அண்மை காலங்களில் பத்திரிகை, இணையத் தளங்கள் மற்றும் முக நூல் பதிவுகளில் வைத்தியர்களின் அலட்சிய போக்கினால் பல உயிர்கள் பறிக்க படுள்ளதாக குற்ற சாட்டுகள் பல்வேறு பட்ட தரப்புகளினால் வைக்கபட்டு வருகின்ற நிலையில் உண்மைத்தன்மையை ஆராயும் முகமாக இப்பதிவு இடம்பெறுகின்றது.
“மருத்துவ தவறு” சரியான சொற்பதமா?
சில காலங்களுக்கு முன்பு “மருத்துவ கொலை” என்ற தலைப்பில் ஒரு சில பதிவுகள் வந்தன. கொலை என்பது சட்ட ரீதியாக கொலையாளியின் மன ரீதியான உத்வேகத்தினை வைத்தே முடிவு செய்யப் படுகினறது. இங்கு மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கு கொலை செய்யும் எண்ணம் இல்லை என்பதால் ” மருத்துவ கொலை” என்ற சொற் பதம் பொருத்தம் அற்றதே.
ஒருவன் ஒரு செயலினை தெரிந்து செய்தால் அது “தப்பு” என்றழைக்கப் படுகிறது. அவ்வாறே ஒரு செயலினை தெரியாமல் செய்தல் “தவறு” என்றழைக்கப் படுகின்றது.
மருத்துவ தவறு என்றழைக்கப்படும் பொழுது எல்லா தவறுகளும் ஏதோ தெரியாமல் இழைக்க படுவதாக எண்ண தோன்றும்.
உண்மையில் மருத்துவ தவறுகள் யாவும் மருத்துவ துறை சார்ந்த வைத்தியர்கள், தாதியர், மற்றும் எனையோர்களின் அலட்சிய போக்கினால் தான் ஏற்படுகின்றது. இதனாலேயே ஆங்கிலத்தில் medical negligence அதாவது மருத்துவ அலட்சியம் என்று அழைப்பதே சாலா சிறந்தது .
மருத்துவ அலட்சியம் என்பதும் ஓர் சட்ட சொல் ஆகும். எனவே ஒரு சம்பவம் நடைபெற்ற உடனேயே நாம் மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ தவறு என்று கூற முடியாது. வழக்கு விசாரணையின் பின்பே நடைபெற்ற சம்பவம் மருத்துவ அலட்சியம் அல்லது மருத்துவ தவறு என்று தீர்மானிக்க படும்.
மருத்துவ அலட்சியம் என்றால் என்ன?
மருத்துவ துறை சார்ந்தவர்களின் அதாவது வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்ப வியலாளர்கள் … போன்றவர்களின் கடமை தவறிய அலட்சிய போக்கினால் (breech of duty of care) நோயாளி ஒருவருக்கு சேதாரம் அல்லது உயிரிழப்பு ஏற்படும் நிலை மருத்துவ அலட்சியம் என்று அழைக்கபடும். இங்கு மருத்துவ துறை சார்ந்தவர்கள் ஒரு செயற்பாடினை செய்வதன் மூலமாக உதாரணமாக தவறான அளவில் ஊசி மருந்தினை போடுவதால் அல்லது உரிய செயன்முறையினை செய்யாமல் விடுவதன் காரணமாக உயிரிழப்பு அல்லது சேதாரம் ஏற்படுகிறது. உதரணமாக பிறந்த குழந்தைக்கு போர்வையினை போர்க்காமல் குளிருக்கு வெளிக்காட்ட இடம் அளிப்பதன் மூலம் உயிரிழப்பு ஏற்படலாம்.
இலங்கையில் மருத்துவ அலட்சியம்
இலங்கையின் அரச மற்றும் தனியார் மருத்துவ துறையில் மருத்துவ அலட்சியம் ஒன்றும் நடைபெறவில்லை என்று கருத்து சார்ந்து வரும் செய்திகள் யாவும் ஒருவிதத்தில் பிழையானவை ஆகும். உண்மையில் இலங்கையில் இது சம்பந்தமான தரவுகள் எதுவும் இல்லை என்பதால் அப்படி ஒன்றும் இல்லை என்றே பலர் நினைக்கின்றனர்.
மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடான ஐக்கிய அமெரிக்காவில் மருத்துவ அலட்சியமே அதிக மரணங்களை விளைவிக்கும் காரணி ஆகும். இந்நிலையில் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் மருத்துவ அலட்சியம் காரணமாக உண்டாகும் மரணங்கள் மற்றும் சேதாரங்கள் உண்மையில் மிக அதிகமாகும்.
மேலும் சில உண்மைகள்

- இலங்கையில் மருத்துவ அலட்சியத்தினை அடையாளப்படுத்தி இனம் காணும் பொறிமுறை ஒன்றும் இல்லை (notification system).
- பொதுவாக சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் தமது நோயாளி திடீர் என்று இறந்தால், அவர்கள் என்ன காரணத்துக்காக நோயாளி இறந்தார் என்று அறிந்து கொள்ள விரும்புவதில்லை. உதாரணமாக நோயாளி ஒருவர் வைத்தியரின் தவறான சிகிச்சையினால் இறந்தார் என்றால் அதுசம்பந்தமாக அவர்கள் மேலதிக தகவல்களை பெற்று ஆய்வுகளை மேற்கொள்ள விரும்புவதில்லை. விதிவிலக்காக இலங்கையில் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் சம்பந்தமாக பல்வேறு வைத்திய நிபுணர்கள் கலந்துரையாடும் வழக்கம் உள்ளது. பல மேற்கத்தேய நாடுகளில் நோயாளியொருவர் திடீர் மரணம் அடையும் இடத்து பல வைத்திய நிபுணர்கள் ஒன்றுகூடி ஆராய்வார்கள் அதன் பொழுது அவர்கள் விட்ட தவறுகள் விஞ்ஞான ரீதியில் அடையாளம் காணப்பட்டு எதிர்காலத்தில் நிகழாதவண்ணம் தடுக்கப்படும். சில நாடுகளில் நோயாளிக்கு இழப்பீடு வழங்கப்படுவதோடு உரிய வைத்தியர்கள் தண்டிக்க படாது அவர்களுக்கு மேலதிக பயிற்சி வழங்கப்படும்
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்ட வைத்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் கிடைக்கும் மருத்துவ அலட்சியம் சம்பந்தமான தகவல்களை உறவினர்களுக்கு விளங்க படுத்துவர் ஆனால் உறவினர்கள் அவற்றினை விளங்க முடியாத நிலையில் இருப்பர். சிலர் மிக தெளிவான விளக்கத்துடன் இருப்பர். இவ்வாறு தெளிவான விளக்கத்துடன் இருப்பவர்களும் சட்ட தரணிகளுக்கு அதிகளவு பணம் கொடுக்க வேண்டி வருவதால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ள படுவர்.
- பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்டதரணிகள் இது சம்பந்தமாக குறைந்த அளவு அனுபவம் மற்றும் அறிவு உள்ள காரணத்தினால் வழக்கினை சிறந்த முறையில் எடுத்துச்செல்ல மாட்டார்கள்.
மேலும் சில சட்ட தரணிகள் குறித்த வைத்தியருக்கு அல்லது வைத்திய சாலைக்கு எதிராக வாதாட தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை.
பல சந்தர்ப்பங்களில் மரணம் நிகழ்ந்த தனியார் வைத்திய சாலை மதம் சம்பந்தமான வைத்தியசாலை எனில் அம்மதத்தினை சேர்ந்த சட்டதரணிகள் அவ்வைத்திய சாலைக்கு எதிராக வாதாட தனிப்பட்ட ரீதியில் விரும்புவதில்லை - சில சந்தர்ப்பங்களில் சட்ட வைத்திய அதிகாரிகள் பிரேத பரிசோதனைகளில் கிடைக்கும் மருத்துவ அலட்சியம் சம்பந்தமான தகவல்களை சக வைத்தியர்களுக்காக மூடிமறைப்பர்.
தொடரும்







