ஆபத்தான மோட்டார்சைக்கிள்கள்

அவனுக்கு இருத்திரண்டு வயது தான். அவனது சிறு வயதிலேயே பெற்றோர்கள் போரின் பொழுது இறந்துவிட்டார்கள். அதன் பின்னர் அவன் அவனது அக்காவின் அரவணைப்பிலேயே வளர்ந்தான். அதீத செல்லம் காரணமாக பாதியிலேயே பள்ளிக்கூட படிப்பினை கைவிட்டுவிட்டான். சிறிதுகாலம் வேலை எதுவும் அற்று இருந்துவிட்டு கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். இரு வாரங்களுக்கு முன்னர் தான் புதிய ரக மோட்டர் சைக்கிள் ஒன்றினை லீசிங் அடிப்படையில் வாங்கியிருந்தான். அன்று அவன் காலையில் வேலைக்கு வேகமாக மோட்டர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவன் குச்சொழுங்கை ஒன்றில் வேகமாக சென்ற பொழுது நாய் ஒன்று வேகமாக பாதையினை கடந்தது அவனும் அதன் மீது மோதலினை தடுக்கும் முகமாக பிரேக்கினை பிடித்தான். அப்பொழுது அவன் மோட்டர் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு வீதியில் தலை அடிபடும் படியாக விழுந்தவன் தான், அதன் பின்னர் மூச்சு பேச்சு எதுவும் இல்லை. உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஒரு வார காலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவனின் உயிரினை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் நடைபெறும் பொழுது அவன் தலைக்கவசம் அணிந்திருந்தான்.
அவனின் பிடரி பக்க எலும்பு உடைந்திருந்தது அத்தோடு மூளையின் முன்பக்க பகுதியில் பாரிய இரத்த கசிவு காயம் ஏற்பட்டிருந்தது. இவை தவிர சிறு சிறு சிராய்ப்பு காயங்களே உடலில் இருந்தன. உடலில் வேறு பாரிய காயங்கள் எதுவுமில்லை.

3-D CT scan of human skull showing bone thickness

மேலுள்ள படம் மனிதனின் மண்டை ஓட்டின் உள்ள பல்வேறு எலும்புகளின் தடிப்பத்தினை விளக்குகின்றது

Inked890_LI

(மேலுள்ள படத்தில் மஞ்சள் அம்புக்குறியானது அமர்முடுகல் விசையினையும், நீல அம்புக்குறியானது சடுதியாக ஏற்படும் சுழற்சியினையும் பச்சை அம்புக்குறியானது தூக்கி வீசப்படுவதற்கான சந்தர்ப்பத்தினையும் குறிக்கின்றது)

93

தற்பொழுது யாழ். குடாநாட்டில் ஸ்போர்ட்ஸ் (sports) அல்லது sports tourer வகையான மோட்டர் சைக்கிளினை இளைஞர்கள் அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அதுவும் இவற்றின் இன்ஜின் பவர் (RPM/ Torque) சாதாரண மோட்டார் சைக்கிளினை விட அதிகம் ஆகும். இவ்வகையான மோட்டர் சைக்கிளில் நாம் முன்னோக்கி சரிந்த வண்ணம்தான் செலுத்த முடியும். இவ்வாறு அதிவேகமாக செலுத்தும் பொழுது விபத்து நடைபெற்றால் மோட்டார் சைக்கிளின் வேகம் முதலில் பூச்சியமாகும், ஆனால் மோட்டார் சைக்கிளோட்டியின் வேகம் சிறிது நேரத்தின் பின்னரே (மில்லி செக்கன் ) பூச்சியமாகும். அப்பொழுது தாக்கும் அமர்முடுகள் விசை காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி தூக்கி வீசப்படுவார். இச்செயற்பாடு மோட்டார் சைக்கிளோட்டியின் முன்னோக்கிய சரிவு காரணமாகவும், கை பிடியில் ஏற்படும் சுழற்சி காரணமாகவும் இலகுவாக்கப்படும். இவ்வாறு ஏற்படும் சுழற்சியினை மோட்டர் சைக்கிளோட்டி எதிர்பார்க்க மாடடார் அத்துடன் ஒரு வலது பக்கத்தில் இருக்கும் சுழலும் அக்ஸிலேட்டர் காரணமாக தடுப்பதும் கடினம். இதன் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டி தலை நிலத்தில் விழும் படியாக தூக்கி அடிக்கப்படுவார். இதனால் தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தலைக்கவசம் அணிந்திருந்தாலும் இவ்வகையான தலையில் ஏற்படும் காயங்களினை தடுக்க முடியாது.

20191125_2332525092713423157866351.jpg

இங்கு மனிதனின் மண்டை ஓட்டில் மிகவும் தடிப்பான எலும்பான பிடரி எலும்பில் உடைவு ஏற்பட்டதினை மேலுள்ள படம் காட்டுகின்றது

20191105_1440466056794007590467237.jpg

மனிதனின் பிடரி பக்கத்தில் ஏற்பட்ட காயத்தினால் மூளையின் முன்பக்கத்தில் (contrecoup injury) ஏற்பட்ட பாரிய இரத்த கசிவு காயத்தினை மேலுள்ள படம் விளக்குகின்றது

முற்றும்

இது நிஜம், சினிமா அல்ல…

இன்றைய நவீன உலகில் சினிமாவின் தாக்கம் அளப்பரியது. அதிலும் தொலைக்காட்சி தொடர்களின் சமூகம் மீதான தாக்கம் குறிப்பிடத்தக்கது. சினிமாவை பொறுத்த வரையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பாலும் இந்திய தமிழ் சினிமாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். அதில் காட்டப்படும் சமய சம்பந்தமான மூட நம்பிக்கைகள் மற்றும் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் போன்றவற்றை எம்மில் பலர் ஏற்று கொண்டுள்ளனர், அத்தோடு மட்டும் அல்லாது அவற்றினை நடைமுறைப்படுத்த விழைகின்றனர். அதன் பொழுதே பிரச்சனைகள் உருவாகின்றன.அதில் குறிப்பிட்ட தக்க விடயம் என்னவென்றால் சில படித்தவர்கள் கூட இதற்கு அடிமை. இவ்வாறே தமிழ் சினிமாவில் காட்டப்படும் குற்றம் சம்பந்தமான காட்சிகளையும் சிலர் உண்மை என்று நம்பி அதனை செயற்படுத்த நினைக்கின்றனர். உதாரணமாக அண்மையில் கிளிநொச்சியில் கணவன் தனது மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்தார். அச்சம்பவம் நடைபெற்ற குறுகிய நேர இடைவேளையில் பொலிஸார் உரிய குற்ற வாளிகளை கைது செய்தனர். இது முக்கியமாக தொலைபேசி தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாலேயே முடிந்தது.

