ஆபத்தான பயணங்கள்

உலக சுகாதார நிறுவனம் மோட்டார் சைக்கிள், ஓட்டோ போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்பவர்களை “பாதிக்கப்படக்கூடிய வீதி பயனாளர்கள் (vulnerable road users)” என்று வகைப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம் மேற்குறித்த வாகனங்களில் பிரயானிப்போர் அல்லது அவற்றின் ஓட்டிகள் வீதி விபத்தின் பொழுது அதிகளவு காயமடைவதற்கு அல்லது மரணமடைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனபதே ஆகும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது போக்குவரத்து கொள்கையில் மேற்குறித்த வாகனங்களின் பாவனையை தமது நாடுகளில் ஊக்குவிக்காது ஏனெனில் பாதிக்கப்படப்போவது தமது நாட்டு மக்கள் என்ற படியாலேயே ஆகும். முக்கியமாக மேற்குறித்த வாகனங்களை கொள்வனவு செய்ய, பாவிக்க தடை செய்யப்பட்டிருக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இலகுவில் பெறமுடியாது  அல்லது அதிகளவு வரி விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நிரந்தர போக்குவரத்து கொள்கை இல்லை மற்றும் வறிய நிலைமை காரணமாக மேற்குறித்த வாகனங்களின் இறக்குமதி மற்றும் பாவனை ஊக்குவிக்கப்டுகின்றது.    

நம்ம பெண்களில் பலருக்கு உள்ள பிரச்சனை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்யும் பொழுது எவ்வாறு இருந்து பயணிப்பது என்பதே அதாவது ஒருபக்கமாக கால்களினை போடுவதா அல்லது இருபக்கமுமாய் போடுவதா என்பதே. குட்டை பாவாடை மற்றும் சேலை  அணிப்பவர்களுக்கு இருபக்கமும் கால்களை போட்டவாறு பிரயாணிப்பது கடினமாக இருக்கலாம் . மேலும்  பெண்களில் பலர் தங்களின் மேற்கால் அல்லது தொடை  தெரிந்து விடும் என்பதற்காக கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாய் வைத்தே பிரயாணம் செய்கின்றனர். இது உண்மையில் ஆபத்தானது ஏனெனில் இவர்கள் சடுதியான பிரேக் பிரயோகத்தின் பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழக்கூடிய ஆபத்துண்டு. பொதுவாகவே மோட்டார் சைக்கிள் இலகுவில் சமநிலை குழம்ப கூடியது அவ்வாறான நிலைகளில் மோட்டர் சைக்கிளின் பின்புறத்தில் ஒரே பக்கமாக கால்களினை வைத்திருக்கும் பிரயாணி இலகுவில் விழுந்து விடுவார்.  மேலும் அவ்வாறு எதிர்பாராத விதத்தில் விழும் பொழுது பாரதூரமான காயங்கள் ஏற்படலாம். சில வேளைகளில் எதிர்திசையில் வரும் வாகனம் வீழ்ந்த நபரின் மீது ஏறிச்செல்லலாம். 

சில இதுபற்றி இலங்கையின் மோட்டார் வாகன சட்டம் ஏதாவது சொல்கின்றதா?

 இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓர் பிரயாணி மோட்டார் சைக்கிளில் கால்களை இருபக்கமும் வைத்தவாறே பிரயாணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது . தென்னிலங்கையில் பொதுவாக போக்குவரத்து பொலிஸார் இதனை கடுமையாகக் பார்த்துக் கொள்வர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுவாக இதனைக் கண்டு கொள்வதில்லை.

(Motor Traffic Act. Section 158: Pillion riding: The driver of a motor cycle which has no side-car attached thereto shall not carry more than one person on the cycle when it is used on a highway, and such person shall not be carried otherwise than sitting astride the cycle on a seat securely fixed thereto behind the driver’s seat.)

எனவே தகுந்த ஆடைகளை அணிந்து மோட்டார் சைக்கிளின் இருபக்கமும் கால்களை வைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதன் மூலம் மோட்டார் சைக்கிள் ஒட்டியின் உயிரையும் எமது உயிரையும் பாதுகாப்போம்.

நன்றி   

மரணத்திற்கு பின்னரான உடனடி தசை விறைப்பு

முந்திய காலங்களில் சண்டைகளின் பொழுது குதிரையில் சென்ற போர்விரனின் தலை துண்டிக்கப்பட்ட பொழுதும் குதிரையானது வெறும் வீரனின்  இறுக்கப்பற்றிய  தலையில்லா உடலலோடு இருப்பிடம் திரும்பியது போன்ற சம்பவங்கள் விபரிக்கப்பட்டிருக்கும் முக்கியமாக கிரேக்க மற்றும் மேலைத்தேச கதைகளில் இது குறிப்பிடப்பட்டிருக்கும் .  அவ்வாறே தமிழ் புராண கதைகளில் “தலையற்ற முண்டம் குதிரையுடன் திரும்பிய” கதை முக்கியமாக அரவானின் தன்பலி நிகழ்வுடன் தொடர்புடையது, இது மகாபாரதத்தின் தமிழ் மரபுக் விரிவாக்கமாகும். அரவான், அர்ஜுனனின் மகன் (உலுப்பியின் மகன் ), குருச்சேத்திரப் போருக்கு முன் காளிக்கு தலையைத் தானே வெட்டி பலியளித்தான். அவனது  தலை போரை முழுவதும் பார்த்தது, தலையற்ற உடல் குதிரையில் தானாக பாண்டவர் பாசறைக்கு திரும்பியது.

இலங்கையில் வடமுனையில் நடந்த போரின் பொழுது தலையில் காயமடைந்த நிலையில் சடுதியாக இறந்த வீரனின் உடலானது ஆயுதத்தினை இறுக்க பற்றியிருந்தது. இவ்வாறன  பல சம்பவங்கள் நடைபெற்ற நிலையில்,  பலருக்கு இச்சம்பவங்கள்  எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து விரிவான விளக்கம் இல்லை.

