மரணித்தோருக்கு மரியாதை


இது அவளுக்கு இரண்டாவது கர்ப்பம். பல வருட இடைவெளியின் பின்னர் உருவாகிய பிள்ளை என்பதினால் அவள் பலத்த எதிர்பார்ப்புகளுடன் பிரசத்திற்காக காத்திருந்தாள். எதிர்பாராத விதமாக அவளது குழந்தை பிரசத்திற்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே கருப்பையினுள் இறந்து விடுகின்றது. இச்சம்பவம் அவளுக்கும் அவளின் கணவருக்கும் பேரிடியாக அமைந்து விடுகின்றது. பலத்த சிரமத்தின் மத்தியில் இறந்த குழந்தை பிறப்பிக்க படுகின்றது அதன் பின்னர் பிரசவ வேதனையிலும் அவள் வைத்திய சாலை ஊழியரிடம் இறந்த தனது குழந்தையினை காட்டிடுமாறு கேட்கின்றாள். அப்பொழுது ஊழியர் தனது ஓர் கையினால் ஓர் கடதாசி பெட்டியில் ஓர் இறந்த குழந்தையினை இலையான் மொய்த்த வண்ணம் உள்ளபோது காண்பித்தார். இறந்த விலங்குகளின் குட்டி மாதிரி தனது பிள்ளையினை அம்மணமாக காட்டியது அவளின் மனஅழுத்தத்தினை மேலும் அதிகமாகியது, என்னவென்றாலும் பத்துமாதம் சுமந்து பெற்ற பிள்ளையல்லவா. அவள் ஊழியரிடம் கூறினாள் குழந்தைக்கு வாங்கிய உடுப்புகள் உள்ளன அவற்றினை உடலிற்கு அணிவித்து விடுமாறு மன்றாடினாள் . இது இறுதியில் வாய்த்தர்க்கத்தில்தான் முடிந்தது. அவளின் மனநிலை காரணமாக குழந்தையின் உடலினை உறவினர்களினால் வீட்டிற்கு கொண்டுபோக முடியவில்லை. ஒரு சில வாரங்களின் பின்னர் அவளின் விருப்பத்தினை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள் நிவர்த்தி செய்தனர். அதன் பின்னரே அவளினால் அந்த இழப்பில் இருந்து விரைவாக மீண்டெழ முடிந்தது.


ஓர் நபர் தனது வாழ்நாளில் எமக்கு நண்பனாக இருந்திருக்கலாம் அல்லது பரம எதிரியாக இருந்திருக்கலாம் ஆனால் குறித்த நபர் மரணம் அடைந்த பின்னர் அவரின் உடலுக்கு அல்லது அவரிற்கு மரியாதை செலுத்துவது என்பது வளர்ச்சியடைந்த நாகரீகம் ஒன்றின் பண்பாகும். இறந்த ஒருவருக்கு மரியாதை அல்லது கணம் செலுத்துதல் என்பது பல்வேறு விடயங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில வருமாறு

  1. இறந்தவர்களின் உடல்களை அவர்களின் இறுதி விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் இன , மத மற்றும் மொழி பண்பாடுகளுக்கு அமைய அடக்கம் செய்தல்.
  2. இறந்தவர்களின் நினைவாக நினைவிடங்கள் போன்றன அமைத்தலும் அவர்களினை நினைவு கூரலும்.
    இவற்றினை பொதுவாக சகல மதங்களும் பண்டைக்காலம் தொட்டு போதித்து வருகின்றன. உதாரணமாக துட்டகைமுனு மன்னன் தனது எதிரியான எல்லாள மன்னனை போரில் வென்ற பின்னர் அவனுக்கு சமாதி அமைத்த பின்னர் அச்சமாதி அமைந்துள்ள வீதி வழியாக செல்லும் சகலரையும் அதற்கு மரியாதை செய்யுமாறு பணித்தான். ஆனால் இன்று துட்டகைமுனுவின் வழித்தோன்றல்களாக கூறிக்கொள்பவர்கள் இவற்றினை கடைப்பிடிப்பதில்லை. அத்துடன் பெரும்பாலான வைத்தியசாலை ஊழியர்களும் கடைப்பிடிப்பதில்லை என்பது கவலை தரும் விடயமாகும்
    முற்றும்

கொரோனா – உயிரிழப்பு எண்ணிக்கை உண்மையானதா?

வேகமாக பரவி வரும் கோரோனோவின் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையும் குறுகிய காலப்பகுதியில் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் பல செய்திகளில் இவ்வாறு இறக்கும் நோயாளர்கள் மாரடைப்பு, சலரோகம் , இருதய வருத்தம் போன்ற நாடப்பட்ட நோய்களை பல வருடங்களாக கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் அவ்வாறான நோய் நிலைமை காரணமாகவே இறந்தார்கள் எனவும் கொரோனா (கோவிட் 19) நோய்த்தொற்றால் அல்ல எனவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் நோயாளர் ஏன் மரணம் அடைந்தனர் என்பது பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் மரணம் அடையும் பொழுது அவரின் மரணத்திற்கான காரணம் (cause of death) உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சுவிற்கு அமைந்த வகையில் சிகிச்சை அளித்த மருத்துவரினால் அல்லது உடற் கூராய்வு பரிசோதனை செய்த மருத்துவரினால் வெளியிடப்படும். அதன் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

Improving the accuracy of death certification [CMAJ - May 19, 1998]

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் 1a என்பது உடனடியான மரணத்திற்கான காரணம் (immediate cause of death) 1b மற்றும் 1c என்பன உடனடியான மரணத்திற்கான காரணத்தினை ஏற்படுத்திய காரணிகள் (Antecedent causes) ஆகும். பகுதி 11 (part 11) என்பது மரணத்திற்கு பங்களிப்பு செய்த காரணிகளை குறிப்பதாகும்.
இனி விடயத்திற்கு வருவோம் PCR ரிப்போர்ட் பொசிட்டிவாக வரும் நோயாளி ஒருவர் பின்வரும் சந்தர்ப்பங்களில் இறக்கலாம்

