அண்மையில் பாக்கிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மத நிந்தனை செய்தார் என்ற குற்றச்சாட்டுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரியூட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னர் கருத்து தெரிவித்த அந்த நாட்டினை சேர்ந்த கண் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் இலங்கையில் இருந்து தமது நாடு 35,000 கண்களை தானமாக பெற்றதாக தெரிவித்தார். இந்த கருத்தானது பல சர்ச்சைகளை கிளப்பியது. ?படித்த பலரும் இது எவ்வாறு இலங்கையினால் சாத்தியம் ஆனது என்று கேள்வி எழுப்பினார்கள். இன்னும் ஓர் சிலர் ஒருபடி மேலே சென்று தமிழர்களின் கண்கள் பலவந்தமாக தோண்டப்பட்டு இவ்வாறு விற்கப்பட்டதா? என்ற தோரணையில் கேள்விகளை எழுப்பினார்கள்.

இது சம்பந்தமாக ஒரு சில விளக்கங்கள் வருமாறு
1. இலங்கையின் வட கிழக்கு பகுதிகளை விட தென்னிலங்கையில் அதிகளவான மக்கள் கண்களை தானம் செய்கின்றனர். இதனை புள்ளிவிபரங்கள் மூலமும் வைத்திய துறை சார்ந்தவர்கள் மூலமும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக ஓர் நபர் இறப்பின் அவரிடம் இருந்து உறவினர்களின் சம்மதத்தினை பெற்று கண்களை தானமாக பெறலாம். தென்னிலங்கையின் சட்டவைத்திய அதிகாரி அலுவலகங்களில் இச்செயற்பாடு சர்வசாதாரணமாக நிகழும் ஆனால் வட இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அறவே நடைபெறுவதில்லை.
2. கண் தானத்தின் பொழுது கண் முழுவதுமாக தோண்டி எடுக்கப்படுவதில்லை மாறாக விழிவெண்படலம் என்ற பகுதியே எடுக்கப்படுகின்றது. இவ்வாறு எடுக்கப்படும் பொழுது கூட முகத்தில் விகாரம் ஏற்படாதவாறு கூடிய கவனம் எடுக்கப்படும்.
3. கண் ஆனது தகுந்த பயிற்சி பெற்ற தொழில் நுட்பவியலாளர்களினால் தான் கண் தானத்திற்காக எடுக்கப்படும். சாதாரண நபர் ஒருவரினால் இது சாத்தியம் அற்றது.
4. இறந்த பின்னர் குறித்த சில மணி நேரங்களில் கண்களை தானமாக பெறவேண்டும் அத்துடன் அவற்றினை குறித்த இரசாயன பொருளில் இட்டு பாதுகாக்க வேண்டும்.
5. இலங்கையில் கண் தானத்தினை ஒழுங்கமைக்கும் இலங்கை கண் தான சங்கம் ஆனது 1967 ஆண்டில் இருந்து 83200 விழிவெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது.இவற்றில் பெருமளவானவற்றை பாக்கிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது அதாவது 40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறே 35000 விழிவெண்படலங்களை பாக்கிஸ்தான் பெற்றது.
குறிப்பு: கடந்த காலத்தின் பொழுது இலங்கையின் பல பகுதிகளில் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சில சந்தர்ப்பங்களில் முண்டங்களாகவும் கண்கள் அற்ற நிலையிலும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முற்றும்















