உயிர்பலி எடுத்த TAILGATING விபத்து

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளைப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த கார் விபத்தின் பொழுது எதிரே வந்த டிப்பர் வாகனத்தினுள் உள்நுழைந்தமையே அதிகளவான உயிர் சேதம் ஏற்பட காரணமாய் அமைந்தது. மேலும் விபத்துக்குள்ளான சிறிய வகையான காரில் உயிர் காக்கும் பலூன் இருக்கவில்லை அத்துடன் காரில் பயணித்த சிறுவர்களும் சீற் பெல்ட் அணிந்திருக்கவில்லை இதனாலும் உயிரிழப்புக்கான சாத்தியம் அதிகரித்தது. இவ்வாறு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் அல்லது குறைந்த வேகத்தில் பயணித்து கொண்டிருக்கும் உயரம் கூடிய வாகனம் ஒன்றின் பின்/முன் பகுதியில் உயரம் குறைந்த வாகனம் அல்லது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுவதினால் ஏற்படும் விபத்து tailgating என்று அழைக்கப்படும். இவ்வகையான விபத்துக்கள் பொதுவாக உயிர் இழப்பினை ஏற்படுத்தி விடுகின்றது. ஏனெனில் இங்கு பின்/முன் புறமாக மோதும் பொழுது உயரம் குறைந்த வாகனத்தில் அல்லது மோட்டார் சைக்கிள் உள்ளவர்களின் தலை, கழுத்து மற்றும் நெஞ்சு பகுதிகளில் அதிகளவு விசை நேரடியாக தாக்குவதினால் உள் அவயவங்களில் ஏற்படும் பாரிய காயங்களே காரணமாகும்.

(இவ்வாறான ஓர் விபத்தில் மரணித்தவரின் காயங்கள் – கோப்பு படங்கள்)

இவ்வகையான விபத்துக்கள் ஏற்படுவதினை தடுக்கும் அல்லது குறைக்கும் முகமாக பின்வரும் பாதுகாப்பு முறைமைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1. உயரமான வாகனங்களின் பின்புறத்தில் சிறிய உயரம் குறைந்த வாகனங்கள் உள் நுழையாத வாறு இரும்பு கேடர்கள் மற்றும் மர பலகைகள் மூலம் ஓர் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும்.wp-15803036192077022428843434983640.jpg
2. வாகனம் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது முழு நீளத்திற்கும் ஒளிரும் பட்டி இயங்கு நிலையில் இருக்கும்
3. வாகனம் பழுதடைந்த நிலையில் இரவில் வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் பொழுது பல மீற்றர் தூரத்திலேயே முக்கோண வடிவிலான எச்சரிக்கை குறியீட்டின் இனை வீதியில் நிறுத்தி வைப்பார்கள். இது இரவில் மினுமினுக்கும் தன்மை உடையதால் மற்றைய வாகன சாரதிகள் நிலைமையினை இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர்.

triangle danger sign vehicle accidentக்கான பட முடிவுகள்

மேலும் இவ்வகையான விபத்துக்கள் வீதிகளில் அசையும் வாகனங்களில் பின்வரும் சந்தர்ப்பங்களில் நடைபெறலாம்
1. ஆகக்குறைந்த தூரத்தினை (safe distance) பேணாது வாகனங்கள் பயணிக்கும் பொழுது. பயணிக்கும் வாகனம் ஒன்று விபத்தில்லாத வகையில் நிறுத்த தேவையான தூரமே safe distance எனப்படும். பின்னே செல்லும் வாகனம் வேகமாக செல்லும் பொழுது அல்லது முன்னே செல்லும் வாகனம் தனது வேகத்தினை திடீரென்று குறைக்கும் பொழுது இவ்வகையான விபத்து ஏற்படலாம் . safe distance தூரமானது வாகனத்தின் வேகம், வாகனத்தின் வகை, பிரேக் தொழில்பாட்டு நிலைமை, றோட்டின் தன்மை என்பவற்றுக்கு ஏற்ப வேறுபடும்
2. மேலும் பனி, மழை போன்ற காலநிலை நிலவும் பிரதேசங்களில் இவ்வகையான விபத்துக்கள் நடைபெறும்.
3. மோட்டோர் சைக்கிள்கள் மற்றும் கண்டெய்னர் போன்ற பாரிய வாகனங்களுக்கு இத்தூரம் ஆனது எதிர்பார்ப்பதினை விட அதிகமாக இருக்கும்.

4. எதிரே வரும் உயரம் குறைந்த வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து மோதும் பொழுது

மேலும் சிறிய வகையான கார்களில் (பட்ஜெட் கார்) உயிர் காக்கும் பலூன் போன்றவை பல சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.                                                                                                                                   முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

மாணவர்கள் வைத்தியசாலையில் துஸ்பிரயோகமா?

இவ்வாண்டு தொடங்கியது முதல் பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் தொடங்கிவிட்டன. மாணவ, மாணவிகள் தங்களின் உடற் தகுதி பரிசோதனைக்காக அருகில் உள்ள அரச வைத்திய சாலைகளை நாளாந்தம் நாடுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் ஆசிரியர்களின் துணை இன்றி வருகின்றனர். மாணவர்கள் இவ்வாறான உடற் தகுதி பரிசோதனைகள் செய்யப்படும் பொழுது சில சந்தர்ப்பங்களில் துஸ்பிரயோகம் ஆகும் நிலையும் ஏற்படுகின்றது.  இது சம்பந்தமாக மாணவர்கள் பின்னரும் விடயங்களினை அறிந்திருத்தல் நல்லது. சாதாரண பொதுமக்களில் பலருக்கு வைத்தியர்கள் தவறு செய்ய மாடடார்கள் என்ற அதீத நம்பிக்கையும், வைத்திய பரிசாதனைகள் பற்றிய அடிப்படை அறிவு இன்மையுமே இவ்வாறான துஸ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற காரணமாக அமைந்து விடுகின்றன.

