தென்கொரியா – சனநெரிசல் மரணத்திற்கு காரணம் என்ன?

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தென்கொரியாவின் தலைநகர் சியோலின் ஒரு பகுதியில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் பொழுது ஏற்பட்ட எதிர்பாராத சன நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 150 இற்கும் அதிகமானவர்கள் குறிப்பாக இளவயதினர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியுள்ளனர். இந்தநிலையில் தென்கொரிய நாடே சோகத்தில் உள்ளது. பலருக்கு ஏன் சன நெரிசலின் பொழுது இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கமின்மை நிலவுகின்றது. அதனை போக்கும் முகமாக இந்த பதிவு அமைகின்றது.


பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் சிறிய, மூடிய கட்டிடங்களில் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக குறுகிய பாதையினுடாக/வாசலினுயூடாக அதிகளவான மக்கள் வெளியேறும் பொழுது அல்லது உள் நுழையும் பொழுது ஏற்படுகின்றது. மேலும் குறித்த கட்டிடம் அல்லது இடமானது தாங்கக்கூடிய சனத்தொகையினை விட அதிகளவு மனிதர்கள் கூடும் பொழுதே ஏற்படுகின்றது. திறந்த வெளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது அரிது.
இவ்வாறான சம்பவத்தின் பொழுது compressive or restrictive asphyxia என்பதே பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்து விடுகின்றது. compressive or restrictive asphyxia என்றால் என்ன? நாம் சாதாரண நிலைகளில் சுவாசிக்கும் பொழுது அதாவது உட்சுவாசம் செய்யும் பொழுது முறையே எமது நெஞ்சறையானது வெளிநோக்கி மற்றும் மேல்நோக்கி அசையும் அவ்வாறே வெளிச்சுவாசம் செய்யும் பொழுது முறையே உள்நோக்கி மற்றும் கீழ்நோக்கி அசையும். மேலும் நாம் வலிந்த சுவாசம் (Forced respiration) செய்யும் பொழுது எமது கைகளில் உள்ள சில தசைகளும் வேலை செய்யும். சனநெரிசலின் பொழுது பிரயோகிக்கப்படும் பொழுது வெளிப்புற விசைகள் காரணமாக மிகுந்த சனநெரிசல் ஓர் குறுகிய மூடிய பிரதேசத்தில் ஏற்படும் பொழுது அங்கு கூடியிருக்கும் மனிதர்களின் சுவாச அசைவுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக சனநெரிசலில் சிக்கி உள்ளவர்களில் சுவாசம் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக இரத்தத்தில் காபனீர்ஓட்ஸைட்டின் அளவு அதிகரித்து ஓட்ஸிசன் அளவு குறைவடையும் இதன்காரணமாக மயக்கம் அல்லது இறப்பு ஏற்படும். மேலும் மனிதர்கள் காற்றோட்டம் குறைந்த இடத்தில் கை மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் நிமிர்ந்த நிலையில் நிற்கும் பொழுது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடையும் இதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படும்.
மயக்கம் ஏற்பட்டு ஒருவர் விழும் பொழுது சனநெரிசலில் “domino effect” காரணமாக மேலும் பலர் விழுவார்கள். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் விழும் பொழுது மேலும் நசிபடுவர்களினால் தொடர்ந்து சுவாசிக்க முடியாது இறப்பு ஏற்படும்.


மேலே உள்ள படமானது டோமினோ விளைவு எவ்வாறு சனநெரிசலில் ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை காட்டுகின்றது.

மேலும் ஒருவர் மயக்கம் அடைந்து விழும் பொழுது பதட்டமடையும் அருகில் உள்ளவர்களினால் இந்த நிலை மோசமடையும். மேலும் விழுந்தவர்களின் மேல் மற்றைய மனிதர்கள் ஏறி நிற்கும் பொழுது இந்த நிலை மேலும் மேலும் மோசமடையும் அத்துடன் அவர்களின் உள்அவயவங்கள் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் உண்டு.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூடிய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தும் மின்சார கம்பிகள் அறுந்து வீழ்ந்து மின்சாரம் பாய்ந்தும் இறப்பு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. மேலும் இவ்வாறன சனநெரிசலில் சிக்கும் இருதய நோயாளிகள் போன்றோர் தமது நோய் நிலைமை மோசமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
மக்களுக்கு இவ்வாறு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் நிகழ்வினை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்கள் மீதே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முற்றும்

பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் ஆபத்தானதா??

இந்தமாதம் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் பாவனையால் மாதாந்தம் 2 முதல் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது மிகவும் உயர்ந்த மரண வீதம் ஆகும். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 தொடக்கம் 25 மற்றும் 40 தொடக்கம் 45 வயதுகளை உடையவர்கள்.இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இறந்தவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி பாலுணர்வை ஏற்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டவர்கள். மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை உபயோகிப்பதும், தரமற்ற மருந்துகளை உட்கொள்வதுமே இவ்வாறான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது என்று மேலும் கருத்து தெரிவித்தார்.
“வயாகரா” என்ற பெயரில் முதன் முதல் சந்தைக்கு வந்த Sildenafil citrate என்ற மருந்தே முதன் முதலாகவும் ஆண்களில் விறைப்பு குறைபாட்டினை மருத்துவ ரீதியில் அனுமதிக்கப்பட்டது. இன்று இந்த மருந்தானது பல்வேறு பட்ட வர்த்தக நாமங்களில் கிடைக்கபெறுகின்றது. அந்திசாயும் பொழுது மருந்தகங்களுக்கு வரும் நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் இவ்வாறான மாத்திரைகளை வாங்குவதினை நாம் அவதானிக்கலாம்.


