17 வயது கிரிக்கட் வீரரின் மரணம் ஏன்??

அக்டோபர் 29, 2025 அன்று மெல்போர்னின் கிரிக்கட் பயிற்சியின்  பொழுது 17 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டினின் (Ben Austin) கழுத்து பகுதியில் பந்து தாக்கியதினால் மரணம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பந்து வீசப்பட்டு கொண்டிருக்க துடுப்பாட்ட வலையினுள்  பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள T 20 போட்டிக்கான பயிற்சியின் பொழுதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயிற்சி அமர்வின் போது குறித்த வீரர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அவர் கழுத்துப் பாதுகாப்பு (ஸ்டெம் கார்டு) அணிந்திருக்கவில்லை. இதேமாதிரியாக  2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) என்பவர் பந்தினால் தாக்கப்பட்டு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். குறித்த இருவரினதும் மரணத்துக்கான காரணம் மூளைப்பகுதியில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த பதிவில் கழுத்து பகுதியில் ஏற்படும் காயங்களினால் எவ்வாறு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது  குறித்து விளக்கப்படுகின்றது.

இதற்கு முதற்படியாக மூளைக்கு இரத்தம் வழங்கும் நாடிகளின் அமைவிடம் பற்றி தெரிந்திருத்தல்  அவசியம் ஆகின்றது. எமது மூளைக்கு தேவையான இரத்தத்தினை இரு நாடிகள் வழங்குகின்றன

1.  Internal Carotid Arteries ( உட்கழுத்து நாடி )

2. Vertebral Arteries (முதுகெலும்பு நாடி )

இவற்றின் உடலின் அமைவிடத்தினை கீழ் உள்ள படம் விளக்குகின்றது.

படத்தில் முறையே நீலம்  ( உட்கழுத்து நாடி ) மற்றும் பச்சை (முதுகெலும்பு நாடி )  நிறங்களினால் கோடிடப்பட்டுள்ளது

இவற்றில் முதுகெலும்பு நாடியானது கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி அதாவது மூளையினை நோக்கி செல்கின்றது இவ்வாறு செல்லும் பொழுது கழுத்து பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் இருக்கும் துவாரங்களின் ஊடாகவே செல்லும். மேலும் கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து (Loop) பின்னர் மண்டையோட்டின் துவாரத்தின் ஊடக மூளையினுள் செல்கின்றது.

     இவ்வாறு வளைந்து வெளிநோக்கி செல்வதன் காரணமாகவே அதிக அசைவுகள் நடைபெறும் கழுத்து – மண்டையோட்டு பகுதியில் இந்த கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படாமல் இருக்க முடிகின்றது. எனினும் பின்வரும் காரணங்களினால் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது

1. கழுத்தின்  முள்ளந்தண்டுகளின் கிடையான முனைகளின் ஊடாக செல்லும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் ஏற்படும் என்பு முறிவுகள், மூட்டு விலகல்கள் என்பவற்றின் காரணமாக கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது

2. கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து செல்லும் பொழுது நேரடியாக விசையின் தாக்கத்திற்கு உள்ளாகி கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு நாடியின் சுவரானது மெலிதாகவும் இலாஸ்டிக் தன்மை குறைந்தும்  காணப்படுவதன் காரணமாக காயப்படும் தன்மை அதிகமாகின்றது   

மேற்குறித்த காரணங்களினால் பந்து மற்றும் கராத்தே அடி ( karate blow) போன்ற மொட்டையான விசைகள் கழுத்து பகுதியில் தாக்கும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது (Dissection of vertebral artery)

மேலுள்ள படத்தில் மேற்குறித்த காயங்கள் ஏற்படும் பகுதிகள் 1,2 குறிக்கப்பட்டுள்ளன

மேலும் சில சந்தர்ப்பங்களில் கழுத்து பகுதியில் கட்டாயம் விசை ஒன்று தாக்க வேண்டிய தேவை இல்லாமலேயே தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் வழமைக்கு மாறான எல்லை மீறிய அசைவு காரணமாகவும் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இவ்வாறான மொட்டையான விசையின் தாக்கத்தினால் களுத்துபகுதியில் உள்ள உட்கழுத்து நாடியும் காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும் கழுத்து முள்ளந்தண்டு நாடி கிழிந்து காயப்படுவதன் காரணமாக அக்கிழிவுக்காயமானது விசை தாக்கிய இடத்தில் மட்டும் உண்டாகாது நீண்ட தூரத்திற்கு செல்லும் இதன் காரணமாக கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டாலும் தலையினுள் இரத்த கசிவு உண்டாகலாம்   

நன்றி

மீனவர்களே அவதானம்!!

சில தினங்களுக்கு முன்னர் புத்தளம், நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தினை மதுபானம் என பருகிய மீனவர்களில் இருவர் இறந்துள்ளனர் மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்வாறு சிலவருடங்களுக்கு முன்னர் (2021) வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினை கண்டெடுத்த மீனவர்கள் அதனை மதுபானம் என நினைத்து பருகினர். இதன் பொழுது ஏற்பட்ட அனர்த்தத்தில் இவ்வாறு பருகிய இருவர் இறந்தனர் மேலும் சிலர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது. மீனவர்களின் கருத்துப்படி வழமையாக இவ்வாறாக மதுபான போத்தல்கள், வைத்தியசாலையில் பாவிக்கப்படும் பொருட்கள் மற்றும் பொலித்தீனினால் பொதி செய்யப்பட்ட உணவு பொருட்கள் கரை ஒதுங்குகின்றமையும் அவற்றினை மக்கள் எடுத்து பாவிப்பது வழமை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏவ்வாறு  இவ்வாறான பொருட்கள் கரையொதுங்கின்றன??

வழமையாக இவ்வாறு பொருட்கள் வட கீழ் பருவ பெயர்ச்சி காற்றின் பொழுது கரையொதுங்குகின்றன. இதற்கு பலகாரணங்கள் ஏதுவாகின்றன

1. புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகுகள் கவிழ்ந்து அதனுள் இருக்கும் பொருட்கள் பல மைல்கள் கடந்து நீரோட்டத்தின் வழியே வேறு பிரதேசத்தினை அடையலாம். இவ்வாறே வேறுநாடுகளில் கடற்கரையில் இருக்கும் கடைகள், குடிசைகள் என்பன அலைகளினால் அடிபடும் பொழுது இவ்வாறான பொருட்கள் கடலில் சென்றடையும்

2. முக்கியமாக மருத்துவ கழிவுகள் பங்களாதேஷ், இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளில் கடலில் கொட்டபடுகின்றன. பருவ பெயர்ச்சி காற்றின் பொழுது கடலின் அடியில் இருக்கும் பொருட்கள் மிதந்து கரையினை அடையும். மருத்துவ கழிவுகளை முறையாக கழிவகற்ற அதிகம் செலவு ஆகும் என்பதினாலேயே இந்த முறை கையாளப்படுகின்றது.

கரையொதுங்கும் போத்தல்களில் மதுபானம் இருப்பது உண்மையா?

