மரண வீட்டில் போலீஸார் அத்துமீறியது ஏன்?

அவருக்கு 70 வயது. அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாதசாரி கடவையில் வீதியை கடந்து சென்ற பொழுது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவ்வயோதிபரினை  மோதித்தள்ளியது. படுகாயமடைந்த அவர் வைத்திய சாலையில் சுயநினைவு அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த கசிவு உள்ளதாக கூறி அவரின் தலைப்பகுதியில் இரு முறை சத்திர சிகிச்சை செய்தார்கள். ஆனால் அவருக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. இவ்வாறு அவர் வைத்தியசாலையில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்ற பொழுது அவருக்கு சுவாச குழாய்களில் சளி அதிகம் அடைப்பதாக கூறி வைத்தியர்கள் கழுத்து பகுதியில் ஒரு சத்திர சிகிச்சை மூலம் குழாய் ஒன்றினை பொருத்தினார்கள். மேலும் அவர்கள் அவருக்கு உணவு கொடுப்பதற்கு வசதியாக வயிற்று பகுதியிலும் குழாய் ஒன்றினை பொருத்தினார்கள்.

இவ்வளவு செய்தும் அவரின் உடல் நிலை முன்னேறவில்லை. உறவினர்கள் அவரினை தாம் வீட்டில் வைத்து  பராமரிப்பது என்று முடிவெடுத்து வைத்தியர்களின் ஆலோசனைக்கு எதிராக வீடு கூட்டி வந்து அவருக்கு தேவையானவற்றினை  செய்தார்கள். இவ்வாறு இருவாரங்கள் கழிந்த நிலையில் அவர் ஒருநாள் இரவு தீடீர் என மூச்சு விட கடினப்பட்டு இறந்து விட்டார்.

அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தினை மறந்து அவர் வயோதிபம் காரணமாக இறந்ததாக கூறி கிராம சேவையாளரிடம் இருந்து கடிதம் ஒன்றினை பெற்று உரிய மரண சடங்குகளை செய்தார்கள். அப்பொழுது அப்பிரதேச போலீசார் அங்கு வந்து அவரது உடலினை பலாத்காரமாக கைப்பேற்றி அருகில் உள்ள வைத்தியசாலையில் உடற் கூராய்வு பரிசோதனைக்காக ஒப்படைத்தார்கள்.

5b6a1130693a2.image

அருகில் உள்ள வைத்திய சாலையில் நிகழ்ந்த உடற் கூராய்வு பரிசோதனையின் பின்னர் அவருக்கு நீண்ட காலமாக சுயநினைவு அற்ற நிலையில் படுத்த படுக்கையாக இருந்ததன் விளைவாக இரு நுரையீரல் களிலும் நிமோனியா கிருமித்தாக்கம் வந்ததன் காரணமாக அவர் இறந்ததாக அறியப் பட்டது.
மனிதர்களுக்கு பல்வேறுபட்ட காரணிகளால் காயங்கள் ஏற்படலாம். சிலசந்தர்ப்பங்களில் மரணம் உடனடியாக ஏற்படும். பலசந்தர்ப்பங்களில்  பலர் காயப்பட்டு ஒருசில மாதங்கள் அல்லது ஒருசில வருடங்களின் பின்னரே இறக்கின்றனர். அப்பொழுது தான் பிரச்சனை எழும்புகிறது. நீண்ட காலம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்ததன் காரணமாக பெரும்பாலும் உறவினர் இந்நிலைமை ஏற்பட்டமைக்கான அடிப்படை காரணத்தினை மறந்து விடுவார்கள் அல்லது மிக விரைவாக இறுதி சடங்குகளை நடத்த முற்படுவர். இதன் பொழுது அவர்கள் உடற் கூராய்வு பரிசோதனை பற்றி மறந்து விடுவார்கள்.

உண்மையில் இவ்வாறன இறப்புகளின் பொழுது பின்வரும் வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்
1. என்ன காரணத்திற்காக அவர் இறந்தார்?
2. அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் இறப்புக்கு எவ்விதத்தில் செல்வாக்கை செலுத்தியது?
3. அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும் மரணத்திற்கான காரணத்திற்கும் நேரடித்தொடர்பு உண்டா?
4. அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய வருத்தம் அல்லது குருதி அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரித்து மரணம் அடைந்தாரா?
5. அவருக்கு ஏற்பட்ட காயம் அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்கள் தவிர புதிதாக கண்டுபிடிக்க பட்ட நோய் நிலமை காரணமாக இறந்தாரா?
மேற்கூறப்பட்ட வினாக்களுக்கான விடை தெரியும் நிலையிலேயே ஓர் குற்றவியல் விசாரணையினை தொடர்ந்து முன்னெடுக்க முடியும். அதன் காரணமாகவே பொலிஸார் மரண வீட்டின் பொழுது அத்துமீறி உடலினை எடுத்து சென்று உடற் கூராய்வு செய்தனர்.
இவ்வாறு பாரிய காயங்கள் ஏற்பட்ட பின்னர் ஒருவர் உயிர் வாழும் காலம் ஆனது அவரின் வயது, ஏற்கனவே உள்ள நோய் நிலமை, காயத்தின் தன்மை, காயம் ஏற்பட்ட பிரதேசம், வழங்கப்ப ட்ட வைத்திய வசதிகள், வழங்க பட்ட தாதிய கவனிப்பு என்பவற்றில் தங்கியுள்ளது.

Are you Virgin?

ஓர் பெண்ணானவள்  மருத்துவ ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எப்பொழுது கன்னித்தன்மையை  இழக்கின்றாள் என்பது பற்றிய பதிவு

முதலில் மருத்துவ ரீதியாக நோக்குவோம், பெண்ணின் யோனி  என்பது சதைப் பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். இது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பெண்குறிக்கும் இடைப்பட்ட பாதையாகும். பொதுவாக வெளிப்புற யோனியானது கன்னிச்சவ்வு  (HYMEN) எனப்படும் யோனிச்சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும். இதன் ஆழமான முடிவில் கருப்பையின் கழுத்துப்பகுதியான கருப்பை வாய் சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும்.

