ஆபத்தான கட்டிப்போடல்

அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் சம்பவத்தில் போலீசார் ஒருவர் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் கழுத்துப் பகுதியில் தனது முழங்காலினை வைத்து நெரித்ததினால் அந்த நபர் பரிதாபகரமான முறையில் இறந்து போனார். நடைபெற்ற இந்த சம்பவம் உலகம் பூராகவும் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இவ்வாறு குற்றவாளிகளை அல்லது சந்தேக நபர்களை கைது செய்யும் பொழுது அல்லது சிறையில் உள்ள சிறைக்கைதிகளினை அடக்கும் பொழுது போலீசார் பல்வேறுபட்ட வழிமுறைகளில் அவர்களை விலங்கினாலும் கைகளினாலும் கட்டிப்போடுவார்கள் ( Physical restrain methods). இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இப்பதிவில் இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது என்பது பற்றி விளக்கப்படுகின்றது.

wp-15909082187462278077131009766586.jpg

1. Hog-tying (total appendage restraint procedure -TARP)
இந்த முறையில் கைதியின் கைகள் மற்றும் கால்கள் மடிக்கப்பட்டு அவரின் உடலின் பின்புறத்தில் கட்டப்படும். அதன் பின்னர் கைதி முகம் தரையினை பார்த்தவாறு கிடத்தப்படுவார். இந்த நிலையின் பொழுது கைதியின் நெஞ்சுபகுதி அழுத்தப்படுவதினால் அவருக்கு படிப்படியாக மூச்சு திணறல் ஏற்படும். அத்துடன் அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு மற்றும் சுவாச நோய்கள் இருந்தால் இந்த நிலைமை காரணமாக அவை மோசமடையும். மேலும் கைதி ஐஸ், ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தால் மூச்சுத்திணறல் அதிகரிக்கும். இறுதியில் கைதி கவனிப்பாரற்ற நிலையில் இருப்பாராயின் இறப்பு ஏற்படும்.

22. Completed Accessible Hog Tie – TheDuchy

2. Choke hold
இந்த முறையின் பொழுது உத்தியோகத்தர் பின்னே நின்று, கைதியின் கழுத்தினை சுற்றி கையினை இறுக்குவார். இங்கு கழுத்து பகுதியினை கை பகுதியே அழுத்தும். இந்த முறையின் பொழுது கழுத்தின் முன் பகுதியில் இருக்கும் சுவாசக்குழாய் அழுத்தப்படும். அதன்காரணமாக கைதி மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறக்க நேரிடலாம்.

01

3. Lateral vascular neck restraint (LVNR)
இந்த முறையும் மேற்குறித்த முறையினை ஒத்தது ஆனால் இங்கு கழுத்து பகுதியானது முழங்கை பகுதியில் நெறிப்படும். இதனால் கைதிக்கு மூச்சு திணறல் ஏற்படும்.

02

மேற்குறித்த முறைகள் தவிர பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீசார் மற்றும் சிறைக்காவலர் தமது வசதி, அனுபவத்திற்கு ஏற்றவாரு பல்வேறு முறைகளை உருவாக்குவார்கள். பொதுவாக கைதிக்கு கைவிலங்கையினை மாட்டிய பிறகு அல்லது அவயவங்களை கட்டிய பிறகு இவ்வாறு செய்வதன் காரணமாக, கைதிகளினால் தப்பித்து ஓட முடியாது. இவ்வாறான கட்டுப்போடும் முறைகளினால் பல சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக பல நாடுகளில் இத்தகைய முறைகளை பாவிக்க அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக கைதிகளைக் கட்டுப்படுத்த Pepper spray போன்ற மிளகு எண்ணெயினை விசிறும் உபகரணங்கள், மின்சார தாக்குதலை உண்டாக்கும் Taser போன்ற துப்பாக்கிகள் நவீன உலகத்தில் பயன்படுகின்றன. இதனால் பெருமளவில் உயிரிழப்புக்கள் குறைக்கப்பட்டுள்ளன.

wp-15841865674796858912672646381447.jpg
முற்றும்

வெடி மருந்தின்றி ஒரு வெடிப்பு சம்பவம்

இலங்கையில்  கல்சியம் காபைட் ஆனது பொதுவாக மலசல கூட கழிவு குழாய்கள், சமையற்கூட கழிவு குழாய்கள் கழிவுகளினால் அடைபடும் பொழுது அவற்றினை நீக்க பாவிப்பார்கள்.

அது கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட் ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும் இவ்வாயுவானது மிகஎளிதாக தீப்பற்றி எரியும் தன்மை யுடையது மற்றும் இவ்இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது.இங்கு மலசலக்கழிவுத்துதொட்டியானது ஓர் இறுக்கமான அறை ஆகும் இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு சம்பவம் நிகழலாம்.

விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை

அண்மையில் இலங்கையில் கறுப்பு சிறுத்தை ஒன்று மனிதர்கள் வைத்த பொறியில் மாட்டியபின்னர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இறுதியில் அது இறந்த பொழுது அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பொதுவாக நாம் மனிதர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு நடைபெறும் உடற் கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றித்தான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இறந்த சிலவகை விலங்குகளுக்கும் உடற் கூராய்வு பரிசோதனை செய்யப்படுகின்றது. அதனைப் பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

Daily Mirror - Haphazard development Jeopardises Leopard Habitat
முந்தைய காலத்தில் பொதுவாக அரிய வகையான விலங்குகள் போன்ற வெள்ளை நாகம், சிலவகை ஆமை இனம், பண்டா …. போன்றன இறக்கும் பொழுதும், பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விலங்கு இனங்களான பந்தய குதிரைகள் மற்றும் பந்தய புறா போன்ற இறக்கும் பொழுதும் இவ்வாறான உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய விஞ்ஞான உலகத்தில் மேற்குறித்த சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாது பண்ணை போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் விலங்கினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், தமது செல்லப்பிராணிகள் திடீரென உயிரிழக்கும் பொழுதும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும் நீர் வாழ் உயிரினங்கள் திடீரென உயிரிழக்கும் பொழுதும், புதிய வகை நோய்கள் விலங்குகளை தாக்கி இறப்பினை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திலும் உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

10 of the Most Famous Endangered Species | Britannica

இவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுவதன் நோக்கம் குறித்த விலங்குகள் என்ன காரணத்திற்காக இறந்தது என்று கண்டு பிடிப்பதற்காகவும் மற்றும் எவ்வாறான சூழ் நிலையில் விலங்குகள் இறந்தது என்று கண்டறிவதற்காகவும் ஆகும். உதாரணமாக விலங்குகள் நோய் வாய்ப்பட்டு இறந்ததா அல்லது நஞ்சு ஊட்டப்பட்டு அல்லது வேறு எதாவது சூசகமாக முறையில் கொல்லப்பட்டதா எனக்கண்டறிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இது தவிர உடற் கூராய்வு பரிசோதனைகளினால் ஏற்படும் வேறு நன்மைகள் யாவை? உதாரணமாக பண்ணை ஒன்றில் உள்ள ஆயிரக்கணக்கான கோழிகள் இனம் காணப்படாத நோயினால் இறக்குமானால், அவை எந்த நோயினால் இறந்தது , நோயினால் விலங்கில் ஏற்பட்ட தாக்கம் என்ன, என்ன வகை மருந்தினால் சிகிச்சை வழங்க முடியும் போன்ற தகவல்களை உடற் கூராய்வு மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நாம் எமது தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக ஓர் விலங்கினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த விரும்பினால் அருகில் உள்ள கால்நடை வைத்தியரை நாடவேண்டும். சில சந்தர்ப்பத்தில் நீதிமன்றினால் உத்தரவிடப்படும் ஆணைக்கு அமையவும் விலங்குகளில் உடற் கூராய்வு பரிசோதனை நடைபெறும்.
பொருளாதார ரீதியாக விலங்குகளை வளர்த்து அதன் மூலம் அனுகூலம் அடைபவர்கள் நிச்சயம் இவ்வாறான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் அவர்களின் விலங்குகளில் ஏற்படும் அநியாய உயிரிழப்புக்களை தடுக்கலாம்.
முற்றும்

பாம்பு கொலை செய்யுமா?

இந்தியாவின் கேரளாவில் இளம் பெண் உத்ராவை அவரின் கணவர் சூரஜ் பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து கொலை செய்தமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது. முதலில் அணலி பாம்பை வாங்கியுள்ளார். அந்தப் பாம்பு மார்ச் 2 ஆம் திகதி உத்ராவை கடித்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக தாய் வீட்டில் இருந்தார் உத்ரா. இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி கருமூர்க்கன் வகை பாம்புடன் உத்ராவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சூரஜ். அன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த உத்ரா மீது போத்தலில் இருந்த பாம்பைத் திறந்து விட்டுள்ளார். உத்ராவை இரண்டு முறை பாம்பு கடிப்பதைப் பார்த்த பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து வெளியறி பாம்பு கொண்டு வந்த போத்தலை வெளியே வீசியுள்ளார்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட சூரஜ், தனது மனைவி உத்ராவைக் கொலை செய்தது குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “அவளைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். நான் சிக்கிக்கொள்ளாமல் இயற்கையாக மரணம் நடந்ததுபோல் நடக்க வேண்டும் என யூடியூபில் தேடினேன். அதில் அப்போதுதான் பாம்பு கடிப்பதன் மூலம் மரணம் அடைவது குறித்து அதிகமான வீடியோக்களைப் பார்த்தேன். பாம்பைக் கொண்டு கடிக்க வைத்து உத்ராவைக் கொலை செய்யத் திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.

