மதுபானம் + கண் = விபத்து

உலகளாவிய ரீதியில் நடைபெறும் வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபான பாவனையின் காரணமாகவே நடைபெறுகின்றது என்றால் மிகையல்ல. ஐக்கிய அமெரிக்காவில் ஒவ்வொரு 52 நிமிடங்களுக்கும் ஒரு நபர் மதுபானத்தினால் ஏற்படும் வீதி விபத்தினால் இறக்கின்றனர். மதுபானம் ஆனது வெவ்வேறு செறிவுகளில் மனித உடலில் வெவ்வேறு உடலியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள சட்ட திட்டங்கள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் உள்ள ஆகக் கூடிய மதுபான (எதைல் ஆல்கஹால்) அளவினை வெவ்வேறு அளவில் வரையறுத்து உள்ளன. சில நாடுகள் வீதியில் வாகனத்தினை செலுத்துவதற்கு மனித உடலில் இருக்க வேண்டிய மதுபான அளவினை பூச்சியமாகவே வைத்துள்ளன. இலங்கையில் ஒருவர் வாகனத்தினை வீதியில் செலுத்தும் பொழுது அவரது உடலில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய மதுபானத்தின் அளவு 80mg/100ml ஆகும். அதாவது மதுபானத்தின் அளவு 80mg/100ml இணை விட கூடுதலாக இருந்தால் அவர் வீதி போக்குவரத்து சட்ட திட்டங்களின் பிரகாரம் அவர் குற்றவாளி ஆகின்றார். விபத்து கட்டாயம் நடைபெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் நடைபெறும் வீதி விபத்துக்களுக்கு பெரும்பாலானவை மதுபான பாவனையினால் ஏற்படுகின்றது என்றால் அது மிகையல்ல. ஆனால் எம்மில் பலருக்கு எவ்வாறு மதுபானம் ஆனது எமது கண்ணினை அதாவது பார்வையினை பாதித்து வீதி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி தெரிவதில்லை. இப்பதிவானது மதுபானம் அருந்திய ஒருவரின் கண்ணில்  மதுபானம் ஆனது எவ்வாறான விளைவுகளை உண்டுபண்ணி விபத்துக்களுக்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றது 

ஒருவர் மதுபானத்தினை அருந்தி ஒருசில மணித்தியாலங்களில் பின்வரும் மாற்றங்கள் கண்களில் ஏற்படும்

1. மதுபானம் ஆனது எமது கண்ணினை தாங்கி கண்ணின் அசைவுகளுக்கு உதவும் தசைகளை பலவீனப்படுத்தி  ஒருங்கமைந்த அசைவுகளை பாதிக்கும்      இதன் காரணமாகபொருட்கள் தெளிவற்றதாகவும் சில சந்தர்ப்பங்களில் இரட்டை பொருட்களாவும் (double vision) தென்படும். சில சந்தர்ப்பங்களில் வீதியின் கரையோரங்களில் இருக்கும் அல்லது பயணிக்கும் வாகனங்கள் தெரிவதில்லை. இவ்வாறான நிலை tunnel vision என்றழைக்கப்படும். இது ஓர் ஆபத்தான நிலை ஆகும் இதனால் விபத்துக்கள் நிச்சயம் ஏற்படும். மேலும் மதுபான பாவனையின் பின்னர் கண் ஆனது கட்டுப்பாடு இன்றி அசையும் நிலையும் (Nystagmus) ஏற்படலாம் இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.  

2. மேலும் மதுபானம் ஆனது கண்ணில் இருந்து மூளைக்கு கணத்தாக்கசெய்தி  கடத்தப்படும் நேரத்தினை அதிகரிக்கும் இதன்காரணமாக மதுபானம் அருந்திய சாரதி உடனடியாக (ஒரு சில மில்லி செக்கன்களில்) திறம்பட செயற்பட மாட்டார்.

3. மேலும் மதுபானம் அருந்திய சாரதியின் கருவிழியானது (Iris ) உடனடியாக சுருங்கி  தொழிற்பட மாட்டாது இதன் காரணமாக மதுபானம் அருந்திய சாரதி அதிக வெளிச்சத்திற்கு உட்படும்  அவரின் கருவிழியானது உடனடியாக தொழில் படாது இதன்காரணமாக எதிரே வரும் பொருளினை தெளிவாக பார்க்க முடியாத நிலைமை (accommodation reflex) ஏற்படும். இதன் காரணமாக விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும்.

4. பார்வை திறன் குறைவடைவதன் காரணமாகவும் (decreased visual acuity) மதுபானம் எமது மூளையில் சோர்வினை உண்டு பண்ணுவதாலும் வாகன சாரதியினால் மிக திறம்பட செயற்பட முடியாது. இதன் காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கும்.

5. சிலருக்கு அதிகளவு மதுபானம் அருந்திய பின்னர் அவர்களின் கண் மடலானது துடிக்கும் (myokymia) இதன் காரணமாக பார்வை சடுதியாக மறைக்கப்படுவதினால் விபத்து ஏற்படும்.

6. மேலும் மதுபானம் ஆனது கண்ணின் கண்ணீர் சுரப்பினை குறைக்கும் இதன் காரணமாக மதுபான பாவனையின் பின்னர் கண் இலகுவில் வரட்சியடையும் இதனால் சாரதியானவர் இலகுவில் கண்யர்ந்து விடுவார்.   

