போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

அன்று காலை எனது அலுவலக அறையினுள் வெலிக்கடை சிறை காவலர்கள் இருவர் 50 வயது மதிக்கதக்க ஒருவரை கைத்தாங்கலாக தூக்கி வந்து எனக்கு முன்னாள் நிறுத்தினார்கள். என்ன பிரச்சனை என்று விசாரித்த பொழுது அவர்கள் சொன்னார்கள் “இவன் மரணதண்டனை கைதி, இவனுக்கு மெடிக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது”. நான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவனிடம் கேட்டேன் யார் அடித்தார்கள்? என்று அவன் சொன்னான் ஒருவரும் அடிக்கவில்லை. நான்  பயப்படவேண்டாம் என்று சொல்லி மீண்டும் கேட்டேன், யார் அடித்தார்கள்? என்று, அவன் சொன்னான் சேர் ஒருத்தரும் அடிக்கவில்லை. என்னால் நடக்க முடியாது. தயவு செய்து கிட்ட வந்து ஒருக்கா பாருங்கள் என்றான். அவனும் நின்றபடியே தனது சாரத்தினை மெதுவாக அவிழ்த்து காட்டினான். ஒருகணம் நான் திகைத்து விட்டேன். அவனுக்கு இரண்டு பக்கமும் ஹேர்னியா வந்து அவனது விதைப்பை தேங்காய் அளவு வீங்கி இருந்தது. அவன் தொடர்ந்து நடந்ததால் அது தேய்ப்பட்டு புண்ணாகி சீழ் பிடித்து மணத்தது. நான் கேட்டேன் உந்த ஹேர்னியா எவ்வளவு காலமாக இருக்கின்றது என்று? அவன் கூறினான் 6 வருடமாக. மேலும் அவரிடம் தொடந்து வினவிய பொழுது அவர் கூறினார் தான் முன்பு மெனிங்க் மீன் மார்க்கெட்டில் நாளாந்த கூலிக்கு மீன் வெட்டியதாகவும் வழமையாக வேலை முடிந்து வரும் பொழுது அவ் மார்க்கெட்டில் முதலாளியாக இருக்கும் ஒருவரின் முச்சக்கரவண்டியில் வந்து தனது வீட்டிக்கு அருகாமையில் இறங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் சிகரெட் பாவிப்பதினை தவிர வேறு வகையான போதைப்பொருள் மற்றும் மதுபானம் ஒன்றுமே பாவிப்பதில்லை என்றார். அவ்வாறே ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்பு மாலை முச்சக்கரவண்டியில் வரும்பொழுது போலீசார் தமது வாகனத்தினை நிறுத்தி சோதனையிட்ட பொழுது போதைப்பொருள் இருந்ததாக தன்னையும் அம்முதலாளியினையும் கைதுசெய்ததாகவும் கூறினார். தொடந்து அவர் கூறுகையில் கைதினை தொடர்ந்து அம்முதலாளியினால் பலலட்சங்கள் போலீசாருக்கு கொடுக்க பட்டத்தினை தொடர்ந்து அப்போதைபொருளினை கொண்டுவந்ததாக தன்மேல் குற்றம் சுமத்தப்பட்டு, முதலாளியினாலும் போலீசாராலும்  தனக்கு எதிராக சாட்சி வழங்க பட்டதினை தொடர்ந்து தான் சிறையில் உள்ளதாக தெரிவித்தார்.இவ்வாறு கைதுசெய்யபடும் பெரும்பாலான குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் யாவரும் தம்மிடம் பிழை எதுவும் இல்லை என்றே கடைசிவரை சொல்வார்கள் என்பது வேறுவிடயம்.

அண்மையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதை பொருள் ஓழிப்பு வாரத்தினை அறிவித்து இலங்கை ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் பொழுது போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு  மரணதண்டனை வழங்கும் தனது முடிவில் மாற்றம் இல்லை தெரிவித்தார். எமது நாட்டில் போலீசாரின் நடுநிலைமையான செயற்பாடு யாவரும் அறிந்ததே. இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும்.    மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பொலிஸாரினால் மனித உரிமை மீறல்கள் நிகழ சாத்திய கூறுகள் உண்டு. இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம்  ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர்.

வினையாகிய விளையாட்டு..