  1. கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் (இங்கு நோயாளிக்கு வேறு எதுவிதமான நோய்களும் இல்லை ). இலங்கையில் இதுவரை இறந்த கொரோனா நோயாளிகளின் தரவுகளின் படி இவ்வாறு இறப்பவர்களின் மிக எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  2. வேறு நாட்பட்ட நோய்களின் தாக்கத்தினால் அதாவது கொரோனா நோயாளி ஒருவருக்கு இருதய வருத்தம், நீரிழிவு … போன்ற நோய்கள் காணப்படுமாயின் அவை கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் அல்லது அளிக்கப்படும் சிகிச்சையின் காரணமாக மோசமடையலாம். இதுவரை வெளியாகிய தகவல்களின் பிரகாரம் இவ்வாறு நாட்பட்ட நோயாளிகள் அதிகளவில் இறப்பதாக தெரிய வந்துள்ளது.
    இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது இவ்வாறு ஒரு நாட்பட்ட நோய்களுடன் உள்ள ஓர் கொரோனா தொற்றாளர் இறக்கும் பொழுது சிகிச்சை அளித்த வைத்தியரே குறித்த நோயாளி கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் இறந்தாரா? அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நாட்பட்ட நோய்கள் மோசமடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பதை தீர்மானிப்பார். இதன்பொழுது அவர் நோயாளியில் காணப்பட்ட நோயின் அறிகுறிகள், உடற் பரிசோதனை முடிவுகள், ஆய்வுகூட அறிக்கைகள் போன்றவற்றினை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார். இதனையே பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கொரோனா நோயாளி மாரடைப்பினால் இறந்தார் என்று செய்தி வெளியிடுகின்றன.
    இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயியல் உடற் கூராய்வு (Pathological postmortem examination) பரிசோதனை இத்தகைய தீர்மானத்திற்கு மிக இலகுவில் உதவும். இந்த நிலையில் இவ்வகையான மரணங்கள் எதனால் ஏற்பட்டது என தீர்மானிப்பது ஓர் விஞ்ஞான ரீதியான செயற்பாட்டினை கொண்டிருக்காது. மேலும் இவ்வாறு மரணம் ஏற்பட்ட காரணத்தினை மாற்றி அமைக்க முடியும். சில உலக நாடுகள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களை இவ்வாறு மாற்றி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே உள்ள படத்தில் இருந்து கொரானாவினால் நாடப்பட்ட நோய்களை உடையவர்கள் எவ்வாறு தீவிரமான முறையில் தாக்கத்திற்கு உட்பட்டார்கள் என்பதினை அறிந்துகொள்ளலாம்
  1. PCR பொசிட்டிவாக உள்ள நோயாளி ஒருவர் தற்கொலை செய்து அல்லது விபத்தின் பொழுது அல்லது மனிதர்களின் தாக்குதலின் பொழுது இறப்பாராயின், அவ்வகையான மரணங்கள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களாக கொள்ளப்பட மாட்டாது.
  2. இலங்கையில் ருக்கும் முதியவர் ஒருவர் தனது வசிப்பிடத்தில் இயற்கையான முறையில் (natural)மரணத்தினை தழுவினால் பெரும்பாலும் அவரது உடல் எதுவிதமான மரண விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் ஏதும் இன்றி அடக்கம் செய்யப்படலாம். இந்நிலையில் அவர் கோவிட் 19 தொற்றினால் மரணத்தினை தழுவினாரா என்பது குறித்து தீர்மானிக்க முடியாது. இலங்கையில் கடந்த சில தினங்களில் இவ்வாறு வசிப்பிடங்களில் மரணத்தினை தழுவிய ஒருசில முதியவர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலமே, அவர்கள் ஏன் இறந்தனர் என்பதினை அதாவது அவர்கள் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்திற்கு உட்பட்டு இறந்தனர் என்பதினை கண்டு பிடிக்க முடிந்தது.
  3. மேலும் இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை மூலம் கோவிட் 19 வைரசுவின் தொற்றுக்கு உள்ளவர்களை வினைத்திறனான முறையில் அடையாளம் காண முடியாது. இப்பரிசோதனை மூலம் மூன்றில் இரண்டு பங்கு நோயாளரினை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாக இருந்தாலும் அதாவது நோயாளிக்கு கோவிட் 19 வைரசுவின் தாக்கம் இல்லை என்றாலும் அவர்களின் உடல்கள் தனிமைப்படுத்தற் சட்டத்தின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான காரணங்களினால் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை மிக சரியான முறையில் கணிப்பிட முடியாது உள்ளது என்பதே உண்மை ஆகும். முற்றும்

மோட்டார் சைக்கிளோட்டி தீயில் கருகியது ஏன்?

அண்மையில் முள்ளியவளைப் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் தீயில் முற்றாக கருகி மரணம் அடைந்தது பலரும் அறிந்ததே. இச்சம்பவத்தில் 21 வயதான ஒருவரே பரிதாபகரமான முறையில் பலியானவர் ஆவார் .

மேலே உள்ள படங்களில் பெற்றோல் எவ்வாறு பரவி தீப்பிடித்தது என்பதனையும் பெற்றோல் தாங்கியின் மூடி பல மீற்றர் தூரத்தில் காணப்படுவதினையும் காணலாம்.

அவர் விபத்துக்குள்ளான சீன தயாரிப்பான மோட்டார் சைக்கிளினை ஒருசில மணித்தியாலங்களுக்கு முன்னரே இன்னொரு நபரிடம் இருந்து கொள்வனவு செய்த நிலையிலேயே விபத்து ஏற்பட்டது. இனி விடயத்திற்கு வருவோம், எவ்வாறு மோட்டார் சைக்கிளில் தீ பற்றியது? இளைஞன் மோட்டார் சைக்கிளினை செலுத்திய பொழுது முன்னே சென்ற உழவு இயந்திரத்தின் பெட்டியில் மோதி வீதியில் கீழே சரிந்து வீழ்ந்தான். அந்த மோட்டார் சைக்கிளில் பெற்றோல் தாங்கியின் மூடி இறுக்க மூடாதபடி பழுதடைந்திருந்தது, இது தவிர தாங்கியில் கணிசமான அளவு பெற்றோல் இருப்பில் இருந்தது (அண்ணளவாக 4L தொடக்கம் 5L ). இதன் காரணமாக சரிந்து வீழ்ந்த இளைஞன் மீதும் வீதியிலும் பெற்றோல் சிந்தியது. மேலும் அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த புளக் இற்கும் பாதுகாப்பு கவசம் போடப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக ஒருசில செக்கன்களில் தீயின் நாக்குகள் அவனை சூழ்ந்து கொண்ட நிலையில் அவனால் தப்பி ஓட முடியவில்லை. பரிதாபகரமான முறையில் மரணத்தினினை தழுவினான். கீழே உள்ள படங்களில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பற்ற முறையில் மற்றும் பாதுகாப்பான முறையில் அமைந்த plug இணை நாம் காணலாம்

எம்மில் பலருக்கு நாம் செலுத்தும் மோட்டார் சைக்கிள் எப்பொழுது, எவ்வாறான சந்தர்ப்பங்களில் தீப்பற்றும் என்பது பற்றி தெரியாது. அவற்றில் சிலவற்றினை பார்ப்போம்.

