அது தலைநகரின் மிக பிரபலமான ஆடை விற்பனை நிலையம் முதல் மூன்று மாடிகளும் விற்பனைநிலையங்களாக செயற்பட்ட நிலையில், நான்காவது மாடி அதன் ஊழியர்கள் தங்குவதற்கு பயன்பட்டது. அதில் தான் 42 வயதான அவன் கடந்த 6 வருடங்களாக வசித்து வந்தான். பகல் முழுவதும் வேலை. இரவில் சமையல் படுக்கை. கிழமையில் இரண்டு அல்லது மூன்று தரமாவது அவனும் அவனது நண்பர்களும் பியர் அருந்துவார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மலையகத்தில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்துவர செல்வான். கடந்த மூன்று மாதங்களாகவே அவனுக்கு ஒரே நெஞ்சு எரிவு மற்றும் களைப்பு. முக்கியமாக புடவைகளை எடுத்துக்கொண்டு மாடி படி ஏறிஇறங்கும் பொழுது மூச்சு வாங்குவான். இவனது இந்நிலையினை கண்ட முதலாளி கீழ் தளத்திலேயே வேலை செய்ய சொன்னார் . அக்கடையில் வேலை பார்க்கும் இன்னோரு வயதுவந்தவர் அவனுக்கு அல்சர் (காஸ்ட்ரிக்) இருப்பதாக கூறி இனோ மற்றும் கவிஸ்கொன் போன்றவற்றினை பாவிக்குமாறு அனுபவமிக்க வைத்தியர் போன்று பரிந்துரைத்தார். அவரது சொல்லினை தெய்வ வாக்காக நம்பிய அவனும் அவற்றினை பாவிக்க தொடங்கினான். அன்று தான் அவனது வாழ்வின் கடைசி நாள், அதிகாலை நான்கு மணிக்கே கடுமையான நெஞ்செரிவு கஷ்ட்டப்பட்டு பாயில் இருந்து எழும்பி இரண்டு இனோ பக்கற்றுகளினை கரைத்து குடித்து விட்டு, தான் வேலைக்கு தாமதமாக வருவேன் என்று கூறிவிட்டு படுத்தவன் தான் எழும்பவே இல்லை. இறுதியில் அவனது உடலிற்கு உடற்கூராய்வு பரிசோதனை மேற்கொண்டபொழுது அவனது இருதயத்திற்கு குருதி வழங்கும் மூன்று நாடிகளும் 75 வீதத்திற்கு மேற்பட்ட வகையில் கொலஸ்ரோல் இனால் அடைபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய காலகட்டதில் தமிழ் பேசும் மக்கள் வாழும் வீடுகளில் பெரும்பாலும் இந்திய தொலைக்காட்சி சேனல்களின் ஆட்சிதான். அவற்றில் பெரும்பாலும் கவிஸ்கொன் மற்றும் இனோ போன்ற இரைப்பை அல்சர் நோயிற்கான மருந்து விளம்பரங்கள் அடிக்கடி வந்துபோகும். மருத்துவ அறிவு அற்ற மக்கள் அவ்விளம்பரங்களை நம்பி வயதுவேறுபாடு இன்றி தமக்கு நெஞ்சு நோ அல்லது நெஞ்சு எரிவு போன்றன வரும் பொழுது இவற்றினை நம்பி வாங்கி பாவிக்கின்றனர். முக்கியமாக இவ்வகையான மருந்துகள் உரிய வைத்தியரின் சிபாரிசு எதுவும் இன்றி சாதாரண பார்மசிகளில் இருந்து சூப்பர் மார்க்கெட் வரை கிடைக்கும். உண்மையில் இவற்றிற்கு வைத்தியரின் சிபாரிசு எதுவும் இல்லை என்பது வேறுவிடயம் (Over-the-counter (OTC) drugs are medicines sold directly to a consumer without a prescription from a healthcare professional). நெஞ்சு நோ மற்றும் நெஞ்சு எரிவு என்பன கட்டாயம் அல்சர் நோயின் அறிகுறியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. இக்குணம்குறிகள் மிகவும் பாரதூரமான மாரடைப்பின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். மாரடைப்பு நோயாளிகளின் குறிப்பிட்ட வீதத்தினர் இவ்வாறு அல்சர் போன்றன நோயிற்கான குணம்குறிகளுடன் தோற்றம் அளிப்பர் (Atypical presentation of myocardial infraction). சாதாரணமாக 35 அல்லது 40 வயதிற்கு மேற்பட்ட நபர் ஒருவருக்கு நெஞ்சு நோ அல்லது அது போன்ற குணங்குறிகள் தென்பட்டால் கட்டாயம் ஈசிஜி (ECG) பரிசோதனை செய்து அவருக்கு நெஞ்சு நோவிற்கான காரணம் மாரடைப்பு இல்லை என்பதினை உறுதிப்படுத்திய பின்னரே இனோ மற்றும் அல்சர் நோயிற்கான மற்றைய மருந்துகள் பாவிக்க வேண்டும். மறுதலையாக 40 அல்லது 35 வயதிற்கு உட்பட்டவர் கூட மாரடைப்பினால் இறந்த சம்பவங்கள் உண்டு. எனவே எவ்வயதினராயினும் தகுந்த வைத்தியரின் ஆலோசனையின் பின்னரே மேற்கூறிய மருந்துகளை பாவிப்பது சாலச்சிறந்தது.

Doctor நல்லபல பதிவுகள்.
எதிர் வரும் காலங்களில் இவற்றையேல்லாம் தொகுத்து சமூகத்துக்கு பயன்படும் வகையில் நூலாக்கினால் என்ன!
LikeLiked by 1 person