ஒரே பக்கமாகவா?

அவளுக்கு இருபத்தி இரண்டு வயது தான். தலை நகரின் பெண்களுக்குக்கான அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் கடமை ஆற்றுகின்றாள். அன்று காலையில் அவளின் ஆண் நண்பனின் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு வரும் பொழுதுதான் அந்த விபரீதம் நடைபெற்றது. அவர்கள் வரும் பொழுது நாய் ஒன்று வீதியின் குறுக்காக செல்ல முற்பட்ட வேளையில் அவளின் ஆண்நண்பன் மோட்டார் சைக்கிளின் பிரேக்கினை சடுதியாக பிரயோகித்தான். மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் இரு கால்களும் ஒரே பக்கமாக அமைந்த வண்ணம் பிரயாணம் செய்த அவள் சடுதியான பிரேக்கின் பிரயோகத்தில் நிலை தடுமாறி ரோட்டில் வீழ்ந்தாள். அவளுக்கு முகத்திலும் முழங்காலிலும் உரஞ்சல் காயங்கள் தான் ஏற்பட்டன. நல்ல வேளையாக என்பு முறிவுகளோ, பிளவுக் காயங்களோ (Laceration) இல்லை. அவளுக்கோ ஒரே கவலை அதாவது தனது முகத்தில் காயம் வந்துவிட்டது அது தழும்பாக மாறிவிட்டால் அவள் வேலை செய்யும் கடையில் வேலையில் இருந்து நிறுத்தி விடுவார்கள் என்ற பயம் வேறு.

07
நான் எனக்கு தெரிந்த மொழியில் என்னால் ஆன மருத்துவ விளக்கங்களினை கொடுத்தேன். முக்கியமாக உரஞ்சல் காயமானது எமது தோலின் மேலாக கரடுமுரடான மேற்பரப்பு ஒன்று பட்டு இழுபடும் பொழுது உண்டாகின்றன. இதன் பொழுது பொதுவாக எமது தோலின் மேற்பகுதி தான் அகற்றப்படும். இதன் காரணமாக இவ்வகையான காயங்கள் ஆறும் பொழுது பொதுவாக தழும்புகள் உருவாக்குவதில்லை. விதி விலக்காக கிருமித்தொற்று ஏற்படும் பொழுதோ அல்லது காயம் தோலின் உட்படைக்கு செல்லும் பொழுதோ தழும்புகள் உருவாகும்.

நம்ம பெண்களில் பலருக்கு உள்ள பிரச்சனை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்யும் பொழுது எவ்வாறு இருந்து பயணிப்பது என்பதே அதாவது ஒருபக்கமாக கால்களினை போடுவதா அல்லது இருபக்கமுமாய் போடுவதா என்பதே. குட்டை பாவாடை அணிப்பவர்களுக்கு இருபக்கமும் பிரச்சனை தான். பெண்களில் பலர் தங்களின் கால் தெரிந்து விடும் என்பதற்காக கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாய் வைத்தே பிரயாணம் செய்கின்றனர். இது உண்மையில் ஆபத்தானது ஏனெனில் இவர்கள் சடுதியான பிரேக் பிரயோகத்தின் பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழக்கூடிய ஆபத்துண்டு. சில இதுபற்றி இலங்கையின் மோட்டார் வாகன சட்டம் ஏதாவது சொல்கின்றதா? என்று பார்ப்போம்.

இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓர் பிரயாணி மோட்டார் சைக்கிளில் கால்களை இருபக்கமும் வைத்தவாறே பிரயாணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது . தென்னிலங்கையில் பொதுவாக போக்குவரத்து பொலிஸார் இதனை கடுமையாகக் பார்த்துக் கொள்வர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுவாக இதனைக் கண்டு கொள்வதில்லை.

(Motor Traffic Act. Section 158: Pillion riding: The driver of a motor cycle which has no side-car attached thereto shall not carry more than one person on the cycle when it is used on a highway, and such person shall not be carried otherwise than sitting astride the cycle on a seat securely fixed thereto behind the driver’s seat.)

சுஜித் – எவ்வாறு இறந்தான்?

அண்மையில் தமிழ் நாட்டில்  சுஜித் என்ற சிறுவன் அவனது வீட்டின் அருகில் தோண்டப்பட்ட  பாவனையில் இல்லாத ஆழ் துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவிக்கொண்டான். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு மரணம் ஏற்படுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது.

சாதாரணமாக இவ்வாறு ஆழத்தில் வீழ்ந்தவுடன் சிறுவனுக்கு உணவு மற்றும் நீர் என்பன கிடைக்காது போய்விடும். இவை கிடைக்கவிடினும் மரணம் உடனடியாக ஏற்படபோவதில்லை. முதலில் மனிதனின் சக்தி தேவைக்கான குளுக்கோசு மனிதஉடலில் இருந்து முற்றாக முடியும் அதன் பின்னர் அவனது ஈரலில் உள்ள கிளைக்கோசு  எனும் பதார்த்தம் ஆனது குழுகோசாக  மாற்றமடையும். அதுவும் முடிந்தவுடன் மனித உடலில் தோலின் கீழ்  உள்ள கொழுப்பு, தசையில் உள்ள  புரதம் போன்றன குளுக்கோசாக  மாற்றப்படும். இந்த செயன்முறைக்கு Gluconeogenesis என்று மருத்துவத்தில் பெயர் (Gluconeogenesis  is a metabolic pathway that results in the generation of glucose from certain non-carbohydrate carbon substrates). மனிதன் ஒருவருக்கு நீர் மற்றும் உணவு   ஆகிய இரண்டும்  கிடைக்காவி்டின் சராசரியாக 10- 12 நாட்கள்  உயிர் வாழ்வார். நீர் கிடைத்து, உணவு மட்டும் கிடைக்கவிடின் 6- 8 கிழமைகள் வரை உயிர் வாழ்வர் . உடனடி பட்டினி சாவின் (Acute starvation) பொழுது ஒருவர் உயிர் வாழும் காலம் ஆனது பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படும். அவை யாவன

  1. வயது –  சிலர் நினைப்பர் மனிதன் ஒருவன் ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருந்தால் அவனுக்கு உணவோ அல்லது சக்தியோ தேவைப்படாது என்று. இது தவறானது. சாதாரணமாக சுவாசம், கலங்களின் செயற்பாடு… போன்றவற்றிக்கு குறிதளவு சக்தி தேவை (Basal metabolic rate (BMR) is the rate of energy expenditure per unit time by endothermic animals at rest).  சிறுவன் ஒருவனுக்கு ஒருநாளைக்கு வயது வந்தவர்களுக்கு தேவைப்படும் சக்தியில் அதிகம் தேவை.
  2. பால் – பெண்களுக்கு தோலின் கீழ் அதிகளவு கொழுப்பு படிவு உள்ளதன் காரணமாக அவர்கள் பட்டினியை அதிகம் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்.
  3. முன்னைய உடல் நிலை பட்டினிக்கு முன்னர் ஒருவர் மிக சிறந்த உடல் நிலையினை கொண்டிருப்பராயின் அவரினால்  அதிகளவு காலத்திற்கு பட்டினியை தாங்கிக் கொள்ள முடியும்
  4. சூழல் வெப்பநிலை பட்டினி சாவினை எதிர் நோக்கி இருக்கும் ஒருவர் இருக்கும் சூழலின் வெப்பநிலையானது அவரின் உடல் வெப்பநிலையினை விட கூடவாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவர் பட்டினியை அதிக காலம் தாங்க முடியாது. பொதுவாக ஆழ் துளை கிணறுகளில் அதிக வெப்பம் (Hyperthermia) நிலவும்.