அன்றும் மதியம் வரை அலுவலக வேலைகள் அமைதியாக நடைபெற்றன. மதியம் இரண்டு மணியளவில் எனது மேல் அதிகாரி என்னிடம் ஓர் குழந்தையின் இறப்பு சம்பந்தமாக உடற்கூராய்வு நடாத்தும் படி உத்தரவு ஒன்றினை பிறப்பித்து சென்றார். நானும் முதல் கட்டமாக குழந்தையின் பெற்றோர் என்று கூறப்படும் பெண் மற்றும் ஆண் ஆகியோரிடம் என்ன நடந்தது? என்று வினவினேன். அவள் சொன்னாள் தான் வீட்டின் கீழ் பகுதியில் வேலை செய்ததாகவும் கணவன் மேல் தட்டில் குழந்தையுடன் தங்கி இருந்த வேளை குழந்தை அழுத பொழுது கணவன் குழந்தையினை உலுக்கி தாலாட்டியதாகவும் அதன் பின்னர் குழந்தை சோர்வடைந்து காணப்பட்ட வேளை குழந்தையை அடுத்த நாள் காலையில் சிறுவர் வைத்தியசாலயில் அனுமதித்த பொழுது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர் கூறியதாக கூறினார். மிகுந்த கனத்த மனதுடன் உடற்கூராய்வு இணை மேற்கொண்ட பொழுது குழந்தையில் வெளிக்காயம் ஒன்றும் காணப்படவில்லை. அது ஒரு நான்கு மாத வயதுள்ள ஆண் குழந்தை. உடல்நிறையும் பிரச்சனை இல்லை. குழந்தையின் மூளையினை சூழ வுள்ள சவ்வுகளுக்கு இடையில் (sub dural haematoma) பாரிய அளவில் இரத்த கசிவு காணப் பட்டது. இது சம்பதமாக போலீஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை நடத்திய போது அப்பெண் விபச்சாரம் செய்பவள் என்றும் அவள் கீழ் பகுதியில் வேலை செய்யும் போது கணவன் எனப்படுபவன் குழந்தையை தூக்கி தூக்கி எறிந்து விளையாடி சத்தம் போடாமல் பார்த்ததாகவும் கூறினார். மேலும் கணவன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக இருப்பவர் என்றும் கூறினார். இவ்வாறு பலமாக உலுக்கியதால் குழந்தை பாதிக்கப் படும் நிலை shaken baby syndrome என்று அழைக்கப் படுகின்றது. இது குழந்தையின் மூளையினை சூழவுள்ள சவ்வுகளுக்கு இடையில் (sub dural space) உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால் (படத்தினை பார்வை இடவும்) அதனூடாக செல்லும் சிறிய இரத்த குழாய்கள் பலமாக குழந்தையின் தலை ஆட்டுபடும் பொழுது கிழிபடுவதனால் மிகவும் ஆபத்தான இரத்த கசிவு மூளையில் ஏற்படும். குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பலமான முறையில் உலுக்குதல், குலுக் குதல், தூக்கி எறிந்து விளையாடல் போன்றவை அதிகம் தவிர்க்க வேண்டும்.


குறிப்பு – மருத்துவ உலகில் பல்வேறு வகையான மருத்துவர்களிடம் shaken baby syndrome இக்கான காரணங்களில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் எனது தொழில் முறை வாழ்கையில் இவ்வாறான பலமான முறையில் உலுக்குதல், குலுக்குதல், தூக்கி எறிந்து விளையாடல் போன்றவை மேற்குறிப்பிட்ட நிலையினை தோற்றுவிக்கும் என நான் கருதுகிறேன்.

உயிர் கொடுத்த சிற்பியினையே கொல்ல நினைத்த சிலை

Gillian Genser என்ற கனேடிய பெண்மணி உயிரோட்டமான சிற்பங்களை செய்வதில் பிரபல்யமானவர். சாதாரணமாக சிற்பிகள் கருங்கல், மண், சீமெந்து போன்றவற்றில் சிற்பங்கள் செய்யும் பொழுது இப்பெண்மணி இறந்த விலங்குகளின் மண்டை ஓடுகள், இதர எலும்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களான சிப்பி, சங்கு போன்றவற்றின் ஓடுகள் என்பவற்றினை பயன்படுத்துவார். மேலும் இவர் செய்யும் சிற்பங்களில் உடல் உள்ளுறுப்புகள் எல்லாம் இயற்கையாக உள்ளது போலவே செய்யப்பட்டிருத்தல் மேலதிக சிறப்பு அம்சமாகும்.

