பெண்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியவை

அண்மையில் ஓர் தாயார் எனது அலுவலகம் வந்திருந்தார், கூடவே அவருடன் அவரின் மகனும் வந்திருந்தார். வந்திருந்த தாயார் மகனை அலுவலகத்தின் வெளியே இருக்க சொல்லிவிட்டு என்னிடம் உரையாட தொடங்கினார். அவர் கூறிய விடயங்களாவது தனது 24 வயதுடைய மகனின் நடத்தையில் அண்மைக்காலமாக வித்தியாசம் தெரிவதாக கூறினார்.  குறிப்பாக அடிக்கடி கோபப்படுவதாகவும், வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும் அந்த தாயார் குறிப்பிடுகையில் பிளாஸ்டிக் சோடா போத்தல் ஒன்றினுள் தண்ணீர் விட்டு குழாய் ஒன்றினை அதனுள் செலுத்தி அதன் மறுமுனையினை வாயில் வைத்து குமுழி விளையாடுவதாகவும் கூறினார். மேலும் நான் தொடர்ந்து வினாவுகையில் குறிப்பாக மாலை வேளைகளில் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார் மேலும் மகனின் அறையில் அதிகளவான பாவித்த சொக்லட் அலுமினிய பேப்பர் இருப்பத்தினையும் தாயார் அவதானித்தாக கூறினார். இதன் பிற்பாடு அவரின் மகனை அழைத்து நான் போதைப்பொருள் பாவனை தொடர்பாக வினாவிய பொழுது அவர் தான் எந்த விதமான போதைப்பொருள் பாவனையும் செய்யவில்லை என கூறிய நிலையில் அவரின் சிறுநீர் மாதிரியினை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அதன் பிற்பாடு தான், அவர் போதைப்பொருள் பாவிப்பதினை ஒத்துக்கொண்டார். இவ்வாறு பல பெற்றோர், மனைவிமார் தங்கள் பிள்ளைகள் அல்லது கணவர் வீட்டில் போதைப்பொருள் பாவிப்பதினை அறியாமல் உள்ளனர்.

Drug paraphernalia என்பதன் தமிழ் அர்த்தம் போதைப் பொருட்களைத் தயாரிக்க, மறைக்க அல்லது பயன்படுத்த உதவும் உபகரணங்கள் அல்லது பொருட்கள் என்பதாகும். இது போதைப் பொருள்களை  உபயோகிக்க உதவும் எந்தவொரு கருவியையும் குறிக்கும். உதாரணமாக, போதைப் பொருட்களை உள்ளிழுக்க உதவும்  அல்லது செலுத்தும் குழாய்கள், சூடாக்க உதவும் சிறிய உலோக  கரண்டிகள் அல்லது போத்தல்களின்  உலோக மூடிகள் , சோதனை குழாய்கள், பின்பக்கம் அகற்றப்பட்ட தங்குதன் (tungsten-halogen bulb) மின்குமிழ்கள்  சிறிய பைகள் அல்லது வெற்றுப் பெட்டிகள், தீப்பெட்டி, லைட்டர், தராசுகள், உடலினுள் மருந்து செலுத்த உதவும் ஊசிகள், இரத்தத்தினை துடைக்கும் பஞ்சு/ துண்டுகள், கையினை கட்டிட உதவுவம் நூல் (tourniquet)  போன்றவை இதில் அடங்கும்.

குறிப்பாக போதைப்பொருள் புகையினை சேகரித்து நுகரும் வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களும் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலசந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தமது அறிவினையும் இணையத்தில் இருக்கும் விளக்கங்களையும் கொண்டு தங்களின் தேவைக்கு ஏற்ப இவ்வாறான உபகரணங்களை வடிவமைப்பர். 

மேலும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் பொருட்கள், மறைக்க உதவும் பொருட்கள் மற்றும் உபயோகிக்க உதவும் பொருட்கள் யாவும் Drug paraphernalia என்பதில் சட்ட ரீதியாக உள்ளடங்குகின்றது. இப்பொருட்களை தனித்தனியாக நோக்கும் பொழுது அவை பெரும்பாலும் வீட்டு உபயோக பொருட்களாகவே இருக்கும் எனினும் சேர்த்து நோக்கும் பொழுது தான் அவை என்ன நோக்கத்திற்காக பாவிக்கப்படுகின்றது என்பதினை கண்டு பிடிக்கலாம்.

அண்மையில் நடந்த இன்னோர் சம்பவத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் நாணயத்தாளினை சுருளாக சுற்றி போதைப்பொருள் நுகர்ந்தமை தெரியவந்துள்ளது. இன்றைய நிலைமையில் போதைப்பொருள் பாவனையானது எங்கும் பரவியுள்ளது மற்றும் சமூகத்தில் உள்ள பலரும் வேறுபாடுகளை களைந்து இந்த போதைப்பொருள் பாவனையாளர்களாகி அடிமையாளர்களாக மாறியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உள்ளவர்கள் இவ்வாறன போதை நுகர உதவும் பொருட்கள் சம்பந்தமான அறிவினை கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.

(சமூக நலன் கருதி விரிவான விளக்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன)

நன்றி

போதைப்பொருள் பாவனையாளர்களின் திடீர் மரணம் – காரணம்??