சிறுவன் சுஜித் சம்பவத்தில் மேற்குறித்த காரணிகள் எல்லாம் தப்பி உயிர் வாழ்வதற்கு பாதகமாகவே இருந்தன என்பது குறிபபிடத்தக்கதாகும்.

சிறுவன் சுஜித் சம்பவத்தில் இன்னோர் முக்கிய காரணி பாதகமாக அமைந்தது அது என்ன?

நாம் சாதாரணமாக சுவாசிக்கும் பொழுது எமது நெஞ்சு அல்லது மார்பு அறை சுவரானது மேலும் கீழுமாகவும், உள்நோக்கியும் வெளிநோக்கியும் அசைந்த வண்ணம் இருக்கும். இதன் காரணமாக தான் அமுக்க வேறுபாடு உண்டாகும். அப்பொழுதுதான் எமது நுரையீரல் சுருங்கி விரியும் , அவ்வாறு நடைபெறும் பொழுது தான் சூழலில் உள்ள காற்றானது நுரையீரலுக்கு உட்சென்று வெளியேறும் .

fb_img_15720822302335802349075250392832.jpg

இங்கு சிறுவன் நாட்கள் செல்ல செல்ல மேலும் கீழே கீழே  சென்று இறுக்கமாக மாட்டிக்கொண்டான் . இதன் பொழுது நெஞ்சரை சுவரின் அசைவு முற்றாக தடைப்படும் . இதனால் சடுதியாக இறப்பு ஏற்படும். இவ்வாறான நிலை traumatic asphyxial death என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கபடும். இவ்வாறு மிக இறுக்கமான இடங்களில் இருக்கும் நபர்களுக்கு குழாய் மூலம் ஒட்சிசன் கொடுத்தாலும் பெரிய பிரயோசனம் ஒன்றும் நிகழப்போவதில்லை. ஏனெனில் கொடுக்கும் ஒட்சிசனானது  வினைத்திறன் மிக்க முறையில் நுரையீரல் லினை அடையாது. சாதாரண ஓர் மனிதனுக்கு 3 -5 நிமிடங்களுக்கு மூளைக்கு தேவையான ஓட்சிசன் கிடைக்காவிடில் கூட இறப்பது ஏற்படும் நிலையில். சிறுவன் சுஜித்தின் நிலை சொல்லி விளங்கவேண்டியதில்லை.

asp

மேலே உள்ள படம் ஆனது traumatic asphyxial death நடைபெற்ற நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. இறுதியாக இனிவரும் காலங்களில் இவ்வாறன அநியாய இறப்புகளை தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

மண் பாணையினால் ஆபத்தா?

இன்றைய உலகில் நன்னீர் பற்றாக்குறை பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதிலும் இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் வரட்சி, பருவ மழை வீழ்ச்சி போதாமை. கட்டுப்பாடற்ற நிலக்கீழ் நீர்ப்பாவனை போன்றவற்றினால் நன்னீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி போத்தல் குடிநீர் விற்பனை நிறுவனங்கள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்தி பெருமளவு இலாபம் ஈட்டி வருகின்றன என்பது உண்மை . மேலும் பொதுமக்களில் பெரும்பாலானோர் போத்தல்களில் வரும் குடி நீர் மிகவும் பாதுகாப்பானது என எண்ணுகின்றனர். அத்தோடு சிலர் அதனை கெளரவமாக வேறு  கருதுகின்றனர். இது இவ்வாறு இருக்க சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்களில் மண்பானைகளில் நீரினை சேகரித்து அருந்துவது மிகவும் பாதுகாப்பானது என அவ்வப்போது பல பதிவுகள் இடப்படுகின்றன. அவற்றின் உண்மை தன்மையினை ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

சாதாரணமாக ஓர் திண்மத்தினை நாம் ஓர் திரவம் ஒன்றில் இட்டால் அது அத்திரவத்தில் கரையக்கூடிய திண்மம் எனில் முற்றாகவோ பகுதியாகவோ கரையும், கரைய முடியாத திண்மம் எனில் அது எமது வெற்று கண்ணுக்கு கரையாத மாதிரி தோன்றும் ஆனால் அதன் மேற்பரப்பில் இருந்து மிகமிக சிறிதளவு திண்மம் அதாவது நனோ கிராம் அல்லது மைக்ரோ கிராம் அளவில்   தொடுகையில் உள்ள திரவத்தில் கரையும்.

இவ்வாறே மண் பாணையில் நீரினை சேமித்து வைக்கும் பொழுது அந்த மண்பாணை ஆக்கப்பட்டுள்ள மண்ணில்  உள்ள உலோகங்கள் மற்றும் உப்புக்கள் என்பன நீரில் கரையும். அதன் மூலம் அவை மனிதனை அடையும் . அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இவ்வாறு மண்பானைகளில் சேமித்து வைக்கப்பட்ட நீரில் ஆர்செனிக், கட்மியம் போன்ற பார உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பானைகள் குறிப்பாக இலங்கையின் வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள மண்ணில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறித்த மாகாணங்களில் அளவுக்கு அதிகமான ஆர்செனிக், கட்மியம் போன்ற பார உலோகங்கள் நீரில்,  அங்கு உற்பத்தி செய்யப்படும் சில உணவு வகைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. மேற்குறித்த மாவட்டங்களில் அதிகளவு சிறுநீரக செயலலிழப்பு நோயாளிகள் உருவாவதற்கு இவையும் ஒரு காரணம் என்று நம்பப்படுகின்றது.

