சித்திரவதையும் மரணமும் (பகுதி 1)

அண்மையில் யாழ் குடாநாட்டில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். இப்பதிவானது சித்திரவதைகள் எவ்வாறு மரணத்திற்கு வழி கோலுகின்றது என்பது பற்றியும் சித்திரவதையின் பொழுது எவ்வாறு காயங்கள் உண்டாகின்றன என்பது பற்றியும் விளக்குகின்ற

Palestinian Hanging

இவ்வாறான முறையில் ஒருவரினை நீண்ட நேரம் தொங்க விடும் பொழுது அவரின் தோள் மூட்டுக்கள் தமது எல்லையினை மீறிய அசைவினை காட்டும் மேலும் கைகளுக்குரிய brachial plexus நரம்பு அதிகம் இழுபடுவதன் காரணமாக பாதிப்படையும். இச்செயற்பாட்டின் பொழுது அதிக வேதனை உண்டாகுவதன் காரணமாக மரணம் சம்பவிக்கலாம்.

  • Flanga method

இந்த முறையின் பொழுது உள்ளம் காலில் அடிக்கப்படுவதினால் அதிக வேதனை உண்டாகும். இதனால் சந்தேக நபரிடம் இருந்து அதிக தகவல்களை பெறலாம் என்று கூறுவார்கள்.

  • Dhramasakara Method –

இந்த முறையிலும் சந்தேக நபரின் உள்ளம் காலில் அடிக்கும் பொழுது அவர் வேதனையில் சுற்றி சுழன்று வருவார். மேலும் சந்தேக நபரின் கை மற்றும் கால்களுக்கு உரிய நரம்புகள் பாதிக்கப்படலாம்.

  • Wet Submarine

இம்முறையின் பொழுது நீரானது (பொதுவாக மலசலகூட நீர்) சுவாச பாதையினுள் செல்வதன் காரணமாக மூச்சு திணறி இறப்பு ஏற்படலாம் அல்லது ஒரு சில நாட்களின் பின்னர் நுரையீரலில் கிருமி தொற்று ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.

  • Dry Submarine –

இம்முறையின் பொழுது பொலித்தீன் பை முகத்தினை சுற்றி கட்டப்படுவதினால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.

  • Water Boding –

இம்முறையின் பொழுது நீரானது  சுவாச பாதையினுள் செல்வதன் காரணமாக மூச்சு திணறி இறப்பு ஏற்படலாம்.

  • Hanging by hand nakedly-

இம்முறையின் பொழுது நிர்வாணமாக சந்தேக நபர்கள் நீண்ட நேரம் தொங்க விடப்பட்டு தாக்கப்படுவார்கள். நீண்ட நேரம் தொங்குவதன் காரணமாக கைகளின் நரம்புகள் பாதிக்கப்படலாம்.

  • Crushing of male genitalia

இம்முறையின் பொழுது ஆண்குறியானது மேசை லாச்சியில் வைத்து நெரிக்கப்படும். இதன் பொழுது அதிகளவு வேதனை உருவாகும், இதன் காரணமாக மரணம் ஏற்படும்.

மேற்குறித்த சித்திரவதை முறைகளே பொதுவாக இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.  மேற்குறித்த முறைகளை தவிர சித்திரவதை மேற்கொள்ளவர்கள் தமது திறமைக்கு ஏற்ப புதுப்புது முறைகளை வடிவமைத்து கொள்வார்கள்.

தொடரும்…

பெருவிரலின் பலம்

வில் வித்தையில் ஒருவன் பயிற்சி பெறவேண்டுமானால், அவனது பெருவிரல் (கட்டைவிரல்) தான் மிக முக்கியமானது. மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை அறிந்து அருச்சுனன் மட்டுமே மிகச் சிறந்த வீரனாக வேண்டுமானால் ஏகலைவன் வில்லைத் தொடக்கூடாது எனத் தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவு செய்தார் துரோணர். ஏகலைவனை நோக்கி “உனது வலதுகைக் கட்டைவிரலைத் தா” என்றார். ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் கத்தியை எடுத்தான் தனது வலதுகைக் கட்டைவிரலை வெட்டி எடுத்து துரோணரின் காலடியில் வைத்தான். ஒருவன் வலது கைக் கட்டைவிரல் இல்லாமல் வில் எய்ய முடியாது.


இக்கதையில் இருந்து கையில் உள்ள பெருவிரலின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம். இவ்வாறே காலில் உள்ள பெருவிரலும் சமநிலையான, வேகமான நடத்தலுக்கு உதவுகின்றது. அத்துடன் முக்கியமாக பலமான விசையினை கால் மூலம் பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களில் காலில் பெருவிரல் இருத்தல் முக்கியமானது. அவ்வாறு இருந்தால்தான் பலமான விசையினை ஓர் இடத்தில் பிரயோகிக்க முடியும். முக்கியமாக வாகன சாரதிகள் மற்றும் உதை பந்தாட்ட வீரர்களுக்கு காலில் பெருவிரல் இருத்தல் பெரும் பலமே.

அண்மையில் வாகனத்தின் (Manual transmission vehicle) சாரதி ஒருவர் அதுவும் முந்தைய விபத்தின் காரணமாக தனது வலது கால் பெருவிரலை இழந்த ஒருவர் விபத்தினை ஏற்படுத்தி இருந்தார். ஒருசில வினாடிகளில் அவரினால் எவ்வாறு ஓர் பலமான விசையினை கொடுத்து அதிவேகமாக செல்லும் வாகனத்தினை நிறுத்த முடியும் என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

இலங்கை போன்ற ஒரு நாட்டில் இவ்வாறான சாரதிகள் ” நான் சப்பாத்து அணிந்து வாகனம் செலுத்துவேன்” போன்ற பொய் வாக்குறுதிகளை இலஞ்சத்தினை கொடுத்து இலகுவாக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுகொள்ளலாம் அல்லது புதுப்பித்து கொள்ளலாம் என்பது கவலை தரும் விடயம் ஆகும்.
முற்றும்

சிறுவன் பட்டினி சாவா? உண்மை நிலவரம் என்ன?

