அண்மையில் இளவாலை பகுதியில் இளைஞர் ஒருவன் வீடியோ கேம் ஆன “பப்ஜி” இற்கு அடிமையான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது சமூக ஆர்வலரிடையே பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. இவ்வாறான சம்பவங்கள் உலகின் பல இடங்களில் முன்னரும் நடைபெற்றுள்ளன. இப்பதிவில் வீடியோ கேம் பாவனையானது அதனை பாவிப்பவர்களிடத்து குறிப்பாக இளைஞரிடத்து எவ்வாறு மரணங்களை ஏற்படுத்துகின்றது பற்றி விளக்குகின்றது.


Player Unknown’s Battle grounds (PUBG) என்பதே தமிழில் “பப்ஜி” என்றழைக்கப்படுகின்றது. இந்த வீடியோ கேமில் பலர் தனியான தீவு ஒன்றில் பாராசூட் மூலம் தரை இறக்கப்படுவார்கள் அவர்கள் அத்தீவில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி அங்குள்ளவர்களை கொல்ல வேண்டும். இந்த விளையாட்டிற்கு அடிமையாகியவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அதில் விளையாடவே செலவு செய்வார்கள் இதன் காரணமாக உணவு, தனி நபர் சுகாதாரம்,கல்வி, தொழில், குடுப்ப உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் விளையாட்டின் காரணமாக குறைந்தளவு நேரமே உறங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உண்டாகும். அடுத்து இவ்வாறு கைத்தொலை பேசி அல்லது கணனியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்துள்ளார்கள் என பார்ப்போம்
1. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் குறித்த ஒரு காரணத்தினால் தொடர்ச்சியாக குறித்த வீடியோ கேம் இணை விளையாட முடியாத சூழ்நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உதாரணமாக பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு, இணைய வசதியினை பெற போதிய பணம் இன்மை….
2. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருசிலர் குறித்த வீடியோ கேம் இணை விளையாடியதன் பலனாக ஏற்பட்ட அதீத மனஅழுத்தம் மற்றும் சிலவகை வீடியோ கேமில் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படும் கட்டளைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
3. மேலும் சிலர் குறித்த வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தமது தொழிலில் ஒழுங்கான முறையில் ஈடுபட முடியாமையினால் கடன், அதீத வேலைச்சுமை போன்றவற்றினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
4. மேலும் வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் குறைந்த அளவிலான நீரினை நாளாந்தம் உள்ளெடுப்பதினால் அவர்களின் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டும் சோடியம் பொட்டாசியம் போன்ற அயன் பற்றாக்குறை ஏற்பட்டும் இறப்பு ஏற்பட்டுள்ளது .
5. ஏற்கனவே மூளையின் இரத்த குழாய்களில் பலவீனமான அமைப்பினை உடையவர்கள்(AV malformation/ aneurysm) வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கேம் விளையாடும் பொழுது அதிகளவு அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த இரத்த குழாய் வெடித்து மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இதனையே பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூளை நரம்பு வெடித்து இறப்பு ஏற்படுவதாக செய்தி இடுகின்றன.
6. மேலும் சிலர் இவ்வாறு கேம் விளையாடியவண்ணம் வீதியினை கடத்தல், வாகனம் செலுத்துதல், உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் நிற்றல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது விபத்துக்களை சந்தித்து மரணத்தினை தழுவியுள்ளனர்
“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்” எனவே அளவுக்கு அதிகமான வீடியோ கேம் பாவனையினை குறைப்போம் மற்றும் அடிமையாதலையும் தடுப்போம்.
நன்றி












