ஊமத்தம் பூவிற்கு ஏனிந்த ஆசை!!

ஊமத்தை இலங்கையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் நாம் அதிகமாக காணலாம். உம்மத்தை, ஊமத்தான், உன்மத்தம், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு. ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இயற்கை வைத்தியத்தில் ஊமத்தை ஆனது காதுவலி, மூட்டு வாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பாவிக்கப்டுகின்றது. சிலர் இதன் இலைகளை சுருட்டி புகைப்பிடிப்பர். இவ்வாறு செய்வதினால் சுவாச நோய்கள் நீங்கும் எனவும் நம்புகின்றனர். ஊமத்தையில் வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைகள் உண்டு.

Datura stramonium - Monaco Nature Encyclopedia
தாவரத்தின் தோற்றம்
Datura stramonium – Thornapple, Jimsonweed – Buy seeds at rarepalmseeds.com
ஊமத்தையின் விதைகள்

எம்மில் பலருக்கு ஊமத்தை ஆனது ஓர் நச்சு தாவரம் என தெரிய வருவதில்லை. Datura stramonium (thorn apple/ moon flower/ hell’s bells/ devil’s trumpet/devil’s weed/ tolguacha/Jamestown weed/ stinkweed) என்ற தாவரவியல் பெயரில் இது அழைக்கப்படுகின்றது. இத்தாவரத்தின் பூ, இலை மற்றும் காய் போன்றவை நச்சு தன்மையானவை. இவற்றில் atropine, hyoscyamine, scopolamine ஆகிய நச்சு பொருட்கள் அடங்கியுள்ளன. மேலும் இதன் விதைகள் மிக்க நச்சுத்தன்மையானவை ஒரு காயில் இருக்கும் விதைகளை ஒருவர் பூரணமாக உடகொள்வாரெனில் மரணம் நிச்சயமானது.
முற்றும்

கொரோனாவும் தற்கொலைகளும்

நாட்டில் கொரோனா நோயின் உச்சதாண்டவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 3000 பேர் PCR பரிசோதனை மூலம் கொரோனா நோயாளிகள் ஆக இனம் காணப்படுகின்றனர். மேலும் சராசரியாக 40 பேர் இறந்து கொண்டிருக்கின்றனர்.இது தவிர கொரோனாவினை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடு, தொழில் இன்மை  மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள், கொரோனா நோய்ப்பரவல் செயற்பாடுகள் மூலம் பலர் தீவிர மனஉளைச்சல்களுக்கு உள்ளாகிய நிலையில் தற்கொலை செய்கின்றனர். இத்தகைய செய்திகள் பெரும்பாலும் பத்திரிகைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ வருவதில்லை. அவ்வாறு செய்தியாக வந்தாலும் தற்கொலைக்கு என்ன அடிப்படை காரணம் என்பது பற்றி தெரிய வருவதில்லை.

மருத்துவர்களும் இது பற்றி அலட்டிகொள்ளவதில்லை அவர்கள் பெரும்பாலும் நேரடியாக கொரோனா நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டே நோய் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது பற்றி விவாதிப்பார்கள். ஆனால் ஓட்டுமொத்தமாக கொரோனாவினால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ளும் பொழுது இவ்வாறு ஏற்பட்ட மரணங்களையும் நிச்சயம் கருத்தில் கொள்ளல் வேண்டும். 

வடமாகாணத்தில் கடந்த சில மாதங்களில் கொரோனா பயணத்தடை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட சில தற்கொலை மரணங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு

1. 36 வயதான மீன் வியாபாரி ஒருவர் தனது வியாபார நடவடிக்கைகளுக்காக கொள்வனவு செய்த வாகனத்திற்குரிய லீசிங் கட்டனத்தினை முழுமையாக செலுத்தாததினால் மன உடைவிற்கு உள்ளாகி இருந்தார். அண்மைக்காலமாக குறித்த நபர் மதுவுக்கு அடிமையாகிய நிலையில் இருந்தார்.

2. கொரோனா தோன்றிவிடும் என்ற காரணத்தினால் பேரப்பிள்ளையினை வீதியில் கொண்டு உலாத்தி வருவதற்கு மகன் அனுமதிக்கவில்லை. இதன்  காரணமாக மனம் உடைந்த  பேரனார் தற்கொலை செய்து கொண்டார்.

3. தனிமையில் வசித்த 5 பிள்ளைகளின் தந்தையார் (இவரின் 5 பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளனர் ) தனது கடைசி மகள்  கடந்த சில நாட்களாக தொலைபேசியில் கதைக்கவில்லை என்பதாலும், கடைசியாக கதைக்கும் பொழுது அவள் வேலை பார்க்கும் கொம்பனி கொரோனா காரணமாக அவளை வேலையில் இருந்து நிறுத்தி இருப்பதாகவும் கூறியதால் மிகவும் மனம் உடைந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

4. மனநோயாளி ஒருவர் பயணத்தடை காரணமாக வெளியேறி உலாத்த முடியாமையினால் தற்கொலை செய்துகொண்டார். இவர் வழமையாக பல்வேறு இடங்களுக்கு சென்றுவருவதையே தொழிலாக கொண்டவர்.