887

இவ்வாறு மிகமிக சிறிய அளவில் இவ்வாறன பார உலோகங்கள் உடலில் சேர்வதினால் மனிதனின் உடல் நலத்திற்கு கேடு உண்டாவது சாத்தியமா? நீண்ட காலப்போக்கில் இவ்வாறு மிகமிக சிறிய அளவில் சேரும் இவ்வாறான உலோகங்களினால் நிச்சயம் பாதிப்பே. அதுவும் சிறுவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும். இதற்கு சிறந்த உதாரணம் பண்டைய ரோம சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி. அண்மையில் விஞ்ஞானிகள் ரோம ராச்சியத்தில்  மக்கள் ஈயத்தில் செய்யப்பட்டுள்ள பாத்திரங்கள், நீர்க் குழாய்கள் போன்றவற்றினை அதிகளவில் பயன்படுத்தியமையினாலும் மேலும் மருந்தாக ஈயத்தினை பயன்படுத்தியமையினாலும்  அவர்கள் ஈயத்தினால் நஞ்சாதலுக்கு (Chronic lead poisoning) உட்பட்டு நீண்ட காலப்போக்கில்  உடல் ஆரோக்கியம் குறைந்தமையே ரோம சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு ஏதுவான காரணங்களில் ஒன்று என கண்டு பிடித்துள்ளனர். இது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் அதிகளவு ஈயம் இருப்பதன் மூலம்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

888

மண் பானையில் சேமித்து வைத்திருக்கும் நீரினை அருந்தும் பொழுது ஏற்படும் மன  திருப்திக்கு அளவே இல்லை. அப்படியென்றால் இவற்றுக்கு  என்னதான் தீர்வு? மண்ணிலாலான பாத்திரங்களை வாங்கி பாவிக்கும் முதல் அதனுள் நீரினை இட்டு ஒருசில தடவைகள் கொதிக்கும் வரை நன்றாக சூடாக்க வேண்டும். அதன் பின்னர் கொதித்த நீரினை வெளியே  ஊற்றவேண்டும். இவ்வாறு தொடுகையில் இருக்கும் நீரின்  வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது மண் பாத்திரத்தில் உள்ள பார உலோகங்களான ஆர்செனிக், கட்மியம் போன்றன நீரில் அதிகளவு கரையும். இதன் பின்னர் மண் பாத்திரத்தில் ஆர்செனிக், கட்மியம் போன்றவற்றின் அளவு  இல்லாமல் போகும். மேலும் மண் பாத்திரத்தில் நீரினை சேமிக்கும் பொழுது அந்த நீரானது இயற்கையாகவே கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது என்ற கருத்தெல்லாம்  விஞ்ஞான  ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

நஞ்சு ஆனால் நஞ்சல்ல!!!

இன்று தொலைக்காட்சி சேனல்களை பார்த்தால் அதில் வரும் பெரும்பாலான விளம்பரங்கள் பல்வேறுபட்ட தொற்று நீக்கிகள், கிருமி நீக்கிகள், கைகழுவும் திரவங்கள் (hand sanitizer), சவர்க்காரங்கள் சம்பந்தமானவையே. இவை பல்வேறுபட்ட வர்த்தக நாமங்களில் பல விலை வித்தியாசங்களில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் இவற்றினை உற்பத்தி செய்யும் கம்பெனிகள் பெரும் தொகையினை இலாபம் ஈட்டுகின்றன என்பது வெள்ளிடை மலை. அண்மையில் சந்தைக்கு வந்த கைகளை சுத்தப்படுத்தும் ஒருவகையான கைகழுவும் திரவத்தில் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் (alcohol) உள்ளதால் அதனைப்பாவிப்பது உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் என்ற வகையில் சில செய்திகள் வெளிவந்தன. இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் அங்கு விளம்பரப்படுத்தப் படுத்தப்பட்ட கைகழுவும் திரவத்தினை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுதினால் கைகளை கழுவ வேண்டிய தேவை இல்லை. குறிப்பாக இந்த கைகழுவும் திரவம் ஆனது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து உற்பத்தி செய்யப்படுகின்றது.

இனி விடயத்திற்கு வருவோம். 90 வீத செறிவு கொண்ட மதுசாரத்தினை உள்ளடக்கிய இந்த கைகழுவும் திரவத்தினை பாவிக்கும் பொழுது நாம் நஞ்சாதலுக்கு உட்படுகின்றோமா? என்பதே இப்பொழுதுள்ள கேள்வி.

நாம் உள்ளேடுக்கும் மருந்து அல்லது நஞ்சானது எமது உடலில் குறித்த அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுதே அதாவது இரத்தத்தில் அதன் செறிவு குறித்த அளவினை தாண்டும் பொழுதே நாம் நஞ்சாதலுக்கு உள்ளவோம். மேலும் ஒரு மனிதனை கொல்ல தேவையான நஞ்சின் அல்லது மருந்தின் அளவு Lethal Dose (LD) என்று அழைக்கப்படும். இது மருந்து அல்லது நஞ்சிற்கு ஏற்றவாறு வேறுபடும். இந்த அளவானது மருந்து அல்லது நஞ்சினை உள்ளெடுக்கும் மனிதனின் உடல் நிறை, வேறு நோய்கள் உள்ள நிலமை , குறிப்பாக சிறுநீரக மற்றும் ஈரல் போன்றவற்றின் தொழில் பாடுகள் பாதிக்கபட்டுள்ளமை போன்றவற்றில் தங்கி உள்ளது.

02

நாம் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் கொண்ட ஒரு போத்தலை (750ml) ஒரே தடவையில் மடமட வெனக்குடித்தால் நிச்சயம் வளர்ந்த மனிதன் ஒருவனுக்கு நஞ்சாதல் (intoxication) ஏற்படும்.

இங்கு பயன்படுத்தப்படும் கைகளை சுத்தமாக்கும் திரவத்தில் 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் இருந்தாலும் ஒருசில தடவைகள் பயன்படுத்தும் பொழுது அது மிக குறைந்த அளவிலேயே உடலை அடையும் . அந்த மிகச்சிறிய அளவினால் மனித உடலில் அதாவது சிறுவர்களின் உடலில் எந்தவிதமான தீங்குகளை ஏற்படுத்த முடியாது. அவ்வாறே பாதகமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்த அதன் அளவு dose போதாது. இதேவேளை சிறுவர்கள் அந்த கைகள் கழுவும் திரவம் அடங்கிய போத்தலின் உள்ளடக்கம் முழுவதினையும் ஒரேதடவையில் குடித்தால் நிச்சயம் இறப்பு ஏற்படா விடினும் ஒரு சில பாதக விளைவுகள் ஏற்படும். இவ்வாறே இதில் இருக்கும் மற்றைய இரசாயன பாதார்த்தங்களும் சிறிய அளவில் இருப்பதால் மனிதருக்கு தீங்கில்லை.

90 வீத செறிவு கொண்ட மதுசாரம் ஆனது ஓர் சிறந்த தொற்று நீக்கி ஆகும். இதன் காரணமாக இது சாதாரணமாக வைத்திய துறையில் பெருமளவில் பாவிக்கப்படுகிறது. முக்கியமாக அதிதீவிர சிகிச்சை பிரிவுகள், சில நோயாளர் விடுதிகள் போன்றவற்றில் வைத்தியர் அல்லது ஏனைய ஊழியர்கள் ஒரு நோயாளியினைப் பரிசோதித்த பின்னர் மற்றைய நோயாளியை பரிசோதிக்க முன்னர் இவ்வாறான 90 வீத செறிவு கொண்ட மதுசாரம் உள்ளடங்கிய திரவங்களை பயன்படுத்தி தமது கைகளை மூலம் சுத்தப் படுத்துவார்கள்.

