வெள்ளப்பெருக்கின்  பின்னரான தொற்றுநோய்களில் இருந்து எம்மை பாதுகாப்போம்

இலங்கையில் புயலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளப் பெருக்கு என்பன சற்று தணிந்துள்ள நிலையில். வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருகின்றது. இந்நிலையில் எதிர் வரும் நாட்களில் மக்கள் தமது வாழ்விடங்களை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு சூழ்நிலையில் வெள்ளப்பெருக்குக்கு நிலவுகின்ற அல்லது அதற்கு பிந்திய சூழ் நிலையில் தொற்று நோய்கள் பரவுகின்ற அபாயம் மிக அதிகமாக இருக்கின்றது. வெள்ள பெருக்கு காரணமாக மலசல குழிகள் நிரம்பி வழிந்து ஓடும் நீருடன் கலந்து இருக்கலாம் மேலும் இவ்வாறான வெள்ள நீர் அன்றாடம் நாம் பயன்படுத்தும் நீர் நிலைகளில் கலந்து அந்த நீர் மாசடைந்திருக்கும் எனவே பின்வரும் முறைகளை கையாள்வதன் மூலம் நாம் இயன்றளவுக்கு எம்மை நாமே பாதுகாத்து கொள்ளலாம்.

1.  வெள்ள நீர் கலக்காத கிணறுகளில் இருந்து பெறப்பட்ட நீரினை தாங்கிகளில் சேகரித்து குளோரின் பரிகரிப்பு செய்து பாவிக்கலாம். அல்லது நீர் வழங்கல் சபையின் ஊடாக வழங்கப்படும் நீரினை பாவிக்கலாம்

2. குடிப்பதற்கு குளோரின் மூலம் பரிகரிக்கப்பட்ட கொதித்து ஆறிய  நீரினை பாவிப்பதே சிறந்தது. அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரினை பாவிக்கலாம்.

3. இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கி இருப்பவர்கள் இவ்வாறு வெவ்வேறு தேவைகளுக்கு என வேறுவேறாக நீரினை பாவிப்பது நன்று.

4. நீரினை குளோரின் மூலம் பரிகரித்தல், தரம் பரிசோதித்தல், மீள் பார்வை செய்தல் போன்றவற்றிக்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்று கொள்ளவும்.

5. நில நீர் மட்டம் நன்றாக குறைந்து கிணற்றின் அரைவாசியினை விட குறைவாக இருக்கும் பொழுதே கிணற்றினை இறைத்து துப்பரவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். நீர் நிரம்பிய நிலையில், மண்ணில் நீரின் அளவு கூடுதலாக உள்ள நிலையில் கிணற்றினை இறைத்தால் கிணறு இடிந்து வீழ்ந்து உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும்.

6. இடைத்தங்கல் முகாம்களில் இருப்பவர்கள் தமது சமையலின் பொழுது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரின் ஆலோசனை மற்றும் உதவிகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வழங்கப்படும் சமைத்த உணவுகளை இயன்றவரை தவிர்த்து உலர் உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

7. கரட், கீரை போன்ற மரக்கறிகளை பச்சையாக அதாவது சமைக்காது உண்பது தவர்க்கப்படல் வேண்டும்.

8. வெள்ளம் காரணமாக மலக்குழிகள் நிறைத்து இருக்கும் இந்நிலையில் மேடான பகுதிகளில் தற்காலிக மலசலகூடங்களை அமைத்து பாவிக்க வேண்டும். குழந்தைகளின் மலைக்கழிவுகள், பம்பஸ் போன்றவற்றினை கட்டாயம் சிறுகுழிகள் வெட்டி புதைக்க வேண்டும்.

9. நிரம்பிய மலக்குழிகளை இறைத்து வெளியேற்றுவதோ அல்லது மலக்குழிகளின் மேல் ஏறி நிற்பதோ ஆபத்தினை விளைவிக்கும். மண்ணில் நீர்பற்று கூடிய நிலையில் மலக்குழி எந்நேரமும் இடிந்து விழலாம். ஒருசில நாட்களில் நீர் மட்டம் குறையும் பொழுது மலக்குழியிலும் நீர் மட்டம் குறைந்து நாம் வழமை போன்று பாவிக்கலாம்.  

10. வீடுகளுக்கு திருப்பும் பொழுது வீடுகளில் சேற்று நீர் நிரம்பி வீடு அழுக்கடைந்து இருக்கும் இந்நிலையில் வீட்டினை நன்றாக கழுவிய  பின்னர் தரை, சுவர்கள்  மற்றும் தளபாடங்களை குளோரின் நீர் அல்லது பினாயில் நீர் கொண்டு துடைத்தல் வேண்டும்.

11. வீட்டின் அயற்பிரதேசங்களில் இறந்து கிடக்கும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளின் உடலங்களை குழி தோண்டி புதைக்க வேண்டும். 

12. டெங்கு நுளம்பு பரவாமல் இருக்க வீட்டின் அயற்பிரதேசங்களில் வெள்ளத்தினால் கொண்டுவரப்பட்டு தேங்கி இருக்கும் கோம்பைகள், பிளாஸ்ட்டிக் பாத்திரங்கள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரினை வெளியில் ஊற்றி அவற்றினை தலை கீழாக கவிட்டு வைக்க வேண்டும்.    

13. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு காச்சல் ஏற்பட்டால் அது சாதாரண சளிக் காச்சல் என்று சுய வைத்தியம் செய்யக்கூடாது. ஏனெனில் அது ஆபத்தான எலிக்காச்சல் அல்லது டெங்கு காச்சல் ஆக இருக்கலாம். வைத்திய ஆலோசனைகளை நிச்சயம் பெற வேண்டும்.

14. சிறுவர்களுக்கு வயிற்றோட்டம் ஏற்படும் பொழுது அவர்களுக்கு ஜீவனி போன்றவற்றினை உடனடியாக கொடுக்க வேண்டும் அத்துடன் வைத்திய ஆலோசனைகளை நிச்சயம் பெற வேண்டும்.

15. சமையலிற்கு முன்னரும், உணவு உண்ண முன்னரும் கைகளை நன்றாக சவர்க்காரம்  கொண்டு நீரில் கழுவுதல் கட்டாயம் அல்லது தொற்றுநீக்கி (Hand sanitizer) பாவித்து கழுவுதல் கட்டாயம்.

16. இடைத்தங்கல் முகாம்களில் சமையலின் பொழுது இறுக்கமான சுகாதாரத்தினை பேனல் வேண்டும். பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளலாம்.

17. நோய் தோற்ற கூடிய ஆபத்தான பிரதேசங்களில் வசிப்பவர்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் எலிக்காச்சல் போன்ற நோய்கள் தமக்கு உண்டாகாத வண்ணம் பாதுகாப்பு மருந்துகளை (chemoprophylaxis) உட்கொள்ளலாம்

இவ்வாறான சூழ்நிலையில் சுகாதாரம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பொதுச்சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி போன்றோரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பெறுதல் நன்று. இறுக்கமான தனிநபர் மற்றும் சமூக சுகாதார நெறிமுறைகளை கையாளுவதன் மூலம் நாம் உயிரிழப்புக்களை மற்றும் வைத்திய சாலை அனுமதி, சிகிச்சை போன்றவற்றினை குறைத்து கொள்ளலாம்

நன்றி   

இலங்கையில் “உள்நாட்டு சுனாமி” ??

இலங்கையில் புயலோடு கூடி பெய்யும் வரலாறு காணாத அதிக மழை வீழ்ச்சி காரணமாக அதிகளவான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது மேலும் பாலங்கள், குளங்கள் என்பன உடைப்பெடுத்திருக்கின்றன. மண் சரிவுகளில், வெள்ள பெருக்கில்  சிக்கி பலர் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு அதிக சேதங்கள் வருவதற்காக காரணங்கள் என்ன? ஏன் இவ்வாறு வெள்ளம் கரை புரண்டு ஓடியது? அதற்கான காரணங்கள் என்ன?

கரைபுரண்டு ஓடிய வெள்ளம் காரணமாக உடைந்த மொறகாகந்த பாலம்

1. குறுகிய காலத்தினுள் அதிக மழை வீழ்ச்சி

சாதாரணமாக ஒரு வருடத்தினுள் வருடம் பூராகவும் பெய்ய வேண்டிய மழையின் அளவானது ஒருசில நாட்களில் அதுவும் குறித்த மணித்தியாலங்களினுள் புயல் காரணமாக பெய்திருக்கின்றது. இதன் காரணமாக ஆறுகள், குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகள் தமது கொள்ளளவினை தாண்டிய நிலையில் நீரினை வெளியேற்றுகின்றன.