Cadaveric spasm (கடாவெரிக் ஸ்பாசம்) என்பது உயிரிழந்த உடனே ஏற்படுகின்ற தசை விறைப்பு  நிலையினை  குறிக்கிறது. அதாவது மரணம் நிகழ்ந்த அடுத்த கணமே தசைகள் கடுமையாக விறைப்படைவது. இது சாதாரண மரண விறைப்பு  (Rigor Mortis) ஏற்பட முன்பே ஏற்படுகின்றது . பின்வரும் சூழ்நிலைகளில் இது ஏற்படுகின்றது   கடுமையான உடல் முயற்சி , அதிக மன அழுத்தம் அதாவது  தீவிரமான உடல் ரீதியான போராட்டத்திற்குப் பின் ஏற்படும் திடீர்  மரணங்களில் இது காணப்படுகிறது. மேலும்  சடுதியாக ஒருசில வினாடிகளில் ஏற்படும் மரணங்களில் இது பொதுவாக காணப்படும்.

சட்ட மருத்துவ ரீதியில்  இது மிகவும் முக்கியமானது ஏனெனில் மிக அரிதாகவே  இந்த வகையான சம்பவங்கள் நடைபெறும். உதாரணமாக, தற்கொலை செய்துகொண்டவர் கையில் துப்பாக்கியையோ அல்லது நீரில் மூழ்கி இறந்தவர் அங்கிருந்த செடிகளையோ இறுக்கமாகப் பிடித்திருப்பது இதன் மூலமே நடக்கிறது. மேலும் இந்த சம்பவத்தினை செயற்கையாக எம்மால் உருவாக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு நபர் இறக்கும் போது என்ன நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் அவரது தசைகள் உடனடியாக உறைந்து போவதே Cadaveric spasm ஆகும்.

நன்றி

இனி கணவனின் சம்மதம் தேவையில்லை!!!

மருத்துவ உலகில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது நோயாளிகளிடத்திலிருந்து பல்வேறுவிதமான சம்மதங்கள் பெறப்படும். சில சந்தர்ப்பங்களில் நோயாளியின் வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த சிகிச்சையினை வழங்காது விடும்பொழுது கூட சம்மதம் பெறப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து சுகாதார துறை ஊழியர்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சம்மதம் முக்கியமானது ஆகும். நோயாளியின் உரிய சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் வைத்திய பரிசோதனைகள் சட்ட ரீதியில் தனிநபர் தாக்குதலாகவே கருதப்படும்.

பல சந்தர்ப்பங்களில் இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் சிக்கலான சத்திர சிகிச்சைகள், நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை போன்றவற்றினை மேற்கொள்ளும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் சம்மதம் வேண்டப்படும் ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் குடும்பம் என்பது சமூகத்தில் ஓர் முக்கியமான கட்டமைப்பு ஆகும். மேலும் குறித்த நோயாளியினை வைத்தியசாலையில் இருந்து விடுவித்த உடன் குடும்ப உறுப்பினர்களே பாரமெடுத்து பராமரிப்பார்கள் மாறாக மேலைத்தேச நாடுகளில் தனிநபர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் இதன் காரணமாக நோயாளி விரும்பும் பொழுது தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் நோயாளியின் நோய்நிலைமை, சிகிச்சை முறைகள் பற்றி அறிவிக்கப்படும். மேலும் மேலைத்தேச நாடுகளில் நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பராமரிப்பது குறைவு.

இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் இதுவரை காலமும் கணவன் அல்லது மனைவிக்கு நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சையினை மேற்கொள்ளும் பொழுது கணவனாயின் மனைவிக்கும், மனைவியாயின் கணவனுக்கும் தெரியப்படுத்தி வைத்தியசாலையில் அவர்களின் சம்மதமும் வாங்கப்படுவதே வழமை. ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை வாசெக்டமி எனவும் பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை LRT (Ligation and Recession of Tubes) எனவும் அழைக்கப்படுவது யாவரும் அறிந்தமையே.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் இவ்வாறு நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சைக்கிளை மேற்கொள்ளும் பொழுது வாழ்க்கை துணையின் சம்மதத்தினை அதாவது வாழ்க்கைத்துணையின் சம்மதத்தின் பொருட்டு அவர்களின் கையெழுத்தினை  பெறத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட முன்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பெண்களின் உரிமைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என பெண்ணியல் வாதிகளினால் கூறப்படுகின்றது .

சுற்றறிக்கையின் எதிர்கால தாக்கம்

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தனிநபர் உரிமைகளினை அதாவது பெண்களின் உரிமைகளை விட குடும்பத்திற்கு சமூக, கலாச்சார மற்றும் சமய ரீதியில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே பல குடும்ப பெண்கள் எவ்வளவோ வேதனைகள், அவமானங்கள்… போன்றவற்றினை தாங்கி வாழ்ந்து வருகின்றனர். மேலைத்தேச நாடுகளில் “My Car My Petrol” என்று கூறுவார்கள் அதன் அர்த்தம் எனது கார் எனது பெற்றோல் அதாவது நான் உழைத்து வாங்கிய கார் மற்றும் பெற்றோல் நான் அதனை எவ்வாறும் பயன்படுத்துவேன் அல்லது பயன்படுத்தாமலும் விடுவேன். அதனை மற்றவர்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறு மேலைத்தேச நாடுகளில் தனிநபரின் உரிமைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு தனி நபரின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரணமாக குடும்ப அமைப்பு குறித்த நாடுகளில் சிதைவடைந்துள்ளது. இந்நிலையில் கண்முடித்தனமாக மேலை நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை கண்முடித்தனமாக பின்பற்ற தொடங்கினால் நிச்சயம் விபரீதமான சமூக விளைவுகள் ஏற்படும்.

குடும்ப திட்டமிடல் என்பது இலகுவாக சொல்வதானால் எத்தனை பிள்ளைகள் வேண்டும், பிள்ளைகளுக்கு இடையே எத்தனை வயது வித்தியாசம் விட வேண்டும் போன்ற விடயங்களே ஆகும். அதன் ஒரு பகுதியே தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை. குடும்ப திட்டமிடல் என்பது குடும்பத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவு. இவ்வாறான ஓர் முக்கியமான விடயத்தில் தனி ஒருவர் தீர்மானம் எடுப்பது பிரச்சனையிலேயே முடியும்.  

நன்றி

பாம்பு கொலை செய்யுமா??

அண்மையில் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது. அது குறித்து தெரிய வருவதாவது திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.


அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படை, கணேசனின் இரு மகன்களின் செல்போன் உரையாடல்கள் அவர்களின் தொடர்புகள் குறித்து தகவல்கள் சேகரித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் வெளிவந்தன.