THE PROBLEM

வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் பொழுது பொதுவாக ஆண் நோயாளியாயின் ஆண் உதவியாளர் (Chaperone) ஒருவரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளர் ஒருவரும் துணை இருத்தல் வேண்டும். இங்கு உதவியாளர் என்பவர் பொதுவாக வைத்தியசாலை ஊழியர் ஒருவராக இருப்பார் அவ்வாறு இல்லாத பட்ஷத்தில் நோயாளியுடன் கூட வருபவர் வைத்தியரின் அனுமதியுடனும் நோயாளியின் அனுமதியுடனும் உதவியாளராக செயற்படலாம்.

அந்தரங்கமான வைத்திய பரிசோதனைகளை (intimate medical examinations) உதாரணமாக இனப்பெருக்க உறுப்புக்களை பரிசோதித்தல் மற்றும் மார்பகங்களை பரிசோதித்தல் ஆகியவற்றினை மேற்கொள்ளும்பொழுது ஆண் நோயாளி ஆயின் ஆண் உதவியாளரும் பெண் நோயாளியாயின் பெண் உதவியாளரும் கூட இருத்தல் கட்டாயமானதாகும். மேலும் இவ்வாறான பரிசோதனைகள் ஓர் மறைவான இடத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.

வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொழுது மருத்துவ மாணவர்கள், தாதிய மாணவர்கள் மற்றும் வேறு வைத்திய சாலை ஊழியர்கள் பிரசன்னமாயிருப்பின் அவர்களை அப்பரிசோதனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று கூற நோயாளிக்கு முழு உரிமையும் உண்டு. நோயாளி அவ்வாறு கூறுவாராயின் வைத்தியர்கள் அக்கூற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிலவைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முன்னர் நோயாளிகள் குறித்த வைத்தியருடன் எவ்வாறான சோதனைகளை எவ்வாறு மேற்கொள்ளுவீர்கள் என கேட்டறிந்து கொள்ள முடியும். அவ்வாறு நோயாளி கேட்கும் பொழுது வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும். அண்மையில் பெண் ஒருவர் கழுத்து பகுதியில் கட்டு ஒன்றுடன் வைத்திய பரிசோதனைக்கு சென்ற பொழுது வைத்தியர் போதிய விளக்கங்கள் கொடுக்காமல் அவரின் மார்பங்களை பரிசோதனை செய்து பெரும் சர்ச்சையில் மாட்டினார். உண்மையில் மருத்துவ ரீதியாக அவ்வைத்தியர் மார்பில் ஏதாவது கட்டி இருக்கின்றதா எனவும், அது கழுத்து பகுதிக்கு பரவியதா எனவும் அறியவே அப்பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நோயாளிக்கு வைத்தியர் ஆனவர் உரிய விளக்கங்களை கொடுக்க வேண்டும்.

சாதாரண வைத்திய பரிசோதனைகளை விட சட்ட வைத்திய பரிசோதனைகள் (Medico – legal examination) மேற்கொள்ளப்படும் பொழுது போலீசாரே, இராணுவத்தினரோ அல்லது சிறைக்காவலரோ சோதனை மேற்கொள்ளப்படும் நபரின் அருகில் இருக்க அனுமதிப்பதில்லை.

இது தவிர வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தினை நோயாளிக்கு கொடுப்பதுவும், தொழில் முறையற்ற ரீதியில் உரையாடல்களை மேற்கொள்ள முனைவதும் தொழில்முறை துஸ்பிரயோகமே.

வைத்தியசாலை தவிர வைத்தியரின் விடுதி, வீதியோரங்கள், வைத்தியரின் வாகனம் அல்லது வீடு அல்லது போலீசாரின் வாகனம் போன்றவற்றில் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகள் மிகவும் சர்ச்சைக்கு உரியவை. இது தொடர்பாக பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

                                                                            முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

தொப்புள் கொடி-உயிரை பறிக்குமா?

தமிழரின் வாழ்வியலில் தொப்புள் கொடி என்பது முக்கியமானது. நாம் பிரிக்க முடியாத உறவுகளை மேற்கோள் காட்டிட “தொப்புள் கொடி ” உறவு என்ற சொற் பதத்தினை பாவித்து வருகின்றோம். பலர் தொப்புள் கொடி என்ற சொற்பதத்திற்கு பதிலாக “நச்சு கொடி” என்ற சொற்பதத்தினை பாவிப்பதும் உண்டு. ஆனால் கருத்தியல் ரீதியில் அது பொருத்தமற்றது. பலருக்கு இந்த தொப்புள் கொடியானது தாயில் இருந்து அவளது கருப்பையில் வளரும் கருவிற்கு அதாவது குழந்தையிற்கு தேவையான உணவு, ஓட்ஸிசன் போன்றவற்றினை வழங்குகின்றது. எம்மில் பலருக்கு இவ்வாறு ஓர் கருவிற்கு உயிர் வழங்கும் தொப்புள் கொடியானது உயிர் இழப்பினை சில சந்தர்ப்பங்களில் ஏற்படுத்தும் என்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தும். இவ்வாறு சிசுவிற்கு உயிர் ஆபத்தினைஉண்டு பண்ணும் சந்தர்ப்பங்கள் பற்றி பார்ப்போம்.
1. கழுத்தினை சுற்றி இறுக்கிய நிலை (Cord around the neck)
சில சந்தர்ப்பங்களில் தொப்புள் கொடியானது சிசுவின் கழுத்தினை சுற்றி காணப்படும். ஆனால் இவ்வாறு காணப்படுவதனால் பொதுவாக குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது. தொப்புள் கொடியானது நீளத்தில் சிறிதாக இருந்து பிரசவம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் குழந்தையிற்கு வழங்கப்படும் இரத்தத்தின் அளவு சடுதியாக குறைவடையும் இதன் காரணமாக குழந்தையின் இருதய துடிப்பு குறைவடைந்து இறப்பு ஏற்படலாம். இவ்வாறு சிசு மரணம் ஒன்று ஏற்படும் பொழுது உரிய உடற் கூராய்வு பரிசோதனைகள் மற்றும் இதர பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே சிசுவின் மரணத்திற்கான காரணத்தினை கூறமுடியும். வெறுமனே தொப்புள் கொடியானது கழுத்தினை சுற்றி இருந்தால் இறப்பு ஏற்பட்டது என்று யாரவது கூறினால் அது ஏமாற்று வேலையாகவே இருக்கும்.