இவர் கடந்த 15 வருடங்களாக உலகின் முதலாவது மனிதன் என நம்பப்படும் “ஆதாம்” (ADAM) இன் சிற்பத்தினை செதுக்குவதில்  ஈடுபட்டுருந்தார். முக்கியமாக இவர் கடலில் இருந்து எடுக்கப்படும் ஒருவகையான சிப்பியின் கோதுகளை இச்சிற்பம் செய்ய பெருமளவு பாவித்தார். வழமையாக இங்கு சிப்பியின் கோதுகள் மினுமினுப்பு தன்மையினை அடைவதற்காக பலதடவைகள் உரிய உபகரணங்கள் முக்கியமாக சிறிய மின்சாரவாள் கொன்டு அழகுகூடப்படும்.  இச்சிற்பம் இறுதி கட்டத்தினை அடையும் நிலையில் Gillian Genser தீடிரென்று நோய்வாய்பட்டார். அவர் தலையிடி, தசைப்பிடிப்பு, மூட்டு நோ, உடல் பலவீனம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றினால் அவதியுற்ற நிலையில் சாதாரண வைத்தியர்களினால் அவரின் நோயநிலையினை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக விசேட மருத்துவ நிபுணர்கள் அவரினை பரிசோதித்த பொழுது அவர் பார உலோகங்களின் நச்சுத்தன்மையினால் அவதியுறுவதாக கண்டுபிடித்தார்கள். மேலும் அவர்கள் ஏன் இவர்  பார உலோகங்களின் நச்சுத்தன்மையினால் அவதியுற காரணம் என்ன என்று ஆராய்ந்த பொழுது அதிச்சிகரமான விடயம் தெரியவந்தது யாதெனில் அவர் அதிகம் பயன்படுத்திய சிப்பியின் கோதுகளில் பார உலோகங்கள் அதிகளவில் இருந்தமையும் அவை அரியப்படும் பொழுது உண்டாகும்  நுண் துகள்கள் மூச்சு காற்று மூலம் அவரின் உடலை அடைந்தமையும் ஆகும் (Heavy metal toxicity). உலகில் பல நாடுகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளில் உள்ள பார உலோகங்களான ஈயம், செப்பு, அச்சாணிக்கு, பாதரசம் போன்றன     ஆறுகள் மூலம் அல்லது நேரடியாகவோ கடலில் கலக்கப்படுகின்றன. இவை இறுதியாக உணவுச் சங்கிலி மூலம் சிப்பி, குறித்த சிலவகை மீன்கள் என்வற்றில் செரிவாக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட சம்பவம் நாட்பட்ட நஞ்சாதல் சம்பவத்திற்கு (Chronic or slow poisoning) ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்

உயிரிழப்புக்கு காரணமான ENO

அது தலைநகரின் மிக பிரபலமான ஆடை விற்பனை நிலையம் முதல் மூன்று மாடிகளும் விற்பனைநிலையங்களாக செயற்பட்ட  நிலையில், நான்காவது மாடி அதன் ஊழியர்கள் தங்குவதற்கு பயன்பட்டது. அதில் தான் 42 வயதான அவன் கடந்த 6 வருடங்களாக வசித்து வந்தான். பகல் முழுவதும் வேலை. இரவில் சமையல் படுக்கை. கிழமையில் இரண்டு அல்லது மூன்று தரமாவது அவனும் அவனது நண்பர்களும் பியர் அருந்துவார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மலையகத்தில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துவர செல்வான். கடந்த மூன்று மாதங்களாகவே அவனுக்கு ஒரே நெஞ்சு எரிவு மற்றும் களைப்பு. முக்கியமாக புடவைகளை எடுத்துக்கொண்டு மாடி படி ஏறிஇறங்கும் பொழுது மூச்சு வாங்குவான். இவனது இந்நிலையினை கண்ட முதலாளி கீழ் தளத்திலேயே  வேலை செய்ய சொன்னார் . அக்கடையில் வேலை பார்க்கும் இன்னோரு வயதுவந்தவர் அவனுக்கு அல்சர் (காஸ்ட்ரிக்) இருப்பதாக கூறி இனோ மற்றும் கவிஸ்கொன் போன்றவற்றினை பாவிக்குமாறு அனுபவமிக்க வைத்தியர் போன்று பரிந்துரைத்தார். அவரது சொல்லினை தெய்வ வாக்காக நம்பிய அவனும் அவற்றினை பாவிக்க தொடங்கினான். அன்று தான்  அவனது வாழ்வின் கடைசி நாள், அதிகாலை நான்கு மணிக்கே கடுமையான நெஞ்செரிவு கஷ்ட்டப்பட்டு பாயில் இருந்து எழும்பி இரண்டு இனோ பக்கற்றுகளினை கரைத்து குடித்து விட்டு, தான் வேலைக்கு தாமதமாக வருவேன் என்று கூறிவிட்டு  படுத்தவன் தான் எழும்பவே இல்லை. இறுதியில் அவனது உடலிற்கு உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொண்டபொழுது அவனது இருதயத்திற்கு குருதி வழங்கும் மூன்று நாடிகளும் 75 வீதத்திற்கு  மேற்பட்ட வகையில் கொலஸ்ரோல் இனால் அடைபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்றைய  காலகட்டதில் தமிழ் பேசும் மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் இந்திய தொலைக்காட்சி சேனல்களின் ஆட்சிதான். அவற்றில் பெரும்பாலும் கவிஸ்கொன் மற்றும் இனோ போன்ற இரைப்பை அல்சர் நோயிற்கான மருந்து விளம்பரங்கள் அடிக்கடி வந்துபோகும். மருத்துவ அறிவு அற்ற மக்கள் அவ்விளம்பரங்களை நம்பி வயதுவேறுபாடு இன்றி தமக்கு நெஞ்சு நோ அல்லது நெஞ்சு எரிவு போன்றன வரும் பொழுது இவற்றினை நம்பி வாங்கி பாவிக்கின்றனர். முக்கியமாக இவ்வகையான மருந்துகள் உரிய வைத்தியரின் சிபாரிசு எதுவும் இன்றி சாதாரண பார்மசிகளில் இருந்து சூப்பர் மார்க்கெட் வரை கிடைக்கும். உண்மையில் இவற்றிற்கு வைத்தியரின் சிபாரிசு எதுவும் இல்லை என்பது வேறுவிடயம் (Over-the-counter (OTC) drugs are medicines sold directly to a consumer without a prescription from a healthcare professional). நெஞ்சு நோ மற்றும் நெஞ்சு எரிவு என்பன கட்டாயம் அல்சர் நோயின் அறிகுறியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இக்குணம்குறிகள் மிகவும் பாரதூரமான மாரடைப்பின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். மாரடைப்பு நோயாளிகளின் குறிப்பிட்ட  வீதத்தினர் இவ்வாறு அல்சர் போன்றன நோயிற்கான குணம்குறிகளுடன் தோற்றம் அளிப்பர் (Atypical presentation of myocardial infraction). சாதாரணமாக 35 அல்லது 40 வயதிற்கு மேற்பட்ட நபர் ஒருவருக்கு நெஞ்சு நோ அல்லது அது போன்ற குணங்குறிகள் தென்பட்டால் கட்டாயம் ஈசிஜி (ECG) பரிசோதனை செய்து அவருக்கு நெஞ்சு நோவிற்கான காரணம் மாரடைப்பு இல்லை என்பதினை உறுதிப்படுத்திய பின்னரே இனோ மற்றும் அல்சர் நோயிற்கான மற்றைய மருந்துகள் பாவிக்க வேண்டும். மறுதலையாக 40 அல்லது 35 வயதிற்கு உட்பட்டவர் கூட மாரடைப்பினால் இறந்த சம்பவங்கள் உண்டு. எனவே எவ்வயதினராயினும் தகுந்த வைத்தியரின் ஆலோசனையின் பின்னரே மேற்கூறிய மருந்துகளை பாவிப்பது சாலச்சிறந்தது.