345இதேபோன்று இந்திய சினிமாவில் பொதுவாக காட்டப்படும் இன்னொரு காட்சி தான் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் இருக்கும் ஒருவரை மின்சார ஆளியினை நிறுத்தி அல்லது அவரது சுவாச குழாயை கழற்றி கொலை செய்வது. அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது தாயார் இலங்கையில் இவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகித்து என்னிடம் இதுபற்றி வினவியிருந்தார். இலங்கையில் அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்தியாலையில் இவ்வாறான சமல்வங்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் பல வைத்தியர்கள், தாதியா உத்தியோகத்தர்கள், சிற்றோழியர்கள் போன்றோரின் கண்காணிப்பில் 24 மணிநேரமும் இருக்கும். இது தவிர வெளியில் பெரும்பாலும் ஓர் காவலாளி கடமையில் இருப்பார். பாஸ் அனுமதி நடைமுறை வேறு அமுலில் இருக்கும் அதுவும் ஒரு நாளைக்கு இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படும். மேலும் பல சந்தர்ப்பங்களில் CCTV கேமராவின் கண்காணிப்பு வேறு இருக்கும் . இந்நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற வாய்ப்புக்கள் மிக மிக அரிது.இவ்வாறே போதை மருந்து மற்றும் கஞ்சா போன்றவற்றை கடத்துபவர்களும் இலகுவில் மாட்டிக்கொள்கின்றனர்.
மேலும் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தொழில் நுட்ப அறிவு மற்றும் புலன் விசாரணை அதிகாரிகளின் திறன், எண்ணிக்கை என்பன கிட்டதட்ட நாடு பூராவும் சமனான முறையில் பரவி இருக்கும் அத்துடன் ஒருசில நூறு கிலோமீட்டர் தொலைவில் எல்லா இடங்களும் இருப்பதால் குற்றவாளிகள் இலகுவில் தப்பிக்க முடியாது.

ஆங்கில க்ரைம் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் பெரும்பாலானவை உண்மையானவை. ஆனால் தமிழ் சினிமாவில் வருபவை அவ்வாறானவை அல்ல, இந்த வித்தியாசத்தினை நாம் உணரவேண்டும்.

 

சாட்சியங்களற்ற கொலை….

யுவோனா( Yvonne Jonsson) மற்றும் கரோலின் இருவரும் சுவீடனில் வசிக்கும் சகோதரிகள். இவர்களின் தாயார் ஓர் இலங்கையர். வழமையாக இவர்கள் இருவரும் விடுமுறை காலங்களினை இலங்கையில் வந்து களிப்பார்கள். இவ்வாறே 2005 ஆம் ஆண்டும் இலங்கை வந்திருந்தார்கள். பாவம் அவர்கள் அறியவில்லை அந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கறை படிந்த சம்பவமாக மாறும் என்று.
அவர்கள் இருவரும் ராஜகிரிய பகுதியில் உள்ள ரோயல் கார்டன் என்ற அதி சொகுசு மாடி குடியிருப்பில் தான் வழமையாக தங்குவார்கள். இந்தமுறையும் அவ்வாறு தான் தங்கினார்கள். இவ்வாறு தங்கிய இருவரும் 30 ஆம் திகதி ஜூன் மாதம் மாலை வேளையில் பார்ட்டி ஒன்றுக்காக கிளம்பினார்கள். அவர்கள் அறியவில்லை தங்களில் ஒருவர் அன்று உயிர் துறப்பார் என்று. போகும் வழியில் கரோலின் தனது ஆண் நண்பன் ஜெயமஹா என்ற இலங்கையனையும் அழைத்து கொண்டாள். மூவரும் பல்வேறுபட்ட கிளப் போன்றவற்றுக்கு சென்று கொண்டாடினார்கள். அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது மது அருந்திய நிலையில் கரோலினுடன் ஜெயமஹா வாக்கு வாதப்பட்டான். அப்பொழுது யுவோனா அவர்களினை விலக்குப்பிடித்தாள். இதனால் யுவான்னா மீது ஜெயமஹா கடும் கோபத்தில் இருந்தான். பின்னர் மூவரும் நள்ளிரவில் திரும்பினர். ஜெயமாஹா சகோதரிகள் இருவரையும் அவர்களின் குடியிருப்பில் விட்டுவிட்டு சென்றான். சகோதரிகள் இருவரும் நடனமாடியதாலும் மது அருந்திய நிலையில் இருந்ததினால் விரைவில் தூங்கி போனார்கள். ஆனால் ஜெயமஹா செல்லவில்லை யுவானவை அவளது கைத்தொலைபேசிக்கு அழைப்பெடுத்து வெளியே வருமாறு அழைத்தான். அவளும் வெளியே வர காத்திருந்த ஜெயமஹா அவளை கொலை செய்தான். அடுத்த நாள் காலை வேளையில் தொடர் மாடியினை துப்பரவு செய்யும் தொழிலாளி ஒருவர் 19 வயதான யுவான்னாவின் உடலினை மாடிப்படியில் கண்டு பிடித்ததினை தொடர்ந்து. கொலை இடம்பெற்றது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

 

இவ்வாறு கொலை நடைபெற்ற பொழுது கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் சந்தர்ப்ப சாட்சியங்கள் ஒன்றுமே இல்லை என்பதினால் பொலிஸார் என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்ற வேளையில் தான் பொலிஸார் ஒருவர் மாடிப்படியில் சில இரத்தத்தில் தோய்ந்த கை அடையாளங்களினை கண்டார்.
இதன் பின்னர் தான் திருப்பம் ஏற்பட்டது. விசேட கைரேகை நிபுணர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்களின் முடிவின் படி அந்த இரத்தம் தோய்ந்த கை அடையாளத்தில் இருந்த கை ரேகை முக்கிய சந்தேக நபராகிய ஜெயமஹாவின் கைரேகை உடன் ஒத்து போவது தெரிந்தது . குற்றவியல் வழக்குகளில் குற்றமானது நூறு வீத சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப் படவேண்டும் மேலும் கைரேகை அடையாளம் சிறு சத்திர சிகிச்சை போன்றவற்றினால் இலகுவில் மாற்றி அமைக்கப்பட முடியும். எனவே இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மேலும் என்ன செய்யலாம் என்று ஆராய்ந்தார்கள். முடிவாக இரத்தம் தோய்ந்த கை அடையாளத்தில் இருந்த இரத்த்தினை எடுத்து சந்தேக நபரான ஜெயமஹாவின் இரத்தத்தினையும் எடுத்து DNA பரிசோதனைக்கு அனுப்பினார்கள். பரிசோதனை முடிவில் முடிவில் இரண்டு இரத்தங்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் ஒருவருடையது என்று உறுதியாகியது. இதன் மூலம் ஜெயமஹாதான் குற்றவாளி என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது. இந்த கொடூர கொ லை செய்த கு ற்றத்திற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூட் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூட் ஜெயமஹாவுக்கு அதிபா் மைத்ரிபால சிறிசேன பொ துமன்னிப்பு வழங்கியுள்ளதால், இது நாட்டிலே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இலங்கையின் இரு நீதிமன்றங்களில் இந்த வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட மரண தண்டனை கைதியே அண்மையில் இலங்கை ஜனாதிபதியின் மன்னிப்பினால் விடுதலையானவர்.