cord around neck க்கான பட முடிவு

சில சந்தர்ப்பத்தில் தொப்புள் கொடியானது அதிகமாக முறுக்குப்பட குழந்தைக்கு செல்லும் இரத்தத்தின்அளவு குறைவடையும் இதன் காரணமாக குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சி குறைந்ததாக இருக்கும். அதனை கீழ் உள்ள படம் விபரிக்கின்றது

cord around neck க்கான பட முடிவு

2. தொப்புள் கொடியில் ஏற்படும் முடிச்சுகள் (knots)
சிசுவின் வளர்ச்சியின் பொழுது சிசுவின் அசைவின் காரணமாக தொப்புள் கொடியில் முடிச்சுகள் ஏற்படும். இந்த முடிச்சுகள் உண்மையான முடிச்சுகளாகவோ (True knots) அல்லது சாதாரண மடிப்புகளாவோ (false knots) இருக்கலாம். இவ்வாறு முடிச்சுகள் இருந்தால் மட்டும் இறப்பு ஏற்பட்டு விடாது முடிச்சில் ஏற்படும் இறுக்கம் காரணமாக குழந்தைக்கான இரத்த ஓட்டம் தடைப்படும் பொழுதே இறப்பு ஏற்படும். அதாவது அரிதான ஓர் சந்தர்ப்பத்திலேயே இவ்வேறு நடைபெறும். கீழே உள்ள படமானது தொப்புள் கொடியில் ஏற்படும் உண்மையான முடிச்சுகளையும் மடிப்புகளையும் காட்டுகின்றது.

tyu

                                                                     முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

பால்மா ஆபத்தானதா?

இயற்கையில் இருக்கும் பூரண உணவுகளில் ஒன்று பால் ஆகும். அண்மைக்காலத்தில் பலரின் மனதினை குடையும் கேள்வி நாம் குடிக்கும் பால்மா வகைகளினால் உடலுக்கு தீங்கு விளையாதா? என்பதே மறுபுறம் ஏன் இப்பொழுது இறக்குமதியாகும் பால்மா வகைகள் நஞ்சு என்று கூக்குரலிடுகின்றனர்? இவற்றினை அலசி ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

வர்த்தக நோக்கத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் பொழுது பின்வரும் இரசாயனப்பொருட்கள் பாலில் விரும்பியோ விரும்பாமலோ கலபடுகின்றன. அவற்றினை ஒவ்வொன்றாக பார்ப்போம்

  1. நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics)

மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு நோய்கள் ஏற்படும் பொழுது மனிதர்களுக்கு பாவிக்கும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளே பெரும்பாலும் பாவிக்கப்படும். உதாரணமாக விலங்குகளுக்கு எரித்ரோமைசின், டெட்ராசைக்ளின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பல்வேறு வகையான நுண்ணுயிர் கொல்லிகள் பாவிக்கப்படும் பொழுது அவை பாலின் மூலம் வெளியேற்றப்படும். இதன் மூலம் அவை மனிதனை அடையும். கீழ் வரும் அட்டவனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மனிதர் அருந்தும் பாலில் இருக்க வேண்டிய நுண்ணுயிர் கொல்லிகளின் அதிகூடிய அளவினை காட்டுகின்றது

  1. ஓட்டுண்ணி கொல்லிகள் (PARASITICIDE DRUGS)

விலங்குகளில் பல்வேறுபட்ட ஓட்டுண்ணி புழுக்கள் (flukes, tapeworms, round worms) இருப்பதன் காரணமாக, அவற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கால்நடைகளுக்கு பலவிதமான Parasiticide மருந்துகள் வழங்கப்படும். உதாரணமாக பின்வரும் மருந்துகள் oxylosanide, closantel, albendazole and rafoxanide வழங்கப்படும். இதில் நாம் சாதாரணமாக பாவிக்கும் பூச்சி குளிசையான albendazole உள்ளடக்கம், இதன் விளைபொருட்கள் (albendazole sulfoxide, albendazole sulfone and albendazole 2-amino sulfone) பாலின் ஊடாக மனிதனை அடையும் பொழுது அவை மனிதனின் கலத்தில் உள்ள நிறமூர்த்தத்தில் மாற்றங்களினை (mutagenic ) உண்டு பண்ணும்.இதன் காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் அவற்றின் அளவினை வரையறுத்துள்ளன. (maximum residue limit for total albendazole residues of 100 ng/ ml). கீழ் வரும் அட்டவனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மனிதர் அருந்தும் பாலில் இருக்க வேண்டிய பல்வேறுபட்ட தீங்கு பதார்த்தங்களின் அதிகூடிய அளவினை காட்டுகின்றது