தந்தையை கொலை செய்ய சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அதே ஆட்களை வைத்து நாகப்பாம்பை கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அவர் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து இறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சதி திட்டம் போட்டுள்ளனர். அதன்படி இரண்டாவது முறையாக கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கழுத்து பகுதியில் கடிக்க வைத்து கணேசன் இறந்ததை உறுதி செய்துள்ளனர். இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் ஒருவர் பாம்பு அல்லது ஓர் ஏனைய விலங்கின் தாக்குதலினால் உயிர் இழப்பார் எனில் அவரது மரணம் இயற்கை அல்லாத மரணத்தினுள் அடங்குவதினாலும் சட்ட திட்டங்களின் (குற்றவியல் சட்ட கோர்வை) பிரகாரம் விலங்கின் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என்ற வகையில் கட்டாயம் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக பாம்பு கடித்தல் என்பது தவறுதலாகவே நடைபெறும் எனினும் விதிவிலக்காக ஒருசில சந்தர்ப்பத்தில் பாம்பு கொலை செய்யும் கருவியாகவும் தற்கொலை செய்து கொள்ளும் கருவியாகவும் பாவிக்கப் பட்டுள்ளது.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது பாம்பு கடிப்பதினாலே ஏற்படும் அடையாளம் இருப்பதை கொண்டும் பாம்பின் விஷத்தினால் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டும் பாம்பு கடித்தமை உறுதிப்படுத்தப்படும். இலங்கையில் இறந்தவரின் இரத்தத்திதினை பரிசோதித்து பாம்பு கடித்தமையினை உறுதிப்படுத்தும் முறைமை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்த அடையாளம் தெளிவாக தெரியாது இதன் காரணமாகவும் இவ்வாறு இறந்தவரின் உடற் கூராய்வு பரிசோதனை சவால் மிக்கதாக அமையும்.
சில சந்தர்ப்பத்தில் உறவினர்கள் இறந்த பாம்பினையும் கொண்டுவருவார்கள், அத்தகைய சந்தர்ப்பத்தில் பாம்பின் கொட்டும் பற்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் உடலில் காணப்படும் காயத்தில் இருக்கும் பற்களின் அடையாளங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் ஒப்பீடு செய்வதன் மூலம் கடித்த ஓரளவிற்கு பாம்பினை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைமைகள் மோசமடைவதன் காரணமாகவும், பாம்பின் விஷத்தினை இல்லாமல் செய்வதற்காக கொடுக்கப்படும் மருந்தின் ஒவ்வாமை காரணமாகவும் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் யாருக்காவது பாம்பு கடித்து இறப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றும்

மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும்

கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான  நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன  போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது.

மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன  முற்றாக  நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூளையின் செயற்பாடு நிறுத்தப்படல் இறப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு முதலில் நிறுத்தப்படுவதினை தொடர்ந்து இருதய மற்றும் சுவாச செயற்பாடுகள் நிறுத்தப்படும் உதாரணம் தலையில் நிகழும் துப்பாக்கி சூடு. மருத்துவத் துறையில் மனிதனின் இறப்பை பின்வரும் 03 வகைகளாக பிரிக்கலாம்.

1. உடலியல்/மருத்துவ மரணம் (Somatic/Clinical Death): இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் மூளை செயல்பாடு ஆகியவற்றின் முழுமையான, மீளமுடியாத நிறுத்தம். மரணித்த நேரம் என்பது  உயிர்ப்பித்தல் சாத்தியமற்றதாக மாறும் புள்ளியைக் குறிக்கிறது.

2. மூளை மரணம் அல்லது மூளைச்சாவு (Brain Death) : பல்வேறு காரணங்களினால் மூளை அதனுடன் இணைந்த மூளைத்தண்டு  இறத்தல். இதயம் இயந்திரங்களால் தொடர்ந்து துடித்தாலும், மூளைத் தண்டு உட்பட அனைத்து மூளை செயல்பாடுகளின் நிரந்தர இழப்பு மீளமுடியாததாகக் கருதப்படுகிறது.

3. கல/மூலக்கூற்று மரணம்( Cellular/Molecular Death): ஆக்ஸிஜன் குறைந்து உடலியல் இறப்புக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஏற்படும் தனிப்பட்ட செல்கள் மற்றும் திசுக்களின் மரணம். இரத்த ஓட்டம் முற்றாக தடைப்படும் இடத்து அதாவது  ஓட்ஸிசன் இல்லாதவிடத்து மனித மூளையின் கலங்கள் 3 தொடக்கம் 7 நிமிடங்கள் முற்றாக இறந்து விடும், இருதய கலங்கள் 3 தொடக்கம் 5 நிமிடங்களில் இறந்துவிடும் அவ்வாறே தசைகளில் உள்ள கலங்கள் பல மணித்தியாலங்களில் இறக்கும். 

பல சந்தர்ப்பங்களில் உடற்கூராய்வு பரிசோதனைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் என்னிடம் வினவும் முக்கிய கேள்வி யாதெனில் தூக்கு மாட்டி 5 நிமிடத்தில் நாம் தூக்கு கயிற்றினை வெட்டி அகற்றி விட்டொம், நீரில் வீழ்ந்து சில நிமிடங்களில் தூக்கி விட்டொம் ஏன் இறந்து விட்டார் என்பதே ஆகும். அதற்பொழுது உங்களுக்கு விளங்கும் உடலில் முக்கிய அவயவங்களான மூளை மற்றும் இருதயம் போன்றவற்கு 5 நிமிடங்கள் இரத்தம் அல்லது ஓட்ஸிசன் முற்றாக தடைப்பட்டால் இறப்பு நிகழும் என்பது. 

 மூளைச்சாவு, இச்செயற்பாட்டின்பொழுது சில சந்தர்ப்பத்தில் மூளையின் தண்டுவடம் (brainstem) உயிர்ப்பான நிலையில் இருக்கும் அதன் காரணமாக மூளை தண்டு வடத்தில் காணப்படும் சுவாச, இருதயத்தினை கட்டுப்படுத்தும் பகுதிகள் வேலை செய்யும் இதன் காரணமாக குறித்த  நபரின் இருதயம்  துடித்துக் கொண்டிருக்கும் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசத்தினை மேற்கொண்டு கொண்டிருக்கும். ஆனால் மூளை மீள இயங்க முடியாதவகையில் இறந்திருக்கும். சில சந்தர்ப்பத்தில் மூளை தண்டுவடம் இறந்தால் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகளை நாம் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளலாம்

சட்ட ரீதியாக (Transplantation Of Human Tissues Act (No. 48 of 1987)ஒருவரின் மூளை இறந்து விட்டால் அவர் சாவடைந்தவராகவே கருதப்படுவார். எனவே தான் மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து  சிறுநீரகம் போன்ற அவயவங்கள் பெறப்பட்டு  மற்றவர்களுக்கு மாற்றிவிடு செய்யப்படுகின்றன. எனவே மேற்படி செயற்பாட்டினை நாம் சட்டரீதியாக சவாலுக்கு  உட்படுத்த முடியாது.

இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து பல்வேறுபட்ட உடல் அவயவங்கள் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்படும். தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் இவ்வாறு உடல் உறுப்புக்களை தானம் செய்யவதில் முன்னிலை வகிக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை கண் (விழிவெண்படலம்) வழங்குவதில் முன்னிலை நாடாக திகழ்கின்றது. குறிப்பாக பௌத்த மதம் இவ்வாறான உடல் உறுப்பு தானங்களை ஊக்குவிக்கின்றது. சைவ மற்றும் ஏனைய மதங்களில் அவ்வாறான ஊக்குவிப்புக்கள் இல்லை. இதன் காரணமாக மேற்குறித்த மதத்தினரின் மூலம் உடல் உறுப்பு தானங்கள் மற்றும் இரத்த தானம் உட்பட குறைவாகவே நடைபெறுகின்றது.

சைவசித்தாந்த கோட்பாடுகளும் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்பு தானமும்

சைவ சித்தாந்த தத்துவத்தில் முக்கிய இடம் பெறுவது முப்பொருள்கள் ஆகும். அவையாவன பதி, பசு, பாசம் என்பனவே ஆகும். அந்த வகையில் பதியை அடுத்துள்ள நிலையில் உள்ளது பசுவாகும். பசுவானது ஆன்மா, ஆத்மா, உயிர், அனேகன், ஜீவன், ஜீவாத்மா மற்றும் சதசத்து என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உடலை இயக்கக்கூடிய கண்ணிற்குத்தெரியாதொரு சூக்குமப்பொருளே ஆன்மாவாகும். சித்தாந்திகளிக் கருத்துப்படி உடலை இயக்கும் சக்தியே ஆன்மாவாகும்.

சைவ சமயத்தின்படி, உடல் என்பது நிலையற்ற, அழிவுக்குட்பட்ட பொருள், அது ஆன்மாவைத் தாங்கும் ஒரு வாகனம். மாறாக, ஆன்மா என்பது நிலையான, அழிவற்ற, அழிந்துபோகாத ஒரு சாராம்சம். இது உடலை இயக்கும் சக்தி, அறிவின் இருப்பிடம், மற்றும் வாழ்வின் ஆதாரமாகும்.

எனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து சிறுநீரகம், ஈரல் … போன்ற உடல் அங்கங்களை அகற்றுவதினால் அவரின் ஆன்மாவினை நாம் அழிக்க முடியாது மாறாக உடல் அவயவங்களை அதாவது உடலை  இயக்கும் சூக்கும சக்தியான ஆன்மாவினை நாம் வேறு உடலுக்கு மாற்றுவதன் மூலம் குறித்த நபரினை சில காலம் பூமியில் வாழ வழிசெய்யலாம் அதாவது இறந்தவரின் ஆத்மாவினை இன்னொருவரின் உடலில் வாழ வழிசெய்யலாம். உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வாமாக சிந்திப்போம்.

நன்றி      

பலூன் பரிசோதனை: மதுபான அளவு துல்லியமானதா??

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வெல விபத்தினை ஏற்படுத்திய குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மதுபானத்தினை அருந்திய நிலையில் வாகனத்தினை ஓட்டியதாகவும் போலீசார் வேண்டும் என்றே காலம் தாழ்த்தி அவருக்கு மதுபானம் உட்கொண்டு இருக்கின்றாரா என்று கண்டறியும் பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறுவிதமான குற்ற சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இப்பதிவில் breathalyzer எனப்படும் பலூன் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது, அதன் மூலம் எவ்வாறு இரத்தத்தில் இருக்கும் மதுபானத்தின் அளவினை கண்டுபிடிக்கலாம், எந்த காலப்பகுதியில் இந்த பரிசோதனை பொசிட்டிவ் ஆக இருக்கும் … போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு விளக்குகின்றது.

நாம் அருந்தும் மதுபானம் ஆனது களம், இரைப்பை , சிறுகுடல் போன்றவற்றினால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கும் (உறிஞ்சப்படும் வீதமானது பல்வேறுபட்ட காரணிகளில் தங்கியுள்ளது) இவ்வாறு இரத்தத்தில் கலக்கும் மதுபானம் ஆனது உடலின் பல்வேறு அங்கங்களுக்கு செல்லும். அவ்வாறே நுரையீரலுக்கும் சென்றடையும். இவ்வாறு சென்றடைந்த மதுபானமானது நுரையீரலின் சுவாச சிற்றறையில் உள்ள வளியுடன் ஓர் இரசாயன சமநிலையில் (Henry’s Law gas–liquid equilibrium).இருக்கும். அதாவது இரத்தத்தில் உள்ள மதுபானம் சிற்றறை மென்சவ்வின் ஊடாக கசிந்து நாம் சுவாசிக்கும் வளியுடன் தொடுகையில் இருக்கும். இந்நிலையில் நாம் எமது நுரையீரலில் இருக்கும் காற்றினை / வளியினை வெளியில் வெளிச்சுவாசத்தின் மூலமாக  பலமாக ஊதி வாயினால் அதனை பலூன் என்றழைக்கப்படும் — கருவியினுள் செலுத்துகின்றோம் அப்பொழுது அச்சுவாச காற்றில் இருக்கும் மதுபானம் (alcohol ) பலூன் கருவியில் இருக்கும் உணரியில் பட்டு மின்சாரத்தினை உருவாக்கும் (Electrochemical method) அம்மின்சாரம் ஆனது மதுபானத்தின் அளவுக்கு விதசமத்தில் இருக்கும். இந்நிலையில் கருவியில் ஏற்கனவே இருக்கும்  கணனி புரோகிராம் (program) மூலம் இரத்தத்தில் உள்ள மதுபானத்தின் அளவு மறைமுகமாக கணிக்கப்படும் . சில கருவிகளில் Infrared Spectroscopy  என்ற அமைப்பு  மூலம் வெளிச்சுவாச வளியில் உள்ள மதுபானத்தின் அளவு கணிக்கப்பட்டு இரத்தத்தில் உள்ள அளவிற்கு மாற்றப்படும்.