Death of Kollam woman was murder; husband confesses to crime | Murder
இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் ஒருவர் பாம்பு அல்லது ஓர் ஏனைய விலங்கின் தாக்குதலினால் உயிர் இழப்பார் எனில் அவரது மரணம் இயற்கை அல்லாத மரணத்தினுள் அடங்குவதினாலும் சட்ட திட்டங்களின் (குற்றவியல் சட்ட கோர்வை) பிரகாரமும் கட்டாயம் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக பாம்பு கடித்தல் என்பது தவறுதலாகவே நடைபெறும் எனினும் விதிவிலக்காக ஒருசில சந்தர்ப்பத்தில் பாம்பு கொலை செய்யும் கருவியாகவும் தற்கொலை செய்து கொள்ளும் கருவியாகவும் பாவிக்கப் பட்டுள்ளது.

Daboia russelii ( Indian Russell's viper/ Rakta Anali) (med bilder ...
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது பாம்பு கடிப்பதினாலே ஏற்படும் அடையாளம் இருப்பதை கொண்டும் பாம்பின் விஷத்தினால் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டும் பாம்பு கடித்தமை உறுதிப்படுத்தப்படும். இலங்கையில் இறந்தவரின் இரத்தத்திதினை பரிசோதித்து பாம்பு கடித்தமையினை உறுதிப்படுத்தும் முறைமை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்த அடையாளம் தெளிவாக தெரியாது இதன் காரணமாகவும் இவ்வாறு இறந்தவரின் உடற் கூராய்வு பரிசோதனை சவால் மிக்கதாக அமையும்.
சில சந்தர்ப்பத்தில் உறவினர்கள் இறந்த பாம்பினையும் கொண்டுவருவார்கள், அத்தகைய சந்தர்ப்பத்தில் பாம்பின் கொட்டும் பற்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் உடலில் காணப்படும் காயத்தில் இருக்கும் பற்களின் அடையாளங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் ஒப்பீடு செய்வதன் மூலம் கடித்த ஓரளவிற்கு பாம்பினை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைமைகள் மோசமடைவதன் காரணமாகவும், பாம்பின் விஷத்தினை இல்லாமல் செய்வதற்காக கொடுக்கப்படும் மருந்தின் ஒவ்வாமை காரணமாகவும் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் யாருக்காவது பாம்பு கடித்து இறப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றும்

நடந்தது என்ன?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் கொழும்பின் மாளிகாவத்தை பகுதியில் ஏற்பட்ட சனநெரிசலில் 3 பெண்கள் இறந்தார்கள், அத்துடன் சிலர் காயமடைந்தனர். எம்மில் பலருக்கு இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் எவ்வாறு சன நெரிசலில் சிக்கி மக்கள் இறப்பர் என்பது தான்.

கீழே உள்ள படமானது உதைபந்தாட்டமைதானம் ஒன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இறந்தவர்களை குறிக்கின்றது

Major soccer stadium disasters - CBS News இவ்வாறான சம்பவங்கள் உலகில் முன்பும் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. சில சம்பவங்களின் பொழுது நூற்றுக்கணக்கானோர் இறந்தமையும் குறிப்பிடத்தக்கது. பங்காளதேசத்திலும், கும்பமேளாவின் பொழுது இந்தியாவிலும், மதீனாவிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  இனி எவ்வாறு இவ்வாறன சந்தர்ப்பத்தில் உயிரிழப்பு நடைபெறுகின்றது என்பது பற்றி பார்ப்போம்.

  1. இவ்வாறான சம்பவங்கள் மிக இடவசதி குறைந்த இடத்தில் அதிகளவான மக்கள் ஒன்று கூடுவதினால் பொதுவாக ஏற்படுகின்றது. இங்கு பொதுவாக வெளியேறும் பாதை மூடப்பட்டிருக்கும் அல்லது மிக ஒடுக்கமானதாக இருக்கும். இதன் பொழுது மக்கள் மிக நெருங்கி ஒருவரோடு அமுத்தப்படுவதினால் அவர்களினால் மக்கள் மூச்சு விட கடினப்படுவர். நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .

இவ்வாறான நிலையின் பொழுது  பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். மேலும் சூழலில் உள்ள ஓட்ஸிசன் அளவும் குறைவடைவதினால் அவர்கள் மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறப்பு ஏற்படலாம்.

