கொலையும் தற்கொலையும்

அண்மைய காலப்பகுதியில் இலங்கையில் கொலை – தற்கொலை என்ற வகை மரணங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பெற்ற தாயே தனது குழந்தைகளுக்கு நஞ்சினை கொடுத்து அவர்களின் உயிரினை மாய்த்தும் தானும் நஞ்சினை அருந்தி உயிரிழக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ரயில் தண்டவாளத்தில் குழந்தைகளுடன் குதித்தல் மற்றும் கிணற்றில் குதித்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

7899

இவ்வாறான கொலை – தற்கொலை சம்பவங்களில் பெரும்பாலும் பலியாகுவோர் ஏதும் அறியா அப்பாவி சிறுவர்களும் பெண்களுமே. பெரும்பாலான இச்சம்பவங்களுக்கு கடன் தொல்லை , மற்றும் கணவன் மனைவி இடையே உள்ள தீரா பிரச்சினைகளே காரணமாகக் அமைகின்றன. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் சில குடும்பங்கள் முற்று முழுதாக கருவறுக்கப்பட்டு இல்லாமல் போனமை மனதினை நெருடவே செய்கின்றது. உண்மையில் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சினைக்கு அவர்களில் ஒருவரை பழி வாங்குவதற்காக அப்பாவி சிறுவர்கள் பலி எடுக்கப்டுகின்றனர்.
சட்ட மருத்துவத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் நடைபெறும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெறும் புலனாய்வு முக்கியமானது ஆகும். இதன் மூலம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மிக இலகுவாக மரணம் சம்பவித்த சூழ்நிலை மற்றும் மரணம் ஏற்பட்ட காரணம் என்பவற்றினை கண்டறிந்து விடுவார். இவ்வாறான சம்பவங்கள் அல்லது ஒரு இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்படும் பொழுது அவற்றினை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாரிணை அழைக்கவேண்டும்.

https://www.youtube.com/watch?time_continue=91&v=gXXxJ8EY1C8

https://www.youtube.com/watch?time_continue=33&v=2v-McLtd5dE

பேஸ் புக் பார்ட்டி (Facebook party)

இந்த நூற்றாண்டின் வியத்தகு கண்டுபிடிப்புகளில் ஒன்றே முகநூல். முகநூலை பாவிப்பதினால் நன்மையா, தீமையா என்ற விவாதம் நீண்ட காலமாகக் நடைபெற்று வருகின்றது. உண்மையில் நன்மையோ தீமையோ தீர்மானிப்பது பாவிப்பவர்கள் தான். இன்றைய இளைஞர் சமுகத்தில் பலர் முகநூலை பல்வேறு தீமையான விடயங்களுக்காக பாவிப்பவர்களும் உள்ளார்கள். அவற்றில் ஒன்றே இந்த Facebook party என்பது. முகநூலில் உள்ள ஒத்த கருத்துடைய பெரும்பாலும் ஒரே வயதுடைய, குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அதுவும் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த Facebook party இல் ஒன்று கூடுகிறார்கள் . இலங்கையில் அண்மைக்காலங்களில் இவ்வாறு ஒன்று கூடிய பல பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப் பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
உண்மையில் இந்த Facebook party இல் என்னதான் நடக்கிறது என்று ஆராய்ந்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் .

முக்கியமாக இந்த வகை பார்ட்டிகள் இளைஞர் குழு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்படும். அவர்கள் முதலில் இவ்வாறு நடைபெற்ற பார்ட்டிகளில் எடுக்கப்பெற்ற கவர்ச்சிகரமான படங்களை முதலில் முகநூலில் பதிவேற்றி வாடிக்கையாளர்களினை சேர்ப்பார்கள். பின்பு அவர்கள் உரிய இடத்தினை தெரிவு செய்வார்கள் அது பெரும்பாலும் கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டல் ஆக அல்லது காட்டு பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் ஆக இருக்கும். இவற்றில் மாலை தொடக்கம் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் ஒன்று சேர்வர். இரவானதும் மதுபானத்துடன் தொடங்கும் பார்ட்டி போகப்போக போதைப்பொருள் ஐஸ் போன்றவற்றின் பாவனையுடனும் பெரும்பாலும் பாலியல் உறவுடனும் அடுத்தநாள் அதிகாலை முடிவுறும்.

