கணவன் தவறு செய்யும் பொழுது…

அது ஓர் வீதி விபத்து ஒன்றின் பொழுது இறந்த நபர் ஒருவரின் மரணவிசாரணை, இறந்த நபரின் மனைவி தனது கணவனை வாகனத்தின் மூலம் மோதி கொலை செய்து விட்டதாக அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். விசாரணைக்கு வந்திருந்த போலீசார் சிரிக்கவும் முடியாமல் அழவும் முடியாமல் நின்றிருந்தார்.
அவள் ஓர் பட்டதாரி ஆசிரியை இறந்த அவளின் கணவர் ஓர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்ப்பவர். அவர்கள் இருவருக்கும் மூன்று பிள்ளைகள். அவளின் கணவன் எப்பொழுதுமே அதீத வேகத்தில் தான் மோட்டர் சைக்கிளை செலுத்துவார். அத்தோடு மட்டும் அல்லாது ஆபத்தான முறையில் வாகனங்களினை முந்துதல் மற்றும் ஆபத்தான வளைவுகளில் கவனம் இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்துதல் போன்ற தவறுகளை அடிக்கடி செய்வார். திருமணமான ஆரம்பத்தில் அவள் மிக்க பயத்துடனேயே அவனுடன் மோட்டர் சைக்கிளில் பின்னிருந்தவாறு பயணிப்பாள். அவளின் அறிவுக்கு எட்டியவரை இவ்வாறான நடவடிக்கைகள் போக்குவரத்து விதி மீறல் என உணர்ந்து பல தடவைகள் கணவனுக்கு சுட்டி காட்டியிருந்தாள். இதன்காரணமாக இருவருக்கும் இடையே மனக்கசப்புக்கள் தான் ஏற்பட்டதே ஒழிய அவன் திருந்திய பாடில்லை. அன்றும் அவ்வாறே அவன் அலுவலகம் செல்லும் பொழுது ஓர் பேருந்தினை முந்திச்செல்லும் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனம் அவனை மோதித்தள்ளியது. விபத்தின் பின்னர் அவனது எலும்பு மற்றும் தசை குவியலினைபொறுக்கித்தான் எடுக்க முடிந்தது.

Sad depressed husband offended wife in quarrel, feeling guilty fault Free Photo


இன்றைய காலப்பகுதியில் பல பெண்கள் நன்றாக படித்திருந்தாலும் கணவர் பிழையான காரியங்களில் ஈடுபடும் பொழுது தட்டி கேட்கவும் திருத்தவும் தயங்குகின்றார்கள் அல்லது அவ்வாறு செய்ய முற்படுவதில்லை. பலர் இவ்வாறு செய்வதன் மூலம் பல விதமான குடும்ப பிரச்சனைகள் ஏற்படும் என பயப்படுகின்றனர் வேறு சிலர் கணவருக்கு மனைவி புத்தி மதி கூறுவதா என பின்னிற்கின்றனர். இதன்காரணமாக சிறிது காலத்தில் ஏற்படும் பாதக விளைவுகளையும் அவர்கள் அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகின்றது. எனவே ஆண் ஒருவன் அதீத மது பாவனை, போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்யும் பொழுது அவன் மட்டும் அல்ல அவனது குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.

முற்றும்

ஜாக்கெட் அணிந்த துப்பாக்கி சன்னம்!!

அண்மையில்  நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் துப்பாக்கி ஒன்றினால் இரு இளைஞர்கள் காயம் அடைந்திருந்தனர். அவர்களின் உடலில் இருந்து பெறப்பட்ட சன்னம் ஒன்று முழுமையாக இருந்த நிலையில் மற்றையவரின் உடலில் இருந்து பெறப்பட்ட சன்னம் ஆனது உடைந்த இரும்பு துகள்களாகவே இருந்தது. இதன் காரணமாக போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் சந்தேகம் நிலவியது அதாவது எவ்வாறு குறித்த வேறுபாடு இடம் பெற்றது என்பது பற்றியே இவ்வாறு சந்தேகம் நிலவியது. எவ்வாறு இது சாத்தியமானது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

பலருக்கு இராணுவத்தில் பயன்படும் துப்பாக்கி ரவைகளில் உள்ள சன்னங்கள் ஜாக்கெட் சட்டை (full metal jacket – FMJ) போட்டிருப்பது பற்றி தெரியாது. இவ்வாறு ஜாக்கெட் போடுவது என்ன என்றால் இரும்பினால் செய்யப்பட்ட துப்பாக்கி சன்னம் ஒன்றினை சுற்றி கடினமான உலோகத்தினால் ஆன அதாவது  பொதுவாக செப்பு மற்றும் நிக்கல் கலப்பு உலோகத்தினால் ஆன உலோக உறை ஒன்றினை போடுவதே ஆகும்.

ஏன் இவ்வாறு துப்பாக்கி சன்னம் ஒன்றிற்கு இவ்வாறு ஜாக்கெட் போடவேண்டும்?

1. இவ்வாறு ஜாக்கெட் போடுவதினால் துப்பாக்கி சன்னம் துப்பாக்கியில் இருந்து அதிக வேகத்தில் வெளியேறும் (High Muzzle velocity) இதன் காரணமாக அதிக தூரத்திற்கு இலக்கு வைக்க முடியும்.

2. துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் உலோகம் சடுதியாக விரிவடைந்து துண்டு துண்டுகளாக உடைந்து துப்பாக்கியின் குழலின் உட்புறத்தினை சேதப்படுத்தும். இதன் காரணமாக Gilding metal ஆன ஜாக்கெட் போடப்படுகின்றது. இந்த ஜாக்கெட் ஆனது துப்பாக்கி குழலினுள் பிறப்பிக்கப்படும் அதிக வெப்பத்தினையும் தாங்க கூடியதாக இருக்கும்.