Alcoholic Eyes

இது தவிர நீண்ட காலமாக மதுபானத்திற்கு அடிமையான ஒருவருக்கு விழித்திரையில் மற்றும் கண்ணின் நரம்பு (Optic neuropathy ) பகுதிகளில் மதுபானமானது பல்வேறு மாற்றங்களை உண்டு பண்ணி பார்வையினை குறைக்கும். மேலும் நீண்ட காலமாக குடிப்பவர் ஒருவருக்கு விட்டமின் B1 மற்றும் விட்டமின் A  போன்ற குறைபாடுகள் ஏற்படும் இதன் காரணமாகவும் அவர்களின் பார்வை குறைவடையலாம்.

முற்றும்

சர்ச்சைக்கு உள்ளாகும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள்

அண்மைக்காலங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் பின்னர் மரணம் அடைந்தவர்களின் மரணத்திற்கான காரணங்கள் மற்றும் மரணம் ஏற்பட்ட சூழ்நிலைகள் ஆகியன பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன.

எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சையின் பின்னர் மரணம் அடைபவர்கள் குறித்த நோயின் காரணமாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ இறத்ததாகவே நினைப்பார்கள். பெரும்பாலானவர்கள் மருத்துவ தவறின் காரணமாக ஒருவர் இறக்கலாம் என்பதினை மறந்து விடுகின்றனர். சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஒருவர் இறப்பார் எனில் அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றினை பார்ப்போம்

1. ஒருவருக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலை சத்திர சிகிச்சையின் பின்னர் மோசமடைதல் காரணமாக இறப்பு ஏற்படலாம் . உதாரணமாக மாரடைப்பு வந்த நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சையின் பிற்பாடு மாரடைப்பு வந்து இறப்பு ஏற்படலாம்.

2. வைத்தியசாலையில் தங்கி இருக்கும் பொழுது டெங்கு, கொரோனா போன்ற புதிதாக  தொற்று நோய்கள் ஏற்பட்டு சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம்.

3. சத்திர சிகிச்சையின் பொழுது ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள் காரணமாக இறப்பு ஏற்படலாம். உதாரணமாக சில சத்திர சிகிச்சைகளின் பொழுது ஏற்படும் அதீத குருதி பெருக்கு ஏற்பட்டு சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம். இவ்வாறு உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும்  சத்திர சிகிச்சைகள் பொதுவாக அரசாங்க வைத்திய சாலைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் தனியார் வைத்திய சாலைகளில் இவ்வாறான சத்திர சிகிச்சைகள் வருமானம் கருதி மேற்கொள்ளப்படுகின்றது என்பது பலருக்கு தெரிவதில்லை.

4. சத்திர சிகிச்சையின் பொழுது ஏற்படும் மருத்துவ தவறுகள் காரணமாக சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம்.

5. சத்திர சிகிச்சையின் பொழுது வழங்கப்படும் உணர்வு அழிவியல் சிகிச்சை காரணமாகவும் சத்திர சிகிச்சையின் பிற்பாடு இறப்பு ஏற்படலாம். இதன் காரணமாகவே குறித்த நோயாளி குறித்த வகையான  உணர்வு அழிவியல் சிகிச்சை முறைக்கு தகுதி வாய்ந்தவரா என சத்திர சிகிச்சைக்கு முன்னர் வைத்திய நிபுணர்கள் ஆராய்வார்கள்.

6. சத்திர சிகிச்சையின் பின்னர் குறித்த நோயாளி நீண்ட காலம் படுத்த படுக்கையாகவும் அறிவற்ற நிலையிலும், செயற்கை சுவாச உதவியுடனும் காணப்படும் பொழுது ஏற்படும் சிக்கல் நிலைமைகள் (Complications) காரணமாக இறப்பு ஏற்படலாம்.

7. காயங்களுக்கு உள்ளாகி சத்திர சிகிச்சை பெற்ற நபர் அந்த காயங்களின் விளைவு காரணமாகவும் இறக்க நேரிடலாம்.

8. சத்திர சிகிச்சையின் பொழுது வழக்கப்படும் மருத்துகள் ஒவ்வாமையின் ஏற்படுத்துவத்தினாலும்  சத்திர சிகிச்சையின் பொழுது அல்லது அதன் பின்னர் இறப்பு ஏற்படலாம்.

Post-surgical death more likely after hospital discharge - UPI.com

எனவேதான் சத்திர சிகிச்சைக்கு பின்னரான இறப்புக்களில் ஏன் இவ்வாறான இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து ஆராயவேண்டிய தேவை உள்ளது. இதனை விடுத்து சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள் எல்லாம் இயற்கையான நோய் நிலைகளினால் அல்லது காயங்களினால் ஏற்படும் என்று எண்ணுவது தவறு. பல சந்தர்ப்பங்களில் வைத்தியர்கள் இவ்வாறு சத்திர சிகிச்சைக்கு பின்னராக ஏற்படும் மரணங்களை ஆராய விரும்புவதில்லை. அதன் காரணமாக “இவரின் மரணத்தில் சந்தேகம் இல்லை” என உறவினரிடம் கையெழுத்து வாங்கி இறந்தவரின் உடலை விடுவிப்பார்கள். இது முற்றிலும் ஓர் தவறான செயற்பாடு ஆகும். மேலும் சத்திர சிகிச்சைக்கு பின்னரான மரணங்கள் சத்திர சிகிச்சையின் பொழுது அல்லது பின்னரான ஒரு மாதத்தில் கூட நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கையில் இவ்வாறு மருத்துவ தவறு காரணமாக சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்படும் இறப்புக்கள் குறித்து தெளிவான எந்தவொரு புள்ளி விபரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