  1. மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அல்லது சீற்றின் அடியில் நாம் பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற இலகுவில் தீப்பற்றும் திரவங்களை கொண்டு செல்லும் பொழுது அவை கசிவடைந்தது சூடான என்ஜின் மீது அல்லது சைலன்சரின் மீது விழும் பொழுது.
  2. சிலவகை மோட்டார் சைக்கிளில் காபரேட்டறில் தங்கும் மேலதிக பெற்றோலினை வெளியேற்றும் குழாய் மோட்டார் சைக்கிளின் பிளக் இற்கு மிக அருகாமையில் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளின் அக்ஸிலேட்டரினை அதிகம் முறுக்கி சடுதியாக குறைக்கும் பொழுது தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
  3. அதி வேகமாக செல்லும் பொழுது ஏற்படும் விபத்துகளின் பொழுது சில சந்தர்ப்பங்களில் பெற்றோல் தாங்கியில் இருந்தது இன்ஜினீற்கு பெற்றோலை கொண்டு செல்லும் குழாய் கழன்று விடுவதன் காரணமாக பெற்றோல் இன்ஜின் மீது சிந்தி தீ விபத்து ஏற்படுகின்றது.
  4. பாதுகாப்பு கவசம் அற்ற புளக் உள்ள மோட்டார் சைக்கிளினை நிறுத்தாது பெற்றோல் தாங்கியில் பெற்றோல் நிரப்பும் சந்தர்ப்பங்களில்.
  5. அரிதாக மோட்டார் சைக்கிளில் ஏற்படும் மின் ஒழுக்கின் காரணமாகவும் தீ விபத்து ஏற்படலாம்
    முற்றும்

யானையா? கரடியா?

அண்மைக்காலங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காட்டு விலங்குகளின் தாக்குதலினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அண்மையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறு காட்டு விலங்கு ஒன்றின் தாக்குதலினால் இறந்த ஒருவரின் உடலமானது மீட்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஊடகங்கள் அவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகியே மரணித்ததாக செய்திகளை வெளியிட்டன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது அவரின் உடலில் ஏற்பட்ட காயங்களை அடிப்டையாகக் கொண்டு அவர் யானையின் தாக்குதலினாலேயே இறந்ததாக முடிவெடுக்கப்பட்டது.
இப்பொழுது என்னதான் பிரச்சனை? யானையோ அல்லது கரடியோ தாக்கி ஒருவர் உயிர் இழந்துவிட்டார், இனி அதனை கதைத்து அல்லது ஆராய்ந்து என்னதான் பிரயோசனம் ? இவ்வாறு ஆராய்ந்து எந்த விலங்கின் தாக்குதலினால் இறந்தார் என கண்டறிந்தால் மட்டுமே நாம் மேலும் இவ்வாறான விலங்குகளின் தாக்குதல்களினை தடுக்க முடியும். ஒவ்வோர் விலங்குகளின் தாக்குதல்களையும் தடுப்பதற்கான வழிமுறைகள் தனித்துவமானவை. இலங்கையின் நடைமுறையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறு ஒருவர் காட்டு விலங்கின் தாக்குதலினால் இறப்பார் எனில் அவரது மரணம் சம்பந்தமாக மரண விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு உடற் கூராய்வு பரிசோதனையும் மேற்கொள்ளபட வேண்டும்.

Animals attack human | Scary animals, Animal attack, Funny elephant


பொதுவாக யானை ஆனது பொதுவாக மனிதனை தனது தும்பிக்கையினால் தூக்கி எறியும் அல்லது தூக்கி அடிக்கும் அதன் பின்னர் காயம் அடைந்திருக்கும் மனிதனை கால்களினால் தூக்கி மிதிக்கும், இதன் காரணமாக இறந்த மனிதனில் ஏற்படும் காயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட விலா எலும்புகளில் ஏற்படும் முறிவு (multiple rib fracture) கை மற்றும் கால்கள் போன்ற (long bone fracture) அவயவங்களில் ஏற்படும் எலும்பு முறிவு, முள்ளந்தண்டில் ஏற்படும் (compression/burst fracture) எலும்பு முறிவு மற்றும் உடல் உள் அங்கங்களில் ஏற்படும் மிக மோசமான சிதைவுகள் (including acceleration and deceleration injuries) போன்றன மூலம் ஓர் திறமையான சட்ட வைத்திய வைத்திய அதிகாரி இனம் கண்டுகொள்ளவர்.

UPDATE: Russian man 'in bear attack' was actually Kazakhstani suffering  from severe psoriasis | Daily Mail Online

கரடியின் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் மேற்குறித்த வகையான காயங்கள் காணப்படாது. இறுதியாக இவ்வாறான உடற்கூராய்வு பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தி இவ்வாறு விலங்குகளினால் ஏற்படும் உயிர் இழப்புக்களினை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முற்றும்

மலசலகூடத்தில் தீ!!!