3. இவ்வாறு துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் உலோகம் சடுதியாக விரிவடைந்து துண்டு துண்டுகளாக உடைவதினை இந்த உலோக ஜாக்கெட் ஆனது கட்டுப்படுத்தும். இதன் மூலம் துப்பாக்கி சன்னம் ஆனது தனது இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்தும் (through and through injury). ( சிலர் சிறுசிறு துண்டுகளாக உடைவதே இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்தும் என தவறுதலாக விளங்கிக் கொண்டுள்ளனர்). மேலும் ஆரம்ப காலத்தில் மொட்டையான துப்பாக்கி சன்னமே பாவனையில் இருந்தது. இதன் மூலம் இலக்கிற்கு அதிகளவு சேதாரத்தினை ஏற்படுத்த முடியாது எனவே தான் இவ்வாறு ஜாக்கெட் போடுவதன் மூலம் துப்பாக்கி சன்னம் ஆனது மேலும் கூர்மை ஆக்கப்பட்டது. 

4. துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் தரம் குறைந்த உலோகம் நீண்ட காலம்  துருப்பிடிக்காமல் இருக்கவும் இந்த உலோக ஜாக்கெட் ஆனது உதவுகின்றது.

5. இவ்வாறு  சன்னம் ஒன்றிற்கு ஜாக்கெட் போடுவதினால் அதன்மூலம் அந்த துப்பாக்கி சன்னம் ஆனது கடினமான பொருட்களான உலோகங்கள் மற்றும் மரம் போன்றவற்றினை துளைத்து செல்லும்.

துப்பாக்கி சூடு நடக்கும் பொழுது இந்த ஜாக்கெட் ஆனது ஏன் உடைய வேண்டும்?

1. தரம் குறைந்த உலோகத்தினால் இந்த ஜாக்கெட்  செய்யப்பட்டிருக்கும் பொழுது அதிக  வெப்பத்தினால் உடையும். பொதுவாக தொடர்ச்சியாக துப்பாக்கியினால் சுடும் பொழுது.

2. துப்பாக்கி குழலினுள் ஒன்றிற்கு மேற்பட்ட சன்னங்கள் சடுதியாக சிக்கும் பொழுது

3. துப்பாக்கி சன்னம் ஆனது மரம் அல்லது உலோகம் ஒன்றில் பட்டு தெறிக்கும் பொழுது அல்லது அவற்றினை ஊடுருவும் பொழுது

ஜாக்கெட் ஆனது உடையும் பொழுது என்ன நடைபெறும்?

துப்பாக்கி சன்னத்தினுள் இருக்கும் தரம் குறைந்த உலோகம் ஆனது சிறுசிறு துண்டுகளாக உடைந்து இலக்கினுள் செல்லும். அனுபவம் குறைந்த விசாரணையாளர்கள் இந்த சிறு உலோக துண்டுகளை பார்த்து அவை கட்டுத்துப்பாக்கியில் அல்லது shot gun இல் இருந்து வந்த துப்பாக்கியின் சன்னம் (pellets)  என விளங்கிக் கொள்ள முற்படுவர்.

இந்த ஜாக்கெட் போடப்பட்டுள்ள துப்பாக்கி சன்னங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றது.  அவற்றில் சில பின்வருமாறு  

  • FMC (Full Metal Case)
  • FMJBT (Full Metal Jacket Boat Tail)
  • FMJ FN (Full Metal Jacket Flat Nose)
  • FMJTC (Full Metal Jacket Truncated Cone) 
  • TMJ (Total Metal Jacket) 
  • FMJE (Full Metal Jacket Enclosed Base)
முற்றும்

ஆசிரியர் மாணவரினை உடல் ரீதியாக தண்டிக்கலாமா?

கடந்த சில தினங்களில் யாழ் குடாநாட்டில் ஆசிரியர் மற்றும் வணக்கத்திற்குரிய மதகுரு ஆகியோர் பாடசாலை மாணவன் ஒருவனை குரூரமான முறையில் தாக்கியதில் மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பலரிடத்தும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் மாணவர்களுக்கு இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்குதல் (corporal punishment) சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் பலர் தங்களின் மனவக்கிரங்களை தீர்க்கும் கருவியாக இந்த உடல் ரீதியான தண்டனையினை மாணவர் மீது வழங்கி வருதல் அவதானிக்கத்தக்கது.