வெடி மருந்தின்றி ஒரு வெடிப்பு சம்பவம்

இலங்கையில்  கல்சியம் காபைட் ஆனது பொதுவாக மலசல கூட கழிவு குழாய்கள், சமையற்கூட கழிவு குழாய்கள் கழிவுகளினால் அடைபடும் பொழுது அவற்றினை நீக்க பாவிப்பார்கள்.

அது கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட் ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும் இவ்வாயுவானது மிகஎளிதாக தீப்பற்றி எரியும் தன்மை யுடையது மற்றும் இவ்இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது.இங்கு மலசலக்கழிவுத்துதொட்டியானது ஓர் இறுக்கமான அறை ஆகும் இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு சம்பவம் நிகழலாம்.

மருண்டவன் கண்ணுக்கு காண்பது எல்லாம்….

அது ஒரு தமிழ் சிங்கள புதுவருட காலப்பகுதி, பொதுவாக இக்காலப்பகுதிகளில் அரச அலுவலகங்களில் வேலைசெய்யும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும், அதற்கு எனது அலுவலகமும் விதிவிலக்கல்ல. இவ்வாறன ஒரு நாளில் நான் எனது அலுவலகத்தினுள் நுழைகின்றேன். வாசல் பகுதியில் இளைஞர்களும் வயதானவர்களும் கூட்டமாக நிற்கின்றனர். அவர்களை தாண்டி உள்நுழையும் பொழுது அலுவலக உதவியாளர் ஒருவர் ஓடிவந்து “சேர், பிறந்து ஒரு கிழமையான பெண் குழந்தையினை உறவினர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக” தெரிவித்தார் மேலும் துஸ்பிரயோகம் செய்தவரையும் போலீசார் கைதுசெய்து நல்ல பூசை போட்டு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இதென்னடா வருஷம் பிறந்து முதல் நோயாளியை இப்படி வருகுது என்று கூறிவிட்டு அவர்களை பரிசோதிக்க ஆயத்தம் ஆனேன். பெண் அலுவலக உதவியாளர் வர காலதாமதம் ஆகும் என்று தெரிந்ததினால் முதலில் சந்தேக நபரினை பரிசோதித்தேன். அவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முடியாதவாறு உதடு, கன்னம், கண் என்பன வீங்கியிந்தது. பொதுவாக இவ்வாறன சம்பவங்களை தொடந்து உறவினர்கள் மற்றும் போலீசார் அவர்களை தாக்குவது வழமை .
மற்றைய சந்தேக நபர்களை போலவே இவனும் தான் எதுவுமே செய்யவில்லை என்றான். அதன் பின்பு குழந்தையின் அம்மாவிடம் நடந்தது என்ன கேட்டேன் அவர் கூறினார் குழந்தையினை சந்தேக நபர் தூக்கி விளையாடியதாகவும் அதன் பின்பு குழந்தையின் ஆடையில் இரத்த கறை இருந்ததாகவும் கூறினார். பெண் உதவியாளர் மற்றும் அம்மா முன்னிலையில் குழந்தையினை பரிசோதித்தேன். குழந்தையின் பிரத்தியேக மற்றும் மல வாசல் பகுதிகளில் எவ்விதமான காயங்களும் காணப்படவில்லை. குழந்தையின் ஆடையில் ஓரஞ்சு நிறமான இரத்தக்கறை போன்ற கறை காணப்பட்டது.