உயிரை பறிக்கும் சட்ட விரோத கருக்கலைப்புகள்

இலங்கையின் சட்டங்களின் படி பெண்ணொருவர் தனது கருவினை நினைத்த மாத்திரத்தில் மற்றைய நாடுகளில் நடைபெறுவது போல் இலகுவில் கலைத்து விட முடியாது. இலங்கையில் தாயாரின் உயிருக்கு ஆபத்து என வைத்தியர்கள் சிபாரிசு செய்யும் இடத்து மட்டுமே அரசாங்க வைத்திய சாலைகளில் சட்ட ரீதியாக கருக்கலைப்பினை மேற்கொள்ள முடியும். ஆனால் சட்ட விரோதமான ரீதியில் கருக்கலைப்புக்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் நாளாந்தம் 650 தொடக்கம் 1000 வரையான இவ்வாறான கருக்கலைப்புகள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாரால் இவ்சட்ட விரோத கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது? பெரும்பாலும் வைத்தியர்கள், தாதியர், வைத்திய சாலை சிற்றுளியர் போன்றோரினாலும் பாரம்பரிய வைத்தியர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள ஒருசில ?அனுபவம் வாய்ந்த நபர்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் சட்ட விரோத கருக்கலைப்பினால் (பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்) கணிசமான அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. வருடந்தோறும் 73 மில்லியன் கருக்கலைப்புகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றன, இவற்றில் ஒவ்வொரு 100,000 கருக்கலைப்புக்களுக்கும் 30 பெண்களின் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் வடமாகாணத்தில் குறிப்பிடத்தக்க இவ்வாறானஉயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன அது தவிர சட்ட விரோத கருக்கலைப்பினால் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல பெண்கள் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளனர்.

Inside the illegal abortion market - The Namibian


சட்டவிரோத கருக்கலைப்பின் பொழுது அதீத குருதி பெருக்கு மற்றும் கருப்பை கழுத்து அதிகம் விரிவடையும் பொழுது இருதய துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடனடியான உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இது தவிர கிருமித்தொற்று காரணமாகவும் உடலில் ஏனைய அங்கங்கள் செயலிழப்பதினாலும் பிந்திய உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இவை தவிர நீண்ட காலப்போக்கில் குறித்த பெண் மீண்டும் கருத்தரிக்க தவறுகின்றமை மற்றும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றமை ஆகியவை ஏற்படுகின்றன.
இலங்கை போன்ற நாட்டில் சட்ட ரீதியான கருக்கலைப்பு நடைமுறையில் இல்லை என்பதினால் இவ்வாறு சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சட்டவிரோத கருக்கலைப்பினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு கருத்தடை சாதனங்களை பாவித்து கருவானது உருவாகாமல் இருக்கச் செய்வதே சிறந்த செயற்பாடு ஆகும்.

முற்றும்

தற்கொலை தீர்வாகுமா?

இன்றைய நாட்களில் தமிழர் பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு தற்கொலை மூலம் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதில் பதின்ம வயதினர் தொடக்கம் முதியவர்கள் வரை உள்ளடங்குகின்றனர். தற்கொலை முயற்சியின் பொழுது பலர் காப்பாற்றப்பட்டு இருக்கின்றார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.  தற்கொலை செய்யும் ஒவ்வொருவரும் தெரிவிக்கும் காரணங்கள் பெரும்பாலும்  அற்பத்தனமானவை.  ஒருவர் தற்கொலை செய்தவுடன் சமூக ஊடகங்கள், உற்றார் மற்றும் உறவினர் குறித்த காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கருதுவார்கள். இங்குதான் நாம் தோல்வி அடைகின்றோம் அல்லது பிழையான திசையில் பயணிக்கின்றோம் ஏனெனில் ஓர் தற்கொலைக்கு   பல்வேறுபட்ட ( தனிநபர், சமூக, கலாச்சார மற்றும் குடும்ப) காரணிகள்  ஏதுவாகின்றன அவ்வாறான நிலையில் நாம் காரணி  ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு திருப்தி அடைகின்றோம். மேலும் ஓர் தற்கொலை மரணம் நிகழும் இடத்து அதனை விரிவாக ஆராய்ந்து அவ்வாறான தற்கொலை  மரணங்களை தடுக்கும் பொறிமுறை ஒன்று இலங்கையில் உருவாக்கப்படவில்லை இவ்வாறான காரணங்களினால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நிச்சயம் எதிர்காலத்தில் அதிகரித்து செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவேதான் நாம் சிறுவர் பராயத்தில் இருந்தே அவர்களின் மனதில் மனவைராக்கியத்தினை வளர்க்க வேண்டும். இதில் பெற்றோர், ஆசிரியர், மதகுருமார் , சமூகத்தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் முக்கிய பங்காற்ற  வேண்டும்.