34

சாட்சியங்களற்ற நிலையில் நடக்கும் கொலை, பாலியல் வல்லுறவு போன்றவற்றின் புலன் விசாரணையில் DNA பரிசோதனை மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டு. மேலும் மரண தண்டனை விதிக்கபட்டவர்களை விடுதலை செய்ய இலங்கையில் ஓர் நிபுணர் குழுவின் சிபாரிசு தேவைப்பாடாக உள்ளது.

இது ஆபத்தானதா?

வடகிழக்கு பருவமழை காலங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண பகுதிகளில் தீடீர் தீடீர் என்று முளைத்து, பூத்து குலுங்கும் சிறிய தாவரங்களில் (கொடி ) இதுவும் ஒன்று. மற்றைய காலங்களில் இது உயிருடன் இருந்தாலும் பொதுவாக பூப்பதில்லை. கடும் வறட்சியான காலங்களில் நிலத்தின் மேலான பகுதிகள் கருகினாலும் இது நிலத்தின் கீழ் உள்ள கிழங்கின் மூலம் உயிர்ப்பான முறையில் இருக்கும். இது பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது செங்காந்தள் அல்லது காந்தள் (கார்த்திகைப் பூ). இதன் தாவரவியல் பெயர் Gloriosa superba என்பதாகும் . கார்த்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. எம்மில் பலருக்கு இது ஓர் நஞ்சு மிக்க தாவரம் என்று தெரியாது. இதன் பூ, இலை, தண்டு, கிழக்கு போன்றவற்றில் கோல்சிசின் (colchicine) என்ற நஞ்சு பொருள் உள்ளது. அதுவும் கிழங்கில் அதிகளவில் உள்ளது. ஒரு மனிதன் சாதாரணமாக 125 கிராம் கிழங்கினை உட்கொண்டால் நிச்சயம் இறப்பு ஏற்படும். இந்த நஞ்சானது மனிதனின் என்புமச்சை, சமிபாட்டுத்தொகுதி போன்ற விரைவாக பிரிந்து பெருகும் கலங்கள் அதிகளவு தொழில் பாட்டில் உள்ள தொகுதிகளில் செயலிழப்பினை ஏற்படுத்தும். இந்த நஞ்சானது முக்கியமாக கலங்களின் பெருக்கத்தினை தடுக்கும். கிழங்குகளில் உள்ள நச்சானது கிழங்கினை சமைத்தாலும் அழிவடையாத நிலையில் தொடர்ந்து காணப்படும்.
இந்த தாவரம் ஆனது பண்டைய காலங்களில் மருத்துவ தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. முக்கியமாக சித்த மற்றும் ஆயுர் வேத வைத்தியர்களினால் பயன்படுத்தப்பட்டது.இங்கு பொதுவாக மிக சிறிதளவான கிழங்கே பாவிக்கப்படுவதினால் (Sub Lethal Dose) அது மனிதனுக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவதில்லை. எனினும் சிலசந்தர்ப்பங்களில் நஞ்சாதல் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
பொதுவாக மனிதர்கள் இதன் கிழங்கிணை வேறு தாவர கிழங்குகள் முக்கியமாக வத்தாளை கிழங்கு அல்லது சீனிக் கிழங்கு அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்று தவறுதலாக உட்கொள்வர். சிலர் தற்கொலை செய்யும் நோக்கில் இதன் கிழங்கினை உட்கொள்வதுண்டு. சில சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் பாவிக்கப்படுவதுண்டு.
இதனை உட்கொண்ட பின்னர் பின்வரும் மாற்றங்கள் உடலில் ஏற்படும். உடனடியாக வாய், தொண்டை மற்றும் வயிற்று பகுதிகளில் எரிவு ஏற்படும்.அதனைத் தொடர்ந்து வாந்தி, வயிற்றோட்டம் என்பன ஏற்படும். ஒரு சில நாட்களின் பின்னர் தலைமயிர் உதிரல், தோல் மேற்படை கழறுதல், வெளியேறும் சிறுநீர் அளவு குறைவடைதல் என்பன ஏற்படும். சில சமயங்களில் மனம் குழம்பிய நிலைமைகளும் ஏற்படும்.முக்கியமாக போதிய வைத்திய கண்காணிப்பு இல்லாத விடத்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி இறப்பிணை ஏற்படுத்தும்.

பண்டைய இலக்கியங்களில் இது பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.

  • இதன் பூ தீக்கொழுந்து போலக் காணப்படுவதால், அக்கினிசலம் எனப்படும்.
  • இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும், இலாங்கிலி எனவும் அழைக்கப்படும்.
  • இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
  • இதுபற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும்.
  • வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்றும் அழைக்கப்படும்.
  • கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.
  • மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும்.
  • நாட்டு மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர்.
  • பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள்.
  • கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததைப் பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.

காந்தள் மலரின் அழகு காரணமாகவும் கிழங்கின் மருத்துவ தேவைப்பாடு கருதியும் சில இடங்களில் இந்த தாவரம் வர்த்தக ரீதியில் சாகுபடி செய்யப்படுகின்றது.

மருத்துவ மாணவர்களின் தற்கொலையும் எதிர்காலமும்

கடந்த ஒரு சில தினங்களுக்கு  முன்னர் யாழ் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் ஒருவர் தனது விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஆனது மருத்துவ சமூகத்தினரிடம் மட்டும் அன்றி பல்வேறு தரப்பினரிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறு யாழ் மருத்துவ பீடத்தில்  மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது இது முதல் தடவை அல்ல. அவ்வாறே இலங்கையின் ஏனைய மருத்துவ பீடங்களிலும்  இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே பல நடந்துள்ளன. இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்ற  உடனேயே மாணவன் குறித்த பாடம் ஒன்றிற்கு  பரீட்சைக்கு தோற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே, குறித்த மாணவன் மன விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அதற்கு அவனுக்கு கற்பித்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் தான் முழுப் பொறுப்பும் என செய்திகள் வெளிவந்தன. ஒருசிலர் இன்னொரு படி மேலே சென்று குறித்த பல்கலை கழக ஆசிரியர்கள் கொலை செய்து விட்டதாக முகநூலில் பதிவிட்டனர்.