Sildenafil citrate என்ற பாலுணர்வை தூண்டும் மாத்திரையானது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.
முதலில் ஏன் அதிகளவிலான ஆண்கள் இந்த பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பாவிக்கின்றார்கள் என்றால், 40 வயதிற்கு மேற்பட்ட 30% ஆண்கள் இந்த விறைப்பு குறைபாட்டினை கொண்டிருக்கின்றனர். எனவே தான் குறித்த ஆண்கள் இந்த பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பாவிக்கின்றனர்.
Sildenafil citrate மாத்திரையானது ஏனைய வகை மாத்திரைகளுடன் குறிப்பாக நைட்ரைடு (nitrates) வகை மாத்திரைகளுடன் தாக்கம் புரிந்து குருதி அழுத்தத்தில் சடுதியான குறைவினை ஏற்படுத்தும் இதன்காரணமாக மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற பிரதான அவயவங்களுக்கு வழங்கப்படும் குருதியின் அளவு குறைவடையும் இதனால் மேற்குறித்த அவயவங்கள் செயலிழந்து இறப்பு நேரிடும்.
மேலும் Sildenafil citrate ஆனது இருதய தசையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்களை கொண்டுவரும் இதன் காரணமாகவும் சடுதியான இருதய இறப்பு ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கும்.
மேலும் குணம் குறியற்ற நிலையில் ஆண்களில் காணப்படும் மாரடைப்பு நோயுடன் விறைப்பு குறைபாடும் சேர்ந்தே காணப்படும். இவ்வாறான ஆண்கள் தமக்கு மாரடைப்பு நோய் இருப்பதனை அறியமாட்டார்கள். இவர்கள் மேற்குறித்த பாலுணர்வினை தூண்டும் மாத்திரையினை பாவித்து அதிக நேரம் உடலுறவு கொள்ளும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கின்றது. குறிப்பாக உடலுறவின் பொழுது இருதய துடிப்பு மற்றும் குருதி அழுத்தம் அதிகரிக்கின்றன இதன் காரணமாக இருதயம் அதிகளவு வேலை செய்யவேண்டிய தேவை உள்ளது. இதன்காரணமாக இருதயத்திற்கு ஏற்படும் அதிகரித்த ஓட்ஸிசன் தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்ய முடியாமல் மாரடைப்பு ஏற்படுகின்றது.
எனவே மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இவ்வாறான பாலுணர்வினை தூண்டும் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. மேலும் இருதய, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் கட்டாயம் வைத்தியர் ஒருவரின் சிபார்சுடனேயே இவ்வகையான மாத்திரைகளை குறித்த அளவில் பாவிக்க வேண்டும்.

முற்றும்

போதையும் திடீர் மரணங்களும் – ஏன்??

அண்மைக்காலத்தில் யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை காரணமாக சடுதியாக திடீர்ரென மரணம் அடைந்திருக்கின்றனர். அதாவது மூன்று மாத காலப்பகுதியில் ஏறத்தாழ 10 மரணங்கள். எம்மில் பலருக்கு ஏன் இவ்வாறான சடுதியான திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி போதிய விளக்கமின்மை இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இப்பதிவு அமைகின்றது.

இவ்வாறான திடீர் மரணங்கள் ஊசியின் ஊடாக போதைப் பொருளினை உட் செலுத்தும் பொழுதே பெரும்பாலும் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் மரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1. போதைப்பொருள் பாவனையின்  நேரடி விளைவினால் ஏற்படும் மரணங்கள்

போதைக்கு அடிமையானவர் ஒருவர் நாளாந்தம் உள்ளெடும் போதைப்பொருளின் அளவினை அதிகரித்த வண்ணமே இருப்பார். ஓர் நிலையில் அதிகரித்த அளவானது பாவனையாளரில் சடுதியான நஞ்சாதலை (Acute toxicity) ஏற்படுத்தி இறப்பு ஏற்படும்.

மேலும் தூய போதைப்பொருளினுள் வியாபார நோக்கம் கருதி பல்வேறுபட்டபொருட்களை கலந்து விற்பனையாளர்கள் கலப்படம் செய்வார்கள். இவ்வாறு சேர்க்கப்படும் பொருட்கள் பாவனையாளரில் கடுமையான ஒவ்வாமையினை (anaphylactic shock) ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். கெரோயின் போன்ற போதைப்பொருட்கள் சடுதியான இருதய மற்றும் சுவாச செயற்பாட்டு (Sudden cardio respiratory arrest) நிறுத்தத்தினை  ஏற்படுத்தும். இவ்வாறே கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள் அதிகரித்த குருதி அழுத்தத்தினை ஏற்படுத்தி மூளையில் இரத்த கசிவினை ஏற்படுத்தி சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும். இது தவிர கொக்கெய்ன் மற்றும் ஐஸ் என்ற அம்பிட்டமைன் வகை போதை பொருட்கள் இருதய தசையில் சடுதியான இறப்பினை (cardiac necrosis) ஏற்படுத்தும்.

2. போதைப்பொருள் பாவனையின் மறைமுக விளைவினால் ஏற்படும் மரணங்கள்

இங்கு மரணங்கள் போதைப்பொருள்  பாவனையின் மறைமுக விளைவினால் அதாவது நேரடி விளைவினால் அல்லாது ஏற்படும் மரணங்களை குறிக்கும். அதிக போதையில் இருக்கும் பொழுது எடுக்கும் வாந்தி நேரடியாக சுவாச குழாயினுள் சென்று மூச்சு திணறலை ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். மேலும் அதிக போதையில் தலை கீழாகவும் கால் மேலாகவும் தூங்கும் பொழுதும் மூச்சு திணறலை (positional asphyxia) ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். மேலும் அதிக போதையில் நீரில் மூழ்குதல், விபத்துக்களை சந்தித்தல் , உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்களில் இருந்து விழுதல் போன்றவற்றினால் தீடீர் மரணங்கள் ஏற்படும். 

