வீட்டிற்குள்ளும் வந்தது 5G

தற்போதைய தொழில் நுட்ப உலகில் இணையத்தின் வேகம் அதிகம் இருந்தால் மட்டுமே அதிக விடயங்களை இலகுவாக சாதிக்கலாம். இதன் பொருட்டு காலகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இவற்றில் இறுதியாக தொலைத்தொடர்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்ததே 5G தொழில்நுட்பம் ஆகும். தற்பொழுது இதனை விட மேலான மேலான தொழில் நுட்பங்களை கண்டு பிடிக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
5G தொழில் நுட்பத்தில் பாவிக்கப்படும் அலைகள் மிகவும் அதிக தூரம் இடையூறு இன்றி பயணம் செய்யும் ஆற்றல் அற்றவை. இதன் காரணமாகவே மேற்குறித்த 5G அலைகளை கடத்தும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மிக குறைந்த இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வலைகள் தொடர் மாடித்தொகுதிகளினுள் குறைவாகவே உட்செல்லும் அதன்காரணமாக பெரும்பாலான நேரங்களில் தொடர் மாடிகளில் வசிக்கும் மக்கள் குறைந்தளவான coverage இணை பெற்றுக்கொள்வர். இவ்வாறன பகுதிகளில் எமது கைத்தொலை பேசி வேலை செய்யும் பொழுது அதிகளவான கதிர்வீச்சினை காலும். இவற்றினை நிவர்த்தி செய்ய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று தொடர் மாடிப்பகுதிகளில் அல்லது coverage குறைந்த பகுதிகளில் அதனை கூட்டும் முகமாக கருவி ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வீடுகளில் உள்ளும் மக்கள் தங்கு தடையின்றி 5G வசதியினை அனுபவிக்க முடியும்.

இலங்கையில் தற்பொழுது 4.5G தொழில் நுட்பத்தினை வழங்கும் முகமாகவே இலங்கையின் பல பல பிரதேசங்களில் smart pole என்ற சிறிய கோபுரங்கள் நாட்டப்பட்டுள்ளன. கீழே உள்ள படங்களில் யாழ்ப்பாணம், அனுராதபுரம், வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களை காணலாம்.

facebook_15624903826149118478306109136995.jpg

இவ்வாறான smart pole திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சூழலியல்வாதிகள் ஆகியோர் இலங்கையின் நகர்ப்புறங்களில் தொடர் மாடிகளின் மேற்பகுதியில் அதுவும் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு எதிராக ஒருபொழுதும் குரல் எழுப்பியதில்லை. கீழே உள்ள படத்தில் கொழும்பின் மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றினை காணலாம்.

20190516_1809331477561231918233699.jpg

உயிரினை பறித்த ஊஞ்சல்

பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் சாதாரண ஊஞ்சல் சில சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் உயிர்களை பறித்துவிடும். இருதினங்களுக்கு முன்னரும் இவ்வாறான ஓர் துயர சம்பவம் பொகவந்தலாவ பிரதேசத்தில் நடைபெறுள்ளது. குறிப்பாக பெரியவர்கள் யாரும் அற்ற நிலையில் தனியே ஊஞ்சல் ஆடிய சிறுமியை இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் மூலம் வருடம் ஒன்றில் சில சிறுவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்க கூடியவையே. ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன , எவ்வாறு இந்த சம்பவங்களை தடுக்கலாம் என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.. ஊஞ்சல் ஆடுதல் என்பது தமிழரின் வாழ்வியலோடு இரண்டற கலந்த விடயம் ஆகும். தமிழரின் கடவுள் முதல் சாதாரண பாமர மக்கள் வரை வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடியிருப்பர். வித்தியாசம் பாவித்த பொருட்கள் மாத்திரமே. எம்மில் பலர் அம்மாவின் சேலை, மாடு கட்டும் நைலான் கயிறு, பொச்சு கயிறு போன்றவற்றினை பாவித்து ஊஞ்சல் ஆடியிருப்போம். இப்பொழுது உள்ள முக்கியமான கேள்வி எவ்வாறு இவ்மரணங்கள் நிகழுகின்றது? என்பதே.