நாம் அன்றாடம் பாவிக்கும் மலசக்கூடத்தினை பல்வேறுபட்ட சுத்தம் செய்யும் திரவங்கள் (toilet cleaner ) மற்றும் தொற்று நீக்கிகள் (Disinfectant) கொண்டு சுத்தம் செய்வோம். எம்மில் பலர் அதில் அடங்கியிருக்கும் இரசாயணப் பதார்த்தங்களின் தீங்கு விளைவிக்கும் தன்மை பற்றி அறிவதில்லை.
எம்மில் பலர் மலசக்கூடத்திற்கு சென்று மறைந்து இருந்து தான் சிகரெட்/ பீடி அல்லது சுருட்டினை புகைப்பார்கள். பலருக்கு இவ்வாறு புகைத்தால் தான் இலகுவாக மலம் கழிக்க முடியும் என்பது வேறுவிடயம். இன்னும் சிலர் பொது மலசல கூடங்களை பாவிக்கும் பொழுது புகைப்பிடிப்பர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த மலசல கூடங்கள் அதிக நாற்றம் அடிக்கின்றமையே என்பதாகும். எது எவ்வாறு எனினும் பலர் புகைப்பிடித்த பின்னர் மீதமுள்ள சிகரெட் துண்டினை மலசல கூடத்தில் வீசியெறிவார்கள் அல்லது அதன் யன்னல் ஓரத்தில் எவ்வித பிரயோசனமும் இன்றி சேமித்து வைப்பார்கள்.
இவ்வாறே மலசல கூடங்களினை சுத்தம் செய்ய பயன்படுத்திய திரவங்கள் அடங்கிய போத்தல்களை மலசலகூடத்தின் உள்ளே ஓர்மூலையில் அல்லது கொமட்டின் நீர்த்தொட்டியின் மேற்புறத்தில் சேகரித்து வைப்பார்கள். அவர் 75 வயது நிரம்பிய முதியவர், அவரும் அவ்வாறே தனது பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய இவ்வாறான போத்தல்களை பாவித்து பாதி, பாவிக்காதது பாதி என்ற வகையில் மலசலகூடத்தின் உள்ளே ஓர்மூலையில் சேகரித்து வைத்திருந்தார். புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய அவர் அன்றும் வழமைபோல் மலசக்கூடத்தில் அமர்ந்து இருந்து புகைப்பிடித்த பின்னர் எஞ்சிய துண்டினை இவ்வாறான போத்தல்கள் இருக்கும் பகுதியில் வீசி எறிந்தார். உடனே பாரிய சத்தத்துடன் வெடிபோசையினை தொடர்ந்து அப்பகுதி பற்றி எரிய ஆரம்பித்தது. அவர் சுதாகரித்து வெளியேறுவதற்கு முதல் தீயின் நாக்குகள் அவரின் உடலினை பதம் பார்த்தன. உடல் 90% மேல் எரிந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவர் ஒருசில மணித்தியாலங்களில் மரணத்தினை தழுவிக்கொண்டார்.
நாம் பொதுவாக மலசல கூடங்களினை சுத்தம் செய்ய பாவிக்கும் திரவங்கள் தீப்பற்றும் தன்மை அற்றவை. ஆனால் சில வகை திரவங்கள் உலோகத்தினால் ஆன போத்தலில் சாதாரண முறையில் அல்லது உயர் அமுக்கத்தில் அடைக்கப்பட்டிருக்கும். இவ்வகையான போத்தல்களில் காலாவதி திகதி கடக்கும் பொழுது அவரின் உட்புறத்தில் இருக்கும் பூச்சு தானாகவே சிதைவடையும் அதன் காரணமாக உள்ளே இருக்கும் திரவம் உலோக போத்தலில் தொடுகையுறும் இதன் பொழுது ஏற்படும் இரசாயன தாக்கத்தின் பொழுது ஐதரசன் வாயு வெளியேறும் அது அப்போத்தலின் உள்ளே அதிக அமுக்கத்திலும் செறிவிலும் இருக்கும் மேலும் வெளிச்சூழலில் குறைந்த செறிவில் இருக்கும். இவ்வாறான நிலையில் நாம் வீசும் எரிகின்ற தீக்குச்சி அல்லது சிகரெட் துண்டு காரணமாக ஐதரசன் வாயு வெடித்தலுடன் பற்றி எரியும்.

wp-15909101002041942161585125582994.jpg

wp-1590910099953527957138435014007.jpg

மேலுள்ள படத்தில் இவ்வாறு தீப்பற்றி எரிந்த இடத்தினை காணலாம். கொமட்டின் நீர்த்தாங்கியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்து எவ்வாறு தீச்சுவாலை வீசியது என்பதினை தெளிவாக நாம் பார்க்கலாம்.
புகைத்தலை கைவிடும்படி சொன்னால் யார்தான் கேட்கப்போகின்றனர் எனவே நாம் இவ்வாறான போத்தல்களினை மலசலகூடத்தின் வெளிப்புறத்தில் சேமித்து வைப்பதன் மூலம் இவ்வாறான விபத்துக்களை தடுக்கலாம்.
முற்றும்

தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம்!!

இணையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் பதிவினை வாசிக்க நேர்ந்தது அதன் சாராம்சம் யாதெனில் தற்கொலை செய்பவர்கள் தாங்கள் தற்கொலை செய்ய முதல் அது சம்பந்தமாக ஓர் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்பதே அதாவது ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய நினைப்பவர்கள், அந்த நஞ்சினை ஓர் முறை அருந்தினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு பட்ட சிகிச்சைகள் வழங்கப்படும். உதாரணமாக வாயின் ஊடக இறப்பர் குழாய் ஒன்றினை உட் செலுத்தி பலவந்தமாக வாந்தி எடுக்க வைப்பார்கள். இவ்வாறு ஒவ்வோர் செயன் முறையின் பொழுதும் மற்றும் நஞ்சின் தாக்கத்தினால் அவர்கள் வேதனைப்படுவார்கள். இதன்காரணமாக அவர்கள் எதிர் காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தினை கைவிட்டு விடுவார்கள் என்பதே அப்பதிவின் சாராம்சம்.
பலர் தாங்கள் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டலில் ஈடுபடும் பொழுதுதான் தவறுதலாக இறக்கின்றனர், என்பது பலருக்கு தெரியாத விடயம். சட்ட வைத்திய அதிகாரிகள் தமது கடமையின் பொழுது இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மரணத்தின் விளிம்பில் இருக்கும் நோயாளிகளிடம் உதாரணமாக நஞ்சு அருந்தியவரிடம் அல்லது தீயில் எரிந்து குற்றுயிராக இருப்பவரிடம், மரண வாக்குமூலத்தினை (Death declaration) பதிவார்கள். அப்பொழுது பலரும் சொல்லும் விடயம், சேர் “நான் மனைவியினை/ கணவனை/ பெற்றோரினை பயமுறுத்தவே செய்தென், தயவு செய்து காப்பாற்றி விடுங்கள்” என்பதே ஆகும். ஆனால் அது காலம் கடந்த ஞானமாகவே இருக்கும். மேலும் தற்கொலை செய்பவர்களின் உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது தற்கொலை செய்து இறந்தவரின் கணவன்/ மனைவி/ பெற்றோர் கூறுவது யாதெனில் இறந்தவர் பயமுறுத்தவே இவ்வாறு செய்தார் என்பதாகும்.