2. பருவ மழைவீழ்ச்சி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில்  ஏற்கனவே ஆங்காங்கு பெய்த மலையின் காரணமாக மண் போதிய அளவு நீரினை உறிஞ்சி அதன் கொள்ளவினை அடைந்திருந்தது. மேலும் நில நீரின் மட்டமும் கணிசமான அளவு உயர்த்திருந்தது இதன் காரணமாக மண் அதிகளவு நீரினை உறிஞ்ச முடியாத நிலை உருவாக்கியது.

3. இயற்கையான நீரோட்டங்கள் மனித நடவடிக்கைகளினால் தடைப்பட்டமை. உதாரணமாக கட்டிடங்கள், மதில்கள் போன்றன நீரோட்ட பாதைகளில் அமைக்கப்பட்டமை, நீரோட்ட பாதைகளினை பாரமரிக்க தவறியமை காரணமாக சிறுமரங்கள், செடிகள், கொடிகள் போன்றன வளர்ந்து அதில் பிளாஸ்ட்டிக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவுகள் சிக்கி நீரோட்டத்தினை தடைசெய்தமை.

4. வேகமான நகர மயமாக்கம் காரணமாக இயற்கையான நீரினை உறிஞ்சும் மண் சீமெந்தினாலும், தார் இனாலும் நிரப்பப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது இதன் காரணமாக நீர் தேங்கி நிற்கும் அல்லது வழிந்து ஓடவே செய்யும்.

5. அதிகரித்த நீர் வரத்து காரணமாக குளம், வாவி போன்றவற்றின் வாசல்கள் திறக்கப்பட்டு அதிகளவு நீர் ஒரேடியாக வெளியேற்றப்பட்டமை.

6. இலங்கையின் கரையோர பிரதேசங்கள் அதாவது சமவெளிகள் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இல்லை எனவே சாதாரணமாக நீர் இப்பிரதேசத்தில் அதிவேகமாக பாயாது 

7. அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற கட்டுமானங்களினால் இயற்கையான நீரோட்டம் தடைப்பட்டமை.

8. கட்டுக்கடங்கா நீர்வரத்து காரணமாக குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்கள் திடீர் என்று உடைப்பெடுத்தமை.

   இவ்வாறன காரணங்களினால் அதிகளவு நீர் வெளியேறி அலை போன்று பாய்ந்து அதிக சேதங்களை விளைவித்தல் “உள்நாட்டு சுனாமி” (An “inland tsunami” is a term used to describe a powerful, fast-moving flash flood that behaves similarly to a tsunami, carrying debris and causing widespread destruction) (colloquial term) என்று சில வல்லுனர்களினால் அழைக்கப்படும். இவ்வாறு திடீர் வெள்ளப்பெருக்குகளால் ஏற்படும் சேதாரங்களை கட்டுப்படுத்துவது கடினம் அதற்கு நீண்ட கால திட்டமிடல், சட்ட அமுலாக்கம், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு … போன்றன அவசியம். இதனை விட இவற்றினை அமுல்படுத்த நீண்ட கால கொள்கை அவசியம். இலங்கை போன்ற நாடுகளில் இது சாத்தியமா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற சில உள்நாட்டு சுனாமி சம்பவங்கள் சில

1. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டூவூம்பாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை ஊடகங்கள் “உள்நாட்டு சுனாமி” என்று வர்ணித்தன.

2. 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் யூகோவ்ராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை குடியிருப்பாளர்கள் “உள்நாட்டு சுனாமி” என்றும் அழைத்தனர்.

3. ஜான்ஸ்டவுன் வெள்ளம் (1889): பென்சில்வேனியாவில் தெற்கு ஃபோர்க் அணை உடைந்த பிறகு, 12 மீட்டர் (40 அடி) உயரமான நீர் அலை லிட்டில் கோன்மாக் நதி பள்ளத்தாக்கில் பாய்ந்து 2,200 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது. இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் மற்றும் “உள்நாட்டு சுனாமி” நிகழ்வின் ஒரு சிறந்த வரலாற்று எடுத்துக்காட்டு.

4. செயின்ட் பிரான்சிஸ் அணை உடைப்பு  (1928): கலிபோர்னியாவில் உள்ள அணையின் உடைப்பு , சான் பிரான்சிஸ்கிட்டோ கேன்யன் மற்றும் சாண்டா கிளாரா நதி பள்ளத்தாக்கு வழியாக கடலுக்குச் சென்ற ஒரு பெரிய அளவிலான நீர் , இது பரவலான பேரழிவை ஏற்படுத்தியது மற்றும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றது.

5. Texas Hill Country Floods (2015 Memorial Day Flood): பிளாங்கோ நதி போன்ற ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளை உயிர் பிழைத்தவர்களும் ஊடகங்களும் “உள்நாட்டு சுனாமிகள்” என்று விவரிக்கின்றனர், ஏனெனில் திடீரென ஏற்படும் சக்திவாய்ந்த அலைகள்  குப்பைகள் மற்றும் கட்டிடங்களை  விரைவாக அழித்து, நீண்ட தூரத்திற்கு கட்டமைப்புகளை எடுத்துச் சென்றன.

“உள்நாட்டு சுனாமி” என்ற கருத்தியலில் பல்வேறு சர்ச்சசைகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றும்

ஆபத்தான முடிவு

இலங்கையில் மழை கொட்டி தீர்க்கின்றது. இந்த சூழ்நிலையில் பல வீதிகளின் குறுக்காக வெள்ளம் ஓடுகின்றது சில இடங்களில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள்  பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் பலர் தமது வாகனங்களில் அவற்றினை கடக்க முயன்று பலரின் வாகனங்கள் வெள்ளத்தோடு அடித்து செல்லப்படுகின்மை பார்க்க கூடியதாக உள்ளது. மேலும் சில இடங்களில் பஸ்கள் இவ்வாறு கடக்க முற்பட்டு நடு வெள்ளத்தில் மாட்டி பின்னர் பிரயாணிகளை மீட்பு பணியாளர்கள் மற்றும் உலங்கு வானுர்தி மூலம் மீட்ட  சம்பவங்கள் நடந்துள்ளன.    இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பாரிய உயிர் மற்றும் பொருளாதார சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலர் முக்கியமாக வாகனங்களின் சாரதிகள் ஓடும் வெள்ள நீரினால் ஏற்படும் விசையினை தவறாக கணிப்பதன் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு ஓடுகின்ற நீரில் வாகனங்களை செலுத்துதல் ஏன் ஆபத்தான  விளைவாக மாறுகின்றது.

1. ஓடும் நீரினால் அழுத்த (Hydrostatic force) மற்றும் இயங்கு நிலை விசைகள் (kinetic force) பிரயோகிக்கப்படும். பெரும்பாலான சந்தர்ப்பத்தில் எமது மூளை அழுத்த விசையினால் ஏற்படும் விளைவினை மறந்துவிடும். இவ்விரு விசைகளின் சேர்க்கையினால் அதீத விசை உருவாகும். உதாரணமாக வேகமாக ஓடும் ஒரு அடி நீர் கார் போன்ற சிறிய வாகனங்களை தள்ளிவிடும் அவ்வாறே வேகமாக ஓடும் 2 அடிநீர் பெரிய வாகனங்களாக பஸ் போன்றவற்றினை ஆட்டம் காண வைக்கும்.

2. நீரில் வாகனம் மிதக்க தொடங்கியவுடன் ரயருக்கும் நிலத்துக்கும் இடையிலான தொடர்பு அற்று போகும் இதன் காரணமாக இலகுவாக வாகனம் நீரின் ஓட்ட திசையில் அசையும்.

3. நீரின் ஒட்டத்தினுள் கிடங்குகள், அடித்துவரப்படும் மரங்கள், வீதியோரம் முறிந்த மரங்கள், முறிந்த மின் கம்பங்கள் போன்றன இருக்கும். இவற்றில் உங்கள் வாகனம் சிக்கிவிடும். 

4. தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது ஓடும் நீர் சிறிய ஆழத்தில் ஓடுவது மாதிரி இருக்கும் ஆனால் ஓடும் நீரின் நடுப்பகுதியில் மண்ணரிப்பு காரணமாக மிக ஆழமான பகுதிகள் காணப்படலாம்.

5. ஓடும் நீரின் போக்கு அடிக்கடி மாறுபடும் சில நிமிட இடைவெளிகளில் பெருக்கெடுக்கலாம் அல்லது சுழிகள் உருவாகலாம்.