பெண்ணில் கன்னி சவ்வானது பல்வேறு பட்ட வடிவங்களில் (Various morphological shapes) காணப்படலாம். சாதாரணமாக முதன் முறை உடல் உறவு கொள்ளும் பொழுது  மருத்துவ ரீதியாக இங்கு கன்னிச்சவ்வில் காயங்கள் ஏற்படலாம். அதன்காரணமாக பெண்ணிற்கு சிறிதளவு இரத்த போக்கு ஏற்படும். இதனை வைத்து கொண்டே எமது மூதாதையர் ஓர் பெண் கன்னி கழிந்தவளா? அல்லது கழியாதவளா? என்று கூறிவந்தனர்.

hy

ஆனால்   கன்னி சவ்வின் வேறுபட்ட வடிவங்கள் (especially in case of fimbriated hymen)  காரணமாக முதன் முறை உடலுறவின் பொழுது கன்னிச்சவ்வு கட்டாயம் சேதமடைந்து இரத்தம் வரவேண்டிய தேவை இல்லை. மேலும் இவ்வாறு ஓர் பெண்ணின் கன்னித்தன்மையினை அளவீடு செய்வது ஓர் விஞ்ஞான ரீதியான ஏற்றுக்கொள்ளத்தக்க முறை அல்ல.

சட்ட ரீதியாக பின்வரும் சந்தர்ப்பங்களில் ஓர் பெண்ணானவள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபடலாம்,  ஏதாவது ஆள் ஒரு பெண்ணின் சம்மதமின்றி அல்லது வலுக்கட்டாயம்,பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக அல்லது அவளுக்கு கொலை அல்லது காயம் விளைவிப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தி அல்லது அவளை சித்தசுவாதீனமற்ற நிலையிலுள்ளபோது அல்லது குடிபோதையில் உள்ளபோது அல்லது சட்டமுறையற்ற தடுத்துவைப்பிலுள்ள போது சம்மதம் பெற்று பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் வன்புணர்வு  குற்றம் புரிந்தவராவார்.

சட்ட ரீதியாக பார்க்கும் பொழுது பாலியல் வன்புணர்வின்பொழுது கட்டாயம் கன்னிச்சவ்வு சேதமடைய வேண்டிய தேவை இல்லை. தற்போதைய இலங்கை சட்ட திட்டங்களின் பிரகாரம் ஆணின் இலிங்க உறுப்பானது பெண் யோனி வாசலில் வைக்க பட்டாலே (merely penetration) அது பாலியல் வன்புணர்வுக்கு சமனானது. ஆண் கட்டாயம்   இலிங்க உறுப்பினை உட்செலுத்த வேண்டிய தேவை இல்லை.

சட்ட ரீதியாக பார்க்கும் பொழுதுஇவ்வாறே பாதிக்க பட்ட பெண்ணுக்கு கட்டாயம் வேறு உடற்காயங்கள் ஏற்படவேண்டிய தேவையும் இல்லை.

யார் தான் நிபுணர்?

 பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஓர் பெண் உள்ளாகும் பொழுது அவள் வைத்தியசாலையில் அனுமதிக்க படுவாள். இதன் பொழுது பொதுமக்கள் யார் வைத்தியர் அவரினை பரிசோதிப்பார்கள்  என்று தெரிந்து இருக்க வேண்டும்.  இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரே இந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர். அவரின் அறிக்கையினையே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். அனுபவம் அற்ற வைத்தியர்கள் , மகப்பேற்று நிபுணர்கள் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர்கள் இவ்வாறனவர்களை பரிசோதித்து பிழையான அபிப்பிராயங்களினை தெரிவித்த பல சந்தர்ப்பங்கள்  உண்டு.

expertpic

அவசியமானால் சேதமடைந்த கன்னிசவ்வினை உரிய வைத்தியர்கள் மூலம் திருத்திக்கொள்ளவும் இலங்கையில் வசதிகள் உண்டு.

மீண்டும் தோண்டப்படும் உடல்கள்

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதல் நடாத்தி பலியான ISIS தீவிர வாதிகளின் புதைக்கப்பட்ட உடல்கள் மீண்டும் DNA பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டு இருக்கின்றன. சட்ட மருத்துவத்தில் புதைக்கப்பட்ட ஒரு உடல் ஆனது பின்வரும் சந்தர்ப்பங்களில் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்

  1. இறந்தவர்கள் உரிய முறையில் அடையாளம் காணாமல் அதாவது விஞ்ஞான முறையில் யாவரும் ஏற்றுக்கொள்ள தக்க முறையில் அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்டிருந்தால் உரிய முறையில் DNA பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் முகமாக தோண்டி எடுக்க படும்.
  2. மரணம் சம்பவித்த சூழ்நிலை / சந்தர்ப்பம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்க பெறும் இடத்து, மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  3. மரணத்திற்கான காரணம் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைக்க பெறும் இடத்து, மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  4. முதலில் நடைபெற்ற உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படாமல், மரணம் அடைந்தவர் இயற்கை மரணம் அடைந்ததாக சான்றிதழ்கள் தயாரிக்க பட்டு இறந்தவரின் உடல் புதைக்கப்படும் இடத்து மீளவும் உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  5. முதலில் உடற்கூராய்வு பரிசோதனை செய்யப்படாமலும் , உரிய சான்றிதழ்கள் தயாரிக்க ப்படாமலும்  இறந்தவரின் உடல் புதைக்கப்படும் இடத்து மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்படும். உதாரணமாக பலசந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்டு இரகசிமான முறையில்  புதைக்கப்படும் உடல்கள்.
  6. முதலில் உடற்கூராய்வு பரிசோதனை தகுதி குறைந்த அல்லது அனுபவம் அற்ற வைத்தியரினால் செய்யப்பட்டு , உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் கேள்விக்கு உட்படுத்த பட்டு பல வினாக்களுக்கு உரிய விடை சட்ட வைத்திய அதிகாரியினால் கூறப்படாதவிடத்து இறந்தவரின் புதைக்கப்பட்ட  உடல்  மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.
  7. முதலில் நடைபெற்ற உடற்கூராய்வு பரிசோதனையின் பொழுது உரிய சான்று பொருட்கள் மற்றும் மாதிரி பொருட்கள் பெற்றுக்கொள்ள படாத விடத்து இறந்தவரின் புதைக்கப்பட்ட உடல்  மீளவும்  உடற்கூராய்வு பரிசோதனைக்காக தோண்டி எடுக்க படும்.