  1. ஏன் இலங்கை உட்பட பல நாடுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்துள்ளன?
    இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்களினால் மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் ஆகும். மேலும் விஞ்ஞான ரீதியாக நடாத்தப்பட்ட ஆய்வுகளில் இவ்வாறான தண்டனைகளினால் மாணவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  2. இலங்கையில் எந்த சட்ட பிரிவுகளில் உடல் ரீதியான தண்டனை வழங்கல் தடை செய்யப்பட்டுள்ளது?
    கல்வி அமைச்சின் 2005/17 இலக்கமுடைய சுற்றறிக்கை மூலமும் இலங்கை தண்டனை சட்ட கோவையின் பிரகாரமும் (Penal Code Amendment Act No. 22 of 1995) சிறுவர் சாசனம் (Article 71 of the Children and Young Persons Ordinance) மூலமும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  3. உடல் ரீதியான தண்டனைகளை வழங்காமல் மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியுமா? ஆம். பல ஆசிரியர்கள் மற்றும் பலர் நினைத்துக்கொள்கின்றனர் உடல் ரீதியான தண்டனைகளை வழங்கியே மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியும் என்று, அது மிகவும் தப்பானது.உடல் ரீதியான தண்டனைகளுக்கு பதிலாக மாணவர்கள் பிழை விடும் பொழுது அவர்களை புறக்கணிப்பதன் மூலமும் நற்காரியங்கள் செய்யும் பொழுது அவர்களை தட்டி கொடுப்பதன் மூலமும், நன்மாணாக்கரினை உதாரணம் காட்டுவதன் மூலமும், அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமும், சிறுவர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிப்பதன் மூலமும், வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் (guidance and counseling methods) மூலமும் மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியும். திறமை மற்றும் ஆற்றல் அற்ற ஆசிரியர்களே உடல் ரீதியான தண்டனைகளை வழங்கி மாணவர்களினை நன்வழிப்படுத்த முடியுமென நினைக்கின்றனர்.
  4. உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? மற்றவர்களை உடல் ரீதியான தண்டனை வழங்கி தண்டிக்க முடியும் என்ற பிழையான நிலைப்பாட்டிற்கு இட்டுச்செல்லும். இன்றைய ஆசிரியர்கள் பலர் இவ்வாறு உடல் ரீதியான தண்டனையை அனுபவித்தவர்கள் என்பதன் காரணமாகவே அவர்கள் அதனை உதாரணமாக கொண்டு உடல் ரீதியான தண்டனையை வழங்கவும் அதனை ஆதரிக்கவும் முற்படுகின்றனர்.
    உடல் ரீதியான தண்டனை வழங்கல் மாணவர் – ஆசிரியர் உறவினை நீண்ட காலம் தொடர விடாது. மேலும் உடல் ரீதியான தண்டனை வழங்களின் பொழுது மாணவர்கள் உடற் காயங்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாகும். முக்கியமாக கண் மற்றும் காது போன்றன காயமடையலாம். இவ்வாறு உடல் ரீதியான தண்டனை வழங்கல் உடல் ரீதியான சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு நிச்சயம் இட்டுச்செல்லும்.
    மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் பொழுது அவர்கள் அதில் இருந்து தப்புவதற்கு விடயங்களை மறைத்தல், பொய் சொல்லுதல் போன்ற தீய பழக்கவழக்கங்களை பழகுவார்கள். மேலும் உடல் ரீதியான தண்டனை வழங்கல் குறிப்பிட்ட காலம் வரையுமே மாணவர்களை நன்வழிப்படுத்தும் அதாவது மாணவர்களை நன்மாணாக்கர் மாதிரி நடிக்க வைக்கும்.
    உடல் ரீதியான தண்டனை வழங்களின் பொழுது ஏற்படும் உள ரீதியான பாதிப்புக்கள் மாணவர்களுக்கு நீண்ட காலம் நீண்ட காலம் நிலைத்து நிற்கும், இதன் காரணமாகவே அன்றைய மாணவர்களாகிய இன்றைய ஆசிரியர்கள் உடல் ரீதியான தண்டனையை வழங்கவும் அதனை ஆதரிக்கவும் முற்படுகின்றனர்.
  5. ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவது எவ்வாறு?
    ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை ஓரிரு நாட்களில் கட்டியெழுப்ப முடியாது. சிறுவயது முதலே பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் (மாதா, பிதா, குரு…) முன்னுதாரணமாவார்களாக (Role model ) செயற்படுவதன் மூலமே பணிவான, ஒழுக்கமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்ப முடியும்.
  6. சிறிதளவான உடல் ரீதியான தண்டனைகளை வழங்க முடியுமா?
    உடல் ரீதியான தணடனைகள் இலங்கையில் உள்ள சட்டங்களின் பிரகாரம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிறிதளவான உடல் ரீதியான தண்டனைகளை வழங்கல் என்பது கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் இவ்வாறு தண்டனை வழங்களின் போது ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படும் வார்த்தை பிரயோகம் காரணமாக மாணவர்கள் பாடசாலையினை விட்டு இடைவிலகியமை மற்றும் தற்கொலை செய்தமை போன்ற சம்பவங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன.
    முற்றும்

விளிம்பிலி காய் ஆபத்தானதா?

பொதுவாக தற்பொழுது வெய்யிலின் தாக்கம் அதிகமாக நிலவும் காலப்பகுதியில் மக்கள் உற்சாகமாக இருக்கவும் உடலில் நீரினை உரிய அளவில் பேணவும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தான் விளிம்பிலி பழம் . இந்தவகை பழங்களை குறித்த நோயாளிகள் அதிகளவில் உண்ணும் பொழுது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளாவதினை இப்பதிவு விளக்குகின்றது.
Averrhoa bilimbi (commonly known as bilimbi, cucumber tree, or tree sorrel) மற்றும் Averrhoa carambola (carambola, star fruit or five-corner) ஆகிய இரண்டு வகையான தாவரங்களும் Oxalidaceae என்ற குடும்பத்தினை சார்ந்த தாவரங்களாகும். இவற்றின் உருவ தோற்றவியல் வேறுபாட்டினை கீழே உள்ள படங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