இப்பொழுது இந்த வகை பார்ட்டிகளினால் என்னதான் பிரச்சனை? ஒவ்வொன்றாக பார்ப்போம்
1. இலங்கையில் தற்பொழுது அதிகளவு இளைஞர்கள் ஐஸ் என்ற methamphetamine என்ற போதைப்பொருளினை இங்குதான் பாவிக்க தொடங்குகின்றார்கள். சாதாரண பார்ட்டி தான் என்று முதலில் அழைக்கப்டும் மாணவர்கள் மற்றைய நண்பர்களின் வற்புறுத்தினால் போதைக்கு அடிமையாக தொடங்குகின்றனர்.மேற்குறித்த போதைப்பொருளினை தவிர சிகரெட் , மதுபானம் போன்ற பல்வேறுபட்ட போதைப்பொருள் பாவனையினை ஆரம்பிக்க இவ்வகையான பார்ட்டிகள் உதவுகின்றன.
2. இங்கு மேலும் குறிப்பிட தக்க விடயம் யாதெனில் பெண்கள் அதுவும் பாடசாலை மாணவிகள் இதனை பாவிக்க தொடங்கு கின்றார்கள்
3. உண்மையில் இவ்வகையான பார்ட்டிகள் போதைப்பொருள் வியாபாரிகள் , பாலியல் தொழில் செய்பவர்களின் போன்றோரின் மறைமுக அனுசரணையுடன் தான் நடைபெறுகின்றது. அவர்களின் நோக்கமே புதிய வாடிக்கையார் களை கண்டு பிடிப்பதே.
4. சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இவ்வாறான பார்ட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்கள் மூலம் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றலாம்
5. முக்கியமாக இவ்வகையான பார்ட்டிகளில் பொதுவாக யார் பங்குபெறுகின்றார்கள் என்று ஆராய்ந்தால் கிராமப்புறங்களில் இருந்து தொழில் மற்றும் கல்வி போன்றவற்றிக்காக நகர்ப்புறங்களிற்கு வரும் இளைஞர்களே.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறன பார்ட்டிகள் சிறிய அளவில் நடைபெற தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. எனவே விழிப்போடு இருந்து எதிர்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்

ஒரு முத்தம் ஒரு தப்பா?

அன்று காலையிலேயே எனது அலுவலகத்தின் முன்னால் வழமைக்கு மாறாக அதிகளவு மக்கள் கூட்டமாக நின்றார்கள். அவர்களை விலத்தியவாறு ஒருவாறு உள்நுழைந்தேன். அலுவலக உதவியாளர் தயங்கியபடி கூறினார், சேர் உங்களை சந்தித்து கதைக்க குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலையோடு சம்பந்தமானவர்கள் வந்திருக்கின்றனர் என்றார். அது வடமாகாணத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள ஓர் பாடசாலை அங்கு கடந்த வாரத்தில் அங்கு நடைபெற்ற ஓர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பாகவே அவர்கள் கதைக்க வந்திருப்பது தெரிந்தது. உடனே அலுவலக உதவியாளருக்கு கூறினேன் நான் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவியினை பரிசோதித்து விட்டேன். இது சம்பந்தமாக அவர்களுடன் கதைக்க வேண்டிய தேவையில்லை அவர்களை வெளியே அனுப்பும்படி கூறினேன். அலுவலக உதவியாளர் நீண்ட பகீர பிராயத்தனதின் பின்னர் அவர்களை வெளியே அனுப்பிய பின்னர் என்னிடம் கூறினார் சேர் இது அவர்களுக்கு ஒரு சின்ன கேஸாம் அதாவது அவர்கள் சம்பத்தப்பட்ட பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு முத்தமிட்டது தொடர்பானது. குறித்த ஆசிரியர் மிகவும் நல்லவராம் அத்துடன் பாடசாலை அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றவராம். எனவே மருத்துவ அறிக்கையினை வடிவாக பார்த்து அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்து சென்றனர். மேலும் நான் எனது உதவியாளர் மூலம் அறிந்து கொண்டது யாதெனில் முத்தம் கொடுத்தல் என்பது பாலியல் துஷ்பிரயோகங்களில் பாரதூர மற்ற சாதாரண விடயம் எனவே இவ்வாறான விடயங்களை பெரிதாக்கவும் கூடாது, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கூடாது என்பதே.

இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் முத்தம் இடல், கட்டியணைத்தல் போன்ற பல்வேறு உடல் தொடுகைகளுடனான துஸ்பிரயோகம் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் (Grave sexual abuse) என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாய்க்குள் அல்லது குதத்தினுள் அல்லது உடலின் வேறு எந்தப்பாகத்தினுள் எவரெனும் ஆள் தனது ஆண் உறுப்புக்களை அல்லது வேறு ஏதேனும் உடற்பாகத்தை பயன்படுத்தி பாலியல் திருப்தியை அடையச்செய்யும் செயலில் ஈடுபட்டால் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்தவராகின்றார். (பிரிவு-365ஆ- குற்றவியல் கோவை)

இங்கு பாலியல் துஸ்பிரயோகத்தின் தன்மையினை விட அப்பெண்ணிற்கு இவ்வாறான சமூக, கலாச்சார விடயங்களுக்கு ஒவ்வாத செயற்பாடு மூலம் ஏற்படும் உளத்தாக்கம் அளவிடமுடியாது. இதன்காரணமாக பல ஆண்டுகள் கழித்தும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் அதன் தாக்கத்தினை அனுபவிப்பர். மேலும் குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையும் விசேடமாக கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறன சந்தர்ப்பத்தில் பெண்ணின் மனநிலையானது விசேட மனநல வைத்தியர் ஒருவரினால் அலசி ஆராயப்படும். பாதுகாப்பான காவல் உள்ள இடங்களில் (custodial place ) அதாவது சிறுவர் அல்லது பெண் ஒருவர் வேறு ஒருவரின் அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் இடங்களான பாடசாலை, சிறைச்சாலை, புனர்வாழ்வு முகாம்… போன்றவற்றில் ஒருவர் தனது அதிகாரத்தினை பாவித்து அச்சுறுத்தி செய்யும் பாலியல் துஸ்பிரயோகங்கள் மிகவும் பாரதூரமானவை.

இறுதியாக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் என்றாலே எல்லாம் பாரதூரமானவை தான். அவற்றில் மன்னிக்க கூடியது அல்லது மன்னிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. மேலும் இவ்வாறான குற்ற சாட்டுக்கள் எழும் பொழுது பாடசாலை நிர்வாகம் பூரணமான நடுநிலைமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஈரல் கறி  நல்லதா?

நம்மில் பலர் ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவற்றினை இறைச்சிக்காக வெட்டும் பொழுது ஈரலினை வேறாக எடுத்து கறி வைப்பார்கள். இவ்வாறே தற்பொழுது சூப்பர் மார்க்கெட்டுகளில் கோழியின் ஈரல் மற்றும் உள் அவயவங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் ஏனைய விலங்குகளின் ஈரல் போன்றவை விற்பனைக்காக வந்துள்ளன. நம்மவர் விலங்குகளின் ஈரலினை சிறுவர்களுக்கும், இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கும் மிக்க சத்து நிறைந்தது என்று விசேட கறி கொடுப்பார்கள். உண்மையில் ஈரல் விற்றமின் மற்றும் கனியுப்புக்கள் நிறைந்தது. குறிப்பாக விற்றமின் A,B,E மற்றும் K போன்றனவும் கனியுப்புக்களான இரும்பு, பொசுபரசு, செம்பு மற்றும் மக்னிசியமும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் மனிதன் விலங்குகளின் ஈரலின் தொழில் என்னவென்றால் சமிபாட்டுத்தொகுதியில் இருந்து உடலில் உறிஞ்சுப்பட்டு வரும் உணவில் உள்ள எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றினை வடிக்கட்டி பித்தம் மூலம் மீளவும் சமிபாட்டுத்தொகுதிக்கு அனுப்பி அவற்றினை மலம் மூலம் உடலினை விட்டு வெளியேற்றுதலே ஆகும் (The liver  detoxifies chemicals and metabolizes drugs). இந்நிலையில் விலங்குகளின்  ஈரல் ஆனது எவ்வாறு மனித நுகர்விற்கு உகந்ததாக அல்லாமல் மாறியது என்பதே தற்போதைய கேள்வி ஆகும்.  மனிதன் எப்பொழுது வர்த்தக நோக்கம் கருதி கோழி, ஆடு மற்றும் ஏனைய விலங்குகளை உற்பத்தி செய்ய தொடங்கினானோ, அன்று தொடக்கம் இப்பிரச்சனை தொடங்கிவிட்டது. குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை அதாவது இலாபத்தினை பெறும் முகமாக மனிதனால் இவ்வாறு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் உணவாகவும் மருந்தாகவும் கொடுக்கப்படுகின்றன.  தற்போதைய காலகட்டத்தில் எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன ஈரலில் தேங்கி அதிக அளவில் உள்ளதால் அவை மனித நுகர்வுக்கு உகந்ததா என்ற கேள்வி எழுகின்றது.  அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் புரொயிலர் கோழிகளின் மற்றைய உறுப்புகளை விட ஈரலில் ஆசனிக்கு என்ற பார உலோகம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  வர்த்தக நோக்கம் கருதி வளர்க்கப்படும் விலங்குகளின் ஈரலில் எவ்வாறு மனிதனுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன சேர்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.