  1. ஹோர்மோன்கள்

பால் பெறுவதற்காக பல்வேறுபட்ட மிருகங்களினை வர்த்தக ரீதியில் வளர்க்கும் பொழுது அவற்றுக்கு பல்வேறுவகையான ஹோர்மோன்கள் கொடுக்கப்படும். அவை முழுமையாகவோ பகுதியாகவோ பாலின் ஊடாக வெளியேறும். முக்கியமாக இந்த ஹோர்மோன்கள் கொழுப்பில் அதிகம் கறியும் தன்மை உள்ளதால் பாலில் அதிகமாக இருக்கும் உதாரணமாக Bovine Growth Hormone (BGH) மற்றும் ஸ்டிரொயிட் வகையான ஹோர்மோன். இந்த ஹோர்மோன்கள் பால் பதப்படுத்தல் முறையின் பொழுது மாற்றமடையாது மனித உடலினை அவ்வாறே சென்றடையும் (Food processing, such as heating or churning, appears to have no effect on the hormones in milk and dairy products although cheese ripening does).

  1. பூச்சி கொல்லிகளும் பீடை நாசினிகளும்

விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படும் உணவில் நிச்சயம் பூச்சி கொல்லிகளும் பீடை நாசினிகளும் காணப்படும். ஏன்னெனில் அவற்றினை பாவித்தே அவற்றுக்கான உணவுகள் தாயார்செய்யப்படுகின்றன. பூச்சி கொல்லிகளும் பீடை நாசினிகளும் இரசாயன ரீதியில் பெருமளவில் மாற்றம் அடையாது பாலின் மூலம் மனிதனை சென்றடையும் உதாரணமாக Polychlorinated biphenyls (PCBs), Dioxins போன்றவை அதிகளவில் பாலின் மூலம் மனிதனை அடையும்.

Bio-concentration of residual pesticides in food chain.

  1. Mycotoxins

இவை பங்கசுக்கள் உற்பத்திசெய்யும் நச்சு பதார்த்தங்கள் ஆகும். இவ்வாறு பங்கசு பாதித்த உணவுகளை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கும் பொழுது முக்கியமாக Aflatoxin B என்ற என்ற பங்கசு பாத்தித்த உணவு பொருட்களை கொடுக்கும் பொழுது பாலில் அதன் விளைபொருளாகிய Aflatoxin M1 (AFM1) என்ற புற்று நோயினை உருவாகும் பொருள் (AFB1 as primary and AFM1 as secondary groups of carcinogenic compounds) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  1. பார உலோகங்கள்

பார உலோகங்களான ஈயம், செப்பு, கட்மியம் போன்றன உணவு சங்கிலி வழியே திரண்டு பசுக்களினை அடையும் அதன் பின்னர் பால், இறைச்சி மூலம் மனிதனை அடைகின்றது. இலங்கையில் மாகாவலி வலயத்திலும் வடமத்திய மாகாணத்திலும் உள்ள நீரில் அதிக அளவில் மேற்குறித்த பார உலோகங்கள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே அங்கு வசிக்கும் மக்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று பரவலாக நம்பப்படுகின்றது.

என்னதான் தீர்வு?

இவ்வாறு பல்வேறு பட்ட தீங்கு விளைவிக்கும் பாதார்த்தங்கள் பால் மூலம் மனிதனை அடைகின்றது. இவ்வாறு அடையும் பதார்த்தங்களில் பல பால் பதப்படுத்தும் செயன்முறையின் பொழுது அழிவடையாது எனவே திரவ பால் ஆக பாலை குடித்தால் என்ன பால்மாவாக குடித்தால் என்ன பெரிதாக வித்தியாசம் இல்லை. சிலர் கேட்கலாம் இலங்கையில் தான் திரவ பால் உற்பத்தியாகின்றது எனவே மேற்படி தீங்கு விளைவிக்கும் பதார்த்தங்கள் பாலில் இல்லாமல் இருக்கும் என்று, அக்கருத்து மிக பிழையானது ஏனெனில் இலங்கையில் பீடை கொல்லிகள், களைநாசினிகள், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் போன்றவற்றை விவசாயத்திலும் கால்நடைகளின் வளர்ச்சிக்கும் பாவிப்பதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. இதன் காரணமாகவும் போதிய அறிவின்மை காரணமாகவும் விவசாயிகள் மேற்குறியவற்றினை அளவுக்கு அதிகமாக பாவிக்கின்றனர். அதன் விளைவாகவே வடமத்திய மாகாணத்திலும், மகாவலி அபிவிருத்தி பிரதேசத்திலும் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்.

உலக சுகாதார நிறுவனம், உலக உணவு நிறுவனம் போன்றன பாலில் இருக்க வேண்டிய ஆகக்கூடிய அளவு பதார்த்தங்களினை பட்டியலிட்டுள்ளன மேலும் பல நாடுகள் தங்களுக்கென தனியான வரையறைகளை கொண்டுள்ளன. எனவே உள்நாட்டிலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பால் பொருட்களை குறித்த காலஇடைவெளிகளில் பரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவினை பரிசோதிக்க வேண்டும் (hazard analysis critical control points – HACCP).