Averrhoa carambola


Bilimbi Fruit Flower Averrhoa - Free photo on Pixabay
Averrhoa bilimbi

தெற்காசிய நாடுகளில் இந்த பழமானது பல்வேறு பட்ட மருத்துவ தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றது அம்மை நோய், குடற்புழு, நாடப்பட்ட தலையிடி போன்ற நோய்களை குணப்படுத்த இந்த பழங்கள் உண்ணப்படுகின்றது. அவ்வாறே இம்மரத்தின் இலையானது தோல் வியாதிகள், பால்வினை நோய்கள், மூட்டு வாதம் போன்றவற்றினை குணப்படுத்த இயற்கை மருத்துவத்தில் பாவிக்கப்டுகின்றது.
இப்பொழுது விடயத்திற்கு வருவோம் இதன் பழங்கள் மற்றும் இலை சாறுகளில் ஒக்ஸ்சாலிக் அசிட் (oxalic acid) என்ற பதார்த்தம் உள்ளது. இது சாதாரண அளவில் நாம் உள்ளெடுக்கும் பொழுது எமது உடலிற்கு பெரும்பாலும் தீங்கினை ஏற்படுத்தாது. ஆனால் அதிக செறிவில் உள்ளெடுக்கும் பொழுது உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும். அதிக இலைகளை அல்லது பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸினை அருந்தும் சந்தர்ப்பத்தில் சாதார அல்லது குறைந்த சிறுநீரக தொழிற் பாட்டினை கொண்டவர்களில் ஒக்ஸ்சாலிக் அசிட் ஆனது சடுதியான சிறுநீரக செயலிழப்பினை (Acute oxalate nephropathy) ஏற்படுத்திய பல சந்தர்ப்பங்கள் நிகழ்ந்துள்ளன.


எவ்வாறு நாம் இவற்றினை தடுக்கலாம்?

  1. சிறுநீரக தொழில்பாடு குறைவாக உள்ள நோயாளிகள் இந்த பழச்சாறு அருந்துவத்தினை தடுப்பதன் மூலம். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் அருந்துதல் கூடாது.
  2. வெறும் வயிற்றில் இதன் பழங்களினை அல்லது பழச்சாறினை அருந்த கூடாது.
  3. மேலும் எமது உடலில் இருந்து அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் வேளையில் நாம் இந்த பழங்களினை அல்லது பழச்சாறினை அருந்த கூடாது.
    முற்றும்

நஞ்சினை அடையாளம் காண்பது எவ்வாறு?

கடந்த வாரத்தில் வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினை கண்டெடுத்த மீனவர்கள் அதனை மதுபானம் என நினைத்து பருகினர். இதன் பொழுது ஏற்பட்ட அனர்த்தத்தில் இவ்வாறு பருகிய இருவர் இறந்தனர் மேலும் சிலர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது. மீனவர்களின் கருத்துப்படி வழமையாக இவ்வாறாக மதுபான போத்தல்கள், வைத்தியசாலையில் பாவிக்கப்படும் பொருட்கள் மற்றும் பொலித்தீனினால் பொதி செய்யப்பட்ட உணவு பொருட்கள் கரை ஒதுங்குகின்றமையும் அவற்றினை மக்கள் எடுத்து பாவிப்பது வழமை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்பதிவில் எவ்வாறு ஓர் மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காண்பது என்பது பற்றி பார்வையிடுவோம். பொதுவாக வைத்தியசாலையில் புண்களுக்கு மருந்து கட்டிட பாவிக்கப்படும் திரவங்கள், விவசாயத்தில் பாவிக்கப்படும் கலை கொல்லிகள், பீடை நாசினிகள், நஞ்சு பதார்த்தங்கள் மற்றும் ஏனைய திரவ மருந்து வகைகள் கறுப்பு அல்லது மண்ணிற கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக்கினால் ஆன போத்தல்களில் இருக்கும். இவ்வகையான போத்தல்களினை கண்டவுடன் நாம் உசார் அடையவேண்டும். மேலும் இவ்வாறான போத்தல்களில் சிவப்பு, நீலம், பச்சை அல்லது மஞ்சளினால் ஆன லேபிள் இருக்கும். பொதுவாக ஆங்கில மொழியில் தான் போத்தலினுள் இருக்கும் பதார்த்தம் பற்றிய விபரங்கள் இருக்கும். ஆனால் மேற்குறித்த நிறங்களினை காண்பதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

File:Toxicity labels.svg - Wikipedia


மேலும் சில போத்தல்களில் மண்டை ஒட்டு குறியின் உடனான கோட்டு படம் (நஞ்சு பதார்த்தத்தினை குறிக்கும்), ஆச்சரிய குறியின் கோட்டு படம் ( ஆபத்தான உடல் நலக்குறைவுகள் ஏற்படுத்தும் பதார்த்தம்) போன்றன இருக்கும் இவற்றினை வைத்தே மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

Safety label, Acute Toxicity (GHS), 25x25mm, 100/roll - Haines Educational


மேலும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தத்தினை கொண்டிருக்கும் போத்தல் அல்லது வேறு பொதி செய்யபட்ட உணவு பொதி ஒன்று காணப்படுமாயின் கூட அதனை எடுத்து நாம் மனித நுகர்விற்கு பயன்படுத்தல் ஆகாது ஏனெனில் அவை நீண்ட காலமாக அதிக வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் நீர் என்பவற்றுடன் தொடுகையில் இருப்பதன் காரணமாக அவற்றினுள் இருக்கும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தம் ஆனது மனித நுகர்விற்கு பொருத்தம் அற்றதாகவும் சிலவேளை நச்சு பதார்த்தம் ஆகவும் மாறி இருக்கலாம்.
முற்றும்

இறந்தவர் உயிர்த்தெழுந்தாரா???