இல்லை. கரையொதுங்கும் போத்தல்களில் பெரும்பாலும் மருத்துவ கழிவு பொருட்களே காணப்படுகின்றன. முக்கியமாக புண்களை சுத்தப்படுத்தும் ஸ்பிரிட் திரவம் மற்றும் ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படும் ஏனைய திரவங்கள் அடங்கிய போத்தல்கள் தான் அதிகமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் போத்தலைகளினை திறந்த உடன் மதுபான வாசனை வருகின்றதே?

வைத்தியசாலையில் புண்களை சுத்தப்படுத்தும் ஸ்பிரிட் திரவம் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் திரவங்களில் அல்லது சேதன கரைப்பான்களில், methanol, isopropanol,propanol போன்ற  அல்கஹோல்  வகைகள் இருக்கும். இவை மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல மாறாக நஞ்சு. நாம் அருந்தும் மதுபானத்தில் Ethanol என்ற அல்கஹோல் தான் இருக்கும். எவ்வாறாயினும் isopropnanol, propanol, methanol மற்றும் Ethanol ஆகியன ஒரே இரசாயன வகையினுள் வருவதினால் propanol, methanol போன்றவை நாம் அருந்தும் மதுபானத்தை மணம் மற்றும் வெறிக்கும் தன்மையினை கொண்டிருக்கும்.

இப்பதிவில் எவ்வாறு ஓர் மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காண்பது என்பது பற்றி பார்வையிடுவோம். பொதுவாக வைத்தியசாலையில் புண்களுக்கு மருந்து கட்டிட பாவிக்கப்படும் திரவங்கள், விவசாயத்தில் பாவிக்கப்படும்  களை கொல்லிகள், பீடை நாசினிகள், நஞ்சு பதார்த்தங்கள் மற்றும் ஏனைய திரவ மருந்து வகைகள் கறுப்பு அல்லது மண்ணிற கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக்கினால் ஆன போத்தல்களில் இருக்கும். இவ்வகையான போத்தல்களினை கண்டவுடன் நாம் உசார் அடையவேண்டும். மேலும் இவ்வாறான போத்தல்களில் சிவப்பு, நீலம், பச்சை அல்லது மஞ்சளினால் ஆன லேபிள் இருக்கும். பொதுவாக ஆங்கில மொழியில் தான் போத்தலினுள் இருக்கும் பதார்த்தம் பற்றிய விபரங்கள் இருக்கும். ஆனால் மேற்குறித்த நிறங்களினை காண்பதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

மேலும் சில போத்தல்களில் மண்டை ஒட்டு குறியின் உடனான கோட்டு படம் (நஞ்சு பதார்த்தத்தினை குறிக்கும்), ஆச்சரிய குறியின் கோட்டு படம் ( ஆபத்தான உடல் நலக்குறைவுகள் ஏற்படுத்தும் பதார்த்தம்) போன்றன இருக்கும் இவற்றினை வைத்தே மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.


மேலும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தத்தினை கொண்டிருக்கும் போத்தல் அல்லது வேறு பொதி செய்யபட்ட உணவு பொதி ஒன்று காணப்படுமாயின் கூட அதனை எடுத்து நாம் மனித நுகர்விற்கு பயன்படுத்தல் ஆகாது ஏனெனில் அவை நீண்ட காலமாக அதிக வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் நீர் என்பவற்றுடன் தொடுகையில் இருப்பதன் காரணமாக அவற்றினுள் இருக்கும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தம் ஆனது மனித நுகர்விற்கு பொருத்தம் அற்றதாகவும் சிலவேளை நச்சு பதார்த்தம் ஆகவும் மாறி இருக்கலாம்.
நன்றி

உயிரினை பறிக்கும் வீடியோ கேம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் “பப்ஜி” என்ற வீடியோ கேமிற்க்கு அடிமையான ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் கூட இளைஞர் ஒருவன் வீடியோ கேம் ஆன “பப்ஜி” இற்கு அடிமையான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். . இவ்வாறான சம்பவங்கள் உலகின் பல இடங்களில் முன்னரும் நடைபெற்றுள்ளன. இப்பதிவில் வீடியோ கேம் பாவனையானது அதனை பாவிப்பவர்களிடத்து குறிப்பாக இளைஞரிடத்து எவ்வாறு மரணங்களை, மனரீதியான தாக்கத்தினை, பண இழப்புக்களை ஏற்படுத்துகின்றது பற்றி விளக்குகின்றது.

Player Unknown’s Battle grounds (PUBG) என்பதே தமிழில் “பப்ஜி” என்றழைக்கப்படுகின்றது. இந்த வீடியோ கேமில் பலர் தனியான தீவு ஒன்றில் பாராசூட் மூலம் தரை இறக்கப்படுவார்கள் அவர்கள் அத்தீவில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி அங்குள்ளவர்களை கொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் குறித்த ஆயுதங்கள் போன்றவற்றினை பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டும் . மேலும்  இந்த விளையாட்டிற்கு அடிமையாகியவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அதில் விளையாடவே செலவு செய்வார்கள் இதன் காரணமாக உணவு, தனி நபர் சுகாதாரம்,கல்வி, தொழில், குடுப்ப உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் விளையாட்டின் காரணமாக குறைந்தளவு நேரமே உறங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உண்டாகும். அடுத்து இவ்வாறு கைத்தொலை பேசி அல்லது கணனியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்துள்ளார்கள் என பார்ப்போம்.

1. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் குறித்த ஒரு காரணத்தினால் தொடர்ச்சியாக குறித்த வீடியோ கேம் இணை விளையாட முடியாத சூழ்நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உதாரணமாக பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு, இணைய வசதியினை பெற போதிய பணம் இன்மை….

2. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருசிலர் குறித்த வீடியோ கேம் இணை விளையாடியதன் பலனாக ஏற்பட்ட அதீத  மனஅழுத்தம் மற்றும் சிலவகை வீடியோ கேமில் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படும் கட்டளைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

3. மேலும் சிலர் குறித்த வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தமது தொழிலில் ஒழுங்கான முறையில் ஈடுபட முடியாமையினால் கடன், அதீத வேலைச்சுமை போன்றவற்றினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

4. மேலும் வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் குறைந்த அளவிலான நீரினை நாளாந்தம் உள்ளெடுப்பதினால் அவர்களின் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டும் சோடியம் பொட்டாசியம் போன்ற அயன் பற்றாக்குறை ஏற்பட்டும் இறப்பு ஏற்பட்டுள்ளது .

5. ஏற்கனவே மூளையின் இரத்த குழாய்களில் பலவீனமான அமைப்பினை உடையவர்கள்(AV malformation/ aneurysm)  வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கேம் விளையாடும் பொழுது அதிகளவு அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த இரத்த குழாய் வெடித்து மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இதனையே பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூளை நரம்பு வெடித்து இறப்பு ஏற்படுவதாக செய்தி இடுகின்றன.

6. மேலும் சிலர் இவ்வாறு கேம் விளையாடியவண்ணம் வீதியினை கடத்தல், வாகனம் செலுத்துதல், உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் நிற்றல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது விபத்துக்களை சந்தித்து மரணத்தினை தழுவியுள்ளனர்

வீடியோ கேம் எவ்வாறு மன அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றது

1. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் பொழுது அவர்கள் நிஜ உலக வாழ்க்கையில் இருந்து விடுபடுகின்றனர். சமூக நடவடிக்கைகளிலிருந்து விலகுதல், தூக்கமின்மை, ஆக்ரோஷமான நடத்தை மற்றும் பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

2. PUBG இல் அதிக ஈடுபாடு ஆனது தனிமை உணர்வுகளை மோசமாக்கும், குறிப்பாக அந்த நபருக்கு ஏற்கனவே மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநல பாதிப்புகள் இருந்தால் தனிமை உணர்வு மோசமாகும்.