5.மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அவை கிடைக்காமை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.    

மேற்குறித்த சம்பவங்களில் இருந்து கொரோனா நோய் எவ்வாறு தற்கொலைக்கு வழிவகுக்கின்றது என்பது பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சில மனிதர்களே இவ்வாறு தற்கொலை செய்கின்றனர் அல்லது செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் “அதிக  ஆபத்தானவர்கள்   (High risk persons for suicide  )” என வகைப்படுத்தபடுவர். இவர்கள்  யாரெனில் குறித்த பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் தற்கொலை செய்ய அதிக சாத்தியம் உள்ளவர்களே. 

யார் அதிக ஆபத்தானவர்கள்

1. போதைப்பொருள் மற்றும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள்

2. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மன நோயாளிகள்

3. பயணத்தடை மற்றும் தனிமைப்படுத்தல் காரணமாக தொழில் மற்றும் வருமானத்தினை இழந்தவர்கள்

4. மாற்றுத்திறனாளிகள் போன்ற மற்றையவர்களில் முற்றுமுழுதாக தங்கி வாழ்பவர்கள்.

5. பெற்ற பிள்ளைகள் புலத்தில் வசிக்கும் நிலையில் ஈழத்தில் தனிமையில் உள்ள பெற்றோர். 

6. அதிகளவு குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள்.

7. தொழில் ரீதியாக அதிகளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சுகாதார சேவை ஊழியர்கள்.

8. கொரோனா நோயின் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்தவர்கள்

9. கொரோனா நோய் தனக்கு அல்லது குடும்பத்தினருக்கு  வந்துவிடுமோ என அதீத பயம் கொண்டவர்களும் கொரோனா நோய் வந்தமை காரணமாக உறவினர்களாலும் சமூகத்தினாலும் ஒதுக்கப்படுபவர்கள்.

10. லீசிங் மற்றும் ஏனைய கடன்களை செலுத்த முடியாதவர்கள். 

11. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “சமூக இடைவெளி” ” முக கவசம் அணிதல்”… போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அதீத மனா உளைச்சலுக்கு உள்ளாபவர்கள்.

12. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமது திருமணம், பரீட்சை போன்ற முக்கியமான நிகழ்வுகளை இடைநிறுத்தியவர்கள்.

13. தாய் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கி  தவிப்போர் 

எனவே இவ்வாறன தற்கொலை செய்ய அதிகம் சாத்தியக்கூறு கொண்ட மக்களின் பிரச்சனைகளை நாம் அன்போடும் பரிவோடும் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் மேற்குறித்த மக்களுக்கு எம்மால் ஆன  உதவிகளை வழங்கலாம் அல்லது உதவி பெறும் வழிமுறைகளை காட்டிட வேண்டும். மேலும் உளவள ஆலோசனை தேவைப்படுபவர்கள் 1926 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உரிய உளவள ஆற்றுப்படுத்தலைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

முற்றும்

மட்டு- இளைஞன் பொலிஸாரினால் கொல்லப்பட்டாரா?

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட 22 வயதுடைய இளைஞன் ஒருவர் போலீஸ் நிலையத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த இளைஞர் கைது செய்யப்படும் பொழுது பொலிஸாரினால் தாக்கப்பட்டதாகவும் அத்தாக்குதலில் விளைவாக ஏற்பட்ட காயங்களின் காரணமாகவே குறித்த இளைஞர் இறந்ததாகவும் போலீசார் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த இளைஞனின் உடற் கூராய்வு பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில் குறித்த இளைஞன் அதிகளவு ஐஸ் என்ற போதை பொருளினை உட்கொண்டதனால் தான் மரணம் அடைய நேர்ந்தது என்று இணையத்தள செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

Methamphetamine Use and Cardiovascular Disease | Arteriosclerosis,  Thrombosis, and Vascular Biology

மெத்அம்பிற்றமைன் என்ற போதைப்பொருளே இவ்வாறு ஐஸ், Black Beauties, L.A. Ice, Speed , Crystal … போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது.இப்பதிவில் ஐஸ் என்றழைக்கப்டும் போதைப்பொருளானது எவ்வாறு சடுதியான மரணத்தினை விளைவிக்கும் என பார்ப்போம்.