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டார் எனக்கருதி வைத்திய சாலையின் பிரேத அறைக்கு அவரின் சடலம் அனுப்பப்பட்டது. அங்கு அவரின் உறவினர்கள் அவரின் சடலத்தினை பார்வையிட சென்ற பொழுது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது அதனை தொடர்ந்து அவர் மீளவும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவ்வாறான சம்பவங்கள் பல உலகில் இடம்பெற்றுள்ளன. ஏன் இவ்வாறு நடைபெற்றது என்பது பற்றிய விளக்கமே இப்பதிவு ஆகும்.


மருத்துவ உலகில் இவ்வாறு நடைபெறுவதினை SUSPENDED ANIMATION (APPARENT DEATH) என்றழைப்பர். அதாவது சில செயற்பாடுகளின் பொழுது எமது இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் மேற்படி செயற்பாடுகள் நடைபெறும். சாதரணமாக ஓர் நபரில் இறப்பினை உறுதிப்படுத்தும் மருத்துவ முறைகளினால் இச்சந்தர்ப்பத்தில் இறப்பினை உறுதிப்படுத்த முடியாது, இதன் காரணமாக வைத்தியர்கள் குறித்த நபர் இறந்து விட்டதாக தவறுதலான முடிவினை எடுப்பர்.
பின்வரும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு இருதய துடிப்பு மற்றும் சுவாசம் போன்றன தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது மிகக் குறைந்த வேகத்தில் மேற்படி நடைபெறும்.
1. யோகா பயிற்சியின் பொழுது
2. ஒரு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில்
3. நீரில் மூழ்கி இறக்கும் தறுவாயில்
4. மின்சார தாக்குதலுக்கு உள்ளாகும் பொழுது
5. அதீத குளிர் அல்லது வெப்பத்திற்கு உள்ளாகும் பொழுது
6. பொது மயக்க மருந்து கொடுத்தலின் பொழுது
7. வலிப்பு வரும் பொழுது
9. பாம்பு கடித்தலின் பொழுது
10. நஞ்சினை அல்லது சிலவகையான போதை பொருட்களை உட்கொள்ளும் பொழுது
11. உடல் ஏதாவது ஓர் காரணத்தினால் அதிர்ச்சிக்கு (Shock) உள்ளாகும் பொழுது- உதாரணமாக வயிற்றோட்டம், வாந்தி போன்றவற்றினால் அதிக நீரிழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில்

மேற்குறித்த சந்தர்ப்பங்களில் குறித்த நபரில் இறப்பு ஏற்பட்டுள்ளதா? என வைத்தியர்கள் கவனமாக பரிசோதிக்க வேண்டும் அத்துடன் குறித்த நபருக்கான உயிர் காப்பு சிகிச்சை முறையினை குறிப்பிட்ட மணி நேரத்திற்கு கொண்டு நடாத்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மீளவும் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகள் மீளவும் சாதாரண நிலைமைக்கு வரலாம்.
ஓர் நபருக்கு மேற்குறித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் கட்டாயம் SUSPENDED ANIMATION (APPARENT DEATH) என்ற நிலைமை வரும் என்றில்லை, குறித்த சில நபர்களுக்கே இந்த நிலைமை உண்டாகும். இதன் காரணமாகவே முன்னைய காலங்களில் இறந்த நபரின் உடலினை 02 மணித்தியாலங்களாக வைத்திய சாலையின் விடுதியில் வைத்திருந்த பின்னரே வெளியில் கொண்டுசெல்ல அனுமதிப்பர். ஆனால் தற்காலத்தில் நவீன முறைகள் மூலம் மரணம் உறுதிப்படுத்த படுவதினால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது அரிது.
முற்றும்

தேங்காய் எண்ணெய் புற்று நோயினை உண்டாக்குமா?

கடந்த சில தினங்களாக இலங்கையில் சகல பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் அடிபடும் விடயமே புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தங்களினை கொண்டுள்ள தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அதன் அவற்றின் தகுதி சான்றிதழ் வெளியாகும் முன்னரே சுங்கத்தில் இருந்து அவை விடுவிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதே. இவ்வாறு எல்லோரும் பயப்பட காரணம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணையில் aflatoxin என்ற புற்று நோயினை உருவாக்கும் பதார்த்தம் இருந்தமையே ஆகும். இவ்வாறே இரு வருடங்களுக்கு முன்னர் aflatoxin அடங்கிய செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
இயற்கையாகவே தேங்காயின் கொப்பராவில் aflatoxin இணை உற்பத்தி செய்யும் Aspergillus flavus, Aspergillus parasiticus , Aspergillus nomius போன்ற பங்கசுக்கள் வளரும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக இயற்கையாகவே தேங்காய் எண்ணையில் aflatoxin காணப்படும். எனவே இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெயிலும் aflatoxin காணப்படலாம். கொப்பரா உற்பத்தியின் பொழுது உரிய சுகாதார முறைகளை கைக்கொள்ள தவறுவதால் இவ்வாறு alfatoxin தேங்காய் எண்ணையில் சேர்வடைகின்றது. ஒவ்வொரு உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்களும் தமக்கு உரிய தரக்கட்டுப்பாடு அளவினை கொண்டுள்ளன உதாரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனுமதிக்கப்படும் அதி அளவு மொத்த aflatoxin 4 μg/kg மற்றும் aflatoxin B1 2 μg/kg ஆகும்.