3. ஊசி மூலமான போதைப்பொருள் பாவனையின் பொழுது கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள்

இங்கு ஊசி மூலம் போதைப்பொருளினை செலுத்தும் பொழுது ஹெப்படைட்டிஸ், HIV போன்ற வைரசுக்கள் தொற்றி நாளடைவில் அந்த நோய்கள் காரணமாக இறப்பு ஏற்படும். இது தவிர ஊசி செலுத்தும் இடங்களில் கிருமித்தொற்று ஏற்பட்டு அது இரத்தம் மூலம் உடல் முழுவதும் பரவுவதினாலும் இருதயத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துவத்தினாலும் இறப்பு ஏற்படும். மேலும் தொடர்ச்சியான ஊசி மூலமான போதைப்பொருள் பாவனை காரணமாக எமது நுரையீரலில் குருதியின் அழுத்தம் அதிகரிக்கும் மேலும் இருதய தசையின் செயற்பாடு குறைவடையும் இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படும்.

மேற்குறிப்பிட்டவை யாவும் முக்கியமான ஒரு சில காரணங்களே  ஆகும். மேற்குறித்தவை தவிர பல்வேறுபட்ட காரணங்களினால் போதைப்பொருளினால் இறப்பு ஏற்படலாம். 

வைத்தியர் நோயாளி உறவு (பகுதி 1)

அண்மையில் தென்னிலங்கையில் வைத்தியர் ஒருவர் அரசியல்வாதியான நோயாளி ஒருவரினை பார்வை இட மறுத்த சம்பவம் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்து இருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பலரும் குறித்த வைத்தியர் மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்ததாக  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இப்பதிவில் வைத்தியர் – நோயாளர் உறவு முறை அதாவது தொழில்முறையிலான  உறவுமுறை எப்பொழுது வைத்தியரினால் நிராகரிக்கப்படலாம் என விளக்குகின்றது.

ஆங்கில வைத்திய முறையினை பின்பற்றும் வைத்தியர்கள் ஒவ்வொருத்தரும் கடமை ஏற்கும் பொழுது ஹிப்போகிரடீஸ் உறுதிமொழியினை ஏற்றே பதவி ஏற்கின்றனர்.ஹிப்போகிரடீஸ் சத்திய பிரமாணம்/ உறுதிமொழியின் பிரகாரம் ஓர் வைத்தியர் இனம், மதம், மொழி, நிறம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை களைந்தே நோயாளிகளுக்கு சேவை ஆற்ற வேண்டும் என வலியுறுத்த படுகின்றது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரை நாடி நோயாளி ஒருவர் செல்லும் பொழுது வைத்தியர் எவ்வாறு அந்த நோயாளியினை பார்வையிடாது/ சிகிச்சை அளிக்காது மறுக்கலாம் என்பதே பலரின் கேள்வியாகும்.

ஹிப்போகிரடீஸ் சத்திய பிரமாணத்திற்கு அப்பாலும் மருத்துவ ஒழுக்கவியல் கோர்வையினால் மருத்துவர்கள் கட்டுப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். இங்கு மருத்துவ அவசர நிலையின் பொழுது  அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்திய சாலையில் மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது.

மருத்துவ ரீதியாக அவசரமற்ற நோய் நிலையின் பொழுதும் அரச வைத்திய சாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் தனியார் வைத்திய சாலையில்  மருத்துவ ரீதியாக அவசரமற்ற நோய் நிலையின் பொழுது வைத்தியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கலாம் அதாவது வைத்தியர் நோயாளர் உறவு முறையினை ஆரம்பிக்க மறுப்பு தெரிவிக்கலாம் . அதில் மருத்துவ ஒழுக்கவியல் ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ எவ்விதமான தவறுகளும் இல்லை. 

வைத்தியர் ஒருவர் பொதுமகன் ஒருவரை நோயாளியென கருதி அவரினை பார்வையிட்டு சிகிச்சை அளிக்க தொடங்கும் பொழுதுதான் வைத்தியர் – நோயாளர் என்ற தொழில் ரீதியான உறவுமுறை ஆரம்பிக்கின்றது. இவ்வாறான தொழில் முறை உறவினை நிராகரிக்கவும் வைத்தியர்களுக்கு உரிமை உண்டு என்பதே உண்மை.  மேலும் குறித்த சம்பவத்தில் அரசியல்வாதியானவர்  ஏற்கனவே குறித்த வைத்தியரின் நோயாளியாக இருப்பாரானால், அந்த நோயாளி வேறு தகுதி வாய்ந்த வைத்தியரினை தேடி சிகிச்சை பெறும் வரை குறித்த நோயாளிக்கு சிகிச்சை வழங்க வேண்டிய கடப்பாடு குறித்த வைத்தியருக்கு உண்டு. அதாவது அக்குறித்த வைத்தியர் வைத்தியர் – நோயாளி உறவினை உடனடியாக முறிக்க முடியாது. உதாரணமாக வைத்தியர் ஒருவரிடம் வரும் நோயாளி ஒருவர் குறித்த வைத்தியரின் நிபுணத்துவ துறைக்கு அப்பாற்படடவராக இருந்தால் வைத்தியர் குறித்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் நோயாளியினை நிராகரிக்கலாம். இவ்வாறு வைத்தியர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.   

தொடரும்..

வீடியோ கேம் – இறப்பு ஏன்?

அண்மையில் இளவாலை பகுதியில் இளைஞர் ஒருவன் வீடியோ கேம் ஆன “பப்ஜி” இற்கு அடிமையான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது சமூக ஆர்வலரிடையே பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இவ்வாறான சம்பவங்கள் உலகின் பல இடங்களில் முன்னரும் நடைபெற்றுள்ளன. இப்பதிவில் வீடியோ கேம் பாவனையானது அதனை பாவிப்பவர்களிடத்து குறிப்பாக இளைஞரிடத்து எவ்வாறு மரணங்களை ஏற்படுத்துகின்றது பற்றி விளக்குகின்றது.