இலங்கையில்  பல்கலைக்கழகம் ஒன்றிற்கு  அனுமதி கிடைப்பது என்பது மிகவும் கடினமான செயலாகும். அதுவும் மருத்துவ பீடத்திற்கு தெரிவாவது என்பது மிகமிக கடினமான செயலாகும். இவ்வாறு பல தடைகளையும் தாண்டி  மருத்துவ பீடத்திற்கு செய்யப்பட்ட மாணவன் ஒருவன் ஏன் தற்கொலை செய்துகொண்டான்? என்பது பற்றி விரிவாகக் ஆராயப்பட வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் அன்றி எதிர் காலத்தில் இவ்வாறான துர் சம்பவங்கள் நடைபெறுவதினை தடுக்க முடியாது.

முதலில் குறித்த மருத்துவ மாணவன் ஏற்கனவே மன நிலை குழம்பியவனாக இருந்து இருப்பனா? என்று ஆராய வேண்டும். அவனது இந்த நிலை விரிவுரையாளர்களினால்  அடையாளம் காணப்பட்டதா? அல்லது அடையாளம் காணப்படவில்லையா? என்பது பற்றியும்  ஆராயவேண்டும். எற்கனவே மன அழுத்தத்தில் உள்ள மாணவருக்கு  குறித்த பாடம் ஒன்றுக்குக்கான பரீட்சையில் தோற்ற அனுமதி கிடைக்காமல் போதல் போன்ற சம்பவங்கள் அவரின் மன நிலையில் தீடீரென்று மிகப்பெரிய தாக்கத்தினை கொடுத்து இருக்கும். முக்கியமாக அவர் குறித்த பாடம் ஒன்றுக்கும் ஆகக்குறைந்த 80 சதவீத வரவினை கொண்டிருக்காமை காரணமாகவே அம்மாணவன் பரீட்சைக்கு அனுமதிக்கப்படவில்லையென தெரிய வருகின்றது. அவ்வாறாயின் என்ன காரணத்திற்காக அவன் குறித்த பாட விரிவுரைகளுக்கு சமூகம் அளிக்கவில்லை என்பதினை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலும் அம்மாணவணுக்கு இவ்விடயத்தினை உரிய முறையில் தெரிவித்து, அம்முடிவானது அவனின் மனநிலையில் ஏற்படும் தாக்கங்களினை ஆராய்ந்திருக்க வேண்டும். ஒரு வைத்தியரான  விரிவுரையாளரினால் மாணவனில் மனநிலையில்  ஏற்படும் தாக்கம்  மிக இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். தவிர்க்க முடியாத குடும்ப. தனிப்பட்ட மற்றும் சமூக காரணங்களினால் அவனால் 80 வீத வரவினை அடையமுடியாமல் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு விதிவிலக்கு கொடுக்க வேண்டும்.

எமது இலங்கை பல்கலைக்கழகங்களில் பொதுவாக ஆசிரியரை  மையப்படுத்திய கற்கை மற்றும் கற்பித்தல் முறையே காலகாலமாகக் இருக்கின்றது. இதன் பொழுது பல்கலைகழக ஆசிரியர்களுக்கு மாணவர்களின் சமூக பின்னணி, குடும்ப நிலை, நோய் நிலமைகள் முக்கியமாக  அவர்களின் மனோ தைரியம் போன்றவற்றினை  முற்று முழுதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் இது பற்றி அறியவும்  விரும்புவதில்லை.மேலைத்தேச நாடுகளில் பொதுவாக பல்கலைக்கழகங்களில் அதிகளவு ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதினாலும், அங்கு மாணவர்களை மையப்படுத்திய கற்கை நெறிகள் இருப்பதினாலும் ஒரு மாணவன் மனஅழுத்தம் அல்லது மனநோய் போன்றவற்கு உள்ளாகும் பொழுது  இலகுவில் அடையாளம் காணப்படுவான். மேலும் அவனுக்கு உரிய ஆற்றுப்படுத்தல்கள் மற்றும் ஏனைய சிகிச்சைகள் வழங்கப்படும்.  இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாறு நடப்பதில்லை. மேலைத்தேச பல்கலைக்கழகங்களில் பரீட்சையில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கென விசேடமாக ஆற்றுப்படுத்தல்கள் உள்ளன. இலங்கையில் இவ்வாறான முறை தற்பொழுதே அறிமுகமாகி வருகின்றது.

எமது சமூகத்தவரிடம் ஒரு பழக்கம்  யாதெனில் ஒருவர் மன அழுத்தத்தில் அல்லது மனநோயின் தாக்கத்தில் உள்ள பொழுது அவரினை இனம் காணாமை  மற்றும் உரிய மருத்துவ ரீதியான  தீர்வுகளை பெற்று கொடுக்க முயலாமை என்பனவும் இவ்வகையான தற்கொலைகளில் பங்களிக்கின்றன. சாதாரணமாக வைத்தியர் ஒருவருக்கு காச்சல் போன்ற ஏதாவது நோய்கள் வந்துவிட்டால், பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்வி டொக்ரர் உங்களுக்கே வருத்தமா? பலரும் மருத்துவ மாணவர்களும் வைத்தியர்களும் மனிதர்களே என்பதினை மறந்து விடுகின்றனர். அதுவும் மருத்தவ பீட மாணவன் ஒருவனுக்கு மன அழுத்தம் அல்லது depression என்று சொல்வதில் உள்ள வெட்கம் மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்ள முடியாத நிலை என்பன இவ்வாறான மரணங்களினை தூண்டுகின்றன.

தற்போதைய ஆராய்ச்சிகளின் படி மருத்துவ துறையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் ஆகியோர் அதிகளவு மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்தத்தில் இவ்வாறான தற்கொலைகள் பல்வேறுபட்ட காரணிகளின் தாக்கத்தின் விளைவாகவே (multi factor) ஏற்படுகின்றது. இவ்வாறான நிலையில் நாம் ஒரு தரப்பினை மட்டும் முற்றுமுழுதாக குற்றம் சாட்டுவதில் இருந்து நாம் ஏனைய  தற்கொலைக்கு ஏதுவான மற்றைய காரணிகளை ஆராய்ந்து பார்க்க விரும்புவதில்லை. இதன்காரணமாக நாம் இவ்வாறான தற்கொலைகளை தடுப்பதில் தோல்வி அடைகின்றோம்.  ஒட்டு மொத்த காரணங்களினையும் அடையாளம் கண்டு அவற்றினை தீர்வு கண்டாலே இவ்வாறான தற்கொலைகளை தடுக்கலாம்.

ஒரே பக்கமாகவா?