  1. இந்த ஐஸ் போதைப்பொருளானது தொடர்ச்சியாக பல வருடங்களாக பாவித்து வரும் பொழுது அவை இருதயத்திற்கு குருதியினை வழங்கும் முடியுரு நாடிகளில் கொலஸ்டரோல் படிவினை தூண்டும் (accelerated atherosclerosis) இதன் காரணமாக குறித்த நபர் மிகவிரைவாக மாரடைப்பு ஏற்பட்டு இறப்பினை தழுவுவார்.
  2. மேலும் ஒரு நபர் பலவருடங்களாக ஐஸ் போதைப்பொருளை பாவிக்கும் பொழுது அது அவரின் முடியுரு நாடிகளில் (coronary artery spasm) சுருக்கத்தினை ஏற்படுத்தும், இதன் காரணமாக குறித்த நபர் தீடீர் மரணத்தினை தழுவ நேரிடும்.
  3. இது தவிர ஐஸ் போதைப்பொருளானது நீண்ட நேரத்திற்கு இருதய துடிப்பில் ஒழுங்கற்ற தன்மையினை கொண்டுவரும் (refractory ventricular fibrillation) இதன் காரணமாகவும் சடுதியான மரணம் சம்பவிக்கலாம்.
  4. மேலும் நீண்டகால ஐஸ் பாவனையாளர் ஒருவர் dilated cardiomyopathy என்ற இருதய நோய் நிலைமைக்கு உட்பட்டும் சடுதியாக மரணத்தினை தழுவ நேரிடலாம்.
  5. இது தவிர ஐஸ் பாவனையாளர் ஒருவர் கடுமையாக வேலை செய்யும் பொழுது அல்லது அதிக மனக்கிலேசத்திற்கு (physical/ mental strain) உள்ளாகும் பொழுது அவரின் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கும், இதன் காரணமாகவும் இருதய துடிப்பில் ஒழுக்கற்ற ரிதம் உருவாகி சடுதியான இறப்பு ஏற்படும். பொதுவாக பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது இவ்வாறு தான் இறப்பு ஏற்படுகின்றது.
  6. மேலும் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்படும் பொழுது தமது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருளினை மிக அவசரமாக விழுங்கி விடுவார்கள். இவ்வாறு உட்கொள்ளப்பட்ட போதைப்பொருளானது அவர்கள் ஒருதடவை பாவிக்கும் போதைப்பொருளின் அளவினை விட கூடுதலாக இருக்கும் பொழுதும், போதைப்பொருள் சுற்றப்பட்ட உறை எமது சமிபாட்டு தொகுதியில் கரையும் பொழுதும் அதில் அடங்கியிருந்த அதிகளவான போதைப்பொருள் சமிபாட்டு தொகுதியினுள் வெளியேற்றப்பட்டு உடலினுள் அகத்துறிஞ்சப்படும். இதன் காரணமாக குறித்த நபர் சடுதியான நஞ்சாதலுக்கு உள்ளாவர் (Acute Intoxication ) இதன் காரணமாக அவர் சடுதியாக மரணத்தினை தழுவ நேரிடும்.
  7. ஐஸ் பாவனையின் பொழுது சடுதியாக எமது உடலில் குருதி அழுத்தம் அதிகரிக்கும் இதன் காரணமாகவும் மூளையில் இரத்த கசிவு ஏற்படல் (intra cerebral haemorrhage) மற்றும் இருதய நோய் போன்றவற்றினாலும் சடுதியான மரணம் சம்பவிக்கலாம்
    மேற்குறித்தவாறு ஐஸ் போதைப்பொருளானது நபர் ஒருவரில் சடுதியான மரணத்தினை விளைவிக்கும்.
Why Methamphetamine Changes a Person's Physical Appearance - Family First  Intervention

இனி முக்கிய விடயத்திற்கு வருவோம் பொலிஸார் தாக்கியதால் தான் ஒருவர் இறந்தார் என்பதினை எவ்வாறு சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் எவ்வாறு உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார்? உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது உடலில் வெளியில் தெரியும் காயம், மற்றும் அதற்கு கீழே உள்ள உள் உறுப்புகளில் ஏற்பட்ட காயம் என்பன பற்றி ஆராயப்படும். சாதாரணமாக மனித உடலில் ஏற்படுத்தப்படும் சகல காயங்களும் மரணத்தினை விளைவிக்காது. மரணத்தினை விளைவிக்கும் காயங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே அம்மரணமானது காயத்தினால் ஏற்பட்ட மரணம் எனக்கொள்ளப்படும்.

பொதுவாக போலீசார் கைது செய்வதற்கு முன்னரே போதைப்பொருள் பாவனையாளர் அவற்றினை விழுங்கி விடுவார்கள். மேலும் இவர்கள் இவ்வாறு விழுங்கியதை வெளியில் சொல்லுவதில்லை. இதன்காரணமாக அவர்கள் போலீஸ் நிலையத்தில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவ நேரிடுகின்றது. இவ்வாறான சம்பவங்களின் பொழுது அரசியல்வாதிகள் மற்றும் சட்டதரணிகள் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையினை தீவிரமாக ஆராய்ந்த பின்னரே கருத்து தெரிவிப்பது நன்று. அவர்கள் தமது சுயலாபம் கருதி செயற்படுவார்களாயின் அச்செயற்பாடு ஏற்கனவே சிதைந்து போயுள்ள நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையீனத்தினை மேலும் அதிகரிக்கும்.
முற்றும்

  1. https://wordpress.com/post/tamilforensic.wordpress.com/71
  2. https://wordpress.com/post/tamilforensic.wordpress.com/1381

தமிழ் பெண்களும் ஆபாச படங்களும் (பகுதி 2)