Player Unknown’s Battle grounds (PUBG) என்பதே தமிழில் “பப்ஜி” என்றழைக்கப்படுகின்றது. இந்த வீடியோ கேமில் பலர் தனியான தீவு ஒன்றில் பாராசூட் மூலம் தரை இறக்கப்படுவார்கள் அவர்கள் அத்தீவில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி அங்குள்ளவர்களை கொல்ல வேண்டும். இந்த விளையாட்டிற்கு அடிமையாகியவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அதில் விளையாடவே செலவு செய்வார்கள் இதன் காரணமாக உணவு, தனி நபர் சுகாதாரம்,கல்வி, தொழில், குடுப்ப உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் விளையாட்டின் காரணமாக குறைந்தளவு நேரமே உறங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உண்டாகும். அடுத்து இவ்வாறு கைத்தொலை பேசி அல்லது கணனியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்துள்ளார்கள் என பார்ப்போம்

1. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் குறித்த ஒரு காரணத்தினால் தொடர்ச்சியாக குறித்த வீடியோ கேம் இணை விளையாட முடியாத சூழ்நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உதாரணமாக பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு, இணைய வசதியினை பெற போதிய பணம் இன்மை….

2. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருசிலர் குறித்த வீடியோ கேம் இணை விளையாடியதன் பலனாக ஏற்பட்ட அதீத  மனஅழுத்தம் மற்றும் சிலவகை வீடியோ கேமில் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படும் கட்டளைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

3. மேலும் சிலர் குறித்த வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தமது தொழிலில் ஒழுங்கான முறையில் ஈடுபட முடியாமையினால் கடன், அதீத வேலைச்சுமை போன்றவற்றினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

4. மேலும் வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் குறைந்த அளவிலான நீரினை நாளாந்தம் உள்ளெடுப்பதினால் அவர்களின் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டும் சோடியம் பொட்டாசியம் போன்ற அயன் பற்றாக்குறை ஏற்பட்டும் இறப்பு ஏற்பட்டுள்ளது .

5. ஏற்கனவே மூளையின் இரத்த குழாய்களில் பலவீனமான அமைப்பினை உடையவர்கள்(AV malformation/ aneurysm)  வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கேம் விளையாடும் பொழுது அதிகளவு அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த இரத்த குழாய் வெடித்து மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இதனையே பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூளை நரம்பு வெடித்து இறப்பு ஏற்படுவதாக செய்தி இடுகின்றன.

6. மேலும் சிலர் இவ்வாறு கேம் விளையாடியவண்ணம் வீதியினை கடத்தல், வாகனம் செலுத்துதல், உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் நிற்றல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது விபத்துக்களை சந்தித்து மரணத்தினை தழுவியுள்ளனர்

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்” எனவே அளவுக்கு அதிகமான வீடியோ கேம் பாவனையினை குறைப்போம் மற்றும் அடிமையாதலையும் தடுப்போம்.

நன்றி

இனி வரும் காலங்கள்…

ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இரண்டு வயது சிறுமி ஒருத்தியை தாயார் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் அழைத்து வந்திருந்தார். சிறுமியின் முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளில் ஆழமான பாரிய இன்றி காயம் காணப்பட்டது. எவ்வாறு தீக்காயம் ஏற்பட்டதுஎன்று வினாவிய பொழுது, அழைத்து வந்திருந்த போலீசார் மின்சார தடையின் பொழுது சிறுமி எரிந்து கொண்டிருந்த விளக்கின் மீது தவறுதலாக விழுந்ததன் காரணமாகவே இந்த தீக்காயம் ஏற்பட்டதாக கூறினார் எனினும் தனக்கு சந்தேகம் வேறு இருப்பதாகவும் கூறினார்.
தற்போதைய காலகட்டத்தில் இலங்கையில் அதிகரித்த நேரத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முன்னிரவில் ஏற்படுத்தப்படும் மின்சார தடை காரணமாக பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை ஒளியேற்ற மண்ணெண்னை மற்றும் தேங்காய் எண்ணெய் விளக்குகளேயே பயன்படுத்துகின்றனர். இவற்றினை பயன்படுத்தும் பொழுது தீ விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது இதன் காரணமாக அநியாயமாக காயங்கள், உயிரிழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் ஏற்படுகின்றன.
எவ்வாறு நாம் இவ்வாறன குப்பி விளக்குகளினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

  1. குப்பி விளக்கு ஆகட்டும், மெழுகுதிரி ஆகட்டும் எந்தவொரு விளக்கும் சிறுவர்களுக்கு எட்டாத இடத்தில் வைக்கப்பட வேண்டும். முன்னைய காலத்தில் அரிக்கன் லாம்புகள் வீட்டின் கூரையில் இருந்து தொங்கும் கம்பியில் தான் தொங்க விடப்பட்டன.
  2. சிறுவர்களுக்கு இவ்வாறான விளக்குகளுக்கு அண்மையாக செல்லக்கூடாது எனவும் அவ்வாறு சென்றால் தீக்காயம் ஏற்படும் எனவும் அறிவுறுத்த (?பயமுறுத்த) வேண்டும்.
  3. குப்பிவிளக்குகள் தயாரிக்க பயன்படும் போத்தல்கள் ஒடுங்கிய வாய் ஓடியதாக இருக்க வேண்டும் ஏனெனில் சரிபடும் பொழுது உள்ளே இருக்கும் மண்ணெண்ணெய் அதிகளவில் சடுதியாக வெளியேறாமல் இருக்கும்.
  4. குப்பிவிளக்குகள் தயாரிக்க பயன்படும் போத்தல்கள் கட்டையானதாகவும் உயரம் குறைந்தனவாகவும் அதன் தொடுகையுறும் அடிப்பரப்பு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதன் காரணமாக குறித்த போத்தலின் புவியீர்ப்பு மையம் உயரம் குறைவானதாக இருக்கும் இதன் காரணமாக குறித்த போத்தல் இலகுவில் சரிந்து விழுந்து விடாது.
பாதுகாப்பான குப்பி விளக்கு ஓர் ஓப்பீடு
  1. குப்பி விளக்குகளை மேசையில் அல்லது தரையில் வைத்து படிக்கும் பொழுது பெற்றோரின் அவதானிப்பு கட்டாயம் தேவை. பல சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் நித்திரை காரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்கள் உண்டு.
  2. குப்பி விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அல்லது சூடாக இருக்கும் பொழுது அதனுள் மண்ணெண்ணெய் நிரப்புதல் கூடாது. மேலும் மண்ணெண்ணெய் கொள்கலன்கள் தெளிவாக அடையாளம் காண தக்கவாறு இருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் மண்ணெண்ணையிற்கு பதிலாக பெற்றோல் நிரப்பப்பட்டு பாரிய தீ விபத்துக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் நடைபெற்றுள்ளன.
  3. இவ்வாறான குப்பி விளக்குகளுக்கு பதிலாக LED பல்ப்புக்களிலாலான சார்ஜர் லைற்றுக்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
  4. மேலும் குப்பிவிளக்குகளின் மூடியில் இருந்து உலோக குழாய் (வால்வு கட்டை) வைத்து சிறிதளவு உயரத்தில் தான் திரியானது எரிய வேண்டும் அதன் பொழுதுதான் வெப்பமானது கீழே இருக்கும் தாங்கியினை சென்றடைவது குறைவாக இருக்கும்
    முற்றும்