  1. விலங்குகளின் குறிப்பாக வர்த்தக நோக்கத்தில் வளர்க்கப்படும் கோழிகளின் ஈரலில் உணவுச்சங்கிலி மூலமாகவும், வழங்கப்படும் உணவுகள் மூலமும் ஆசணிக் , கட்மியம் போன்ற பார உலோகங்கள் செறிவடைகின்றன. இவ்வாறே நீர்கொழும்பின் கடல்நீரேரியில் உள்ள மீன்களிலும், உள்ளூரில் விளைந்த சில அரிசி இனங்களிலும் மேற்குறித்த அதிகளவு பார உலோகங்கள் இருப்பது கன்டுபிடிக்கப்படுள்ளது.
  2. விலங்குகளுக்கு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயினை குணப்படுத்தவும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் அதிகளவில் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாவிக்கப்படும் மருந்துகளின் பக்கவிளை பொருட்கள் (metabolic products ) அதிகளவில் ஈரலில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக levamisole (drugs used to treat parasitic worms) என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் புரொயிலர் கோழியின் ஈரலில் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் விலங்கு இறைச்சி அதிலும் ஈரல் மூலம் மனிதனை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
  3. குறிப்பாக பன்றி மற்றும் ஏனைய மிருக வளர்ப்புகளில் அவற்றில் கொழுப்பின் அளவினை குறைத்து தசையின் அளவினை அதிகரிப்பதற்காக பல்வேறுபட்ட ஹோர்மோன் வகைகள் பாவிக்கப்படுகின்றன. முக்கியமாக zeranol என்ற செயற்கை ஹோர்மோன் மற்றும்  17β-oestradiol என்ற இயற்கையாக காணப்படும் ஹோர்மோன்கள் உள்ளடங்கும். முக்கியமாக இவை விலங்குகளின் ஈரல் மூலம்  மனிதனை அடைந்து புற்று நோய் உட்பட்ட பல்வேறுபட்ட தாக்கங்களினை விளைவிக்கும் (Studies have shown that growth hormone residues in animal liver adversely affect human health including neurobiological, genotoxic and carcinogenic effect).
  4. விலங்குகளின் ஈரலில் அதிகளவு விற்றமின் A உள்ளது இதன் காரணமாக அதிகளவில் மற்றும் அடிக்கடி விலங்கு ஈரலினை உணவாக உட்கொள்ளுபவர்கள் விற்றமின் A நச்சாக்கத்திற்கு உட்பட்டதினை மருத்துவ அறிக்கைகள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார் இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அவர்களின் கருப்பையில் இருக்கும் குழந்தையும் விற்றமின் A நஞ்சாக்கத்தினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு. மேலும் கொலஸ்ரோல் அதிகம் உள்ளவர்களும் விலங்கு ஈரல் உணவினை தவிர்ப்பது நல்லது.