  1. இது தவிர மக்கள் நெருக்கி அடிப்பதினால் கட்டிடம் உடைந்து வீழ்ந்து இறப்பினை ஏற்படுத்திய சந்தர்ப்பங்களும் உண்டு.
  2. சில சந்தர்ப்பங்களில் மின்சார கேபிள்கள் அறுந்து மக்கள் மீது வீழ்ந்து மக்கள் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
  3. இவ்வாறான சன நெருக்கடி மிக்க இடத்தில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அவர்களுக்கு இயர்கையாக இருக்கும் நோய் நிலைமைகளான மாரடைப்பு, ஆஸ்துமா போன்றன அதிகரிப்பதினாலும், அதீத வியர்வை மற்றும் அதிகரித்த சூழல் வெப்பநிலை போன்றவற்றின் காரணமாக சலரோக நோயாளியின் குருதியில் உள்ள குளுக்கோஸின் அளவு சடுதியாக குறைவதினாலும் இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.
  4. அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் அல்லது பிரதேசங்களில் மக்கள் இவ்வாறு ஒன்று கூடும் பொழுது அவர்கள் இலகுவாக வெப்பத்தின் தாக்குதலுக்கு உள்ளாவர். இதனாலும் இறப்பு ஏற்படலாம்.

எனவே இவ்வாறு மக்கள் குறுகிய இடத்தில் அதிகளவில் ஒன்று கூடும் பொழுது ஏற்பாட்டாளர்கள் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதினை தடுக்கும் முகமாக அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் மனித உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

                                                                    முற்றும்

கொரோனாவும் சொல்மயக்கமும்

இன்றைய கால கட்டத்தில் நாட்டின் ஒவ்வோர் பிரசைகளும் சுகாதாரம் சம்பந்தமான தகவல்களை அதிலும் கொரோனா நோயின் பற்றிய தகவல்களை அறிவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த நிலையில் பல்வேறுபட்ட தரப்பினராலும் பல்வேறு தகவல்கள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. எல்லாவற்றின் நோக்கமும் சாதாரண பொதுமக்களை தெளிவடைய வைப்பதே. உண்மையில் இவ்வாறான அறிக்கைகள், பத்திரிகையாளர் கூட்டங்கள் போன்றவற்றில் சாதாரண மருத்துவ அறிவு குறைந்த மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையிலேயே சொற்பதங்கள் பாவிக்கப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வழங்கும் நிபுணர்கள், மருத்துவர்கள் கடுமையான சாதாரண மக்களினால் விளங்கிக் கொள்ள முடியாத சொற்பதங்களை பாவிப்பதில்லை. அதாவது அவர்கள் தங்களின் வித்துவ காச்சலினை இவ்வாறான இடங்களில் காண்பிப்பதில்லை. இவ்வாறான நிலையில் வெளியிடப்படும் கருத்துக்களினை மற்றைய மருத்துவர்கள் அந்த அறிக்கை அல்லது கருத்து யாரால், யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் வெளியிடப்பட்டது என்பதினை நோக்கவேண்டும். இன்றைய கால கட்டத்தில் மருத்துவ துறைக்கான கலைச்சொற்கள் குறைந்த அளவிலேயே பாவனையில் உள்ளன. மேலும் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய சொற்கள் உருவாக்கப்படவும் இல்லை. இதன் காரணமாக ஒவ்வோர் வைத்தியரும் தனது ஆற்றலுக்கு ஏற்ப தமிழ் சொற்பதங்களை பாவிப்பர், எவ்வாறாயினும் இறுதி இலக்கு பொதுமக்கள் பயனடைதலே ஆகும். மருத்துவர்கள் தமது கல்வி திறமையினை மற்றைய மருத்துவர்களுக்கு மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு வெளிக்காட்ட பல்வேறு கருத்தரங்குகள், ஆண்டுக்கூட்டங்கள்… வழமையாக ஒழுங்கமைக்கப்படும்.

Sticker Love, Watercolor, Paint, Wet Ink, Confusion, Word, Desktop ...சட்ட வைத்திய அதிகாரிகள் கூட பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகிய சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக இருதயத்தின் முடியுரு நாடியில் கொலஸ்ரோல் படிவதன் காரணமாக நாடியில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வரும். ஆனால் பொதுமக்களில் பெரும்பாலானோரும், நீதித்துறை சார்ந்தோரும், போலீசாரும் இதனை வால்வுகளில் ஏற்படும் அடைப்புகளினால் தான் மாரடைப்பு வந்ததாக தமது அறிக்கைகளில் மற்றும் சாட்சியங்களில் குறிப்பிடுவர்.
இலங்கை போன்ற ஓர் நாட்டில் நாட்டின் சகல அல்லது பெரும்பாலான பொதுமக்கள் இவ்வாறன சொற்பதங்கள் பற்றி தெளிவாக அறிவதற்கு உரிய வசதிகள் இல்லை. தமிழில் தகுதி வாய்ந்தவர்களினால் நடத்தப்படும் மருத்துவ சம்பந்தமான இணையத்தளங்கள் மற்றும் இணைய ஆக்கங்கள் தற்பொழுது தமிழில் மிகக் குறைவாக உள்ளன. இந்நிலையில் சாதாரண பொதுமக்களும் இணையத்தினை பாவித்து அறிவு பெறுவார்கள் என்பது சந்தேகமே.