இவ்வாறே நாம் பனடோலுக்கு பதிலாக பயன்படுத்தும் பனடீன் என்ற மாத்திரையில் codeine என்ற போதைப்பொருள் மிக சிறிய அளவில் காணப்படுகின்றது. இவற்றினை பாவிக்கும் பொழுது போதை ஏறுதல் மற்றும் போதைக்கு அடிமையாகும் தன்மை என்பன ஏற்படாது.

11 பேரினை பலிகொண்ட …..

முக்கிய புள்ளி சிக்கியது எவ்வாறு?

ஒரு  வாகன விபத்து நடைபெறும் பொழுது அதில் சாரதி மற்றும் முன்னிருக்கையில் இருந்தவர் யார் என்பதினை சரியாக கண்டறியவேண்டும். பொதுவாக விபத்தின் பின்னர் ஆள் மாறாட்டம் இடம் பெறும். இருவரும் விபத்தில் உயிர் தப்பினாலோ, ஒருவர் அல்லது இருவரும் இறந்தாலோ அவர்களின் விபத்துக்கு முன்னரான வாகன இருக்கையின் நிலை கண்டறியவேண்டும். சட்ட மருத்துவ பரிசோதனையில் அல்லது பிரேத பரிசோதனையில்  அவர்களின் வாகன இருக்கை நிலை எவ்வாறு  கண்டறியபடுகின்றது என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

இங்கு முக்கியமாக அவர்களில் ஏற்படும் காயத்தின் இயல்புகளை வைத்தே அவர்களின் விபத்துக்கு முன்னரான வாகன இருக்கையின் நிலை கண்டறியப்படுகின்றது. அநேகமான வீதி விபத்துக்கள் வாகனத்தின் முன்பகுதி இன்னோர் வாகனத்துடன் அல்லது வேறு ஒரு பொருளுடன் மோதுவதினால் ஏற்படுகின்றது. இவ்வாறு மோதும் பொழுது வாகன சாரதி உட்பட வாகனத்தில் பிரயாணம் செய்பவர்கள் முன்னோக்கி வீசப்படுவார்கள். அதே சமயம் வாகனத்தின் பிரேக், ஸ்டியரிங் வீல் போன்றன உள்நோக்கி வரும் இதன்காரணமாக பின்வரும் வகையில் காயங்கள் ஏற்படும்

  1. சாரதியில் ஏற்படும் காயங்கள்

விபத்து ஏற்படும் பொழுது சாரதி முன்னோக்கி வீசப்படுவார் மேலும் ஸ்டியரிங் வீல் உள்நோக்கி வரும் இதன்காரணமாக ஸ்டியரிங் வீல் சாரதியின் நெஞ்சு பகுதியில் தாக்கி கண்டல் காயம், எலும்பு முறிவு, உரஞ்சல் காயம் போன்றவற்றினை ஏற்படுத்தும். இங்கு ஏற்படும் காயமானது சிலவேளை ஸ்டியரிங் வீல் இணை உருவமைப்பில் ஒத்து இருக்கலாம். விசை அதிகமாக இருக்கும் பொழுது நெஞ்சில் உள்ள நுரையீரல் இருதயம் போன்றவற்றிற்கும் வயிற்றின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஈரல், மண்ணீரல் மற்றும் இரைப்பை போன்றவற்றிற்கும் பாரிய காயங்கள் ஏற்படலாம். இவ்வாறு தூக்கி வீச முற்படும் பொழுது சீற் பெல்ற் ஆனது சாரதியில் குறிப்பிடத்தக்க வகையில் உரஞ்சல் காயத்தினை ஏற்படுத்தும். மேலும் நெற்றி மற்றும் தலைப்பகுதி ஆனது டாஸ் போட்டில் பலமாக அடிப்பதன் காரணமாக மேற்குறித்த பகுதிகளில் பிளவு காயங்கள், எலும்பு முறிவு போன்றன ஏற்படும். பிரேக் மற்றும் கிளச் போன்றன பலமாக உள்நோக்கி வரும் பொழுது காலின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பை நோக்கி விசை தாக்கும் அதன் காரணமாக மேற்குறித்த பகுதிகளுக்கு இடையில் எங்காவது என்பு முறிவு, முழங்கால் மூட்டு விலகல், இடுப்பு மூட்டு விலகல் என்பன   ஏற்படலாம். மேலும் டாஸ் போட் உள்நோக்கி வருவதன் காரணமாக கால் அல்லது முழங்கால் பகுதியில் பிளவு காயங்கள் (laceration), எலும்பு முறிவு போன்றன ஏற்படலாம். இவ்வாறு சாரதியில் ஏற்படும் குறிப்பிடத்தக்க காயங்களின் இயல்புகளை வைத்து சட்ட வைத்திய அதிகாரி இலகுவாக சாரதியினை அடையாளம் காணுவார்.

(மேற்குறித்த படங்கள் சீற் பெல்ட்டினால் மற்றும் ஸ்டியரிங் வீல் போன்றவற்றினால் ஏற்பட்ட காயங்களை குறிக்கின்றது)

(மேற்குறித்த படங்கள் சாரதியிலும் முன்னிருக்கையில் பயணிப்பவருக்கும் எவ்வாறு காயங்கள் ஏற்படுகின்றன என்பதை விளக்குகின்றன).

சில சந்தர்ப்பங்களில் சாரதியின் பாதணியின் அடிப்பகுதியில் பிரேக்கினை பலமாக அழுத்தியதன் காரணமாக ஏற்படும் தவாளிப்பு அடையாளம் (imprint mark) காணப்படும்.

  1. முன்னிருக்கையில் பயணம் செய்பவருக்கு ஏற்படும் காயங்கள்

ஓர் வாகனத்தில்  முன்னிருக்கையில் பயணம் செய்யபவருக்கும் சாரதியில் ஏற்படும் காயங்கள் போலல்லாது காலின் அடிப்பகுதியில் இருந்து இடுப்பை நோக்கி விசை தாக்கும் காரணமாக மேற்குறித்த பகுதிகளுக்கு இடையில் எங்காவது என்பு முறிவு, முழங்கால் மூட்டு விலகல், இடுப்பு மூட்டு விலகல் என்பன   ஏற்படலாம். மேலும் டாஸ் போட் உள்நோக்கி வருவதன் காரணமாக கால் அல்லது முழங்கால் பகுதியில் அல்லது கால் பகுதியில்  பிளவு காயங்கள், எலும்பு முறிவு போன்றன ஏற்படலாம். இவ்வாறு வாகனத்தின் முன்னிருக்கையில் இருப்பவருக்கு  ஏற்படும் குறிப்பிடத்தக்க காயங்களின் இயல்புகளை வைத்து சட்ட வைத்திய அதிகாரி அவற்றினை  இலகுவாக  அடையாளம் காணுவார்.

