மரணத்திற்கு பிந்தைய பாலியல் வல்லுறவு – உண்மை என்ன?

சில வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா – டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத சாலையில் வைக்கப்பட்டிருந்த இறந்த இளம் பெண்ணின் உடலோடு வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் குறித்த வைத்தியசாலையின் முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சட்ட வைத்திய நிபுணர்களின் விசாரணையில் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதற்கான விஞ்ஞான ரீதியான சான்றுகள் எவையும் இல்லை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மரணத்திற்கு பின்னர் எமது இறந்த உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் எவ்வாறு பாலியல் துஸ்பிரயோகம் நடைபெற்ற மாதிரியான பிழையான எண்ணப்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதை  சட்ட மருத்துவ ரீதியாக இப்பதிவு விளக்குகின்றது.

மரணத்திற்குப் பிறகு அல்லது மரணம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்கள் அல்லது வெளி தலையீடுகளால் உண்டாகும் சிதைவுகள் “மரணத்திற்கு பின்னரான உடலியல் மாற்றங்கள் (Postmortem Artefacts)” என அழைக்கப்படுகின்றன. இவை உயிருடன் இருந்தபோது ஏற்பட்ட காயங்கள் அல்ல. இந்த மாற்றங்கள் பின்வரும்  காரணங்களால் ஏற்படலாம்

  1. முதலுதவி முயற்சிகள் (Resuscitation Artefacts): ஒருவரைக் காப்பாற்றச் செய்யப்படும் சி.பி.ஆர் (CPR) சிகிச்சையின் போது விலா எலும்புகள் உடைவது அல்லது மார்பில் சிராய்ப்புகள் ஏற்படுவது.
  2. உடலைக் கையாளுதல் (Handling/Transportation): உடலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும்போதும் அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போதும் தோலில் ஏற்படும் அழுத்தத் தழும்புகள்.
  3. விலங்குகள் மற்றும் பூச்சிகள் (Animal/Insect Activity): எறும்புகள், ஈக்கள் அல்லது எலிகள் உடலைக் கடிப்பது. இவை சில நேரங்களில் தீக்காயங்கள் அல்லது கத்திக்குத்து காயங்களைப் போலத் தோன்றும்.
  4. இயற்கை சிதைவு (Decomposition Changes): மரணத்திற்குப் பின் உடல் வீங்குதல், தோல் உரிதல் அல்லது நிறம் மாறுதல் ஆகியவை தற்கொலை அல்லது கொலையின் போது ஏற்பட்ட காயங்களாகத் தவறாகக் கருதப்படலாம்.
  5. சுற்றுப்புற (Environmental) காரணிகள்: வெப்பம் (Heat) காரணமாக தோல் சுருங்குதல் அல்லது எரிதல் மற்றும் நீரில் மூழ்கிய உடலில் தோல் உரிதல் (Skin slippage)

இந்த மரணத்திற்கு பின்னரான உடலியல் மாற்றங்களைச் சரியாக அடையாளம் காண்பது மிகவும் அவசியம். இவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டால், இயற்கையான மரணத்தைக் கூடக் கொலை என்று தவறான முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. பொதுவாக பொதுமக்கள் இவற்றினை தவறான கோணத்தில் விளங்கிக்கொள்வார்கள்.

ஒரு பெண் உடலில் காணப்படும் சில மரணத்திற்குப் பிந்தைய மாற்றங்கள் சில சமயங்களில் பாலியல் வன்முறையின் அறிகுறிகளைப் போல தோன்றலாம். இத்தகைய மாற்றங்கள் இயற்கையான உடல் சிதைவு, சுற்றுச்சூழல் தாக்கம் அல்லது உடலை கையாளும் போது ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக உருவாகின்றன. பாலியல் துஸ்பிரயோக அறிகுறிகள் போன்று தோற்றம் அளிக்கும் ஒருசில மரணத்திற்கு பின்னரான உடல் மாற்றங்கள் பின்வருமாறு

1. மரணத்திற்குப் பிந்தைய யோனி தளர்ச்சி (Postmortem Vaginal Relaxation)

மரணத்திற்குப் பிறகு உடலின் தசைகள் தளர்வதன் காரணமாக யோனி மற்றும் இடுப்புப் பகுதி தசைகளும் தளர்வடைகின்றன. இதன் காரணமாக யோனி வாயில் சிறிது விரிந்தது போல தோன்றலாம் அத்துடன் லேபியா (Labia) பகுதி பிரிந்தது போல தோன்றலாம்.