Inkedviber_image_2020-07-27_20-59-10_LI

மேலுள்ள படத்தில் உள்ள நபர் தனது வெளிநாட்டில் உள்ள காதலியினை பயமுறுத்த தொலைபேசியில் வீடியோ அழைப்பினை எடுத்த வண்ணம் தற்கொலை முயற்சி செய்த பொழுது சுருக்கு கயிறு இறுகி தவறுதலாக இறந்தார். மேலும் நாம் நஞ்சினை அருந்தும் பொழுது சாதாரண மக்களுக்கு குறித்த நச்சின் மனிதனை சாகடிக்கும் அளவு ( Lethal dose) தெரியாது. அதன் காரணமாக அதிகளவு அருந்தலாம் மேலும் சில நச்சுகள் மிக சிறிதளவு அதாவது ஒரு சில மில்லி லிட்டர் அருந்தினாலே மனிதனை சாகடித்து விடும். அத்துடன் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர் தப்பியவர்கள் பிற்காலத்தில் பல்வேறுபட்ட நோய் நிலைமைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
நாம் மற்றவர் மீதுள்ள கோபத்தில் மற்றும் மன வெறுப்பில் இவ்வாறு மற்றவர்களை பயமுறுத்த தற்கொலை முயற்சி செய்வது பல சந்தர்ப்பத்தில் நிஜமாகி விடுவது உண்மையே. எனவே எம்மிடம் தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி அறவே வேண்டாம்.
முற்றும்

5G தொழில்நுட்பம் உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

கடந்த வாரத்தில் யாழ் நகரில் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் ஒன்றினால் தொலைத்தொடர்பாடல் துறையில் 5G தொழில் நுட்பத்தினை இலங்கையில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் சிறிய தொலைத்தொடர்பு கோபுரங்களான ஸ்மார்ட் போல் (Smart pole )பலவற்றினை நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து வலைத்தளங்களிலும் மற்றும் ஊடகங்களிளும் இத்தொழில் நுட்பம் ஆனது உடல் நலத்திற்கு மிக்க கேடானது எனவும் சிட்டு குருவிகள் உட்பட பல்வேறு உயிரிகள் அழிவடையும் எனவும் பிரச்சாரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான உண்மை நிலையினை வெளிக்கொணர்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

  1. 5G தொழில் நுட்பத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவதன் காரணம் என்ன?

தற்பொழுது உலகத்தில் மற்றும்  உள்ள பெரும்பாலான கைத்தொலைபேசி பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட் தொலை பேசியுடாக இணையத்தளத்தினை பாவிக்கின்றனர் இது தவிர பலர் கம்பியூட்டர், டேப் மற்றும் ஸ்மார்ட் டிவி  போன்ற சாதனங்களின் ஊடாகவும் இணையத்தளத்தினை பாவிக்கின்றனர். இதன் காரணமாக இணைய வேகம் குறைவடைந்துள்ளது. மேலும் தற்பொழுது பாவனையில் உள்ள தொழில் நுட்பத்தினால் குறைந்த நேரத்தில்  அதிக  தரவுகளை பரிமாற முடியாது, அதாவது அதிக வேகத்தில் தரவுகளை பரிமாற முடியாது. உதாரணமாக high definition (HD) வீடியோ ஒன்றினை தரவிறக்கம் செய்ய தற்பொழுது உள்ள தொழில் நுட்பத்தில் (4 LTE ) ஏறத்தாழ 10 நிமிடங்கள் செலவாகும் அதேவேளை 5G தொழில் நுட்பத்தில் ஓரிரு செக்கன்கள் போதுமானது. மேலும் எதிர்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ள சாரதியற்ற வாகனங்கள் போன்றவற்றிக்கும் மேலும் ஒன்லைன் மூலம் வீடியோ கேம் போன்றவற்றினை விளையாடவும்  இத்தொழில் நுட்பம் அவசியமானது. எனவேதான் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G தொழில் நுட்பத்தினை அறிமுகப் படுத்துகின்றன.

2. 5G தொழில் நுட்பத்தில் அதி சக்திவாய்ந்த கதிர்வீச்சு பயன்படுத்த படுவதால் உடல் நலத்திற்கு தீங்காக அமையுமா?

முதலில் 5G  தொழில் நுட்பத்திற்கும் தற்பொழுது பாவனையில் உள்ள 4 LTE  தொழில்நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். தற்பொழுது கைத்தொலைபேசிகள் 6GHz வரையிலான அதிர்வெண்ணிலேயே தொழில் படுகின்றன. அவை உண்மையிலே ரேடியோ அலைகள் ஆகும் (Radio waves ) அத்துடன் அவற்றின் அலைநீளம் 1 தொடக்கம் 10 வரையான சென்றி மீட்டர்லியே இருக்கும் . ஆனால் இந்த 5G தொழில் நுட்பத்தில் 60 GHz தொடக்கம் 300 GHz வரையான அதிர்வெண்ணில் தொலைத்தொடர்பு சாதனங்கள் தொழில்ப்படும், இங்கு அவற்றின் அலைநீளம் 1 தொடக்கம் 10 வரையான மில்லிமீட்டர்கள் ஆகும் (10 மில்லிமீட்டர் ஆனது 1 சென்டிமீட்டர் ஆகும்). 5G தொழில் நுட்பத்தில் பயன்படும் அலைகள் நுண் அலைகள் (micro waves) ஆகும். இனி இந்த அலைகளின் அதிர்வெண்ணிற்கும் அலைநீளத்திற்கும் மற்றும் அலைகள் கொண்டுள்ள சக்தியிற்கும் இடையிலான தொடர்பினை கீழ் வரும் இரு படங்கள் மூலம் விளங்கிக்கொள்வோம்.

emspectrum

image007

இதன் பிரகாரம் 5G தொழில் நுட்பத்தில் பயன்படும் நுண் அலைகள் மிகவும் சக்தி குறைந்தவை, இவற்றினால் மனித உடலை ஊடுருவ முடியாது. மேலும் இவை அயனாக்கும் கதிரியக்க தாக்கம் (non ionizing radiation) அற்றவை இதனால்  மனித தோலினால் அகத்துறிச்சப்பட்டாலும் மனித கலங்களில் மாற்றங்களினை உண்டுபண்ணாது புற்று நோய் மற்றும் குறைந்த வயதில் அதிக வயதான தோற்றம் போன்றவற்றினையும்  உண்டு பண்ணாது.

3. 5G தொழில் நுட்பத்திற்காக நடப்படுள்ள சிறிய தொலைக்கோபுரங்களில் ( Smart Pole) மின்சார விளக்குகள்மற்றும் CCTV கமராக்கள் பொறுத்தப்படுவது எதற்காக?