இளம் தம்பதியினர் ஹோட்டலில் மரணம்!! நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற தம்பதியர் ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தயிருந்தது. அவர்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.
அவர்கள் முந்திய இரவுப் பொழுதில் விருந்தில் BBQ முறையில் இறைச்சியை சுட்டு சாப்பிட்டிருக்கின்றனர் அதன் பின்னர் குளிர் அதிகமாக இருக்கவே அரைகுறையாக எரிந்து மீதமிருந்த BBQ உபகரணத்தினை தமது அறைக்கு எடுத்து சென்று குளிரினை போக்கிய பின்னர் நித்திரைக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் காலையில் வேறு அறையில் தங்கியிருந்த உறவினர்கள் தம்பதியினர் வெளியில் வராமையினை கண்டு கதவினை உடைத்து உட்சென்று பார்த்த பொழுது தான் அவர்கள் ஏற்கனவே இறந்திருந்தமை கண்டறியப்பட்டது. இச்சம்பவம் அவர்களுக்கு பலத்த அதிர்ச்சியினையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தினை தொடர்ந்து நடாத்தப்பட்ட மரண விசாரணை மற்றும் உடற்கூராய்வு பரிசோதனை போன்றவற்றின் முடிவில் குறித்த தம்பதியினர் இறந்தமைக்கான காரணம் எரிந்து மீதமிருந்த BBQ உபகரணத்தில் இருந்து வெளியேறிய கார்பன் மொனோக்சைட்டு (Carbon monoxide) வாயுவினை அவர்கள் சுவாசித்தமையே காரணம் என்று கண்டறியப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கையிலும் இவ்வாறான மரணங்கள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்பன் மொனோக்சைட்டு வாயு ஆனது பொதுவாக குறை தகனம் நிகழும் பொழுது வாகனகளில் இருந்து வெளியேறும் ஓர் மணம், நிறம் அற்ற வாயு ஆகும். இது ஓர் சுவாசிக்க தகுந்த அல்லாத ஓர் நச்சு வாயு ஆகும். இது சாதாரணமாக வழிமணடலத்தில் இருந்து நாம் உள்ளெடுக்கும் ஒக்சிசன் விட இது 200 மடங்கு எமது இரத்தத்தில் உள்ள சிவப்பு நிறத்திற்கு காரணமான ஈமோகுளோபினுடன் நிரந்தரமாக இணையும் திறன் உள்ளது. இதன் காரணமாக  ஒக்சிசன் எமது உடலில் உள்ள அங்கங்களுக்கு கடத்தப்படாது. இதன்காரணமாக மூளை மற்றும் இருதயம் ஆகியன இறக்கும் அதனை தொடர்ந்து அம்மனிதனும் இறப்பான். மேலும் கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசிக்கும் பொழுது மனிதன் அதனை உணர்வதில்லை ஏன்னெனில் அதற்கு மணம் மற்றும் நிறம் இல்லை மேலும் தொடர்ச்சியாக சுவாசிக்கும் இடத்து குறித்த நேரத்தின் பின்னர் மனிதன் சுய நினைவினை இழந்து விடுவான் இதன் காரணமாக ஆபத்தில் இருந்து மனிதன் விலக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

இவ்வாறு கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசித்து மரணம் ஏற்படும் வேறுசில சந்தர்ப்பங்கள் வருமாறு

  1. மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த சிறிய இடத்தில் இயக்கப்படும் வாகனம் அல்லது ஜெனறேற்றர் போன்றவற்றின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  2. மூடப்பட்ட, காற்றோட்டம் குறைந்த சிறிய இடத்தில் இயக்கப்படும் BBQ இயந்திரத்தின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  3. ஆழ் கிணறுகளின் உள்ளே எரிபொருள் மூலம் இயக்கப்படும் நீர்ப்பம்பிகளின் புகையினை சுவாசிக்கும் பொழுது
  4. மூடப்பட்ட வாகனம் இயங்கு நிலையில் இருக்கும் பொழுது வாகனத்தின் புகை போக்கியில் இருந்து வாகனத்தின் உள்ளே புகை கசிவு ஏற்படும் பொழுது
    எனவே இவற்றினை அறிந்து கார்பன் மொனோக்சைட்டு வாயுவினை சுவாசிப்பதினால் ஏற்படும் மரணங்களை தடுப்போம்
    முற்றும்

எனக்கொரு girl/boy friend வேண்டும்

அன்று விடுமுறையாகயாகவிருந்தும் பாடசாலை சிறுமி ஒருத்தியை அவளது பெற்றோர் சகிதம் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அந்த மாணவி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்த பாடசாலை ஒன்றில் தரம் பத்தில் கல்வி கற்று வருகின்றாள்.