சமீபத்திய காலங்களில் இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு அதிகரித்து வருகின்றது மேலும் அண்மைக்காலங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் போதைப்பொருளினை பாவித்து கொண்டிருக்கும் பொழுதே அதாவது ஊசி மூலம் ஏற்றிக்கொண்டிருக்கின்ற பொழுது அல்லது மூக்கின் ஊடாக நுகர்ந்துகொண்டிருக்கின்ற பொழுது  இறக்கின்ற நிகழ்வுகள் கூட சர்வசாதாரணமாகிவிட்டது. இப்பதிவில் ஏன் இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி விளக்கப்படுகின்றது

  1. போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஒருபொழுதும் தூய போதைப்பொருளினை விநியோகிக்க மாட்டார்கள். அவர்கள் பெருமளவு இலாபம் கருதி ஒரு போதைப்பொருளினுள் இன்னொரு போதைப்பொருளினை அல்லது வேறுவகையான பொருட்களை (cutting) கலந்து விற்பார்கள். இனி விடயத்திற்கு வருவோம் இவ்வாறு இலாப நோக்கம் கருதி கலக்கப்படும் பொருட்கள் (Adulterants) பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை உடையன சில சந்தர்ப்பங்களில் அவை பாவனையாளருக்கு கடுமையான ஒவ்வாமையினை (Anaphylactic shock) ஏற்படுத்தி இறப்பினை உடனடியாகவே ஏற்படுத்தும்.
  2.  மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட போதைப்பொருட்களை கலந்து பாவிக்கும் போது ஒன்றின் விளைவினை மற்றைய போதைப்பொருள் தூண்டும் இதன் காரணமாக போதையின் விளைவு அதிகமாகி இறப்பினை உடனடியாக ஏற்படுத்தும். உதாரணமாக பின்வரும் போதைப்பொருட்களின் சேர்க்கை தீங்கானதாக அமையும்     

மதுபானம் + ஓப்பியம்

கொக்கையின் +கெரோயின்

மதுபானம் + கொக்கையின்

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் குறித்த போதைப்பொருட்கள் குறைந்த அளவில் இருந்தாலும்  மற்றைய போதைப்பொருளின் ஒத்த தாக்கத்தினால் அதன் விளைவு கூட்டப்பட்டு இறப்பு ஏற்படும்.

3. எமது உடலில் ஒவ்வொரு போதைப்பொருளும் இரத்தத்தினுள் சென்று நரம்புத்தொகுதியில் அதற்குறிய உணர்வேற்பிகளில் (Receptors) இணைந்து தொழிற்படுவதன் காரணமாகவே எமது மனித உடலில் விளைவுகளை உண்டுபண்ணுகின்றன. உணர்வேற்பிகளின் எண்ணிக்கை மனிதன் ஒருவனின் மருந்து அல்லது போதைப்பொருள் பாவனைக்கு ஏற்ப கூடும்  அல்லது குறைவடையும். மேலும் ஒருவர் போதைப்பொருளினை தொடர்ச்சியாக பாவிக்கும் போது அவரின் உடலில் உணரவேற்பிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் இதன் காரணமாக நீண்ட காலப்போக்கில் குறித்த அளவிலான போதைப்பொருள் மூலம் அவர் திருப்தியினை அடைய முடியாமல் இருக்கும் (Tolerence) இதன் காரணமாக அவர் சிறிதுசிறிதாக போதைப்பொருளின் அளவினை அதிகரிப்பார். இவ்வாறு காலப்போக்கில் ஒருவர் போதைப்பொருளிற்கு அடிமையாகிவிடுவார்

பல  சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருக்கும் பொழுது அவர்களின் உணர்வேற்பிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் (Receptor Down-Regulation) இந்நிலையில்  போதைப்பொருள் பாவனையாளர்கள் சிலகாலம் போதைப்பொருளினை பாவிக்காமல் இருந்து விட்டு திடீர் என்று முன்னைய அளவில் பாவிக்கும் பொழுது  குறித்த போதைப்பொருளானது அவர்களின் உடலில் நஞ்சாதலை (Toxicity) ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

4. போதைப்பொருட்களின் நேரடி விளைவின் காரணமாக உதாரணமாக ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் நேரடியாகவே மூளையின் உணரவேற்பிகளில் தொழிற்பட்டு எமது சுவாசத்தினை குறைக்கும் . மேலும் கொக்கைன் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் எமது இருதய சுற்றோட்டத்தொகுதியினை அளவுக்கு அதிகமாக தூண்டும் இதன் காரணமாக இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்து சடுதியான இருதய செயலிழப்பு அல்லது மூளையில் இரத்த கசிவு  ஏற்படும். இதன் காரணமாக மரணம் சம்பவிக்கும்.

5. ஏற்கனவே கூறியவாறு போதைப்பொருட்களில் பல்வேறு விதமான பொருட்கள் கலக்கப்படும். பல சந்தர்ப்பத்தில் போதையினை மேலும் அதிகரிக்கும் முகமாக fentanyl போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட வீரியம் மிக்க ஓபியம் வகை மருந்துகள் அளவு கணக்கு இன்றி பாவனையாளருக்கு தெரியாத வகையில் சேர்க்கப்படும். இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படுகின்றது.  fentanyl என்பது மருத்துவ துறையில் பாவிக்கப்படும் ஓர் வலிநிவாரணி மருந்தாகும் அங்கு வைத்தியரின் கண்காணிப்பில், உரிய அளவில் பாவிக்கப்படுவதினால் இறப்புக்கள் ஏற்படுவது குறைவு. fentanyl  ஆனது ஹெரோயினை விட 30-50 மடங்கு வீரியம் மிக்கது அத்துடன் மோபினை (morphine) விட 100 மடங்கு வீரியம் மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

