்று இடைவெளி (ullage space) குறைந்து விடுகிறது. வெயிலில் நிறுத்தியபோது அல்லது இயந்திரம் இயக்கப்பட்டபோது டேங்க் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பம் அதிகரிக்கும்போது பெட்ரோல் விரிவடைகிறது. விரிவடைய இடமில்லாததால் அது டேங்க் மூடியின் வழியாக Overflow குழாயின் வழியாக வெளியே கசியும் கசியும் பெட்ரோல் சூடான என்ஜின் அல்லது எக்ஸாஸ்ட் குழாயைத் தொட்டால் தீப்பற்றும்.

பெட்ரோல் ஆவி உருவாக்கம்

முழு டேங்கில் திரவ அளவு அதிகமாக இருப்பதால் வெப்பம் காரணமாக அதிக அளவு பெட்ரோல் ஆவி உருவாகும் அத்துடன் டேங்க் மூடியைத் திறக்கும் போது திடீரென ஆவி வெளியேறும். இந்த ஆவி ஸ்பார்க் பிளக், மின்சார குறுக்குச் சுழற்சி, நிலை மின்சாரம் (Static electricity) இவற்றுடன் தொடர்பு கொண்டால் உடனடி தீப்பற்றும்.

உள்ளழுத்தம் அதிகரித்தல்

மோட்டார் சைக்கிள் டேங்கில் காற்றோட்ட அமைப்பு (vent system) உள்ளது. அது அடைந்திருந்தால், சேதமடைந்திருந்தால் அல்லது டேங்க் மிக அதிகமாக நிரப்பப்பட்டிருந்தால் உள்ளே அழுத்தம் அதிகரித்து பெட்ரோல் பீறிட்டு வெளியேறலாம். இதனால் எரிபொருள் ஆவி மேகம் உருவாகி தீப்பற்றும் அபாயம் அதிகரிக்கும்.

2. எரிபொருள் கசிவு (Fuel Leakage)

மோட்டார் சைக்கிள் தீவிபத்துகளில் மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான காரணமாக எரிபொருள் கசிவு கருதப்படுகிறது. பெட்ரோல் மிகவும் ஆவியாகும் மற்றும் குறைந்த தீப்பற்றும் வெப்பநிலை (Low Flash Point) கொண்ட திரவமாக இருப்பதால், சிறிய தீப்பொறியும் தீவிபத்துக்குக் காரணமாகும். எனவே, எரிபொருள் கசிவு ஒரு சாதாரண இயந்திர கோளாறு மட்டுமல்ல; அது தீ மற்றும் உயிரிழப்புக்கான அபாய காரணியாகும்

எரிபொருள் கசிவு ஏற்படும் காரணங்கள்

1. எரிபொருள் குழாய்(Fuel Hose) சேதம்- பழைய ரப்பர் குழாய் கிழிதல், வெப்பத்தால் கடினமடைதல் – அதன் காரணமாக குழாய் முறிதல், தவறான பொருத்துதல் அல்லது இணைப்பு தளர்வு – முக்கியமாக ஓர் எரிபொருள் நிலையத்தில் நிரப்பிய பெற்ரோலினை டாங்கின் கீழ் உள்ள இணைப்பு குழாயினை கழற்றி பெற்ரோலினை வெளியே எடுத்து விட்டு மீண்டும் சரியான முறையில் இறுக்கமாக பொருத்தாமை

2. கார்புரேட்டர் / இன்ஜெக்டர் கோளாறுFloat valve செயலிழப்பு

3. பெட்ரோல் டேங்க் சேதம்- விபத்தில் டேங்க் உடைதல், துருப்பிடித்தல், வெல்டிங் குறைபாடு

3. இயந்திர அதிக வெப்பம்(Engine Overheating)

மோட்டார் சைக்கிள் தீவிபத்துகளுக்கான ஒரு முக்கிய காரணமாக இயந்திர அதிக வெப்பம்கருதப்படுகிறது. இயந்திரம் இயங்கும் போது எரிபொருள் எரிதல் மூலம் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பம் இயல்பாக குளிரூட்டும் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த அமைப்பில் கோளாறு ஏற்பட்டால் அல்லது இயந்திரம் நீண்ட நேரம் அதிக சுமையில் இயங்கினால், அதிக வெப்பம் உருவாகி தீப்பற்றும் சூழல் உருவாகலாம். முக்கியமாக சூழல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் இன்றைய காலப்பகுதியில் இவ்வாறான தீப்பற்றுவதற்கான சந்தர்ப்பங்கள்  அதிகம் ஆகும்.

4. எண்ணெய் அல்லது எரிபொருள் கசிவு

முக்கியமாக இன்றைய காலப்பகுதியில் பிளாஸ்டிக் கான்களில் பெற்றோலினை மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் கொண்டு செல்லும் பொழுது அதில் இருந்து கசிவு ஏற்பட்டு பெற்றோல் சூடான சைலென்சரின் மீது விழுந்து தீப்பற்றலாம் அல்லது பெற்றோல் கானினை பின்புறத்தில் தொங்கவிடும் பொழுது அவை சூடான சைலன்சரில் பட்டு உருகி பெற்றோல் கசிந்து தீ விபத்து ஏற்படலாம்

5. எரிபொருள் நிரப்பும்போது சிந்துதல்

பொதுவாக மக்கள் டேங்க் முழுவதும் நிரப்புகிறார்கள், சிறிது பெட்ரோல் வெளியே சிந்துகிறது, உடனே வண்டியை இயக்குகிறார்கள் சிந்திய பெட்ரோல் சூடான சைலன்சரில் பட்டு அல்லது என்ஜினில் பட்டு  தீ விபத்து ஏற்படலாம்.

மோட்டார் சைக்கிளில் தீ விபத்தினை குறைத்தல்

  • டேங்க் முழுவதும் நிரப்பாமல் சிறிது இடைவெளி விடுதல்
  • நிரப்பும் பொழுது பெற்றோல் சிந்தினால் நிரப்பிய பின் உடனே இயக்காமல் சிறிது நேரம் காத்திருத்தல்
  • சிந்திய பெட்ரோலை துடைத்தல்
  • பிளாஸ்டிக் கொள்கலனில் அதுவும் பின்புற இருக்கையில் எரிபொருள் கொண்டு செல்வதனை நிறுத்துதல்

போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் தீ விபத்தைத் தவிர்க்க உதவும்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.