மேலே கூறப்பட்ட சந்தர்ப்பங்கள் தவிர பல்வேறுபட்ட சிவில் காரணகளுக்காகவும் புதைக்க ப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப் படலாம், அவையாவன

  1. பல்வேறு பட்ட காரணங்களால் மரண சடங்குகள் உரிய முறையில் செய்யப்படாமல் புதைக்க பட்ட உடல்கள், மரண சடங்குகளை உரிய முறையில் செய்யும் முகமாக
  2. கல்லறைகள் மற்றும் மயானங்கள் விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக
  3. வீதி விஸ்தரிப்பு நடவடிக்கைக்காக

ஒரு மரணத்தில் நாம்  சந்தேகம் கொள்ளும் இடத்து தீடீர் மரண விசாரணை அதிகாரியிடத்து விளக்கத்தினை பெற்று கொள்ளலாம் , அவ்விளக்கம் திருப்பதி அளிக்காவிடின்   நீதவான் நீதி மன்றில் சட்ட தரணி  மூலம்  நாம் உரிய முறைப்பாட்டினை மேற்கொண்டு உடலினை தோண்டி எடுத்து நாம் விரும்பிய சட்ட வைத்திய அதிகாரியின் மூலம் உடற் கூராய்வு பரிசோதனையினை மேற்கொள்ளலாம்.

DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

பாலியல் துஸ்பிரயோகமும் DNA பரிசோதனையும்

 

அறியாமையா? கஞ்சத்தனமா?

அது ஒரு விபத்து சம்பந்தமான உடற் கூராய்வு பரிசோதனை. போலீசார் கூறினர் சேர், இது அவனுடைய நான்காவது முச்சக்கர வண்டி, இறந்த நபர் 33 வருடங்களாக முச்சக்கர வண்டி ஒட்டி தான் பிழைத்தார் . நேற்றைய தினம் அவரது முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதிய நிலையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் கூறினர் சேர், இது மிக்க சந்தேகத்திற்குரியது ஏனென்றால் கழுத்தில் வெட்டு காயம் போன்று ஒரு காயம் காணப்படுகின்றது, நீங்கள் ஒருமுறை வடிவாக பாருங்கள் என்றார். மேலும் அவர் கூறினார் இறந்தவர் வாகனம் ஓட்டும் இருக்கையில் இருந்தவாறே இருந்தார்.

இவ்வாறான சம்பவங்களில் சட்ட வைத்திய அதிகாரி மிகத் திறமையாக செயற்பட வேண்டும் இல்லாவிடில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கவேண்டிவரும். மிக கவனமாக காயங்களை ஆராய்ந்த பொழுது அவை உண்மையிலே கண்ணாடியினால் வெட்டுப்பட்டதனால் உண்டாகியது  என்று தெரியவந்தது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக விபத்து நடந்த இடத்திற்கு குறித்த பொலிஸாரின் உதவியுடன் சென்ற பொழுது பல கண்ணாடி துண்டுகள் உடைந்த நிலையில் வீழ்ந்து காணப்பட்டன அவற்றில் இரத்த கறையும் கூடவே காணப்பட்டது.

வாகனத்தில் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு வகையான கண்ணாடிகள் பொருத்தபட்டிருக்கும்.

car-glass

இவ்வாறு சாதாரணமாக இரு வகையான கண்ணாடிகள் வாகனத்தில் பயன்படுத்தப்படுகின்றன

  1. LAMINATED WINDSCREEN GLASS

இங்கு முக்கியமாக இரு கண்ணாடி துண்டுகளுக்கு இடையில் ஒரு வகையான ஒளியினை ஊடுகடத்த கூடிய பிளாஸ்டிக் polyvinyl butyral (PVB) இடப்பட்டிருக்கும். இது மிக உயர்ந்த வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் தயாரிக்க படுவதால் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் பொழுது மிகச்  சிறிய துண்டுகளாக உடைந்து விழும். இதனால்  வாகனத்தினுள் இருப்பவருக்கு கண்ணாடி உடைவதால் ஏற்படும் காயங்கள்  குறைவாக இருக்கும். இவ்வகையான கண்ணாடியே மிக பாதுகாப்பானது ஆகும்.

laminated-glass

  1. TEMPERED GLASS

இவ்வகையான கண்ணாடிகள் சாதாரணமாக நாம் பாவிக்கும் கண்ணாடியை விட பலமானதும் உறுதி யானது ஆகும். இவையும் உடையும் பொழுது பெரிய கூர்மை அற்ற துண்டுகளாக உடையும் இதனால் வாகனத்தினுள் இருப்பவருக்கு கண்ணாடி உடைவதால் ஏற்படும் காயங்கள்  ஓரளவு குறைவாக இருக்கும் .

windscreen-glass-breaking

ஆனால் இலங்கை போன்ற நாட்டில் அறியாமை,  கஞ்சத்தனம் போன்ற காரணங்களினால் முச்சக்கர வண்டி போன்றவற்றிக்கு நாம் சாதாரண தேவைகளுக்கு பாவிக்கும் தடிப்பு குறைந்த கண்ணாடிகளையே பாவிக்கின்றனர். இவ்வாறன சந்தர்ப்பங்களில் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் பொழுது அதன் முகப்பு அல்லது பக்க கண்ணாடி உடைந்து உள்ளிருப்பவருக்கு பலத்த காயங்களை உண்டாக்கும். முக்கியமாக சாரதி ஆசனத்தில் இருப்பவருக்கு உயிர் ஆபத்தும் ஏற்படலாம்.

1606.m00.i125.n051.s.c12.407250460-broken-

இங்கும் சாரதிக்கு அவரது முச்சக்கர வண்டியினுள் இருந்த முகப்பு கண்ணாடி உடைந்து கழுத்து பகுதியினை தாக்கிய பொழுது அவரது கழுத்து பகுதியில் தோலின் கீழாக காணப்படும் External Jugular Vein என்ற நாளம் வெட்டு பட்டதாலேயே இரத்த போக்கு நிகழ்ந்து இறக்க நேரிட்டது. இங்கு இறந்தவருக்கு கழுத்து பகுதியினை தவிர வேறு பகுதிகளில் பாரிய காயங்கள் இல்லை என்பது குறிப்பிட தக்கது. மேலும் இவ்வகையான கண்ணாடிகள் உடையும் பொழுது கண் போன்றவற்றிக்கும் பாரிய காயங்கள் ஏற்பட  சந்தர்ப்பம் உண்டு.