அண்மைக்காலமாக இலங்கையினை சேர்ந்த பல பெண்களின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தலங்கள் மற்றும் இணையத்தில் வெளியாகி பலரினையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம் பலரும் அறிந்தமையே. அண்மைக்காலமாக இவ்வாறு சமூக ஊடகங்களில் இவ்வாறு நடைபெறும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2018ம் ஆண்டு 2505 ஆக இருந்த சம்பவங்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு 14500 ஆக பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட பெண்கள் எவருமே இது பற்றி பொலிஸாரிடமோ அல்லது வேறு தரப்பிடமோ முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சந்தர்ப்பங்களில் பெண்ணின் சம்மதத்துடன் தானோ இவ்வாறான சம்பவம் நடைபெற்றது எனவும் எண்ண தோன்றுகின்றது. குறித்த பெண்ணின் சம்மதம் இன்றி படங்களையோ வீடியோவினையோ எடுத்தல் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவ்வாறே ஒருவரின் அனுமதி இன்றி நாம் அவர்களின் படங்களை அல்லது வீடியோக்களை பகிர முடியாது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வாறு முறையிடாத காரணத்தினாலும் இவ்வாறான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறு காரணங்களினால் முறையிடாது விடுகின்றனர். மேலும் பெண்கள் இவ்வாறான சம்பவம் குறித்து எங்கே, எவ்வாறு முறையிடுவது என்று குறித்து தெரியாத காரணத்தினாலும் முறையிடாது விடுகின்றனர்.


இப்பதிவில் பாதிக்கப்பட்ட பெண் இலங்கையில் எவ்விடங்களில் முறைப்பாட்டினை மேற்கொண்டு தீர்வினை பெறலாம் விளக்கப்படுகின்றது.

  1. பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு மேற்பட்டவர் எனில் அவர் சைபர் கிரைம் டிவிசன் (Cyber Crimes Division – CCD) இல் முறையிடலாம். இப்பிரிவானது கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ளது. (Criminal Investigations Department – CID). அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது தொலை பேசி இலக்கம் 011 232 6979 ஊடாகவோ முறையிடலாம்.
  2. பாதிக்கப்பட்ட பெண் 18 வயதிற்கு குறைந்தவர் எனில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தொடர்பு இலக்கமான 1929 மூலம் முறைப்பாட்டினை மேற்கொள்ளலாம்.
  3. இலங்கையின் இலத்திரனியல் குற்றங்கள் சம்பந்தமான முறைப்பாடுகளை மேற்கொள்ளும் the Sri Lanka Computer Emergency Readiness Team (SLCERT) அவர்களிடம் பின்வரும் தொலைபேசி இலக்கம் மூலம் 011 2 691 692 முறைப்பாடு மேற்கொள்ளலாம்.
  4. அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவிலும் முறையிடலாம்.
  5. பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போன்றோரிடம் முறையிடலாம் அவர்கள் தகுந்த வழிகாட்டல்களை வழங்குவார்கள்.
  6. அரச சார்பற்ற நிறுவனமான WIN (Women In Need ) போன்றவற்றின் தொடர்பிலக்கமான 077 5676 555 போன்றவற்றிற்கும் முறையிடலாம்.
  7. பகுதி ஒன்றினை பார்வையிட தமிழ்ப்பெண்களும் ஆபாசப் படங்களும் (பகுதி 01)
    முற்றும்

முல்லைத்தீவில் நால்வரினை பலி கொண்ட…

கடந்த மாதத்தில் மட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற மின்னல் தாக்குதல்களின் பொழுது நான்கு பேர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியமை பலருக்கும் தெரியாமல் இருக்கும். இவ்வாறான பரிதாபகரமான அகால மரணங்கள் நிச்சயம் தடுக்கப்பட கூடியவையே. மக்களிடையே விழிப்புணர்வு இன்மையும் அலட்சியமுமே இவ்வாறான மரணங்களுக்கு எதுவாக அமைந்து விடுகின்றன என்றால் அது மிகையாகாது. பொதுமக்கள் பலரும் கூறும் விடயம் யாதெனில் தாங்கள் பல வருடங்களாக இவ்வாறு விவசாயம் செய்யும் பொழுதும் வெளிகளில் நின்று வேறு வேலை செய்யும் பொழுதும் தங்களை இவ்வாறு மின்னல் தாக்கவில்லை என்பதுவும் மற்றும் தங்களுக்கு இவ்வாறு மின்னல்  தாக்கும் என்பது தெரியாது என்பதுவுமே.

Thunder, lightning

இனி நாம் திறந்தவெளியில் இருப்பின் மின்னல் தாக்குதலில் இருந்து எவ்வாறு எம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பது பற்றி பார்ப்போம்.

  1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
5. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
6. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
7. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது) .
8. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
9. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
10. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
11. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
12. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
13. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது.