முற்றும்

உயிர்களைப் பறித்த Styrene விஷவாயு

நேற்றைய தினம் அதிகாலையில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின்  விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு இரசாயன ஆலையிலிருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என  தகவல் தெரிவிக்கின்றன.

விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர் வெங்கடபுரம் கிராமத்திலுள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிளாஸ்ட்டிக் தொழிலிற்சாலையில் தான் இவ்விபத்து நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட, 200 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் சுமார் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்திய வாயு styrene வாயு என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

மேற்படி சம்பவத்தினை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 1984-ல் நிகழ்ந்த போபால் விச வாயு கசிவு சம்பவத்தோடு பலர் ஒப்பிடுகின்றனர். போபாலில் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ரசாயன நச்சு வாயுவால் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகினர். அத்துடன் 3,500க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இனி styrene  வாயுவின் தாக்கத்தினால் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பது பற்றி சிறிது பார்ப்போம். strene  ஆனது  polystyrene plastics, ரப்பர், latex மற்றும்  resins உற்பத்தியில் பயன்படும் ஓர் பொருளாகும். இது ஓர் எளிதில் தீப்பற்றக்கூடிய ஓர் திரவமாகும். இது வாகனங்களின் புகை, சிலவகையான மரக்கறி போன்றவற்றிலும் காணப்படும்.

Gas leak, Vishakhapatnam gas leak pic, Vizag gas leak pics, Visakhapatnam pics, LG chemical plant, Gopalapatnam, Indian Express

styrene  இற்கு ஒருவர் உடனடியான முறையில் அல்லது நீண்ட காலத்திற்கு தொடர்பு படலாம். ஒருவர் Styrene வாயுவினை சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு கண் எரிவு, தலையிடி, தலை சுற்றல், வாய் எரிவு, வாந்தி  மற்றும் சுய நினைவு இழத்தல்  போன்றன ஏற்படலாம். இது தவிர ஒருவர் நீண்ட காலமாக styrene உடன் தொடர்புபடுவாராயின் அவருக்கு  மனச்சோர்வு மற்றும் நரம்புத்தொகுதியில் பாதிப்பு(peripheral neropathy) என்பன ஏற்பட சாத்தியம் உண்டு.

Gas leak, Vishakhapatnam gas leak pic, Vizag gas leak pics, Visakhapatnam pics, LG chemical plant, Gopalapatnam, Indian Express

LC50 (Lethal Concentration 50) என்பது குறித்த ஓர் கூட்ட விலங்குகளுக்கு ஓர் நஞ்சானது செலுத்தப்படும்பொழுது  அதில் உள்ள அரைவாசி எண்ணிக்கையான விலங்குகளை இறக்க வைக்க தேவையான நஞ்சின் அளவு ஆகும். இங்கு  LC50 ஆனது  2194 ppm ஆக உள்ளது அதாவது குறைந்த செறிவுள்ள styrene  வாயுவே அதிகளவான உயிரினங்களை கொல்ல போதுமானது.

மேலும் The LCLo (Lowest lethal concentration) என்பது குறித்த காலப்பகுதியில் ஓர் விலங்கில் இறப்பினை ஏற்படுத்த தேவையான  ஓர் நஞ்சின் குறைந்த செறிவு ஆகும். styrene வாயுவானது 10,000 ppm அளவில் வளியில் காணப்படும் பொழுது 30 நிமிடத்தில் அது இறப்பினை ஏற்படுத்தும்.

Gas leak, Vishakhapatnam gas leak pic, Vizag gas leak pics, Visakhapatnam pics, LG chemical plant, Gopalapatnam, Indian Express

ஒட்டுமொத்தத்தில் Styrene  ஆனது ஓர் நஞ்சு தன்மையான வாயு ஆகும் அதன் காரணமாகவே மேற்குறித்த இழப்புக்கள் ஏற்பட்டன. நாட்கள் செல்லச்செல்ல தான் முழுமையான பாதிப்பு விபரம் வெளிவரும். இறுதியாக கொரோனா நோய்ப்பரவல் காரணமாக தொழிற்சாலை பூட்டப்பட்டிருந்ததன் காரணமாக வாயு தேங்கி இருந்தமையாலும் அதிக வெப்பம் காரணமாக styrene  வாயு தன்னிச்சையாகவே auto polymerization  அடைந்ததன் காரணமாகவும் ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. விசாரணையின் முடிவில் தான் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.