6. வாகனத்தின் எஞ்சினினுள் நீர் சென்று விட்டால் வாகனம் தீடீர் என்று ஓடும் நீரின் நடுவே நின்று விடும் அத்தகைய சூழ் நிலையில் வாகனத்தின் மின்சாரமும் துண்டிக்கப்படும் இவ்வாறான சூழ்நிலையில் கார் போன்ற வாகனங்களின் கதவுகளை திறந்து வெளியேறுவது கடினம். ஒருசில நிமிடங்களில் நீர் முற்றாக வாகனத்தினை நிரம்பிவிடும். மேலும் இவ்வாறு வாகனம் சடுதியாக நிற்கும் பொழுது (water lock) அதனை நாம் கட்டுப்படுத்தல் முடியாது . வாகனம் நீரில் மிதந்து அதன் ஒட்டத்தில் செல்ல ஆரம்பித்து விடும்.

எனவே நாம் இவ்வாறான ஓடும் நீரோட்டங்களை (நிலையான தேங்கிய நீர் அல்ல)  கண்டால்  அதனை வாகனத்தில் கடக்க முயற்சிக்காது வாகனத்தினை வேறு பாதையில் திருப்பி செல்வதே பாதுகாப்பான பயணமாக அமையும்        

முற்றும்

கடியோ கடி!!

மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் மிருகங்களில் இருந்து கூர்ப்படைந்தவர்கள் என்று காலத்திற்கு காலம் நிரூபித்துவிடுவார்கள். அவ்வாறான ஓர் சந்தர்ப்பமே மற்றைய மனிதர்களை வாயினால் கடிப்பதாகும். உதாரணமாக குடும்ப வன்முறைகள், பாலியல் துஸ்பிரயோகம், மதுபோதை மற்றும் போதைப்பொருள் போன்றன பாவித்த பின்னர் நடைபெறுகின்ற தனி நபர் மீதான தாக்குதல் சம்பவங்கள் போன்றவற்றில் இவ்வாறான கடித்தல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இவ்வாறு மனிதர் ஒருவரில் கடிகாயங்கள் காணப்படும் பொழுது சட்ட மருத்துவ ரீதியாக என்ன விடயங்களை செய்யலாம் என்பதை இந்த பதிவு விளக்குகின்றது

1. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கடி காயங்களினால் மூக்கு, உதடு போன்றன பகுதியளவில் துண்டிக்கப்படலாம். இவ்வாறு துண்டிக்கப்படல் என்பது ஓர் பாரிய காயம் ஆகும். அதற்கு ஏற்ற வகையில் நீதிமன்றினால் உரிய தண்டனைகள் வழங்கப்படலாம்.

2. சந்தேக நபர்களினை கைது செய்தல் – ஒவ்வொரு மனிதனுக்கும் வாயில் அமைந்த பற்களின் நிலை தனித்துவமானதாகும் இதன் காரணமாக அவர்கள் பிற மனிதர்களில் அல்லது பொருட்களில் கடிக்கும் பொழுது உருவாகும் கடி காயங்களும் தனித்துவமானதாக இருக்கும் இதன் காரணமாக  பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் இவ்வாறு கைதுசெய்யப்படலாம். மேலும் கடி காயங்களில் காணப்படும் உமிழ் நீரில் இருக்கும் DNA மற்றும் ஏனைய பொருட்கள் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்  கைதுசெய்யப்படலாம்

3. மேலும் இவ்வாறு ஏற்படும் கடிகாயங்கள் நீதிமன்றில் தாக்குதல் மேற்கொண்டவர் – பாதிக்கப்பட்டவர் இடையிலான பௌதீகரீதியிலான தொடர்பு இருந்ததினை நிரூபிக்க போதுமானதாக இருக்கின்றது மேலும் நடைபெற்ற குற்ற செயலுக்கான ஆதாரத்திற்கு வலுச்சேர்க்கின்றது  (corroborating evidence). உதாரணமாக பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் மார்பங்களில் காணப்படும் கடிகாயம்

4. சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு நாட்களில் உண்டாக்கப்பட்ட கடி காயங்கள் காணப்படும். கடி காயங்களின் பின்னர் அதில் ஏற்படும் நிறமாற்றத்தினை அவதானித்து கடி காயம் எந்த காலப்பகுதியில் ஏற்பட்டது என கூறமுடியும் 

மேலும் இவ்வாறான கடி காயங்கள் ஏற்படும் பொழுது கட்டாயம் மருத்துவ சிகிச்சையினை பெறவேண்டும். வைத்தியர்கள் கடிகாயத்திற்கு

1. காயம் மாறுவதற்காக ஆண்டிபையோட்டிக் மருந்து தருவார்கள் மேலும் கடுமையான வேதனை இருக்கும் பொழுது வலி நிவாரணிகள் தருவார்கள்

2. ஏற்புவலி ஏற்படாமல் இருக்க டொக்சாய்ட் (Tetanus toxoid) ஊசி போடுவார்கள்.

3. மேலும் நீர் வெறுப்பு நோய் ஏற்படாமல் இருக்க (ARV – Anti rabies Vaccine)ஊசி  போடுவார்கள்

நன்றி      

பலரினை பலியெடுத்த பஸ் விபத்து – நடந்து என்ன?

மூன்று தினங்களுக்கு முன்னர் (17/11/2025) அன்று ஓர் துயர சம்பவம், சவூதி அரேபியாவின் மக்காவில் இருந்து மதீனா செல்கின்ற இந்திய யாத்திரிகர்களை ஏற்றிய பேருந்து ஒரு டீசல் எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதியது. இந்த விபத்தின் காரணமாக பேருந்தில் இருந்த 45 பயணிகள் பரிதாபரமாக இறக்கின்றனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கின்றார். எவ்வாறு தீ பரவியது, ஏன் பயணிகள் தப்பி ஓட முடியவில்லை , ஏன் அவ்வாறு நடந்தது, “Kiln Effect” என்றால் என்ன? என்பதை அறிவியல் ரீதியாகப் இப்பதிவு விளக்குகின்றது.

1. வாகன மோதலின் பொழுது எவ்வாறு எரிபொருள் சிந்தியது (Atomization vs. Spillage)?

வழமையாக விபத்து நடந்த சாலைகளில் பேருந்துகள் 100 – 120km வேகத்திலேயே செல்வது வழமை . இவ்வாறே குறித்த பேருந்தும் 100km/h இற்கு மேற்பட்ட அதிவேகத்திலேயே பிரயாணித்தது. வழமையாக டேங்கரில் முற்றாக நிரம்பிய நிலையிலேயே எரிபொருள் கொண்டுசெல்லப்படும். பகுதியளவில் கொண்டுசெல்வது டேங்கருக்கு சேதத்தினை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது  இவ்வாறு இரு வாகனங்களும் மிக மிக அதி வேகத்தில் மோதும் பொழுது டேங்கரில் இருந்த டீசலில் மிக அதிக அழுத்தம் உருவாகும் இதன் காரணமாக டீசல்  ஆனது டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரங்கள் மற்றும் சிறு வெடிப்புக்கள் வழியாக பீச்சி அடிக்கப்படும். இச் செயற்பாட்டின் பொழுது டீசல் ஆவியாகும் அதாவது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் (atomization) மேலும் அந்த சூழலில் நிலவிய அதீத வெப்பம் இவ்வாறான ஆவியாதலினை மேலும் அதிகமாக துரிதப்படுத்தும்

மேலும் சில மில்லி செக்கன்களில் டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரம் மற்றும் சிறு வெடிப்பு என்பன  பெரிதாக டேங்கரில் இருந்த டீசல் ஓர் வாளியில் இருந்த நீர் ஊற்றுவது போல் அருவியாக வெளியேறி டேங்கரினை சுற்றியுள்ள நிலத்தில் வீழ்ந்து தேங்கும்.  இவ்வாறு உருவாக்கிய டீசல் ஆவி இருவாகனங்களையும் கணப்பொழுதில் சூழ்ந்து கொள்ளும்.

2. எவ்வாறு தீப்பொறி ஏற்பட்டது?