உடலிலினுள் ஓர் நேர வெடிகுண்டு

மருத்துவ துறையில் பல நோய் நிலைமைகளை வைத்தியர்கள் விபரிக்கையில் அந்த நோய் நிலைமை ஓர் “நேர வெடி குண்டு(Time bomb)” என விபரிப்பார்கள் ஏனெனில் அந்த நோய் நிலைமை குணம் குறிகள் அற்று இருக்கும். திடீரென்று அந்த நோய் நிலைமை மோசமாகி குறித்த நபரினை திடீர் இறப்பு நிலைமைக்கு இட்டு செல்லும். இவ்வாறான ஓர் நோய் நிலைமை தான் இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் ஏற்படும் அடைப்பு. தமிழில் பொதுவாக கொலஸ்ட்ரோல் புளொக்/ அடைப்பு என்று சொல்வார்கள் (இருதயத்தின் வால்வுகளில் ஏற்படும் சுருக்கம், இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் ஏற்படும் அடைப்பு என்பன இரண்டு வெவ்வேறான நோய் நிலைமைகள் , இரண்டும் ஒன்றல்ல). அண்மையில் கூட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபொழுது அவருக்கு இருதயத்தின் முடியுரு குருதி குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் அதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் நீதிமன்றில் வழக்ககறிஞர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்தில் எமது இருதயத்திற்கு இரத்தம் வழங்கும் முடியுரு நாடிகளில் ஏற்படும் கொலஸ்ட்ரோல் படிவுகள் atherosclerotic plaque என்றழைக்கப்படும். இவ்வாறு முடியுரு நாடியினை ஏறத்தாழ முற்றாக அடைத்த atherosclerotic plaque இணை கீழ்வரும் படம் விளக்குகின்றது

இவ்வாறு உருவாகிய atherosclerotic plaque குறித்த நாடியின் ஊடாக செல்லும் இரத்த ஒட்டத்தினை மட்டுப்படுத்தும் இதன் காரணமாக குறித்த நபருக்கு வேலை செய்யும் பொழுது நெஞ்சு வலி, களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.  திடீரென்று ஓர் நாள் குறித்த atherosclerotic plaque ஆனது வெடிக்கும் இதன் காரணமாக atherosclerotic plaque இன்னுள்ளே இருந்த பதார்த்தங்கள் நாடியினுள் விடுவிக்கப்படும் இதனை தொடர்ந்து குருதியில் உள்ள குருதி சிறுதட்டுக்கள் இவ்விடத்தில் சேர்த்து முழுமையான அடைப்பினை ஏற்படுத்தும் அதனை தொடந்து முடியுரு நாடியினுடாக செல்லும் இரத்த ஓட்டம் முழுமையாக தடைப்பட குறித்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

பொதுவாக 70% மேற்பட்ட வகையில் atherosclerotic plaque இனால் அடைப்பு இருந்தால் குறித்த நபருக்கு எந்த நேரமும் மாரடைப்பு ஏற்பட சாத்தியம் உள்ளது. இதனால் தான் வைத்தியர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள சிபாரிசு செய்வார்கள்.

இந்த atherosclerotic plaque எப்பொழுது வெடித்து (rupture ) மாரடைப்பினை உண்டாக்கி மரணத்தினை ஏற்படுத்தும் என யாராலும் எதிர்வு கூறமுடியாது. இவ்வாறு atherosclerotic plaque கடுமையாக உள்ள நோயாளிகள் கட்டாயம் மாரடைப்பு நோய் வந்துதான் இறக்கவேண்டும் என்றில்லை. இவ்வாறான நோயாளிகள் விபத்தில் அல்லது வேறு இயற்கையான நோய் நிலைமைகளினால் இறந்துள்ளனர் வேறுசிலர் தற்கொலை செய்துகூட உள்ளனர். மாறாக இவ்வாறு atherosclerotic plaque கடுமையாக உள்ள நோயாளிகள் atherosclerotic plaque வெடித்து மாரடைப்பு வந்து இறந்தும் உள்ளனர்.

மேற்குறித்த நோய் நிலமை தவிர கீழ்வரும் நோய்  நிலைமைகள் கூட “நேர வெடி குண்டு(Time bomb)”  என்று அழைக்கப்படும் உதாரணமாக பெருநாடி அனீரிசிம் (Aortic Aneurysm), உயர் குருதி அழுத்தம், Melioidosis (Vietnamese Time Bomb)… ஏனெனில் குறித்த நோய் நிலைமைகள்  எப்பொழுது மோசமடைந்து உயிர் ஆபத்தினை விளைவிக்கும் என்று யாருக்கும் தெரியாது.

நன்றி      

இலங்கையில் ஐஸ் போதை உற்பத்திநிலையமா? உண்மை என்ன??

“முன்னோடி இரசாயனங்கள்” (precursors) , இவை பல்வேறு வகையான சட்டப்பூர்வ, நுகர்வு  தயாரிப்புகளை (அழகுசாதனப்பொருட்ட்கள், வாசனை பொருட்கள், மருந்து பொருட்கள் …) உருவாக்கப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதேசமயம் இவை போதை பொருட்களின் உற்பத்திக்கும்  அத்தியாவசியப் பொருட்களாக உள்ளன. ஆச்சரியமாக உள்ளதா, உதாரணமாக இருமல் பாணிகளில் காணப்படும்  எபெட்ரின் (ephedrine) மற்றும் சூடோஎபெட்ரின்(Pseudo ephedrine) ஆகியவை மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்திக்கான முக்கிய முன்னோடிகளாகும். இவ்வாறான முன்னோடி இரசாயன பொருட்கள் போதை மருந்து கடத்தல் செய்பவர்களுக்கு சென்றடைந்தால் அவர்கள் மிக இலகுவாக போதை மருந்தினை உற்பத்தி செய்து கொள்வார்கள். முன்னோடி இரசாயனங்களின் அடிப்படை இரசாயன கட்டமைப்பில் மாற்றங்களை செய்வதன் ஊடக போதைப்பொருளாக மாற்றலாம்.