1. பலூன் கருவியில் பெறப்படும் வாசிப்பு வெளிச் சுவாச வளியினுடையதா அல்லது இரத்தத்தின் உடையதா?

தற்போதுள்ள கருவிகளில் உள்ள prograam பிரகாரம் வெளிச்சுவாச வளியில் உள்ள மதுபானத்தின் அளவு கணிக்கப்பட்டு இரத்தத்தில் உள்ள மதுபான அளவுக்கு மாற்றப்பட்டே கருவியில் வெளிக்காட்டப்படுகின்றது .

2. எவ்வாறு இரத்தத்தில் உள்ள மதுபான அளவு கணிக்கப்படுகின்றது?

சாதாரண சுகதேகியில் மதுபானம் அருந்திய பின்னர் மதுபானம் இரத்தம் மற்றும் சுவாச சிற்றறையில் இருக்கும் சமநிலை விகிதாசாரம் Blood : Alveolar air = 2100 : 1 ஆகும். சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதமே இது. ஆனால் இவ்விகிதம் 1700 : 1 தொடக்கம்  2400 : 1 வரை என்ற எல்லைக்குள் வேறுபடும்

BAC (இரத்தத்தில் மதுபானத்தின் அளவு )=Breath alcohol concentration (வெளிச்சுவாச வளியில் மதுபானத்தின் அளவு )×2100 என்ற சூத்திரத்தினை அடிப்படையாக கொண்டே இரத்தத்தில் மதுபானத்தின் அளவு கணிக்கப்படுகின்றது.

3. இலங்கையில் சாரதிகளில் அனுமதிக்கப்பட்ட மதுபானத்தின் அளவு என்ன?

இலங்கை மோட்டார் வாகன சட்ட விதிகளின் பிரகாரம் இரத்தத்தில்  80mg /100ml என்பதே அனுமதிக்கப்பட்ட மதுபான அளவு ஆகும்.

4. பலூன் சோதனை நேரத்திற்கு ஏற்ப வெவ்வேறு முடிவுகளை காட்டுமா? 

ஆம். பலூன் பரிசோதனையானது ஏற்கனவே கூறியவாறு எமது நுரையீரலில் இரத்த மதுபானம் மற்றும் சிற்றறையில் உள்ள வளி என்பனவற்றிற்கு இடையில் இரசாயன சமநிலை ஏற்பட்ட பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சமநிலை கடைசியாக மதுபானம் அருந்தி 20 தொடக்கம் 60 நிமிடங்களின் பின்னரே ஏற்படும். இந்நேர இடைவெளியின் முன்னர் செய்யப்படும் பரிசோதனை எதிர் மறையான விளைவினையே தரும். மேலும் நாம் உட்கொள்ளும்  மதுபானம் ஆனது 06 மணித்தியாலங்களில் முற்றாக எமது உடலில் இருந்து வெளியேற்றப்படும் இதன் காரணமாக 06 மணித்தியாலங்களின் பின்னர் செய்யப்படும் பலூன் பரிசோதனைகள் எதிர் மறை விளைவினையே தரும் மேலும் கடைசி மதுபானம் அருந்தி 1-2 மணித்தியாலங்களின் பின்னர் இரத்தத்தில் மதுபானத்தின் அளவு குறைய தொடங்கும் இந்நிலையில் பலூன் சோதனை எதிர் மறை விளைவினை தரலாம். இதன் காரணமாகவே கடைசி மதுபானம் அருந்தி 2 தொடக்கம் 3 மணித்தியாலங்களில் பலூன் பரிசோதனை மேற்கொள்ள சிபாரிசு செய்ய படுகின்றது.

5. மேற்கத்தேய நாடுகளில் எவ்வாறு இப்பரிசோதனை மேற் கொள்ளப்படுகின்றது?

1. வீதியோரங்களில் – சந்தேகத்திற்கு உரிய சாரதிகளை இனம் காண பயன்படுகின்றது. இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை இலகுவாக சட்ட  சவாலுக்கு உட்படுத்தப்படலாம்.  

2. போலீஸ் நிலையங்களில் – கைதுசெய்யப்பட்ட சாரதி போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு வாய் கொப்புளிக்காமல், நீர் அருந்தாமல், உணவு அருந்தாமல் மற்றும் புகைப்பிடிக்காமல்  60 நிமிடங்கள் வரை காத்திருக்க வைக்கப்பட்டு, முதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 20 தொடக்கம் 60 நிமிடங்களில் உணர் திறன் மிக்க பலூன் கருவியினால் மேற்கொள்ளப்படும். இதன் முடிவு நீதி மன்றிற்கு போலீஸாரினால் சமர்ப்பிக்கப்படும்.

3. ஆய்வுகூடத்தில் – போலீஸ் நிலையத்தில் பெறப்படும் பலூன் பரிசோதனை முடிவினை சாரதி ஏற்றுக்கொள்ளாத விடத்து இரத்தம் பெறப்பட்டு ஆய்வுகூடத்தில் பகுப்பாய்வு செய்யப்படும். இலகுவாக சட்ட சவாலுக்கு உட்படுத்த முடியாது.

6. எவ்வாறான உடற் காரணிகளினால் பலூன் பரிசோதனை முடிவானது பாதிக்கப்படலாம்?

நுரையீரல் நோய்கள், அதிக சுவாச வீதம், குறைந்த சுவாசம், உடல் வெப்பநிலை, பற்களின் ஈறுகளில் அல்லது வாயில் இருக்கும் மதுபானம் போன்றவற்றினால் பாதிக்கப்படலாம்.

நன்றி    

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மக்களிடையே கணிசமான செல்வாக்கு செலுத்துகின்றன. சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட கருத்துக்கள் காரணமாக பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் கூட ஏற்பட்டன. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு கூட சமூக வலைத்தளத்தில் பரப்பட்ட செய்திகளே காரணமாகவே ஏற்பட்டது என்று கூறப்படுகின்றது. அண்மையில் பல செய்திகள் வலைத்தளங்களில் எவ்வித முகாந்தரங்கள் இன்றி பகிரப்படுகின்றன. இவற்றில் பல எவ்விதமான விஞ்ஞானரீதியான அல்லது மருத்துவ ரீதியான உண்மைத்தன்மையும் அற்றவை மற்றும் பலர் தமது குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பகிர்கின்றனர். உதாரணமாக   சிலவற்றினை கீழே தருகின்றேன்

1. அண்மையில் இங்கிலாந்தில் கீத் சூரியபுர என்ற இலங்கையர் நூறு முகப்புத்தக பக்கங்களை திறந்து அதனுடாக குடியேற்ற வாசிகளுக்கு எதிரான மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை , பொய்யாக AI தொழில் நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட படங்களுடன் பரப்பினார். இதன் மூலம் அவர் 300,000 அமெரிக்க டாலர்களை முகநூல் நிறுவனத்தில் இருந்து வருமானமாக பெற்றுக்கொண்டார்.

2. அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவு 1000 இற்கும் அதிகமான பகிர்வுகளை தாண்டியது. அதில் குறிப்பிட்டிருந்த விடயம் மின்னல் தாக்கும் முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று. உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (  ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. மின்னலில் இருந்து தப்பிப்பதற்காக வேறுபல முறைகள் உண்டு.

மேலும் தற்காலத்தில் AI இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட  ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

3. மேலும் ஓர் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது யாதெனில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் போன்ற நகரங்களில் தற்பொழுது சுவாசிக்கும் காற்றின் தரம் வீழ்ச்சியடைகின்றது இது முக்கியமாக வாகனங்கள், தொழிற்சாலைகள் காரணமாக ஏற்படுகின்றது என பதிவிடப்பட்டிருந்தது மேலும் வாகன பாவனையினை மட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது  ஆனால் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில் மேற்குறித்த நகரங்களில் தொழிற்சாலைகள், வாகனங்களின் எண்ணிக்கை மிக குறைவாகும் அத்துடன் மேற்படி நகரங்களில் காற்று மாசுபடுதலுக்கு முக்கிய காரணம்   தற்போதைய வடகீழ் பருவ பெயர்ச்சி காற்றின் காரணமாக இந்தியாவின் பெருநகரங்களில் இருந்து மாசுக்கள் நகர்ந்து இலங்கையினை அடைகின்ற நிலையே ஆகும்.

இவ்வாறு பல சமூக வலைத்தள பதிவுகளை நாம் கூறலாம். உண்மையில் சரியான தகவல்கள் சிறிய தூரம் செல்வதற்கு முன்னர் பொய்யான தகவல்கள் உலகை பலமுறை சுற்றி வந்துவிடுகின்றன.  இவ்வாறு பல பதிவுகள் சமூக வலைத்தளங்களில் (முகநூல், you tube …) மக்களை திசை திருப்பும் நோக்குடனும் தமக்கு வருமானம் ஈட்டும் வகையிலும் பதிவு செய்யப்படுகின்றன. இறுதியாக பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்களே மேலும் சமூக வலைத்தளங்களில் நிலவும் alogur  காரணமாக குறித்த தவறான தகவல்கள் பலரினை சென்றடைகின்றது எனவே சாதாரண பொதுமக்கள் உண்மை நிலையினை அறிய விரும்பினால் குறித்த விடயம் சம்மபந்தமான துறை சார் நிபுணர்கள் மற்றும் கருத்து கூறுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவங்களின் வலைத்தளம், முகநூல் … போன்றவற்றில் இருந்து சரியான தகவல்களினை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறான ஓர்  நிலைமையினை கருதியே 2000 வருடங்களுக்கு முன்னரே வள்ளுவர் “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்று கூறினார் அதாவது எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.         

மின்னல் எச்சரிக்கை!!

டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
5. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
6. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
7. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது) .
8. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
9. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
10. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
11. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
12. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
13. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. 

அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு  முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா?

 உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (  ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

மேலும் தற்காலத்தில் ChatGPT  இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது

சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியாமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி  அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும்.  

 மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்     

“பாலியல் கல்வி” மாணவர்களுக்கு அவசியமா?

எதிர் வரும் வருடத்தில் இருந்து  இலங்கையின் கல்வித்திட்டத்தில் பாலியல் கல்வித்திட்டம் என்ற பாடத்தினை சேர்ப்பது சம்பந்தமான விடயம் பேசப்பட்டு வருகின்ற நிலையில் பலர் அவ்விடயத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பதிவானது மாணவர்களுக்கு அதுவும் குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கு ஏன் “பாலியல் கல்வி” என்பதினை போதிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்ன என்பது பற்றி விலாவாரியா விளக்குகின்றது.

1. மாணவர்களுக்கான பாலியல் கல்வி என்றால் என்ன?

விரிவான பாலியல் கல்வி (Comprehensive Sexuality Education – CSE) என்பது மாணவர்களுக்கு  பாலியல் மற்றும் அவர்களின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய துல்லியமான, வயதுக்கு ஏற்ற தகவல்களை வழங்குகிறது (“age‑appropriate sexual education”), இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்விற்கு மிகவும் முக்கியமானது. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி என்பது விரிவான பாலியல் கல்வியின் ஓர் முக்கிய அம்சம் ஆகும்.

2. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி (age‑appropriate sexual education) என்றால் என்ன?

மாணவர்களின் வயது, அவர்களின் உள விருத்தி என்பவற்றினை கருத்தில் கொண்டு அவர்களின் வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை வழங்குதலே வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி என்பதன் முக்கிய குணாம்சம் ஆகும். இலங்கையிலும் இவ்வாறான வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினையே பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. பலரும் நினைப்பது பாலியல் கல்வி என்றால் காமசூத்ரா என்று  உண்மையில் அவ்வாறல்ல.  

3. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி பாடத்திட்டத்தில் என்ன என்ன விடயங்கள் அடங்கியிருக்கும்?

பாடத்திட்டமானது  வெவ்வேறு வயதினருக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.  அதாவது அவை குழந்தைப் பருவம், சிறுவர் பருவம்  மற்றும் இளமைப் பருவம் ஆகியோருக்குரிய  பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த பல்வேறு தகவல்களை கொண்டிருக்கும். முக்கியமாக  குடும்பங்கள் மற்றும் உறவுகள், மரியாதை, சம்மதம் (consent) மற்றும் உடல் சுயாட்சி ( உடற்கூறியல், பருவமடைதல் மற்றும் மாதவிடாய், கருத்தடை மற்றும் கர்ப்பம், HIV உட்பட பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களின் வகைகள், பாலியல் துஸ்பிரயோகங்களை எவ்வாறு தவிர்ப்பது போன்ற விடயங்கள் வயதிற்கு ஏற்ற வகையில் உள்ளடங்கியிருக்கும்.