அவளுக்கு இருபத்தி இரண்டு வயது தான். தலை நகரின் பெண்களுக்குக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் கடமை ஆற்றுகின்றாள். அன்று காலையில் அவளின் ஆண் நண்பனின் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வரும் பொழுதுதான் அந்த விபரீதம் நடைபெற்றது. அவர்கள் வரும் பொழுது நாய் ஒன்று வீதியின் குறுக்காக செல்ல முற்பட்ட வேளையில் அவளின் ஆண்நண்பன் மோட்டார் சைக்கிளின் பிரேக்கினை சடுதியாக பிரயோகித்தான். மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் இரு கால்களும் ஒரே பக்கமாக அமைந்த வண்ணம் பிரயாணம் செய்த அவள் சடுதியான பிரேக்கின் பிரயோகத்தில் நிலை தடுமாறி ரோட்டில் வீழ்ந்தாள். அவளுக்கு முகத்திலும் முழங்காலிலும் உரஞ்சல் காயங்கள் தான் ஏற்பட்டன. நல்ல வேளையாக என்பு முறிவுகளோ, பிளவுக் காயங்களோ (Laceration) இல்லை. அவளுக்கோ ஒரே கவலை அதாவது தனது முகத்தில் காயம் வந்துவிட்டது அது தழும்பாக மாறிவிட்டால் அவள் வேலை செய்யும் கடையில் வேலையில் இருந்து நிறுத்தி விடுவார்கள் என்ற பயம் வேறு.

07
நான் எனக்கு தெரிந்த மொழியில் என்னால் ஆன மருத்துவ விளக்கங்களினை கொடுத்தேன். முக்கியமாக உரஞ்சல் காயமானது எமது தோலின் மேலாக கரடுமுரடான மேற்பரப்பு ஒன்று பட்டு இழுபடும் பொழுது உண்டாகின்றன. இதன் பொழுது பொதுவாக எமது தோலின் மேற்பகுதி தான் அகற்றப்படும். இதன் காரணமாக இவ்வகையான காயங்கள் ஆறும் பொழுது பொதுவாக தழும்புகள் உருவாக்குவதில்லை. விதி விலக்காக கிருமித்தொற்று ஏற்படும் பொழுதோ அல்லது காயம் தோலின் உட்படைக்கு செல்லும் பொழுதோ தழும்புகள் உருவாகும்.

நம்ம பெண்களில் பலருக்கு உள்ள பிரச்சனை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்யும் பொழுது எவ்வாறு இருந்து பயணிப்பது என்பதே அதாவது ஒருபக்கமாக கால்களினை போடுவதா அல்லது இருபக்கமுமாய் போடுவதா என்பதே. குட்டை பாவாடை அணிப்பவர்களுக்கு இருபக்கமும் பிரச்சனை தான். பெண்களில் பலர் தங்களின் கால் தெரிந்து விடும் என்பதற்காக கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாய் வைத்தே பிரயாணம் செய்கின்றனர். இது உண்மையில் ஆபத்தானது ஏனெனில் இவர்கள் சடுதியான பிரேக் பிரயோகத்தின் பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழக்கூடிய ஆபத்துண்டு. சில இதுபற்றி இலங்கையின் மோட்டார் வாகன சட்டம் ஏதாவது சொல்கின்றதா? என்று பார்ப்போம்.

இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓர் பிரயாணி மோட்டார் சைக்கிளில் கால்களை இருபக்கமும் வைத்தவாறே பிரயாணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது . தென்னிலங்கையில் பொதுவாக போக்குவரத்து பொலிஸார் இதனை கடுமையாகக் பார்த்துக் கொள்வர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுவாக இதனைக் கண்டு கொள்வதில்லை.

(Motor Traffic Act. Section 158: Pillion riding: The driver of a motor cycle which has no side-car attached thereto shall not carry more than one person on the cycle when it is used on a highway, and such person shall not be carried otherwise than sitting astride the cycle on a seat securely fixed thereto behind the driver’s seat.)

சுஜித் – எவ்வாறு இறந்தான்?

அண்மையில் தமிழ் நாட்டில்  சுஜித் என்ற சிறுவன் அவனது வீட்டின் அருகில் தோண்டப்பட்ட  பாவனையில் இல்லாத ஆழ் துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவிக்கொண்டான். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு மரணம் ஏற்படுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.

சாதாரணமாக இவ்வாறு ஆழத்தில் வீழ்ந்தவுடன் சிறுவனுக்கு உணவு மற்றும் நீர் என்பன கிடைக்காது போய்விடும். இவை கிடைக்கவிடினும் மரணம் உடனடியாக ஏற்படபோவதில்லை. முதலில் மனிதனின் சக்தி தேவைக்கான குளுக்கோசு மனிதஉடலில் இருந்து முற்றாக முடியும் அதன் பின்னர் அவனது ஈரலில் உள்ள கிளைக்கோசு  எனும் பதார்த்தம் ஆனது குழுகோசாக  மாற்றமடையும். அதுவும் முடிந்தவுடன் மனித உடலில் தோலின் கீழ்  உள்ள கொழுப்பு, தசையில் உள்ள  புரதம் போன்றன குளுக்கோசாக  மாற்றப்படும். இந்த செயன்முறைக்கு Gluconeogenesis என்று மருத்துவத்தில் பெயர் (Gluconeogenesis  is a metabolic pathway that results in the generation of glucose from certain non-carbohydrate carbon substrates). மனிதன் ஒருவருக்கு நீர் மற்றும் உணவு   ஆகிய இரண்டும்  கிடைக்காவி்டின் சராசரியாக 10- 12 நாட்கள்  உயிர் வாழ்வார். நீர் கிடைத்து, உணவு மட்டும் கிடைக்கவிடின் 6- 8 கிழமைகள் வரை உயிர் வாழ்வர் . உடனடி பட்டினி சாவின் (Acute starvation) பொழுது ஒருவர் உயிர் வாழும் காலம் ஆனது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படும். அவை யாவன

  1. வயது –  சிலர் நினைப்பர் மனிதன் ஒருவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் அவனுக்கு உணவோ அல்லது சக்தியோ தேவைப்படாது என்று. இது தவறானது. சாதாரணமாக சுவாசம், கலங்களின் செயற்பாடு… போன்றவற்றிக்கு குறிதளவு சக்தி தேவை (Basal metabolic rate (BMR) is the rate of energy expenditure per unit time by endothermic animals at rest).  சிறுவன் ஒருவனுக்கு ஒருநாளைக்கு வயது வந்தவர்களுக்கு தேவைப்படும் சக்தியில் அதிகம் தேவை.
  2. பால் – பெண்களுக்கு தோலின் கீழ் அதிகளவு கொழுப்பு படிவு உள்ளதன் காரணமாக அவர்கள் பட்டினியை அதிகம் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்.
  3. முன்னைய உடல் நிலை பட்டினிக்கு முன்னர் ஒருவர் மிக சிறந்த உடல் நிலையினை கொண்டிருப்பராயின் அவரினால்  அதிகளவு காலத்திற்கு பட்டினியை தாங்கிக் கொள்ள முடியும்
  4. சூழல் வெப்பநிலை பட்டினி சாவினை எதிர் நோக்கி இருக்கும் ஒருவர் இருக்கும் சூழலின் வெப்பநிலையானது அவரின் உடல் வெப்பநிலையினை விட கூடவாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவர் பட்டினியை அதிக காலம் தாங்க முடியாது. பொதுவாக ஆழ் துளை கிணறுகளில் அதிக வெப்பம் (Hyperthermia) நிலவும்.