 

மேலும் சாரதியிலும் முன்னிருக்கையில் இருப்பவருக்கும் சீற் பெல்ட் இனால் வரும் காயங்கள் எதிர்மாறான பக்கங்களில் இருக்கும். இறுதியாக விபத்துக்குள்ளான வாகனத்தினை சட்ட வைத்திய அதிகாரி பார்வை இடுவதன் மூலம் காயம் அடைந்தவர் அல்லது இறந்தவர் வாகனத்தில் விபத்து நடைபெற முன்னர் வாகனத்தின் எந்த ஆசனத்தில் இருந்தார் என்பதினை இலகுவாக கண்டுபிடிப்பார்.

 

 

சிறுமியை பதம் பார்த்த கிளிப்

இன்றைய உலகில் பெண்கள் பல்வேறுபட்ட அழகு சாதனப்பொருட்களை தமது அழகினை மெருகூட்டும் முகமாக பாவிக்கின்றனர். பல நிறுவனங்கள் பல்வேறு விதமான பொருட்களை இதன் காரணமாக உற்பத்தி செய்கின்றன. மேலும் பல்வேறுபட்ட போலி உற்பத்திகளும் சந்தையில் உலாவுகின்றன. இவற்றில் முக்கியமாக  பல்வேறு வகையான கொண்டைக்கு மாட்டும் கிளிப்புகள் (Hair clips) உள்ளடங்கின்றன.

அவள் ஏழு வயதான சிறுமி, தாயார் வேலை முடித்து வீடு வருவதினை கண்டதும் ஆசையோடு ஓடிச்சென்று தாயாரினை கட்டி அணைக்கின்றாள். தாயாரும் அவளினை தூக்கி அனைக்கின்றாள். சில வினாடிகள் தான் குழந்தை வீறிட்டு கத்துகின்றது. தாயார் பார்க்கும் பொழுது அவளது கொண்டையில் போடப்பட்டிருந்த கிளிப் ஆனது குழந்தையின் கழுத்து பகுதியில் முழுவதுமாக குத்தி உட்சென்று இருந்தது.

தாயாருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, குழந்தையினை அசையாமல் வைத்திருந்தவாறு அவசர அம்புலன்ஸ் சேவையினை அழைத்து வைத்தியசாலைக்கு வந்தாள். அதிஸ்டவசமாக கழுத்தில் உள்ள பாரிய இரத்த குழாய்கள், களம், சுவாச குழாய் போன்றவற்றிற்கு எவ்விதமான காயமும் ஏற்படவில்லை. வைத்தியர்கள் சத்திர சிகிச்சை மூலம் உள்ளே இருந்த கிளிப்பினை அகற்றி எடுத்தனர்.

மேலே படத்தில் உள்ள கிளிப்பே இவ்வாறு ஆபத்தினை ஏற்படுத்தியது. அதன் நுனிப்பகுதியினை உற்று நோக்குவோமானால் அது கூர்மையானதாக உள்ளது. மேலும் அதன் விளிம்புகள் சொர சொரப்பாக (serrated) உள்ளது இதன் காரணமாக இவ்வகையான கிளிப்புகள் குறைந்த விசையுடன் மிக இலகுவாக எமது தோலினை ஊடுருவி சென்று ஆபத்தினை விளைவிக்கும். எனவே இவ்வாறான கிளிப்புகளுடன் சிறுவர்கள் விளையாடுவது ஆபத்தில் முடியும்.

எமது உடலில் எலும்புக்கு அடுத்து ஊடுருவ அதிக விசை தேவைப்படுவது தோல் ஆகும். இங்குள்ள கிளிப்பின் நுனிப்பகுதி தோலினை இலகுவாக ஊடுருவும் அதன் பின்னர் உள் அங்கங்களினை ஊடுருவுவதற்கு பாரிய விசை தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது

தவறி வீழ்ந்தவனின் கதை

அவனுக்கு பதினேழு வயது. பாடசாலையில் உயர்தரத்தில் கல்விகற்கின்றான். குடும்ப வறுமைநிலை காரணமாக இரு வாரங்களுக்கு முன்னரே மேசன் உதவியாளராக கொழும்புக்கு  வேலைக்கு வந்திருந்தான். அன்று காலையில் 6வ வது மாடியில்  அவன் குறுக்கு சுவர்களுக்கான கொங்கிறீட் கற்களை சுமந்து வரும் பொழுதுதான் தவறுதலாக அத்தளத்தில் இருந்த துவாரத்தின் ஊடாக தரையில் வீழ்ந்தான். அவனது சக தொழிலாளர்கள் கீழ் தளத்தினை நோக்கி ஓடினர் ஒருசில வினாடிகள் தான் தண்ணீர் என்று கேட்டு முனகினான். அதன் பின்னர் அசைவொன்றும் இல்லை. மேலதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்தனர். அவர்கள்  தொழிலாளரினை நோக்கி சொன்னார்கள் “அவன் இறந்துவிட்டான் நீங்கள் உங்கள் வேலையினை தொடருங்கள்” என்று. அவர்களுக்கும் வேறு வழி இல்லை. சிறிது நேரத்தில் போலீசார் வந்தனர் அவனுடன் ஒரேதளத்தில் வேலை செய்தவர்களிடம் வாக்குமூலம் பெற்றனர். உடல் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் அவனது உடலை அவனது சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல அவனது குடும்பத்தினரிடம் காசு வசதி இல்லை. ஏன் அவனது தாய் மற்றும் தந்தை கொழும்பிற்கு வருவதற்கு பணம் கூட இல்லை. அவனது சக தொழிலார்கள் தங்களால் இயன்ற பணத்தினை சேகரித்து உடலை ஊருக்கு அனுப்பினர்.

இன்றைய கால கட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பல இளைஞர்களும், மலையகத்தினை சேர்ந்த பலரும்  கொழும்பு போன்ற நகர்ப்புறங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பல மாடி கட்டிட தொகுதிகளை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுவாக மேசன் வேலை, மின்சார வயர்களை மற்றும் நீர்க்குழாய்களை பொருத்தும் வேலை,  டைல் பதிக்கும் வேலை, பெயிண்ட் அடிக்கும் வேலை, அலுமினிய பிட்டிங் வேலை …. போன்ற பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். பலர் சாதாரண கூலி வேலை செய்பவர்களாகவும் ஒருசிலர் மட்டும் தொழில்வாண்மை மிக்க வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இவர்களில் பலர் குடும்ப வறுமை காரணமாகவே பாடசாலை படிப்பினை இடையில் விட்டுவிட்டு இவ்வாறான வேளைகளில் பகுதியாகவோ அல்லது முழுநேரமாகவோ ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஒரு தொடர் மாடி அமைக்கும் பொழுது நடைபெறும் பல்வேறு பட்ட வேலைகளும் உப ஒப்பந்ததாரர்கள்  மூலமே நடைபெறும். இவ்வாறே வேலைக்காரர்களும் பல்வேறுபட்ட தரகர்கள் மூலமே சேர்க்கப்படுகின்றனர்.