இலங்கையில் இவ்வாறான முன்னோடி இரசாயன பொருட்களின் இறக்குமதி, கண்காணிப்பு, பயன்பாடு என்பன இலங்கையில் தேசிய அபாயகர அவுடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் (National Dangerous Drugs Control Board (NDDCB). கட்டுப்படுத்தப்படுகின்றன. மேற்படி நிறுவனத்தில் முன்னோடி இரசாயனங்களினை இறக்குமதி செய்ய, உரிய நிறுவனங்களை பதிவுசெய்ய, முன்னோடி இரசாயனங்களினை பரிசோதிக்க, நிறுவனகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளவென தனியான பிரிவு ஒன்று இருக்கின்றது அதுதான் முன்னோடி இரசாயனங்களினை  கட்டுப்படுத்தும் பிரிவு Precursor Control Authority (PCA). இந்த முன்னோடி இரசாயனங்களின் இறக்குமதி, பயன்பாடு ….. போன்ற விடயங்கள் பின்வரும் சட்ட மூலம்  Conventions against Illicit traffic in Narcotic Drugs and Psychotropic Substances Act No. 01 of 2008  ஊடக கட்டுப்படுத்தப்படுகின்றது.

போதை மருந்து கடத்தல்காரர்கள் நேரடியாக போதை மருந்தினை கொண்டுவருவதிலும் பார்க்க முன்னோடி இரசாயன பொருட்களை நாட்டினுள் இலகுவாக கொண்டுவந்து போதை பொருளினை இலகுவாக உற்பத்தி செய்துவிடலாம். மேலும் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்பிக்கலாம் அல்லது குறைந்த தண்டனையினை பெற்றுக்கொள்ளலாம். இலங்கையில் பலவருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஆய்வுகூடம்/ தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். தென்னமெரிக்க நாடுகளில் இவ்வாறான பல்லாயிரக்கணக்கான ஆய்வுக்கூடங்கள்/ தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் அடிப்படையிலேயே அண்மையில் கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள்  உற்பத்தி செய்யும்  தொழில் சாலையினை இலங்கையில் நடத்தியதாக கூறப்படுகின்றது 

நன்றி

சீட் பெல்ட் ஏன் அவசியம்?

கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஆனது வீதிகளில் செல்லும் வாகனங்களில் இருக்கையில் இருப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் (ஆசன பட்டி) அணிய வேண்டும் என்று வலியுறுத்தி சட்டம் மூலம் ஒன்றை உருவாக்கியுள்ளது அத்துடன் அது மிகவிரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது . ஏற்கனவே சாரதியானவர் இந்த ஆசன பட்டியை அணிய வேண்டும் என்ற சட்டமூலம் இருந்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படாத வகையிலேயே இருந்து வருகின்றது அல்லது போலீசாரை கண்டவுடன் அணியும் விதமாகவும் இருந்து வருகின்றது.

சீட் பெல்ட்களின் செயல்திறன் வெறும் தத்துவார்த்தமானது மட்டுமல்ல; பல தசாப்த கால நிஜ உலக தரவுகளால் இது நிரூபிக்கப்படுகின்றது . தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தரவுகளின் படி, சீட் பெல்ட் அணிவது:

  1. முன் இருக்கையில் பயணிக்கும் கார் பயணிகளுக்கு ஆபத்தான காயம் ஏற்படும் அபாயத்தை 45% குறைக்கிறது.
  2. மிதமான முதல் கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தை 50% குறைக்கிறது.

இந்நிலையில் இந்த பதிவானது ஆசன பட்டி எவ்வாறு விபத்துகளில்  பொழுது பிரயாணிகளின் ஏற்படும் காயங்களின் தீவிரத்தன்மையினை குறைக்கின்றது என்பது பற்றி விளக்குகின்றது.

  1. வாகனம் ஒன்று பிரயாணிக்கும்  பொழுது வாகனத்தில் பிரயாணிக்கும் பிரயாணிகள் மற்றும் ஏனைய  பொருட்கள் யாவும் வாகனத்தின் வேகத்திலேயே பிரயாணிக்கும். இதனை நியூட்டனின் முதலாவது விதியானது தெளிவாக விளக்குகின்றது. விபத்து  நடைபெறும் பொழுது வாகனத்தின் வேகமானது சடுதியாக பூச்சிய நிலைக்கு வருகின்றது. ஆனால் வாகனத்தில் உள்ளிருக்கும் பிரயாணிகளின்  வேகமானது சிறிது நேரத்தில் பிற்பாடே பூச்சிய நிலைக்கு  வரும். இதன் காரணமாக வாகனத்தில் உள்ளிருக்கும் பிரயாணிகள் வாகனத்தினுள் முன்னோக்கி வீசப்படுவார்கள் அல்லது வாகனத்தில்  உள்ளிருக்கும்  முன்புற இருக்கைகள் மற்றும் ஏனைய பொருட்களுடன் மோதுவார்கள் இதனால் அவர்களுக்கு காயம் உண்டாகும். இவ்வாறு பிரியாணிகள் முன்னோக்கி அசைவதனை இந்த சீட் பெல்ட் ஆனது முற்றாக தடுக்கின்றது. மேலும் பிரியாணிகளின் அமர்முடுகளிற்கான  நேரத்தினை அதிகரித்து அவர்களில் தாக்கும் விசை இணை குறைக்கின்றது.
  2. விபத்தும் பொழுது ஏற்படும் அமர்வுகள் விசையினை இந்த சீட் பெல்ட் ஆனது பரந்துபட்ட வகையில் உடம்பில் தாக்க அனுமதிக்கின்றது. முக்கியமாக இடுப்பு பகுதியில் போட்டிருக்கும் பெல்ட் ஆனது  எமது இடுப்பு குழியில் உள்ள வன்மையான என்புகளின் மீது விசையை பரவச் செய்கின்றது. இதன் காரணமாக ஏற்படும் காயங்கள்  மற்றும் காயங்களின் தீவிர தன்மை குறைவாக இருக்கின்றது.
  3. சீட் பெல்ட் ஆனது பிரயாணிகளினை விபத்தின் பொழுது வாகனத்தின் வெளியே வீசப்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைக்கின்றது. முக்கியமாக சீட் பெல்ட்களில் நெஞ்சுக்கு குறுக்கே போட்டு இருக்கும் பெல்ட் ஆனது  இந்தப் பணியை சிறப்பாக செய்கின்றது.
  4. வாகனங்களில்  உள்ள பாதுகாப்பு பலூன்களானது தன்னிச்சையாகவே செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனினும். சீட் பெல்ட் உபயோகிக்கும் பொழுது, சீட் பெல்ட் ஆனது விபத்தின் பொழுது பிரியாணிகளை இருக்கைகளுடன்  இறுக்கி வைத்திருப்பதற்கு உதவுகின்றது . இந்நிலையில் பலூன் ஆனது மேலும் வினைத்திறனான வகையில் தொழிற்படுவதற்கு  சீட் பெல்ட் உதவுகின்றது.