2. உடல் சிதைவு மாற்றங்கள் (Decomposition Changes)

மரணத்திற்குப் பிறகு உடல் சிதைவடையும் போது திசுக்கள் மெலிந்து சேதமடைகின்றன. இதன் காரணமாக பெண்ணுறுப்பு பிரதேச தோல் உதிர்வது (skin slippage), கருமையான நிற மாற்றம், திசுக்கள் கிழிந்தது போல தோன்றுதல் போன்ற மாற்றங்கள் நிகழும்.  இத்தகைய காயங்களில் இரத்தக்கசிவு அல்லது உயிரியல் எதிர்வினை (vital reaction) காணப்படாது.

3. பூச்சி மற்றும் விலங்கு தாக்கம் (Insect or Animal Activity)

மரணத்திற்குப் பிறகு உடலின் மென்மையான பகுதிகளை பூச்சிகள் அல்லது சிறிய விலங்குகள் சேதப்படுத்தலாம். இதன் காரணமாக பெண்ணுறுப்பு பிரதேச சுற்றுப்பகுதியில் ஒழுங்கற்ற கிழிவுகள் தோன்றலாம். இது சில சமயங்களில் பாலியல் வன்முறை அல்லது உறுப்புச் சேதம் போல தவறாக கருதப்படலாம்.

4. சிதைவினால் உருவாகும் வாயுக்கள் (Putrefaction Gas Formation)

உடல் சிதைவின் போது உருவாகும் வாயுக்கள் உடலின் சில பகுதிகளை வீக்கமடையச் செய்கின்றன. இதன் காரணமாக பாலுறுப்பு பகுதியில் வீக்கம், யோனி திசுக்கள் வெளியே தள்ளப்படல் போன்றன நிகழலாம். இது சில சமயங்களில் உடலுறவு ஏற்பட்டது போல தவறாக தோன்றலாம். சில சந்தர்ப்பங்களில் வயிற்றில் உருவாகும் அதிக அழுத்தம் காரணமாக கருப்பை, யோனி மற்றும் குதம் போன்றன வெளித்தள்ளப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு உருவாகும் வாயுக்கள் காரணமாக வயிற்றில் அமுக்கம் அதிகரித்து கருப்பையில் இருக்கும் சிசு வெளித்தள்ளப்படும் இதனை coffin delivery என்றழைப்பார்கள்

5. சிதைவு திரவங்கள் வெளியேறுதல் (Purge Fluid)

உடல் சிதைவின்போது உடலின் துவாரங்களில் இருந்து திரவங்கள் வெளியேறலாம். இதன் காரணமாக யோனி வாயிலில் சில சமயம் இரத்தம் அல்லது விந்து போன்றதாக தோன்றலாம். ஆய்வக பரிசோதனை மூலம் மட்டுமே இது உண்மையில் என்ன என்பதை உறுதிப்படுத்த முடியும்.

6. மரணத்திற்குப் பிந்தைய இரத்தக் குவிவு (Livor Mortis / Hypostasis)

மரணத்திற்குப் பிறகு இரத்தம் கீழ்நோக்கி தேங்குவதால் நிறமாற்றம் ஏற்படும். இதன் காரணமாக தொடை மற்றும் பாலுறுப்பு பகுதியில் ஊதா அல்லது நீல நிறம் போல தோன்றலாம். இது சில சமயம் அடிபட்ட காயம் போல இருக்கும்

பாலியல் வன்முறை (Sexual Assault) என்பது ஒரு முக்கியமான குற்றமாகும். ஒரு பெண் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்படும்போது, மரணப்பரிசோதனையில் (Autopsy) பாலியல் வன்முறை நடந்ததா என்பதை கண்டறிதல் மிக முக்கியமானதாகும். இதற்காக சட்ட வைத்திய அதிகாரி உடல் காயங்கள், உயிரியல் சான்றுகள், ஆய்வக பரிசோதனைகள் மற்றும் சம்பவ சூழ்நிலை ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்கிறார். சில குறிப்பிட்ட அறிகுறிகள் பாலியல் வன்முறையை உறுதிப்படுத்த உதவுகின்றன.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.