அவள் தினமும் பாடசாலைக்கு உந்துருளியிலேயே செல்லும் வழக்கமுடையவள். அவளது சிநேகிதிகளும் அவ்வாறே செல்வார்கள். அவளது வகுப்பில் எல்லோருமே பதின்ம வயதுடையவர்கள் என்பதினால் என்றுமே வகுப்பு கலகலப்பாகவும் கிளுகிளுப்பாகவும் இருக்கும். அவர்களது பாடசாலைக்கு முன்பாக உள்ள ஓட்டோ தரிப்பிடத்திலேயே குறித்த இளைஞனும் தனது முச்சக்கர வண்டியினை நிறுத்திவைத்து சேவையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு 26 வயது ஆகியிருந்ததுடன் அவன் ஒரு பிள்ளையின் தகப்பனும் கூட. அத்துடன் அவன் போதைக்கு வேறு  அடிமையாகி இருந்தான்.

ஏறத்தாழ ஒரு வருடங்களுக்கு முன்னர் அவளது வகுப்பில் படிக்கும் அவளது ஒரு நண்பியினை பார்த்து வீதியோரத்தில் அவன் அடிக்கடி சிரிப்பான், அவளது நண்பியும் மெலிதாக சிரிப்பாள். ஓர் குறித்த நாளின் பின்னர் அவளின் நண்பி பாடசாலைக்கு வரவில்லை. அவள் விசாரித்து பார்த்ததில் குறித்த நண்பி அந்த ஓட்டோ சாரதியினை திருமணம் செய்துவிட்டதாக கேள்விப்பட்டாள். ஆனால் ஒருசில மாதங்களின் பின்னர் குறித்த ஓட்டோ சாரதி மீண்டும் அதே இடத்தில் வேலைக்கு வந்து நின்றான். ஆனால் அவளது நண்பி மட்டும் மீண்டும் பாடசாலைக்கு வரவில்லை, இவள் பல முறை தொடர்பு கொண்டும் பதில் ஏதும்மில்லை. இம்முறையும். அவன் குறித்த மாணவியின் வகுப்பிற்கு ஒருதரம் குறைவாக படிக்கும் மாணவி ஒருத்தியினை நோக்கி அவன் சிரிப்பான் சிலசில கதைகள் சொல்வான். காலப்போக்கில் அவள் அறிந்து கொண்டால் குறித்த மாணவி அந்த ஓட்டோ சாரதியை காதலிப்பதாக, முன்பு நடந்தவாறே இந்த மாணவியும் திடீர் என்று பாடசாலை வருவதினை நிறுத்தி விட்டாள், விசாரித்த பொழுது குறித்த மாணவி அந்த ஓட்டோ சாரதியை திருமணம் செய்து கொண்டதாக. இவ்வாறே மேலும் சில மாதங்கள் உருண்டோடின திடீர் என குறித்த ஓட்டோ சாரதி மீண்டும் ஓர்நாள் தென்பட்டான்.

Image titled Know That Your Boyfriend Really Loves You Step 1

இந்த முறை குறித்த ஓட்டோ சாரதி இவளை பார்த்து சிரித்தான் எதோ கதைக்க முற்பட்டான், இவள் ஏனைய இரு மாணவிகளின் கதையினை அறிந்திருந்தவள் என்பதினால் முதலில் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனினும் நாட்கள் செல்ல செல்ல அவன் அவளினை பின்தொடர்வதுவும் கதைக்க முற்படுவதும் அதிகமாகின. அவளின் வகுப்பு தோழிகளும் குறித்த ஓட்டோ சாரதியை காதலிக்கும் படி வற்புறுத்தினார்கள். மேலும் அவளது வகுப்பு தோழிகள் ஒவ்வொருவரும் ஓர் ஆண் நண்பனை அல்லது காதலனை வைத்திருக்கும் பொழுது தான் மட்டும் எதோ தனியாக இருப்பது பிழையாக அவளுக்கு தென்பட்டது. மேலும் சினிமா படங்களும் வீட்டில் பார்க்கும் மெகா சீரியல்களும் தன்னை போன்ற பாடசாலை மாணவர்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதினை தப்பாக பிழையான கண்ணோட்டத்தில் காட்டவில்லையே என்ற எண்ணம் அவளின் மனதில் படிப்படியாக வளர்ந்தது  . ஓர் நாள் பாடசாலை விட்டு வெளியேறி ஆள் நடமாட்டம் குறைந்த ஒழுங்கையில் செல்லும்  பொழுது குறித்த ஓட்டோ சாரதி, அவளினை வழிமறித்தான். ஒருசில கணங்களில் கையில் வைத்திருந்த பிளேட்டினால் தனது கழுத்தினை சரசரவென அறுத்து கொண்டான். பயத்தில் இவள் உறைந்து நிற்க அவன் கூறினான் நீ காதலிக்காவிட்டால் நான் தற்கொலை செய்வேன் என்று, இவளும் குறித்த ஓட்டோ சாரதி தற்கொலை செய்துகொண்டால் தன்னை போலீசார் விசாரிப்பார்கள் என்ற பயத்தில் உடனே சம்மதித்து விட்டாள். ஒரு சில வாரங்களின் பின்னர் குறித்த ஓட்டோ சாரதியுடன் அவளினை கூட்டி சென்று திருமணம் செய்துகொண்டான். அவளுக்கு 16 வயதிற்கு குறைவு என்பதினாலும் பெற்றோர் தேடியதினாலும் அவளை பல கிலோமீட்டர் தள்ளி உள்ள ஓர் கிராமத்திலேயே குறித்த ஓட்டோ சாரதி தங்க வைத்திருந்தான். அந்த வாழ்க்கை ஒரு சில நாட்களே இனித்தது அவளுக்கு.  மாலை நேரத்தில் வேலை முடிந்து நிறை போதையில் வந்து நிற்பான் அவன் அத்துடன் பெரும்பாலான நேரத்தில் கைகலப்பு நடக்கும். இது தவிர இரவு நேரத்தில் அதீத செக்ஸ் வெறி. இவற்றினால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவள் ஓர் நாள் தானும் தனது மணிக்கட்டினை  பிளேட்டினால் அறுத்து கொண்டாள் அதனை தொடர்ந்து வைத்திய சாலையில் அனுமதிக்கபடுகின்றாள். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பொழுது அவள் கர்ப்பிணி என வைத்தியர்கள் கண்டறிகின்றனர். இனியும் அவளின் எதிர்காலம் பற்றி கூற வேண்டுமா?