3. விளையாட்டில் போட்டி மன அழுத்தம் மற்றும் தோல்வி, குடும்பத்தினரின் விமர்சனம் அல்லது கட்டுப்பாடுகளுடன் இணைந்து, கடுமையான உணர்ச்சி துயரத்தையும், அரிதான சந்தர்ப்பங்களில், தற்கொலை நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும்.

4. விளையாட்டில் ஆக்ரோஷமான மற்றும் வன்முறையான உள்ளடக்கம் போன்றவை சில  நபர்களில் உணர்ச்சி உறுதியற்ற தன்மை மற்றும் சுய-தீங்கு போக்குகளை அதிகரிக்கக்கூடும்.

சில தற்கொலை வழக்குகள், தற்கொலைக் குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, “பப்ஜி” மற்றும் ஏனைய வீடியோ கேம் இற்கு அடிமையாதல் மற்றும் தனிமைப்படுத்தும் தன்மையே அவர்களின் துயரத்திற்கு நேரடிக் காரணம் என்று கூறுகின்றன.

PUBG மற்றும் ஏனைய வீடியோ கேம்களில்  பணத்தை இழப்பதற்கான காரணங்கள்

1. குறித்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் பணம் செலுத்தியே வாங்க வேண்டும் மேலும் குறித்த வீடியோ கேமினை விளையாடும் பொழுது  மற்றும் ஆயுதங்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு உண்மையான பணம் தேவைப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வீடியோ கேமில் வென்றால் பண பரிசு உண்டு இவ்வாறான  போட்டி நன்மை அல்லது சமூக அந்தஸ்து மீதான ஆசையால் அதிக செலவு தூண்டப்படுகிறது.

2. பெரும்பாலான வீடியோ கேம்கள் ஒன்லைன் மூலமே விளையாட வேண்டும் இதன் பொழுது பிழையான விலை நிர்ணய மாதிரிகள்,  குழப்பமான நாணய மாற்று விகிதங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட விலை நிர்ணயம் பெரும்பாலும் வீரர்களை தேவைக்கு அதிகமாக வாங்கத் தள்ளுகிறது. மேலும் பயன்படுத்தப்படாத நாணயத்தை விட்டுவிடுகிறது அல்லது மீண்டும் மீண்டும் சிறிய கொள்முதல்களைத் தூண்டுகிறது. சில வீரர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – கட்டாய மற்றும் திட்டமிடப்படாத கொள்முதல்களைச் செய்கிறார்கள்.

3. தொடர்ச்சியாக விளையாடவேண்டும் என்பதற்காக ஐஸ் போன்ற போதை மருந்துகளின் பாவனை மற்றும் இணைய இணைப்பு செலவுகள்

4. விளையாட்டு மூலம் கிடைக்கும் சிறிய வெகுமதிகள், நண்பர்களின் தூண்டல்கள்  மற்றும் உளவியல் தூண்டுதல் காரணமாக செலவுகள் அதிகரிக்கின்றன

5. மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்: மொபைல் சாதனங்களில் அட்டை அல்லது வங்கி விவரங்களைச் சேமிப்பது தற்செயலான கட்டணங்கள், மோசடி மற்றும் கணக்கு திருட்டு அபாயத்தை அதிகரிக்கிறது.

6.  வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள், கிரெடிட் கார்ட் சலுகைகள் மற்றும் சில நிறுவனங்களின் சலுகைகள் காரணமாக செலவு ஏற்படுகின்றது

நன்றி

போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையா?

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பலதரப்படடவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கையில் மரண தண்டனையினை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இப்பதிவு விளக்குகின்றது. மரண தண்டனையினை எதிர்ப்பதற்கான காரணங்களாவன

  1. இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. சட்ட விரோத கைதுகள், வழக்குகள் போன்றவை நடைபெறும். இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம்  ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர்
  2. போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும். மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள்.   
  3. போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். இவ்வாறன  ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், போலீசார் நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம் மற்றும்  சிறந்த  குற்றவியல் சட்ட தரணியின் சேவை சந்தேக நபருக்கு  கிடைக்காமல் விடலாம்.
  4. அரசியல்வாதிகளை பழிவாங்கவும், சிறுபான்மையினரை பழிவாங்கவும் மரணதண்டனை பயன்படலாம் மேலும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
  5. நீதித்துறையின் தவறு காரணமாக மரண தண்டனை வழங்கப்படலாம். அமெரிக்காவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மேற்பட்டவர்கள் பிற்பாடு நடந்த தீவிர விசாரணை மீளாய்வு காரணமாக மரண தண்டனையில் இருந்து கடந்த காலங்களில் விடுதலை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
  6. மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை.

எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம்.

பிரஷர் குக்கர் சமையல் ஆபத்தானதா??

அன்று நான் கடமையில் இருந்த பொழுது 45 வயதுமிக்க ஓர் ஆண் நோயாளி முகத்தில் எரிகாயங்களுடன் எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்ன நடந்தது என அவரிடம் வினாவிய பொழுது நான் அறிந்து கொண்ட விடயம் என்னவெனில் அவர் வெளிநாடு ஒன்றில் இருந்து நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தனது தாயாரினை பார்க்க வந்திருந்தார். அன்று அவரின் தாயாரினை பராமரிக்கும் பெண் வேலைக்கு வரவில்லை அதனால் குறித்த நபர் தனது தாயாருக்கு காலை உணவாக கஞ்சி காச்சி பரிமாற முற்பட்ட வேளையில் தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. அவர் பிரஷர் குக்கரில் நீராவி அடங்க முன்னரே அதனை திறந்தமையினால் முகத்தில் பலமான எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முக்கியமாக அவரின் இரு கண்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. இறுதியில் அவரின் பார்வை வழமையான நிலைமைக்கு திரும்பாத நிலையில் தனது நாட்டிற்கு திரும்பவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.

   இன்றைக்கு எளிதாக சமையல் செய்வதற்கு பெரிதும் பயன்படும் பொருள் பிரஷர் குக்கர். உலகில் இது இல்லாத சமையல் அறைகளே இல்லை எனலாம். பிரஷர் குக்கர் இயங்குவது அதன் உள்ளே உருவாக்கப்படும் அழுத்தத்தால் தான். அப்படிபட்ட அந்த பிரஷர் குக்கர் அது தயாரிக்கப்பட்ட புதிதில் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் வெடித்துச் சிதறியது. இதனால் அச்சம் காரணமாக மக்களிடையே குக்கர் பயன்பாடுகள் குறையத் தொடங்கின.குக்கரை பயன்படுத்தவே மக்கள் பயந்தார்கள்.இதை எப்படி சரி செய்வது என்று இந்தியாவின் பல குக்கர் நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன. பாதுகாப்பான குக்கர் என்பதை இலக்காக வைத்து மேற்படி ஆராய்ச்சியில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த குக்கர்கள் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான TTK நிறுவனமும் களத்தில் இறங்கியது.

அது அந்த நிறுவனம் வணிக ரீதியில் தள்ளாட்டத்தில் இருந்த காலகட்டம்.அதை சமாளிக்க இன்ஜினியரிங் படித்து விட்டு,பேராசிரியராகும் கனவில் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்த “அவரை” அவரது தந்தையும், TTK நிறுவனத்தின் அப்போதைய தலைவருமான நரசிம்மன் அழைத்து வந்து பிசினஸில் இறக்கி விட்டார்.

AI உதவியுடன் ஓர் படம்

“அவர்” தொழிலில் நுழைந்த அந்த காலத்தில் அவர்களது TTK நிறுவனம் கடுமையான நெருக்கடியில் இருந்தது.அதோடு இந்த குக்கர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. தன் பொறியியல் அறிவையும்,ஆராய்ச்சி அனுபவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்தார்.

அது தான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் (Gasket Release System). அவர் கண்டுபிடித்த அந்த கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டத்திற்கு அவர் காப்புரிமையை பெறவில்லை. ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, “நான் கண்டுபிடித்த இந்த பாதுகாப்பை காப்புரிமை செய்தால் எங்கள் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் லாபம் வரும்.ஆனால் அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.எனவே வேறு எந்த நிறுவனத்தின் குக்கர் வெடித்தாலும்,அதனால் ஒட்டுமொத்த குக்கர் என்ற கருவிக்கும் கெட்ட பெயர் உண்டாகும்.அதனால் தான் செய்யவில்லை…” என்ற பதிலைத் தந்தார்.

சமையலின் பொழுது பிரஷர் குக்கர் வெடித்து ஏற்பட்ட விபத்து

வீட்டில் இருக்கும் குக்கர் மூடியை எடுத்துப் பாருங்கள்.அதில் ஒரு சிறு துளை இருக்கும்.அதுதான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம்.குக்கர் மூடியில் “அவர்” போட்ட அந்த சிறிய ஓட்டை தான் குக்கரை பாதுகாப்பாக மாற்றியதுடன், TTK நிறுவனத்தையும் காப்பாற்றித் தந்தது. அந்த “அவர்” தான் TTK.ஜெகந்நாதன். இன்றைக்கும் கோடிக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பான குக்கர் சமையல் என்பதற்கு வித்திட்ட அந்த மாபெரும் மனிதரான டி.டி.கே.ஜெகந்நாதன் தன் 84 வது வயதில் பெங்களூருவில் அண்மையில் காலமானார்.

பிரஷர் குக்கரில் சமைப்பதினால் ஏற்படும் நன்மைகள்

1. நேர சேமிப்பு – பாரம்பரிய முறைகளினை விட 70% குறைவான நேரத்தினை எடுத்துக்கொள்ளும்

2. மின்சாரம் மற்றும் எரிவாயு சேமிப்பு

3. போசணைப்பொருட்கள் மற்றும் நுண்சத்துக்கள் இழக்கப்படாமல் சமைக்கலாம்

4. இங்கு ஆவியாதல் மிகக்குறைவாக நிகழ்வதால் உணவின் இயற்கை சுவை குன்றாமல் இருக்கும்

5. கடினமான இறைச்சி, வத்தல் , தானியங்கள் போன்றவற்றினை மிக இலகுவாக சமைத்து கொள்ளலாம்

6. சமையலுக்கு குறைந்த அளவிலான நீர் தேவைப்படும்

7. பிரஷர் குக்கரினை பயன்படுத்தும் பொழுது சமையலறையினை தூய்மையாகவும், இட நெருக்கடி இன்றியும் வைத்திருக்கலாம்

பிரஷர் குக்கரினை பயன்படுத்தும் பொழுது  கையாளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

1. பிரஷர் குக்கரில் பயன்படுத்தப்படும் இறப்பர் வளையத்தினை பரிசோதித்துக்கொள்ளவேண்டும், நெகிழ்வுத்தன்மை குறையும் பொழுது குறித்த காலஇடைவேளையில் அதனை புதிதாக மாற்ற வேண்டும். மேலும் அது ஒழுங்கான முறையில் உள்வைக்கபட்டிருக்குகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. பொதுவான உணவுகள் சமைக்கும் பொழுது நீர் மற்றும் உணவு பிரஷர் குக்கரின் 2/3 பங்கிற்கே நிரப்ப வேண்டும். மறுதலையாக 1/3 பங்கு வெறுமையாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உணவு அவிந்து விரிவடைய இடம் காணும். அரிசி போன்ற அதிகம் விரிவடையும் தானியங்களை அவிக்கும் பொழுது பிரஷர் குக்கரின் 1/2 பங்கிற்கே நிரப்ப வேண்டும்.

3. பாதுகாப்பான முறையில் நீராவி அமுக்கத்தினை வெளியேற்றல் – குக்கரினை ஆறவைத்து நீராவியினை ஒடுங்கி அமுக்கத்தினை இல்லாது செய்தல் அல்லது குக்கரின் மேல் உள்ள வால்வு இணை திறந்து வெளியேறல் அல்லது குக்கரின் மேல் நீரினை ஊற்றுவதன் மூலம் நீராவியினை சடுதியாக ஒடுங்க அனுமதித்து அமுக்கத்தினை இல்லாது செய்தல்.

4. நீராவி ஒடுங்கிஅல்லது வெளியேறி அமுக்கம் இல்லாது போன பின்னர் குறைந்த விசையினை பயன்படுத்தி திறக்க வேண்டும். ஒருபொழுது கடுமையான விசையினை பாவித்து திறக்க கூடாது.

5. நடுத்தர, சீரான வெப்பத்தில் சமைப்பதே சிறந்தது. அதிக வெப்பத்தில் சமைப்பது ஆபத்தினை உண்டாக்கும்.

6. நீருக்கு பதிலாக எண்ணெய் போன்றவற்றினை பயன்படுத்தி பெரிய இறைச்சி துண்டங்களை deep-fry செய்வது ஆபத்தினை உருவாக்கும். ஏன்னெனில் பிரஷர் குக்கர் நீரில் சமைப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது எண்ணெயினை பாவிக்கும் பொழுது அதிக வெப்பநிலை காரணமாக இறப்பர் வளையம் உருகி ஆபத்தினை விளைவிக்கலாம் மேலும் வால்வு ஒழுங்காக வேலை செய்யாது

7. பாதுகாப்பு வால்வு மற்றும் சாதாரண வால்வு என்பவற்றினை குறித்த காலத்தில் மாற்ற வேண்டும்.

8. முக்கியமாக பிரஷர் குக்கரினை அடுப்பில் வைக்கும் பொழுது பாத்திரத்தின் கைபிடியும் முடியின் கைப்பிடியும் ஒரே நேராக ஒன்றாக இருத்தல் வேண்டும். வேறுவேறு கோணங்களில் இருக்கும் பொழுது சமையலின் பொழுது அதிக அமுக்கம் காரணமாக முடி கழன்று ஆபத்தினை உருவாக்கும். சிறந்த தரக்கட்டுப்பாடு பெற்ற பிரஷர் குக்கரில் முடியினை பொருத்தும் பொழுது அதன் பிடியானது  அது நேராக பாத்திரத்தின்பிடியுடன் பொருந்தும் அத்துடன் குறித்த சுழியில் மேலும் அசைக்க முடியாதவாறு குறித்த பிரஷர் குக்கர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நன்றி        

மலசலக்குழியில் வெடிப்பு சம்பவம் ஏன்??