“இளம் கன்று பயம் அறியாது”

அவனுக்கு இரண்டரை வயது தான். அவன் சராசரி குழந்தைகளை விட அதிக நிறை உள்ளவன். அவன் குடுகுடு என்று ஓடிவரும் அழகே தனி அழகு தான். அவனது தகப்பன் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர். தாய் ஓர் ஆசிரியர் அவளுக்கு ஓர் பெண் பிள்ளை அதாவது அவனுக்கு ஓர் தங்கை கிடைத்து இப்ப தான் 2 மாதங்கள் ஆகிறது. அன்று மதியம் பெண் பிள்ளைக்கு பாலூட்டி கொண்டு இருந்தாள். அவன் வீட்டின் முன் விறாந்தயில் தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்த தான் . அவனது தகப்பனார் வேலையால் வீடு திரும்பவில்லை. அவனது வீட்டின் முன் பகுதியில் உயர்ந்த இரு பூச்சாடிகள் உண்டு.  அவனின் தகப்பனார் அவற்றில் வழமையாக நீர் நிறைத்து சில வளர்ப்பு மீன்களை வளர்த்து வந்தார். பெரும்பாலான நேரங்களில் தகப்பனார் அவனை தூக்கி வைத்து அம்மீன்களை காட்டுவார். அவனும் பார்த்து ரசிப்பான். அவனுக்கு அவற்றினை பார்த்து இரசிப்பதில் கொள்ளை விருப்பம். அன்று இரவு நேரத்தில் விழித்து இருந்ததன் காரணமாக தாய் சிறிது நேரம் அயர்ந்து தூங்கி விட்டாள் . சிறிது நேரத்தில் கண்விழித்து தேடிய பொழுது அவன் விளையாடி கொண்டிருந்த இடத்தில் இல்லை. வெளியே பார்த்த கணம் அவள் திகைத்து விட்டாள். அந்த சீமேந்தினால் செய்யப்பட்டுள்ள பூச்சாடி அவன் மீது  விழுந்து இருந்தது. அவனது தலையில் பாரிய காயம் அதிலிருந்து இரத்தம் கொட்டிய படி இருந்தது, அவன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் கிடந்தான்.

அவள் உதவி கோரி கத்தினாள் சிறிது கன நேரத்தில் பலர் கூடினர் அவனை வைத்திய சாலையில் அனுமதித்தனர். தூரதிஸ்ட வசமாக அவன் வெளிநோயாளர் பிரிவில் இறந்து இருந்தான்.

(மேலுள்ள படத்தில் சிதறிய நிலையில் வீழ்ந்து கிடக்கும் மலர் சாடியினை கவனிக்கவும்)

இங்கு அவனின் மேல் விழுந்த சாடி 3 அடி உயரத்தில் சிமேந்தினால் ஆனது அத்துடன் கிட்டத்தட்ட 24 kg நிறை உடையது. இங்கு சாடியின் அடியானது மெல்லிய தண்டு (stem) மூலம் மேற்பகுதியில் உள்ள சாடியுடன் இணைக்க பட்டிருந்தது மேலும் இச்சாடியாணது நான்கு பகுதிகள் ஆக இருந்தது. இதனால் அது நிலத்தில் உறுதியாக நிற்காது. மேலும் மேற்புறத்தில் நீர் இருக்கும் போது அது இலகுவில் ஆடி சாடி விழுவதற்கான சாத்தியம் அதிகம் ஆகும். இந்த நிலையில் விளையாடிய குழந்தை அதனை பிடித்து ஆடியதன் காரணமாகவே அது அவன் மீது வீழ்ந்தது.

முக்கியமாக 1 தொடக்கம் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பல்வேறுபடட உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் விபத்துக்களை நாம் சாதாரணமாக வசிக்கும் வீட்டில் சந்திக்கும் சாத்தியம் உள்ளது. இது சம்பந்தமாக இப்பதிவு உள்ளது.

மேற்குறிபபிட்ட வயதுடைய குழந்தைகள் மிக துடிப்பு மிக்க வர்கள் இவர்கள் இவ்வாறு பொருட்களை இழுத்து பார்ப்பது வழமை . இதன் பொழுது இவ்வாறன அவர்களின் உடல் மீது வீழ்ந்து சாதாரண உயிர் ஆபத்து அற்ற காயங்கள் முதல் உயிர் ஆபத்து மிக்க காயங்களையும் அநியாய மரணங்களையும் ஏற்படுத்தும். மேலும் இவ்வகை வயதுடைய சிறுவர்கள் வீட்டின் உயரமான இடங்களுக்கு ஏறி அதிலிருந்து தவறுதலாக வீழ்தல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை அருந்துதல், முக்கியமாகக் கிராம புறங்களில் மண்ணெண்ணெய் ஆனது பச்சை நிற குளிர்பான போத்தலகளில் உள்ள பொழுதும் சிறுவர்களின் கைக்கு எட்ட கூடிய இடத்தில் உள்ள பொழுதும் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. மண்ணெண்ணெய்யின் நீல அல்லது ரோஸ் நிறம் கூட ஒருவிதத்தில் சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கும். மேலும் இவ்வயதுடைய சிறுவர்கள் வீட்டினுள் அமைந்த கிணறு மற்றும் தண்ணீர் தொட்டி போன்றவற்றில் வீழ்ந்தும் மரணமடைந்த சம்பவங்கள் நிறைய உண்டு. இது தவிர சமையலறையில் உயரத்தில் உள்ள அல்லது அடுப்பில் உள்ள நீர் , கறி அல்லது பால் நிறைந்த சூடான பாத்திரங்களை தம் மேல் இழுத்து வீழ்த்தி எரி காயங்களுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. வீட்டில் உள்ள ரோல் பிளக்கில் (Role plug) கைவிட்டு மின்சார தாக்குதலுக்கு உள்ளான குழந்தைகளும் உண்டு. மேலும் வயது வந்தவர்கள் பாவிக்கும் மருந்துகளை தவறுதலாக உண்ட மற்றும் குழந்தைகளுக்கான பாணி மருந்தினை அளவுக்கு அதிகமாக பருகிய குழந்தைகளும் உண்டு.