உண்மையில் இக்கோபுரங்கள் பல்வேறுபட்ட பயன்பாட்டிற்காக வடிவமைக்க பட்டுள்ளது. இக்கோபுரத்தின் தேவைக்கான மின்சாரம் சூரிய சக்தி மூலமே பெரும்பாலும் நிவர்த்தி செய்யப்படும். இதனை பொருத்துவது தனியார் நிறுவனம் ஒன்று என்பதால் அது தனது சமூக நல அக்கறையினை (Social Responsibility) இவ்வாறு வெளிப்படுத்துகின்றது இதன்மூலம் அவர்கள் வாடிக்கையாளரிடம் நன்மதிப்பினை பெறவும் சில சந்தர்ப்பங்களில் வரிவிலக்கு பெறவும் முற்படுவர்.

facebook_15624903597782903980296794663964.jpg

4. இன்றும் சில நாடுகள் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் தொலைத்தொடர்பு உபகரணங்கள் உடன் நெருங்கி நீண்டகாலம் பழக வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் விடுகின்றனவே?
தற்பொழுது பாவனையில் உள்ள கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் கோபுரங்கள் யாவும் அயனாக்கம் அற்ற கதிரியக்கக்திலேயே தொழில் படுகின்றன மேலும் முக்கியமாக 5G தொழில் நுட்பமும் அயனாக்கம் அற்ற கதிரியக்கக்திலேயே தொழில் படுகின்றன இதனால் இவ்வகையான அலை வீச்சினால் மரபணுக்களில் அல்லது கலங்களில மாற்றத்தினை உண்டு பண்ண முடியாது. ஆனால் கைத்தொலை பேசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து கிட்ட தட்ட 30 வருடங்கள் தான் ஆகின்றன. இவை அனைத்தும் ஆபத்தற்ற அலைவீச்சில் செயற்பட்டாலும் நீண்ட காலப்போக்கில் அவற்றின் விளைவுகள் யாரும் அறியாததே . அதாவது நச்சியலில் ஓர் கோட்பாடு உண்டு நஞ்சு தன்மை குறைந்த பதார்த்தம் ஒன்றினை மனிதனுக்கு கொடுத்ததால் உடனடியாக மரணம் (low toxicity with high exposure) சம்பவிக்காது ஆனால் நீண்ட காலப்போக்கில் தொடர்ந்து சிறிய அளவில் கொடுத்தால் உடல் நல கேடுகள் அல்லது மரணம் நிகழலாம். இதனை கருத்தில் கொண்டே வருங்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில் சில நாடுகள் இதனை செய்கின்றன.

5. 5G தொழில் நுட்பம் உலகில் ஏற்கனவே எந்த நாடுகளில் உள்ளது?
5G தொழில் நுட்பம் தென் கொரியா போன்ற பல்வேறு நாடுகளில் ஒருசில ஆண்டுகளாக பாவனையில் உள்ளது. இது யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக பரீட்சார்த்த முறையில் செய்ய படவில்லை.

5g-map-worldtimezone.gif

6. ஆதாரமற்ற குற்ற சாட்டுகள் தான் காரணமா?
அறிவியல் பூர்வமாக அமையாத செய்திகள் மற்றும் ஆராய்ச்சிகள், மேலும் தனிநபர் விருப்பு வெறுப்புகள் தான் பெரும் பாலும் இவ்வாறான செய்திகளுக்கும் ஆர்ப் பாட்டகளுக்கும் காரணம். உதாரணமாக கிழே உள்ள யாழ் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியினை கவனமாக வாசிக்கவும்

facebook_1562490313167927008833727626680.jpg

இங்கு யார் அந்த வைத்தியர்? அவர் எந்த துறையில் பாண்டித்தியம் பெற்றவர்? அவர் எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? ஏதாவது அறிவியல் ஆதாரம்? என்று ஒன்றும் குறிப்பட வில்லை. இவை உண்மையில் பாமர மக்களை திசை திருப்பும் செயன்முறை ஆகும்.

முற்றும்

ஆபத்தான எருக்குவியல்

நேற்றுமுன்தினம் வவுனியாவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றில் எருக்குவியல் ஒன்றின் மீது இருந்த இளைஞர் ஒருவர் சடுதியாக மூச்சு திணறலுக்கு உட்பட்ட நிலையில் உயிரிழந்தார். எமது மக்களில் பலருக்கு ஏன் அவர் இறந்தார் என்பது பற்றிய போதிய அளவு விளக்கம் இல்லை. மிக அண்மைக்காலத்தில் கூட வவுனியாவில் நகரசபைக்கு சொந்தமான கொல்களத்தில் கழிவுகளை அகற்றும் பொழுது வெளியேறிய விஷவாயுவினை சுவாசித்த நிலையில் 04 இளம் குடும்பத்தலைவர்களான தொழிலாளர் இறந்தனர். மக்களிற்கு இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவின்மை மற்றும் உரிய நிர்வாக தரப்புக்கள் இது சம்பந்தமாக தொழிலாளருக்கு அறிவூட்ட அலட்சியம் காட்டுகின்றமை போன்றவற்றினால் இத்தகைய முற்றாக தவிர் படக்கூடிய இறப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பொதுவாக விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகள் என்பன உக்கி அழிவடையும் பொழுது பல்வேறுபட்ட வாயுக்கள் இயற்கையாகவே வெளியேற்றபடும். உக்கி அழிவடைதல் (Decomposition) என்ற செயற்பாடு உலகில் இயற்கை சமநிலையினை பேண மிகமுக்கியமானதொன்றாகும். இவ்வாறு நடைபெறும் பொழுது பல நச்சு (Toxic)மற்றும் நச்சு அல்லாத வாயுக்கள்(non toxic) வெளியேற்றப்படும்.

Cow Dung Manure Powder, Packaging Size: 50kg, Rs 12 /kg Bandekar Agro Farms  | ID: 22037146655