ஓர் தொடர் மாடித்தொகுதி கட்டிடம் கட்டப்படும் பொழுது லிப்ட் போன்றவற்றினை பொருத்துவதற்காகவும் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும் ஒவ்வொரு தளத்திலும் தரைப்பகுதியில்  பல்வேறுபட்ட அளவுகளில் (floor openings) துவாரங்கள் இருக்கும். தொழிலார்கள் இத்துவாரங்களை ஒவ்வொரு தளங்களிலும் வேலைகளின் பொழுது உருவாகும் பல்வேறுபட்ட கழிவுகள் அடித்தளத்தினை நோக்கி போட பயன்படுத்துவார்கள் , மேலும் இரவு நேரங்களில் பல்வேறு தளங்களில் தங்கிநிற்கும்,  மது போதையில் இருக்கும் வேலைக்காரர்கள் வெறுமையான பியர் டின்கள், உணவு பொதிகள் போன்றவற்றினை இவற்றினுடாக வீசுவார்கள். பல சந்தர்ப்பங்களில் போதையில் மூத்திரம் கூட பெய்வார்கள்.

இனி விடயத்திற்கு வருவோம்,   இத்துவாரங்களினால் என்னதான் பிரச்சனை? பொதுவாக பல தொழிலார்கள் இவ்வாறு அமைக்கப்பட்ட துவாரங்கள் ஊடாகவே உயரமான கட்டிடங்களில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளார்கள். முக்கியமாக இத்துவாரங்களை சூழ தற்காலிக தடுப்புக்கள் வேலிகள் அமைக்க வேண்டும் ஆனால் நடைமுறையில் அவ்வாறு அமைக்கப்படுவதில்லை இதன் காரணமாகவே இவ்வாறன அகால மரணங்கள் நிகலுகின்றன. பல விபத்துகள் மதுபோதையில் நிகழுகின்றன. அநேகமாக புதிதாக வேலைக்கு வரும் உயரமான கட்டிடங்களில் வேலைசெய்து அனுபவம் அற்றவர்கள் இரவு வேளைகளில் நடமாடும் பொழுது தவறுதலாக  இந்த துவாரங்கள் ஊடாக தவறி விழுகின்றனர்.

(மேலே உள்ள இரு படங்களும் பாதுகாப்பு அற்ற துவாரத்தினையும், இளைஞன் தவறி விழுந்த இடத்தினையும் காட்டுகின்றன)

இது தவிர சில சந்தர்ப்பங்களில் கொங்கிறீட் தட்டுகள் உடைந்து விழுவதினாலும், தொழிலாளர் வேலை செய்யும் கம்பிகளாலான தட்டுகள் உடைந்து விழுவதினாலும் இறப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு வேலைத்தளங்களில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக காப்புறுதி செய்யப்படுவதில்லை. இதன் காரணமாக இறந்த பின்னரோ அல்லது காயப்பட்ட பின்னரோ காப்புறுதிப்பணம் கிடைப்பதில்லை.  தொழிலாளரும் இது பற்றி அலட்டி கொள்வதில்லை. மேலும் தொழிலாளருக்கு உயரமான கட்டிடங்களில் வேலை செய்யும் பொழுது எவ்வாறு விபத்துக்களை தவிர்ப்பது என்பது பற்றி பயிற்சி வழங்கப்படுவதில்லை அத்துடன் உரிய தற்பாதுகாப்பு சாதனங்களும் வழங்கப்படுவதில்லை. தொழிலாளருக்கு தமது உரிமைகள் மற்றும் தொழிலார் சட்டங்கள் போன்றவற்றில் போதிய அறிவு இல்லாதவரை இவ்வாறான சம்பவங்கள் தொடரும்.

சிறுமியும் ஸ்கூட்டியும்

அந்த சிறுமியின் தாய் பிரதேச செயலகம் ஒன்றில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றுகின்றார். தகப்பனார் ஆசிரியர். அன்று காலையிலேயே தகப்பனாரும் மூத்த பிள்ளையான அண்ணனும் பாடசாலை சென்றுவிட்டனர். தாயார் சமையல் வேலை எல்லாவற்றையும் முடித்து விட்டு, அச்சிறுமியை அவளது அப்பம்மா வீட்டில் விடும் நோக்கில் ஸ்கூட்டியில் அழைத்து சென்ற பொழுதுதான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. தாயார் ஸ்கூட்டியினை செலுத்தும் பொழுது சிறுமி தாயாரின் கால்களுக்கு இடையில் ஸ்கூட்டியின் முன்புறத்தில் இருந்தவாறு பிரயாணித்தாள் . அவள் சிறிது வேகமாகத் தான் சென்றாள் ஏன்னெனில் அன்று ஒரு முக்கிய கூட்டம் காலையில் இருந்தது. அவர்கள் பிரதான வீதியில் நுழையும் பொழுது ஓர் வாகனம் அதிவேகமாக அவர்களை நோக்கி வந்ததது. தாயார் சடுதியாக பிரேக்கினை போட்டார். வாகனம் மோதவில்லை ஆனால் சிறுமியின் முகம் பலமாக ஸ்குட்டியின் ஹெட் (head) உடன் மோதி சில பற்கள் உடைந்து விழுந்தன கீழ் உதடு கிழிந்து தொங்கியது. மொத்தத்தில் சிறுமியின் முகம் ஒரு கோணலாகியது.

நான் அவளினை பார்வையிடும் பொழுது அவள் வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். சிறுமியின் ஏக்ஸ்ரே ஆனது அவளது கீழ் தாடை எலும்பு உடைந்து இருந்ததினை வெளிப்படுத்தியது. நல்ல வேலையாக தாயாருக்கு எவ்விதமான காயமும் இல்லை. தாயாரும் சிறுமியின் அருகே அழுதவாறு காணப்பட்டாள்.
இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் அதிகளவான மக்கள் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளினை பாவித்து வருகின்றனர். முக்கியமாக பெண்கள் இதனை விரும்பி பாவிக்கின்றனர் ஏன்னெனில் இலகுவாக ஓடமுடியும். மேலும் ஆண்களும் அதிகளவில் பாவிக்கின்றனர் ஏன்னெனில் இலகுவாக பொருட்களை கொண்டு செல்லலாம். அதாவது கால்கள் இடையேயும், இருக்கையின் கீழேயும் வைக்கலாம். அண்மைக்காலமாக சட்ட வைத்திய அதிகாரி என்ற வகையில் பல சிறுவர்களுக்கு இவ்வாறன வகை காயங்கள் ஏற்படுவதினையும், அவை அதிகரித்து செல்வதினையும் அவதானித்து உள்ளேன். இவ்வாறான காயங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றி சிறிது நோக்குவோம்.