20180922_061813
தொடர்ந்து நடாத்திய பரிசோதனை முடிவுகளில் அது இரத்த கறை அல்ல என்ற முடிவும் அக்கறையானது யூரேட் கிரிஸ்டல் ஆனது என தெரியவந்தது. {Urate crystals (commonly called “brick stain” by doctors) are a combination of calcium and urate} இது சாதாரணமா குழந்தைகள் பிறந்து ஒரு சில நாட்களில் அவர்களின் சிறுநீரில் அதிகளவு யூரேட் வெளியேற்றப்படுவதால் நிகழும் நிகழ்வாகும். இது ஒருசில நாட்களில் தானாகவே குணமடைந்துவிடும். இது தவிர பின்வரும் சந்தர்ப்பங்களிலும் பெண் குழந்தையின் பிரத்தியேக உறுப்பு பிரதேசங்களில் இருந்து இரத்த கசிவு நடைபெறலாம்
1. குழந்தையின் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன் அளவில் ஏற்படும் சடுதியான மாற்றம் காரணமாக. இக்ஹோர்மோன் ஆனது தாயின் தொப்புள் கொடியின் ஊடக கடத்த பட்டு அதிகளவில் இருக்கும். பிறப்பின் பின்பு சடுதியாக குறைவதனால் குழந்தையின் கருப்பையில் இருந்து சிறிதளவு இரத்த கசிவு இருக்கும்.
2. குழந்தையின் பிறப்பு உறுப்பு பகுதிகளில் நுழையும் லீச் போன்ற அட்டைகளினால், இலங்கையின் மலைநாட்டு பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறன ஒரு சம்பவம் நடைபெறும் பொழுது தகுந்த வைத்தியரிடம் அணுகி ஆலோசனை பெறவேண்டும். முக்கியமாக பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் இவ்வாறக நடைபெறலாம் .

போதைகொள்ளவைக்கும் “ஐஸ்”

கடந்த வாரத்தில் யாழ் குடாநாட்டில் முதன் முறையாக “ஐஸ்” என்ற போதை பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மெத் அம்பீர்றமைன் (methamphetamine ) என்ற பொருளே ஐஸ், எக்டஸி (ectacy ), XTC , yuppie, ஸ்பீட் போல்…   போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. நாட்டிற்கு நாடு வட்டாரத்திற்கு வட்டாரம் இதன் பெயர் வேறுபடும். மற்றைய போதை பொருட்டுகளை விட இந்த போதை பொருள் யாழ் குடாநாட்டிற்கு புதியது.

ஆனால் நாட்டின் மற்றைய பகுதிகளில் குறிப்பாக கொழும்பு போன்ற நகர புகுதிகளில் இப்போதைப்பொருள் ஆனது சர்வசாதாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கும். இப்போதை பொருள் ஏன் ஆபத்தானது என்று ஆராய்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

பெரும்பாலான மற்றைய போதைப்பொருட்கள் எல்லாம் எமது நரம்பு தொகுதியினை செயற்பாடு குறைந்த நிலைக்கு கொண்டுவரும், ஆனால் ஐஸ் என்ற இப்போதைப்பொருள் ஆனது எமது மூளை மற்றும் நரம்புத்தொகுதியின் செயற்பாட்டினை தூண்டும் (Central Nervous system stimulant). இதன் காரணமாக பலர் இலகுவாக இப்போதைப்பொருளுக்கு அடிமையாகுவர். இப்போதைப்பொருளினை பாவிப்பவரில் பின்வரும் இயல்புகள் ஏற்படும்

  1. கனவுலகில் மிதத்தல்
  2. மனதில் எல்லாம் முடியும் என்ற நிலை
  3. நித்திரை, பசி மற்றும் களைப்பு என்பவற்றினை தாண்டி வேலை செய்யும் ஆற்றல்
  4. அதீத உடல்வேலைகளை செய்யக்கூடிய ஆற்றல்
  5. அதிகம் கதைக்கும் தன்மை

இவ்வாறான இயல்புகள் காரணமாக பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், இரவு நேர களியாட்ட விடுதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெடும்தூர பஸ், லொரி சாரதிகள் இப்போதைபொருளினை பாவிப்பர். முக்கியமாக சராசரி அல்லது கடைநிலை மாணவர்கள் அதிகநேரம் படிக்கவேண்டும் ஏன்ற ஆவலில் இப்போதைபொருளினை பயன்படுத்தத் தொடங்கி இறுதியில் அதற்கு அடிமையாகுவர். சிலர் கேட்கலாம் இப்போதைபொருளினை சிறிது காலம் பாவித்து நன்றாக படிக்கலாம் பரீட்சை முடிந்தபிறகு விடலாம் என்று ஆனால்  இப்போதைபொருளினை பாவிக்க தொடங்கினாலே நிறுத்த முடியாது (Serious drug addiction). மற்றும் இப்போதைபொருள் நித்திரை, பசி மற்றும் களைப்பு என்பவற்றினை தாண்டி வேலை செய்யும் ஆற்றலினை கொடுத்தாலும் படித்தலில் முக்கியமான கிரகித்தல் போன்ற மூளையின் உயர் தொழில்பாடுகளுக்கு எவ்விதத்திலும் உதவப்போவதில்லை.