                                                                    முற்றும்

தமிழ்ப்பெண்களும் ஆபாசப் படங்களும் (பகுதி 01)

சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் ஒரு கும்பல் பெண்களை மிரட்டி ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டியதாக செய்திகள் வெளிவந்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அவ்வாறே ஒருசில சம்பவங்கள் வட புலத்திலேயும்  நடைபெற தொடங்கி விட்டன என்பது தான் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்.

1. யார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் ?
பெரும்பாலும் இளைஞர்களே ஈடுபடுகின்றனர் குறிப்பாக 20 தொடக்கம் 30 வயதான இளைஞர்களே ஈடுபடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வேலை அற்றவர்களாகவும் மதுபானம் மற்றும் போதை பொருளுக்கு அடிமையானவர்களாகவும் இருக்கின்றனர். சிலர் அதிக வாகன கடன் போன்ற கடன்களையும் கொண்டுள்ளனர்.

2. யார் இவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
இளவயது பெண்கள் தொடக்கம் நடுத்தர வயது குடும்ப பெண்கள் வரை இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பல பெண்கள் சமூக சூழ்நிலை கருதியும், தமது பாதுகாப்பு கருதியும் தகவல்களை வெளிப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவனை இழந்த பெண்களும் கணவனினால் கைவிடப்பட்ட பெண்களும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. எவ்வாறு பெண்கள் இந்த வலையில் விழுகின்றனர்?
பொதுவாக காதல்/நட்பு மூலமே பெண்கள் இந்த மோசடி வலையில் விழுகின்றனர். மேலும் சிலர் குறித்த நபர்களிடம் இருந்து பொருட்கள் மற்றும் பண உதவிகள் போன்றவற்றினை பெறும் சந்தர்ப்பத்தில் இந்த மோசடி வலையில் விழுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் முகநூல், வைபர், வாட்சப் போன்றவற்றின் மூலமும் பெண்கள் இந்த வலையில் வீழ்த்தப்படுகின்றனர். இந்த மோசடி ஆண்கள் தங்களை காதல் செய்யுமாறு வற்புறுத்துவார்கள் மறுக்கும் சந்தர்ப்பத்தில் தமது கைகளை அல்லது கழுத்தினை பிளேட்டினால் அறுத்து தற்கொலை செய்ய போவதாகவும் அச்சுறுத்துவர். சிலர் பெண்களை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியும் உள்ளனர்.

4. எவ்வாறு இந்த மோசடி நடைபெறுகின்றது?
காதல் அல்லது நடப்பு மூலம் ஓர் பெண்ணின் படத்தினை அவர்கள் பெறுவார்கள் அதன் பின்னர் அவர்கள் போட்டோஷொப் போன்ற பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் நிர்வாணமாக இருக்குமாறு மாற்றி அமைப்பார்கள், சில சந்தர்ப்பத்தில் அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை நேரிடையாகவே பெறுவார்கள். இதன் பின்னர் தான் அவர்களின் சுய ரூபம் தெரியவரும் அவர்கள் பெண்களிடம் வாகன லீசிங் கட்ட வேண்டும், கடன் கட்ட வேண்டும், புதிய போன் வாங்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களை கூறி பணம் கேட்பார்கள். அவர்கள் மறுக்கும் பொழுது அவர்களின் நிர்வாண படத்தினை அல்லது தங்களுடன் நெருக்கமாக இருக்கும் படத்தினை முகநூலில் அல்லது இணைய தளத்தில் பதிவேற்ற போவதாக குரு மிரட்டுவர். மேலும் இவர்கள் பொதுவாக போதைக்கு அடிமையானவர்களாக இருப்பதோடு பெண்களை தமது காம இச்சைக்கு (sexual torture) வேண்டியவாறு பயன் படுத்துவர் இதன் பொழுது அவர்கள் உடலியல் ரீதியான வேதனை, உளவியல் ரீதியான வேதனை, பாலியல் நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்து போன்ற பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வர். இவர்கள் மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் உடலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவர்.

HP PNG

5. இவர்கள் குழுக்களாக இயங்குவார்களா ?
ஆம். இவர்களில் பல்வேறு பட்ட நபர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரே நேரிடையாக தொடர்பு படுவர், மற்றையோர் அவர்களுக்கு உதவி புரிவர். ஒருசிலர் பெண்களின் போட்டோக்களை கணகச்சித்தமாக மாற்றி அமைப்பர். சிலர் பெண்களின் நடமாட்டம், தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை இலக்கம் … போன்றவற்றினை பெற்று கொடுப்பர். சில போலீஸ் உத்தியோகத்தர்களை இவர்கள் காசு கொடுத்து வாங்கியிருப்பர். அந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் பெண்கள் முறைப்பாடு செய்ய செல்லும் பொழுது பல்வேறு காரணங்களை கூறி வாக்குமூலங்களை திரித்து எழுதி, முறைப்பாட்டினை குடும்ப வன்முறையாக எழுதி திசை திரும்புவர். அத்துடன் குற்றவாளிக்கு அவர்கள் உடனே தகவல் கொடுப்பர் இதனால் முறைப்பாடு செய்ய சென்ற பெண்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவர்.

                                                                       தொடரும்

அடுத்த பகுதியில் எவ்வாறு பெண்கள் இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கலாம் என்பது பற்றியும் எவ்வாறு தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்

தற்கொலை செய்து கொள்ளும் இடங்கள்

அண்மைக் காலப்பகுதியில் வடபுலத்தில் தற்கொலை செய்து கொளப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து உள்ளது. போதாக்குறைக்கு கொரோனா நோயினால் பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு முடக்க நிலையும் இதனை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒருவர் தனது வாழ்விடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். இதனை விடுத்து பல நூறு கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தும் ஓர் இடத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்ட இடத்திற்கும் அவரது வசிப்பிடத்திற்கும் இடையிலான தூரத்திற்கும் அவரது மரணம் ஏற்பட்ட சூழ்நிலைக்கும் (தற்கொலை அல்லது கொலை) எதுவிதமான அறிவியல் ரீதியான தொடர்பும் இல்லை.
எம்மில் சிலர் தற்கொலை என்றால் நிச்சயம் அவர்களின் வீட்டில் அல்லது வீட்டிற்கு மிக அருகாமையில் தான் நடக்கும் எனவும் தூர பிரதேசங்களில் நடைபெற்றால் அது கொலை எனவும் பிழையான கருதுகோளை கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் பொதுவாக ஆள் நடமாற்றம் குறைந்த, ஒதுக்குபுறமான பிரதேசங்களையே தெரிவு செய்வர். மாறாக சிலர் ஆள் நடமாட்டம் கூடிய தொலை தூரத்தில் உள்ள பிரதேசங்களையும் தெரிவு செய்வர்.
தற்கொலை செய்வர்களின் மன நிலை, அவர்களின் கல்வி அறிவு, சமய, கலாச்சார செல்வாக்கு என்பன இவ்வாறு அவர்கள் தற்கொலை செய்யும் இடத்தினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் ஆகும். இனி நாம் உலகத்தில் ஒரு சில இடங்களில் அதிகளவிலான மக்கள் தற்கொலை செய்துள்ளனர், அவ்வாறான ஒரு சில இடங்களினை பார்ப்போம்
1. Nanjing Yangtze ஆற்றுப்பாலம் இது சீனாவின் Nanjing பிரதேசத்தில் உள்ளது. இதில் இருந்து குதித்து வருடம் தோறும் பலர் இறக்கின்றனர். பலரின் உடல்கள் காணாது போய்விடுவதினால் எண்ணிக்கை மிக அதிகமாகும். 1968-2006 வரையான காலப்பகுதியில் 2000 வரையானோரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Nanjing Yangtze River Bridge - Wikipedia
2. Golden Gate பாலம் இது ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இங்கும் வருடம் தோறும் பல நூற்றுக்கணக்கானோர் குதித்து தற்கொலை செய்கின்றனர்.

Golden Gate Bridge - Wikipedia
இவ்வாறான இடங்களில் தற்கொலை செய்வதற்காகவே பலர் பல நூறு கிலோமீட்டர் பிரயாணம் செய்து வருவர்.
இலங்கையிலும் இவ்வாறான பல இடங்கள் உண்டு.