நாம் வீட்டில் பாவிக்கும் வாகனத்தில் சிக்கிய குழந்தைகளும் உண்டு. இது சம்பந்தமாக இன்னொரு பதிவில் விபரமாக குறிப்பிடுகின்றேன்.  எனவே முக்கியமாக 1 வயது தொடக்கம் 5 வயது வரை உள்ள வீட்டில் பெற்றோர் குழந்தைகள் தொடர்பில் கவனமாக இருப்பதன் மூலம் அநியாயமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

வருட இறுதியில் வருட இறுதியினையும் புது வருட பிறப்பினையும் கொண்டாடும் முகமாக பல்வேறுபட்ட வியாபார நிறுவனங்கள் வெவ்வேறு சலுகைகளினை வழங்குவதுண்டு. நகர்ப்புறங்களில் உள்ள கிளப்புகள் மற்றும் சில ஹொட்டேல்கள் போன்றன இவ்வாறு சலுகைகளினை வழங்குவதுண்டு. இவற்றில் முக்கியமானது வருட இறுதி நாளான்று அதாவது டிசம்பர் 31 திகதி இரவு நடக்கும் விருந்துபசாரங்கள். இவ்வாறன ஒரு விருந்து உபசாரத்திலே தான் அவன் கடைசியாக பங்குபற்றியிருந்தான்.    இவ்விருந்து உபசாரத்தில் அளவு கணக்கு இன்றி குறிப்பிட்ட வகை மதுபானம் வழங்கப்பட்டது. அவனும் அவனது நண்பர்களும் குறிப்பிட்ட விருந்தில் பெரும் தொகை பணத்தினை செலவழித்து பங்குபற்றி இருந்தனர். இதன்போதுதான் அச்சம்பவம் நடைபெற்றது. அவன் நிறைபோதையில் கோழி பொரியலினை (பைட்ஸ்) சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இல்லை விழுங்கிக் கொண்டிருந்தான் என்றே சொல்லவேண்டும். அப்பொழுது அவனது தொண்டையில் கோழியின் எலும்பு ஒன்று சிக்கிய மாதிரி இருந்தது, ஆனால் அவன் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை மேலும் மதுவினை அருந்தியும் பாட்டுக்களினை பாடியும் விருந்தினை களித்து  வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்த நாள் தொடக்கம் அவனுக்கு கடுமையான தொண்டை நோ அவன் மாலை தனியார் வைத்தியசாலைக்கு  ஒன்றிற்கு சென்று வைத்தியர் நிபுணர் ஒருவரினை சந்தித்தான். அவரும் சில குளிசைகளினை கொடுத்து ஓர் பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால் அவனுக்கு சுகம் வந்த பாடில்லை. திரும்பவும் இரண்டு நாட்களின் பின்னர் அதே வைத்தியரினை சந்தித்து தனது தனது உடல் நிலையில் மாற்றம் இல்லை என்று சொன்னான். அவரும் அவனை அரசாங்க வைத்தியசாலையில் தனது வாட்டில் அனுமத்தித்தார். அங்கு அவனுக்கு இரத்தம் இரத்தமாக சத்தி வந்தது அத்துடன் மலமும் கடும் கறுப்பு நிறத்தில் போனது இது பற்றி விடுதி வைத்தியரிடம் கூறியபொழுது அவர் சொன்னார் பெரிய டொக்டர்  வந்து பார்ப்பார் என்று ஆனால் அவர் வருவதற்கு முதலேயே அவனது உயிர் அவனை விட்டு பிரிந்து இருந்தது.

இறுதியில் அவனது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது அவனது சமிபாட்டு தொகுதி முழுவதும் அவனது இரத்தத்தினால் நிறைந்து இருந்தது. மேலும் அவனது இரைப்பையின் உட்பகுதி பல்வேறு இடங்களில் உள்ளே சிக்குப்பட்டிருந்த கோழியின் எழும்பினால் கிழிக்க பட்டு அதில் இருந்து இரத்தம் வந்தபடி இருந்தது.

இங்கு இரண்டாவது படம் அவரின் இரைப்பையில் இருந்து எடுக்க பட்ட 1.5kg நிறையுடைய இரத்த கட்டியினை காட்டுகின்றது

நாம் உணவு விழுங்கும் செயற்பாடானது எமது மூளையினால் கட்டுப்படுத்தபடுகின்றது. இதில் பல மூளையின் நரம்புகள் பங்குபற்றுகின்றன (Eating and swallowing are complex neuromuscular activities consisting essentially of three phases, an oral, pharyngeal and esophageal phase. Each phase is controlled by a different neurological mechanism). மூளையின் செயற்பாடு மந்த நிலையில் உள்ள நிலையில் அதாவது அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் பாவித்த அல்லது மதுபானம் அருந்திய நிலையில் நாம் உணவு உண்ணும் பொழுது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலையில் பலர் உணவு புரைக்கேறி இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகஅவதானமாக நாம் உணவு அருந்த வேண்டும்.

ஆபத்தாக மாறிய நீச்சல் பயிற்சி

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் வசிப்பவர்களின் பிள்ளைகள் பெரும்பாலும் நீச்சல் பயிற்சிக்காக செல்வதினை வழக்கமாக கொண்டுள்ளனர். சில வசதிமிக்க பாடசாலைகளில் இவர்களுக்கு விசேட  நீச்சல் பாடநெறியுடன் கூடிய நீச்சல் பயிற்சி உண்டு. இதற்கெல்லாம் விசேட கட்டணங்கள் அறவிடப்படும். இதனைவிட தனியாரின் பல ஸ்போர்ட்ஸ் கிளப்புகள் நீச்சல் வசதியுடன் உண்டு. இவற்றில் பெருமளவு பணத்தினை கட்டி உறுப்பினர் ஆகினால் நீச்சல் தடாகங்களை பயன்படுத்தலாம். இவ்வாறே கடந்த வாரத்தில் கொழும்பின் பிரபலமான தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நீந்திய 12 வயதுமிக்க நான்கு சிறுவர்கள் அதிகளவான குளோரின் வாயுவினை உட்சுவாசித்ததன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அத்துடன் ஒரு சிறுமிக்கு இரு நுரையீரல்களும் செயல் இழந்ததால் Extracorporeal membrane oxygenation (ECMO) என்ற உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க நேரிட்டது.