இலங்கையில் பல வாகனங்களில் போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக சீட்  பெல்ட் என்ற போர்வையில் ஏதாவது ஒன்றினை பொருத்தி இருப்பார்கள் ஆனால் நவீன வாகனங்களில்  மேம்பட்ட சீட் பெல்ட் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன, அவை பயணிகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துகின்றன.

  1. ப்ரீ-டென்ஷனர்கள் (Pre-tensioners:): விபத்து ஏற்பட்டால், சென்சர்கள் சீட் பெல்ட்டை உடனடியாக இழுக்கும் ஒரு பொறிமுறையைத் தூண்டுகின்றன, எந்தவொரு தளர்வையும் நீக்குகின்றன. இது மோதலின் ஆரம்ப தருணங்களிலிருந்து பயணி தங்கள் இருக்கையில் உறுதியாகப் பிடிக்கப்படுவதை உறுதிசெய்கிறது,  மற்றும் அவர்கள் பலூன் (Airbag) தொழில்படுவதற்கு  உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.
  2. லோட் லிமிட்டர்கள் (Load Limiters): சீட் பெல்ட் ஆனது மார்பில் அதிக சக்தியை செலுத்துவதையும் கடுமையான விபத்தில் காயத்தை ஏற்படுத்துவதையும் தடுக்க இந்த அமைப்பு உதவுகின்றது, ப்ரீ-டென்ஷனர்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு . இது பயணிகளின் உடலில் ஏற்படும் தாக்கத்தின் உச்ச சக்திகளை உறிஞ்சி பயணிகளில் ஏற்படும் காயத்தின் தீவிர தன்மையினை குறைக்க உதவுகின்றது.

நன்றி

போதை தரும் “குஷ்”

அண்மையில் அரசியல் வாதி ஒருவர் “குஷ்” என்ற போதைப்பொருளுடன் கைதுசெய்ப்பட்டிருப்பாதக செய்திகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்தன. முன்னரும் இந்த வகையான போதைப்பொருள் இலங்கையில் கைப்பெற்ற பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. குஷ் என்றால் என்ன என்பதை இந்த பதிவு விளக்குகின்றது. கஞ்சா செடியில் பல்வேறு வகைகள் உண்டு அவற்றில் பிரதானமானவை

  1. Cannabis sativa
  2. Cannabis  indica

இது தவிர பல்வேறு கலப்பின வகைகளும் உள்ளன. இவற்றில் cannabis sativa ஆனது உடலுக்கு உற்சாகத்தினை கொடுக்கும் மறுதலையாக cannabis indica உடலினை தளர்த்தி உறக்க நிலைக்கு இட்டு செல்லும். இவ்வாறு இருவேறு விளைவுகளுக்கு காரணமாக அமைவது அவற்றில் இருக்கும் இரசாயனங்களின் விகித வேறுபாடே ஆகும்.

கஞ்சா செடியில் உள்ள பல்வேறு இரசாயன பதார்த்தங்களும் Cannabinoids என்ற பொதுப்பெயரினால் அழைக்கப்படும். இவற்றில் பொதுவானது Tetrahydrocannabinol (THC) மற்றும் Cannabidiol (CBD). மேலும் Cannabinol (CBN),Tetrahydrocannabinol acid (THCA) மற்றும் Cannabigerol (CBG) ஆகிய இரசாயன பதார்த்தங்களும் காணப்படும்.

தற்காலத்தில் கஞ்சா செடிகளில் உள்ள இரசாயனக்களின் விகித வேறுபாட்டினை வைத்து அறிவியலாளர்கள் மூன்றாக பிரிக்கின்றனர் (chemical varieties – chemovars)

வகை I: high THC

வகை II: THC/CBD combined

v III: high CBD

குஷ் போதைப்பொருளானது Cannabis indica இல் இருந்தே பெறப்படுகின்றது.  Cannabis indica ஆனது இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. முக்கியமாக இந்து குஷ் மலைத்தொடரில் இது அதிகளவில் காணப்படுகின்றது. இதன் காரணமாக “குஷ்” என்று அழைக்கப்படுகின்றது. மேலும் “குஷ்”  பின்வரும் பிரிவுகளை கொண்டிருக்கின்றது Afghan Kush, Hindu Kush, Green Kush,OG Kush, Bubba Kush மற்றும் Purple Kush.

குஷ் ஆனது  Cannabis indica இன் இருந்து பெறப்படும் இலைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் போன்றவற்றிற்கு  இரசாயன பொருட்களை விசிறி உலர்த்தி தயார்படுத்தப்படுகின்றது. 