How to Cope with Suicidal Thoughts | The Light Program

பெற்றோர்கள் சிறுவயதுமுதலே தமது பிள்ளைகளை சிறிதளவேனும்  கடின முயற்சிகளில்  ஈடுபட  விடல், விளையாட்டில் ஈடுபட அனுமதிப்பதன் மூலம் தோல்வியினை ஏற்கும் மனப்பாங்கினை வளர்த்தல் மற்றும் தோல்வியில் இருந்து மீண்டெழும் திறனை வளர்த்தல்  , மனநெருக்கடியான சூழ்நிலைகளில்  தகுந்த தீர்மானம் எடுக்கும் திறனை வளர்த்தல், நிஜ வாழ்க்கைக்கும் திரை வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாட்டினை உணர வைத்தல், உறவினர் மற்றும் நண்பர்களிடையே உறவு கொண்டாடல், புகைத்தல்  மற்றும் போதை அற்ற வாழ்க்கை, பெற்றோரின் அன்பான அரவணைப்பு   போன்ற வாழ்க்கைக்கு தேவையான பல்வேறுவகையான திறன்களை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்ப்பதன் மூலம் அவர்களின் வாழ்வினை மேம்படுத்தலாம்.

எமது கலாச்சாரத்தில் பெண் அல்லது ஆண் ஒருவர் மிக்க துயரத்தில் இருக்கும் பொழுது அல்லது தான் தற்கொலை செய்ய உள்ளதாக கூறும் பொழுது எம்மில் பலர் அதனை கருத்தில் கொள்வதில்லை மேலும் சிலர் எள்ளி நகையாடவும் செய்வார்கள், நிச்சயம் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் தற்கொலைகளை தடுப்பதில் முக்கிய பங்காற்றவேண்டும். மேலும் தற்கொலை சம்பந்தமான செய்திகளை   வெளி   வெளியிடும் பொழுது உரிய ஊடக ஒழுக்கவியலை கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடவேண்டும். மாறாக தற்கொலைகளை தடுப்போம் என்ற தொனிப்பொருளில் தற்கொலைகளை தூண்டும் அல்லது முன்னுதாரணப்படுத்தும் செய்திகளை வெளியிடல் நன்றன்று.

 முற்றும்

அதிக தோப்புக்கரணங்கள் உயிரிழப்பினை ஏற்படுத்துமா?

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 13 வயது மாணவி பள்ளிக்குத் தாமதமாக வந்ததை காரணமாகக் கொண்டு, பள்ளி நிர்வாகம் அவருக்கு கடுமையான தண்டனையை வழங்கியது. அவர் சுமந்திருந்த புத்தகப் பையை முதுகில் வைத்தபடியே 100 முறை தோப்புக்கரணம் செய்ய பள்ளி கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியில் கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலியுடன் வீடு திரும்பிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் மரணத்தினை தழுவினார்.

இவ்வாறே சில வருடங்களுக்கு முன்னர் யாழ் குடாநாட்டு பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர், மாணவன் ஒருவருக்கு 200 தடவைகள் தோப்புக்கரணம் போடும் படி தண்டனை வழங்கியமை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றது. பல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இது என்ன தண்டனை, நாம் போடாத தோப்புக்கரணமா என குசுகுசுத்து கொண்டனர். நாம் ஏன் இவ்வாறன அதிக உடலியல் ரீதியான தண்டனைகளை எதிர்க்க வேண்டும் என்பது பற்றி இப்பதிவு ஆராய்கின்றது. பல வருடங்களுக்கு முன்னர் பேராதனை பல்கலை கழக மாணவன் வரப்பிரகாஷ் என்பவர் இவ்வாறான ஓர் காரணத்தினாலேயே இறக்க நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்மில் பலருக்கு அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது தெரியாது. முக்கியமாக வழங்கும் நபர்களுக்கு கூட அவ்விடயம் தெரியாது அதன் காரணமாகவே அவர்களும் இறப்புக்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
இப்பதிவில் அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் எவ்வாறு சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.


அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்கள் போடும் பொழுது அவர்களின் வன்கூட்டு தசைகள் அழிவடைய ஆரம்பிக்கும். இச்செயற்பாடு மருத்துவரீதியில் Exertional Rhabdomyolysis (ER) என்றழைக்கப்படும். இதன் பொழுது எமது கை மற்றும் கால் போன்றவற்றில் உள்ள தசைகளில் இருந்து பின்வரும் நச்சு பதார்த்தங்கள் creatine kinase (CK),  myoglobin (Heme/Iron) எமது இரத்த சுற்றோடடத்தினுள் விடுவிக்கப்படும். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தி சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தி இறுதியாக இறப்பினை ஏற்படுத்துகின்றது. இப்பதார்த்தங்கள் ஏற்கனவே எமது உடலில் இருந்தாலும் அவை கலங்களினுள் சேமிக்கப்பட்டிருப்பதினால் அது சிறுநீரகத்திற்கு நச்சு தன்மையினை உண்டு பண்ணுவதில்லை.
சாதாரணமாக தீவிர உடல் வேலை செய்யும் பொழுது எமது உடலில் சேதமடையும் தசைநார்கள் புதுப்பிக்க குறித்த கால அவகாசம் தேவை. ஆனால் மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான தோப்புக்கரணங்களை தொடர்ச்சியாக போடும் பொழுது அவர்களுக்கு தசை அழிவடைந்து சிறுநீரக செயலிழப்பு எற்பட்டு இறப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