அதிகளவானோர் நீச்சல் தடாகங்களை பயன்படுத்தும் பொழுது அவர்களின் உடலில் இருந்து வியர்வை, எச்சில், மயிர், சிறுநீர்.. போன்றன நீரில் கலப்பட சாத்தியம் உள்ளது. இதனால் அங்குள்ள நீர் ஆனது கிருமி நீக்கம் செய்யவேண்டியுள்ளது. மேலும் வெயில் காலங்களில் நீச்சல் தடாகங்களுக்கு நீர் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி நீர் ஆனது கிருமி நீக்கம் செய்யவேண்டியுள்ளது. சாதாரணமாக நீச்சல் தடாகத்தில் உள்ள நீரானது  ஆனது குளோரின் வாயுவினால் சுத்திகரிக்கப்படும். இச்செயற்பாடானது மனிதர்கள் மூலோமோ அல்லது இயந்திரங்கள் மூலோமோ நடைபெறும். இதன் பொழுது குளோரின் வாயுவானது நீருடன் தாக்கம் புரிந்து hypochlorous acid (HOCl), அல்லது  sodium or calcium hypochlorite (NaOCl or Ca(OCl)2 போன்றவற்றை தோற்றுவிக்கும். இவ்வாறு தோன்றும் hypochlorous acid (HOCl) தான் கிருமிகளை தொற்றுநீக்கம் செய்ய உதவுகின்றது. இவ்வாறு நீச்சல் தடாகம் குளோரின் வாயுவாக மற்றும் சோடியம் அல்லது கல்சியம் உப்பாக (ஹைப்போ குளோரைடு) பாவிக்கப்பட்டே சுத்திகரிக்கபடும். இங்கு இரசாயனத் தாக்கம் மூலம் தோன்றும் ஹைப்போ குளோரைடு தான் ஓட்ஸியேற்றம் மூலம் கிருமிகளை கொல்லவும் தடாகத்தில் உள்ள ஏனைய சேதன கழிவுகளை இல்லாமல் செய்யவும் பயன்படும். இவ்வாறு ஹைப்போ குளோரைடு  சேதன கழிவுகளை இல்லாமல் செய்யும் பொழுது பல்வேறுபட்ட கேடு விளைவிக்க கூடிய இரசாயன பொருட்கள் உருவாகும் இவை disinfection by-products (DBPs) என்றழைக்கப்படும். இவ்வாறு உண்டாகிய DBPs உம் குளோரினும் மனிதனினுள் சுவாசம், தோல் மற்றும் வாய்  மூலம் உட்செல்லும்.

இனி நாம் குளோரின்  வாயு எமது உடலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி பார்ப்போம். முக்கியமாக குளிரின் வாயு ஆனது எமது சுவாசத் தொகுதி மற்றும் கண் என்பவற்றினை தாக்கி கடுமையான எரிவினை ஏற்படுத்தும். மேலும் உடசுவாசிக்கும் பொழுது உட் சென்று  நுரையிரலில் கடுமையான அலற்சியினை  ஏற்படுத்தி உயிரிழப்பினை ஏற்படுத்தும். பாவிக்கும் குளோரின் ஆனது நீரினுள் சுயாதீனமாகவோ அல்லது அதனோடு இணைந்த உப்பாகவோ இருக்கும். கடுமையான வெப்பநிலை மற்றும் அளவுக்கு அதிகமான பாவனை என்பவற்றின் மூலம் குளோரின் வாயு நிலையில் நீர்ப்பரப்பின் மேல் இருக்கும். இவ்வாறு இருக்கும் வாயு ஆனது சுவாசம் மூலம் மனிதனை அடையும் இதனால் அவர்கள் கடுமையான இருமல், தொண்டை நோ, சுவாசிக்க கடினமான தன்மை என்பவற்றினால் அவதியுறுவர். மேலும் நுரையிரலில் pneumonitis என்ற கடுமையான அலற்சியினை  ஏற்படுத்தி உயிரிழப்பினை ஏற்படுத்தும்.

X-ray-findings-of-resolving-the-acute-pneumonitis-A-follow-up-chest-X-ray-showed-a

குளோரின் வாயு ஆனது  உலக மகா யுத்த காலப்பகுதியில் இரசாயன ஆயுதமாக பாவிக்க பட்டது எனினும் உடனடியாக கொல்லும் திறனற்றமையினாலும் வேறு பல வினைத்திறனான வாயுக்கள் கண்டுபிடிக்க பட்டமையாலும்  படிப்படியாக யுத்த பயன்பாட்டில் இருந்து இல்லாமல் போனது.

தலைக்கவசம் உயிர்க்கவசமாகுமா? (பகுதி 1)

அவர்கள் இருவரும் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும்  போலீஸ் உத்தியோகத்தர்கள்.  அன்று இருவரும் கடமை முடித்து விட்டு போலீஸ் நிலையம் திரும்பும் வழியில் சிறிதளவு மதுபானம் அருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளில்  திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்களை எதிரே வந்த கார் மோதித் தள்ளியது. மோட்டார் சைக்கிளினை  செலுத்தியவர் சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டார். பின்னிருந்த நண்பன் மூச்சு பேச்சு இன்றி நிலத்தில் விழுந்து கிடந்தான். அவர்கள் இருவரும் சம்பவம் நடைபெற்ற பொழுது தலைக்கவசம் அணிந்து இருந்தனர்.

இதன் பின்னர் சுய நினைவு அற்ற நிலையில் அவன் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டான். வைத்தியர்கள் அவனின் மனைவிக்கு “அவனுக்கு உடம்பில் வெளிக் காயம் ஒன்றும் இல்லை. ஆனால் மூளையின் முன் பகுதியில் இரத்த கசிவு இருப்பதாகவும் அதனால் ஒப்பரேசன் ஒன்று செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்,  அவளும் சம்மதித்தாள். ஒபரேசனும் முடிந்தது அவனுக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. சில மாதங்களில் அவன் இறந்துவிட்டான். அவனது மனைவியும் ஓர் போலீஸ் அதிகாரி தான். அவளின் மனது கேட்கவில்லை. அதாவது அவளுக்கு எவ்வாறு  வெளியில் காயம் இல்லாமல் உள்ளே மூளையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்று அவளுக்கு பெரும் சந்தேகமாக இருந்தது . இறுதியாக அவள் குற்ற புலனாய்வு பிரிவுவில் சட்ட வைத்திய அதிகாரிக்கும் வழக்கினை விசாரணை செய்த போலீஸ் அதிகாரிக்கும் எதிராக மேலதிக விசாரணையினை கோரி ஓர் முறைப்பாட்டினை  மேற்கொண்டாள் .

அவர்களின் விசாரணையும் அதுவும் தலைக்கவசம் அணிந்த நிலையில், தலையில் வெளிப்பகுதியில் காயம் ஏற்படாத பொழுது அதுவும் உள் பகுதியில் உள்ள  மூளையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது என்றே அமைந்தது. அது எவ்வாறு சாத்தியம்? என்பதுவும் அவர்களின் முக்கிய கேள்வி ஆகும்

இன்று மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் பல்வேறு வகையான தலைக் கவசங்களை பாவிக்கின்றனர்.தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்த வேண்டும் என்பது நாட்டின் சட்டம் ஆகும். இந்நிலையில் பலர் நினைக்கின்றனர் தலைக்கவசம் அணிந்துவிட் டால் எவ்வகையான விபத்தில் இருந்தும் உயிர் தப்பி விடலாம் என்று, உண்மையிலே தலைக்கவசம் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு குறிப்பிட்ட அளவு பாதுகாப்பினையே வழங்குகின்றது. அதாவது சாதரணமாக பாவிக்கும் தலைக்கவசம் ஆனது மண்டை ஓட்டின் (Skull) வெளிப்புறம் காயங்கள் வராமல் பாதுகாப்பதோடு முகத்தில் உள்ள முக்கிய அங்கங்களான கண், மூக்கு, காது, வாய் போன்றவற்றிற்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கின்றது.