பின்வரும் காரணங்களினால் தீப்பொறி உண்டாகியிருக்கலாம்

  1. அதி வேகத்தில் இரு வாகனங்களும் மோதியமையால் இரண்டினதும் உலோக பகுதிகள் உரசுவதினால்
  2. வாகன மின் சுற்றில் இருந்து
  3. சூடான வாகனத்தின் இயந்திர பகுதியில் இருந்து

இவ்வாறான நிலையில் சூழ இருந்த டீசல் ஆவி மிக இலகுவாக தீப்பற்றும் தன்மையுடையது. உண்மையில் திரவ டீசல் ஆனது இலகுவில் தீப்பற்றாது ஆனால் இவ்வாறான டீசல் ஆவி மிக இலகுவில் தீப்பற்றும் தன்மை உடையது. மேலும் டீசல் ஆவி வளியுடன் குறித்த விகிதத்தில் கலந்து இருக்கும் பொழுது வெடித்தலுடன் தீப்பற்றும். டீசல் வாகனங்களில் இன்ஜெக்டர் இந்த வேலையினை செய்கின்றது. ஆனால் இங்கு மிக மிக பெரிய அளவில் இச்செயற்பாடு நடந்துள்ளது

3. எவ்வாறு தீ பரவியது?

உண்டாகிய பொறியில் இருந்து தீ உடனடியாகவே வாகனத்தினை சூழ இருந்த டீசல் ஆவிக்கு பரவி ஒரு சில வினாடிகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் (Flash fire ) இரு வாகனத்தினையும் தீ சூழ்ந்திருக்கும். இதன் பிற்பாடே டேங்கரில் இருந்து கீழே சிந்திய டீசலுக்கு பரவியிருக்கும் (pool fire )சம நேரத்தில் பேருந்தின் இயந்திரம் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக, நெருப்புப் பந்து விளைவு என்பது எரியக்கூடிய வாயுக்கள் அல்லது காற்றில் கலந்த திரவ எரிபொருளின் விரைவான எரிப்பு காரணமாக ஏற்படலாம், இது ஒரு கோள வடிவ சுடர் முகப்பை உருவாக்குகிறது, இது விரைவாக வெளிப்புறமாக விரிவடைகிறது. நெருப்புப் பந்தின் தீவிரம், அளவு மற்றும் கால என்பன எரிபொருள் வகை, அளவு மற்றும் சூழல் என்பவற்றில் தங்கியிருக்கும்

4. “Kiln Effect” என்றால் என்ன?

Kiln என்பதன் அர்த்தம், செங்கல், மண் பொருட்கள், செராமிக் போன்றவற்றை மிக அதிக வெப்பத்தில் எரிக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பு (பொதுவாக 800°C – 1,200°C அல்லது அதற்கு மேல்). இலகு தமிழில் பாண் போறணைக்கு எதிரான விளைவு ( பாண் போறணை உட்பக்கத்திலேயே வெப்பம் உண்டாக்கப்படுகின்றது).

அதாவது ஒரு மூடிய கட்டமைப்பு உதாரணமாக பேருந்து, கார், அறை வெளியில் இருந்து வரும் தீவிர வெப்பத்தால் உட்புறம் முழுவதும்  மிக அதிக வெப்பத்தில் சூடாக மாறும் நிகழ்வு.

சுருக்கமாக (Kiln Effect)பேருந்து  போன்ற மூடிய இடம் திடீரென “சூப்பர்-ஹீட்டட் ஓவன்” (superheated oven) போல மாறும் நிலை. அதாவது வெளியில் எரியும் தீயின் வெப்பம் அதை உலோக சுவர் மற்றும் மேல் தகடுகள் உறிஞ்சி உள்ளே நோக்கி கதிர்வீச்சாக (radiate) அனுப்புவதால் உள்ளே இருக்கும் மனிதர்கள் சில வினாடிகளில் மிக அதிக வெப்பத்தால் செயலிழந்து சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும்

5. பேருந்தில் இருந்த பிரயாணிகளுக்கு என்ன நடந்திருக்கும்?

பேருந்து தீ விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அறிவியல் காரணம் ஆரம்ப கட்டத்தில் தீ அல்ல; பேருந்து மிக அதிக வெப்பமுள்ள அடுப்பு போல மாறுவதுதான். அதற்கான காரணிகள்  

  1. கதிர்வீச்சு வெப்ப பரிமாற்றம்: பேருந்தின் இரும்பு உடல் வெளியில் எரியும் எரிபொருளில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி, அதை உள்ளே நோக்கி கதிர்வீச்சாக செலுத்துகிறது. கண்ணாடிகள் வெப்ப அதிர்ச்சி (thermal shock) காரணமாக திடீரென உடைந்து விழும்.
  2. நச்சு வாயு சூழல்: உள்ளே உள்ள இருக்கைகள், பிளாஸ்டிக், இன்சுலேஷன் போன்றவை எரிவதால், கார்பன் மொனாக்சைடு (CO) மற்றும் ஹைட்ரஜன் சயனைடு (HCN) கொண்ட அடர்த் கரும்புகை உருவாகிறது.
  3. விளைவுவாக குறுகிய, மூடிய இடத்தில் இவ்வாயுக்கள் ஆக்சிஜனை சில வினாடிகளில் முடித்து விடுகின்றன இதனால் பேருந்தில் பயனித்தவர்களுக்கு ஆரம்பத்தில் மூச்சு திணறல் (suffocation) ஏற்படும்

6. யாத்திரிகர்கள் தப்பி ஓடமுடியாமைக்கும் மரணம் அடைந்தமைக்கும் என்ன காரணம்?
இந்தச் சம்பவத்தில் துயரத்தை மேலும் அதிகரித்த காரணம், விபத்து இரவு 1:30 மணியளவில் நடந்தது; பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர்.

  • மனிதர்கள் தப்பி ஓடமுடியாமை  (Incapacitation): Flash fire ஏற்பட்டவுடன் வெப்பம் திடீரென அதிகரிப்பதால்அதிகரித்த வெப்ப காற்று காரணமாக தொண்டை கட்டி மூச்சு விடுவது கடினம் (laryngeal spasm ) இதனால் மனிதர்கள் கத்தவோ சுவாசிக்கவோ முடியாத நிலை உண்டாகிறது.
  • உயிரிழத்தல் காரணம் – மூச்சுத்திணறல்: தீ உடலில் தொடுவதற்கும் முன், எரியும் பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ஹைட்ரஜன் சயனைடு காரணமாக சில வினாடிகளில் மயக்கம் ஏற்படும்.
  • வெப்ப அதிர்ச்சி: சுற்றியுள்ள வெப்பம் 150°C–200°C கடந்தவுடன் மனித உடல் உடனடியாகத் தளர்ந்து விழும்; எனவே தப்பிக்க முயல்வதும் கூட இயலாத நிலை

இறுதியாக இந்த விபத்து பேருந்து கணநேரத்தில் அணுவாக்கமடைந்த டீசல் எரிபொருளால் (டீசல் ஆவி) மூடப்பட்டு உடனே தீப்பற்றியது. “Fireball” தாக்கத்தின் காரணமாக பயணிகளுக்கு எந்தவித எதிர்வினை நேரமும் கிடைக்கவில்லை. இழந்த 45 உயிர்களும் தீ மெதுவாக பரவியதற்கல்ல; அது உடனடியாக, மிகவும் தீவிரமான வெப்ப வெடிப்பு போல உருவாகி, அனைவரும் தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் பேருந்தை முழுவதும் சூழ்ந்துகொண்டதால்தான் ஏற்பட்டது.

நன்றி

உயிரை பறிக்கும் “மாவா”!!

அண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?,  மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது?

    மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்:

    1. பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர்.
    2. புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள்.
    3. சுண்ணாம்பு (Slaked Lime): புகையிலை மற்றும் பாக்கின் காரத்தன்மையை (alkalinity) மாற்றி, அதில் உள்ள நிக்கோடினை (Nicotine) உடல் வேகமாக உறிஞ்சிக்கொள்ள இது உதவுகிறது.

    சில நேரங்களில், கூடுதல் சுவைக்காக சில மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படலாம், ஆனால் மேற்கண்ட மூன்றுமே இதன் முக்கியப் பொருட்கள் ஆகும்.

    2. மாவா பாக்கில் கஞ்சா இருக்கின்றதா?

    இல்லை. மாவா பாக்கின் அடிப்படை மற்றும் பொதுவான தயாரிப்பு முறையில் கஞ்சா (Ganja) சேர்க்கப்படுவது இல்லை.அதன் போதைத்தன்மைக்கு முக்கிய காரணங்கள் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் (Nicotine) மற்றும் பாக்கில் உள்ள அரெகோலின் (Arecoline) ஆகிய இரண்டு பொருட்களும்தான்.இருப்பினும், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் சில இடங்களில், கூடுதல் போதைக்காகவோ அல்லது மக்களை வேகமாக அடிமையாக்கவோ, அதில் கஞ்சா அல்லது வேறு சில ஆபத்தான ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படலாம். ஆனால், இது மாவா பாக்கின் அதிகாரப்பூர்வமான தயாரிப்பு முறை அல்ல.