நாம் உள்ளேடுக்கும் மருந்து அல்லது நஞ்சானது எமது உடலில் குறித்த அளவினை விட அதிகமாக இருக்கும் பொழுதே அதாவது இரத்தத்தில் அதன் செறிவு குறித்த அளவினை தாண்டும் பொழுதே நாம் நஞ்சாதலுக்கு உள்ளவோம். மேலும் ஒரு மனிதனை கொல்ல தேவையான நஞ்சின் அல்லது மருந்தின் அளவு Lethal Dose (LD) என்று அழைக்கப்படும். இது மருந்து அல்லது நஞ்சிற்கு ஏற்றவாறு வேறுபடும். இந்த அளவானது மருந்து அல்லது நஞ்சினை உள்ளெடுக்கும் மனிதனின் உடல் நிறை, வேறு நோய்கள் உள்ள நிலமை , குறிப்பாக சிறுநீரக மற்றும் ஈரல் போன்றவற்றின் தொழில் பாடுகள் பாதிக்கபட்டுள்ளமை போன்றவற்றில் தங்கி உள்ளது. தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவு குறித்த மட்டத்தினை விட குறைவாக இருந்தால், அவற்றினால் மனித உடலில் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தினை மேற்கொள்ள முடியாது. இலங்கையில் இவ்வாறு பாலில் காணப்படும் மேற்குறித்த பதார்த்தங்களினை அளவிடும் முறை இன்னும் பெரிய அளவில் விருத்தி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpgimg-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpgimg-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

ஆடைகள் களைந்து சுகம் பெறுவோம்!

அவள் 42 வயதான இல்லத்தரிசி, கணவன் பல்வேறுபட்ட கூலி வேலைகளை செய்பவர். இவர்கள் தங்கள் மேலதிக வருமானத்திற்காக அவர்களின் வீட்டில் ஏறத்தாழ 30 கோழிகளை வளர்த்து வந்தனர். அவள் கடந்த மூன்று நாட்களாக கடுமையான காச்சல், தலைவலி போன்றவற்றினால் அவதிப்பட்ட நிலையில் பிரதேச வைத்திய சாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்தாள். அவள் மரணமடைந்ததிற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் அவளது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது தான் சில அதிர்ச்சிகரமான விடயங்கள் தெரியவந்தன, அவையாவன அவளின் மார்பு பகுதியில் சிறிய எரிகாயம் போன்ற ஓர் காயம் காணப்பட்டது. இதனை வைத்தியர்கள்  Eschar என்பர். இது உண்ணி கடித்த இடமே ஆகும். உண்மையில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி போன்ற விலங்குகளில், சிறு புதர் பற்றைகளில்  உள்ள Leptotombidium mite larvae (chiggers) என்ற  உண்ணி கடிக்கும் பொழுது அதனுடாக Orientia tsutsugamushi என்ற நுண்ணங்கி மனித உடலில் உட்செலுத்தப்படும். மேலும் உடற்கூராய்வின் பொழுது அவளது நுரையீரல் செயலிழந்தமையும் (ARDS) இருதயம் கிருமித்தாக்கத்திற்கு (Myocarditis) உட்பட்டமையுமே காரணம் என அறிந்து கொள்ள முடிந்தது.

wp-15793696989568824193884100597914.jpg
பலருக்கு இந்த உண்ணி காச்சல் காரணமாக இறப்பு ஏற்படும் என்ற தகவல் ஆச்சரியமாக இருக்கும்.  பொதுவாக இந்த உண்ணிகள் மனிதரில் கடிக்கும் பொழுது வலி ஏற்படுவதில்லை அதனால் அவை கடித்தமை நோயாளிக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலும் இந்த உண்ணிகள் மார்பகங்களின் கீழ்ப்புறம், இடுக்கு பகுதி, பெண் உறுப்பு பகுதிகள், ஆணின் விதைப்பை மற்றும் அக்குள் போன்றவற்றில் கடிப்பதினால் பெரும்பாலான நோயாளிகள் அவற்றினை அவதானிப்பதில்லை.

இந்த உண்ணி காச்சல் ஆரம்ப கட்டத்தில் பொதுவாக ஏனைய வகை  காச்சல் போன்று வருவதினால் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியாது, ஆனால் மேற்குறித்த காயம் (Eschar) இருப்பதனை கொண்டு வைத்தியர்கள் இலகுவாக இந்த நோயினை அடையாளம் கண்டு கொள்வர்.  மேலும் தற்பொழுது பெரும்பாலான  வைத்தியர்கள் காச்சலுடன் வரும் நோயாளிகளை பூரணமாக உடற் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை, ஏனெனில் அவர்களுக்கு நோயாளி மீது அக்கறையின்மை மற்றும்  நேரமின்மை போன்றனவாகும். சில சந்தர்ப்பங்களில் ஆண் வைத்தியர்கள் பெண் நோயாளினை உடற்பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவதில்லை அவ்வாறே சில சந்தர்ப்பத்தில் நோயாளியும் விரும்புவதில்லை. மறுதலையாக பெண் வைத்தியர் பரிசோதிப்பதினை ஆண் நோயாளிகளும் சில சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை.  இவ்வாறான காரணங்களினால் உண்ணி காச்சல் ஆரம்ப நிலையில் அடையாளம் காணப்படாமல் விடுபடுவதன் காரணமாகவே உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. சிலர் கருதலாம் இரத்த பரிசோதனை மூலம் இலகுவாக ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கலாம் தானே என்று, இந்த உண்ணி காச்சலினை ஆரம்பத்தில் கண்டு பிடிக்க உதவும் உரிய பரிசோதனைகள் இலங்கையில் இல்லை என்பதே உண்மை ஆகும்.

யுவதிகள் உரிழந்தமை ஏன்?