சாதாரணமாக மோட்டார் சைக்கிளில் நாம் பிரயாணம் செய்யும் பொழுது எமது தலையும், அதனுள் அமைந்த மூளை மற்றும் அதனை சூழவுள்ள நீர்ப்பாயம் என்பன மோட்டார் சைக்கிளின் வேகத்திலேயே செல்லும், வழமையாக விபத்தின் பொழுது வாகனத்தின் வேகம் அமர்முடுகல் காரணமாக குறித்த கணநேரத்தில் பூச்சிய நிலைக்கு வரும், ஆனால் மூளை மற்றும் அதனை சூழவுள்ள நீர்ப்பாயம் என்பனவற்றின் வேகம்  சிறிது கண நேர தாமதத்தின் பின்னர் தான் பூச்சிய நிலைக்கு வரும்.

இதன் காரணமாக மூளையானது மண்டையோட்டின் உட்பகுதியில் (Base of the Skull) உரசுப்பட மூளையினுள்  பாரிய இரத்த கசிவு காயங்கள் (contre-coup injury ) உண்டாகும் (coup injury occurs under the site of impact with an object, and a contre-coup injury occurs on the side opposite the area that was hit). இக்காயங்கள் பொதுவாக வெளிப்புறத்தில் விசை தாக்கிய பக்கத்தின் எதிர்பக்கம் உள்ள மூளையின் பகுதியில் உருவாகும். இக்காயங்கள் (contre-coup injury) என்று அழைக்கப்படும். பொதுவாக இவ்வகையான காயங்களுக்கும் வாகனத்தின் வேகத்திற்கும் விஞ்ஞானரீதியான தொடர்பு இல்லை.

ஒருவர் தலைக்கவசம் அணிந்த நிலையில் வெளிப்புறம் காயம் ஏற்படாது. ஆனால் மூளையின் உட்புறத்தில் இவ்வாறான காயங்கள் ஏற்படுவதினை தவிர்க்க முடியாது. மேலும் இக்காயங்கள் வெளிப்புற காயங்களினை விட மிக ஆபத்து உள்ளவையாக (more severity) இருக்கும்.

DNA பரிசோதனையும் மனிதனை அடையாளம் காணலும்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் தற்கொலைக் குண்டுதாரியின் தாயாரான வகீர் மொஹமட் பல்கீஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் வழங்கி, குண்டுவெடிப்பில் துண்டிக்கப்பட்ட அலாவுதீனின் தலையை தனது மகன் தான் என்று அடையாளம் காட்டியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் DNA அறிக்கை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது அந்தோனியார் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடதியவர் அஹமட் முகத் அலாவுதீன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்போது சட்டமருத்துவ அதிகாரி உடற்கூற்றாய்வு அறிக்கையை சமர்ப்பித்ததுடன், பெற்றோரினது மரபணுவுடன், குண்டுதாரியின் மரபணு பொருந்துவதாகவும் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இவ்வாறே சங்கரில்லா ஹோட்டலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது மொஹமட் சஹ்ரான்தான் என்பது DNA பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ளன. சஹ்ரானின் மகளிடமிருந்து பெற்ற இரத்த மாதிரி, சங்கரில்லா ஹோட்டலில் மீட்கப்பட்ட சஹ்ரானுடையது என கருதப்பட்ட உடல் பாகம் என்பவற்றை DNA பரிசோதனைக்குட்படுத்தியபோது இந்த முடிவு கிட்டியது.

தற்பொழுது பலரினதும் கேள்வி ஒரு தாயார் தனது மகனின் தலையினை பார்த்து முக தோற்ற இயல்புகளை வைத்து அவர்தான் தனது மகன் என்று அடையாளம் காட்டியபோதும் ஏன் DNA பரிசோதனை செய்யப்பட்டது என்பதுதான். அனர்த்தம் எனப்படும் பொழுது அதற்கு பல்வேறு பட்ட வரைவிலக்கணங்கள் வெவ்வேறு பாடத்திட்டங்களில் வெவ்வேறு விதமாக கூறப்பட்டுள்ளது. சட்ட மருத்துவத்தில் ஒரு சம்பவத்தில் 12 பேருக்கு அதிகமானோர் இறக்க நேரிடும் பொழுது அது அனர்த்தம் (Disaster) ஆக கருதப்படும். இங்கு அனர்த்தம் என்பது இயற்கையால் ஏற்படும் அழிவுகளையோ மனிதனால் ஏற்படும் அழிவுகளான குண்டு வெடிப்பு மற்றும் போர் அழிவுகளை குறிக்கும். இவ்வாறு அனர்த்தம் ஒன்றில் இறந்தவரினை விஞ்ஞான ரீதியில் சரியாக அடையாளம் (Disaster victim Identification – DVI) காண சர்வதேச போலீசான இன்டர்போல் (https://www.interpol.int/en/How-we-work/Forensics/Disaster-Victim-Identification-DVI)

பின்வரும் முறைகளை அங்கீகரித்துள்ளது

  1. கைரேகை மூலம் (finger print)
  2. பற்களின் பரிசோதனை மூலம்
  3. DNA மூலம்

மேற்குறிய முறைகளில் DNA மூலம் இறந்த ஓர் மனிதனை அடையாளம் காணும் முறையே மிகச்சிறந்த முறையாகும். மேலும் முகத்தோற்றம் அல்லது உடல் அமைப்புக்களை வைத்து ஓர் அனர்த்தத்தில் இறந்த மனிதனை இனம் காண்பது என்பது ஓர் விஞ்ஞான ரீதியான முறையாக அங்கீகரிக்க படவில்லை. இதனால் எதிர்காலத்தில் விடை காணமுடியாத சர்ச்சைகள் ஏற்படும். ஓர் இறந்த மனிதனை அடையாளம் காணல் என்பது காணாமல் போனவரின் உறவினரின் ஓர் அடிப்படை உரிமை ஆகும்.

கருக்கலைப்பு மாத்திரையும் சனத்தொகையும்….