    3. மாவா பாக்கினை எவ்வாறு தயாரிப்பார்கள்?

    இந்தியாவில் பெரும்பாலும் கடைகளில், வாடிக்கையாளர் கேட்கும் போதே உடனடியாகத் தயார் செய்து தரப்படும் ஒரு கலவையாகும்.

    1. நறுக்கப்பட்ட பாக்கு, புகையிலை மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு ஆகியவற்றை உள்ளங்கையில் வைத்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கட்டை விரலால் நன்கு தேய்ப்பார்கள் (நசுக்குவார்கள்).
    2. இந்த கலவை ஒரு சிறிய தாளில் மடித்துக் கொடுக்கப்படும். இதை பயன்படுத்துபவர் வாயில் வைத்து மெதுவாக மென்று, அதன் சாற்றை உமிழ்நீருடன் கலந்து கொள்வார்.

    இலங்கையில் கிடைக்கும் ஏற்கனவே தயாரித்து விற்கப்படும் (Pre-Packaged) மாவா பாக்குகள் வீரியம் குறைந்தவை அல்ல. அவை உடனடியாகத் தயார் செய்யப்படும் மாவா பாக்கைப் போலவே, அல்லது சில சமயங்களில் அதைவிட மோசமாக, அதிக வீரியமும் அடிமையாக்கும் திறனும் கொண்டவை.

    தொழிற்சாலைகளில், புகையிலை, பாக்கு, சுண்ணாம்பு, மற்றும் வாசனைப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்டு, பாக்கெட் (Sachet) செய்யப்படுகிறது. இதிலும் சுண்ணாம்பு ஏற்கனவே கலக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பாக்கெட்டில் உள்ள கலவை எப்போதுமே தீவிர காரத்தன்மை (High pH) உடனேயே இருக்கும். இந்த பாக்கெட்டைப் பிரித்து வாயில் போடும்போது, அது உமிழ்நீருடன் கலந்தவுடனேயே, அந்த உயர் காரத்தன்மை நிக்கோட்டினை “சுதந்திர நிக்கோட்டினாக (free nicotine)” மாற்றி ரத்தத்தில் கலக்கத் தொடங்கிவிடும். இதற்கு “தேய்க்கும்” அல்லது “கசக்கும் ” வேலை கூடத் தேவையில்லை.

    “வீரியம்” (Potency) என்பது நிக்கோட்டின் (Nicotine) எவ்வளவு வேகமாக உங்கள் மூளையைச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்தது.

    4. மாவா பாக்கினை வாயில் மென்றவுடன் கிறுகிறுவென போதை தலைக்கு ஏற காரணம் என்ன?

    இதன் பின்னால் பின்வரும் மூன்று இரசாயனவியல்  மற்றும் உயிரியல் காரணங்கள் இருக்கின்றன

    1. முக்கிய காரணம்: சுண்ணாம்பு (Slaked Lime)மக்களுக்கு ஏற்படும் தீவிரமான போதை உணர்விற்குக் காரணம் புகையிலையின் அளவு மட்டுமல்ல, அந்த புகையிலையிலிருந்து நிக்கோட்டினை நமது உடல் எவ்வளவு வேகமாக உறிஞ்சுகிறது (absorb) என்பதைப் பொறுத்தது.இங்கேதான் சுண்ணாம்பு ஒரு முக்கிய இரசாயனவியல்  வேலையைச் செய்கிறது.

    a. pH அளவை மாற்றுதல்: புகையிலை இலைகள் இயற்கையாகவே சற்று அமிலத்தன்மை (Acidic) கொண்டவை. ஆனால், சுண்ணாம்பு ஒரு தீவிர காரத்தன்மை (Alkaline) கொண்டது.

    b. இரசாயனவியல் மாற்றம்: புகையிலையும், பாக்கும், சுண்ணாம்புடன் கலந்து உமிழ்நீருடன் சேரும்போது, அந்த கலவையின் pH அளவு (காரத்தன்மை) மிக அதிகமாகிறது.

    c. “Free-Basing” நிக்கோட்டின்: இந்த உயர் pH சூழலில், புகையிலையில் உள்ள நிக்கோட்டின் அதன் வேதியியல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. அது “நிக்கோட்டின் உப்பு” (Nicotine Salt) வடிவத்திலிருந்து “சுதந்திர நிக்கோட்டின்” (Free-Base Nicotine) வடிவத்திற்கு மாறுகிறது.

    2. “சுதந்திர நிக்கோட்டின்” (Free-Base)

    நிக்கோட்டினின் இந்த “Free-Base” வடிவம் தான் அதன் போதைத்தன்மைக்கு முக்கிய காரணம்.

    a. எளிதில் உறிஞ்சுதல்: “நிக்கோட்டின் உப்பு” வடிவம் நமது வாயின் உட்புறச் சவ்வுகள் (Buccal Mucosa) வழியாக எளிதில் உறிஞ்சப்படாது. ஆனால், இந்த “சுதந்திர நிக்கோட்டின்” வடிவம் கொழுப்பில் கரையக்கூடியது (Lipid-Soluble).

    b. நேரடி ரத்த ஓட்டம்: நமது வாயின் உட்புறம், ரத்த நாளங்கள் (Blood Vessels) நிறைந்தது. மாவா பாக்கை மெல்லும்போது அல்லது வாயில் அடக்கி வைக்கும்போது, இந்த “சுதந்திர நிக்கோட்டின்” நேரடியாக வாயின் சவ்வுகள் வழியே ஊடுருவி, உடனடியாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

    c. மூளைக்குச் செல்லும் வேகம்: இவ்வாறு ரத்தத்தில் கலக்கும் நிக்கோட்டின், செகண்டுகளில் மூளையைச் சென்றடைகிறது. இது புகை பிடிப்பதைப் (Smoking) போலவே மிக வேகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.சுருக்கமாகச் சொன்னால்: சுண்ணாம்பு, புகையிலையில் உள்ள நிக்கோட்டினை “பூட்டி வைக்கப்பட்ட” நிலையிலிருந்து “திறந்துவிடுகிறது” (unlocks). இதனால் அது மிக வேகமாக ரத்தத்தில் கலந்து, மூளையைத் தாக்கி, கடுமையான போதை உணர்வை உடனடியாகத் தருகிறது.

    3. கூடுதல் காரணம்: பாக்கு (Areca Nut)மாவா பாக்கில் உள்ள மற்றொரு போதைப்பொருள் பாக்கு. பாக்கில் “அரெகோலின்” (Arecoline) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுவும் ஒரு இலகுவான போதையைத் தரக்கூடியது (Stimulant).நிக்கோட்டின் (புகையிலையிலிருந்து) மற்றும் அரெகோலின் (பாக்கிலிருந்து) ஆகிய இரண்டும் ஒன்று சேரும்போது, அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கும் ஒட்டுமொத்த போதை உணர்வு (Synergistic Effect) தனித்தனியாக எடுத்துக்கொள்வதை விட மிகவும் அதிகமாக இருக்கும்.

    5. மாவா பாக்கு பாவிக்கும் பொழுது குறித்த நபர் மாவா பாக்கு பாவனைக்கு அடிமை ஆகுவாரா?

    நிச்சயமாக அடிமை ஆகுவார். மாவா பாக்கில் “நிக்கோட்டின்” இருப்பதினால் அவர் அதற்கு அடிமையாகுவார்.

    நிக்கோட்டின் (புகையிலை), உலகில் மிகவும் அடிமையாக்கக்கூடிய போதைப்பொருட்களில் ஒன்றாகும்.பல அறிவியல் மற்றும் மருத்துவ தரவரிசைகளின்படி, ஒருவரை அடிமையாக்கும் திறனில் (Addictive Potential) நிக்கோட்டின், ஹெராயின் (Heroin) மற்றும் கோகோயின் (Cocaine) போன்ற போதைப்பொருட்களுக்கு இணையாகவோ அல்லது சில அளவீடுகளின்படி அவற்றை விட மோசமாகவோ மதிப்பிடப்படுகிறது. இது நிச்சயமாக மதுபானம் (Alcohol) மற்றும் ஐஸ் (Methamphetamine) ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க கொடிய போதைப் பொருளாகும்.

    6. மாவா பாக்கு எவ்வாறு மிகவும் அடிமையாக்குகிறது?