அண்மையில் அஸர்பைஜானில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23, 25 வயதுடைய மல்ஷா சந்தீபனி, தருக்கி அமாயா, தவுசி ஜயவோதி ஆகிய மாணவிகளே என இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் கீழ் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் மூன்று மாணவிகளும் மயக்கமுற்றுள்ளனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உ யிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேற்குறித்த மாணவிகள் மூவரும் தீக்காயங்களினால் நேரிடையாக பாதிக்க படாத பொழுதும் அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பதே பலரின் கேள்வியாகும்.

sister-1சாதாரணமாக தீ விபத்து ஒன்றில் ஒருவர் தீக்காயங்களுக்கு உட்படாத சந்தர்ப்பத்திலும் இறப்பதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் தாக்கம் ஆகும். ஓர் கட்டிடம் தீப்பற்றி எரியும் பொழுது அதில் உள்ள பிளாஸ்டிக்கினால், இறப்பரினால் மற்றும் வேறு பல சேதன சேர்வைகளினால்  ஆன பொருட்கள் பொருட்கள் பற்றி எரியும் இதன் பொழுது பின்வரும் நச்சு வாயுக்கள் சூழலுக்கு வெளிவிடப்படும் நைட்ரிக் ஒக்சைட், சல்பர் ஒக்சைட், போஸ்யீன், கார்பன் மோனோக்சைட், சயனைட்  மற்றும் பல்வேறுபட்ட சேதன சேர்வைகளின் வாயுக்கள்.

unmj

இந்த வாயுக்கள் மிக்க நச்சுத்தன்மையாக இருப்பதோடு மனிதன் இவற்றினை சுவாசிக்கும் பொழுது இவை நுரையீரலினால் ஊடாக இரத்தத்தில் கலக்கின்றது அத்துடன் ஒருசில நிமிடங்களிலேயே சுவாசித்த மனிதனை அறிவற்ற நிலைக்கு கொண்டுவந்து விடும். அதன் பின்னர் அம்மனிதனினால் தீ விபத்து நடைபெறும் பிரதேசத்தில் இருந்து வெளியேறமுடியாது இறப்பினை தழுவ நேரிடும். முக்கியமாக இங்கு கார்பன் மோனோக்சைட், சயனைட் போன்றவை மிகமிக நச்சுத்த தன்மையானவை. அத்துடன் அவை நாம் சாதாரணமாக சுவாசிக்கும் ஓட்ஸிசனை விட பலமடங்கு விருப்பத்துடன் (Affinity) இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உடன் இணைந்து கொள்ளும். இதன் மூலம் கல நிலையில் சுவாச செயற்பாடு தடைப்பட்டு ஒருசில நிமிடங்களில் இறப்பு நேரிடும். மேலும் இவ்வாயுக்கள் பொதுவாக மணமற்றவை, இதன் காரணமாக மனிதர்கள் இவ்வாயுக்கள் வெளிவருவதினை இனம் கண்டுகொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு தீ விபத்து சம்பவத்தில் இவ்வாறு தான் சில மனிதர்கள் எவ்விதமான தீக்காயங்களுக்கும் உட்படாமல் பரிதாபகரமாக இறக்கின்றனர். இதன்காரணமாகவே தீயணைப்பு வீரர்கள் விசேடமாக வடிவமைக்கப்பட்ட முக மூடிகளினை பயன்படுத்துகின்றனர்.

                                                                     முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

திகிலூட்டும் சம்பவம் யாழில்….?

யாழில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் நேற்று காலை 7 மணியளவில்  தனக்கு தானே  தீ மூட்டியபடி புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் 32 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மில் பலருக்கு ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பது குறித்து பெரும் புதிராக உள்ளது.
முதலில் நாம் சிக்கலான தற்கொலைகள் (complex suicide) பற்றி பார்ப்போம். சிக்கலான தற்கொலை என்பது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப்பாவித்து ஒருவர் தற்கொலை செய்துகொள்வது ஆகும். இவர்கள் தங்களின் மரணத்தினை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தும் முகமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை தெரிவு செய்கின்றார்கள். உதாரணமாக நஞ்சினை உண்ட பின்பு தூக்கில் தொங்கல் அல்லது நீரில் மூழ்கல். சிக்கலான தற்கொலையில் இருவகை உண்டு
1. திட்டமிடப்படாத சிக்கலான தற்கொலைகள் (unplanned complex suicides) – இதில் தற்கொலை செய்பவர் முதலில் ஒரு முறையினை பாவிப்பார் அதில் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்து தனது முயற்சியில் அதாவது இறக்கும் வரை பலமுறைகளை பாவிப்பார்.
உதாரணமாக ஒருவர் பூட்டிய அறையில் தனது மணிக்கட்டினை பிளேட்டினால் அறுப்பார், உடனடியாக இறப்பு நிகழாது அவர் இரத்தம் ஒழுக ஒழுக நடந்து திரிந்துவிட்டு, மேசையில் லாச்சியில் உள்ள இரு காட் பனடோல்களை விழுங்குவார். அப்பொழுதும் இறப்பு உடனடியாக நிகழாது, இறுதியாக கூரையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கொள்வார்.
பொதுவாக இச்சம்பவத்தினை பார்வையிடும் சாதாரண பொதுமகன் ஒருவர் இரத்த கறையினை பார்த்து இது கொலை என்றே கூறுவார்கள்.
2. திட்டமிடப்பட்ட சிக்கலான தற்கொலைகள் (planned complex suicides) இதில் தற்கொலையாளி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை ஒரே நேரத்தில் பாவிப்பர். உதாரணமாக அதிகளவு நித்திரை குளிசைகளை விழுங்கிய பின்னர் அவர் உயரமான கட்டிடங்களில் இருந்து விழுதல்.
இங்கு நடைபெற்றதுவும் அவ்வாறான ஓர் சம்பவமாக இருக்கலாம்.