Understanding kidney failure caused by complications of muscle injuries -  Keio Research Highlights

மேலும் விஞ்ஞான ரீதியில் குறித்த மாணவருக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான தோப்பு கரணங்கள் தான் பாதுகாப்பானது அதனை மீறி அதிகரித்த எண்ணிக்கையில் செய்யும் பொழுதே சிறுநீரக பாதிப்பு வரும் என்று எவ்விதமான கணிப்பும் இல்லை.
இலங்கையில், கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவேதான் ஆசிரியர்கள் வேறுவழிகள் மூலம் மாணவரினை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.

முற்றும்

35000 கண்கள் பலவந்தமாக தோண்டி எடுக்கப்பட்டனவா?

அண்மையில் பாக்கிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மத நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரியூட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அந்த நாட்டினை சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் இலங்கையில் இருந்து தமது நாடு 35,000 கண்களை தானமாக பெற்றதாக தெரிவித்தார். இந்த கருத்தானது பல சர்ச்சைகளை கிளப்பியது. ?படித்த பலரும் இது எவ்வாறு இலங்கையினால் சாத்தியம் ஆனது என்று கேள்வி எழுப்பினார்கள். இன்னும் ஓர் சிலர் ஒருபடி மேலே சென்று தமிழர்களின் கண்கள் பலவந்தமாக தோண்டப்பட்டு இவ்வாறு விற்கப்பட்டதா? என்ற தோரணையில் கேள்விகளை எழுப்பினார்கள்.

7 THINGS YOU DIDN'T KNOW ABOUT EYE DONATION | Prasad Netralaya

இது சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் வருமாறு

1. இலங்கையின் வட கிழக்கு பகுதிகளை விட தென்னிலங்கையில் அதிகளவான மக்கள் கண்களை தானம் செய்கின்றனர். இதனை புள்ளிவிபரங்கள் மூலமும் வைத்திய துறை சார்ந்தவர்கள் மூலமும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக ஓர் நபர் இறப்பின் அவரிடம் இருந்து உறவினர்களின் சம்மதத்தினை பெற்று கண்களை தானமாக பெறலாம். தென்னிலங்கையின் சட்டவைத்திய அதிகாரி அலுவலகங்களில் இச்செயற்பாடு சர்வசாதாரணமாக நிகழும் ஆனால் வட இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அறவே நடைபெறுவதில்லை.

2. கண் தானத்தின் பொழுது கண் முழுவதுமாக தோண்டி எடுக்கப்படுவதில்லை மாறாக விழிவெண்படலம் என்ற பகுதியே எடுக்கப்படுகின்றது. இவ்வாறு எடுக்கப்படும் பொழுது கூட முகத்தில் விகாரம் ஏற்படாதவாறு கூடிய கவனம் எடுக்கப்படும்.

3.  கண் ஆனது தகுந்த பயிற்சி பெற்ற தொழில் நுட்பவியலாளர்களினால் தான் கண் தானத்திற்காக எடுக்கப்படும். சாதாரண நபர் ஒருவரினால் இது சாத்தியம் அற்றது.

4. இறந்த பின்னர் குறித்த சில மணி நேரங்களில் கண்களை தானமாக பெறவேண்டும் அத்துடன் அவற்றினை குறித்த இரசாயன பொருளில் இட்டு பாதுகாக்க வேண்டும்.

5. இலங்கையில் கண் தானத்தினை ஒழுங்கமைக்கும்  இலங்கை கண் தான சங்கம் ஆனது 1967 ஆண்டில் இருந்து 83200 விழிவெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது.இவற்றில் பெருமளவானவற்றை பாக்கிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது அதாவது 40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறே 35000 விழிவெண்படலங்களை பாக்கிஸ்தான் பெற்றது.

குறிப்பு: கடந்த காலத்தின் பொழுது இலங்கையின் பல பகுதிகளில் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சில சந்தர்ப்பங்களில் முண்டங்களாகவும் கண்கள் அற்ற நிலையிலும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

முற்றும்

போலீசாரினை கண்டதும்..


அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களில் வீதிப்பாவனையாளர்கள் குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஒட்டியான இளைஞர்கள் வீதிப்போக்குவரத்து விதிகளை மீறி பிரயாணம் செய்யும் சந்தர்ப்பங்களில் தீடீர் என்று போக்குவரத்து போலீசாரினை கண்டதும் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை அல்லது வாகனத்தினை செலுத்துகின்றனர். இதன்காரணமாக பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நிறுத்திவைக்கப்பட்ட வாகனம் அல்லது மரம் போன்றவற்றில் மோதி காயமடைகின்றனர் அல்லது பரிதாபகரமான முறையில் மரணம் அடைய நேரிடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் போலிஸாரினால் கைது செய்யப்பட்டு நைய புடைக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்களின் வாகனமும் பலத்த சேதம் அடைகின்றது. ஒட்டு மொத்தத்தில் இவ்வாறு ஏற்படும் இழப்பு ஆனது போக்குவரத்து விதி மீறலுக்காக செலுத்த வேண்டிய குற்ற பணத்தினை விட பல மடங்கு அதிகமானது ஆகும். இளைஞர்கள் இவற்றினை ஆராய்ந்து பார்க்க மறுப்பதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது. எனவே இளைஞர்கள் போக்குவரத்து போலீசாரினை கண்டதும் ஓட வேண்டியதில்லை.