இரவுநேர களியாட்ட விடுதிகள் மற்றும் பாரிய விடுதிகள் அற்ற யாழ்ப்பாணத்தில் இப்போதைபொருளின் அறிமுகம் பாடசாலை மற்றும் உயர் கல்விநிறுவன மாணவர்களே அன்றி வேறுயாரும் அல்லர். மேலும் ஒரு ஆச்சரியமான விடயமெனில் இப்போதைபொருளானது தகுந்த வைத்தியரின் சிபாரிசுடன் சிலவகை நோய்களுக்கு மருந்தாக பாவிக்கபடுகின்றது. எனவே இது சம்பந்தமாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கவனமாக இருக்க வேண்டும்.
முற்றும்

ஆண்மையை பறித்த மோட்டார் சைக்கிள்…

அன்றும் வழமைபோல் எனது அலுவலக ஊழியருடன் தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளரை பார்வையிட்டு வந்தேன். அது ஆண்கள் சிகிச்சை பிரிவு.   வாட்ட சாட்டமான இளைஞன் ஒருவன் கட்டிலில் படுத்திருந்தார். முதலில் என்னை நான் அறிமுகப்படுத்தி நான் அவரின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை கேட்டேன். அடுத்து அவரிடம் என்ன காயம் இருக்கு என்று கேட்டேன்,  அதற்கு அவர் தனக்கு பெரிதாககாயம் ஒன்றும் இல்லை என்று கூறியதோடு தனக்கு சட்ட வைத்தியபரிசோதனை செய்ய விருப்பம் இல்லை என்றார். மேலும் அவர்  தான் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் இருந்த மதிலில் மோதியதாக கூறினார். வழமையாக அலுவலக ஊழியர் இயலுமான நோயாளர்களை கட்டிலில் இருந்து எழுப்பியே என்னை பரிசோதிக்க அனுமதிப்பார். இவர் எழும்ப பின்னடித்ததை அடுத்து அவரது மருத்துவ குறிப்பேட்டினை பார்வையிட்டேன். அதில் விபத்தின் போது அவரது விதைகள் இரண்டும் (Crush injury) கடுமையாக நசிவடைந்து         பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பி  ட்டியிருந்தார்கள்.

அண்மைக்காலமாக குறிப்பிட்டவகை மோட்டார் சைக்கிளினை (Yamaha FZ and Pulsar models) பாவிக்கும் இளைஞர்கள் வீதிவிபத்துகளின் பொது மேற்குறிப்பிட்ட வகையான காயங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை அவதானித்து வருகின்றேன். இங்கு விதைப்பையில் அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில்  ஏற்படும் காயம் ஆனது சாதாரண உரஞ்சல் காயத்தில் (Simple abrasion)  இருந்து பாரதூரமான கிழியல் (Degloving laceration) காயம் வரை காணப்படும். இவ்வகையான காயங்கள் straddle injuries (trauma occurs to the groin area between the thighs) என்றழைக்கபடும். ஏற்படும் பாரதூரமான காயத்தினால் விதைப்பைகள் அகற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு. மேலும் ஏற்பட்ட சாதாரண காயத்தினால் இளைஞர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இல்லற வாழ்வினை பின்தள்ளி போட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

20191006_1021117702099394673634080.jpg

(குறிப்பு – மேலுள்ள புகைப்படம் மருத்துவ சஞ்சிகை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது. இங்கும் இக்காயம் மோட்டார் சைக்கிள் விபத்தினாலேயே ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

மேற்படி வகை மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவ்வகையான காயம் ஏற்படாது. குறிப்பாக சைக்கிளோட்டி தூக்கி எறியப்பட்டால்  இவ்வகையான காயம் ஏற்படாது. சாதாரணமாக சைக்கிளோட்டியின்வேகம் மோட்டார் சைக்கிளின் வேகத்திற்கு சமனாக இருக்கும். விபத்தின் பொது சடுதியாக மோட்டார் சைக்கிளின் வேகம் பூச்சியமாகும் போது மோட்டார் சைக்கிளோட்டியினை நோக்கி விசை ஒன்று தாக்கும் (பச்சை நிற அம்புக்குறி ) இதன் காரணமாக இவ்வகையான காயம் ஏற்படுகின்றது.

2017-yamaha-fz-10-ab9t8878

ராகல (Ragala) குகையில் நடந்தது என்ன?