சிறுவன் சுஜித் சம்பவத்தில் மேற்குறித்த காரணிகள் எல்லாம் தப்பி உயிர் வாழ்வதற்கு பாதகமாகவே இருந்தன என்பது குறிபபிடத்தக்கதாகும்.

சிறுவன் சுஜித் சம்பவத்தில் இன்னோர் முக்கிய காரணி பாதகமாக அமைந்தது அது என்ன?

நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .

fb_img_15720822302335802349075250392832.jpg

இங்கு சிறுவன் நாட்கள் செல்ல செல்ல மேலும் கீழே கீழே  சென்று இறுக்கமாக மாட்டிக்கொண்டான் . இதன் பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். இவ்வாறு மிக இறுக்கமான இடங்களில் இருக்கும் நபர்களுக்கு குழாய் மூலம் ஒட்சிசன் கொடுத்தாலும் பெரிய பிரயோசனம் ஒன்றும் நிகழப்போவதில்லை. ஏனெனில் கொடுக்கும் ஒட்சிசனானது  வினைத்திறன் மிக்க முறையில் நுரையீரல் லினை அடையாது. சாதாரண ஓர் மனிதனுக்கு 3 -5 நிமிடங்களுக்கு மூளைக்கு தேவையான ஓட்சிசன் கிடைக்காவிடில் கூட இறப்பது ஏற்படும் நிலையில். சிறுவன் சுஜித்தின் நிலை சொல்லி விளங்கவேண்டியதில்லை.

asp

மேலே உள்ள படம் ஆனது traumatic asphyxial death நடைபெற்ற நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இறுதியாக இனிவரும் காலங்களில் இவ்வாறன அநியாய இறப்புகளை தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

மண் பாணையினால் ஆபத்தா?

இன்றைய உலகில் நன்னீர் பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிலும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் வரட்சி, பருவ மழை வீழ்ச்சி போதாமை. கட்டுப்பாடற்ற நிலக்கீழ் நீர்ப்பாவனை போன்றவற்றினால் நன்னீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி போத்தல் குடிநீர் விற்பனை நிறுவனங்கள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்தி பெருமளவு இலாபம் ஈட்டி வருகின்றன என்பது உண்மை . மேலும் பொதுமக்களில் பெரும்பாலானோர் போத்தல்களில் வரும் குடி நீர் மிகவும் பாதுகாப்பானது என எண்ணுகின்றனர். அத்தோடு சிலர் அதனை கெளரவமாக வேறு  கருதுகின்றனர். இது இவ்வாறு இருக்க சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் மண்பானைகளில் நீரினை சேகரித்து அருந்துவது மிகவும் பாதுகாப்பானது என அவ்வப்போது பல பதிவுகள் இடப்படுகின்றன. அவற்றின் உண்மை தன்மையினை ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

சாதாரணமாக ஓர் திண்மத்தினை நாம் ஓர் திரவம் ஒன்றில் இட்டால் அது அத்திரவத்தில் கரையக்கூடிய திண்மம் எனில் முற்றாகவோ பகுதியாகவோ கரையும், கரைய முடியாத திண்மம் எனில் அது எமது வெற்று கண்ணுக்கு கரையாத மாதிரி தோன்றும் ஆனால் அதன் மேற்பரப்பில் இருந்து மிகமிக சிறிதளவு திண்மம் அதாவது நனோ கிராம் அல்லது மைக்ரோ கிராம் அளவில்   தொடுகையில் உள்ள திரவத்தில் கரையும்.

இவ்வாறே மண் பாணையில் நீரினை சேமித்து வைக்கும் பொழுது அந்த மண்பாணை ஆக்கப்பட்டுள்ள மண்ணில்  உள்ள உலோகங்கள் மற்றும் உப்புக்கள் என்பன நீரில் கரையும். அதன் மூலம் அவை மனிதனை அடையும் . அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இவ்வாறு மண்பானைகளில் சேமித்து வைக்கப்பட்ட நீரில் ஆர்செனிக், கட்மியம் போன்ற பார உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பானைகள் குறிப்பாக இலங்கையின் வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள மண்ணில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறித்த மாகாணங்களில் அளவுக்கு அதிகமான ஆர்செனிக், கட்மியம் போன்ற பார உலோகங்கள் நீரில்,  அங்கு உற்பத்தி செய்யப்படும் சில உணவு வகைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேற்குறித்த மாவட்டங்களில் அதிகளவு சிறுநீரக செயலலிழப்பு நோயாளிகள் உருவாவதற்கு இவையும் ஒரு காரணம் என்று நம்பப்படுகின்றது.

887

இவ்வாறு மிகமிக சிறிய அளவில் இவ்வாறன பார உலோகங்கள் உடலில் சேர்வதினால் மனிதனின் உடல் நலத்திற்கு கேடு உண்டாவது சாத்தியமா? நீண்ட காலப்போக்கில் இவ்வாறு மிகமிக சிறிய அளவில் சேரும் இவ்வாறான உலோகங்களினால் நிச்சயம் பாதிப்பே. அதுவும் சிறுவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும். இதற்கு சிறந்த உதாரணம் பண்டைய ரோம சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி. அண்மையில் விஞ்ஞானிகள் ரோம ராச்சியத்தில்  மக்கள் ஈயத்தில் செய்யப்பட்டுள்ள பாத்திரங்கள், நீர்க் குழாய்கள் போன்றவற்றினை அதிகளவில் பயன்படுத்தியமையினாலும் மேலும் மருந்தாக ஈயத்தினை பயன்படுத்தியமையினாலும்  அவர்கள் ஈயத்தினால் நஞ்சாதலுக்கு (Chronic lead poisoning) உட்பட்டு நீண்ட காலப்போக்கில்  உடல் ஆரோக்கியம் குறைந்தமையே ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு ஏதுவான காரணங்களில் ஒன்று என கண்டு பிடித்துள்ளனர். இது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் அதிகளவு ஈயம் இருப்பதன் மூலம்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