Injuries and deaths from lightning | Journal of Clinical Pathology
மின்னல் தாக்குதலின் பொழுது இறந்த நபர் ஒருவரின் காலனி

இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்


கணவன் தவறு செய்யும் பொழுது…

அது ஓர் வீதி விபத்து ஒன்றின் பொழுது இறந்த நபர் ஒருவரின் மரணவிசாரணை, இறந்த நபரின் மனைவி தனது கணவனை வாகனத்தின் மூலம் மோதி கொலை செய்து விட்டதாக அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். விசாரணைக்கு வந்திருந்த போலீசார் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் நின்றிருந்தார்.
அவள் ஓர் பட்டதாரி ஆசிரியை இறந்த அவளின் கணவர் ஓர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். அவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள். அவளின் கணவன் எப்பொழுதுமே அதீத வேகத்தில் தான் மோட்டர் சைக்கிளை செலுத்துவார். அத்தோடு மட்டும் அல்லாது ஆபத்தான முறையில் வாகனங்களினை முந்துதல் மற்றும் ஆபத்தான வளைவுகளில் கவனம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்துதல் போன்ற தவறுகளை அடிக்கடி செய்வார். திருமணமான ஆரம்பத்தில் அவள் மிக்க பயத்துடனேயே அவனுடன் மோட்டர் சைக்கிளில் பின்னிருந்தவாறு பயணிப்பாள். அவளின் அறிவுக்கு எட்டியவரை இவ்வாறான நடவடிக்கைகள் போக்குவரத்து விதி மீறல் என உணர்ந்து பல தடவைகள் கணவனுக்கு சுட்டி காட்டியிருந்தாள். இதன்காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்புக்கள் தான் ஏற்பட்டதே ஒழிய அவன் திருந்திய பாடில்லை. அன்றும் அவ்வாறே அவன் அலுவலகம் செல்லும் பொழுது ஓர் பேருந்தினை முந்திச்செல்லும் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனம் அவனை மோதித்தள்ளியது. விபத்தின் பின்னர் அவனது எலும்பு மற்றும் தசை குவியலினைபொறுக்கித்தான் எடுக்க முடிந்தது.

Sad depressed husband offended wife in quarrel, feeling guilty fault Free Photo


இன்றைய காலப்பகுதியில் பல பெண்கள் நன்றாக படித்திருந்தாலும் கணவர் பிழையான காரியங்களில் ஈடுபடும் பொழுது தட்டி கேட்கவும் திருத்தவும் தயங்குகின்றார்கள் அல்லது அவ்வாறு செய்ய முற்படுவதில்லை. பலர் இவ்வாறு செய்வதன் மூலம் பல விதமான குடும்ப பிரச்சனைகள் ஏற்படும் என பயப்படுகின்றனர் வேறு சிலர் கணவருக்கு மனைவி புத்தி மதி கூறுவதா என பின்னிற்கின்றனர். இதன்காரணமாக சிறிது காலத்தில் ஏற்படும் பாதக விளைவுகளையும் அவர்கள் அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகின்றது. எனவே ஆண் ஒருவன் அதீத மது பாவனை, போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்யும் பொழுது அவன் மட்டும் அல்ல அவனது குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.

முற்றும்

ஜாக்கெட் அணிந்த துப்பாக்கி சன்னம்!!

அண்மையில்  நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் துப்பாக்கி ஒன்றினால் இரு இளைஞர்கள் காயம் அடைந்திருந்தனர். அவர்களின் உடலில் இருந்து பெறப்பட்ட சன்னம் ஒன்று முழுமையாக இருந்த நிலையில் மற்றையவரின் உடலில் இருந்து பெறப்பட்ட சன்னம் ஆனது உடைந்த இரும்பு துகள்களாகவே இருந்தது. இதன் காரணமாக போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சந்தேகம் நிலவியது அதாவது எவ்வாறு குறித்த வேறுபாடு இடம் பெற்றது என்பது பற்றியே இவ்வாறு சந்தேகம் நிலவியது. எவ்வாறு இது சாத்தியமானது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

பலருக்கு இராணுவத்தில் பயன்படும் துப்பாக்கி ரவைகளில் உள்ள சன்னங்கள் ஜாக்கெட் சட்டை (full metal jacket – FMJ) போட்டிருப்பது பற்றி தெரியாது. இவ்வாறு ஜாக்கெட் போடுவது என்ன என்றால் இரும்பினால் செய்யப்பட்ட துப்பாக்கி சன்னம் ஒன்றினை சுற்றி கடினமான உலோகத்தினால் ஆன அதாவது  பொதுவாக செப்பு மற்றும் நிக்கல் கலப்பு உலோகத்தினால் ஆன உலோக உறை ஒன்றினை போடுவதே ஆகும்.

ஏன் இவ்வாறு துப்பாக்கி சன்னம் ஒன்றிற்கு இவ்வாறு ஜாக்கெட் போடவேண்டும்?

1. இவ்வாறு ஜாக்கெட் போடுவதினால் துப்பாக்கி சன்னம் துப்பாக்கியில் இருந்து அதிக வேகத்தில் வெளியேறும் (High Muzzle velocity) இதன் காரணமாக அதிக தூரத்திற்கு இலக்கு வைக்க முடியும்.

2. துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் உலோகம் சடுதியாக விரிவடைந்து துண்டு துண்டுகளாக உடைந்து துப்பாக்கியின் குழலின் உட்புறத்தினை சேதப்படுத்தும். இதன் காரணமாக Gilding metal ஆன ஜாக்கெட் போடப்படுகின்றது. இந்த ஜாக்கெட் ஆனது துப்பாக்கி குழலினுள் பிறப்பிக்கப்படும் அதிக வெப்பத்தினையும் தாங்க கூடியதாக இருக்கும்.