இறுதியில், ஈரல் கறி சாப்பிடலாமா அல்லது சாப்பிட கூடாதா என்னதான் முடிவு? விடை இதுதான், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.  

இது அதற்கு சரிப்பட்டு வருமா?

அவர் அரச உத்தியோகத்தில் அதிகாரமிக்க பதவியில்  உள்ளவர். அவருக்கு சிறுவயது முதலே சலரோகம் உள்ளது. அதாவது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சலோரகம் உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் வரவில்லை. ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக அவருக்கு நீண்டகாலமாக சலரோகம் இருந்ததன்காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் வரத்தொடங்கியது. காலில் கிருமித்தொற்று, சிறுநீரில் கிருமித்தொற்று.. என்றவாறு பல்வேறு பட்ட பிரச்சனைகள், அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதியாகி தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிர்ப்பந்தம்.

இவ்வாறு அவர் ஒருமுறை நான் வேலை செய்யும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பொழுது எனது உறவினர் ஒருவர் அவரினை போய்ப்பார்த்து வரும்படி வேண்டுகோள் விடுத்தார். வைத்தியராக வேலை செய்யும் பொழுது இவ்வாறன அன்புக்கோரிக்கைகள் சிலவேளைகளில் தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.

நான் அவரினை பார்வையிட சென்ற பொழுது வைத்தியசாலையின் கட்டிலின் அருகில் உள்ள சிறு அலுமாரியின் மேல் புதிய ஏழு நெஸ்டோமோல்ட் டின்கள் அடுக்கப்பட்டிருந்தன. நானும் என்னை அறிமுகப்படுத்தி அவரினை சுகம் விசாரிக்கும் பொழுது கேட்டேன். நீங்கள் நெஸ்டோமோல்ட் பாவிக்கக் கூடாது தானே என்று. அடுத்து அவர் கூறிய பதில் தான் ஆச்சரியத்தினை தந்தது. புதிதாக உள்ள நெஸ்டோமோல்ட் அனைத்தும் அவரது உறவினர்களும் மற்றும் அவரது அலுவலகத்தில் வேலை செய்யபவர்களும் தான் கொண்டுவந்தவை.  மேலும் அவர் கூறியதாவது தான் அவற்றினை பாவிப்பதில்லை என்றும் இவ்வாறு தன்னை பார்க்க வருபவர்கள் தருபவற்றினை தான் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மனிதனாக பிறந்துவிட்டால் நோய்வாய்ப்படுவதும் காயங்களுக்கு உள்ளாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளே. இவ்வாறே மனிதன் ஒருவன் வாழ்நாளில் ஒருமுறையாவது வைத்தியசாலை செல்லவேண்டிய தேவை ஏற்படும்.

எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை பார்வையிட செல்லும் பொழுது எவ்வாறான உணவு பொருட்களை அல்லது பால்மாவகைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவதில்லை. பலர் ஏனொதானோ என்ற வகையில் வெறுமனே கடமைக்காக எதாவது ஒரு பொருளினை வாங்கிக்கொண்டு செல்வார்கள். வேறுசிலர் இலகுவாக எந்த பொருள் கிடைக்கின்றதோ அதனை வாங்கிக்கொண்டு செல்வார்கள். சிலர் கணக்கு பார்த்து வாங்குவார்கள். மேலும் சிலர் பழவகை போன்றவற்றினை வாங்கிச்செல்ல அது கௌரவக்குறைவு என்று நினைக்கின்றனர். பெரும்பாலான  சந்தர்ப்பங்களில் நான் வாங்கிக்கொடுக்கும் உணவு அல்லது பொருட்களை நோயாளி பயன்படுத்துவாரா? என்று கூட நாம் சித்திப்பதில்லை. இதனால் நாம் செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராகவே போகும். தகுந்த பொருட்களை தெரிவுசெய்ய நாம் அதிகம் படித்திருக்க தேவையில்லை. நோயாளியின் நோய் பற்றி அறிந்திருந்தாலே போதுமானது. தேவையேற்படின் நோயாளியினை அல்லது அவர்களின் உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களின் தேவையினை கண்டறிந்துகொள்ளலாம்.