போலீசாரின் சமிக்கையினை மீறி பயணம் செய்த இளைஞர் ஒருவன் போலீஸாரினால் தாக்கப்படும் காட்சி


பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு அகப்படும் இளைஞர்கள் குற்ற தொகையினை விட குறைவான பணத்தினை பொலிஸாருக்கு இலஞ்சமாக வழங்கி பிரச்சனைகளை முடித்துக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. எனவேதான் நீங்கள் போக்குவரத்து விதியினை மீறி பயணிப்பவராயினும் போலீசாரினை கண்டதும் ஓடாதீர்.

முற்றும்

சிறுமியின் பரிதாப மரணம்

அந்த குழந்தைக்கு வயது இரண்டு  தான். அன்று மாலை அந்த சிறுமி அவளது உறவினர்கள் கொண்டுவந்திருந்த பலகாரங்களை உண்டு கொண்டிருந்த பொழுதுதான் அந்த விபரீத சம்பவம் நடைபெற்றது. அவள் உண்ணும் பொழுது பலகாரத்தின் துண்டு ஒன்று அவளது தொண்டையின் வாதநாளி (சுவாச குழாய் ) பகுதியில் இறங்கி சிக்கிக் கொண்டது. குழந்தை துடிதுடித்து அலறியது. உடனே உறவினர் ஒருவர் குழந்தையின் வாயினை பலவந்தமாக திறந்து தனது விரலினை உள்நுழைந்து சிக்கிய பலகாரத் துண்டினை எடுக்கும் முகமாக துளாவினார். துரதிஸ்ட்ட வசமாக பலகாரத் துண்டு வெளியில் வருவதற்கு பதிலாக மேலும் சுவாச குழாயினுள் சென்று செருகிக் கொண்டது. அடுத்து ஐந்து நிமிடங்களில் நடந்த துயர சம்பவங்களினை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இறுதியில் குழந்தை மரணத்தினை தழுவிக்கொண்டது.

சிறுவர்களின் நரம்புத் தொகுதி முற்றாக விருத்தி அடையாததன் காரணமாக அவர்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவது வழமையே . எமது வாய்க்குழியில் உள்ள உணவை அரைத்து இரைப்பைக்கு கொண்டு செல்ல எமது நரம்பு தொகுதி உதவி செய்யும். உணவு புரைக்கு ஏறியவர் கதைப்பதத்திற்கு வெகுவாக சிரமப்படுவார் அல்லது கதைக்க மாட்டார், சுவாசிக் கடிமைப்படுவார் அல்லது சுவாசத்தின் பொழுது வித்தியாசமான சப்தம் கேட்கும், மேலும் அவர்கள் கடுமையாக இருமுவார்கள் அத்துடன் அவர்களது உதடு, விரல் நுனி போன்றவை நீலமாக அல்லது கறுப்பாக மாறிவிடும். எனவே இவ்வாறான அறிகுறிகளுடன் குழந்தைகள் தென்படும் இடத்து நாம் உரிய முதலுதவிகளை வழங்க வேண்டும் மாறாக பிழையாக மேற்கொள்ளப்படும் முதலுதவி குழந்தையின் உயிரினை பறிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சிறு குழந்தைகளுக்கு சில உணவுகள் புரைக்கேறுதலுக்கான சாத்தியத்தினை அதிகரிக்கும் எனவே சகல உணவுகளையும் பெரியவரின் மேற்பார்வையின் கீழேயே உண்ண அனுமதிக்க வேண்டும்

புரைக்கேறிய குழந்தை ஒன்றிற்கு எவ்வாறு சரியான முதலுதவியினை வழங்குவது என்பது பற்றி பார்ப்போம் (வளந்தவர்களுக்கான முதலுதவி வேறுபாடானது)    

1. குழந்தை சுவாசிக்க கூடிய நிலையில் இருமியவாறு காணப்பட்டால் அவர்களாகவே இருமி இறுகிய உணவு பொருளினை வெளியேற்றுவார்கள். குழந்தை மூச்சு அற்று இருந்திருந்தால் நாம் குழந்தையின்  கன்னத்தில் இறுக்கி தட்டி குழந்தையின் நினைவினை மீள கொண்டுவர முயற்சிப்பதுடன் உடனடியாகவே முதலுதவியினை ஆரம்பிக்க வேண்டும்.

2. குழந்தையினை முகம் கீழ் (நிலம்) நோக்கி பார்க்கும் வண்ணம் இடது  தொடையின் மீதும் இடது கையின் மீதும்  கிடத்த வேண்டும். அதன் பின்னர் உள்ளங்கையின் அடிப்பகுதியால் குழந்தையின் தோல்பட்டைகளுக்கு இடையில் ஐந்து முறை பலமாக தட்ட வேண்டும்.

