சமீபத்திய காலங்களில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது மேலும் அண்மைக்காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் போதைப்பொருளினை பாவித்து கொண்டிருக்கும் பொழுதே அதாவது ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருக்கின்ற பொழுது அல்லது மூக்கின் ஊடாக நுகர்ந்துகொண்டிருக்கின்ற பொழுது இறக்கின்ற நிகழ்வுகள் கூட சர்வசாதாரணமாகிவிட்டது. இப்பதிவில் ஏன் இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி விளக்கப்படுகின்றது
- போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஒருபொழுதும் தூய போதைப்பொருளினை விநியோகிக்க மாட்டார்கள். அவர்கள் பெருமளவு இலாபம் கருதி ஒரு போதைப்பொருளினுள் இன்னொரு போதைப்பொருளினை அல்லது வேறுவகையான பொருட்களை (cutting) கலந்து விற்பார்கள். இனி விடயத்திற்கு வருவோம் இவ்வாறு இலாப நோக்கம் கருதி கலக்கப்படும் பொருட்கள் (Adulterants) பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை உடையன சில சந்தர்ப்பங்களில் அவை பாவனையாளருக்கு கடுமையான ஒவ்வாமையினை (Anaphylactic shock) ஏற்படுத்தி இறப்பினை உடனடியாகவே ஏற்படுத்தும்.
- மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை கலந்து பாவிக்கும் போது ஒன்றின் விளைவினை மற்றைய போதைப்பொருள் தூண்டும் இதன் காரணமாக போதையின் விளைவு அதிகமாகி இறப்பினை உடனடியாக ஏற்படுத்தும். உதாரணமாக பின்வரும் போதைப்பொருட்களின் சேர்க்கை தீங்கானதாக அமையும்
மதுபானம் + ஓப்பியம்
கொக்கையின் +கெரோயின்
மதுபானம் + கொக்கையின்
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறித்த போதைப்பொருட்கள் குறைந்த அளவில் இருந்தாலும் மற்றைய போதைப்பொருளின் ஒத்த தாக்கத்தினால் அதன் விளைவு கூட்டப்பட்டு இறப்பு ஏற்படும்.
3. எமது உடலில் ஒவ்வொரு போதைப்பொருளும் இரத்தத்தினுள் சென்று நரம்புத்தொகுதியில் அதற்குறிய உணர்வேற்பிகளில் (Receptors) இணைந்து தொழிற்படுவதன் காரணமாகவே எமது மனித உடலில் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. உணர்வேற்பிகளின் எண்ணிக்கை மனிதன் ஒருவனின் மருந்து அல்லது போதைப்பொருள் பாவனைக்கு ஏற்ப கூடும் அல்லது குறைவடையும். மேலும் ஒருவர் போதைப்பொருளினை தொடர்ச்சியாக பாவிக்கும் போது அவரின் உடலில் உணரவேற்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதன் காரணமாக நீண்ட காலப்போக்கில் குறித்த அளவிலான போதைப்பொருள் மூலம் அவர் திருப்தியினை அடைய முடியாமல் இருக்கும் (Tolerence) இதன் காரணமாக அவர் சிறிதுசிறிதாக போதைப்பொருளின் அளவினை அதிகரிப்பார். இவ்வாறு காலப்போக்கில் ஒருவர் போதைப்பொருளிற்கு அடிமையாகிவிடுவார்
பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருக்கும் பொழுது அவர்களின் உணர்வேற்பிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் (Receptor Down-Regulation) இந்நிலையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருந்து விட்டு திடீர் என்று முன்னைய அளவில் பாவிக்கும் பொழுது குறித்த போதைப்பொருளானது அவர்களின் உடலில் நஞ்சாதலை (Toxicity) ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. போதைப்பொருட்களின் நேரடி விளைவின் காரணமாக உதாரணமாக ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் நேரடியாகவே மூளையின் உணரவேற்பிகளில் தொழிற்பட்டு எமது சுவாசத்தினை குறைக்கும் . மேலும் கொக்கைன் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் எமது இருதய சுற்றோட்டத்தொகுதியினை அளவுக்கு அதிகமாக தூண்டும் இதன் காரணமாக இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து சடுதியான இருதய செயலிழப்பு அல்லது மூளையில் இரத்த கசிவு ஏற்படும். இதன் காரணமாக மரணம் சம்பவிக்கும்.
5. ஏற்கனவே கூறியவாறு போதைப்பொருட்களில் பல்வேறு விதமான பொருட்கள் கலக்கப்படும். பல சந்தர்ப்பத்தில் போதையினை மேலும் அதிகரிக்கும் முகமாக fentanyl போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட வீரியம் மிக்க ஓபியம் வகை மருந்துகள் அளவு கணக்கு இன்றி பாவனையாளருக்கு தெரியாத வகையில் சேர்க்கப்படும். இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படுகின்றது. fentanyl என்பது மருத்துவ துறையில் பாவிக்கப்படும் ஓர் வலிநிவாரணி மருந்தாகும் அங்கு வைத்தியரின் கண்காணிப்பில், உரிய அளவில் பாவிக்கப்படுவதினால் இறப்புக்கள் ஏற்படுவது குறைவு. fentanyl ஆனது ஹெரோயினை விட 30-50 மடங்கு வீரியம் மிக்கது அத்துடன் மோபினை (morphine) விட 100 மடங்கு வீரியம் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி





