888

மண் பானையில் சேமித்து வைத்திருக்கும் நீரினை அருந்தும் பொழுது ஏற்படும் மன  திருப்திக்கு அளவே இல்லை. அப்படியென்றால் இவற்றுக்கு  என்னதான் தீர்வு? மண்ணிலாலான பாத்திரங்களை வாங்கி பாவிக்கும் முதல் அதனுள் நீரினை இட்டு ஒருசில தடவைகள் கொதிக்கும் வரை நன்றாக சூடாக்க வேண்டும். அதன் பின்னர் கொதித்த நீரினை வெளியே  ஊற்றவேண்டும். இவ்வாறு தொடுகையில் இருக்கும் நீரின்  வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது மண் பாத்திரத்தில் உள்ள பார உலோகங்களான ஆர்செனிக், கட்மியம் போன்றன நீரில் அதிகளவு கரையும். இதன் பின்னர் மண் பாத்திரத்தில் ஆர்செனிக், கட்மியம் போன்றவற்றின் அளவு  இல்லாமல் போகும். மேலும் மண் பாத்திரத்தில் நீரினை சேமிக்கும் பொழுது அந்த நீரானது இயற்கையாகவே கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது என்ற கருத்தெல்லாம்  விஞ்ஞான  ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

நஞ்சு ஆனால் நஞ்சல்ல!!!

இன்று தொலைக்காட்சி சேனல்களை பார்த்தால் அதில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் பல்வேறுபட்ட தொற்று நீக்கிகள், கிருமி நீக்கிகள், கைகழுவும் திரவங்கள் (hand sanitizer), சவர்க்காரங்கள் சம்பந்தமானவையே. இவை பல்வேறுபட்ட வர்த்தக நாமங்களில் பல விலை வித்தியாசங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் இவற்றினை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் பெரும் தொகையினை இலாபம் ஈட்டுகின்றன என்பது வெள்ளிடை மலை. அண்மையில் சந்தைக்கு வந்த கைகளை சுத்தப்படுத்தும் ஒருவகையான கைகழுவும் திரவத்தில் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் (alcohol) உள்ளதால் அதனைப்பாவிப்பது உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்ற வகையில் சில செய்திகள் வெளிவந்தன. இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் அங்கு விளம்பரப்படுத்தப் படுத்தப்பட்ட கைகழுவும் திரவத்தினை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுதினால் கைகளை கழுவ வேண்டிய தேவை இல்லை. குறிப்பாக இந்த கைகழுவும் திரவம் ஆனது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து உற்பத்தி செய்யப்படுகின்றது.

இனி விடயத்திற்கு வருவோம். 90 வீத செறிவு கொண்ட மதுசாரத்தினை உள்ளடக்கிய இந்த கைகழுவும் திரவத்தினை பாவிக்கும் பொழுது நாம் நஞ்சாதலுக்கு உட்படுகின்றோமா? என்பதே இப்பொழுதுள்ள கேள்வி.

நாம் உள்ளேடுக்கும் மருந்து அல்லது நஞ்சானது எமது உடலில் குறித்த அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுதே அதாவது இரத்தத்தில் அதன் செறிவு குறித்த அளவினை தாண்டும் பொழுதே நாம் நஞ்சாதலுக்கு உள்ளவோம். மேலும் ஒரு மனிதனை கொல்ல தேவையான நஞ்சின் அல்லது மருந்தின் அளவு Lethal Dose (LD) என்று அழைக்கப்படும். இது மருந்து அல்லது நஞ்சிற்கு ஏற்றவாறு வேறுபடும். இந்த அளவானது மருந்து அல்லது நஞ்சினை உள்ளெடுக்கும் மனிதனின் உடல் நிறை, வேறு நோய்கள் உள்ள நிலமை , குறிப்பாக சிறுநீரக மற்றும் ஈரல் போன்றவற்றின் தொழில் பாடுகள் பாதிக்கபட்டுள்ளமை போன்றவற்றில் தங்கி உள்ளது.

02

நாம் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் கொண்ட ஒரு போத்தலை (750ml) ஒரே தடவையில் மடமட வெனக்குடித்தால் நிச்சயம் வளர்ந்த மனிதன் ஒருவனுக்கு நஞ்சாதல் (intoxication) ஏற்படும்.

இங்கு பயன்படுத்தப்படும் கைகளை சுத்தமாக்கும் திரவத்தில் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் இருந்தாலும் ஒருசில தடவைகள் பயன்படுத்தும் பொழுது அது மிக குறைந்த அளவிலேயே உடலை அடையும் . அந்த மிகச்சிறிய அளவினால் மனித உடலில் அதாவது சிறுவர்களின் உடலில் எந்தவிதமான தீங்குகளை ஏற்படுத்த முடியாது. அவ்வாறே பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்த அதன் அளவு dose போதாது. இதேவேளை சிறுவர்கள் அந்த கைகள் கழுவும் திரவம் அடங்கிய போத்தலின் உள்ளடக்கம் முழுவதினையும் ஒரேதடவையில் குடித்தால் நிச்சயம் இறப்பு ஏற்படா விடினும் ஒரு சில பாதக விளைவுகள் ஏற்படும். இவ்வாறே இதில் இருக்கும் மற்றைய இரசாயன பாதார்த்தங்களும் சிறிய அளவில் இருப்பதால் மனிதருக்கு தீங்கில்லை.

90 வீத செறிவு கொண்ட மதுசாரம் ஆனது ஓர் சிறந்த தொற்று நீக்கி ஆகும். இதன் காரணமாக இது சாதாரணமாக வைத்திய துறையில் பெருமளவில் பாவிக்கப்படுகிறது. முக்கியமாக அதிதீவிர சிகிச்சை பிரிவுகள், சில நோயாளர் விடுதிகள் போன்றவற்றில் வைத்தியர் அல்லது ஏனைய ஊழியர்கள் ஒரு நோயாளியினைப் பரிசோதித்த பின்னர் மற்றைய நோயாளியை பரிசோதிக்க முன்னர் இவ்வாறான 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் உள்ளடங்கிய திரவங்களை பயன்படுத்தி தமது கைகளை மூலம் சுத்தப் படுத்துவார்கள்.

இவ்வாறே நாம் பனடோலுக்கு பதிலாக பயன்படுத்தும் பனடீன் என்ற மாத்திரையில் codeine என்ற போதைப்பொருள் மிக சிறிய அளவில் காணப்படுகின்றது. இவற்றினை பாவிக்கும் பொழுது போதை ஏறுதல் மற்றும் போதைக்கு அடிமையாகும் தன்மை என்பன ஏற்படாது.

11 பேரினை பலிகொண்ட …..

முக்கிய புள்ளி சிக்கியது எவ்வாறு?