3. குழந்தையினை மறுபக்கமாக திருப்பி விரலினை வாயில் உட் செலுத்தி விரல் நுனியால் வெளிவந்த உணவு பொருளினை பற்றி எடுக்க வேண்டும். விரலினால் துளாவ கூடாது (Do not sweep the mouth as this could push the object further down the throat)

4. பொருள் வரவில்லை எனில் குழந்தையின் முகம் மேல்நோக்கி இருக்கவாறு தொடையின் மீது கிடத்தி குழந்தையின் தலை மற்றும் கழுத்து பகுதியினை கையினால் ஆதாரம் கொடுத்த வண்ணம் மறு  கையின்  விரல் நுனியால் பொக்குளிர்ற்கு மேலாக ஐந்து முறை பலமாக தட்ட வேண்டும்.

5. விரலினை உட்செலுத்தி மறுபடியும் உணவு பொருளினை எடுக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறான முதலுதவி பயனளிக்காவிடின் அவசர நோயாளி சேவையை அழைக்க வேண்டும். சிறுவர்கள் எனில் கீழ் வரும் முறையில் (Heimlich Maneuver) வயிற்றினை அழுத்துவதன் மூலமும் சுவாச பாதையில் சிக்கி இருக்கும் பொருளினை வெளியேற்ற முடியும்

Choking: First aid

முற்றும்     

சிறுமி இஷாலினியின் மரண வாக்கு மூலம் ??

16 வயதான மலையக சிறுமி இஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, தந்தை, சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போலீசார் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியிடம் இருந்து உரிய வாக்குமூலத்தினை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இருந்து பெறும் வாக்கு மூலம் “மரண வாக்குமூலம்” (Dying Declaration) என்றழைக்கப்படும். இப்பதிவில் மரண வாக்கு மூலத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கப்படுகின்றது.

1. மரண வாக்கு மூலம் என்றால் என்ன?

மரண வாக்குமூலம் (Dying Declaration) எனப்படுவது சட்டத்திற்குப் புறம்பான செயலின் விளைவால் இறக்கும் நிலையிலுள்ள மனிதரிடமிருந்து அவர் இறப்புக்குக் காரணமான தகவல்களை எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவோ பெறுவது ஆகும்.

2. மரண வாக்குமூலம் வாங்கும் முறை

சட்டத்தின் பிரகாரம் மரணத்தின் விளிம்பில் உள்ள ஒருவன் தனது மரணத்திற்கு இட்டு சென்ற நிகழ்வு பற்றி உண்மையே பேசுவான் எனக்கருதியே சட்டம் செயற்படுகின்றது.

முதலில் வாக்குமூலம் தருபவர் தெளிந்த மனநிலையில் (compos mentis) தான் இருக்கிறார் என மருத்துவர் சான்றளிக்க வேண்டும். எழுதும் நிலையில் இருந்தால் வாக்குமூலம் அளிப்பவரே வாக்குமூலத்தை எழுதலாம். இல்லாத நிலையில் மருத்துவரே எழுதலாம். வாக்குமூலம் தருபவரின் சொந்த வார்த்தைகளில் தான் வாக்குமூலம் எழுதப்பட வேண்டும். வாக்குமூலம் பெறுபவர் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாது. ஆம் இல்லை என விடைவரும் கேள்விகளையும் (leading questions) கேட்கக் கூடாது. ஒரு விடயம் தெளிவாக இல்லையென்றால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் கேட்கப்பட்ட கேள்வியையும் பெறப்பட்ட விடையையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும். இறுதியாக வாக்குமூலத்தை உரக்கப் படித்துக் காட்டி வாக்குமூலம் அளித்தவரின் பெருவிரல் ரேகை அல்லது கையெழுத்தைப் பெற வேண்டும். மருத்துவரும் இரு சுயாதீன சாட்சிகளும் கையொப்பமிட வேண்டும்.

Law related to Dying Declaration in Criminal matters or Dying Declaration  law

வாக்குமூலத்தில் இது நடந்தது என்ற தகவல்களே இடம் பெற வேண்டும். இது நடந்திருக்கலாம் எனும் ஊகக்கருத்து கூடாது. வாக்களிப்பவருக்கு அப்படி ஓர் ஊகம் இருக்குமாயின் அவ்வூகம் ஏற்படக் காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். 

3. யார் யார் மரண வாக்கு மூலத்தினை பதிவு செய்யலாம்?

யார் வேண்டுமானாலும் மரண வாக்கு மூலத்தினை பதிவு செய்யலாம்  ஆனால் மருத்துவரால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிக மதிப்பு உண்டு. அதனை விட நீதிபதியால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிகபட்ச மதிப்பு உண்டு.

இலங்கையில் வழமையாக பொலிஸாரினால் அல்லது சிகிச்சை அளிக்கும் வைத்தியரினால் மரண வாக்கு மூலம் பதியப்படும்

4. எவ்வாறான நோயாளிகளில் வழமையாக மரண வாக்கு மூலம் பதியப்படும்?

பெரும்பாலும் சர்ச்சைகளுக்கு உள்ளாகும் மரணங்களுக்கு உரிய நோயாளிகளின் மரண வாக்குமூலம் பதியப்படும். உதாரணமாக தீக்காயங்களுக்கு உள்ளாகிய பெண், நஞ்சு அருந்திய பெண்,  கடும் காயங்களுடன்  வீதியில் அநாதரவாக இருந்தவர் போன்றோரிடம் இருந்து மரண வாக்கு மூலம் பெறப்படும். இங்கு மரணம் ஏற்பட்ட சூழ்நிலையினை மரண வாக்கு மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சிறுமி இசாலினியிடம் இவ்வாறன ஓர் மரண வாக்கு மூலத்தினை போலீசாரோ அல்லது வைத்தியர்களோ பெறவில்லை இதன் காரணமாக சிறுமியின் மரணம் பல சர்ச்சசைகளுக்கு வித்திட்டுள்ளது.

முற்றும்

ஆத்ம திருப்தி

அன்றும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒருபுறம் நோயாளர் விடுதிகளில் இருந்து வந்திருந்த நோயாளர்கள் மறுபுறம் உடற்கூராய்வு பரிசோதனைக்காக உறவினர்களும் போலீசாரும் வந்திருந்தனர். பலரின் மத்தியில் இளவயது பெண்மணி ஒருத்தி இடுப்பில் இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒருத்தியுடனும் மறுகையில் ஓர் துணிப்பையுடனும் நுழைந்து வைத்தியரின் அறைக்கு வருகின்றாள், அங்கு அவள் குறித்த வைத்தியரின் பெயரினைக்குறிப்பிட்டு நீங்கள் தான் அவரா? என கேட்கின்றாள், வைத்தியரும் ஆம் என பதிலளிக்க, அவள் மீண்டும் தன்னை தெரிகின்றதா? என வினவுகின்றாள். வைத்தியரும் சில பெயர்களை கூறி நீங்கள் அவர்தானே எனக்கேட்க, இல்லை என பதிலளிக்கின்றாள். சில வினாடிகளில் வைத்தியர் தலையில் கைவைத்து சொறிய அவள் தனது பெயரினை கூறுகின்றாள். அவளின் பெயரினை கேட்டவுடன் வைத்தியர் ஒருகணம் கதிரையில் எழும்பி இருக்கின்றார்.
ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்னர் அவள் கணவனினால் கொடூரமாக கத்தியினால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுகிறாள். பலமணி நேர சத்திர சிகிச்சையின் உயிர் தப்புகின்றாள். அதன் பின்னர் சட்ட வைத்திய பரிசோதனை, பொலிஸாரின் விசாரணை, நீதிமன்ற விசாரணை என பலவற்றிற்கு முகம் கொடுக்கின்றாள். இவை தவிர கையில் ஏற்பட்ட காயத்திற்கு பிளாஸ்ட்டிக் சத்திர சிகிச்சை பெற கிளிநொச்சி மாவட்டத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த அவள் யாரின் துணை இன்றி கொழும்பு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். அவளின் கல்வித்தகமை ஆண்டு எட்டு வரையுமே. அவளுக்கு மொத்தம் 43 காயங்கள் அதில் 8 காயங்கள் பாரதூரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியான குடும்ப வன்முறைகளினால் மனம் சோர்வுற்றிருந்த அவள் சட்ட வைத்திய அதிகாரி கொடுத்த மனத் தைரியத்தினாலும் பெண்கள் உரிமை அமைப்பு ஒன்று வழங்கிய வழிகாட்டலினாலும் வீறுகொண்டெழுந்து, தனது கணவனுக்கு எதிராக நீதிமன்றில் போராடினாள். சில வருடங்களின் இறுதியில் அவள் அதில் வெற்றியும் பெற்றாள்.

வைத்திய சாலையில் ஏறத்தாழ 10 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட குறித்த பெண்ணின் புகைப்படம்


சில மாதங்களில் மாற்றலாகி சென்ற சட்ட வைத்தியருக்கு பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றி தெரியவில்லை. எனினும் அவள் வைத்திய சாலைக்கு வரும் பொழுது எல்லாம் குறித்த வைத்தியரினை பற்றி வைத்தியசாலை ஊழியரிடம் விசாரிப்பாள். அன்றும் அவ்வாறு விசாரித்த பொழுது குறித்த வைத்தியர் அயலில் உள்ள மாவட்டத்தில் வேலை செய்வது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவள் வைத்தியருக்கு பயணத்தடை காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று நினைத்தோ ஒரு கையில் அரிசிப் பையுடன் வந்திருந்தாள்.
இறுதியாக எல்லாவற்றையும் அமைதியாக அவதானித்து கொண்டிருத்த அலுவலக பெண் ஊழியருக்கு மனம் குறுகுறுத்தது, அவளும் வெட்கத்தினை விட்டு கேட்டு விட்டாள், மடியில் இருந்த குழந்தை யாருடையது என்பது பற்றி. பெண்ணும் வெட்கத்துடன் அது வந்து சேர், வந்து சேர் … என முகம் குனிந்து நாணினாள். அவளது வாழ்வில் மறுமணம் தென்றலாக வீச தொடங்கி விட்டது என்பது மட்டும் சட்ட வைத்திய அதிகாரிக்கு நிச்சயமாக தெரிந்தது. அவர் ஆத்ம திருப்தியுடன் தனது கடமைகளை தொடர்ந்தார்.

முற்றும்