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

குறிப்பு – மேற்குறித்த நிறுவனங்களின் உற்பத்தியினை அல்லது நற்பெயரினை பாதிக்கும் நோக்கில் இப்பதிவு இடப்படவில்லை.

வீட்டிற்குள்ளும் வந்தது 5G

தற்போதைய தொழில் நுட்ப உலகில் இணையத்தின் வேகம் அதிகம் இருந்தால் மட்டுமே அதிக விடயங்களை இலகுவாக சாதிக்கலாம். இதன் பொருட்டு காலகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றில் இறுதியாக தொலைத்தொடர்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததே 5G தொழில்நுட்பம் ஆகும். தற்பொழுது இதனை விட மேலான மேலான தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் மிகவும் அதிக தூரம் இடையூறு இன்றி பயணம் செய்யும் ஆற்றல் அற்றவை. இதன் காரணமாகவே மேற்குறித்த 5G அலைகளை கடத்தும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மிக குறைந்த இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வலைகள் தொடர் மாடித்தொகுதிகளினுள் குறைவாகவே உட்செல்லும் அதன்காரணமாக பெரும்பாலான நேரங்களில் தொடர் மாடிகளில் வசிக்கும் மக்கள் குறைந்தளவான coverage இணை பெற்றுக்கொள்வர். இவ்வாறன பகுதிகளில் எமது கைத்தொலை பேசி வேலை செய்யும் பொழுது அதிகளவான கதிர்வீச்சினை காலும். இவற்றினை நிவர்த்தி செய்ய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தொடர் மாடிப்பகுதிகளில் அல்லது coverage குறைந்த பகுதிகளில் அதனை கூட்டும் முகமாக கருவி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வீடுகளில் உள்ளும் மக்கள் தங்கு தடையின்றி 5G வசதியினை அனுபவிக்க முடியும்.

இலங்கையில் தற்பொழுது 4.5G தொழில் நுட்பத்தினை வழங்கும் முகமாகவே இலங்கையின் பல பல பிரதேசங்களில் smart pole என்ற சிறிய கோபுரங்கள் நாட்டப்பட்டுள்ளன. கீழே உள்ள படங்களில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களை காணலாம்.

facebook_15624903826149118478306109136995.jpg

இவ்வாறான smart pole திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சூழலியல்வாதிகள் ஆகியோர் இலங்கையின் நகர்ப்புறங்களில் தொடர் மாடிகளின் மேற்பகுதியில் அதுவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு எதிராக ஒருபொழுதும் குரல் எழுப்பியதில்லை. கீழே உள்ள படத்தில் கொழும்பின் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை காணலாம்.

20190516_1809331477561231918233699.jpg

உயிரினை பறித்த ஊஞ்சல்

பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் சாதாரண ஊஞ்சல் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உயிர்களை பறித்துவிடும். இருதினங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஓர் துயர சம்பவம் பொகவந்தலாவ பிரதேசத்தில் நடைபெறுள்ளது. குறிப்பாக பெரியவர்கள் யாரும் அற்ற நிலையில் தனியே ஊஞ்சல் ஆடிய சிறுமியை இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் வருடம் ஒன்றில் சில சிறுவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவையே. ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன , எவ்வாறு இந்த சம்பவங்களை தடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.. ஊஞ்சல் ஆடுதல் என்பது தமிழரின் வாழ்வியலோடு இரண்டற கலந்த விடயம் ஆகும். தமிழரின் கடவுள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடியிருப்பர். வித்தியாசம் பாவித்த பொருட்கள் மாத்திரமே. எம்மில் பலர் அம்மாவின் சேலை, மாடு கட்டும் நைலான் கயிறு, பொச்சு கயிறு போன்றவற்றினை பாவித்து ஊஞ்சல் ஆடியிருப்போம். இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி எவ்வாறு இவ்மரணங்கள் நிகழுகின்றது? என்பதே.