முதலில் எருக்குவியலில் இருந்து வெளிவரும் எவ்வாறான வாயுக்கள் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என பார்ப்போம்.
1. ஹைட்ரஜன் சல்பைட்
அழுகிய கூழ் மூட்டை மணம் உடைய வாயு ஆகும். இது சாதாரண வளியினை விட பாரம் கூடியது என்பதினால் எருக்குவியலின் மேற்பரப்பில் அதிக செறிவில் காணப்படும். அத்துடன் ஒருவர் தொடர்ந்து அதிக செறிவில் இவ்வாயுவினை சுவாசிக்கும் பொழுது அவரது மணத்திற்குரிய நரம்புகள் செயல் இழக்கும் இதன்காரணமாக அவர் தன்னை அறியாமலே தொடர்ந்து இவ்வாயுவினை சுவாசிப்பர். மேலும் இவ்வாயு சுவாசத்தொகுதி மற்றும் கண்கள் போன்றவற்றில் எரிவினை ஏற்படுத்தும். இவ்வாயு மனிதனின் இரத்தத்தில் நேரடியாக இணைந்து கல சுவாச செயற்பாட்டினை பாதிக்காவிடினும் மூச்சு திணறலினை ஏற்படுத்தி இறப்பினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாயுவினை தொடர்ந்து சுவாசிப்போர் களைப்பான மயக்க நிலைக்கு செல்வதினால் அவர்களினால் ஆபத்தில் இருந்து வெளியேற முடிவதில்லை.
2. அமோனியா
மிகவும் காரமான மனமுடைய வாயு இதுவாகும். இதுவும் மனிதனின் சுவாசத்தொகுதி மற்றும் கண்ணில் கடுமையான எரிவினை ஏற்படுத்தும்.
3. கார்பன் டயோக்சிட்
இவ்வாயுவானது சாதாரண வளியினை விட பாரம் கூடியது என்பதினால் எருக்குவியலின் மேற்பரப்பில் அதிக செறிவில் காணப்படும் அத்துடன் இது மணம் அற்றது. மேலும் இது சூழலில் உள்ள ஓட்ஸிசனின் அளவினை குறைத்து மூச்சுத்திணறலினை ஏற்படுத்தும்.
4. மீதேன்
இதுவும் மணம் அற்ற வாயு ஆகும் அத்துடன் இது இலகுவில் தீப்பற்றி எரியும் தன்மை உடையது. எனவே தான் எருக்குவியலிற்கு அருகில் செல்லும் பொழுது சுருட்டு அல்லது பீடி போன்றவற்றினை புகைத்தல் தீ விபத்து ஆபத்தினை ஏற்படுத்தும்.

இங்கு குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஏருக்குவியலின் மேல் ஏறி அமர்ந்து இளைப்பாறியுள்ள நிலையிலேயே மூச்சு திணறலுக்கு உள்ளாகி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஈறுக்குவியலின் மேற்பரப்பில் தான் மேற்குறித்த நச்சு மற்றும் மனிதனின் சுவாசத்திற்கு உதவாத வாயுக்கள் அதிக செறிவில் காணப்படும் இதனால் அவற்றினை அவன் அதிக அளவில் சுவாசித்திருக்க நேர்ந்திருக்கலாம். மேலும் பலமாதங்களாக இருந்த எருக்குவியலின் உள்ளே தோன்றிய வாயுக்கள் அடைபட்டு ஓர் சமநிலையில் இருந்திருக்கும் இவ்வாறு ஏறி அமரும் பொழுது உள்ளே இருந்த வாயுக்கள் வெளி அழுத்தம் காரணமாக அதிகளவில் வெளியேறி உயிர் ஆபத்தினை விளைவிக்கும்.

                                                                 முற்றும்

 

மலவாசலில் போதை …..

நவீன உலகில் பல்வேறு சந்தர்ப்பங்களில்  மனிதர்கள் தமது உடலில் போதைப்பொருளினை மறைத்து வைத்து கடத்தும் பொழுது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக நாம் அறிந்திருக்கின்றோம். எம்மில் கூட பலர் இதனை செய்திருக்கின்றனர், ஆனால் இதனால் உடலிற்கு ஏற்படும் பாதக விளைவுகள் பற்றி நாம் அறிவதில்லை. இதனை செய்பவர்களின் நோக்கமே தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கடத்துவதன் மூலம் பணம் ஈட்டுவதுதான். மிக அரிதாகவே கடத்துபவர்கள் அந்த போதைப்பொருளினை பாவிப்பார்கள். இவர்கள் பொதுவாக மலவாசல், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பு (Vaginal canal) , இரைப்பை போன்றவற்றில் மறைத்து வைத்து கடத்துவார்கள். இவர்கள் இதற்கென வடிவமைக்கப்பட்ட கொள்கலங்களை அல்லது விசேட ரப்பர் வகையினை (multilayered latex, rubber or condoms) பாவிப்பர். பொதுவாக ஆணுறைகளில் போதை மருந்தினை இறுக்க கட்டி முடிந்தபின்னர் அதனை விழுங்கியோ அல்லது மலைவாசலில் செருகியோ கடத்துவர். பொதுவாக வறிய மக்களே இவ்வாறு பணத்திற்காக போதை மருந்தினை கடத்துவார்கள். இவர்களில் பலவகையினர் உள்ளனர்
1. body packers – இவர்கள் உடலில் உள்ள எந்தவோர் துவாரத்தில் போதை மருந்தினை அடைத்து மறைத்த நிலையில் அல்லது வாயின் மூலம் விழுங்கிய நிலையில் குறித்த தடை செய்யப்பட்ட போதைப்பொருளினை கடத்துவர்.
2. body stuffers – இவர்கள் தமது உடைமையில் தடை செய்யப்பட்ட போதை மருந்தினை வைத்திருந்து கடத்துவர். இவர்கள் போலீசாரிடம் அல்லது சுங்க அதிகாரிகளிடம் மாட்டுப்படும் பொழுது சடுதியாக அப்போதைப்பொருளினை விழுங்கி விடுவார்கள் அல்லது மலைவாசலில் செருகி விடுவார்கள் . இவர்கள் மிகவும் மருத்துவ ரீதியாக ஆபத்தினை எதிர்நோக்குவர் ஏனெனில் அவர்கள் போதைப்பொருளினை தகுந்த முறையில் பொதிசெய்வதில்லை, இதன் காரணமாக போதை மருந்தானது அதிகளவில் உடலில் சேர்வடையும் (intoxication)
இனி இவர்களில் இந்த செயற்பாடானது உடலியல் ரீதியில் எவ்வாறான தாக்கங்களினை ஏற்படுத்தும் என பார்ப்போம்
1. குடலில் ஏற்படும் அடைப்பு (intestinal obstruction) – இவர்கள் விழுங்கும் போதைப்பொருட்கள் அடங்கிய பொதி மனித சமிபாட்டுத்தொகுதியில் எந்தவொரு இடத்திலும் பௌதிக ரீதியில் அடைப்பினை உருவாக்கி, இறப்பினை ஏற்படுத்தக்கூடும்.
2. சடுதியான நஞ்சாதல் (intoxication) – இவர்கள் விழுங்கும் போதைப்பொருட்கள் அடங்கிய பொதி ஆனது சமிபாட்டுத்தொகுதியில் வெடிக்கலாம், இதன் காரணமாக பொதியிலிருந்த போதைப்பொருட்கள் சமிபாட்டுத்தொகுதியில் விடுவிக்கப்பட்டு சடுதியாக உடலினுள் உறிஞ்சப்படும். இச்செயற்பாடு காரணமாக கோமா அல்லது இறப்பு ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் போதைப்பொருளானது சிறிதளவில் உறிஞ்சப்படும் இதனால் பொதியில் இருந்த போதைப்பொருளின் தன்மைக்கு ஏற்ப நோயாளி பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாவர். இவ்வாறான நோய் நிலைமை body packers syndrome என்று மருத்துவத்தில் அழைக்கப்படும்.
3. பொதுவாக நீண்ட விமான பயணம் மூலம் கடத்தப்படும் பொழுது குடலில் இருந்து போதைப்பொதி வெளித்தள்ளப்படுவதினை குறைக்க பல்வேறுபட்ட மருந்து வகையினை பாவிப்பர். அதன் காரணமாக பல்வேறு பட்ட பக்க விளைவுகளுக்கு உள்ளாவர்.