நாம் பலரும் சிறுவர்களை மோட்டர் சைக்கிளில் ஏற்றி செல்லும் பொழுது அவர்கள் நித்திரை கொண்டு வீழ்ந்து விடுவார்கள் என்றே பெரும்பாலும் சிந்திப்போம். ஆனால் இங்கு சிறுமிக்கு காயமானது சடுதியான அமர்முடுகல்  (deceleration force)காரணமாகவே ஏற்பட்டது என்பதை சிந்திக்க மறந்து விடுவோம். அதாவது இங்கு ஸ்கூட்டியின் வேகமானது ஒருசில செக்கன்களில் பூச்சிய நிலைக்கு வரும்பொழுது ஸ்கூட்டியின் கால்கள் வைக்கும் இடத்தில் நிக்கும் சிறுவர் முன்னோக்கி அதி விசையுடன் தள்ளப்படுவர் இதன்பொழுது அவர்களின் தலை ஸ்கூட்டியின் ஹெட் பகுதியுடன் பலமாக மோதும். இங்கு சிறுவர்கள் எனப்படும் பொழுது நான் 5 தொடக்கம் 6 வயதுக்கு உட்பட்டவர்களையே குறிப்பிடுகின்றேன் ஏன்னெனில் அவர்களின் உயரம் மிக குறைவானது அத்துடன் அவர்களின் தலைப்பகுதி மட்டுமட்டாக ஸ்கூட்டியின் ஹெட் உயரத்துடன் உடன் நிற்கும், சடுதியான அமர்முடுகளின் பொழுது தலையானது ஸ்கூட்டியின் ஹெட் உடன் மோதும். மேலும் சிறுவர்களின் கைகளில் போதிய பலம் இல்லாததன் காரணமாகவும் சிறுவர்கள் விபத்தினை எதிர்பாக்காததன்( not anticipate) காரணமாகவும் அவர்களின் தலை வேகமாக மோதும். இவ்வகையான விபத்துக்களினை எவ்வாறு குறைக்கலாம்? உண்மையில் சிறுவர்களை ஸ்கூட்டியின் முன்பகுதியில் நின்றவாறு வைத்துக்கொண்டு பிரயாணம் செல்வதினை குறைக்க வேண்டும் மற்றும் வேகத்தினையும் குறைக்க வேண்டும்.

Sketch001

மேலே உள்ள படம் எவ்வாறு அமர்முடுகல் விசையானது ஸ்கூட்டியின் கால் வைக்கும் இடத்தில் (foot rest) நின்றவாறு பிரயாணம் செய்யும் சிறுவர்களை தாக்கி காயத்தினை உண்டாடக்குகின்றது என்பதினை விளக்குகின்றது.

“இளம் கன்று பயம் அறியாது”

செத்தல் மிளகாயில் ஆபத்தா?

அண்மையில்  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் aflatoxin என்ற புற்று நோயினை  உருகவாகும் toxin கண்டறியப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட செத்தல் மிளகாய்  தனியார் களஞ்சியங்களில் இருந்து பாரிய அளவில் அதாவது 20 மெட்ரிக் தொன் என்ற அளவில்  மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது உரிய தரச் சான்றிதழ் வரமுன்னரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுள்ளது .

இந்த செத்தல் மிளகாயில் என்ன பதார்த்தம் உள்ளது? அது ஏவ்வாறான விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்தும்? என்பது பற்றி பார்ப்போம். இவ்வாறு செத்தல் மிளகாயில் இருந்தது aflatoxin என்ற mycotoxin ஆகும். இது பங்கசு (பூஞ்சன) வகையான Aspergillus flavus, Aspergillus parasiticus , Aspergillus nomius போன்றவற்றில் இருந்து இயற்கையாக வெளியே சுரக்கப்படும் பதார்த்தம் ஆகும். இது மற்றைய பங்கசு  வகைகள் மற்றும் நுண்ணுயிரிகள் வளர்வதை தடுக்கும். இதில் aflatoxins, ochratoxins, citrinin, ergot alkaloids, patulin, Fusarium toxins போன்ற பல்வேறு வகைகள் உண்டு. Aflatoxin மட்டும் 18 வகையான உப வகைகள் உண்டு. இதில் aflatoxin b1 என்பதே மிகவும் ஆபத்தானது, இது class 1 என்ற carcinogen  (புற்று நோயினை உருவாக்கும் காரணி )  ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது class 1 என்றால் இந்த பதார்த்தம் அடங்கிய உணவு பொருட்களை உட்கொண்டால் நிச்சயமாக புற்று நோய் உண்டாகும் சாத்தியம் உள்ளது. முக்கியமாக ஈரல் புற்று நோய் உருவாகும். இந்த aflatoxin ஆனது வெப்பத்தினால் அழிவடையாது அதன்காரணமாக சமைத்த பின்னரும் இரசாயன ரீதியில் உயிர்ப்பாக காணப்படும். மேலும் இவ்வாறு aflatoxin இனால் பழுதடைந்த உணவுகளை உட்கொண்ட பசுக்களின் பாலில் aflatoxin b1 இன் பக்க விளைபொருள் ஆகிய  aflatoxin m1 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து aflatoxin எவ்வளவு ஆபத்தானது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.08

முக்கியமாக Aspergillus flavus என்ற பங்கசு தானியங்களான சோளம், கச்சான், அரிசி, மிளகு, செத்தல் மிளகாய் போன்றவற்றில் இயற்கையாக வளரும். முக்கியமாக மேற்குறித்த தானியங்களினை வெப்பமான ஈரலிப்பான இடங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பொழுதும், மழை நாட்களில் அறுவடை செய்யும் பொழுதும்  இந்த பங்கசு தொற்றி கொள்ளும்.

தற்போதைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் கறி மிளகாய்த் தூள் செய்வதில்லை மாறாக கடைகளில் இருந்தே வாங்குகிறோம் இவ்வாறு வாங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வகையான பங்கசு  தொற்றுக்கு உள்ளான செத்தல் மிளகாய்களும் நிச்சயம் அரைக்கபட்டு தூளின் ஊடாக எமது உணவில் சேரும்..

  1. இவ்வகையான தொற்றுதல் அடைந்த உணவுகளை உண்பதினால் என்ன சுகாதார சீர்கேடுகள் உண்டாகும்? Aflatoxin இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உண்டாகும் நிலை  aflatoxicosis என்றழைக்கப்படும். இந்நிலையினால்  ஈரல் புற்று நோய், ஈரல் அழற்சி (cirrhosis and Reye’s syndrome), உணவுகள் சமிபாடு அடையாத்தனமை,  போன்றன ஏற்படும்.
  2. நாம் உண்ணும் உணவில் எந்த எந்த அளவில் aflatoxin இருக்கலாம்? பல்வேறு நாடுகளில் இதன் அளவானது 0-50mg/kg வரை வேறுபடுகின்றன. அமெரிக்காவில் 5mg/kg அளவினை விட அதிகரித்தல் ஆகாது . இலங்கையில் இது 15mg /kg ஆக இருக்கின்றது (Ref: Clarke’s Analytical Forensic Toxicology).
  3. இவ்வாறு இந்த பங்கசு  பாதித்த உணவுகளை அடையாளம் காணுவது? மிளகாயில் கறுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள் , கச்சானில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பருப்புகள், சோளத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி, தேங்காய் கொப்பராவின் பழுதடைந்த  கறுப்பு நிறமாக பகுதி, வெங்காயம் மற்றும் உள்ளியில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி ஆகியன பங்கசினால் பாதிக்கபட்ட பகுதிகள் ஆகும் இவற்றினை மக்கள் உண்பதினை தவிர்ப்பது நல்லது.
  4. எவ்வாறு இந்த பங்கசு தொற்றினை தவிர்ப்பது?நாம் மேற்குறித்த உணவுகளை களஞ்சிய படுத்தும் பொழுது உலர்ந்த, இரலிப்பற்ற இடங்களில் களஞ்சிய படுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லை. எம்மில் எத்தனை பேர் சமைக்கும் பொழுது பங்கசு  தோற்றிய உணவு பகுதிகளை அகற்றி விட்டு சமைக்கின்றோம்  என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதீத மது போதையும் தீடீர் மரணமும்