Coconut halves affected by mold fungi on a white backgroun… | Flickr


Aflatoxin மட்டும் 18 வகையான உப வகைகள் உண்டு. இதில் aflatoxin b1 என்பதே மிகவும் ஆபத்தானது, இது class 1 என்ற carcinogen  (புற்று நோயினை உருவாக்கும் காரணி )  ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது class 1 என்றால் இந்த பதார்த்தம் அடங்கிய உணவு பொருட்களை உட்கொண்டால் நிச்சயமாக புற்று நோய் உண்டாகும் சாத்தியம் உள்ளது. முக்கியமாக ஈரல் புற்று நோய் உருவாகும். இந்த aflatoxin ஆனது வெப்பத்தினால் அழிவடையாது அதன்காரணமாக சமைத்த பின்னரும் இரசாயன ரீதியில் உயிர்ப்பாக காணப்படும். மேலும் இவ்வாறு aflatoxin இனால் பழுதடைந்த உணவுகளை உட்கொண்ட பசுக்களின் பாலில் aflatoxin b1 இன் பக்க விளைபொருள் ஆகிய  aflatoxin m1 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து aflatoxin எவ்வளவு ஆபத்தானது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
முக்கியமாக Aspergillus flavus என்ற பங்கசு தானியங்களான சோளம், கச்சான், கொப்பரா , அரிசி, மிளகு, செத்தல் மிளகாய் போன்றவற்றில் இயற்கையாக வளரும். முக்கியமாக மேற்குறித்த தானியங்களினை வெப்பமான ஈரலிப்பான இடங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பொழுதும், மழை நாட்களில் அறுவடை செய்யும் பொழுதும்  இந்த பங்கசு தொற்றி கொள்ளும்.
இவ்வகையான தொற்றுதல் அடைந்த உணவுகளை உண்பதினால் என்ன சுகாதார சீர்கேடுகள் உண்டாகும்? Aflatoxin இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உண்டாகும் நிலை  aflatoxicosis என்றழைக்கப்படும். இந்நிலையினால்  ஈரல் புற்று நோய், ஈரல் அழற்சி (cirrhosis and Reye’s syndrome), உணவுகள் சமிபாடு அடையாத்தனமை,  போன்றன ஏற்படும்.
இவ்வாறு இந்த பங்கசு  பாதித்த உணவுகளை அடையாளம் காணுவது? மிளகாயில் கறுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள் , கச்சானில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பருப்புகள், சோளத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி, தேங்காய் கொப்பராவின் பழுதடைந்த  கறுப்பு நிறமாக பகுதி, வெங்காயம் மற்றும் உள்ளியில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி ஆகியன பங்கசினால் பாதிக்கபட்ட பகுதிகள் ஆகும் இவற்றினை மக்கள் உண்பதினை தவிர்ப்பது நல்லது.
எவ்வாறு இந்த பங்கசு தொற்றினை தவிர்ப்பது? நாம் மேற்குறித்த உணவுகளை களஞ்சிய படுத்தும் பொழுது உலர்ந்த, இரலிப்பற்ற இடங்களில் களஞ்சிய படுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லை. எம்மில் எத்தனை பேர் சமைக்கும் பொழுது பங்கசு  தோற்றிய உணவு பகுதிகளை அகற்றி விட்டு சமைக்கின்றோம்  என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
முற்றும்

சிறுவன் ஏன் உயிர் இழந்தான்?

மோட்டார் வண்டியில் இருந்த பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஒருசில நாட்களுக்கு முன்னர் நாட்டில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம், தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தில் தம்புள்ளை – வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி கற்கும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் நேற்று மதியம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை முகர்ந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து மயக்கமடைந்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Petition · Actively work towards increasing awareness of volatile substance  abuse, the dangers of taking part and the products used · Change.org

எம்மில் பலருக்கு இவ்வாறு பெற்றோலிய பொருட்களின் வாசனையினை அதிகளவில் முகர்ந்தால் சடுதியாக மரணம் ஏற்படும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு பெற்றோல், மண்ணெண்ணெய், டிசல், டின்னர், தேர்ப்பன்டைன், ஒயில் பெயிண்ட் போன்ற பெற்றோலிய பொருட்களை மற்றும் சில சேதன கரைப்பான்களை (organic solvents) அதிகளவு நுகரும் பொழுது சடுதியாக சடுதியாக மரணம் சம்பவிக்கும். ஒருசிலர் இவ்வாறன பாதார்த்தங்களினை விரும்பி முகர்வர். இவ்வாறு முகரும் பொழுது அவர்களுக்கு அவர்களுக்கு இனம் புரியாத சந்தோச உணர்வு ஏற்படுவதே (distortion of consciousness) ஆகும். காலப்போக்கில் இச்செயற்பாட்டுக்கு அவர்கள் அடிமையாகும் தன்மை ஏற்படும் (volatile substance abuse).