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கிழக்கிலங்கையில் சிறுவன் ஒருவன் பட்டினியால் மரணத்தினை தழுவியதாக முகநூல் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் கூட தென்னிலங்கையில் இவ்வாறு மரணங்கள் சம்பவித்ததாக செய்திகள் பரவிய பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார அமைச்சு மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது இவ்வாறான நிலையில் உண்மையிலேயே இவ்வாறு பட்டினி சாவுகள் நடைபெறுமாக இருந்தால் அது மிகவும் கவலை தரும் விடயமாகும். இன்றைய காலகட்டத்தில் இலங்கையில் பல சிறுவர்களின் வீடுகளில் வறுமை நிலை இருக்கின்றது, இவ்வாறு வறுமை இருக்கும் பொழுது மரணிக்கும் சிறுவர்கள் அனைவரும் வறுமையால்  தான் மரணித்தனர் அதாவது  பட்டினி சாவடைந்தனர் என கூறுவது விஞ்ஞான ரீதியில் பொருத்தம் அற்றது. பலரும் இறந்தவர்களின் உடல் மிக கடுமையாக மெலிவடைந்து இருக்கும் இடத்து எவ்விதமான பரிசோதனைகளும் இன்றி இறந்தவர் பட்டினி சாவின் மூலமே மரணமடைந்துள்ளார் என கூறுகின்றனர். இது மிகவும் தவறாகும்.

ஒருவரின் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான போசாக்கு உணவுகள் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு கிடைக்காமல் போகும் பொழுது அந்த நபர் பட்டினி சாவினை எதிர் கொள்வர்.

ஒருவர் பல்வேறு மருத்துவ காரணங்களினால் போதிய உணவு இருந்தும் அதனை உண்ண முடியாத நிலையில் இருப்பர் உதாரணமாக Anorexia nervosa, Dementia மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற மன நோய்கள் உள்ளவர்கள் போதிய உணவு மற்றும் நீர் உள்ளெடுக்க மாட்டார்கள் இதன் காரணமாக அவர்கள் மரணம் அடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

வேறுசிலருக்கு உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் சில நோய்கள் காரணமாக அவர்களினால் உணவினை சமிபாடு அடையவோ அல்லது சமிபாடு அடைந்த உணவினை அகத்துறிஞ்சவோ முடியாமல் இருக்கும் உதாரணமாக Ulcerative colitis, Crohn’s disease நோய் உள்ளவர்கள்.

இது தவிர ஏதாவது ஒரு காரணத்தினால் உணவினை விழுங்க முடியாமல் இருக்கின்றவர்கள் உதாரணமாக உணவினை வாய்க்குழியில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் களம் என்ற உணவு குழாயில் கட்டி அல்லது விழுங்குவதில் உள்ள பிரச்சணைகள் காரணமாக அதாவது நரம்பு சம்பந்தமான பிரச்சனை காரணமாக (Parkinson’s disease, multiple sclerosis, dementia, and motor neurone disease) அவர்கள் போதிய உணவினை மற்றும் நீரினை உட்கொள்ள முடியாமல் இருக்கும்.

மேலும் கடுமையான நோய்கள் காரணமாக படுத்த படுக்கையில் இருக்கும் நோயாளிகள், ஈரல் நோயாளிகள்  போதிய உணவு மற்றும் நீரினை உள்ளெடுக்க மாட்டார்கள். மேலும் சிறுவர்களை பொறுத்த வரை பிறப்பில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள் காரணமாக (Cerebral palsy, cleft lip and palate, and other congenital disorders) அவர்களினால் போதிய உணவு மற்றும் நீரினை உள்ளெடுக்க முடியாத நிலைமை காணப்படும்.

இவ்வாறு பல்வேறு மருத்துவ காரணங்களினால் ஒருவர் போதிய உணவு மற்றும் நீரினை நீண்ட காலத்திற்கு உள்ளெடுக்க முடியாமல் போகும் பொழுது அவர்களின் புற உடல்  உருவவியல் தோற்றம் பட்டினி சாவினை எதிர்நோக்கும் ஒருவரின் புற உடல் உருவவியல் தோற்றத்தினை நிச்சயம் ஒத்திருக்கும். இவ்வாறான நிலைமைகளில் நாம் உரிய உடற்கூராய்வு பரிசோதனைகள் மற்றும் ஏனைய பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் குறித்த நபர் பட்டினி சாவடைந்தார் என கூறுவது விஞ்ஞான ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அன்று.

நிலநடுக்கம்  அல்லது மண்சரிவு காரணமாக கட்டிட  இடிபாடுகளில் உயிருடன் சிக்கி உயிரிழந்த நபர் ஒருவரின் புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் அதாவது சடுதியாக பட்டினி (Acute starvation) சாவடைந்த ஒருவரின்புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் நீண்டகாலமாக (Chronic starvation) போதிய நீர் மற்றும் உணவு கிடைக்காமல் பட்டினி சாவடைந்த ஒருவரின்புற உடல் உருவவியல் தோற்றப்பாட்டிற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

சிறுவர்களில் ஏற்படும் பட்டினி சாவென்பது எதிர்வுகூறத்தக்கது, முற்றாக தடுக்கப்பட கூடியது. மேலும் ஓர் இடத்தில் சிறுவர்களின் பட்டினி சாவென்பது நிகழுமாயின் அந்த பிரதேசத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பு மற்றும் அரச சிவில் நிர்வாக கட்டமைப்பு ஆகியன செயற்பாடு அற்ற நிலைமையிலேயே உள்ளன என்பதே உண்மை ஆகும்   

முற்றும்  

வைத்தியர்களும் போதை மாத்திரையும்

அண்மைக்காலங்களில் பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் போதை மாத்திரைகளை வைத்தியர்கள் விற்பனை செய்வதாகவும் அல்லது அதிகளவு கொள்வனவு செய்வதாகவும் செய்திகள் வெளிவந்து பலரையும் ஆச்சரியத்திற்க்கு உள்ளாக்கின மேலும் பலர் இவ்வாறான போதை மாத்திரைகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் போதை மாத்திரை என்றால் என்ன அது எவ்வாறான விளைவுகளை உண்டு பண்ணும் என்பது தொடர்பாக இந்த பதிவு ஆராய்கின்றது.