    ஒரு பொருளைப் பயன்படுத்தியவுடன், எவ்வளவு வேகமாக அது மூளையைச் சென்று இன்ப உணர்வைத் (Dopamine release) தூண்டுகிறதோ, அவ்வளவு வேகமாக ஒருவர் அதற்கு அடிமையாவார்.மாவா பாக்கில், சுண்ணாம்பின் உதவியால் நிக்கோட்டின் உடனடியாக ரத்தத்தில் கலப்பதால், பயனருக்கு உடனடி போதை கிடைக்கிறது. இந்த “உடனடி திருப்தி” (Instant Gratification) தான், ஒருவரை மிக எளிதாகவும், மிக ஆழமாகவும் இந்த பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.எனவே, மாவா பாக்கின் அதிக போதைத்தன்மைக்குக் காரணம் நிக்கோட்டினின் அளவு மட்டுமல்ல, சுண்ணாம்பின் மூலம் அந்த நிக்கோட்டின் ரத்தத்தில் கலக்கப்படும் வேகமே ஆகும்.

    7. மாவா பாக்கினை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வது குற்றமா?

    தற்பொழுது இலங்கையில், புகையிலை பொருட்கள் (tobacco products) விற்பனை, வாங்குதல் மற்றும் விளம்பரம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது எல்லை 21ஆக இருக்கின்றது. எனவே புகையிலையினை கொண்டிருக்கும் மாவா பாக்கினை 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வது சட்ட விரோதமானது.

    8. மாவா பாக்கிணை பாவிப்பதினால்  உடலில் ஏற்படும் தீங்கான விளைவுகள் என்ன?

    மக்களை மிக எளிதில் அடிமையாக்கக் கூடியது. இதை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் (Oral Cancer), பல் மற்றும் ஈறு நோய்கள், மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட மிகக் கொடிய நோய்கள் வர அபாயம் உள்ளது. இலகுவாக சொல்வதானால் சிகரெட் மற்றும் புகையிலை போன்றவற்றினை பாவிப்பதினால் ஏற்படும் தீங்கான விளைவுகள் அனைத்தும் ஏற்படும்.

    9. குட்கா மற்றும் மாவா இரண்டும் ஒன்றா?
    குட்கா (Gutkha) மற்றும் மாவா (Mawa) இரண்டும் ஒரே பொருள் அல்ல, ஆனால் இரண்டும் புகையிலை சார்ந்த பொருட்கள். இரண்டிலும் புகையிலை முக்கிய கூறு.​
    குட்கா என்பது சுண்ணாம்பு, புகையிலை, அரிசி பப்பாளி, மசாலாஞ்சிகள் போன்றவற்றின் கலவையாக இருக்கும் மெல்லக்கூடிய புகையிலை வகை.​
    மாவா என்பது சுண்ணாம்பு, சுடுகலை (Areca nut / betel nut) மற்றும் புகையிலை கலப்பு; இதில் சில நேரங்களில் சிறிய அளவு இனிப்பும் சேர்க்கப்படும்.​

    பைக்கற்றில் உள்ள குட்கா மற்றும் மாவா

    நன்றி

    போதைமாத்திரைகள்!

    அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் பலபகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக என்றும் இல்லாதவகையில் அதிகளவில் போதை மாத்திரைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வரும் நிலையில் போதைமாத்திரை என்றால் என்ன, ஏன் அவற்றை பாவிக்க வேண்டும் மற்றும் அவற்றினால் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி இப்பதிவு விளக்குகின்றது

    பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஒருதொகுதி போதை மாத்திரை

    1. போதை மாத்திரை என்றால் என்ன?

    Pregabalin, Gabapentin மற்றும் tramadol போன்ற மருத்துவ மாத்திரைகளே சமூக மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் போதை மாத்திரை என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. இவை வெவ்வேறு மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனிகளினால் தாயாரிக்கப்பட்டு வெவ்வேறு வியாபார பெயர்களில் நோயாளருக்காக  விற்பனை செய்யப்படுகின்றது

    2.  இந்த மாத்திரைகள் என்ன என்ன வைத்திய தேவைகளுக்காக பாவிக்கப்படுகின்றன?

    பொதுவாக இந்த மாத்திரைகள் வலிப்பு நோய்க்கு பாவிக்கப்படுகின்றது. மேலும் நரம்புகளில் ஏற்படும் பிரச்னையால் உண்டாகும் நோவுக்கு வலி நிவாரணியாகவும் பாவிக்கப்டுகின்றது. இவை தவிர மன பதகளிப்பு … போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு பாவிக்கப்படுகின்றது.

    3. Pregabalin அல்லது Gabapentin ஆகிய இரு மாத்திரைகளும் ஒன்றா?

    இல்லை இவ்விரு மாத்திரைகளும் ஒரே வர்க்கத்திற்கு உரியவை. இவற்றின் கட்டமைப்பு gamma-aminobutyric acid (GABA) என்ற நரம்பு கணத்தாக்கத்தினை கடத்தும் பதார்தத்தினை ஒத்திருக்கும். gamma-aminobutyric acid (GABA) ஆனது எமது மூளையில் கணத்தாக்கத்தினை கடத்தாது நோவினை குறைக்கும். இதன் காரணமாகவே மேற்குறித்த மாத்திரைகள் வலிநிவாரணியாக பயன்படுகின்றது.

    4.   Pregabalin அல்லது Gabapentin ஆகிய மாத்திரைகளில் போதைப்பொருள் இருக்கின்றதா?

    நிச்சயமாக இந்த மாத்திரைகள் நார்க்கோர்ட்டிக் (Narcortics) அல்லது ஒபிஒய்ட் (Opioid) வகையான மருந்து மாத்திரைகள் அல்ல. மேற்குறித்த மாத்திரைகளில் போதை பொருட்கள் ஏதும் அடங்கியிருக்காது.

    5. அவ்வாறு எனில் மேற்குறித்த மாத்திரைகள் ஏன் போதை மாத்திரைகள் அல்லது போதை வில்லைகள் என்று அழைக்கப்படுகின்றது?

    குறிப்பாக போதை மருந்து பாவிப்பவர்கள் மேற்குறித்த மாத்திரைகளை பாவிப்பதன் காரணமாகவே அவை தவறான காரண பெயராக போதை மாத்திரை என அழைக்கப்படுகின்றன.

    6. மேற்குறித்த மாத்திரைகளை பாவிக்கும் பொழுது போதை உண்டாகுமா?

    இந்த மாத்திரைகளை மருத்துவ ரீதியாக சிபாரிசு செய்யப்பட்ட அளவில் பாவிக்கும் பொழுது மருத்துவ ரீதியாக போதை உண்டாகாது. எனினும் சிபாரிசு செய்யப்படாத அதிக அளவில் (overdose) பாவிக்கும் பொழுது இம்மாத்திரைகளின் பக்கவிளைவுகளான சோர்வுத்தன்மை, தளர்வான நடை, மங்கலான பார்வை, அதிக நித்திரை, கனவுலகில் மிதத்தல், பார்வையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் .. போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் இப்பக்கவிளைவுகள்  போதைப்பொருள் அல்லது மதுபானம் பாவித்தால் வரும் விளைவுகளை ஓத்திருப்பதினால் சிலர் இந்தவகை மாத்திரையினால் போதை உண்டாகின்றது  என்ற நம்பிக்கையில் இதனை பாவிக்கின்றனர்.மேலும் இங்கு pregablin மற்றும் gabapentin என்பன பூஸ்டர் டோஸாக தொழிற்படும் தன்மை உடையவை

    7. பூஸ்டர் டோஸாக தொழில் படுதல் என்றால் என்ன?

    வேறு ஓர் போதைப்பொருளுடன்  அல்லது மதுபானத்துடன் சிலவகை பொருட்களை சேர்த்து பாவித்தால் அதிக போதை உண்டாகும் அத்துடன்  போதை அதிக நேரம் நிலைத்து நிற்கும். இதன் காரணமாகவே போதை மாத்திரைகள் அதிகளவில் பாவிக்கப்டுகின்றன.


    8. Pregablin மற்றும் gabapentin ஆகிய மருந்துகளை மருத்துவர்கள் சேமித்து வைப்பது அல்லது நோயாளிகளுக்கு பரிந்துரைப்பது குற்றமா?
    இல்லை. இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர் ஒருவர் அல்லது பல் மருத்துவர் ஒருவர் மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும். அவர்களுக்கு சட்ட ரிதீயான அங்கீகாரம் உண்டு. இவ்வாறே நார்கோடிக் மருந்துகளை (உண்மையான போதை மருந்துகளை) பதிவு செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் கொள்வனவு செய்யவும், நோயாளர்களுக்கு வழங்கும் முகமாக சேமித்து வைக்கவும் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கவும் முடியும்.