அண்மையில் இரு இளைஞர்கள் வேட்டையாடும் பொழுது ஓர் முள்ளம் பன்றி ஒன்றினை கண்டார்கள். அவர்கள் அதனை துரத்தும் பொது அது அருகில் உள்ள குகை ஒன்றினுள் சென்றது. அதனை தொடர்ந்து அவர்களும் அவர்களின் வேட்டை நாயும் குகைவாசலில் நீண்ட நேரம் பன்றியின் வருகைக்குகாக காத்திருந்தார்கள். பன்றி வரவேயில்லை. அதன் பின்பு அவர்கள் அருகில் உள்ள குப்பை  எரித்து அதில் உண்டாகிய புகையினை குகையினுள் செலுத்தினார்கள் அதன் பின்னும் பன்றி வரவில்லை. அதன் பின்னர் அவர்களது வேட்டை நாய்  உள் நுழைந்தது நீண்ட நேரமாகியும் அது வரவில்லை பின்னர் அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவராக உள்சென்றர்கள். இறுதியில் ஒருவருமே வீடு திரும்பவில்லை. கிராம மக்கள் அடுத்த நாள் தேடுதல் வேட்டையில் இறங்கி தேடியபொழுது அவர்களின் இரு இறந்த உடல்களையும் மற்றும் பன்றி, நாய் என்பற்றின் உடல்களையும் எடுக்க முடிந்தது.

1537424826_6513812_hirunews_deth

சாதரரணமாக  நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவீத ஒக்சிசன் வாயு உள்ளது. ஆழமான கிணறு, குகை, மிகப்பெரிய எண்ணெய் தாங்கி கப்பலின் கொள்கலன் போன்றவற்றில் ஒக்சிசன் வாயு குறைந்த சதவீதத்தில் உள்ளது. இவற்றினுள் செல்லும்போது மனிதர்களுக்கு மூச்சு திணறல் (Suffocation ) ஏற்படும். இங்கும் அவ்வாறே ஏற்பட்டது. அத்துடன் இவ்வாறான குகைகளில் நச்சு வாயுக்களும் (poisonous gases ) மனித சுவாசத்திற்கு உதவாத வாயுக்களும் ( irrespirable gases ) நிறைந்திருக்கும். மேலும் புகையுட்டல் ஆனது இச்சூழ்நிலையினை நிச்சயம் மோசமாக்கி இருக்கும். மூச்சு திணறல் ஏற்படும் பொழுது ஒருகட்டத்தில் எங்களின் சுயநினைவு குறைந்து அல்லது முற்றாக அற்று விடும் இந்நிலையில் அவர்களால் சிந்தித்து வெளியேறுவது கடினமாகிவிடும்.

யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா? ஓர் மருத்துவரீதியான அலசல்

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால்  யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில்  கடந்த  வெள்ளிக்கிழமை(08/06/2018)இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக அங்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் காய்ச்சல் குறையாத காரணத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டது.இந்நிலையில் குறித்த குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டு புதன்கிழமை (06/06/2018) இரவு பெற்றோர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

viber image

பின்வரும் காரணங்களினால் குழந்தை உயிருடன் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நம்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட  நிலையில் குழந்தையின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

  1. 08/06/2018 நண்பகல்-12 மணியளவில் உயிரிழந்த குழந்தையின் சடலத்திலிருந்து திடீரென மலம், சிறுநீர் என்பன வெளியேறியுள்ளன.
  2. உடலிலிருந்து வியர்வை, மூக்கிலிருந்து மூக்குச் சளி என்பனவும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெளியேறியுள்ளது.
  3. குழந்தையின் வலது கையில் சூடு காணப்படுவதாக அவரது உறவினரான இளம் பெண்ணொருவர் குழந்தையின் கையைத் தொட்டுப் பார்த்து விட்டுத் தெரிவித்தமை.
  4. குழந்தையின் கையில் நாடித் துடிப்புக் காணப்படுவதாகக் குழந்தையின் தந்தையார் கூறியமை.
  5. குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்து மூன்றுநாட்கள் ஆகின்ற போதிலும் உடலியல் ரீதியாக இறந்தவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் எதுவும் குழந்தையின் உடலில் ஏற்படவில்லை.
  6. குறித்த குழந்தை இறக்கவில்லை எனப் பூசாரியொருவரால் தெரிவிக்கப்பட்டமை.

விஞ்ஞான ரீதியில் ஓர் மனிதனின் இறப்பானது  பின்வருமாறு வரையறுக்கப்படும்  மனிதனின் மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின்  நிரந்தர  தொழில்பாட்டு  நிறுத்தமாகும்.

சாதாரணமாக மனிதன் இறந்து 18 மணித்தியாலங்களின் பின்பு உடலானது அழுக தொடங்கும். அழுகலானது முதலில் வயிறு பகுதியில் இருந்துதான் தொடங்கும், ஏன் எனில் குடலில்  இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் பாக்டீரியா நுண்ணங்கி செயற்பாட்டினால் ஆகும். இதன் காரணமாக வயிற்றில் அதிகளவு வாயுக்கள் தேங்கும் இதன் காரணமாக வயிற்றில் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் உள்ள மலம், சிறுநீர் மற்றும் கருப்பையில் உள்ள இறந்த குழந்தை என்பன வெளியேற்றப்படும்.