1.போதை மாத்திரை என்றால் என்ன?

Pregabalin அல்லது Gabapentin என்ற பொதுப்பெயரினை கொண்ட மாத்திரைகளே பல்வேறு வர்த்தக பெயர்களில் இவ்வாறு போதை மாத்திரை என்ற பெயரில் பலரினாலும் பாவிக்கப்படுகின்றன.

2.  இந்த மாத்திரைகள் என்ன என்ன வைத்திய தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன?

பொதுவாக இந்த மாத்திரைகள் வலிப்பு நோய்க்கு பாவிக்கப்படுகின்றது. மேலும் நரம்புகளினால் ஏற்படும் நோவுக்கு வலி நிவாரணியாகவும் பாவிக்கப்டுகின்றது. இவை தவிர மன பதகளிப்பு … போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு பாவிக்கப்படுகின்றது.

3. Pregabalin அல்லது Gabapentin ஆகிய இரு மாத்திரைகளும் ஒன்றா?

இல்லை இவ்விரு மாத்திரைகளும் ஒரே வகையானவை இவற்றின் கட்டமைப்பு gamma-aminobutyric acid (GABA) என்ற நரம்பு கணத்தாக்கத்தினை கடத்தும் பதார்தத்தினை ஒத்திருக்கும். gamma-aminobutyric acid (GABA) ஆனது எமது மூளையில் கணத்தாக்கத்தினை கடத்தாது நோவினை குறைக்கும்.

4.   Pregabalin அல்லது Gabapentin ஆகிய மாத்திரைகளில் போதைப்பொருள் இருக்கின்றதா? நிச்சயமாக இந்த மாத்திரைகள் நார்க்கோர்ட்டிக் அல்லது ஒபிஒய்ட் வகையான மருந்து மாத்திரைகள் அல்ல. மேற்குறித்த மாத்திரைகளில் போதை பொருட்கள் ஏதும் அடங்கியிருக்காது.

5. அவ்வாறு எனில் மேற்குறித்த மாத்திரைகள் ஏன் போதை மாத்திரைகள் அல்லது போதை வில்லைகள் என்று அழைக்கப்படுகின்றது?

குறிப்பாக போதை மருந்து பாவிப்பவர்கள் மேற்குறித்த மாத்திரைகளை பாவிப்பதன் காரணமாகவே அவை தவறான காரண பெயராக போதை மாத்திரை என அழைக்கப்படுகின்றன.

6. மேற்குறித்த மாத்திரைகளை பாவிக்கும் பொழுது போதை உண்டாகுமா?

இந்த மாத்திரைகளை தனியே பாவிக்கும் பொழுது மருத்துவ ரீதியாக போதை உண்டாகாது. எனினும் இம்மாத்திரைகளின் பக்கவிளைவுகளான சோர்வுத்தன்மை, தளர்வான நடை, மங்கலான பார்வை, அதிக நித்திரை, கனவுலகில் மிதத்தல், பார்வையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் .. போன்ற பல்வேறு பக்க விளைவுகள் போதைப்பொருள் அல்லது மதுபானம் பாவித்தால் வரும் விளைவுகளை ஓத்திருப்பதினால் சிலர் இந்தவகை மாத்திரையினால் போதை உண்டாகும் என்ற நம்பிக்கையில் இதனை பாவிக்கின்றனர்.
மேலும் இங்கு pregablin மற்றும் gabapentin என்பன பூஸ்டர் டோஸாக தொழிற்படும் தன்மை உடையவை

7. பூஸ்டர் டோஸாக தொழில் படுதல் என்றால் என்ன?
வேறு ஓர் போதைப்பொருள் அல்லது மதுபானத்துடன் சிலவகை பொருட்களை சேர்த்து பாவித்தால் அதிக போதை உண்டாகும் மற்றும் போதை அதிக நேரம் நிலைத்து நிற்கும்.


8. Pregablin மற்றும் gabapentin ஆகிய மருந்துகளை மருத்துவர்கள் சேமித்து வைப்பது அல்லது நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது குற்றமா?
இல்லை. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் அல்லது பல் மருத்துவர் ஒருவர் மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும். அவர்களுக்கு சட்ட ரிதீயான அங்கீகாரம் உண்டு. இவ்வாறே நார்கோடிக் மருந்துகளை (உண்மையான போதை மருந்துகளை) பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும்.

9. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபர் அதற்கு அடிமையாகும் தன்மை உருவாகுமா?
அண்மைக்காலத்தில் வெளிவந்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் மேற்குறித்த மருந்துகள் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பாவிக்கும் இடத்து பாவனையாளரை அடிமையாக்கும் தன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தற்பொழுது அல்லது முன்பு பல்வேறுபட்ட போதை பொருட்களை பாவிப்பவர்கள் இவற்றிற்கு அடிமையாகும் தன்மை அதிகம்.

10. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை சாதாரண குடிமகன் ஒருவர் தனது உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகுமா?
ஆம். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் Poisons, Opium and Dangerous Drugs (Amendment) Act No. 41 of 2022 (23/11/2022) இன் பிரகாரம் சாதாரண குடிமகன் வைத்தியரின் உரிய பரிந்துரை இன்றி மேற்குறித்த மருந்துகளை அதிகமாக வைத்திருத்தல் குற்றமாகும்.


11. இப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
இலங்கையின் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் வைத்தியர்கள் களஞ்சியப்படுத்தக் கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய அதிகூடிய அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் வைத்தியர்கள் மருத்துவ ஒழுக்கவியலுக்கு அமைய தமது நோயாளர்களின் தேவைப்பாட்டிற்கு அமைய மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்து பரிந்துரைக்கலாம். மேலும் நார்க்கோர்ட்டிக் மருந்து விற்பனையின் பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கைக்கொள்ளலாம்.