3. இவ்வாறு துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் உலோகம் சடுதியாக விரிவடைந்து துண்டு துண்டுகளாக உடைவதினை இந்த உலோக ஜாக்கெட் ஆனது கட்டுப்படுத்தும். இதன் மூலம் துப்பாக்கி சன்னம் ஆனது தனது இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்தும் (through and through injury). ( சிலர் சிறுசிறு துண்டுகளாக உடைவதே இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்தும் என தவறுதலாக விளங்கிக் கொண்டுள்ளனர்). மேலும் ஆரம்ப காலத்தில் மொட்டையான துப்பாக்கி சன்னமே பாவனையில் இருந்தது. இதன் மூலம் இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்த முடியாது எனவே தான் இவ்வாறு ஜாக்கெட் போடுவதன் மூலம் துப்பாக்கி சன்னம் ஆனது மேலும் கூர்மை ஆக்கப்பட்டது. 

4. துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் தரம் குறைந்த உலோகம் நீண்ட காலம்  துருப்பிடிக்காமல் இருக்கவும் இந்த உலோக ஜாக்கெட் ஆனது உதவுகின்றது.

5. இவ்வாறு  சன்னம் ஒன்றிற்கு ஜாக்கெட் போடுவதினால் அதன்மூலம் அந்த துப்பாக்கி சன்னம் ஆனது கடினமான பொருட்களான உலோகங்கள் மற்றும் மரம் போன்றவற்றினை துளைத்து செல்லும்.

துப்பாக்கி சூடு நடக்கும் பொழுது இந்த ஜாக்கெட் ஆனது ஏன் உடைய வேண்டும்?

1. தரம் குறைந்த உலோகத்தினால் இந்த ஜாக்கெட்  செய்யப்பட்டிருக்கும் பொழுது அதிக  வெப்பத்தினால் உடையும். பொதுவாக தொடர்ச்சியாக துப்பாக்கியினால் சுடும் பொழுது.

2. துப்பாக்கி குழலினுள் ஒன்றிற்கு மேற்பட்ட சன்னங்கள் சடுதியாக சிக்கும் பொழுது

3. துப்பாக்கி சன்னம் ஆனது மரம் அல்லது உலோகம் ஒன்றில் பட்டு தெறிக்கும் பொழுது அல்லது அவற்றினை ஊடுருவும் பொழுது

ஜாக்கெட் ஆனது உடையும் பொழுது என்ன நடைபெறும்?

துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் தரம் குறைந்த உலோகம் ஆனது சிறுசிறு துண்டுகளாக உடைந்து இலக்கினுள் செல்லும். அனுபவம் குறைந்த விசாரணையாளர்கள் இந்த சிறு உலோக துண்டுகளை பார்த்து அவை கட்டுத்துப்பாக்கியில் அல்லது shot gun இல் இருந்து வந்த துப்பாக்கியின் சன்னம் (pellets)  என விளங்கிக் கொள்ள முற்படுவர்.

இந்த ஜாக்கெட் போடப்பட்டுள்ள துப்பாக்கி சன்னங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றது.  அவற்றில் சில பின்வருமாறு  

  • FMC (Full Metal Case)
  • FMJBT (Full Metal Jacket Boat Tail)
  • FMJ FN (Full Metal Jacket Flat Nose)
  • FMJTC (Full Metal Jacket Truncated Cone) 
  • TMJ (Total Metal Jacket) 
  • FMJE (Full Metal Jacket Enclosed Base)
முற்றும்

ஆசிரியர் மாணவரினை உடல் ரீதியாக தண்டிக்கலாமா?

கடந்த சில தினங்களில் யாழ் குடாநாட்டில் ஆசிரியர் மற்றும் வணக்கத்திற்குரிய மதகுரு ஆகியோர் பாடசாலை மாணவன் ஒருவனை குரூரமான முறையில் தாக்கியதில் மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பலரிடத்தும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மாணவர்களுக்கு இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்குதல் (corporal punishment) சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் பலர் தங்களின் மனவக்கிரங்களை தீர்க்கும் கருவியாக இந்த உடல் ரீதியான தண்டனையினை மாணவர் மீது வழங்கி வருதல் அவதானிக்கத்தக்கது.