                    முற்றும்

சித்திரவதையும் மரணமும் (பகுதி 1)

அண்மையில் யாழ் குடாநாட்டில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். இப்பதிவானது சித்திரவதைகள் எவ்வாறு மரணத்திற்கு வழி கோலுகின்றது என்பது பற்றியும் சித்திரவதையின் பொழுது எவ்வாறு காயங்கள் உண்டாகின்றன என்பது பற்றியும் விளக்குகின்ற

Palestinian Hanging

இவ்வாறான முறையில் ஒருவரினை நீண்ட நேரம் தொங்க விடும் பொழுது அவரின் தோள் மூட்டுக்கள் தமது எல்லையினை மீறிய அசைவினை காட்டும் மேலும் கைகளுக்குரிய brachial plexus நரம்பு அதிகம் இழுபடுவதன் காரணமாக பாதிப்படையும். இச்செயற்பாட்டின் பொழுது அதிக வேதனை உண்டாகுவதன் காரணமாக மரணம் சம்பவிக்கலாம்.

  • Flanga method

இந்த முறையின் பொழுது உள்ளம் காலில் அடிக்கப்படுவதினால் அதிக வேதனை உண்டாகும். இதனால் சந்தேக நபரிடம் இருந்து அதிக தகவல்களை பெறலாம் என்று கூறுவார்கள்.

  • Dhramasakara Method –

இந்த முறையிலும் சந்தேக நபரின் உள்ளம் காலில் அடிக்கும் பொழுது அவர் வேதனையில் சுற்றி சுழன்று வருவார். மேலும் சந்தேக நபரின் கை மற்றும் கால்களுக்கு உரிய நரம்புகள் பாதிக்கப்படலாம்.

  • Wet Submarine

இம்முறையின் பொழுது நீரானது (பொதுவாக மலசலகூட நீர்) சுவாச பாதையினுள் செல்வதன் காரணமாக மூச்சு திணறி இறப்பு ஏற்படலாம் அல்லது ஒரு சில நாட்களின் பின்னர் நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.

  • Dry Submarine –

இம்முறையின் பொழுது பொலித்தீன் பை முகத்தினை சுற்றி கட்டப்படுவதினால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.

  • Water Boding –

இம்முறையின் பொழுது நீரானது  சுவாச பாதையினுள் செல்வதன் காரணமாக மூச்சு திணறி இறப்பு ஏற்படலாம்.

  • Hanging by hand nakedly-

இம்முறையின் பொழுது நிர்வாணமாக சந்தேக நபர்கள் நீண்ட நேரம் தொங்க விடப்பட்டு தாக்கப்படுவார்கள். நீண்ட நேரம் தொங்குவதன் காரணமாக கைகளின் நரம்புகள் பாதிக்கப்படலாம்.

  • Crushing of male genitalia

இம்முறையின் பொழுது ஆண்குறியானது மேசை லாச்சியில் வைத்து நெரிக்கப்படும். இதன் பொழுது அதிகளவு வேதனை உருவாகும், இதன் காரணமாக மரணம் ஏற்படும்.

மேற்குறித்த சித்திரவதை முறைகளே பொதுவாக இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.  மேற்குறித்த முறைகளை தவிர சித்திரவதை மேற்கொள்ளவர்கள் தமது திறமைக்கு ஏற்ப புதுப்புது முறைகளை வடிவமைத்து கொள்வார்கள்.

தொடரும்…

பெருவிரலின் பலம்

வில் வித்தையில் ஒருவன் பயிற்சி பெறவேண்டுமானால், அவனது பெருவிரல் (கட்டைவிரல்) தான் மிக முக்கியமானது. மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை அறிந்து அருச்சுனன் மட்டுமே மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் ஏகலைவன் வில்லைத் தொடக்கூடாது எனத் தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவு செய்தார் துரோணர். ஏகலைவனை நோக்கி “உனது வலதுகைக் கட்டைவிரலைத் தா” என்றார். ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கத்தியை எடுத்தான் தனது வலதுகைக் கட்டைவிரலை வெட்டி எடுத்து துரோணரின் காலடியில் வைத்தான். ஒருவன் வலது கைக் கட்டைவிரல் இல்லாமல் வில் எய்ய முடியாது.


இக்கதையில் இருந்து கையில் உள்ள பெருவிரலின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம். இவ்வாறே காலில் உள்ள பெருவிரலும் சமநிலையான, வேகமான நடத்தலுக்கு உதவுகின்றது. அத்துடன் முக்கியமாக பலமான விசையினை கால் மூலம் பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களில் காலில் பெருவிரல் இருத்தல் முக்கியமானது. அவ்வாறு இருந்தால்தான் பலமான விசையினை ஓர் இடத்தில் பிரயோகிக்க முடியும். முக்கியமாக வாகன சாரதிகள் மற்றும் உதை பந்தாட்ட வீரர்களுக்கு காலில் பெருவிரல் இருத்தல் பெரும் பலமே.

அண்மையில் வாகனத்தின் (Manual transmission vehicle) சாரதி ஒருவர் அதுவும் முந்தைய விபத்தின் காரணமாக தனது வலது கால் பெருவிரலை இழந்த ஒருவர் விபத்தினை ஏற்படுத்தி இருந்தார். ஒருசில வினாடிகளில் அவரினால் எவ்வாறு ஓர் பலமான விசையினை கொடுத்து அதிவேகமாக செல்லும் வாகனத்தினை நிறுத்த முடியும் என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

இலங்கை போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான சாரதிகள் ” நான் சப்பாத்து அணிந்து வாகனம் செலுத்துவேன்” போன்ற பொய் வாக்குறுதிகளை இலஞ்சத்தினை கொடுத்து இலகுவாக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுகொள்ளலாம் அல்லது புதுப்பித்து கொள்ளலாம் என்பது கவலை தரும் விடயம் ஆகும்.
முற்றும்

சிறுவன் பட்டினி சாவா? உண்மை நிலவரம் என்ன?