முற்றும்

 

உடலுறவும் சம்மதமும் (பகுதி 11)

கடந்த பதிவில் பல்வேறு நாடுகளில் தண்டனை சட்ட கோர்வையில் உடலுறவின் பொழுது பெண்ணின் சம்மதமானது எவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் நடைமுறையில் இருக்கின்றது என்பது பற்றி பார்த்தோம். உலகில் ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு பெண்களை பாதுகாக்கும் முகமாக தமது சட்டத்தில் உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் வயதினை தெளிவாக வரையறுத்து உள்ளன. பெரும்பாலும் பதின்ம வயது  திருமணம் ஆகாத பெண்கள் காதல் என்ற போர்வையில் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர் அல்லது பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகின்றனர். பல பதின்ம வயது பெண்கள் தங்களின் ஆண் நண்பர் அல்லது காதலர் உடலுறவிற்கு கேட்ட உடனேயே சம்மதித்து விடுகின்றனர். அவர்கள் இவ்வாறான உடலுறவின் மூலம் ஏற்படும் பாதகமான விளைவுகளை கிஞ்சித்தும் பார்ப்பதில்லை. இதன் காரணமாகவே பல உலக நாடுகள் இந்த “உடலுறவுக்கு சம்மதம்” என்ற பகுதியை தமது தண்டனை சட்ட கோர்வையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. காதல் எனும் போர்வையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி கர்ப்பம் தரித்து வரும் பதின்ம வயது பாடசாலை மாணவிகள் பலருக்கு தாம் ஆணுடன் உடலுறவு கொண்டால் கர்ப்பம் அடைவோம் என்பதே தெரியாது. பல சந்தர்ப்பங்களில் ஒருசில மணித்தியால நட்பு, உடலுறவு வரை இட்டு சென்றிருக்கும். இதனை இட்டு பலமுறை வியந்து இருக்கின்றேன்.

சம்மதம் கொடுத்தல் அல்லது கொடுக்காமை தொடர்பாக

உங்களிற்கு உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் அல்லது சம்மதம் கொடுக்காமை தொடர்பான முழு உரிமையும் உண்டு. அதாவது ஆணின் வற்புறுத்தலுக்கு பணிந்து அல்லது ஓம் என்று சொல்லாவிட்டால் அவர் ஏதாவது தப்பாக நினைத்து விடுவாரோ/ காதலை முறித்து விடுவாரோ என பயந்து ஒருபொழுதும் உடலுறவிற்கு உடன் பட்டு விடாதீர்கள். முன்பு நீங்கள் உங்கள் ஆண் நண்பருடன் உடலுறவு கொண்டிருந்தாலும் இம்முறை நீங்கள் அதற்க்கு உடன்படாது மறுக்க முழு உரிமையும் உண்டு அத்துடன் எவ்வளவு தூரம் உடலுறவு கொள்ள நீங்கள் சம்மதம் என்பதினை உங்கள் ஆண் நண்பரிடம் தெளிவாக கூறிவிடுங்கள்.

உடலுறவிற்கு சம்மதம் கொடுக்கும் செயன்முறை

இருவரும் நாட்டில் சட்ட ரீதியாக சிறுவர்கள் அல்லாது வளந்தவர்களாகவும் உடலுறவுக்கு சம்மதம் கொடுக்க தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். ஒருவர் பற்றி ஒருவர் அறிந்தவராக இருக்க வேண்டும், இருவரும் உடலுறவு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி புரிந்துணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும்.மேலும் ஒருவர் தன்னிச்சையாகவும், சுயவிருப்பத்தின் அடிப்படையிலும் எவ்விதமான வற்புறுத்தலுக்கு அடிபணியாத நிலையில் சம்மதம் வழங்க வேண்டும். சட்டத்தின் பார்வையில் சம்மதம் அற்ற உடலுறவு பாலியல் வல்லுறவாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. (Information, Competence, Understanding, Willingness, Voluntariness, Lack of Coercion…) மேலும் சம்மதமானது உடலுறவு செயற்பாட்டின் ஒவ்வோர் நிலையிலும் மாற்றம் அடையக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக தெரிய வேண்டியவை

  • ஒருவரின் உடல் மொழியோ அல்லது மௌனமோ உடலுறவிற்கான சம்மதமாக கருத்தில் கொள்ள படமாட்டாது.
  • இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட பெண் ஒருவர் தனது விருப்பத்துடன் அல்லது விருப்பம் இன்றி ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவு குற்றமாகும்.ஒருசில விதிவிலக்குகள் உண்டு.
  • பெண் ஒருவரினை உயிர் அச்சறுத்தலுக்கு உள்ளாக்கி அல்லது பாரிய காயங்களை உண்டுபண்ணுவதாக அச்சறுத்தி சம்மதத்தினை பெற்றால் அது கருத்தில் கொல்லப்படமாட்டாது.
  • பணத்தினை அல்லது வேறு பரிசு பொருட்களினை பெற்றுக்கொள்ளல் என்பது உடலுறவிற்கான சம்மதம் என்பது அல்ல.
  • பெண் ஒருவர் சார்பாக அவளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மேற்படி சம்மதத்தினை தெரிவிக்க முடியாது.
  • முதலில் தெரிவிக்கப்பட்ட சம்மதமானது பிற்பாடு எந்த நேரத்திலும் மீள பெறப்படலாம்.   
  • பெண் ஒருவர் சித்த சுவாதீனம் அற்ற நிலையில் இருக்கும் பொழுது அல்லது போதையில் இருக்கும் பொழுது பெறப்படும் சம்மதமானது சட்ட ரீதியில் வலுவற்றது

உடலுறவும் சம்மதமும் பகுதி ஒன்றினை வாசிக்க

https://tamilforensic.wordpress.com/2022/11/10/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81/

முற்றும்

உடலுறவும் சம்மதமும் (பகுதி 1)

கடந்த வாரம் இலங்கை கிரிக்கட் வீரர் ஒருவர் அவுஸ்ரேலிய சுற்று பயணத்தின் பொழுது பெண் ஒருவரினை பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது குறித்த இருவரும் TINDER என்ற செயலியின் மூலம் தொடர்பு கொண்டபின்னர் தனியே குறித்த பெண் வீட்டில் சந்தித்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீரர் அந்த பெண் மணியிடம் பல  தடவைகள் அப்பெண்ணின் சம்மதம் இன்றி உடலுறவு கொண்டமை, உடலுறவின் பொழுது மூச்சு திணறலை ஏற்படுத்தியமை  மற்றும் கொண்டோம் என்ற ஆணுறை அணிய மறுத்தமை போன்ற பல்வேறு  குற்றசாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாலியல் ரீதியான தாக்குதலில் பாலியல் வல்லுறவு தவிர்ந்த பல்வேறு பாலியல் சார்ந்த குற்றங்கள் உள்ளடங்குகின்றன. முக்கியமாக பாரதூரமான பாலியல் குற்றங்கள், இரத்த உறவுகளுக்கு இடையிலான உறவுகள்…. போன்றன அடங்கும்.

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பொழுது பாதிப்பிற்கு உள்ளான பெண்ணின் சம்மதம் குறித்து சட்டவாளர்கள் அக்குவேறு ஆணிவேராக அலசுவார்கள். உலகில் ஒவ்வொருநாடுகளும் தமது குற்றவியல் கோர்வையில் பாலியல் வல்லுறவு என்றால் என்ன என்பதை சட்ட ரீதியில் வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்கள் அத்துடன் கூடவே பெண்ணின் “சம்மதம்” (CONSENT) என்பது பற்றியும் தெளிவுபடுத்தி உள்ளார்கள். பெண்களின் உரிமைகளிற்கு முன்னுரிமை அளிக்காத  நாடுகளின் சட்டங்கள்  வெறுமனே பெண் குறித்த ஆணினை திருமணம் செய்திருந்தால் அப்பெண் குறித்த ஆணுடன் எந்நேரமும் உடலுறவு கொள்ள சம்மதம் கொடுத்தவளாகவே கருதுகின்றன. பெண்களுக்கான உரிமை வலுப்பெற்ற நாடுகளில் ஓர் ஆண் சட்ட ரீதியாக திருமணம் செய்த தனது மனைவியை கூட அவளின் சம்மதம் இன்றி குறித்த ஆண் அவளுடன் உடலுறவு கொண்டால் அதனை பாலியல் வல்லுறவாக கருதுகின்றன அதனை அந்த நாடுகள் ” MARITAL RAPE ” என்று சட்ட ரீதியாக வரைவிலக்கணப்படுத்தி உள்ளார்கள். மேலும் தனி மனித உரிமைகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் ஒருபடி மேலே சென்று உறுதியான சம்மதம் (AFFIRMATIVE CONSENT) பற்றி தமது சட்டங்களில்  திருத்தத்தினை மேற்கொண்டுள்ளன. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலமும் கடந்த வருடம் இவ்வாறான ஓர் சட்டத்திருத்தத்தினை அமுல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

உறுதியான சம்மதம் என்னவென்றால் ஓர் பெண் ஆனவள் செக்ஸில் ஈடுபடுவதற்கு எவ்விதமான மன, உடல் ரீதியான அழுத்தங்களுக்கும் உட்படாமல் தன்னிச்சையாகவே சம்மதம் தெரிவிக்க வேண்டும் அத்துடன் மேலும் செக்ஸின் பொழுது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருடையேயும் தொடர்ச்சியான மற்றும் புரிந்துணர்வான தொடர்பாடல் நிலவவேண்டும் எனவும் ஒவ்வொரு பாலியல் செயற்பாட்டின் பொழுதும் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகின்றது. அதாவது சுருக்கமாக சொன்னால் பெண்ணின் சம்மதமானது அனுமானத்தின் அல்லது யூகத்தின் அடிப்படையில் பெறப்பட்டதாக இருக்க கூடாது. மாறாக உடலுறவு செயற்பாட்டின் பொழுது இருவருக்குமான தொடர்ச்சியான புரிந்துணர்வு அடிப்டையில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் அது சம்மதம் இன்றிய உடலுறவாக கருதப்படும் அதாவது சட்டத்தின் பார்வையில் பாலியல்வல்லுறவாக கருதப்படும்.

“AFFIRMATIVE CONSENT” சட்ட வடிவில் உள்ள நாடுகளில் உடலுறவின் பொழுது ஓர் குறித்தவகையான ஓர் செயற்பாட்டிற்கு சம்மதம் வழங்கினால் அதனை மட்டுமே மேற்கொள்ள முடியும் அதனை விடுத்து வேறு முறைகளில் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக உறவு கொள்ள முயன்றால் அது குற்றமாகி விடும்.  உடலுறவின் பொழுது கழுத்தை நெரித்தல் அல்லது வேறுவழிகளில் மூச்சு திணறலை ஏற்படுத்தி பயப்பீதியினை உருவாக்கி அதன்மூலம் சம்மதம் அல்லது சம்மதமின்றி உடலுறவு கொள்வது குற்றமாகும். மேலும் மேற்குறித்த நாடுகளில் பெண்கள் உடலுறவு கொள்ளும் பொழுது ஆணுறை அதாவது கொண்டம் அணிந்தால் தான் உடலுறவு கொள்ள சம்மதம் தெரிவிப்பார்கள். அவ்வாறான நிலையில் ஆணுறை அணியாமல் அல்லது வேண்டும் என்றே சேதப்படுத்திய ஆணுறையுடன் உடலுறவு கொள்ளுதல் குற்றமாகும். இதனை ஆங்கிலத்தில் “STEALTHING” என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறான செயற்பாட்டினால் குறித்த பெண் ஆனவள் விரும்பத்தகாத கர்ப்பத்தினை சுமக்க வேண்டிய நிலையும் எய்ட்ஸ் பாலியல் நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் அதிகரிக்கும். எனவேதான் இச்செயற்பாடானது ஓர் பாரதூரமான குற்ற செயலாக மேற்குறித்த நாடுகளில் பார்க்கப்படுகின்றது.  

இப்பதிவினை வாசிக்கும் பலரும் உடலுறவின் பொழுது நாம் பேனாவும் கொப்பியும் எடுத்து எழுத்து வடிவில் சம்மதம் வாங்க வேண்டுமா? என்று கூட யோசிப்பார்கள். உண்மையில் அவ்வாறு இல்லை. அடுத்த பதிவில் இலங்கை சட்ட திட்டத்தில் பெண்ணின் உடலுறவுக்கான சம்மதம் எவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் சாதாரணமாக சம்மதம் பெறப்படும் பொறிமுறை (Process of consent) பற்றியும் பார்ப்போம்

தொடரும்   

தென்கொரியா – சனநெரிசல் மரணத்திற்கு காரணம் என்ன?

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தென்கொரியாவின் தலைநகர் சியோலின் ஒரு பகுதியில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் பொழுது ஏற்பட்ட எதிர்பாராத சன நெரிசலில் சிக்கி ஏறத்தாழ 150 இற்கும் அதிகமானவர்கள் குறிப்பாக இளவயதினர் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவியுள்ளனர். இந்தநிலையில் தென்கொரிய நாடே சோகத்தில் உள்ளது. பலருக்கு ஏன் சன நெரிசலின் பொழுது இவ்வாறான இறப்புக்கள் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கமின்மை நிலவுகின்றது. அதனை போக்கும் முகமாக இந்த பதிவு அமைகின்றது.


பெரும்பாலும் இத்தகைய சம்பவங்கள் சிறிய, மூடிய கட்டிடங்களில் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக குறுகிய பாதையினுடாக/வாசலினுயூடாக அதிகளவான மக்கள் வெளியேறும் பொழுது அல்லது உள் நுழையும் பொழுது ஏற்படுகின்றது. மேலும் குறித்த கட்டிடம் அல்லது இடமானது தாங்கக்கூடிய சனத்தொகையினை விட அதிகளவு மனிதர்கள் கூடும் பொழுதே ஏற்படுகின்றது. திறந்த வெளிகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது அரிது.
இவ்வாறான சம்பவத்தின் பொழுது compressive or restrictive asphyxia என்பதே பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்து விடுகின்றது. compressive or restrictive asphyxia என்றால் என்ன? நாம் சாதாரண நிலைகளில் சுவாசிக்கும் பொழுது அதாவது உட்சுவாசம் செய்யும் பொழுது முறையே எமது நெஞ்சறையானது வெளிநோக்கி மற்றும் மேல்நோக்கி அசையும் அவ்வாறே வெளிச்சுவாசம் செய்யும் பொழுது முறையே உள்நோக்கி மற்றும் கீழ்நோக்கி அசையும். மேலும் நாம் வலிந்த சுவாசம் (Forced respiration) செய்யும் பொழுது எமது கைகளில் உள்ள சில தசைகளும் வேலை செய்யும். சனநெரிசலின் பொழுது பிரயோகிக்கப்படும் பொழுது வெளிப்புற விசைகள் காரணமாக மிகுந்த சனநெரிசல் ஓர் குறுகிய மூடிய பிரதேசத்தில் ஏற்படும் பொழுது அங்கு கூடியிருக்கும் மனிதர்களின் சுவாச அசைவுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக சனநெரிசலில் சிக்கி உள்ளவர்களில் சுவாசம் மட்டுப்படுத்தப்படும் அல்லது முற்றாக நிறுத்தப்படும். இதன்காரணமாக இரத்தத்தில் காபனீர்ஓட்ஸைட்டின் அளவு அதிகரித்து ஓட்ஸிசன் அளவு குறைவடையும் இதன்காரணமாக மயக்கம் அல்லது இறப்பு ஏற்படும். மேலும் மனிதர்கள் காற்றோட்டம் குறைந்த இடத்தில் கை மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் நிமிர்ந்த நிலையில் நிற்கும் பொழுது மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவடையும் இதன் காரணமாகவும் மயக்கம் ஏற்படும்.
மயக்கம் ஏற்பட்டு ஒருவர் விழும் பொழுது சனநெரிசலில் “domino effect” காரணமாக மேலும் பலர் விழுவார்கள். இவ்வாறு ஒருவர் மேல் ஒருவர் விழும் பொழுது மேலும் நசிபடுவர்களினால் தொடர்ந்து சுவாசிக்க முடியாது இறப்பு ஏற்படும்.


மேலே உள்ள படமானது டோமினோ விளைவு எவ்வாறு சனநெரிசலில் ஆபத்தினை விளைவிக்கின்றது என்பதை காட்டுகின்றது.

மேலும் ஒருவர் மயக்கம் அடைந்து விழும் பொழுது பதட்டமடையும் அருகில் உள்ளவர்களினால் இந்த நிலை மோசமடையும். மேலும் விழுந்தவர்களின் மேல் மற்றைய மனிதர்கள் ஏறி நிற்கும் பொழுது இந்த நிலை மேலும் மேலும் மோசமடையும் அத்துடன் அவர்களின் உள்அவயவங்கள் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பமும் உண்டு.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்கள் கூடிய கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தும் மின்சார கம்பிகள் அறுந்து வீழ்ந்து மின்சாரம் பாய்ந்தும் இறப்பு ஏற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. மேலும் இவ்வாறன சனநெரிசலில் சிக்கும் இருதய நோயாளிகள் போன்றோர் தமது நோய் நிலைமை மோசமடைந்து மரணித்த சம்பவங்களும் உண்டு.
மக்களுக்கு இவ்வாறு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் நிகழ்வினை ஒருங்கமைத்த ஏற்பாட்டாளர்கள் மீதே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முற்றும்

பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் ஆபத்தானதா??

இந்தமாதம் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் பாவனையால் மாதாந்தம் 2 முதல் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இது மிகவும் உயர்ந்த மரண வீதம் ஆகும். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 தொடக்கம் 25 மற்றும் 40 தொடக்கம் 45 வயதுகளை உடையவர்கள்.இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இறந்தவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி பாலுணர்வை ஏற்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டவர்கள். மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை உபயோகிப்பதும், தரமற்ற மருந்துகளை உட்கொள்வதுமே இவ்வாறான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது என்று மேலும் கருத்து தெரிவித்தார்.
“வயாகரா” என்ற பெயரில் முதன் முதல் சந்தைக்கு வந்த Sildenafil citrate என்ற மருந்தே முதன் முதலாகவும் ஆண்களில் விறைப்பு குறைபாட்டினை மருத்துவ ரீதியில் அனுமதிக்கப்பட்டது. இன்று இந்த மருந்தானது பல்வேறு பட்ட வர்த்தக நாமங்களில் கிடைக்கபெறுகின்றது. அந்திசாயும் பொழுது மருந்தகங்களுக்கு வரும் நடுத்தர வயதுடைய ஆண்கள் பலரும் இவ்வாறான மாத்திரைகளை வாங்குவதினை நாம் அவதானிக்கலாம்.


Sildenafil citrate என்ற பாலுணர்வை தூண்டும் மாத்திரையானது எவ்வாறு இறப்பினை ஏற்படுத்துகின்றது என்பது பற்றி இந்த பதிவு விளக்குகின்றது.
முதலில் ஏன் அதிகளவிலான ஆண்கள் இந்த பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பாவிக்கின்றார்கள் என்றால், 40 வயதிற்கு மேற்பட்ட 30% ஆண்கள் இந்த விறைப்பு குறைபாட்டினை கொண்டிருக்கின்றனர். எனவே தான் குறித்த ஆண்கள் இந்த பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பாவிக்கின்றனர்.
Sildenafil citrate மாத்திரையானது ஏனைய வகை மாத்திரைகளுடன் குறிப்பாக நைட்ரைடு (nitrates) வகை மாத்திரைகளுடன் தாக்கம் புரிந்து குருதி அழுத்தத்தில் சடுதியான குறைவினை ஏற்படுத்தும் இதன்காரணமாக மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற பிரதான அவயவங்களுக்கு வழங்கப்படும் குருதியின் அளவு குறைவடையும் இதனால் மேற்குறித்த அவயவங்கள் செயலிழந்து இறப்பு நேரிடும்.
மேலும் Sildenafil citrate ஆனது இருதய தசையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருதய துடிப்பின் ரிதத்தில் மாற்றங்களை கொண்டுவரும் இதன் காரணமாகவும் சடுதியான இருதய இறப்பு ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கும்.
மேலும் குணம் குறியற்ற நிலையில் ஆண்களில் காணப்படும் மாரடைப்பு நோயுடன் விறைப்பு குறைபாடும் சேர்ந்தே காணப்படும். இவ்வாறான ஆண்கள் தமக்கு மாரடைப்பு நோய் இருப்பதனை அறியமாட்டார்கள். இவர்கள் மேற்குறித்த பாலுணர்வினை தூண்டும் மாத்திரையினை பாவித்து அதிக நேரம் உடலுறவு கொள்ளும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் சம்பவிக்கின்றது. குறிப்பாக உடலுறவின் பொழுது இருதய துடிப்பு மற்றும் குருதி அழுத்தம் அதிகரிக்கின்றன இதன் காரணமாக இருதயம் அதிகளவு வேலை செய்யவேண்டிய தேவை உள்ளது. இதன்காரணமாக இருதயத்திற்கு ஏற்படும் அதிகரித்த ஓட்ஸிசன் தேவைப்பாட்டினை நிவர்த்தி செய்ய முடியாமல் மாரடைப்பு ஏற்படுகின்றது.
எனவே மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இவ்வாறான பாலுணர்வினை தூண்டும் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது. மேலும் இருதய, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் கட்டாயம் வைத்தியர் ஒருவரின் சிபார்சுடனேயே இவ்வகையான மாத்திரைகளை குறித்த அளவில் பாவிக்க வேண்டும்.

முற்றும்

போதையும் திடீர் மரணங்களும் – ஏன்??

அண்மைக்காலத்தில் யாழ். குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை காரணமாக சடுதியாக திடீர்ரென மரணம் அடைந்திருக்கின்றனர். அதாவது மூன்று மாத காலப்பகுதியில் ஏறத்தாழ 10 மரணங்கள். எம்மில் பலருக்கு ஏன் இவ்வாறான சடுதியான திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றி போதிய விளக்கமின்மை இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இப்பதிவு அமைகின்றது.

இவ்வாறான திடீர் மரணங்கள் ஊசியின் ஊடாக போதைப் பொருளினை உட் செலுத்தும் பொழுதே பெரும்பாலும் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் மரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1. போதைப்பொருள் பாவனையின்  நேரடி விளைவினால் ஏற்படும் மரணங்கள்

போதைக்கு அடிமையானவர் ஒருவர் நாளாந்தம் உள்ளெடும் போதைப்பொருளின் அளவினை அதிகரித்த வண்ணமே இருப்பார். ஓர் நிலையில் அதிகரித்த அளவானது பாவனையாளரில் சடுதியான நஞ்சாதலை (Acute toxicity) ஏற்படுத்தி இறப்பு ஏற்படும்.

மேலும் தூய போதைப்பொருளினுள் வியாபார நோக்கம் கருதி பல்வேறுபட்டபொருட்களை கலந்து விற்பனையாளர்கள் கலப்படம் செய்வார்கள். இவ்வாறு சேர்க்கப்படும் பொருட்கள் பாவனையாளரில் கடுமையான ஒவ்வாமையினை (anaphylactic shock) ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். கெரோயின் போன்ற போதைப்பொருட்கள் சடுதியான இருதய மற்றும் சுவாச செயற்பாட்டு (Sudden cardio respiratory arrest) நிறுத்தத்தினை  ஏற்படுத்தும். இவ்வாறே கொக்கெயின் போன்ற போதைப்பொருட்கள் அதிகரித்த குருதி அழுத்தத்தினை ஏற்படுத்தி மூளையில் இரத்த கசிவினை ஏற்படுத்தி சடுதியான மரணத்தினை ஏற்படுத்தும். இது தவிர கொக்கெய்ன் மற்றும் ஐஸ் என்ற அம்பிட்டமைன் வகை போதை பொருட்கள் இருதய தசையில் சடுதியான இறப்பினை (cardiac necrosis) ஏற்படுத்தும்.

2. போதைப்பொருள் பாவனையின் மறைமுக விளைவினால் ஏற்படும் மரணங்கள்

இங்கு மரணங்கள் போதைப்பொருள்  பாவனையின் மறைமுக விளைவினால் அதாவது நேரடி விளைவினால் அல்லாது ஏற்படும் மரணங்களை குறிக்கும். அதிக போதையில் இருக்கும் பொழுது எடுக்கும் வாந்தி நேரடியாக சுவாச குழாயினுள் சென்று மூச்சு திணறலை ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். மேலும் அதிக போதையில் தலை கீழாகவும் கால் மேலாகவும் தூங்கும் பொழுதும் மூச்சு திணறலை (positional asphyxia) ஏற்படுத்தி சடுதியான இறப்பினை ஏற்படுத்தும். மேலும் அதிக போதையில் நீரில் மூழ்குதல், விபத்துக்களை சந்தித்தல் , உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்களில் இருந்து விழுதல் போன்றவற்றினால் தீடீர் மரணங்கள் ஏற்படும். 

3. ஊசி மூலமான போதைப்பொருள் பாவனையின் பொழுது கிருமித்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள்

இங்கு ஊசி மூலம் போதைப்பொருளினை செலுத்தும் பொழுது ஹெப்படைட்டிஸ், HIV போன்ற வைரசுக்கள் தொற்றி நாளடைவில் அந்த நோய்கள் காரணமாக இறப்பு ஏற்படும். இது தவிர ஊசி செலுத்தும் இடங்களில் கிருமித்தொற்று ஏற்பட்டு அது இரத்தம் மூலம் உடல் முழுவதும் பரவுவதினாலும் இருதயத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துவத்தினாலும் இறப்பு ஏற்படும். மேலும் தொடர்ச்சியான ஊசி மூலமான போதைப்பொருள் பாவனை காரணமாக எமது நுரையீரலில் குருதியின் அழுத்தம் அதிகரிக்கும் மேலும் இருதய தசையின் செயற்பாடு குறைவடையும் இதன் காரணமாகவும் இறப்பு ஏற்படும்.

மேற்குறிப்பிட்டவை யாவும் முக்கியமான ஒரு சில காரணங்களே  ஆகும். மேற்குறித்தவை தவிர பல்வேறுபட்ட காரணங்களினால் போதைப்பொருளினால் இறப்பு ஏற்படலாம். 

வைத்தியர் நோயாளி உறவு (பகுதி 1)

அண்மையில் தென்னிலங்கையில் வைத்தியர் ஒருவர் அரசியல்வாதியான நோயாளி ஒருவரினை பார்வை இட மறுத்த சம்பவம் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்து இருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பலரும் குறித்த வைத்தியர் மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்ததாக  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இப்பதிவில் வைத்தியர் – நோயாளர் உறவு முறை அதாவது தொழில்முறையிலான  உறவுமுறை எப்பொழுது வைத்தியரினால் நிராகரிக்கப்படலாம் என விளக்குகின்றது.

ஆங்கில வைத்திய முறையினை பின்பற்றும் வைத்தியர்கள் ஒவ்வொருத்தரும் கடமை ஏற்கும் பொழுது ஹிப்போகிரடீஸ் உறுதிமொழியினை ஏற்றே பதவி ஏற்கின்றனர்.ஹிப்போகிரடீஸ் சத்திய பிரமாணம்/ உறுதிமொழியின் பிரகாரம் ஓர் வைத்தியர் இனம், மதம், மொழி, நிறம் மற்றும் அரசியல் வேறுபாடுகளை களைந்தே நோயாளிகளுக்கு சேவை ஆற்ற வேண்டும் என வலியுறுத்த படுகின்றது. இந்நிலையில் வைத்தியர் ஒருவரை நாடி நோயாளி ஒருவர் செல்லும் பொழுது வைத்தியர் எவ்வாறு அந்த நோயாளியினை பார்வையிடாது/ சிகிச்சை அளிக்காது மறுக்கலாம் என்பதே பலரின் கேள்வியாகும்.

ஹிப்போகிரடீஸ் சத்திய பிரமாணத்திற்கு அப்பாலும் மருத்துவ ஒழுக்கவியல் கோர்வையினால் மருத்துவர்கள் கட்டுப்பட்டுள்ளனர் என்பதே உண்மையாகும். இங்கு மருத்துவ அவசர நிலையின் பொழுது  அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்திய சாலையில் மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது.

மருத்துவ ரீதியாக அவசரமற்ற நோய் நிலையின் பொழுதும் அரச வைத்திய சாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் தனியார் வைத்திய சாலையில்  மருத்துவ ரீதியாக அவசரமற்ற நோய் நிலையின் பொழுது வைத்தியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கலாம் அதாவது வைத்தியர் நோயாளர் உறவு முறையினை ஆரம்பிக்க மறுப்பு தெரிவிக்கலாம் . அதில் மருத்துவ ஒழுக்கவியல் ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ எவ்விதமான தவறுகளும் இல்லை. 

வைத்தியர் ஒருவர் பொதுமகன் ஒருவரை நோயாளியென கருதி அவரினை பார்வையிட்டு சிகிச்சை அளிக்க தொடங்கும் பொழுதுதான் வைத்தியர் – நோயாளர் என்ற தொழில் ரீதியான உறவுமுறை ஆரம்பிக்கின்றது. இவ்வாறான தொழில் முறை உறவினை நிராகரிக்கவும் வைத்தியர்களுக்கு உரிமை உண்டு என்பதே உண்மை.  மேலும் குறித்த சம்பவத்தில் அரசியல்வாதியானவர்  ஏற்கனவே குறித்த வைத்தியரின் நோயாளியாக இருப்பாரானால், அந்த நோயாளி வேறு தகுதி வாய்ந்த வைத்தியரினை தேடி சிகிச்சை பெறும் வரை குறித்த நோயாளிக்கு சிகிச்சை வழங்க வேண்டிய கடப்பாடு குறித்த வைத்தியருக்கு உண்டு. அதாவது அக்குறித்த வைத்தியர் வைத்தியர் – நோயாளி உறவினை உடனடியாக முறிக்க முடியாது. உதாரணமாக வைத்தியர் ஒருவரிடம் வரும் நோயாளி ஒருவர் குறித்த வைத்தியரின் நிபுணத்துவ துறைக்கு அப்பாற்படடவராக இருந்தால் வைத்தியர் குறித்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் நோயாளியினை நிராகரிக்கலாம். இவ்வாறு வைத்தியர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.   

தொடரும்..