    9. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபர் அதற்கு அடிமையாகும் தன்மை உருவாகுமா?
    ஆம். அண்மைக்காலத்தில் வெளிவந்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின் மேற்குறித்த மருந்துகள் பல சந்தர்ப்பங்களில் தொடர்ச்சியாக பாவிக்கும் இடத்து பாவனையாளரை அடிமையாக்கும் தன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தற்பொழுது அல்லது முன்பு பல்வேறுபட்ட போதை பொருட்களை பாவிப்பவர்கள் இவற்றிற்கு அடிமையாகும் தன்மை அதிகம்.

    10. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை சாதாரண குடிமகன் ஒருவர் தனது உடைமையில் வைத்திருத்தல் குற்றமாகுமா?
    இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் Poisons, Opium and Dangerous Drugs (Amendment) Act No. 41 of 2022 (23/11/2022) இன் பிரகாரம் சாதாரண குடிமகன் வைத்தியரின் உரிய பரிந்துரை இன்றி மேற்குறித்த மருந்துகளை அதிகமாக வைத்திருத்தல் குற்றமாகும்.


    11. இப்பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?
    இலங்கையின் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் வைத்தியர்கள் களஞ்சியப்படுத்தக் கூடிய அல்லது விற்பனை செய்யக்கூடிய அல்லது பரிந்துரைக்க கூடிய அதிகூடிய அளவு பற்றி குறிப்பிடப்படவில்லை. எனினும் வைத்தியர்கள் மருத்துவ ஒழுக்கவியலுக்கு அமைய தமது நோயாளர்களின் தேவைப்பாட்டிற்கு அமைய மேற்குறித்த மருந்துகளை கொள்வனவு செய்து பரிந்துரைக்கலாம். மேலும் நார்க்கோர்ட்டிக் மருந்து விற்பனையின் பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கைக்கொள்ளலாம்.

    12. Pregablin மற்றும் Gabapentin ஆகிய மருந்துகளை ஒருவர் தொடர்ச்சியாக பாவிப்பதன் காரணமாக அந்த நபருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

    மயக்கம், தலைச்சுற்றல் மற்றும் அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு, கவனம் மற்றும் மன தெளிவு ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள், படபடப்பு, சோர்வு, நடுக்கம், தூக்கமின்மை, பதட்டம், எரிச்சல், செவிப்புலன் பிரமைகள், உணர்ச்சி உறுதியற்ற தன்மை மற்றும் மனநோய் போன்ற பல்வேறு உடல் மற்றும் உள  ஆரோக்கிய பிரச்சினைகளை தொடர்ச்சியான பாவனை ஏற்படுத்தும்.

    நன்றி

    யாழ் மாவட்டத்திற்கு காற்று மாசுபடுத்தலினால் ஆபத்தா??

    அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

    11-11-2025 அன்றைய நிலவரம்

    1.யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன?

     முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை  வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது.

    2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது?

    மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது

    3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன?

    பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும்

    4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்?

    வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை  பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும்

     5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்?

    வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும்.

    இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள்  இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும்

    PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில்  இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது.

    6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை?

    சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது

    7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்?

    ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்

    8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்?

    வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும்.

    9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்?

    IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம்

    இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில்  யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி

    வரமா? சாபமா?

    சம்பவம் 1:

    யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 7 திகதி ஒரே நேரத்தில்  மூன்று பிள்ளைகளை பெற்ற  நிலையில்  அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார், ஆனால் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.

    இச் சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த  யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து   20 ஆண்டுகளாக குழந்தை இன்றி  பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு  மூன்று பிள்ளைகளையும் பார்க்காமல்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சம்பவம் 2:

    24-05-2025 அன்று  யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

    சம்பவம் 3:

    கிளிநொச்சியினை சேர்ந்த 56 வயதுமிக்க கர்ப்பிணி  கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த கர்ப்பிணி செயற்கை முறையில் கருத்தரித்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனுக்கு தெரியாமலேயே குறித்த பெண்மணி கருத்தரித்ததாக கூறப்படுகின்றது   

    இவை இந்த வருடத்தில் முகநூலிலும் பத்திரிகைகளிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில்  வந்த செய்திகள். ஏன் இவ்வாறு கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

     இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் திருமணம் செய்யும் சோடிகளில் அண்ணளவாக நான்கில் ஒரு சோடிக்கு (23%) குழந்தைப்பேறு இன்மை ஓர் பிரச்சனையாக இருக்கின்றது. இதற்கு தீர்வாக பல்வேறு சிகிச்சை முறைகள் பெண்ணோயியல் மருத்துவத்தில் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது IVF (In vitro fertilization) என்றழைக்கப்படும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் ஆகும். இந்த IVF சிகிச்சை முறையானது பல்லாயிரக்கணக்கான குழந்தை பேறு அற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தினை வீசியுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனினும் இந்த IVF சிகிச்சையின் பொழுது பல்வேறுபட்ட மருத்துவ ஒழுக்கவியல் (medical ethics) சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இவ்வாறான கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறான ஒரு சில பிரச்சனைகளை  இப்பதிவு விளக்குகின்றது

    1. செலுத்தப்படும் முளையங்களின் எண்ணிக்கை (number of embryos)

    IVF சிகிச்சையின் பொழுது வெளிச்சூழலில் கருக்கட்டபட்ட முளையம் தாயின் கருப்பையினுள் உட்செலுத்தப்படும். தாயின் வயது, முளையங்களின் தரம், தோல்வியடைந்த IVF சிகிச்சைககிளின் எண்ணிக்கை போன்றவற்றினை கருத்தில் கொண்டு முளையங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பொதுவாக தாயினது, பிறக்க போகும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல குழந்தைகள் பிறக்கும் பொழுது ஏற்படும் தீய விளைவுகளை கருத்தில் கொண்டும்  ஓர் முளையத்தினை கருப்பையினுள் உட்பதிக்கவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரிதான சில சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். உதாரணமாக தாயின் வயது அதிகம், குறைந்த தரத்திலான முளையம், பலமுறை தோல்வி அடைந்த சிகிச்சை முறைகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். எவ்வாறாயினும் 03 முளையங்களுக்கு மேல் உட்பதிக்க சிபாரிசு இல்லை.

    ஆனால் இன்றைய வியாபார உலகில் மேற்குறித்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படாதன் காரணமாகவே இவ்வாறான மேற்குறித்த கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறு முளையங்கள் உட்செலுத்தப்பட்டு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது தாயாருக்கு ஏற்படும் ஒரு சில  முக்கிய சிக்கல்கள்

    1. உயர் குருதி அழுத்தம் அதன் காரணமான வலிப்பு நோய் மற்றும் ஈரல் செயலிழப்பு 

    2. கர்ப்பகால சலரோகம்

    3. அதிக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள்

    4. குருதி சோகை

    5. பிள்ளை பேறிற்கு பின்னரான குருதி போக்கு

    ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில  முக்கிய சிக்கல்கள்

    1. குறை மாதத்தில் பிறத்தல்

    2. நிறை குறைவாக பிறத்தல்

    3. பிறந்தவுடன் முதிரா குழந்தைகள் பிரிவில் அனுமதியும் அதன் நீண்ட கால தீங்கான சுகாதார விளைவுகள்

    4. இருதய, சுவாச தொகுதிகளில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகள்

    5. தாயாரின் அன்பினை மற்றும் அரவணைப்பினை உரிய அளவில் பெற முடியாத நிலைமை

    6. தாய்ப்பாலினை உரிய அளவில் அல்லது முற்றாக பெறமுடியாத நிலைமை        

    இவ்வாறான IVF சிகிச்சைகள் தனியார் மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டு பிரசவத்திற்க்கு அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகின்றனர்.  இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதிரா நிலையில் குறை மாதத்தில் பிறக்கும் பொழுது முதிராக குழந்தைகள் நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்படும் இதன்காரணமாக மற்றைய தாயாரின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். முதிரா குழந்தைகள் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கை காணப்படும்  

    2. வயது கட்டுப்பாடு மற்றும் சம்மதம்

    50 வயதினை கடந்த பெண்களுக்கு இவ்வாறான IVF சிகிச்சை முறைகளை வழங்க கூடாது என வைத்தியர்களுக்கான வழிகாட்டி வலியுறுத்துகின்றது. தாயினதும் கருவில் உருவாகும் குழந்தையினதும் நலத்தினை கொண்டே இந்த வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படும் பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரினதும்  எழுத்துமூலமான சம்மதம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இவ்வாறு அதிகரித்த வயதில் ஓர் பெண் கருத்தரிக்கும் பொழுது குறித்த பெண் மனோரீதியாக மற்றும் மருத்துவ ரீதியாக கர்ப்பத்தினை தாங்கி பிள்ளையினை பெற்று வளர்த்து எடுக்க தகுதி வாய்ந்தவளா என்று தீர ஆராய வேண்டும்.