  1. ஏன் இலங்கை உட்பட பல நாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்துள்ளன?
    இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்களினால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும். மேலும் விஞ்ஞான ரீதியாக நடாத்தப்பட்ட ஆய்வுகளில் இவ்வாறான தண்டனைகளினால் மாணவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  2. இலங்கையில் எந்த சட்ட பிரிவுகளில் உடல் ரீதியான தண்டனை வழங்கல் தடை செய்யப்பட்டுள்ளது?
    கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  3. உடல் ரீதியான தண்டனைகளை வழங்காமல் மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியுமா? ஆம். பல ஆசிரியர்கள் மற்றும் பலர் நினைத்துக்கொள்கின்றனர் உடல் ரீதியான தண்டனைகளை வழங்கியே மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியும் என்று, அது மிகவும் தப்பானது.உடல் ரீதியான தண்டனைகளுக்கு பதிலாக மாணவர்கள் பிழை விடும் பொழுது அவர்களை புறக்கணிப்பதன் மூலமும் நற்காரியங்கள் செய்யும் பொழுது அவர்களை தட்டி கொடுப்பதன் மூலமும், நன்மாணாக்கரினை உதாரணம் காட்டுவதன் மூலமும், அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமும், சிறுவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதன் மூலமும், வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் (guidance and counseling methods) மூலமும் மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியும். திறமை மற்றும் ஆற்றல் அற்ற ஆசிரியர்களே உடல் ரீதியான தண்டனைகளை வழங்கி மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியுமென நினைக்கின்றனர்.
  4. உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? மற்றவர்களை உடல் ரீதியான தண்டனை வழங்கி தண்டிக்க முடியும் என்ற பிழையான நிலைப்பாட்டிற்கு இட்டுச்செல்லும். இன்றைய ஆசிரியர்கள் பலர் இவ்வாறு உடல் ரீதியான தண்டனையை அனுபவித்தவர்கள் என்பதன் காரணமாகவே அவர்கள் அதனை உதாரணமாக கொண்டு உடல் ரீதியான தண்டனையை வழங்கவும் அதனை ஆதரிக்கவும் முற்படுகின்றனர்.
    உடல் ரீதியான தண்டனை வழங்கல் மாணவர் – ஆசிரியர் உறவினை நீண்ட காலம் தொடர விடாது. மேலும் உடல் ரீதியான தண்டனை வழங்களின் பொழுது மாணவர்கள் உடற் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாகும். முக்கியமாக கண் மற்றும் காது போன்றன காயமடையலாம். இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்கல் உடல் ரீதியான சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு நிச்சயம் இட்டுச்செல்லும்.
    மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் பொழுது அவர்கள் அதில் இருந்து தப்புவதற்கு விடயங்களை மறைத்தல், பொய் சொல்லுதல் போன்ற தீய பழக்கவழக்கங்களை பழகுவார்கள். மேலும் உடல் ரீதியான தண்டனை வழங்கல் குறிப்பிட்ட காலம் வரையுமே மாணவர்களை நன்வழிப்படுத்தும் அதாவது மாணவர்களை நன்மாணாக்கர் மாதிரி நடிக்க வைக்கும்.
    உடல் ரீதியான தண்டனை வழங்களின் பொழுது ஏற்படும் உள ரீதியான பாதிப்புக்கள் மாணவர்களுக்கு நீண்ட காலம் நீண்ட காலம் நிலைத்து நிற்கும், இதன் காரணமாகவே அன்றைய மாணவர்களாகிய இன்றைய ஆசிரியர்கள் உடல் ரீதியான தண்டனையை வழங்கவும் அதனை ஆதரிக்கவும் முற்படுகின்றனர்.
  5. ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவது எவ்வாறு?
    ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை ஓரிரு நாட்களில் கட்டியெழுப்ப முடியாது. சிறுவயது முதலே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் (மாதா, பிதா, குரு…) முன்னுதாரணமாவார்களாக (Role model ) செயற்படுவதன் மூலமே பணிவான, ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்ப முடியும்.
  6. சிறிதளவான உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியுமா?
    உடல் ரீதியான தணடனைகள் இலங்கையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறிதளவான உடல் ரீதியான தண்டனைகளை வழங்கல் என்பது கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் இவ்வாறு தண்டனை வழங்களின் போது ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படும் வார்த்தை பிரயோகம் காரணமாக மாணவர்கள் பாடசாலையினை விட்டு இடைவிலகியமை மற்றும் தற்கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன.
    முற்றும்

விளிம்பிலி காய் ஆபத்தானதா?

பொதுவாக தற்பொழுது வெய்யிலின் தாக்கம் அதிகமாக நிலவும் காலப்பகுதியில் மக்கள் உற்சாகமாக இருக்கவும் உடலில் நீரினை உரிய அளவில் பேணவும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தான் விளிம்பிலி பழம் . இந்தவகை பழங்களை குறித்த நோயாளிகள் அதிகளவில் உண்ணும் பொழுது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளாவதினை இப்பதிவு விளக்குகின்றது.
Averrhoa bilimbi (commonly known as bilimbi, cucumber tree, or tree sorrel) மற்றும் Averrhoa carambola (carambola, star fruit or five-corner) ஆகிய இரண்டு வகையான தாவரங்களும் Oxalidaceae என்ற குடும்பத்தினை சார்ந்த தாவரங்களாகும். இவற்றின் உருவ தோற்றவியல் வேறுபாட்டினை கீழே உள்ள படங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