சட்ட மருத்துவத்தில் இவ்வாறு நடைபெறும் மரணங்கள் தற்செயலாக தூங்கிய மரணங்கள்(accidental hanging) என்ற வகைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. உலகத்தில் இவ்வாறு பல மரணங்கள் சம்பவித்துள்ளமையினை உரிய விஞ்ஞான அறிக்கைகள் மூலம் அறியலாம். முக்கியமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பின்னணியினை பார்த்ததால் சிலவிடயங்கள் எமக்கு புலனாகும். அவையாவன
1. நீண்ட கயிற்றில் ஊஞ்சல் ஆடல் – ஊஞ்சல் கயிறு இலகுவாக முறுக்கி கழுத்தினை சுற்றுவதற்கான சந்தர்ப்பம் உண்டு
2. மேலும் கீழுமாய் (pendulum movement) ஆடாமல் ஒரே இடத்தில் இருந்து சுற்றுதல் – ஒரே இடத்தில் சுற்றுவதால் ஊஞ்சல் கயிறு இலகுவாக சுற்றுப்படும் மேலும் ஊஞ்சல் ஆடுபவரும் தலை சுற்றல் ஏற்பட்டு விழ அல்லது கயிற்றில் அகப்பட சாத்தியக்கூறு அதிகம் உண்டு

3. பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி அதிக நேரம் ஊஞ்சல் ஆடுபவர்கள்.

4. ஊஞ்சலில் இருக்காமல் நின்றுகொண்டு அல்லது படுத்திருந்து ஊஞ்சல் ஆடுபவர்கள்

5. முக்கியமாக இங்கு கழுத்தினை சுற்றி முடிச்சு வருவதில்லை மாறாக கயிறானது முறுக்கி இறுக்குவதே காரணம் ஆகும்.

இவ்வாறு ஊஞ்சல் ஆடும் பொழுது தன்னிச்சையாக கயிறு திரிந்து சிறுவர்களின் கழுத்து போன்ற பகுதிகளை இறுக்குவதை தவிர்க்க பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்
1. ஊஞ்சலில் இருக்கை பகுதி கதிரை போன்றவற்றினால் அல்லது மரப்பலகையினை குறுக்காக வைத்து செய்தல் – இதன் காரணமாக கயிறு சிறுவர்களை நெருக்காது.
2. ஊஞ்சலில் மேலே கட்டிடப்படும் கயிறுகள் இரண்டும் குறித்த தூரத்தில் இருக்கத் தக்கவாறு கட்டல் அல்லது ஊஞ்சலில் மேற்பகுதியில் கயிறுகள் இரண்டுக்குக்கும் இடையில் பலகை ஒன்றினை வைத்து கயிறுகள் இரண்டினையும் ஒன்று சேராது தவிர்த்தல்.

3. பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளை ஊஞ்சல் விளையாட விடல்.
4. சிறுவர் பூங்காக்களில் காணப்படும் ஊஞ்சல் போன்று இரும்பு சங்கிலியால் ஆன ஊஞ்சலில் சிறுவர்களை விளையாட விடல்.
இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது சிறுவன் ஒருவனின் கழுத்து பகுதியானது இரண்டு தொடக்கம் மூன்று நிமிடங்கள் இறுக்கப் பட்டு இருந்தாலே மூளை இறப்பு (hypoxic brain death) ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

எனவே சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடும் பொழுது பெரியவர்கள் ஆகிய நாம் அவதானமாய் இருப்போம், அநியாய உயிரிழப்புக்களை தடுப்போம் .

நன்றி

புகைக்கூடு அவசியம்தானா?

அது ஒரு சிறிய குடும்பம். அவர்களின் வசிப்பிடம் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள ஓர் தொடர்மாடி வீட்டுத்தொகுதி. கணவன் மற்றும் மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகம் மற்றும் இரு பிள்ளைகள். வேலைகாரி  என்று யாரும் இல்லை. அன்றும் அவள் அதிகாலை எழுந்த உடனேயே  சென்று தேநீர் தயாரிக்கும் நோக்குடன் சமையலறைக்கு சென்றாள் . அங்கு சமையலுக்கு பயன்படுத்தும் காஸ் வாசனை அவளது மூக்கை சிறிதளவு அரித்தது. அவளும் என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறு மின்சார சுவிட்ஸினை ஒன் பண்ணினாள். ஒருவினாடிதான் அவளின் உடை    மற்றும் சமையலறையில் இருந்த துணி மற்றும் பொலித்தீன் பைகள் போன்றவற்றில் நெருப்பு பற்றிக்கொண்டது. அவள் அவலக் குரல் எழுப்பினாள். கணவன் மற்றும் பிள்ளைகள் தீயினை பகீர பிரயத்தனத்தின் பின்னர் அணைத்தனர். வைத்தியசாலையில் அவள் அனுமதிக்கப்பட்ட பொழுது தீ அவளது உடலின் மேற்பரப்பின் 70 சதவீதத்தினை (Total Body Surface Area) இல்லாமல் செய்திருந்தது. ஒரு சில நாட்கள் அதிதீவிர சிகிச்சையின் பின்னர் அவள் இறந்தாள்.

சாதாரணமாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரிலிருந்து காஸ் கசிவடைந்து வெளியேற பல்வேறு சந்தர்ப்பங்கள் உண்டு. பெரும்பாலும் இரவில் சமையலறையில் யாரும் இல்லாத பொழுது வாயு கசிவினை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் மேலும் இரவு வேளைகளில் யன்னல்கள் யாவும் பூட்ட பட்ட நிலையில் கசிவடையும் வாயு ஆனது அறையில் தேங்கி நிற்கும்.இவ்வாறு தேங்கி நிற்கும் வாயு ஆனது துணி, ஈரமான பொருட்கள் போன்றவற்றுடன் பௌதிக ரீதியாக இணைந்திருக்கும். இவ்வாயுவானது மின்சார ஆளிகளை செயற்படுத்தும் பொழுதும், சிகரெட் லைட்டரினை பற்ற வைக்கும் பொழுதும், வாயு அடுப்பினை பற்ற வைக்கும் பொழுதும் உண்டாகும் மிகச்சிறிய தீப்பொறி காரணமாக தானாகவே தீப்பற்றி எரியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் யன்னல் மற்றும் கதவினை திறந்து காற்றோட்டத்தினை ஏற்படுத்தி தேங்கிய வாயுவினை வெளியேற்ற வேண்டும் அல்லது ஐதாக்க வேண்டும். என்ன நடந்தது என்பதை பின்னரே ஆராய வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில் பலர் தமது நவீன வடிவமைப்பில் வீடுகளை கட்டும் பொழுது சமையலறையில் புகை போக்கிகளை வைப்பதில்லை அதற்கு  அவர்கள் கூறும் காரணம் எரிவாயுவிலும் மின்சாரத்திலும் சமைக்கும் பொழுது புகை வாராது தானே என்பது தான். உண்மைதான், ஆனால் இவ்வாறு எரி வாயு கசிவு நிகழும் பொழுது புகை போக்கிகள் தேங்கிய எரி வாயுவினை வெளியேற்ற அல்லது ஐதாக்க பெரிதும்  உதவும்.

தமிழரின் வாழ்வியலோடு புகைக்கூடு பெரிதும் தொடர்புபட்டுள்ளது புக்காரா வரும் பொழுது ஓடி பதுங்கிய இடமும் அது தான், கள்ளவன் வீட்டுக்குள் நுழைவதும் அதனால் தான், முன்னோர் விதை தானியங்களை கட்டி சேமித்து வைப்பது அது தான். தமிழ் பிரதேசங்களில் நான் அவதானித்த விடயம் யாதெனில் பெரும்பாலான வீடுகளில் சமையலறையில் GAS குக்கர் ஆனது புகை போக்கியின் (புகைக்கூடு ) கீழ் அல்லாது வேறு ஒரு இடத்தில் தொழில் படுநிலையில் இருக்கும். இந்நிலை வாயுக்  கசிவின் பொழுது ஆபத்தினை விளைவிக்க கூடியது. இன்னொரு சந்தர்ப்பத்தில் gas  குக்கர் இல் எவ்வாறு எரிவாயு கசிவு ஏற்படுகின்றது அதனை நாம் எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி குறிப்பிடுகின்றேன்.

மேலே உள்ள வீடியோவில் கசிந்துள்ள வாயு எவ்வாறு பற்றி எரிந்து ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை பார்க்கவும். (ஆரம்பத்தில் விபரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் இங்கு காட்டப்பட்ட விடியோவிற்கும் தொடர்பில்லை, ஆனால் அதனை ஒத்த ஓர் சம்பவம்)