முற்றும்

      

வாழ்க்கையும் வேதனையும்

எமது மனித வாழ்க்கையில் பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் வேதனையினை அதாவது நோவினை  அனுபவித்து இருக்கின்றோம். சிறுவயதில் விளையாடி தவறுதலாக வீழ்ந்து காயப்படுவதில் ஏற்பட ஆரம்பிக்கும்   நோ ஆனது மரணம் வரை பல்வேறுபட்ட வழிகளில் ஏற்படுகின்றது. குறிப்பாக நாற்பது வயதின் பின்னர் எமது எலும்புத்தொகுதியில் உள்ள மூட்டுக்கள் அதிகம் தேய்மானம் அடைவதன்  காரணமாக அவற்றில் பொதுவாக நோ ஏற்பட ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர்  இவ்வாறு அதிகரித்த அளவில் மூட்டுக்களில் நோ ஏற்படும்.

சிலர் அதிகளவிலான நோவினையும் தாங்கும் திறமை உடையவராக இருப்பர் மறுபுறத்தில் பலர் சிறிதளவிலான நோவினையும் தாங்கும் சக்தி அற்றிருப்பர். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் நோவு காரணமாக பலரின் அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் பாதிக்கப்படுவதினை நாம் அன்றாடம் காண்கின்றோம். 

இவ்வாறு அதிகரித்த நோ காரணமாக ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளவயதில் செய்த சில காரியங்களை செய்ய முடியாமல் இருக்கும். மேலும் சிலர் படுத்த படுக்கையிலேயே  வாழ்க்கையை கடத்த வேண்டி இருக்கும். இவ்வாறு பல்வேறு காரணங்களினால் ஏற்படும் நோ ஆனது பலரின்  வாழ்க்கையினை புரட்டி போட்டிருக்கும்.

சில சந்தர்பங்களில் நோவின் வேதனை தாங்க முடியாத நிலைக்கு வரும் பொழுது சிலர் தற்கொலை கூட செய்து கொள்ள தயங்க மாட்டார்கள். நோவு என்பது மனிதனின் மனதிற்கு ஏற்படும் ஓர் சந்தோசம் அற்ற உணர்ச்சி ஆகும். இதன்காரணமாக அவ் உணர்சியினை நீக்க பல்வேறுபட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்வார் அதற்கு அவர்கள் அதிகளவு பணமும் செலவிட தயங்க மாட்டார்கள்.பொதுவாக எம்மில் பலர் நோவிற்கு தாங்களே சுய  வைத்தியம் செய்துகொள்வார்கள். இவ்வாறு சுய  வைத்தியம் செய்து கொள்வதினால் ஏற்படும் சில பிரச்சனைகளை இப்பதிவு விளக்குகின்றது

1. எம்மில் பலர் வைத்தியர் ஒருவரிடம் சிகிசசை பெறும் பொழுது தாம் ஏற்கனவே வலிநிவாரணி (pain killers) மருந்துகளை பாவிப்பதினை தெரிவிக்க மாடடார்கள். இதன் காரணமாக மீண்டும் மீண்டும் வைத்தியர்கள் ஒரே வகையான வலிநிவாரணி மருந்துகளை பரிந்துரை செய்வர், இறுதியில் வலிநிவாரணி மருந்துகளை பாவிக்கும் நோயாளியே பாதிப்புக்களாவர்.

2. நோவினை தாங்குவதில் எமது மனோ திடகாத்திரமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் காரணமாகவே பலர் பல வருடங்களுக்கு முன்னர் நடந்த விபத்து அல்லது வேறு ஏதாவது ஓர் காயம் அடைந்த சம்பவத்துக்கு இன்றும் வலி நிவாரணிகளை பாவித்துக் கொண்டிருக்கின்றோம்.

3. எம்மில் பலர் உடம்பில் நோவு என்றவுடன்  தனியார் மருந்தகங்களில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி விற்கப்படும் புருவன் (brufen) போன்ற NSAID வகையினை சேர்ந்த வலி நிவாரணி மருந்துகளை வைத்தியரின் எவ்விதமான அறிவுரையும் இன்றி பல நாட்களுக்கு பாவிக்கின்றோம். இதன் காரணமாக இறுதியில் பாதிப்படைவது நாமே.

4. புருவன் (brufen) போன்ற NSAID மருந்துகளை கட்டுப்பாடு இன்றி பாவிப்பவர்கள் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயிற்கு உள்ளாகும் (chronic kidney disease) சந்தர்ப்பம் அதிகமாகும். மேலும் எமது பிரதேசத்தில் நிலவும் அதிக வெப்பநிலை, நீரில் அதிகம் காணப்படும் கல்சியம் மற்றும் கிருமிநாசினிகள் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பினை துரிதப்படுத்த வல்லன.

5. எம்மில் பலரும் நினைக்கின்றனர் நோவு என்றால் அது எமது தசை, நரம்பு மற்றும் எலும்பு போன்றவற்றில் இருந்து தான் வருகின்றது என்று. அண்மையில் நாற்பது வயதுடைய ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெஞ்சு நோவினை பல தைலங்கள் பூசி  சுய வைத்தியம் செய்தார். பலனளிக்காத நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படடார். அப்பொழுது அவருக்கு ஈசிஜி பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு மாரடைப்பு வந்திருந்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சில மணித்தியாலங்களில் அவர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியிருந்தார்.  எனவே இவ்வாறு நெஞ்சு நோ, அதிக தலையிடி போன்றவற்றுக்கு சுய வைத்தியம் செய்வது ஆபத்தில் முடியும், ஏனெனில் இந்த குணம் குறிகள் ஆபத்தான நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