இனி ஏன் அவர்களுக்கு இவ்வாறு சடுதியாக மரணம் சம்பவிக்கின்றது என பார்ப்போம்

  1. இங்கு முகரப்படும் சேதன கரைப்பான்கள் எமது இருதயத்தில் தாக்கமடைந்து இருதயத் தசையினை எமது உடலில் உள்ள அட்ரினலின் மற்றும் நோர் அட்ரினலின் ஆகியவற்றின் இலகுவான தாகத்திற்கு உள்ளாக்கும். இதன் காரணமாக எமது இருதயத் துடிப்பின் ரிதம் மாற்றம் அடையும் அதன் காரணமாக சடுதியான இறப்பு ஏற்படும்.( Any of the solvents appears to have the ability to sensitize the myocardium to the action of catecholamines,)
  2. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான பெற்றோலிய பொருட்கள் மனிதனின் இருதயத்தில் கணிசமான அளவு நோய்த்தாக்கத்தினை (chemical mediated myocarditis) ஏற்படுத்தியும் இறப்பினை ஏற்படுத்தியுள்ளன.
  3. பல சந்தர்ப்பங்களில் பலர் பொலித்தீன் பைகளில் இவ்வாறான திரவங்களினை இட்டு முகருகின்றனர். இவ்வாறு செய்யும் பொழுது அவர்கள் அதிக செறிவில் தொடர்ச்சியாக அந்த பெற்றோலிய பொருளினை முகருவத்தினாலும் மூச்சு திணறல் ஏற்படுவதினாலும் சடுதியான இறப்பு ஏற்படும். மேலும் குறித்த நேர இடைவெளியின் பின்னர் சுயநினைவு மாற்றம் அடைவதன் காரணமாக அவர்களை நெருங்கும் ஆபத்தில் இருந்து அவர்களால் விலக முடிவதில்லை. இவ்வாறு பரிதாபகரமாக மரணத்தினை தழுவிக்கொள்கின்றனர் (plastic bag asphyxia).
  4. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் இவ்வாறு சுயநினைவு இழந்து இருக்கும் சந்தர்ப்பத்தில் வாந்தி எடுக்க நேரிடும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் வாந்தியானது சுவாச குழாயினுள் இறங்கி மூச்சுத்திணறலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும்.

எனவே இவ்வாறான ஆபத்தான பழக்க வழக்கங்களினை விரும்பியோ அல்லது தற்செயலாகவோ கைக்கொள்ளாமலே எமது உயிரினை பாதுகாப்போம்
முற்றும்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழத்தல் ஏன்?

அண்மைகாலமாக இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இதன் காரணமாக இள வயதினரே அதிகளவில் மரணத்தினை தழுவுவதோடு மட்டும் அல்லாது அதிகளவிலான இளவயதினர் பாரதூரமான காயங்களுக்கும் உள்ளாகின்றனர். அதிகளவு காலம் வைத்திய சாலையில் தங்கிநின்று சிகிச்சை பெற நேரிடுகின்றது இதனால் உறவினர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாவதோடு காயம் அடைந்தவர் பல சந்தர்ப்பங்களில் ஊனம் அடையவும் நேரிடுகின்றது. இந்த பதிவு எழுதப்படும் பொழுதும் இவ்வாறான ஓர் விபத்தில் மன்னார் மாவட்டத்தில் இருவர் பலியாகி உள்ளனர்.
இவ்வாறான மோட்டார் சைக்கிள் விபத்துக்களுக்கு பிரதான காரணம் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரம் உள்ள மரங்கள் மற்றும் மதில் போன்றவற்றில் மோதுதல் ஆகும். பலரும் இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழப்பதற்கு வேகம் தான் முக்கிய காரணம் என்று கருதுகின்றனர். அது உண்மை தான் என்றாலும் வேகம் தவிர பல்வேறு காரணிகள் இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழக்க ஏதுவாகின்றது. அவற்றில் முக்கியமானவை வருமாறு

  • வீதியின் அமைப்பும் வீதியின் மேற்பரப்பு தன்மையும்
    நேரிய நீண்ட வீதியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது குறைவு மாறாக அதி வேகத்தில் பயணிக்கும் பொழுது வீதியில் திடீரென எதிர்ப்படும் கல், கிடங்குகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றில் மோதுவதினை தடுக்கும் முகமாக வேறுதிசைக்கு மோட்டார் சைக்கிளினை திருப்பும் பொழுது இவ்வாறு ஏற்படுகின்றது. அதிக வேகத்தில் பிரயாணிக்கும் பொழுது வீதியின் வளைவில் அல்லது சந்தியில் சடுதியாக மோட்டார் சைக்கிளினை திருப்பும் பொழுது பொதுவாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடினை இழந்து விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம். வீதியின் மேற்பரப்பில் கிரவல் கற்கள் அல்லது ஈரலிப்பு (மழை அல்லது அதிக பனி ) காணப்படும் பொழுது இவ்வாறு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாடினை இழக்கும் சந்தர்ப்பம் அதிகம் ஆகும்.
  • வேகம்
  • அதிக வேகம் ( 50km /h ) இற்கும் அதிகமான வேகத்தில் செல்லும் பொழுதுதான் இத்தகைய விபத்துக்களுக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றது. வேகமானது 60km /h இணை நெருங்கும் பொழுது இவ்வாறு கட்டுப்பாட்டினை இழத்தல் இரு மடங்காக அதிகரிக்கும். மேலும் குறித்த வேகத்தில் நேர் வீதியில் இருந்து வளைவிற்கு செலுத்தும் பொழுதும் கட்டுப்பாடினை இழக்கும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
  • மோட்டார் சைக்கிளின் அமைப்பு
    இன்றைய உலகில் வாடிக்கையாளரின் தேவை கருதி பல்வேறு பட்ட வடிவமைப்புகளில் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வகையானவை இவ்வாறு இலகுவாக கட்டுப்பாட்டினை இழந்துவிபத்துக்களாகும் தன்மை உடையவை. மேலும் டயர்களில் உள்ள தவாளிப்பு தேய்ந்து இருக்கின்றமையும் இவ்வாறு விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கும்.
12 Different Types of Motorcycles (Guide) | Different types of motorcycles, Motorcycle  types, Enduro motorcycle
  • விபத்து நடைபெறும் காலப்பகுதி
    தற்பொழுதுள்ள தரவுகளின் பிரகாரம் இவ்வாறு கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளதால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலேயே அதிகளவு நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து குறைவாக இருப்பதன் காரணமாக மோட்டார் சைக்கில் ஓட்டிகள் அதிகளவு வேகத்தில் பயணிப்பதே காரணம் ஆகும்.
  • மதுபானத்தின் அளவு
    நாம் அருந்தும் மதுபானம் பல்வேறுவித உடலியல் மற்றும் மனோவியல் மாற்றங்களினை ஏற்படுத்தும். குறித்த செறிவில் இரத்தத்தில் உள்ள பொழுது மோட்டார் சைக்கிளோட்டிகள் ஆபத்தான தீர்மானங்களினை அல்லது முடிவுகளினை வெறுமனே துணிந்து எடுப்பர் (taking high risk behavior) இதுவும் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்கு உள்ளாவதற்கு ஓர் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.
    முற்றும்

கட்டப்பஞ்சாயத்து

இந்தியாவின் கிராமங்கள் தோறும் நடைமுறையில் இருக்கும் கட்டப்பஞ்சாயத்து முறைமை யாவரும் அறிந்ததே . இதில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் பெரும்பாலான தீர்ப்புக்கள் நகைப்புக்குரியதாகவும் இலகுவாக சவாலுக்கு உட்படுத்த கூடியதாகவும் உள்ளது. எனினும் கிராம மக்களின் சிறுசிறு பிரச்சனைகளை இலகுவாக தீர்த்து வைக்கும் இடமாக கட்டப்பஞ்சாயத்து முறைமை இருப்பதினால் பெருமளவிலான மக்கள் அதன் மூலம் பயன் பெறுவதோடு அந்த முறைமை நீடித்து நிற்கின்றது.
இலங்கையில் அரசமைப்பு ரீதியாக இவ்வாறான ஓர் முறைமை இல்லை. பொதுவாக சமூகத்தில் அதிக அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது வேறு நபர்கள் தனிப்பட்டவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதினை “கட்டப்பஞ்சாயத்து” தீர்ப்பு என கூறுவர்.
இலங்கையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இவ்வாறான ஓர் புதிய கலாச்சாரம் உருவெடுத்து வருகின்றது. முக்கியமாக சிறுவர் துஸ்பிரயோகம் அதிலும் பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் நடைபெறும் பொழுது அதனை நடைமுறையில் இருக்கும் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் அதற்கு வெளியிலேயே தீர்வு காணும் நடவடிக்கைகள் நடைபெறுவத்தினை அவதானிக்க கூடியதாக உள்ளது.
யார் தான் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்? குறிப்பாக பாடசாலை அதிபர்கள், போலீசார், கிராமசேவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் மத தலைவர்கள்போன்றோரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் முக்கிய நோக்கமே இவ்வாறான சம்பவத்தினை வெளி உலகத்திற்கும் நீதிமன்றிற்கும் தெரியாமல் மறைப்பது தான். இவர்கள் குற்றம் புரிந்த தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு ஆகியோரிடம் கலந்துரையாடி ஒருசில பயமுறுத்தல்களுடன் குற்றம் புரிந்த தரப்பிற்கு சார்பான தீர்ப்பொன்றினை திணிப்பர். இதன் பொழுது பாதிக்கப்பட்டவருக்கு பணம், ஆடு போன்ற கால்நடைகள் மற்றும் வீடமைப்பு உதவிகள் போன்றன வழங்கப்படும்.
இவ்வாறான கட்டப்பஞ்சாயத்து முறையினால் சமூக ரீதியில் பல தாக்கங்கள் ஏற்படும், அவற்றில் ஒரு சில

  1. குறிப்பாக பாதிக்கப்பட நபர்களிற்கு உரிய நியாயமான தீர்வு கிடைக்காது மேலும் அதுகுறித்து அவர்கள் முறையிடாது இருக்க பயமுறுத்தப்படுவர்.
  2. குறித்த துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இதன் காரணமாக பாதிப்பட்ட நபர் வன்முறையான முறையில் தீர்வினை காண விளையலாம் அல்லது இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம்.
  3. மேற்படி மாவட்டங்களில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் அவர்களிடத்து கடுமையான கலாச்சார சீரழிவினை ஏற்படுத்தும்.
  4. பாலியல் குற்றம் புரிந்தவர் சுதந்திரமாகவும் பாதிப்பட்ட நபர் அடங்கி வாழவும் நேரிடும் இதன் காரணமாக இவ்வாறான பல சம்பவங்கள் நடைபெறும்.
  5. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற மறுப்பதினால் அவர் தொடர்ச்சியான உடல் மற்றும் உள தாக்கங்களுக்கு உட்படுவர்.
கட்டப்பஞ்சாயத்து - Home | Facebook

மக்களும் இவ்வாறான முறைமைகளை நாட பல்வேறு காரணிகள் எதுவாக அமைந்து விடுகின்றன. அவற்றில் ஒருசில வருமாறு

1.பல்வேறு காரணங்களினால் இலங்கையின் நீதித்துறை மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனம்.

2. நீதிமன்றில் தீர்ப்புக்கள் வழங்க பலவருடங்கள் காலதாமதம் ஆகின்றமை.

3. பாலியல் துஸ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு சமூகத்தில் கிடைக்கும் அவமரியாதைகள் மற்றும் அசௌகரியங்கள்.

4. உரிய நீதியினை பெற அதிக செலவீனங்கள் ஏற்படுகின்றமை

எனவே நாம் இவ்வாறான பல தீமைகளை ஏற்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து முறைமையின் மூலம் நீதி வழங்கப்படுவதினை ஊக்குவிக்க கூடாது.

முற்றும்