postmortem deliveryசில சமயங்களில் வயிற்று தசை வெடித்து உள்ளிருக்கும் குடல் போன்றன   வெளியேற்றப்படும் (இவ்வெடிப்பு சில சமயங்களில் வெட்டு காயம் போன்றும் தோன்றலாம், அனுபவம் மிகுந்த சட்ட வைத்தியர்கள் இவற்றினை இலகுவாக வேறுபடுத்துவர்) இதற்காக மனிதன் உயிருடன் உள்ளார் என்று அர்த்தமில்லை. இவ்வாறே மார்பு கூட்டிலும் அமுக்கம் எதிர்பாராத அளவு அதிகரிக்கும் இதன் காரணமாக இறந்த உடலில் நாக்கு வெளித்தள்ளும், மூக்கு மற்றும் வாயில் இருந்து சளி மற்றும் இரத்தம் வெளியேறும். இச் செயற்பாடுகள் ஒருவர் இறந்து சராசரியாக 2 தொடக்கம் 3 நாட்களில் நடைபெறும். சிலவேளைகளில் முன்பதாகவும் நடைபெறலாம்.

இறந்த உடலை மூடி (துணியால் அல்லது பிரேத பெட்டியால்) வைக்கும் பொழுது,  இறந்த உடலில் இருந்து ஆவியாகும் நீர்   அணிந்திருக்கும் ஆடையில் பட்டு ஒடுங்கி உடலில் வியர்வை மாதிரி படிந்திருக்கும்.

மனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 8 மணித்தியாலங்களில் உடல் வெப்பநிலையானது குறைவடைந்து சூழல் வெப்பநிலையினை அடையும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது குளிரும்)  18 மணித்தியாலங்களின் பின்பு உடல் அழுக தொடங்கியவுடன் உடல் வெப்பநிலையானது அதிகரிக்கும் ( அப்பொழுது உடலை தொடும் பொழுது சுடும்) .

மனிதன் இறந்த பின் சாதாரணமாக முதல் 2  மணித்தியாலங்கள் வரை கை மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும் (Primary Flaccidity) பின்பு 2 தொடக்கம் 12 மணித்தியாலங்களில்  படிப்படியாக   விறைத்தநிலைக்கு வரும். இதற்கு தசைகளில் ஏற்படும் இரசாயன மாற்றங்களே காரணம் (Rigor mortis).  இதன் பொது கை மற்றும் கால் எனவற்றினை அசைக்க கடினமாக இருக்கும்.  இதன் பின்னர் இவ்விறைப்பு  படிப்படியாக குறைவடைந்து முற்றாக நீங்கும் (secondary flaccidity) இதன் பொது மீண்டும் காய் மற்றும் கால் என்பன தளர்வாக இருக்கும். இவ்வாறு விறைப்பு தன்மையும் தளர்வு தன்மையும் மாறிமாறி வருவதன் காரணமாக நெஞசு பகுதில் வைக்கப்பட்ட கை அல்லது விரல் அசைத்து இருக்கும்.

 ஒரு குடும்ப உறுப்பினருக்கு திடீர் மரணமானது ஏற்படும் போது சில குடும்பதினர் பொதுவாக இறப்பினை ஏற்றுகொள்வதில்லை, அவர்கள் இறந்தவர் உயிருடன் இருப்பதாகவே கருதுவார்கள். இதன்காரணமாகவே தந்தையினால் இறந்த அன்பு மகளில் நாடிதுடிப்பினை போலியாக உணரமுடிந்தது.

மனித உடலின் அழுகல் வீதமானது (Rate of putrefaction)  உடல் மற்றும் சூழல் காரணிகளில் தங்கியுள்ளது. வெப்பநிலை கூடிய யாழ்ப்பாணத்தில் இறந்து 24 மணித்தியாலங்களின் பின்னர் பதப்படுத்தப்படாத உடலில்  பெரும்பாலும் அழுகல் ஆனது ஆரம்பித்து இருக்கும் ஆனால் உறவினர்களுக்கு போதிய அனுபவம் மற்றும் மருத்துவ அறிவு இன்மையால் அவற்றினை அவர்களால் இனம் காணமுடியாது போயிருக்கலாம்.

மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் அனைத்தும் மனித உடல் அழுகுவதன் (Putrefaction changes of body) காரணமாகவே ஏற்பட்டது .

இம்மரணமானது வைத்தியசாலையில் நடைபெற்றுள்ள பொது வைத்தியர்கள் சிறுமியின்   மூளை, இருதயம் மற்றும் நுரையீரல் என்பவறின் தொழில்பாடு  நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பதினை உறுதி செய்து, இறப்பினை உறுதிப்படுத்தி இருப்பார்கள். இன்நிலையில்  சாதாரண பூசாரி குறித்த குழந்தை இறக்கவில்லை என தெரிவித்தமை நகைப்புக்குரியது.

ஒரு காலத்தில் கல்வி அறிவுக்கு பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்தில் இவ்வாறன மூடநண்பிக்கையான செயற்பாடு நடைபெற்றமை வருந்த தக்கது . அதனை விட சில இலத்திரனியல் ஊடகங்கள் இச்சம்வத்திற்கு பெரும் பரபரப்பு கொடுத்து செய்தி வெளியிட்டமை மேலும் கண்டிக்கத்தக்கது.