    இலங்கையில் IVF (MEDICALLY ASSISTED REPRODUCTIVE TECHNIQUES) பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் ஏதும் இல்லை வெறுமனே வழிகாட்டுதல் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் இவ்வாறு மருத்துவ வழிகாட்டுதல்களை மீறி ஒன்றிற்கு மேற்பட்ட முளையங்களை தமது வியாபார நோக்கம் கருதி உட் செலுத்தி கர்ப்பிணி தாய்மாரின் உயிரினை ஆபத்திற்கு உள்ளாக்கும் மற்றும் பிறக்கும் குழந்தைகளின்  நலனில் அக்கறையில்லாத வைத்தியர்களை புறக்கணிப்பதே தீர்வாகும்.

    குறிப்பு : இங்கு தலையங்கத்தில் வரமா? சாபமா? என குறிப்பிட்டது IVF சிகிச்சை முறையினையே ஆகும். மக்கட் செல்வம் என்றும் வரமே. 

    “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

    மழலைச்சொல் கேளா தவர்”……… திருக்குறள்

    நன்றி

    சுற்றுலாவும் உயிரிழப்புக்களும்

    10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு 05/11/2025 அன்று சுற்றுலா சென்றுள்ளனர்.  அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். இவ்வாறு  நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த ஐவரின் சடலங்களும்  மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறு முன்பும் சுற்றுலா சென்றவர்கள் பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபொழுது கூட கடலில் மூழ்கி சிலர் இறந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் சுற்றுலாவின் பொழுது இவ்வாறான சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன மற்றும் இவ்வாறான சம்பவங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

    சுற்றுலாவின் பொழுது அல்லது களிப்பாட்டங்களின் பொழுது  நீரில் மூழ்கி இறப்பதற்கான காரணங்கள்

    1. குறிப்பாக பொழுதுபோக்கு பயணங்களின் போது, ​​பாதுகாப்பற்ற அல்லது அறிமுகமில்லாத பகுதிகளில் குளித்தல். இலங்கை ஓர் தீவு எனினும் நாட்டின் எல்லா கடற்கரையிலும் நீராட முடியாது. சில கடற்கரைகள் மட்டுமே அதிக அலைகள் அற்றும், கடலடியில் பாறைகள் அற்றும் நீராட தகுந்தனவாக உள்ளன.

    2. நீர் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலுவான நீரோட்டங்கள் அல்லது நீருக்கடியில் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு அல்லது அறிவு இல்லாமை. முக்கியமாக கடற்கரைகளை போன்றே ஆற்றின் எல்லா இடங்களிலும் நீராட முடியாது. ஆழம் குறைந்த, சீரான நீரோட்டம் உள்ள ஆற்றங்கரைகள் போன்றவற்றில் மட்டுமே நீராட முடியும். குறித்த சம்பவத்தில் இறந்தவர்கள் நீராடிய பொழுது ஆற்றில் உள்ள ஓர் பள்ளத்தில் வீழ்ந்ததாக உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் வாசிகளுக்கே இவ்வாறான நீர்நிலைகளில் உள்ள ஆபத்துக்கள் தெரியும். வெளியூர் வாசிகளான சுற்றுலாவில் வந்து நீராடுபவர்களுக்கு இந்த ஆபத்துக்கள் தெரியாது 

    3. ஆபத்தான நீர்நிலைகளைத் தவிர்க்க அல்லது உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வழக்கமாக அறிவுறுத்தும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை புறக்கணித்தல். பலசந்தர்ப்பங்களில் இவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் சகோதர மொழியில் இருப்பதனால் சரிவர விளங்கிக்கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது மேலும் இவ்வாறான அறிவுறுத்தல் பலகைகள் பலசந்தர்ப்பங்களில் பல்வேறு தனி நபர்களினால் அகற்றப்பட்டுள்ளன.

    4. நீரில் இவ்வாறான ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மூழ்கும் பொழுது  சிலர் போதிய நீச்சல் தெரியாது இருப்பார்கள். மேலும் நீச்சல் தெரிந்தவர்கள் கூட இவ்வாறு நீச்சல் தெரியாதவர்களை காப்பாற்றும் முயற்சியில், பதட்டமான சூழ்நிலையில், பயப்பீதியுடன் வினைத்திறனான முறையில் செயற்பட முடியாது.

    5. பொதுவாக இவ்வாறான சுற்றுலாக்களின் பொழுது இவ்வாறு நீராடலின் பொழுது மது போதையில் அல்லது போதை மருந்துக்களின் பாவனையில் இருப்பதினால் அவர்களினால் வினைத்திறனான முறையில் செயற்பட்டு தப்பிக்க முடியாது.  

    6. மேலும் ஆறுகளில் நீராடும் பொழுது நீருந்து பிரதேசங்களில் பெய்யும் மழை காரணமாக அல்லது வடிந்து செல்லும் மழை வெள்ளம் காரணமாக சடுதியாக நீர் மட்டம் அதிகரித்து இவ்வாறு நீராடுபவர்களை பலிகொண்டுள்ள சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு கடலிலும் நீர் மட்டம் மற்றும் அலைகள் நேரத்திற்கு ஏற்ப கூடி ஆபத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன.  

    இலங்கையில் இவ்வாண்டில் 230 பேர் இவ்வாறு நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்று பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கும் நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

    எவ்வாறு இவ்வாறான விபத்துக்களை தடுக்கலாம்

    1. நீந்த தெரியாதவர்கள் மற்றும் குறிப்பாக சிறுவர்களை கண்காணிப்பில் நீராடலின் பொழுது வைத்திருக்க வேண்டும்
    2. குறிப்பாக சுற்றுலா குழுவில் உள்ள ஒருவரினை இந்த கண்காணிப்பு பொறுப்புக்கு வலியுறுத்தலாம்.
    3. குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராட வேண்டும் அதுவும் குறித்த நேரத்தினுள் நீராடவேண்டும் ஏன்னெனில் பல இவ்வாறான இடங்களில் மீட்பு பணிக்கு என விசேட பயிற்சி பெற்ற கடற்படையினர் கடமையில் இருப்பர். அவர்கள் கடமையில் இல்லாத பொழுது நீராடுவது உசிதமல்ல.
    4. நீராடலின் பொழுது உயிர் காப்பு கவசங்களை அணிவது சிறந்தது மேலும் சில இடங்களில் இவற்றினை வாடகை அடிப்படையில் பெறலாம்.
    5. குழுவாக நீந்தும் பொழுது தனியே ஒருவர் மட்டும் வேறு இடத்தில் இருந்து நீந்துவது உசிதமல்ல
    6. மது அல்லது போதை பாவனையின் பின்னர் நீந்துவது ஆபத்தினை விளைவிக்கும்
    7. உள்ளூர் வழிகாட்டல்களை பின்பற்றுவது சிறந்து
    8. துர்அதிஷ்டவசமாக குழுவில் உள்ள ஒருவர் நீரில் மூழ்க தொடங்கினால் நீச்சலில் அனுபவம் மிக்க ஒருவரே அல்லது பயிற்சிபெற்ற கடற்படையினரே அவரினை மீட்க்கும் பணியில் ஈடுபடவேண்டும்

    மனிதர்களாகிய நாம் மிக சந்தோஷமான சூழ்நிலைகளில் மிக அவதானமாக இருப்பதன் மூலம் அனாவசியமான உயிரிழப்புக்களை தடுக்கலாம். மேலும் முக்கியமாக அறிமுகம் இல்லாத நீர்நிலைகளில் நீராடும் பொழுது நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். சுற்றுலா போன்றன செல்லும் பொழுது அனுபவம் மிக்கவர்களின் அல்லது அப்பிரதேச வாசிகளின் அறிவுரைகளை கட்டாயம் செவிமடுப்பதன் மூலம் அனாவசியமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

    நன்றி