Averrhoa carambola


Bilimbi Fruit Flower Averrhoa - Free photo on Pixabay
Averrhoa bilimbi

தெற்காசிய நாடுகளில் இந்த பழமானது பல்வேறு பட்ட மருத்துவ தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றது அம்மை நோய், குடற்புழு, நாடப்பட்ட தலையிடி போன்ற நோய்களை குணப்படுத்த இந்த பழங்கள் உண்ணப்படுகின்றது. அவ்வாறே இம்மரத்தின் இலையானது தோல் வியாதிகள், பால்வினை நோய்கள், மூட்டு வாதம் போன்றவற்றினை குணப்படுத்த இயற்கை மருத்துவத்தில் பாவிக்கப்டுகின்றது.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம் இதன் பழங்கள் மற்றும் இலை சாறுகளில் ஒக்ஸ்சாலிக் அசிட் (oxalic acid) என்ற பதார்த்தம் உள்ளது. இது சாதாரண அளவில் நாம் உள்ளெடுக்கும் பொழுது எமது உடலிற்கு பெரும்பாலும் தீங்கினை ஏற்படுத்தாது. ஆனால் அதிக செறிவில் உள்ளெடுக்கும் பொழுது உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும். அதிக இலைகளை அல்லது பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸினை அருந்தும் சந்தர்ப்பத்தில் சாதார அல்லது குறைந்த சிறுநீரக தொழிற் பாட்டினை கொண்டவர்களில் ஒக்ஸ்சாலிக் அசிட் ஆனது சடுதியான சிறுநீரக செயலிழப்பினை (Acute oxalate nephropathy) ஏற்படுத்திய பல சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துள்ளன.


எவ்வாறு நாம் இவற்றினை தடுக்கலாம்?

  1. சிறுநீரக தொழில்பாடு குறைவாக உள்ள நோயாளிகள் இந்த பழச்சாறு அருந்துவத்தினை தடுப்பதன் மூலம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் அருந்துதல் கூடாது.
  2. வெறும் வயிற்றில் இதன் பழங்களினை அல்லது பழச்சாறினை அருந்த கூடாது.
  3. மேலும் எமது உடலில் இருந்து அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் வேளையில் நாம் இந்த பழங்களினை அல்லது பழச்சாறினை அருந்த கூடாது.
    முற்றும்

நஞ்சினை அடையாளம் காண்பது எவ்வாறு?

கடந்த வாரத்தில் வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினை கண்டெடுத்த மீனவர்கள் அதனை மதுபானம் என நினைத்து பருகினர். இதன் பொழுது ஏற்பட்ட அனர்த்தத்தில் இவ்வாறு பருகிய இருவர் இறந்தனர் மேலும் சிலர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது. மீனவர்களின் கருத்துப்படி வழமையாக இவ்வாறாக மதுபான போத்தல்கள், வைத்தியசாலையில் பாவிக்கப்படும் பொருட்கள் மற்றும் பொலித்தீனினால் பொதி செய்யப்பட்ட உணவு பொருட்கள் கரை ஒதுங்குகின்றமையும் அவற்றினை மக்கள் எடுத்து பாவிப்பது வழமை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்பதிவில் எவ்வாறு ஓர் மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காண்பது என்பது பற்றி பார்வையிடுவோம். பொதுவாக வைத்தியசாலையில் புண்களுக்கு மருந்து கட்டிட பாவிக்கப்படும் திரவங்கள், விவசாயத்தில் பாவிக்கப்படும் கலை கொல்லிகள், பீடை நாசினிகள், நஞ்சு பதார்த்தங்கள் மற்றும் ஏனைய திரவ மருந்து வகைகள் கறுப்பு அல்லது மண்ணிற கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக்கினால் ஆன போத்தல்களில் இருக்கும். இவ்வகையான போத்தல்களினை கண்டவுடன் நாம் உசார் அடையவேண்டும். மேலும் இவ்வாறான போத்தல்களில் சிவப்பு, நீலம், பச்சை அல்லது மஞ்சளினால் ஆன லேபிள் இருக்கும். பொதுவாக ஆங்கில மொழியில் தான் போத்தலினுள் இருக்கும் பதார்த்தம் பற்றிய விபரங்கள் இருக்கும். ஆனால் மேற்குறித்த நிறங்களினை காண்பதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

File:Toxicity labels.svg - Wikipedia


மேலும் சில போத்தல்களில் மண்டை ஒட்டு குறியின் உடனான கோட்டு படம் (நஞ்சு பதார்த்தத்தினை குறிக்கும்), ஆச்சரிய குறியின் கோட்டு படம் ( ஆபத்தான உடல் நலக்குறைவுகள் ஏற்படுத்தும் பதார்த்தம்) போன்றன இருக்கும் இவற்றினை வைத்தே மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

Safety label, Acute Toxicity (GHS), 25x25mm, 100/roll - Haines Educational


மேலும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தத்தினை கொண்டிருக்கும் போத்தல் அல்லது வேறு பொதி செய்யபட்ட உணவு பொதி ஒன்று காணப்படுமாயின் கூட அதனை எடுத்து நாம் மனித நுகர்விற்கு பயன்படுத்தல் ஆகாது ஏனெனில் அவை நீண்ட காலமாக அதிக வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் நீர் என்பவற்றுடன் தொடுகையில் இருப்பதன் காரணமாக அவற்றினுள் இருக்கும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தம் ஆனது மனித நுகர்விற்கு பொருத்தம் அற்றதாகவும் சிலவேளை நச்சு பதார்த்தம் ஆகவும் மாறி இருக்கலாம்.
முற்றும்