சட்ட மருத்துவத்தில் இவ்வாறு நடைபெறும் மரணங்கள் தற்செயலாக தூங்கிய மரணங்கள்(accidental hanging) என்ற வகைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. உலகத்தில் இவ்வாறு பல மரணங்கள் சம்பவித்துள்ளமையினை உரிய விஞ்ஞான அறிக்கைகள் மூலம் அறியலாம். முக்கியமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பின்னணியினை பார்த்ததால் சிலவிடயங்கள் எமக்கு புலனாகும். அவையாவன
1. நீண்ட கயிற்றில் ஊஞ்சல் ஆடல் – ஊஞ்சல் கயிறு இலகுவாக முறுக்கி கழுத்தினை சுற்றுவதற்கான சந்தர்ப்பம் உண்டு
2. மேலும் கீழுமாய் (pendulum movement) ஆடாமல் ஒரே இடத்தில் இருந்து சுற்றுதல் – ஒரே இடத்தில் சுற்றுவதால் ஊஞ்சல் கயிறு இலகுவாக சுற்றுப்படும் மேலும் ஊஞ்சல் ஆடுபவரும் தலை சுற்றல் ஏற்பட்டு விழ அல்லது கயிற்றில் அகப்பட சாத்தியக்கூறு அதிகம் உண்டு

3. பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி அதிக நேரம் ஊஞ்சல் ஆடுபவர்கள்.

4. ஊஞ்சலில் இருக்காமல் நின்றுகொண்டு அல்லது படுத்திருந்து ஊஞ்சல் ஆடுபவர்கள்

5. முக்கியமாக இங்கு கழுத்தினை சுற்றி முடிச்சு வருவதில்லை மாறாக கயிறானது முறுக்கி இறுக்குவதே காரணம் ஆகும்.

இவ்வாறு ஊஞ்சல் ஆடும் பொழுது தன்னிச்சையாக கயிறு திரிந்து சிறுவர்களின் கழுத்து போன்ற பகுதிகளை இறுக்குவதை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்
1. ஊஞ்சலில் இருக்கை பகுதி கதிரை போன்றவற்றினால் அல்லது மரப்பலகையினை குறுக்காக வைத்து செய்தல் – இதன் காரணமாக கயிறு சிறுவர்களை நெருக்காது.
2. ஊஞ்சலில் மேலே கட்டிடப்படும் கயிறுகள் இரண்டும் குறித்த தூரத்தில் இருக்கத் தக்கவாறு கட்டல் அல்லது ஊஞ்சலில் மேற்பகுதியில் கயிறுகள் இரண்டுக்குக்கும் இடையில் பலகை ஒன்றினை வைத்து கயிறுகள் இரண்டினையும் ஒன்று சேராது தவிர்த்தல்.

3. பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளை ஊஞ்சல் விளையாட விடல்.
4. சிறுவர் பூங்காக்களில் காணப்படும் ஊஞ்சல் போன்று இரும்பு சங்கிலியால் ஆன ஊஞ்சலில் சிறுவர்களை விளையாட விடல்.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது சிறுவன் ஒருவனின் கழுத்து பகுதியானது இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்கள் இறுக்கப் பட்டு இருந்தாலே மூளை இறப்பு (hypoxic brain death) ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

எனவே சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடும் பொழுது பெரியவர்கள் ஆகிய நாம் அவதானமாய் இருப்போம், அநியாய உயிரிழப்புக்களை தடுப்போம் .

நன்றி

புகைக்கூடு அவசியம்தானா?

அது ஒரு சிறிய குடும்பம். அவர்களின் வசிப்பிடம் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஓர் தொடர்மாடி வீட்டுத்தொகுதி. கணவன் மற்றும் மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகம் மற்றும் இரு பிள்ளைகள். வேலைகாரி  என்று யாரும் இல்லை. அன்றும் அவள் அதிகாலை எழுந்த உடனேயே  சென்று தேநீர் தயாரிக்கும் நோக்குடன் சமையலறைக்கு சென்றாள் . அங்கு சமையலுக்கு பயன்படுத்தும் காஸ் வாசனை அவளது மூக்கை சிறிதளவு அரித்தது. அவளும் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு மின்சார சுவிட்ஸினை ஒன் பண்ணினாள். ஒருவினாடிதான் அவளின் உடை    மற்றும் சமையலறையில் இருந்த துணி மற்றும் பொலித்தீன் பைகள் போன்றவற்றில் நெருப்பு பற்றிக்கொண்டது. அவள் அவலக் குரல் எழுப்பினாள். கணவன் மற்றும் பிள்ளைகள் தீயினை பகீர பிரயத்தனத்தின் பின்னர் அணைத்தனர். வைத்தியசாலையில் அவள் அனுமதிக்கப்பட்ட பொழுது தீ அவளது உடலின் மேற்பரப்பின் 70 சதவீதத்தினை (Total Body Surface Area) இல்லாமல் செய்திருந்தது. ஒரு சில நாட்கள் அதிதீவிர சிகிச்சையின் பின்னர் அவள் இறந்தாள்.

சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரிலிருந்து காஸ் கசிவடைந்து வெளியேற பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. பெரும்பாலும் இரவில் சமையலறையில் யாரும் இல்லாத பொழுது வாயு கசிவினை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் மேலும் இரவு வேளைகளில் யன்னல்கள் யாவும் பூட்ட பட்ட நிலையில் கசிவடையும் வாயு ஆனது அறையில் தேங்கி நிற்கும்.இவ்வாறு தேங்கி நிற்கும் வாயு ஆனது துணி, ஈரமான பொருட்கள் போன்றவற்றுடன் பௌதிக ரீதியாக இணைந்திருக்கும். இவ்வாயுவானது மின்சார ஆளிகளை செயற்படுத்தும் பொழுதும், சிகரெட் லைட்டரினை பற்ற வைக்கும் பொழுதும், வாயு அடுப்பினை பற்ற வைக்கும் பொழுதும் உண்டாகும் மிகச்சிறிய தீப்பொறி காரணமாக தானாகவே தீப்பற்றி எரியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் யன்னல் மற்றும் கதவினை திறந்து காற்றோட்டத்தினை ஏற்படுத்தி தேங்கிய வாயுவினை வெளியேற்ற வேண்டும் அல்லது ஐதாக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை பின்னரே ஆராய வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில் பலர் தமது நவீன வடிவமைப்பில் வீடுகளை கட்டும் பொழுது சமையலறையில் புகை போக்கிகளை வைப்பதில்லை அதற்கு  அவர்கள் கூறும் காரணம் எரிவாயுவிலும் மின்சாரத்திலும் சமைக்கும் பொழுது புகை வாராது தானே என்பது தான். உண்மைதான், ஆனால் இவ்வாறு எரி வாயு கசிவு நிகழும் பொழுது புகை போக்கிகள் தேங்கிய எரி வாயுவினை வெளியேற்ற அல்லது ஐதாக்க பெரிதும்  உதவும்.

தமிழரின் வாழ்வியலோடு புகைக்கூடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது புக்காரா வரும் பொழுது ஓடி பதுங்கிய இடமும் அது தான், கள்ளவன் வீட்டுக்குள் நுழைவதும் அதனால் தான், முன்னோர் விதை தானியங்களை கட்டி சேமித்து வைப்பது அது தான். தமிழ் பிரதேசங்களில் நான் அவதானித்த விடயம் யாதெனில் பெரும்பாலான வீடுகளில் சமையலறையில் GAS குக்கர் ஆனது புகை போக்கியின் (புகைக்கூடு ) கீழ் அல்லாது வேறு ஒரு இடத்தில் தொழில் படுநிலையில் இருக்கும். இந்நிலை வாயுக்  கசிவின் பொழுது ஆபத்தினை விளைவிக்க கூடியது. இன்னொரு சந்தர்ப்பத்தில் gas  குக்கர் இல் எவ்வாறு எரிவாயு கசிவு ஏற்படுகின்றது அதனை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி குறிப்பிடுகின்றேன்.

மேலே உள்ள வீடியோவில் கசிந்துள்ள வாயு எவ்வாறு பற்றி எரிந்து ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை பார்க்கவும். (ஆரம்பத்தில் விபரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இங்கு காட்டப்பட்ட விடியோவிற்கும் தொடர்பில்லை, ஆனால் அதனை ஒத்த ஓர் சம்பவம்)