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கிழக்கிலங்கையில் சிறுவன் ஒருவன் பட்டினியால் மரணத்தினை தழுவியதாக முகநூல் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் கூட தென்னிலங்கையில் இவ்வாறு மரணங்கள் சம்பவித்ததாக செய்திகள் பரவிய பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது இவ்வாறான நிலையில் உண்மையிலேயே இவ்வாறு பட்டினி சாவுகள் நடைபெறுமாக இருந்தால் அது மிகவும் கவலை தரும் விடயமாகும். இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் பல சிறுவர்களின் வீடுகளில் வறுமை நிலை இருக்கின்றது, இவ்வாறு வறுமை இருக்கும் பொழுது மரணிக்கும் சிறுவர்கள் அனைவரும் வறுமையால்  தான் மரணித்தனர் அதாவது  பட்டினி சாவடைந்தனர் என கூறுவது விஞ்ஞான ரீதியில் பொருத்தம் அற்றது. பலரும் இறந்தவர்களின் உடல் மிக கடுமையாக மெலிவடைந்து இருக்கும் இடத்து எவ்விதமான பரிசோதனைகளும் இன்றி இறந்தவர் பட்டினி சாவின் மூலமே மரணமடைந்துள்ளார் என கூறுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

ஒருவரின் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான போசாக்கு உணவுகள் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு கிடைக்காமல் போகும் பொழுது அந்த நபர் பட்டினி சாவினை எதிர் கொள்வர்.

ஒருவர் பல்வேறு மருத்துவ காரணங்களினால் போதிய உணவு இருந்தும் அதனை உண்ண முடியாத நிலையில் இருப்பர் உதாரணமாக Anorexia nervosa, Dementia மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மன நோய்கள் உள்ளவர்கள் போதிய உணவு மற்றும் நீர் உள்ளெடுக்க மாட்டார்கள் இதன் காரணமாக அவர்கள் மரணம் அடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

வேறுசிலருக்கு உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் சில நோய்கள் காரணமாக அவர்களினால் உணவினை சமிபாடு அடையவோ அல்லது சமிபாடு அடைந்த உணவினை அகத்துறிஞ்சவோ முடியாமல் இருக்கும் உதாரணமாக Ulcerative colitis, Crohn’s disease நோய் உள்ளவர்கள்.

இது தவிர ஏதாவது ஒரு காரணத்தினால் உணவினை விழுங்க முடியாமல் இருக்கின்றவர்கள் உதாரணமாக உணவினை வாய்க்குழியில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் களம் என்ற உணவு குழாயில் கட்டி அல்லது விழுங்குவதில் உள்ள பிரச்சணைகள் காரணமாக அதாவது நரம்பு சம்பந்தமான பிரச்சனை காரணமாக (Parkinson’s disease, multiple sclerosis, dementia, and motor neurone disease) அவர்கள் போதிய உணவினை மற்றும் நீரினை உட்கொள்ள முடியாமல் இருக்கும்.

மேலும் கடுமையான நோய்கள் காரணமாக படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிகள், ஈரல் நோயாளிகள்  போதிய உணவு மற்றும் நீரினை உள்ளெடுக்க மாட்டார்கள். மேலும் சிறுவர்களை பொறுத்த வரை பிறப்பில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் காரணமாக (Cerebral palsy, cleft lip and palate, and other congenital disorders) அவர்களினால் போதிய உணவு மற்றும் நீரினை உள்ளெடுக்க முடியாத நிலைமை காணப்படும்.

இவ்வாறு பல்வேறு மருத்துவ காரணங்களினால் ஒருவர் போதிய உணவு மற்றும் நீரினை நீண்ட காலத்திற்கு உள்ளெடுக்க முடியாமல் போகும் பொழுது அவர்களின் புற உடல்  உருவவியல் தோற்றம் பட்டினி சாவினை எதிர்நோக்கும் ஒருவரின் புற உடல் உருவவியல் தோற்றத்தினை நிச்சயம் ஒத்திருக்கும். இவ்வாறான நிலைமைகளில் நாம் உரிய உடற்கூராய்வு பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் குறித்த நபர் பட்டினி சாவடைந்தார் என கூறுவது விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அன்று.

நிலநடுக்கம்  அல்லது மண்சரிவு காரணமாக கட்டிட  இடிபாடுகளில் உயிருடன் சிக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் அதாவது சடுதியாக பட்டினி (Acute starvation) சாவடைந்த ஒருவரின்புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் நீண்டகாலமாக (Chronic starvation) போதிய நீர் மற்றும் உணவு கிடைக்காமல் பட்டினி சாவடைந்த ஒருவரின்புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

சிறுவர்களில் ஏற்படும் பட்டினி சாவென்பது எதிர்வுகூறத்தக்கது, முற்றாக தடுக்கப்பட கூடியது. மேலும் ஓர் இடத்தில் சிறுவர்களின் பட்டினி சாவென்பது நிகழுமாயின் அந்த பிரதேசத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பு மற்றும் அரச சிவில் நிர்வாக கட்டமைப்பு ஆகியன செயற்பாடு அற்ற நிலைமையிலேயே உள்ளன என்பதே உண்மை ஆகும்   

முற்றும்  

வைத்தியர்களும் போதை மாத்திரையும்

அண்மைக்காலங்களில் பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் போதை மாத்திரைகளை வைத்தியர்கள் விற்பனை செய்வதாகவும் அல்லது அதிகளவு கொள்வனவு செய்வதாகவும் செய்திகள் வெளிவந்து பலரையும் ஆச்சரியத்திற்க்கு உள்ளாக்கின மேலும் பலர் இவ்வாறான போதை மாத்திரைகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் போதை மாத்திரை என்றால் என்ன அது எவ்வாறான விளைவுகளை உண்டு பண்ணும் என்பது தொடர்பாக இந்த பதிவு ஆராய்கின்றது.