இலங்கையில், கல்சியம் கார்பைட் என்ற இரசாயனப்பொருள் பெரும்பாலும் மலசல கூட மற்றும் சமையலறைக்  கழிவு குழாய்களில் ஏற்படும் அடைபாடுகளை நீக்க பயன்படுகிறது. துயர சம்பவம் நடந்த பகுதி,கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. ஆனால் கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட்ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். ஒரு சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.

12/10/2025 இல் நடந்த சம்பவம்

2020 இல் நடந்த சம்பவம்

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும் இவ்வாயுவானது மிகஎளிதாக தீப்பற்றி எரியும் தன்மை யுடையது மற்றும் இவ்இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது. இங்கு மலசலக்கழிவுத்துதொட்டியானது ஓர் இறுக்கமான மூடிய அறை ஆகும் இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு (Blast) சம்பவம் நிகழலாம்.

இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பலவீடுகளில் அடிக்கடி  நடைபெறுகின்றது இந்த நிலையில் இவ்வாறு ஏற்படும் அடைப்புக்களை கார்பைட் பாவித்து எடுக்க முயற்சிக்க கூடாது. மாறாக வேறு பின்வரும் வழிமுறைகளில் ஒன்றினை கைக்கொள்வதன் மூலம் தேவையற்ற உயிரிழப்புக்களை தடுத்து கொள்ளலாம்

1. டிஷ் சோப்பும் வெந்நீரும்

கழிப்பறை காகிதம் அல்லது மலக் கழிவுகளால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க இது உதவும். செய்முறை,  அரைக்கட்டி  அளவு டிஷ் சோப்பை டாய்லெட் பேசினில் போடவும் பிற்பாடு ஒரு வாளி நீரில், சூடான, ஆனால் கொதிக்காத (போர்சிலின் உடையாமல் இருக்க) நீரை எடுத்துக் கொள்ளவும். அதை இடுப்பு உயரத்திலிருந்து டாய்லெட் பேசினில் ஊற்றவும். இந்த கலவையை 15–30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். சோப் அடைப்பை இளக்கிவிடும். பிறகு, தண்ணீர் ஊற்றி  ஃபிளஷ் செய்யவும்.

2. பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையின் இரசாயனத்தாக்கம் ஆபத்தில்லாத காபனீர்ஓட்ஸைட் வாயுவினை உருவாக்கும், இது அடைப்புகளை உடைக்க உதவும். செய்முறை,  ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட் பேசினில்  ஊற்றவும். பிறகு, இரண்டு கப் வெள்ளை வினிகரை மெதுவாக ஊற்றவும். நுரைக்க 30–60 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர், டாய்லெட்டை ஃபிளஷ் செய்யவும்.

3. பிளன்கர்  (Plunger) முறை

சாதாரண அடைப்புகளுக்கு, பிளன்கர் மிகவும் பயனுள்ள கருவியாகும். செய்முறை,  பிளன்கரின் ரப்பர் முனை முழுவதுமாக நீரில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், கூடுதல் நீரை ஊற்றலாம். பிளஞ்ச் செய்யுங்கள். பிளன்கரைக் கொண்டு, பம்ப் செய்வது போல, அழுத்தி மேலும் கீழும் வேகமாகக் குலுக்கவும். இதை 15 முதல் 20 வினாடிகள் செய்யுங்கள். அடைப்பு நீங்கிவிட்டதா என்பதைச் சோதிக்க, பிளன்கரை அகற்றிவிட்டு, தண்ணீர் வடியும் வேகத்தைப் பார்க்கவும்.

4. விசேடமாக வடிவமைக்கப்பட்ட கம்பிகளை கொண்டு சீர்செய்யும் முறை (Flexible grabber claw)

மேற்குறிய முறைகளில் அடைப்பு எடுபடவிட்டால் அடைப்பு மிகவும் கடுமையானதாக இருந்தால், நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க வேண்டியிருக்கலாம்.அடைப்பை நீக்கும் முன், டாய்லெட் பேசினில்  தண்ணீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க, ஃபிளஷ் செய்ய வேண்டாம்

நன்றி

உயிருடன் எரிக்கப்பட்டாரா?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தேனியாவில் கொலை செய்யப்பட்ட ஒரு குற்றவாளி, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் இறப்பதற்கு சற்று முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் இருந்ததாக கடந்த வாரம் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் மரணம் மீண்டும் ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இப்பதிவு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது இறந்த நிலையில் எரிக்கப்படாரா? என்று எவ்வாறு ஓர் சட்ட வைத்தியர் ஒருவர் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கண்டுபிடிப்பார் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.


இவ்வாறு உயிருடன் ஒருவர் எரிக்கப்பட்டாரா அல்லது இறந்த பின்னர் எரிக்கப்பட்டாரா என்ற விடயம் குற்றவியல் வழக்கின் பொழுது ஓர் முக்கியமான விடயம் ஆகும். சாதாரணமாக ஒருவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரது இருதயம் துடித்துக் கொண்டு இருக்கும் மற்றும் நுரையீரல் சுருங்கி விரிவதன் மூலம் காற்றினை உள்ளிழுத்து வெளித்தள்ளிய வண்ணம் இருக்கும். இவ்வாறு வாகனம் ஒன்று எரியும் பொழுது அதில் உள்ள இறப்பரினால் ஆன மற்றும் பிளாஸ்ட்டிக்கினால் ஆன பகுதிகள் எரியும். இதன் பொழுது அவற்றில் இருந்து பல்வேறு பட்ட நச்சுவாயுக்கள் வெளியேறும். இவ்வாயுக்கள் மனிதனுக்கு கடுமையான உடல்நலக்கேட்டினை விளைவிக்க வல்லன. இவ்வாயுக்களில் முக்கியமானது கார்பன் மோனோக்சைட் என்பதாகும். இவ்வாயு நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட 200 மடங்கு விரைவாக எமது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும் இதன் காரணமாக ஓட்ஸிசன் காவுதல் தடைப்பட இறப்பு நிகழும்.
எனவேதான் உடற் கூராய்வு பரிசோதனையில் இறந்தவரின் இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கார்பன் மோனோக்சைட் மற்றும் ஏனைய வாயுக்கள் இருக்கின்றனவா என பரிசோதிக்கப்படும். இங்கு பெறப்பட்ட இரத்தம் ஆனது அளவறிபகுப்பாய்விற்கு உட்படுத்தப்படும். அதன் அடிப்படையில் இரத்தத்தில் உள்ள கார்பன் மோனோக்சைட்  அளவினை வைத்து குறித்த நபர் தீப்பற்றி எரிகையில் உயிருடன் இருந்தாரா என்பது குறித்து தீர்மானிக்கப்படும். உதாரணமாக புகைப்பிடிப்பவர்களில் 5-10% கார்பன் மோனோக்சைட் இரத்தத்தில் சாதாரணமாக காணப்படும். 20-40% கார்பன் மோனோக்சைட் காணப்படுகையில் அந்த நபருக்கு மனக்குழப்பம், தசைகளில் பலவீனம் என்பன ஏற்படும்.  இரத்தத்தில் கார்பன் மோனோக்சைட் 40% இற்கு அதிகமாக இருக்குமானால் இறப்பு ஏற்படும். இறந்த பின்னர் இருதயம் துடிக்காது மற்றும் நுரையீரல் சுருங்கி விரியாது இதன் காரணமாக மேற்குறித்த வாயுக்கள் இரத்தத்துடன் இரசாயன ரீதியில் சேராது இருக்கும்.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது கார்பன் மோனோக்சைட்டு வாயு சேர்வதினால் இறந்த ஒருவரின் உடலின் தோல் மற்றும் அங்கங்கள் சிவப்பு நிறத்தில் மாறி இருக்கும். இதன் மூலம் குறித்த நபர் உயிருடன் இருந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும். இவை தவிர இறந்தவரின் தொண்டை, சுவாசக்குழல் பகுதிகளில்  அவர் சுவாசம் மேற்கொண்டதன் காரணமாக கரி போன்றன படிந்திருக்கின்றனவா எனவும் பரிசோதிக்கப்படும்.