இவ்வாறு போதை மருந்துகளை கடத்துபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலான ஓர் விடயமாகும் ஏனெனில்
1. பொதுவாக இவ்வாறு மருந்துகளை கடத்துபவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது அவர்களுக்கு தாங்கள் என்ன வகையான போதை மருந்தினை கடத்தினார்கள் என்பது பற்றி தெரிவதில்லை.
2. கடத்தலை மேற்கொள்ள வைக்கும் நபர்கள் (முதலாளி) இது சம்பந்தமான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதில்லை.
3. மேலும் போதைப்பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் பெரும்பாலும் தூய நிலையில் போதைப்பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் ஓர் குறித்த போதைப்பொருளுடன் மற்றைய போதைப்பொருட்கள் மற்றும் பல்வேறுவகையான நோய்களிற்கு பாவிக்கும் மருந்துகளை கலப்பார்கள். இச்செயற்பாடு cutting என்றழைக்கப்படும். இதன் காரணமாக குறித்த ஓர் போதை மருந்திற்கென சிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொள்ள முடிவதில்லை.

Body packer imaged with plain films and CT. Upper (a) and lower (b)... |  Download Scientific Diagram

மேலுள்ள கதிர்ப்படத்தில் மனிதன் ஒருவனின் சமிபாட்டுத்தொகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் போதைப்பொருட்கள் இருப்பதனை நாம் காணலாம்.

body-packers-14-638

மேலுள்ள படத்தில் மனிதன் ஒருவன் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் போதைப்பொருட்களினை கடத்தும் பொழுது பொதியின் உறை வெடித்ததன் காரணமாக இறந்தான். இறந்த நிலையில் அவனது இரைப்பையில் போதை மருந்துகள் இருப்பதனை மேற்படி படம் காட்டுகின்றது.
முற்றும்

துகில் உரியப்பட்ட சிறுமி

அன்று வழமைபோல் அந்த 10 வயது சிறுமி தனது வீட்டின் முன்னால் மற்றைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பொழுதுதான் அந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் அவளுக்கு தெரிந்த நபர் ஒருவரினால் அவள் தந்திரமான முறையில் தூர அழைத்து செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாள். அந்த காமுகனிடம் இருந்த தப்பிய சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை தாயிடம் சொன்னாள். உடனே அவளின் தாய் நீ ஏன் வெளியில் நின்று விளையாடினாய் என்று கேட்டவாறு வேலியில் நின்ற மரத்தின் கிளையினை முறித்து விளாசித்து தள்ளினாள். வேதனையில் துடித்த சிறுமி அழுதவாறே தூங்கிவிடடாள். சம்பவம் அறிந்து சிறிது நேரத்தில் வீடு திரும்பிய தகப்பன் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை திட்டியவாறே பெல்ட்டினால் பலதடவை விளாசினார். சம்பவம் அறிந்து அவளது வீட்டில் ஒன்றுகூடிய அவளது உறவினர்கள் எல்லோரும் அவளை திட்டி தீர்த்தனர். அவர்கள் அவளை சீரழித்தவன் பற்றி ஓர் வார்த்தை கூட பேசவில்லை. இதன் பின்னர் உறவினர் ஒருவர் அவளை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். முதலில் வந்த ஆண் போலீஸ் உத்தியோகத்தர் அந்த சிறுமியை நோக்கி கேட்டார் “உனக்கு இந்த வயதில் இது தேவையா?” என்று. அவளது மறுமொழி அழுகை மட்டுமே. அதனை தொடந்து அங்கு வந்த போலீஸ் நிலைய பெண் போலீசார் சிறுமியிடம் ஆதரவாக கதைத்து வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டனர், அதனடிப்படையில் சந்தேக நபர் உடனடியாகவே கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் போலீசார் சிறுமியையும் சந்தேக நபரினையும் ஒரு வாகனத்தில் ஏற்றி வைத்தியசாயில் அனுமதித்தனர். வாகனத்தில் செல்லும் பொழுது சிறுமி மிக பயந்தவாறே பிரயானித்தாள்.

The Secret of Sexual Assault in Schools - NEA Today

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தான் அவள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக நேர்ந்தது. வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர், ஊழியர்கள் அதன் பின்னர் விடுதியில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் அவளை கேள்வி கேட்டே துளைத்து எடுத்து விட்டார்கள். அவர்கள் அவளிடம் நடந்த சம்பவத்தினை கேட்டு விட்டு உனக்கு இது தேவை தானா? என்ற பாணியில் ஏசிவிட்டே சென்றார்கள். இறுதியாக சட்ட வைத்தியரின் அலுவலகத்திற்கு வருகை தந்த சிறுமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு பயந்த நிலையில் இருந்தாள். பலத்த சிரமத்தின் மத்தியிலேயே அவளிடம் வாக்கு மூலம் பெற முடிந்தது.
இன்றைய எமது சமூகத்தில் இவ்வாறு பாலியல் துஸ்பிரயோகத்தினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் மற்றும் பெண்களை குற்றவாளியாக பார்க்கும் மனோ நிலை வளர்ந்து வருகின்றது. படித்த வைத்தியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த மனோநிலை நிலவுகின்றது. உண்மையில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களே தவிர குற்றவாளிகள் அல்லர்.
மேலும் எம்மில் பலர் இவ்வாறான சம்பவங்களை கேட்டறிந்தது சுய இன்பம் அடைபவர்களாகவே இருக்கின்றனர். அத்துடன் பலர் ஒருசில அனுதாப வார்த்தைகளை கூட பேசுவதற்கு பின்னிற்கின்றனர். மேலும் ஒருசிலர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை சமூக, கலாச்சார மற்றும் சமய காரணங்களைக் காட்டி சமூகத்தில் குற்ற வாளியாகக் முற்படும் நிலை (Secondary victimization and victim-blaming) மிக மோசமான கலாச்சார சீரழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

                                                        முற்றும்