0272920-2008
மேலுள்ள படமானது Planned complex suicide இணை விளக்குகின்றது இங்கு அவர் penetrating captive-bolt gun மூலம் தன்னைத்தானே சுட்டும் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளார். (penetrating captive-bolt gunshot இணை பற்றி அறிய பின்வரும் லிங்கினை பின்தொடரவும்  சத்தமின்றி ஒரு வேட்டு ).
                                                        முற்றும்

  1. img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

பட்டம் விடுதல் ஆபத்தானதா?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று பட்டம் ஏற்றுதல். குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல இளைஞர்கள் இதன்பால் அதித அக்கறை கொண்டுள்ளனர். இது தவிர வருடம் தோறும் நடைபெறும் இந்திர விழாவில் பட்டம் ஏற்றுவதற்காக  போட்டி நடைபெற்று பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படுவது வழமை ஆகும். பட்டம் ஏற்றி விளையாடுவது பொதுவாக ஆபத்தில்லாத விளையாட்டு ஆகும். எனினும் தூரதிஸ்டவசமாக சில சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பினை பட்டம் ஏற்றுதல் ஏற்படுத்திவிடுகின்றது. நாம் எவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடைபெறுகின்றது என அறிந்து கொண்டால் அநியாய உயிர் இழப்புக்களை தடுக்கலாம். ஒவ்வோர் சந்தர்ப்பங்களாக நாம் நோக்குவோம்.

kite-competition-jaffna-valvai-25832346871199306648.jpg
1. பொதுவாக பட்டம் விடல் ஆனது வயல் வெளிகளிலும் கடற்கரைகளில் கும் இடம் பெறுகின்றது. மேற்குறித்த பிரதேசங்களில் இருக்கும் பாதுகாப்பற்ற கிணறுகள், பாரிய குழிகள்  போன்றவற்றில் இளைஞர்கள் தவறி வீழ்வதன் காரணமாக இறப்பு ஏற்படுகின்றது. மாரி காலங்களில் இவற்றில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக நீரில் மூழ்கியும் இறப்பு ஏற்படலாம்.
2. இவ்வாறே சிலர் மரங்களின் உச்சி, வீடுகளின் கூரைகள், வெளிச்ச வீடு போன்றவற்றில் இருந்து பட்டத்தினை ஏற்றுவார்கள் இதன்பொழுது அவர்கள் தவறி வீழ்ந்து இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
3. சிலர் பட்டத்தினை ஏற்றுவதற்கு உலோகத்தினால் ஆக்கப்பட்ட அல்லது கண்ணாடியினால்  ஆக்கப்பட்ட சிறிய கம்பிகளை நூல் போன்று பாவிப்பர். இவை மின்சார கம்பிகளை தொடும் பொழுது அதன் மூலம் மின்சாரம் கடத்தப்படும். இதன் காரணமாக பட்டன் விடுபவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளவர். அத்துடன் அவருடன் கூட இருப்பவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியம் உண்டு.
4. இவ்வாறு மெல்லிய கம்பிகளை பயன்படுத்தும் பொழுது சில சந்தர்ப்பங்களில் அது சிறுவர்களின் கழுத்தினை சுற்றி வளைத்து நெரிக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவ்வாறு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கு மிகமிக மெல்லிய ஆனால் ஒப்பீட்டளவில் பலமான கம்பி பாவிக்கபடுவதினால் அது கழுத்து பகுதியில் வெட்டு காயங்களினை உண்டு பண்ணும். எமது கழுத்து ப் பகுதியில் தோலின் கீழ் பாரிய இரத்த நாளங்களில் குறிப்பிட அளவு அழுத்தத்தில் குருதி பாய்வதன் காரணமாகக் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வகையான மாஞ்சா நூல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது
5. சில சந்தர்ப்பங்களில் ஏறிய பட்டமானது திடீர் என நடு வீதியில் இறங்குவதன் காரணமாகக் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
6. சில சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் பட்டத்தினை ஏற்றுவதற்கு மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலே உள்ள படத்தில் மாஞ்சா நூல்களை பயன்படுத்தி செய்த பட்டங்களினை போலீசார் பறிமுதல் செய்வதினையும், மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி இறந்த சிறுமியின் படத்தினையும் காணலாம்.

முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

சிசு மரணம் – வைத்தியர் காரணமா?

இது அவளுக்கு இரண்டாம் பிரசவம். முதல் பிரசவம் சுகப்பிரசவமாய் தான் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இம்முறை அவள் மகப்பேற்று நிபுணரை ஓர் தனியார் கிளினிக்கில் சந்தித்து காட்டியிருந்தாள். அவளின் கணவர் கூலி வேலை செய்பவர் என்பதால் அவர்களிடம் வெளியே உள்ள தனியார் வைத்திய சாலையில் பிரசவம் பார்க்க முடியவில்லை என்பதால் அரச வைத்திய சாலையில் அனுமதியாகியிருந்தாள். வெளியில் அவள் காட்டும் பொழுது ஒவ்வோர் முறையும் மகப்பேற்று நிபுணர் ஸ்கேன் செய்து சொல்லுவார் இம்முறை ஆண் பிள்ளை எதுவித பிரச்சனையும் இல்லை என்று, அதை கேட்டு அவளும் சதோசமாக இருந்தாள். அன்று மாலை அவளுக்கு மெதுவான வயிற்று குற்று தொடங்கியது. அவளும் உடனடியாக அரச வைத்திய சாலையின் குறித்த விடுதியில் அனுமதியானாள். அடுத்த நாள் அவளுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியது. பிறந்து அரை மணித்தியாலங்களில் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டது. குழந்தை உடனடியாக பேபி ரூமில் அனுமதிக்கப்பட்டது, அடுத்த மணித்தியாலத்தில் குழந்தை இறந்த செய்தி தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு நுரையீரல் இல்லாமை காரணமாகவே இறந்தது என்று தாயாரிடம் கூறினார். குழந்தையின் உறவினர்களுக்கும் தந்தையாருக்கு பலத்த சந்தேகங்கள், மகப்பேற்று நிபுணர் ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை நன்றாக இருப்பதாக கூறினார்கள் இது எவ்வாறு? மற்றும் நுரையீரல் இல்லாமல் குழந்தை பிறக்கும் வரை 3kg நிறை உடையதாக குழந்தை வளர்ந்தது எவ்வாறு? இறுதியாக இறந்த குழந்தையினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையினை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் கடடளையிட்டது. பல இழுபறிகளுக்கு பின்னர் உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடற் கூராய்வின் பொழுது குழந்தையின் வயிற்று பகுதியில் உள்ள அங்கங்கள் பிரிமென்தகட்டில் இருந்த பாரிய ஓட்டை ஊடாக சென்று நெஞ்சறை பகுதியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறான நோய் நிலைமை மருத்துவத்தில் DIPHARMATIC HERNIA என்று அழைக்கப்படும். அதாவது இது ஓர் வகையான ஓர் ஹெர்னியா ஆகும். அத்துடன் குழந்தையின் இரு நுரையீரல்களும் பகுதியளவிலே தான் விருத்தி அடைந்திருந்தமை (HYPOPLASIA) கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வயிற்று அங்கங்களின் நெருக்குவாரம் காரணமாக நுரையீரல் பொதுவாக விருத்தி அடையாமல் இருக்கும்.