4. ஏன் பாடசாலை மாணவர்களுக்கு இத்தகைய கல்வியை கற்பிக்க தொடங்க வேண்டும்?

வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி ஆனது அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மரியாதைக்குரிய சமூக மற்றும் பாலியல் உறவுகளை வளர்க்கவும், பொறுப்பான தேர்வுகளை எடுக்கவும், மற்றவர்களின் உரிமைகளைப் புரிந்துகொண்டு பாதுகாக்கவும் மாணவர்களுக்கு உதவுகின்றது.

மேலும் விஞ்ஞான பூர்வ ஆய்வுகள் இவ்வாறு இளமைக்காலத்தில் வழங்கப்படும் பாலியல் கல்வியானது மாணவர்களின் வாழ்நாள் பூராகவும் நல்விளைவுகளை ஏற்படுத்த வல்லது. குறிப்பாக பாலியல் கல்வி காரணமாக அவர்கள் தமது பாலியல் செயற்பாடுகளை காலம் தாமதித்தே தொடங்குகின்றனர் அதனால் அவர்கள் கல்வி மற்றும் ஏனைய கல்விசாரா செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கின்றனர். மேலும் அவர்கள் பாதுகாப்பான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.

வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வி மூலம் பருவமடைதல் மற்றும் இளமைப் பருவம் உட்பட, அவர்கள் வளரும்போது ஏற்படும் உடல் மற்றும் உணர்ச்சி மாற்றங்களுக்குத் தயாராகி தம்மை தாமே நிர்வகிக்கின்றனர். எனவே தான் பாலியல் கல்வி பாடலை மாணவ பராயத்தில் இருந்தே தொடங்கப்படுகின்றது. திருமணத்திற்கு முன்பாக அல்ல. திருமணத்திற்கு முன்பாக உளவள ஆற்றுப்படுத்துகையே வழங்கப்படுவது வழமை.

5. எந்த வயதில் பாலியல் கல்வியினை கற்பிக்க தொடங்கலாம்?

UNESCO, UNFPA, UNICEF, UN Women, UNAIDS, UN, WHO போன்ற பல்வேறு நிறுவனங்கள் வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை மாணவர்களின் 05 வயதில் இருந்து கற்பிக்க சிபாரிசு செய்கின்றன. விரிவான பாலியல் கல்வி என்பது வாழ் நாள் பூராகவும் கற்பிக்க பட வேண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

6. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை யாரால் கற்பிக்க முடியும்?

பாடசாலைகளில் தகுந்த ஆசிரியர்களினால் அல்லது வீடுகளில் மாணவர்களின் பெற்றோர்கள்

7. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை வழங்காதவிடத்து என்ன தீமையான விளைவுகள் இடம் பெறலாம்?

இன்றைய காலத்தில் மாணவர்கள் சமூக வலைத்தளங்கள், ஏனைய வலைத்தளங்கள் போன்றவற்றினை இலகுவாக அணுகுகின்றனர். இவற்றில் வழங்கப்படும் பிழையான பாலியல் தகவல்கள் மாணவர்களை சென்றடையும் அத்துடன் அவர்கள் அத்தகைய பிழையான தகவல்களை பின்பற்றி தங்களின் வாழ்க்கையினை பிழையான முறையில் கொண்டு செல்வார்கள் இதன் காரணமாக பாலியல் நோய்கள், குடும்ப பிளவுகள், மதுபானம் மற்றும் போதைக்கு அடிமையாதல் போன்றன நிகழும்

8. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியினை பாடசாலை மாணவர்களுக்கு போதிப்பதினால் அவர்கள் பாடசாலை கல்வியினை விட்டு விலகி பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவார்களா?

விஞ்ஞான ரீதியாக அவ்வாறான சான்றுகள் ஏதுமில்லை. மாறாக இவ்வாறான கல்வி வழங்கப்படாத இடத்து அல்லது பற்றாக்குறையாக உள்ள இடத்து இளவயது கர்ப்பம் தரித்தல், HIV உட்பட்ட பாலியல் நோய்களுக்கு உள்ளாதல், இளவயதில் ஆபத்தான பாலியல் நடத்தைகள், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளதால் போன்றவற்றிற்க்கு உள்ளாகின்றனர்.

9. இவ்வாறான கற்கை பாலியல் துஸ்பிரயோக நிகழ்வுகளை குறைக்குமா?

நிச்சயமாக பாலியல் துஸ்பிரயோகங்களை குறைக்கும் அத்துடன் பால்நிலைக்கு எதிரான வன்முறைகளையும் குறைக்கும். மேற்குறித்த விடயங்கள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

10. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மாணவர்களினை காலம் தாழ்த்தி அதாவது பதின்ம வயதுகளின் (21 வயதின் பின்னர்) பின்னர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுரை கூறுவது ஆகும். ஏன்?

மிக இள வயதுகளில் அதாவது பதின்ம வயதுகளில் பாலியல் நடவடிக்கை மற்றும் திருமணங்களில் ஈடுபடுபவர்களிடம் போதிய மன முதிர்ச்சி அற்று இருக்கும் இதன் காரணமாக அவர்களின் திருமண வாழ்வு சிலவருடங்களில் முறிந்து விடுகின்றது அத்துடன் தேவையற்ற கர்ப்பம், ஆபத்தான பாலியல் நடத்தைகள்,  கருக்கலைப்பு, பாலியல் நோய்கள், பெண் தலைமைத்துவ குடும்பம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு  முகம் குடுக்க வேண்டி வருகின்றது. பலர் கேட்கலாம் முந்திய காலங்களில் இளவயது திருமணம் நடைபெற்றது தானே என்று முந்திய காலத்தில் இறுக்கமான சமூக கட்டமைப்பு, கூட்டு குடும்ப அமைப்பு போன்றன நிலவியமையால் பல பிரச்சனைகள் எழவில்லை.

11. வயதிற்கு ஏற்ற பாலியல் கல்வியின் சில உதாரணங்கள் தருக?