ஒரு  வாகன விபத்து நடைபெறும் பொழுது அதில் சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருந்தவர் யார் என்பதினை சரியாக கண்டறியவேண்டும். பொதுவாக விபத்தின் பின்னர் ஆள் மாறாட்டம் இடம் பெறும். இருவரும் விபத்தில் உயிர் தப்பினாலோ, ஒருவர் அல்லது இருவரும் இறந்தாலோ அவர்களின் விபத்துக்கு முன்னரான வாகன இருக்கையின் நிலை கண்டறியவேண்டும். சட்ட மருத்துவ பரிசோதனையில் அல்லது பிரேத பரிசோதனையில்  அவர்களின் வாகன இருக்கை நிலை எவ்வாறு  கண்டறியபடுகின்றது என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

இங்கு முக்கியமாக அவர்களில் ஏற்படும் காயத்தின் இயல்புகளை வைத்தே அவர்களின் விபத்துக்கு முன்னரான வாகன இருக்கையின் நிலை கண்டறியப்படுகின்றது. அநேகமான வீதி விபத்துக்கள் வாகனத்தின் முன்பகுதி இன்னோர் வாகனத்துடன் அல்லது வேறு ஒரு பொருளுடன் மோதுவதினால் ஏற்படுகின்றது. இவ்வாறு மோதும் பொழுது வாகன சாரதி உட்பட வாகனத்தில் பிரயாணம் செய்பவர்கள் முன்னோக்கி வீசப்படுவார்கள். அதே சமயம் வாகனத்தின் பிரேக், ஸ்டியரிங் வீல் போன்றன உள்நோக்கி வரும் இதன்காரணமாக பின்வரும் வகையில் காயங்கள் ஏற்படும்

  1. சாரதியில் ஏற்படும் காயங்கள்

விபத்து ஏற்படும் பொழுது சாரதி முன்னோக்கி வீசப்படுவார் மேலும் ஸ்டியரிங் வீல் உள்நோக்கி வரும் இதன்காரணமாக ஸ்டியரிங் வீல் சாரதியின் நெஞ்சு பகுதியில் தாக்கி கண்டல் காயம், எலும்பு முறிவு, உரஞ்சல் காயம் போன்றவற்றினை ஏற்படுத்தும். இங்கு ஏற்படும் காயமானது சிலவேளை ஸ்டியரிங் வீல் இணை உருவமைப்பில் ஒத்து இருக்கலாம். விசை அதிகமாக இருக்கும் பொழுது நெஞ்சில் உள்ள நுரையீரல் இருதயம் போன்றவற்றிற்கும் வயிற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஈரல், மண்ணீரல் மற்றும் இரைப்பை போன்றவற்றிற்கும் பாரிய காயங்கள் ஏற்படலாம். இவ்வாறு தூக்கி வீச முற்படும் பொழுது சீற் பெல்ற் ஆனது சாரதியில் குறிப்பிடத்தக்க வகையில் உரஞ்சல் காயத்தினை ஏற்படுத்தும். மேலும் நெற்றி மற்றும் தலைப்பகுதி ஆனது டாஸ் போட்டில் பலமாக அடிப்பதன் காரணமாக மேற்குறித்த பகுதிகளில் பிளவு காயங்கள், எலும்பு முறிவு போன்றன ஏற்படும். பிரேக் மற்றும் கிளச் போன்றன பலமாக உள்நோக்கி வரும் பொழுது காலின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பை நோக்கி விசை தாக்கும் அதன் காரணமாக மேற்குறித்த பகுதிகளுக்கு இடையில் எங்காவது என்பு முறிவு, முழங்கால் மூட்டு விலகல், இடுப்பு மூட்டு விலகல் என்பன   ஏற்படலாம். மேலும் டாஸ் போட் உள்நோக்கி வருவதன் காரணமாக கால் அல்லது முழங்கால் பகுதியில் பிளவு காயங்கள் (laceration), எலும்பு முறிவு போன்றன ஏற்படலாம். இவ்வாறு சாரதியில் ஏற்படும் குறிப்பிடத்தக்க காயங்களின் இயல்புகளை வைத்து சட்ட வைத்திய அதிகாரி இலகுவாக சாரதியினை அடையாளம் காணுவார்.

(மேற்குறித்த படங்கள் சீற் பெல்ட்டினால் மற்றும் ஸ்டியரிங் வீல் போன்றவற்றினால் ஏற்பட்ட காயங்களை குறிக்கின்றது)

(மேற்குறித்த படங்கள் சாரதியிலும் முன்னிருக்கையில் பயணிப்பவருக்கும் எவ்வாறு காயங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகின்றன).

சில சந்தர்ப்பங்களில் சாரதியின் பாதணியின் அடிப்பகுதியில் பிரேக்கினை பலமாக அழுத்தியதன் காரணமாக ஏற்படும் தவாளிப்பு அடையாளம் (imprint mark) காணப்படும்.

  1. முன்னிருக்கையில் பயணம் செய்பவருக்கு ஏற்படும் காயங்கள்

ஓர் வாகனத்தில்  முன்னிருக்கையில் பயணம் செய்யபவருக்கும் சாரதியில் ஏற்படும் காயங்கள் போலல்லாது காலின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பை நோக்கி விசை தாக்கும் காரணமாக மேற்குறித்த பகுதிகளுக்கு இடையில் எங்காவது என்பு முறிவு, முழங்கால் மூட்டு விலகல், இடுப்பு மூட்டு விலகல் என்பன   ஏற்படலாம். மேலும் டாஸ் போட் உள்நோக்கி வருவதன் காரணமாக கால் அல்லது முழங்கால் பகுதியில் அல்லது கால் பகுதியில்  பிளவு காயங்கள், எலும்பு முறிவு போன்றன ஏற்படலாம். இவ்வாறு வாகனத்தின் முன்னிருக்கையில் இருப்பவருக்கு  ஏற்படும் குறிப்பிடத்தக்க காயங்களின் இயல்புகளை வைத்து சட்ட வைத்திய அதிகாரி அவற்றினை  இலகுவாக  அடையாளம் காணுவார்.

 

மேலும் சாரதியிலும் முன்னிருக்கையில் இருப்பவருக்கும் சீற் பெல்ட் இனால் வரும் காயங்கள் எதிர்மாறான பக்கங்களில் இருக்கும். இறுதியாக விபத்துக்குள்ளான வாகனத்தினை சட்ட வைத்திய அதிகாரி பார்வை இடுவதன் மூலம் காயம் அடைந்தவர் அல்லது இறந்தவர் வாகனத்தில் விபத்து நடைபெற முன்னர் வாகனத்தின் எந்த ஆசனத்தில் இருந்தார் என்பதினை இலகுவாக கண்டுபிடிப்பார்.