எனவே எமக்கு நோவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் உரிய வைத்திய ஆலோசனை பெற்று உரிய அளவில் வலி நிவாரணிகளை பாவிப்போம். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் இலங்கையின் ஒரு சில வைத்திய சாலைகளிலும் இவ்வாறு  நோவிற்கு என தனியான சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் தற்போதைய நவீன காலத்தில் நோவிற்கு மருந்து மாத்திரை தவிர பல்வேறு பட்ட சிகிச்சை முறைகள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

முற்றும் 

மதுபானம் + கண் = விபத்து

உலகளாவிய ரீதியில் நடைபெறும் வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபான பாவனையின் காரணமாகவே நடைபெறுகின்றது என்றால் மிகையல்ல. ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு 52 நிமிடங்களுக்கும் ஒரு நபர் மதுபானத்தினால் ஏற்படும் வீதி விபத்தினால் இறக்கின்றனர். மதுபானம் ஆனது வெவ்வேறு செறிவுகளில் மனித உடலில் வெவ்வேறு உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் உள்ள ஆகக் கூடிய மதுபான (எதைல் ஆல்கஹால்) அளவினை வெவ்வேறு அளவில் வரையறுத்து உள்ளன. சில நாடுகள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் இருக்க வேண்டிய மதுபான அளவினை பூச்சியமாகவே வைத்துள்ளன. இலங்கையில் ஒருவர் வாகனத்தினை வீதியில் செலுத்தும் பொழுது அவரது உடலில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய மதுபானத்தின் அளவு 80mg/100ml ஆகும். அதாவது மதுபானத்தின் அளவு 80mg/100ml இணை விட கூடுதலாக இருந்தால் அவர் வீதி போக்குவரத்து சட்ட திட்டங்களின் பிரகாரம் அவர் குற்றவாளி ஆகின்றார். விபத்து கட்டாயம் நடைபெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் நடைபெறும் வீதி விபத்துக்களுக்கு பெரும்பாலானவை மதுபான பாவனையினால் ஏற்படுகின்றது என்றால் அது மிகையல்ல. ஆனால் எம்மில் பலருக்கு எவ்வாறு மதுபானம் ஆனது எமது கண்ணினை அதாவது பார்வையினை பாதித்து வீதி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி தெரிவதில்லை. இப்பதிவானது மதுபானம் அருந்திய ஒருவரின் கண்ணில்  மதுபானம் ஆனது எவ்வாறான விளைவுகளை உண்டுபண்ணி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றது 

ஒருவர் மதுபானத்தினை அருந்தி ஒருசில மணித்தியாலங்களில் பின்வரும் மாற்றங்கள் கண்களில் ஏற்படும்

1. மதுபானம் ஆனது எமது கண்ணினை தாங்கி கண்ணின் அசைவுகளுக்கு உதவும் தசைகளை பலவீனப்படுத்தி  ஒருங்கமைந்த அசைவுகளை பாதிக்கும்      இதன் காரணமாகபொருட்கள் தெளிவற்றதாகவும் சில சந்தர்ப்பங்களில் இரட்டை பொருட்களாவும் (double vision) தென்படும். சில சந்தர்ப்பங்களில் வீதியின் கரையோரங்களில் இருக்கும் அல்லது பயணிக்கும் வாகனங்கள் தெரிவதில்லை. இவ்வாறான நிலை tunnel vision என்றழைக்கப்படும். இது ஓர் ஆபத்தான நிலை ஆகும் இதனால் விபத்துக்கள் நிச்சயம் ஏற்படும். மேலும் மதுபான பாவனையின் பின்னர் கண் ஆனது கட்டுப்பாடு இன்றி அசையும் நிலையும் (Nystagmus) ஏற்படலாம் இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.  

2. மேலும் மதுபானம் ஆனது கண்ணில் இருந்து மூளைக்கு கணத்தாக்கசெய்தி  கடத்தப்படும் நேரத்தினை அதிகரிக்கும் இதன்காரணமாக மதுபானம் அருந்திய சாரதி உடனடியாக (ஒரு சில மில்லி செக்கன்களில்) திறம்பட செயற்பட மாட்டார்.

3. மேலும் மதுபானம் அருந்திய சாரதியின் கருவிழியானது (Iris ) உடனடியாக சுருங்கி  தொழிற்பட மாட்டாது இதன் காரணமாக மதுபானம் அருந்திய சாரதி அதிக வெளிச்சத்திற்கு உட்படும்  அவரின் கருவிழியானது உடனடியாக தொழில் படாது இதன்காரணமாக எதிரே வரும் பொருளினை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை (accommodation reflex) ஏற்படும். இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.

4. பார்வை திறன் குறைவடைவதன் காரணமாகவும் (decreased visual acuity) மதுபானம் எமது மூளையில் சோர்வினை உண்டு பண்ணுவதாலும் வாகன சாரதியினால் மிக திறம்பட செயற்பட முடியாது. இதன் காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கும்.

5. சிலருக்கு அதிகளவு மதுபானம் அருந்திய பின்னர் அவர்களின் கண் மடலானது துடிக்கும் (myokymia) இதன் காரணமாக பார்வை சடுதியாக மறைக்கப்படுவதினால் விபத்து ஏற்படும்.

6. மேலும் மதுபானம் ஆனது கண்ணின் கண்ணீர் சுரப்பினை குறைக்கும் இதன் காரணமாக மதுபான பாவனையின் பின்னர் கண் இலகுவில் வரட்சியடையும் இதனால் சாரதியானவர் இலகுவில் கண்யர்ந்து விடுவார்.   

Alcoholic Eyes

இது தவிர நீண்ட காலமாக மதுபானத்திற்கு அடிமையான ஒருவருக்கு விழித்திரையில் மற்றும் கண்ணின் நரம்பு (Optic neuropathy ) பகுதிகளில் மதுபானமானது பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணி பார்வையினை குறைக்கும். மேலும் நீண்ட காலமாக குடிப்பவர் ஒருவருக்கு விட்டமின் B1 மற்றும் விட்டமின் A  போன்ற குறைபாடுகள் ஏற்படும் இதன் காரணமாகவும் அவர்களின் பார்வை குறைவடையலாம்.

முற்றும்