வயது 3–5

உடல் பாகங்களின் பெயர்கள் சரியாக சொல்லுங்கள் (மலவாசல் , வாய், மார்பு…. போன்றவை).​சில உடல் பகுதிகள் தனிப்பட்டவை என்று கூறுங்கள். தான் விரும்பாத எந்தத் தொடுதலையும் மற்றவர்களால் நடக்கக் அனுமதிக்க கூடாது.​குடும்பம், நட்பு, உணர்வுகள் பற்றி பேசுங்கள். ஆண் மற்றும் பெண் வேறுபடலாம் ஆனால் அனைவரும் மதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் .​

வயது 5–8

உடல் பாகங்களின் பெயர்கள் மீண்டும் சொல்லுங்கள்; ஆண் மற்றும் பெண் உடல்கள் எப்படி வேறுபடுகின்றன என்று வண்ணமாக விளக்குங்கள்.​ தனிப்பட்ட நடத்தைகள் மற்றும் பொது நடத்தைகள் பற்றி கூறுங்கள்; உதாரணமாக தனிப்பட்ட உடல் தொடுதல் தனிப்பட்ட இடங்களில் செய்ய வேண்டும்.​ நட்பு, அன்பு, கூச்சல் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த அடிப்படைகளை சொல்லுங்கள் ​

வயது 8–11

பதின்ம வயது  மாற்றங்கள் (மார்பு வளர்ச்சி, மாதவிடாய், பெண் மற்றும் ஆண் மாற்றங்கள்) மற்றும் சுய பராமரிப்பு.​ கர்ப்பம் எப்படி நிகழ்கிறது என்பதை எளிதில் சொல்லுங்கள்; பெரும்பாலும் கூடுதல் விபரங்கள் தேவையில்லை.​உடலை தொடுவதற்கு தேவையான அனுமதி குறித்த விளக்கம்,  ‘இல்லை’ என்று சொல்லும் உரிமை, பாதுகாப்பற்ற ரகசியங்களை பகிராதீர்கள்.​

வயது 12–15

பாலியல் தொடர்புகள், கர்ப்பத் தடுத்தல் மற்றும் தொற்று நோய்கள் குறித்து தெளிவாக கூறுங்கள்.​ காதல், பரிமாற்றங்கள், கிளாமர்ஸ், லிங்க அடையாளங்கள் பற்றி பேசுங்கள்.​ ஆன்லைன் ஆபத்துக்கள் (சேட்சிங், படங்கள் பகிர்தல்) குறித்து அறிவுறுத்துங்கள்.​

வயது 15–18

கர்ப்பத் தடுத்தல் முறைகள் மற்றும் சட்ட அறிவுறுத்தல்களை விரிவாக கூறுங்கள்.​ உறவுகளிலும் பாதுகாப்பிலும் பேசுவதற்கான திறன்களை வளர்க்கவும்.​ மதிப்பும் பொறுப்பும், வாழ்வுத் திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி விளக்குங்கள்.​

நன்றி

மண்சரிவுகளும் மரணங்களும்

இலங்கையின் பல பகுதிகளில் பெய்த கடுமையான மழையினை தொடர்ந்து பல இடங்களில் மண்சரிவுகள் இடம்பெறுகின்றன குறிப்பாக மலையக பகுதிகளில் இவ்வாறு இடம் பெறுகின்றன. மலைப்பகுதிகளில் இவ்வாறன மண்சரிவுகள் இடம் பெறுவதற்கு பல்வேறு மனித மற்றும் இயற்கை காரணங்கள்  எதுவாக அமைகின்றன. இவ்வாறான மண் சரிவுகளின் பொழுது சிக்கும் மனிதர்களுக்கு எவ்வாறு மரணம் சம்பவிக்கின்றது என்பது குறித்து இப்பதிவு விளக்குகின்றது

1. மண் சரிவின் பொழுது கட்டிட இடிபாடுகள், மரங்கள் போன்றன மனிதரின் மேல் நேரடியாக வீழ்வதினால் காயங்கள் ஏற்பட்டு இறப்பு ஏற்படும்.

2. மண் சரிவின் பொழுது கணிசமான மனிதர்கள் உயிருடன் கட்டிட இடிபாடுகளினுள் மாட்டி விடுவார்கள். இதன் காரணமாகவே இறுதிமட்டும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறும். இவ்வாறு சிக்கியவர்களின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளின் மீது இடிபாடுகளினால் கடுமையான அழுத்த விசை பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் நெஞ்சு மற்றும் வயிற்கு பகுதிகளின் சுவாச அசைவு தடைப்படும் இந்த நிலைமை சட்ட மருத்துவத்தில் traumatic asphyxia என்றழைக்கப்படும். இதன் காரணமாக அவர்கள் மரணத்தினை தழுவுவார்கள்.

Traumatic asphyxia இல் தப்பிப் பிழைத்த ஒருவரின் தோற்றம்

3. மேலும் மண் சரிவின் பொழுது நீர், சேறு என்பன அவர்களின் சுவாச தொகுதியினுள் செல்வதினாலும் இறப்பு ஏற்படுகின்றது.

4. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மாரடைப்பு போன்ற இயற்கையான நோய்நிலைமைகள், மின்சார தாக்குதல் போன்றவற்றினாலும் மரணத்தினை தழுவுகின்றனர்.

இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் நிகழும் பொழுது அதிகளவிலான மக்கள் இறப்பார்கள் இந்நிலையில் இறந்த உடலங்களுக்கு முற்று முழுதான உடற் கூராய்வு பரிசோதனை செய்வது வழக்கம் இல்லை. எனினும் தற்போதுள்ள சட்ட நடைமுறைகளின் பிரகாரம் வெளிப்புற பரிசோதனைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரிகளினால் மரணத்திற்கான காரணம் கொடுக்கப்பட்டு உடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றது. ஆனால் செயற்கையாக மனிதனினால் உண்டாக்கப்பட்ட அனர்த்தங்கள் ஆன குண்டு வெடிப்பு போன்றவற்றின் பொழுது முற்று முழுதான உடற் கூராய்வு செய்யப்படுவது வழமை. மேற்குறித்தவையே இலங்கையின் சட்ட திட்டங்கள்.

அனர்த்தங்களின் பொழுது உடற்கூராய்வு பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கிய நோக்கம் அனர்த்தங்களின் பொழுது சிக்கி சிதலமாகிய உடலங்களை சரிவர அடையாளம் காண்பதற்கே ஆகும். இவ்வாறு அடையாளம் காண்பதன் மூலமே ஒருவரின் உடலத்தினை சரியான உறவினர்களிடம் கையளிக்க முடியும். அதன் பின்னர் பின்னுருத்தாளிகள் இறந்தவரின் மரண சான்றிதழை பெறுவதன் மூலம் இறந்தவரின் ஓய்வூதியம், காப்புறுதி, சொத்து என்பவற்றை சட்ட ரீதியாக பெற தகுதி பெறுவார்கள்.

நன்றி