மேற்குறித்த செயற்பாடுகள் மூலம் ஒருவர் தீப்பற்றி எரியும் பொழுது உயிருடன் இருந்தாரா அல்லது இறந்த நிலையில் எரிக்கப்பட்டாரா என்பதினை இலகுவாக கண்டு பிடிக்கலாம்.

நன்றி

குழந்தைகளின் உயிர்களினை பறித்த இருமல் பாணி

கடந்த வாரம் இந்தியாவின் , மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், இருமல் மருந்தைக் குடித்ததன் காரணமாக 11 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. மத்தியப் பிரதேசத்தில் இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள், பராசியாவில் உள்ள குழந்தை நல  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். மேலும்  குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் (Coldrif) இருமல் மருந்தைப் கொடுக்கப்பட்டதாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக அந்த நாட்டுக் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆரம்ப பகுப்பாய்வுகளில் குழந்தைகளைப் பலி கொண்ட ‘கோல்ட்ரிஃப்’ (Coldrif) என்ற அந்த இருமல் மருந்தில், ‘டை-எத்திலீன் கிளைக்கோல் ‘ (Diethylene Glycol) எனப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப்பொருள் பொருள் சுமார் 48.6% அளவுக்கு இருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில்  இந்த மருந்தை உற்பத்தி செய்த தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரேசன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டை எத்திலின் கிளைக்கோல் குழந்தைகளின் உயிருக்கு எவ்வாறு ஆபத்தானதாக மாறுகிறது?

பௌடர் அதாவது தூள் நிலையில் இருக்கும் மருந்துகளை சேதன கரைப்பான் ஒன்றில் கரைத்தே இருமல் பாணி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வழமையாக propylene glycol or glycerin போன்றனவே இவ்வாறு சேதன கரைப்பானாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கு குறித்த வகை இருமல் பாணியில் Diethylene glycol என்ற சேதன கரைப்பான் பயன்படுத்தப்பட்டமையே இந்த அனர்த்தத்திற்கு காரணமாகின்றது.

டை எத்திலின் கிளைக்கோல் எமது ஈரலில் அனுசேபம் அடையும் பொழுது diglycolic acid (DGA) ஆக மாற்றமடையும் இது எமது சிறுநீரகத்திற்கு மிகுந்த நச்சுத்தன்மை உடையது ஆகும். இது சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி உடனடியான சிறுநீரக செயலிழப்பினை () ஏற்படுத்திஇறப்பிற்கு இட்டு செல்லும்

நாம் அவதானமாக இருக்க வேண்டுமா?

  1. இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படவில்லை எனினும் பின்வரும் விடயத்தினை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான மருந்துகள் ஏறத்தாள 50% மருந்துகள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யும் பொழுது ஆரம்பத்தில் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை (National Medicines Regulatory Authority) இனால் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனினும் தொடர்ச்சியாக ஒழுங்கான முறையில் இவ்வாறான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. பலருக்கு இம்யூனோகுளோபின் இற்கு பதிலாக வெறும் நீர் இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஏற்றப்பட்டமை ஞாபகம் இருக்கலாம்.
  2. மருந்தை உட்கொள்வதற்கும், அதை அளப்பதற்கும் மருந்துடன் சேர்த்து விநியோகிக்கபடும் முடி போன்றவற்றினை பயன்படுத்த வேண்டும் மாறாக மருந்தை அளவீடு செய்ய வீட்டில் உள்ள கரண்டிகள் அல்லது பிற மருந்துகளில் இருந்து வரும் கருவிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  3. பெரியவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இருமல் பாணி மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். பாணியின் அளவு மற்றும் உள்ளடக்கம் என்பன வேறுபடும். ஒருவரின் வயது, உடல் எடையைப் பொறுத்து இருமல் மருந்தின் அளவு மாறுபடும். பெரியவர்களுக்கு (adult) பரிந்துரைக்கும் மருந்து அளவை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஏனென்றால் பெரியவர்களின் சிறுநீரகம் முதிர்ச்சி அடைந்திருக்கும். அதேசமயம் குழந்தைகளுக்கு சிறுநீரகம் முழுமையாக முதிர்ச்சி அடைந்திருக்காது. இதனால் இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படும் வாய்ப்புள்ளது
  4. இன்றைய நிலையில் இலங்கையில் உள்ள பல்வேறு தனியார் மருந்தகங்களில் இவ்வாறான இருமல் பாணிகள் வைத்தியரின் பரிந்துரை சீட்டைகள் ஏதும் இன்றி வாங்கக்கூடிய நிலையில் உள்ளது. இது ஓர் ஆபத்தான நிலை ஆகும். சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு Over the counter மருந்துகளை (அதாவது மருந்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் வாங்கப்படும் மருந்துகள்) பரிந்துரைக்க வேண்டாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.ஏனெனில் இது தீவிரமான மற்றும் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. குழந்தைகளுக்கு வரும் இருமல், சளி போன்றன அவர்களுக்கு இருக்கும் நியூமோனியா, கடுமையான ஆஸ்த்மா போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவே தகுந்த வைத்தியரிடம் குழந்தையினை காட்டி வைத்தியரின் சிபாரிசின் பிரகாரம் இவ்வாறான இருமல் பாணி மருந்துகள் கொடுக்கப்படல் சிறந்தது.

நன்றி

உயிருக்கு போராடுகின்றவரை வைத்தியசாலையில் அனுமதிக்க பின்னிற்கலாமா?