1.போதை மாத்திரை என்றால் என்ன?

Pregabalin அல்லது Gabapentin என்ற பொதுப்பெயரினை கொண்ட மாத்திரைகளே பல்வேறு வர்த்தக பெயர்களில் இவ்வாறு போதை மாத்திரை என்ற பெயரில் பலரினாலும் பாவிக்கப்படுகின்றன.

2.  இந்த மாத்திரைகள் என்ன என்ன வைத்திய தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன?

பொதுவாக இந்த மாத்திரைகள் வலிப்பு நோய்க்கு பாவிக்கப்படுகின்றது. மேலும் நரம்புகளினால் ஏற்படும் நோவுக்கு வலி நிவாரணியாகவும் பாவிக்கப்டுகின்றது. இவை தவிர மன பதகளிப்பு … போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு பாவிக்கப்படுகின்றது.

3. Pregabalin அல்லது Gabapentin ஆகிய இரு மாத்திரைகளும் ஒன்றா?

இல்லை இவ்விரு மாத்திரைகளும் ஒரே வகையானவை இவற்றின் கட்டமைப்பு gamma-aminobutyric acid (GABA) என்ற நரம்பு கணத்தாக்கத்தினை கடத்தும் பதார்தத்தினை ஒத்திருக்கும். gamma-aminobutyric acid (GABA) ஆனது எமது மூளையில் கணத்தாக்கத்தினை கடத்தாது நோவினை குறைக்கும்.

4.   Pregabalin அல்லது Gabapentin ஆகிய மாத்திரைகளில் போதைப்பொருள் இருக்கின்றதா? நிச்சயமாக இந்த மாத்திரைகள் நார்க்கோர்ட்டிக் அல்லது ஒபிஒய்ட் வகையான மருந்து மாத்திரைகள் அல்ல. மேற்குறித்த மாத்திரைகளில் போதை பொருட்கள் ஏதும் அடங்கியிருக்காது.

5. அவ்வாறு எனில் மேற்குறித்த மாத்திரைகள் ஏன் போதை மாத்திரைகள் அல்லது போதை வில்லைகள் என்று அழைக்கப்படுகின்றது?

குறிப்பாக போதை மருந்து பாவிப்பவர்கள் மேற்குறித்த மாத்திரைகளை பாவிப்பதன் காரணமாகவே அவை தவறான காரண பெயராக போதை மாத்திரை என அழைக்கப்படுகின்றன.

6. மேற்குறித்த மாத்திரைகளை பாவிக்கும் பொழுது போதை உண்டாகுமா?

இந்த மாத்திரைகளை தனியே பாவிக்கும் பொழுது மருத்துவ ரீதியாக போதை உண்டாகாது. எனினும் இம்மாத்திரைகளின் பக்கவிளைவுகளான சோர்வுத்தன்மை, தளர்வான நடை, மங்கலான பார்வை, அதிக நித்திரை, கனவுலகில் மிதத்தல், பார்வையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் .. போன்ற பல்வேறு பக்க விளைவுகள் போதைப்பொருள் அல்லது மதுபானம் பாவித்தால் வரும் விளைவுகளை ஓத்திருப்பதினால் சிலர் இந்தவகை மாத்திரையினால் போதை உண்டாகும் என்ற நம்பிக்கையில் இதனை பாவிக்கின்றனர்.
மேலும் இங்கு pregablin மற்றும் gabapentin என்பன பூஸ்டர் டோஸாக தொழிற்படும் தன்மை உடையவை

7. பூஸ்டர் டோஸாக தொழில் படுதல் என்றால் என்ன?
வேறு ஓர் போதைப்பொருள் அல்லது மதுபானத்துடன் சிலவகை பொருட்களை சேர்த்து பாவித்தால் அதிக போதை உண்டாகும் மற்றும் போதை அதிக நேரம் நிலைத்து நிற்கும்.


8. Pregablin மற்றும் gabapentin ஆகிய மருந்துகளை மருத்துவர்கள் சேமித்து வைப்பது அல்லது நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது குற்றமா?
இல்லை. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் அல்லது பல் மருத்துவர் ஒருவர் மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும். அவர்களுக்கு சட்ட ரிதீயான அங்கீகாரம் உண்டு. இவ்வாறே நார்கோடிக் மருந்துகளை (உண்மையான போதை மருந்துகளை) பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும்.

9. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபர் அதற்கு அடிமையாகும் தன்மை உருவாகுமா?
அண்மைக்காலத்தில் வெளிவந்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் மேற்குறித்த மருந்துகள் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பாவிக்கும் இடத்து பாவனையாளரை அடிமையாக்கும் தன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தற்பொழுது அல்லது முன்பு பல்வேறுபட்ட போதை பொருட்களை பாவிப்பவர்கள் இவற்றிற்கு அடிமையாகும் தன்மை அதிகம்.

10. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை சாதாரண குடிமகன் ஒருவர் தனது உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகுமா?
ஆம். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் Poisons, Opium and Dangerous Drugs (Amendment) Act No. 41 of 2022 (23/11/2022) இன் பிரகாரம் சாதாரண குடிமகன் வைத்தியரின் உரிய பரிந்துரை இன்றி மேற்குறித்த மருந்துகளை அதிகமாக வைத்திருத்தல் குற்றமாகும்.


11. இப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
இலங்கையின் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் வைத்தியர்கள் களஞ்சியப்படுத்தக் கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய அதிகூடிய அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் வைத்தியர்கள் மருத்துவ ஒழுக்கவியலுக்கு அமைய தமது நோயாளர்களின் தேவைப்பாட்டிற்கு அமைய மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்து பரிந்துரைக்கலாம். மேலும் நார்க்கோர்ட்டிக் மருந்து விற்பனையின் பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கைக்கொள்ளலாம்.

முற்றும்