இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது. இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.
இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள்
• இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
• இன்றுவரைக்கும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
• வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• ஏறத்தாழ 8000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர்.
• இந்நோயானது வடமத்திய மாகாணம், ஊவாமாகாணம், வடமேல் மாகாணம், கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதி, வவுனியா மாவட்டத்தின் தென்பகுதி மற்றும் அம்பாந்தோட்டை என்பவற்றை பாதித்துள்ளது.
விவசாயிகளுக்கு ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் என்றால் என்ன?
அளவுக்கு அதிகமான உரப்பாவனை, பீடை கொல்லிப்பாவனை நடைபெறும் பிரதேசங்களில் உள்ள மக்கள் அங்குள்ள நீர்நிலைகளை தமது அன்றாட தேவைகளிற்காக பயன்படுத்தும் போது, நீண்ட காலப் போக்கில் அவர்களது சிறுநீரகமானது தனது தொழிற்பாட்டை சிறிது சிறிதாக நிறுத்திக் கொள்ளல் ஆகும்.
வழமையாக இந்நோயானது உயர் குருதி அழுத்தம், சலரோகம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களையே அதிகம் தாக்கும். ஆனால் விவசாயிகளில் காணப்படும் இந்நோயானது அவர்களிற்கு வேறு எந்த நோய்களும் இல்லாத பட்சத்திலேயே ஏற்படுகின்றது. (chronic kidney diseases of multi-factorial origin) or (chronic kidney disease of unknown etiology -CKDu.) இந்நோயானது ஏற்படுவதற்க அச்சூழலில் காணப்படுமு; பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்க செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும்.
இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்து கூடியவர்கள்
• இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள்.
•விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள்
• சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள்.
• குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள்
• கடினத்தன்மையான (Hardness of the water) நீரினை அருந்தும் மக்கள்.
• கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள்.
• இந்நோயானது 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.
• பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
• ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும்.
• இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள்.
விவசாயிகளுக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
1. ஆசனிக்கு, கட்டியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல்
மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன.
அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம்
குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்டியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆ) உணவுச்சங்கிலி மூலம்
நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும்.
2. அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல்
சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (Neonicotinoids) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும்.
குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும்.
உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது.
3. களை கொல்லிகள் ((Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால்
புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது.
முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது.
4. நீரின் கடினத் தன்மை (Hardness of Water)
உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது.
மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன.
• கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை
• உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை
• அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen) போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை.
ஏன் வடமாகாண மக்களாகிய நாம் இந்நோயினையிட்டு கவலைப்பட வேண்டும்?
1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது.
2. வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள்.
3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் கடந்த 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும்.
4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழகை;கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும்.
5. வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல் உடலை அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீருக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம்.
6. கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற (NSAIDs) வலி நிவாரணிகளை வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும்.
7. போர் நடைபெற்ற காலப்பகுதிகளில் வடமாகாணம் ஆனது விவசாயத்தில் தன்னிறைவ பெற்றிருந்தது. அக்காலப்பகுதியில் மரக்கறிவகைகள், பழவகைகள் வெளி மாகாணங்களில் இருந்து கொண்டு வரப்படுவதில்லை. ஆனால் தற்பொழுது தக்காளி, கோவா, உருளைக் கிழங்கு முதலான மரக்கறிகள் பிரதானமாக தம்புள்ள சந்தையில் இருந்தே கொள்வனவு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. தம்புள்ள என்பது வடமத்திய மாகாணத்தில் உள்ள பிரபல்யமான மரக்கறி கொள்வனவு செய்யப்படும் இடம் ஆகும். இங்கு விற்பனை செய்யப்படும் மரக்கறிகள் பொரும்பாலும் அம்மாகணத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இம் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இந்நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படடுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும்.
உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள் :
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன.
1) தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல்.
2) அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல்.
3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்கு பதிலாக இயற்கயான முறைகள் மூலம் அல்லது உயி ரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல்.
4) விவசாயிகளுக்கு போதிய அறிவூட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினி களை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல்.
குறிப்பாக வடமாகாண சபையின் விவசாய அமைச்சு மற்றும் சுகாதார அமைச்ச என்பவை இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
5) புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல். உள்ளுரில் இயற்கையான பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைக் மற்றும் பழவகைகளின் விற்பனையை ஊக்குவித்தல்.