அண்மையில் பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விபத்து ஒன்றின் பொழுது தலையில் காயமடைந்த சிறுமி ஒருவரினை பலர் வைத்தியசாலையில் அனுமதிக்க தயக்கம் காட்டிய நிலையில் சிறுமி அதிக இரத்த போக்கு காரணமாக இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஒரு விபத்தில் அல்லது ஒரு தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பலர் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன் வருவதில்லை.
மாறாக வேடிக்கை பார்ப்பார்கள். இவ்வாறு ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் பொழுது அனுமதித்தவர் ஏதாவது விசாரணை ஒன்றிற்கு முகம்கொடுக்க வேண்டுமா என்பது பற்றி பலருக்கு சரியான விளக்கம் இல்லை. அதனை தெளிவுபடுத்தும் நோக்குடன் சட்ட வைத்திய அதிகாரியின் பார்வை நோக்கில் இப்பதிவினை பதிவிடுகிறேன்.

இவ்வாறு அனுமதிக்கபடும் நோயாளி உயிர் பிழைப்பார் எனில்,
அவரின் உடல்நிலை ஓரிரு நாட்களில் முன்னேற்றமடைந்ததும் அவர் பொலிசாருக்கு அவரை இந்நிலைக்கு இட்டுச்சென்ற சம்பவம் எவ்வாறு நடைபெற்றது என்பது பற்றி வாக்குமூலம் ஒன்றினை வழங்குவார். அதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி மேலதிக தகவல்களை பெற்று தனது சட்ட வைத்திய பரிசோதனையை செய்வார். இங்கு அந்த நோயாளியை அனுமத்திதவர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படமாட்டாது.
ஆனால் துரதிஸ்டவசமாக அந்த நோயாளி இறப்பார் என்றால் நோயாளியை அனுமத்திதவர் ஓரிரு கடமைகளை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.  அனுமதித்தவர் எவ்வாறான சூழ்நிலையில் மரணித்தவருக்கு காயம் ஏற்பட்டது என்பதை பொலிசாருக்கு விளக்கி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும். அரிதான சிலசந்தர்ப்பங்களில் பிரேத பரிசோதனை நடைபெறும் பொழுது சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகம் சென்று இறந்தவரினை காயமடையும் நிலைமைக்கு இட்டு சென்ற சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். மேலும் மரணித்தவருக்கு உறவினர் யாரும் இல்லை எனில் அவரின் உடலத்தினை பொலிஸாருக்கும் சட்ட வைத்திய அதிகாரிக்கும் அடையாளம் காண்பதற்கு உதவி புரிய வேண்டும். மேற்கூறிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஓரிரு மணித்தியாங்கள் செலவாகும்.
சிலர் ஏன் இந்தச் செயற்பாடுகள் என்று கேட்கலாம்.
அதற்கான காரணத்தை அறியலாமா?

1. பல சந்தர்ப்பங்களில் அதாவது விபத்து, கொலை போன்ற மரணம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மனித உடலில் ஏற்படும் காயங்களின் தன்மை ஒரே மாதிரி இருக்கும். இச்சந்தர்ப்பத்தில் இறந்தவரினை அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

2. சில வேளைகளில் குறிப்பிட்ட நோயாளி சுய நினைவு இழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சுய நினைவு மீளாமல் இறக்க நேரிடும். அந்த வகையில் வைத்தியசாலையில் அனுமதித்தவரின் வாக்கு மூலம் முக்கியமானது.

3. பல நேரங்களில் இரு நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவார்கள். போதை தலைக்கு ஏறியதும் சண்டை போட்டு காயப்படுத்தி கொள்வார்கள். படுகாயம் அடைந்த நண்பனை தாக்கியவனே வைத்திய சாலையில் அனுமதித்துவிட்டு , மேல்மாடியில் இருந்து விழுந்ததாக OPD பிரிவில் சொன்ன பல சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.

4. கொழும்பு போன்ற பாரிய நகரங்களில் கணிசமானோர் தெருக்களில் வசிக்கின்றனர். இவ்வாறன ஒருவர் இறக்கும் பொழுது பொலிஸார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வைத்திய சாலையில் அனுமதித்தவரிடம் இருந்து மேலதிக தகவல்களை அறிய முயல்வர்.

5. சில சமயங்களில் விசாரணை செய்யும் பொலிஸார் பிழையான தகவல்களை சட்ட வைத்திய அதிகாரிக்கு வழங்கி அவரை தவறாக வழிநடத்த முற்படுவர். இச்சந்தர்ப்பத்தில் சாட்சியின் வாக்கு மூலம் முக்கியமானது.

6. நடைபெற்றது கொலை எனில் வைத்திய சாலையில் அனுமதித்தவர் நீதி மன்றத்தில் வழக்கு நடைபெறும் பொழுது ஏனைய சாட்சிகளுடன் சேர்ந்து சாட்சி கொடுக்க வேண்டும். இதற்கு நீதி மன்றத்தினால் அழைப்பாணை அனுப்பபடும்.

பின்பற்றப்படும் நடைமுறைகள் ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஏற்றமாதிரி வேறுபடும் உதாரணமாக உறவினர்கள் அல்லது பலர்  ஒன்றாக பயணிக்கும் பொழுது  (பேருந்தில் அல்லது மோட்டார் சைக்கிளில்) ஏற்படும் விபத்தின் பொழுது சக பிரயாணிகளே  கண்கண்ட சாட்சிகள் அவர்களே வாக்குமூலத்தினை வழங்குவார்கள். எனவே இவ்வாறான விபத்தின் பொழுது காயமடைந்த நபரினை வைத்தியசாலையில் அனுமதிக்க தயக்கம் வேண்டாம்      

தமிழர்களில் பெரும்பான்மையினர் நீதி மன்றம் மற்றும் போலீஸ் நிலையம் செல்வதை அவமரியாதையான செயலாக கருதுவதாலும் தாங்கள் ஏதோ குற்றவாளிகள் போன்று அச்சபடுவதாலும் இவ்வாறு உதவி செய்யவும் வாக்கு மூலம் அளிக்கவும் பின்னிற்கின்றனர். விபத்து ஒன்று நடைபெறும் நேரங்களில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற எம்மவர்கள் பின்னடிக்க இதுவே காரணம்.

நன்றி

ஆபத்தினை விளைவிக்கும் தீ சாகச விளையாட்டுக்கள்

அண்மைக்காலமாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கோவில் திருவிழாக்கள் குறிப்பாக சூரன்போர் போன்றன நடைபெறும் பொழுது அல்லது வேறு திருவிழாக்களில் பல இளைஞர்கள் வாயினுள் மண்ணெண்னையிணை வைத்து அதனை தீப்பந்தம் மேல் ஊதி தீயினால் சாகச விளையாட்டினை மேற்கொள்கின்றார்கள். இந்த விளையாட்டினால் ஏற்படும் தீக்காயம் தவிர்ந்த ஏனைய உடற் தீங்குகள் பற்றி  இப்பதிவு விளக்குகின்றது.

மண்ணெண்ணெயின் எரிபற்று நிலை பெற்றோல் போன்றவற்றினை விட உயர்ந்தது என்பதினால் இது இலகுவில் தீப்பற்றி விபத்தினை உண்டாக்காத போதிலும் பின்னரும் உடலுக்கு தீங்கான விளைவுகளை உண்டாக்கும்.

 குரல்வளை மூடி அல்லது குரல்வளை மூடுதளம் என்பது  தொண்டையில் உள்ள ஒரு சிறிய மூடி போன்ற அமைப்பு ஆகும், இது உணவு உட்கொள்ளும் போது மூச்சுக் குழாய்க்குள் உணவும் தண்ணீரும் செல்வதைத் தடுக்கிறது. சாதாரணமாக ஆரோக்கியமான நபர் ஒருவர் உண்ணும் பொழுது அல்லது தனது வாய்க்குழியினுள் திரவம் அல்லது உணவுகளை வைத்திருக்கும் போது அல்லது உண்ணும் பொழுது அல்லது அருந்தும் பொழுது  குரல்வளை மூடி திரவம் அல்லது உணவு சுவாச குழாயான வாதநாழியினுள் உட்செல்ல விடாமல் தடுக்கின்றது. சாதாரணமாக ஓர் மனிதனில் உணவு அல்லது திரவம் பாதுகாப்பான முறையில் விழுங்கப்படுவதினை (மறுதலையாக புரைக்கேறுவதினை தடுக்கும் முகமாக) ஒன்றிற்கு மேற்பட்ட மூளை நரம்புகள் (Glossopharyngeal Nerve (CN IX), Vagus Nerve (CN X), Facial Nerve (CN VII), Hypoglossal Nerve (CN XII)) தொழில்படுகின்றன

ஒருவர் உணவு உண்ணும் பொழுது அல்லது திரவம் ஒன்றினை அருந்தும் போது சிரிக்க அல்லது உரையாட அல்லது வேறு வேலைகளில் ஈடுபட முற்படுவார்களாயின் மேற்குறித்த நரம்புகளின் ஒருங்கிணைத்த தொழில்பாடு அற்று போகும் நிலையில் அவர்களின் சுவாச தொகுதியினுள் உணவு அல்லது திரவம் உட்செலும் இதன்காரணமாக குறித்த நபருக்கு புரைக்கேறுதல் (Aspiration) நடைபெறும் மேலும் சில நரம்பு சம்பந்தமான நோயாளிகள், தலையில் பாரிய காயங்களுக்கு உள்ளானவர்கள், வலிப்பு ஏற்படும் பொழுது இவ்வாறு புரைக்கேறுதல் நடைபெறும்.

இவ்வாறு மண்ணெண்ணெய் போன்ற அருந்த தகாத அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் திரவத்தினை வாயினுள் வைத்திருக்கும் பொழுது அது சிறிய அளவில் சுவாச குழாயினுள் (வாதநாளியினுள்) உட்செல்லும் இதனை சட்டமருத்துவத்தில் Micro Aspirations என்றழைப்பர். இதன் பொழுது குறித்த நபருக்கு புரைக்கேறியதற்கான உடனடியான அறிகுறிகள் பெருமளவில் ஏற்படாது. ஆனால் சுவாசத்தொகுதியினுள் உட்சென்ற மண்ணெண்ணெய் நுரையீரலினுள் அழற்சியினை (chemical pneumonitis) ஏற்படுத்தும் இதன் காரணமாக இருமல், காச்சல், நெஞ்சுநோ, சுவாசப்பதில் சிரமம் என்பன ஏற்படும். மேலும் உட்சென்ற மண்ணெண்ணெய் ஆனது நுரையீரலின் சிற்றறைகளினை அழிக்கும் இவ்வாறு அழிக்கப்பட்ட  சிற்றறைகள் நீண்ட காலப்போக்கில் நார்களினால் பிரதியிடப்படும். இதனை மருத்துவத்தில் lung fibrosis என்றழைப்பர். இதன்காரணமாக நீண்ட கால சுவாச பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள் முக்கியமாக Bronchiectasis, Bronchiolitis obliterans,  lung destruction and respiratory failure போன்ற நோய்கள் ஏற்படும். மேலும் நுரையில் நோய் காரணமாக (Pulmonary Hypertension and Heart Failure)இருதய செயலிழப்பு ஏற்படலாம்.  மேலும் வாயினுள் வைத்திருக்கும் மண்ணெண்ணெய் ஆவியாகி மூக்கின் ஊடாகவும் நுரையீரலுக்கு சென்று மேற்குறித்த விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் வாயினுள் புண்கள் காணப்படும் பொழுதும், வாய்க்குழியின் மென்சவ்வின் ஊடாகவும் மண்ணெண்ணெய் ஆனது உடலினுள் உறிச்சப்படும் ஆபத்தும் உள்ளது.

மேலும் ஒருவருக்கு நுரையீரல் அழற்சி அவரின் நுரையீரலினுள் செல்லும் மண்ணெண்ணெய்யின் அளவில் தங்கியுள்ளது எனினும் சிறிதளவிலான  மண்ணெண்ணெய் இவ்வாறான நுரையீரல் அழற்சியினை ஏற்படுத்த போதுமானது. சிலரில்  மண்ணெண்ணெய் ஆவி ஒவ்வாமை காரணமாகவும் நுரையீரல் அழற்சி ஏற்படலாம். சிறுவர்களில் 01 மில்லி லிட்டர் இற்கு குறைவான மண்ணெண்ணெய் இவ்வாறு நுரையீரல் அழற்சியினை ஏற்படுத்த போதுமானது (ஆதாரம் https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6996713/#:~:text=Aspiration%20of%20even%20small%20amounts,common%20symptoms%20of%20aspiration%20pneumonitis.) எனவே இது குறித்து சிறுவர்கள் மற்றும் ஏனையோர் அவதானமாக இருக்க வேண்டும். பலர் கூறுவது என்னவென்றால் தான் ஒருசில முறைகள் இவ்வாறு செய்தும் எவ்விதமான உடல் தீங்குகள் வரவில்லை என்பது தான். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் பொழுது சில சந்தர்ப்பதில்  மேற்குறித்த நோய்நிலைகள் ஏற்படுவதில்லை ஆனால் நீண்ட காலப்போக்கில் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மேலும் இன்னொரு அபாயகரமான சாகச விளையாட்டு, மேற்குறித்த நிகழ்வுகளில் நடைபெறுவது என்னவெனில் எரியும் தீப்பந்தத்தினை வாயினுள் செலுத்துதல் ஆகும். எமது மனித உடலில் உட்செல்லும் காற்றானது எமது நாசிக்குழியில் பிசிர்களினால் வடிகட்டபட்டு தூயதாக்கப்பட்டு மேலும் உடல் வெப்பநிலைக்கு மாற்றப்பட்டு சுவாசத்தொகுதியினுள் உட்செல்லும் ஆனால் இவ்வாறான செயற்பட்டுகளில் அவ்வாறு நிகழ்வதில்லை இவ்வாறு புகை நிரம்பிய சூடான காற்றினை சுவாசிப்பதினால் சுவாச தொகுதியில் ஏற்படும் காயங்கள்   சட்ட மருத்துவத்தில் smoke inhalation injury என்றழைக்கப்படும். இதன் காரணமாக சாதாரணமான சுவாசத்தொகுதியின் மேலணியில் ஏற்படும் காயத்தில் இருந்து நுரையிரல் அழற்சி வரையான பார தூரமான நோய் நிலைமைகள் ஏற்படலாம் அத்துடன் இறப்பும் சம்பவிக்கலாம். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் குறித்த நபருக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லை என்பதே ஆகும்.    

மேலும் குறித்த நபர்கள் புகைப்பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு மேற்குறித்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறு கூடுதலாக உள்ளது.

நன்றி