Kallady / Lady Manning Bridge (Batticaloa) · YAMU
முக்கியமாக இப்பதிவு தற்கொலையினை தூண்டும் விதமாக பதிவிடப்படவில்லை. மாறாக ஒருவர் எங்கு வேண்டுமானாலும் சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது கொலை செய்யப்படலாம். நாம் இது சம்பந்தமாக கருத்துக்களை வெளியிடும் பொழுது எமது குறுகிய நோக்கங்களை தவிர்த்து உண்மையினை வெளிக்கொணரும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டும் என்பதினை வலியுறுத்துகின்றது .
முற்றும்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை (Psychological Autopsy)

எம்மில் பலருக்கு சாதாரணமாக வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனை அல்லது பிரேத பரிசோதனை பற்றியே தெரிந்திருக்கும். உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை பற்றியும் அதன்பிரயோகம்கள் பற்றியும் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

சாதாரண உடற்கூராய்வு பரிசோதனை மூலம் நாம் முக்கியமாக மரணத்திற்கான காரணம் (Cause of death) மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலை (Circumstance of death) என்பவற்றை கண்டறியலாம். மரணம் ஏற்பட்ட சூழ்நிலை என்பது தற்கொலை (Suicide), கொலை (Homicide), விபத்து (Accident) மற்றும் தீர்மாணிக்க முடியாத (undetermint) மரணங்களை குறிக்கும். பல சந்தர்ப்பங்களில் மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை சாதாரண உடற் கூராய்வு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாது. அச்சந்தர்பகளில் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது முக்கியமாக மரணம் ஏற்பட்ட சூழ்நிலையை கண்டுபிடிக்கபயன்படுகின்றது. உதாரணமாக நன்றாக இருந்த நபர் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி அல்லது நீரில் மூழ்கி இறந்து காணப்பட்டால் உறவினர்களில் ஒருபகுதியினர் கொலையென்றும் மற்றைய பகுதியினர் தற்கொலையென்றும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவர். இவ்வாறே போலீசாரும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதா இல்லையா என்று குழப்பம் அடைவர் (In the cases of equivocal deaths). இந்நிலையில் இறந்தவர் இறப்பதற்கு முன் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை கண்டறிந்தால் பல கேள்விகளுக்கு இலகுவாக விடை கிடைத்துவிடும் .

அவரின் இறப்பதற்கு முன் உள்ள மனநிலையானது பின்வருமாறு ஆராயப்படும்

  1. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், வேலை செய்பவர்கள் ஆகியோரிடம் இருந்து தகவல்களை பெறுவதன் மூலம்
  2. இறந்தவரின் முகப்புத்தகம், டயரி, தனிப்பட்ட கணனி மற்றும் கைபேசி என்பவற்றை ஆராய்வதன் மூலம்
  3. இறந்தவரின் மருத்துவ அறிக்கைகள், பள்ளிக்கூட அறிக்கைகள் மற்றும் போலீஸ் அறிக்கைகள் என்பவற்றை ஆராய்வதன்

உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை வழமையாக உளவியல் நிபுணர்களே மேற்கொள்வர். மேலும் இறந்தவர் கடந்த காலங்களில் எவ்வாறான மனத்தாக்கங்களிற்கு உட்பட்டார் அதன் பொது அவரின் எதிர்வினை எவ்வாறு இருந்தது, ஏன் இம்முறை அவர் இறப்பதற்கான முடிவினை எடுத்தார் போன்ற பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

Psychological Autopsy & Modern Autopsy - The Nurse Page

திடீரென ஏற்படும் மன அழுத்தங்களால் தற்கொலைகள் நிகழ வாய்ப்பு இருக்காதா? அப்படி ஒருவர் உடனடி முடிவில் தற்கொலையை மேற்கொண்டால் அது பற்றி இந்த முறையில் முரண்பாடு தோன்றாதா? இல்லை. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையானது விஞ்ஞானரீதியான ஓர் செயன்முறை அதன் பிரதான நோக்கமே தற்கொலையினை இனம்காணல். திடீர் மனஅழுத்தம் ஏற்படும் மனிதர்கள் எல்லோரும் தற்கொலை செய்வதில்லை ஒருசிலரே செய்கின்றனர். இதற்கு அவர்களின் ஆளுமை, கடந்தகால அனுபவங்கள், சமூக பொருளாதார காரணிகள், உறவினர்களின் அரவணைப்பு / வெறுப்பு (psychology, sociology, biology, epidemiology, and anthropology)….. போன்ற பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. உளவியல் உடற்கூராய்வு பரிசோதனையை உளவியல் நிபுணர்கள் மேற்கொள்ளும் போது மேற்படி காரணிகளையும் கருத்தில்கொண்டே முடிவெடுப்பர் .

மேலும் உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை ஆனது இறந்தவர்களின் உடலில் மேற்கொள்ளப்படும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு நிகரானது அல்ல மாறாக உளவியல் உடற்கூராய்வு பரிசோதனை எவ்வாறான சூழ்நிலையில் ஒருவர் இறந்தார் என கணடறியப் உபயோகிக்கப்படும் பரிசோதனை முறை ஆகும். மேலைத்தேச நாடுகளில் Psychological Autopsy Investigator (PAI) என்ற விற்பன்னர்கள் மூலமே இவ்வாறான உளவியல் உடற்கூராய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன

முற்றும்