அண்மையில் இரவில் நடந்த மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவன் அடுத்த நாட்காலை தீடீரென்று மரணத்தினை தழுவிய செய்தி எல்லோருடைய மனதையும் ஒருகணம் பதற வைத்தது. பலருக்கு ஏன் இவ்வாறான தீடீர் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி தெரியாது. இப்பதிவில் அதிகளவு மதுபான பாவனை எவ்வாறு தீடீர் மரணத்திற்கு காரணமாக அமைகின்றது என்பது பற்றி விளக்குகின்றேன்.

  1. நாம் மதுபானம் அருந்தும் பொழுது அது எமது இரத்தத்தில் எதைல் ஆல்கஹாலின் அளவு படிப்படியாக அதிகரித்து செல்லும். இவ்வாறு செல்லும் பொழுது ஒவ்வொரு செறிவிலும் அது குறித்த நடத்தை கோலங்களினை மது அருத்துபவரில் ஏற்படுத்தும். உதாரணமாக 50mg/dl என்ற அளவில் உள்ளபொழுது அது மது அருந்துபவரில் அதிகம் கதைக்கும் தன்மை, சுயநிலை மறந்த தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். இவ்வாறே படிப்படியாக அதிகரித்து 250mg/dl என்ற அளவினை அடையும் பொழுது மயக்கம் மற்றும் கோமா நிலை போன்றவற்றினை ஏற்படுத்தும். 300mg/dl என்ற அளவினை தாண்டும் பொழுது அது ஆல்கஹால் நஞ்சு (Acute alcohol intoxication) ஆதலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.
  2. மதுபானமானது எமது உடலில் பல்வேறுபட்ட மாற்றங்களினை உண்டாக்கும். அவற்றில் முக்கியமானது உணவு விழுங்கும் ஆற்றலினை பாதித்தல் ஆகும். இதன்காரணமாக அதிக மது அருந்திக்கொண்டு உணவு அருந்துபவர்களில் உண்ணும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம் அல்லது வாந்தி எடுக்கும் உணவானது புரைக்கேற சாத்தியம் அதிகம். இவ்வாறு புரைக்கேறுவதினால் மது அருந்துபவர் திடீர் மரணம் அடைந்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
  3. அருந்தும் மதுவின் அளவினையும் அவர்கள் அதற்கு எடுக்கும் கால இடைவெளியினையும் வைத்து மது அருந்துபவர்களினை அவர்களினை பல்வேறு வகைகளாக பிரிக்கலாம். அவர்களின் ஒருவகையினர் தான் Binge drinker (heavy episodic drinker) இவர்கள் யார் என்றால் நாளாந்தம் மது அருந்தாமல் குறித்த சில நாட்களில் மிக அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள். இவர்களை வரைவிலக்கணப்படுத்த பல்வேறு வரைவிலக்கணங்கள் மருத்துவரீதியில் உண்டு. இவர்கள் இவ்வாறு அளவுக்கு அதிகமாக மது அருந்தி சில மணித்தியாலங்களில் அவர்களின் இருதயத்துடிப்பு ஒழுங்கற்றதாக (sudden arrhythmic death syndrome (SADS)) மாறும் அதாவது சாதாரண மனிதன் ஒருவனுக்கு சராசரியாக நிமிடத்திற்கு 72 துடிப்புக்கள் என்று காணப்பட்ட இருதய துடிப்பு அதிகரித்து அதன் ரிதம் மாற்றமடையும் இதனால் மது அருந்தியவருக்கு மயக்கம், தலைச்சுற்று போன்றன ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படலாம்.
  4. மேலும் அதீத போதையில் மது அருந்தியவர் தன்னிலை மறந்து நீண்டநேரம் மனித உடலின் நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழ் உள்ளவாறும் கால்ப்பகுதிமேலே உள்ளவாறும் தூங்குவார்கள் அதாவது கட்டில் அல்லது கதிரையில் இருந்து நெஞ்சு மற்றும் தலைப்பகுதி கீழே விழுந்த நிலையில், இவ்வாறு இவர்கள் ஏறத்தாழ தலைகீழாக அதிக நேரம் தூங்கும் பொழுது அவர்களின் வயிற்றில் உள்ள அங்கங்கள் நெஞ்சு பகுதியினை அமுக்குவதினால் மூச்சு விட சிரமப்பட்டு இறப்பார்கள். இவ்வாறான இறப்புக்கள் சட்ட மருத்துவத்தில் positional asphyxia deaths என்றழைக்கப்படும்.456
  5. அதீத மது போதையில் உள்ளவர்கள் வீதி விபத்துகளில் சிக்கியும், உயரமான கட்டிடங்களில் இருந்து தவறி வீழ்ந்தும், நீரில் மூழ்கியும் திடீர் மரணங்களை சந்தித்த சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.
  6. மது அருந்த தொடங்கும் பொழுது நண்பர்களாக அருந்த தொடங்கியவர்கள், சிறிது நேரம் செல்ல போதையில் ஒருவரை ஒருவர் அடித்து கொலை செய்த சந்தர்ப்பங்களும் உண்டு.
  7. ஒருவர் நீண்ட காலமாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருக்கும் பொழுது அவர்களின் உடலில் பல்வேறுபட்ட நோய் நிலைகள் ஏற்படலாம். குறிப்பாக ஈரல் பழுதடைந்தல் (Cirrhosis), உணவு விழுங்கும் களத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் வரிக்கோசுநாளத்தில் ஏற்படும் வெடிப்பினால் ஏற்படும் குருதிப்பெருக்கு (esophageal varicieal bleeding), இதயத்தின் செயற்பாடு குறைதல்(cardiomyopathy) போன்றன ஏற்படலாம். மேற்குறித்த நோய் நிலைகள் திடீர் மரணங்களினை ஏற்படுத்தலாம்.
  8. பொதுவாக மதுப்பாவனைக்கு அடிமையாக இருப்பவர்கள் தற்கொலைக்கு முன்பாக அதிக மது அருந்திய நிலையிலேயே தற்கொலை செய்து கொள்வார்கள்.

இவ்வாறு அதீத மது போதை பல்வேறுபட்ட வழிகளில் திடீர் மரணங்களினை விளைவிக்கின்றது.