முதலில் நாம் சில சொற்பதங்கள் சம்பந்தமான விளக்கங்களை பார்ப்போம்

  1. கருத்தடை மாத்திரைகள் – இவ்வகையான மாத்திரைகள் பெண்ணின் இனப்பெருக்க தொகுதியில் பலவிதமான மாற்றங்களை உண்டுபண்ணி அப்பெண்ணானவள் கருத்தரிக்க விடாமல் செய்யும் ஆற்றல் கொண்டவை. பெண்ணின் இனப்பெருக்க தொகுதியினுள் ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பெண்ணின் முட்டையுடன் இணைவதன் மூலமே கரு உருவாகும்.
  2. கருக்கலைப்பு மாத்திரைகள் – இவ் வகை மாத்திரைகள் பெண்ணின் கருப்பையில் ஏற்கனவே உருவாகியுள்ள கருவினை இல்லாமல் செய்யும். பலசந்தர்ப்பங்களில் இவ்வகை மாத்திரைகள் சாதாரண பிள்ளைப்பேறின் போது பிரசவத்தினை தொடங்கவும் அதீத குருதிபோக்கினை தடுக்கவும் பயன்படும்.
  3. இனப்பெருக்க வீதம் (total fertility rate -TFR)- ஓர் பெண்னின் இனப்பெருக்கத்திற்க்குரிய காலப்பகுதியில் அவளுக்கு பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையினை குறிக்கும். இங்கு இனப்பெருக்கத்திற்குரிய காலப்பகுதியென அதாவது குழந்தைகளை பெறக்கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட வயது எல்லை 14 தொடக்கம் 44/49 வரையாகும்.

இனி விடயத்திற்கு வருவோம் அதாவது அண்மைய காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலவகையான மருந்துவகைகள் கைப்பெற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் கருக்கலைப்பு மாத்திரைகளான மெஸோப்ரோஸ்டால் (Misoprostol) மாத்திரைகளும் உள்ளடங்கும். இந்நிலையில் சில வைத்தியர்கள் இவை கருக்கலைப்பு மாத்திரைகள் தான் இவற்றின் மூலம் கர்ப்பத்தடையினை அல்லது மலட்டுத்தன்மையினை ஏற்படுத்த முடியாது என்றும் மேலும் இது குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் மேற்குறித்த மாத்திரைகள் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகையினை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

சாதாரணமாக 14 வயது தொடக்கம் 49 வயது வரையுள்ள பெண்னொருத்தி விரும்பியோ விரும்பாமலோ  கருத்தரித்துள்ள பொழுது மேற்குறித்த மாத்திரைகளை பார்மசிகளில் அதிக விலையில் வாங்கி பாவிப்பதன் மூலம் தங்கியுள்ள கருவினை அழித்துக்கொள்ளலாம். இவ்வாறு ஒருமுறை சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்பு செய்த பெண்  தொடர்ந்து விரும்பியோ விரும்பாமலோ பின்வரும் காரணங்களினால் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்

  1. மேலுள்ள மாத்திரைகள் பெரும்பாலும் சட்ட விரோத கருக்கலைப்பிற்கே பயன்படும், இந்நிலையில் சட்ட விரோத கருக்கலைப்பில் உள்ள உயிராபத்தான நிலைமை காரணமாக பெண் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.
  2. சட்ட விரோத கருக்கலைப்பிற்கு செலவழித்த ஆயிரக்கணக்கான பணத்தினை இட்டு மீண்டும் கருத்தரிக்க பெரும்பாலான பெண்கள் விரும்பமாட்டார்கள். சட்ட விரோத கருக்கலைப்பில் சில நூறு பெறுமதியான மாத்திரைகள் பல ஆயிரம் பெறுமதிக்கு விற்கப்படும். அத்துடன் இவ்வகையான மாத்திரைகள் மருத்துவர் அல்லாதோரினால் சிபாரிசு செய்யப்படுவதால் அவர்கள் சரியான அளவு, பாவிக்கும் முறை, இரத்த போக்கின் பொழுது செயற்பட வேண்டிய முறை மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றினை கூறமாட்டார்கள் இதன் காரணமாக பெரும்பாலும் அவர்கள் முதலில் கருக்கலைப்பில் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் பல ஆயிரங்களை செலவழிக்க நேரிட்டிருக்கும். சிலசமயங்களில் ஒரு லட்ச்சத்தினை தாண்டியிருக்கும். இவ்வாறான நிலையில் மீண்டும் ஓர் பெண் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.
  3. பல சந்தர்ப்பங்களில் சட்ட விரோத கருக்கலைப்பினால் ஏற்பட்ட உடல் பாதிப்பினை விட உள பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஏற்பட்ட உள பாதிப்பினால் பெண் ஆனவள் மீண்டும் கருத்தரிக்க விரும்ப மாட்டாள். சில வேளைகளில் இப்பெண் கணவனுடன் கூட உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. இவ்வாறு திருமண முறிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்களை தொழில் வாழ்க்கையில் கண்டுள்ளேன்.img587c9257980a8
  4. இவ்வாறு ஒருமுறை சட்ட விரோத கருக்கலைப்பு செய்தபின் மீண்டும் கருத்தரிக்க நினைக்கும் பொழுது அவளுக்கு வயது போயிருக்கும் அத்துடன் குழந்தை பெறவும் விருப்பம் இல்லாமல் இருக்கும் இதனால் அவள் கருத்தரிக்காமலே வாழ்க்கையினை கழிக்க நேரிடும்.
  5. இவ்வாறு ஒருமுறை சட்ட விரோத கருக்கலைப்பு செய்தபின் மீண்டும் கருத்தரிக்க நினைக்கும் பொழுது அவளின் குடும்ப பொருளாதார சூழ்நிலை இன்னொரு குடும்ப பொருளாதார நிலை புதிய குடும்ப உறுப்பினரை ஏற்க முடியாத நிலையில் இருக்கும், இதனால் அவள் கருத்தரிக்காமலே வாழ்க்கையினை கழிக்க நேரிடும்
  6. சட்ட விரோத கருக்கலைப்பின் பொழுது ஏனையோரினால் பெண்ணானவள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட சாத்தியக்கூறு அதிகம் உள்ளது. இதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் மீண்டும் ஓர் பெண் கருத்தரிக்க விரும்ப மாட்டாள்.

இவ்வாறு பல காரணங்களினால் ஓர் பெண் குறித்த வயதில் கர்ப்பம் அடைவதினை மறைமுகமாக தடுக்கலாம், இதன் மூலம் ஓர் சமூகத்தில் ஓர் பெண்ணுக்கு சராசரியாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையினை குறைக்க முடியும். இதன் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகை நீண்ட காலப்போக்கில் குறைவடையலாம்.