இந்த நோய் நிலைமை உயிரோடு பிறக்கும் 10000 குழந்தைகளில் ஒருவருக்கு எற்பட வாய்ப்புக்கள் உண்டு. மேலும் குழந்தை தாயின் கருவறையில் வளரும் பொழுது சுவாசிக்க அதன் நுரையீரல் தேவைப்படாது. தொப்புள் கொடி மூலமே குழந்தைக்கு தேவையான ஓட்ஸிசன் போன்றவை கடத்தப்படும். குழந்தை பிறந்த உடனேயே சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதால் அதற்கு நுரையீரலின் தொழில்பாடு அவசியமாகின்றது. இதனால் குழந்தை சாதாரண குழந்தைகள் போன்றே பிறக்கும் வரை வளர்கின்றன. மகப்பேற்று நிபுணர்கள் ஸ்கேன் செய்து இது போன்ற நோய் நிலைகளை கண்டுபிடிப்பதில் போதிய நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அல்லர் மாறாக NEONATAL RADIOLOGIST/ RADIOLOGIST போன்றவர்களே இது போன்ற நோய் நிலைகளை கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

                                                                        முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

வாகன விபத்தும் வாகன நெரிசலும்..

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் நான் வீதிவழியே பிரயாணித்து கொண்டிருந்த பொழுது, ஓர் நாற்சந்தியில் பெரும் வாகன நெரிசல். ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் மற்றைய வாகனங்களும் வீதியினை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நானும் வாகனத்தினை நிறுத்தி விட்டு நடந்து சென்று பார்த்தால், அது ஓர் விபத்து சம்பவம் மோட்டார் சைக்கிள் ஒட்டி இரத்த வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தார். அவரின் மோட்டார் சைக்கிளும் விபத்திற்கு உள்ளான மோட்டார் காரும் வீதியின் நட்ட நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ் வேறு மிக சத்தத்துடன் சைரன் எழுப்பியபடி நோயாளியினை அணுக முடியாமல் சில நூறு மீற்றர் தூரத்தில் வந்துகொண்டிருந்தது. நான் அதில் மும்முரமாக வாக்குவாத பட்டு கொண்டிருந்த ஒருவரிடம் சொன்னேன் விபத்துக்குள்ளான வாகனங்களினை வீதியோரமாக நகர்த்தி ஆம்புலன்ஸ் வருவதற்கும், மற்றைய வாகனங்கள் செய்வதற்கு வழி விடும் படி கேட்டேன். அவர் சொன்னார் போலீசார் வந்த பிறகே வாகனத்தினை வீதி ஓரத்திற்கு எடுக்கலாம் என்று, நான் கூறினேன் நீங்கள் கைத்தொலைபேசி மூலம் விபத்துக்களான இரு வாகனங்களின் நிலையினினையும் போட்டொ எடுத்த பின்னர் வாகனங்களினை அப்புறப்படுத்தலாம் அல்லது வாகனங்களின் ரயரின் நிலையினை வெண்கட்டியினால் அல்லது அல்லது கல் வேறு ஏதாவது பொருள் ஒன்றினால் வீதியில் குறித்த பின்னர் அகற்றலாம் தானே என்று, அதற்கு குறித்த வாகனத்தின் சாரதி மறுத்த நிலையில் வீதி போக்குவரத்து போலீசார் வரும் வரை ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வீதியில் காத்திருக்க நேரிட்டது.

இவ்வாறு வீதியில் நிற்கும் பொழுது ஓர் போலீஸ் மேலதிகாரிக்கு கோல் பண்ணி சம்பவத்தினை சொன்னேன். அடுத்து அவர் கூறிய மறுமொழி தான் தூக்கி வாரிப்போட்டது. அவர் சொன்னார் வாகனங்களின் நிலையினை போட்டோ எடுத்த பின்னர் அல்லது வேறு விதத்தினால் அடையாளப்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தல் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் வடக்கு மாகாண மக்கள் அவ்வாறு செய்ய விட மாட்டார்கள். நீங்கள் வீதியில் பொறுமையாக இருங்கள் என்று, பிறகு சொன்னார் நீங்கள் உங்கள் வாகனத்தினை தயவு செய்து எடுக்க வேண்டாம் அவ்வாறு செய்தால் சிலவேளை அவர்கள் உங்கள் வாகன கண்ணாடியினை உடைத்து விடுவார்கள் எனவே பொறுமையாக இருங்கள் சேர் என்றார்.

மக்களின் அறியாமை காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் போலீசாரின் பக்க சார்பான செயற்பாடுகள் காரணமாகத்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அறிவோம் தெளிவோம்.

                                                                  முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg