போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

அன்று காலை எனது அலுவலக அறையினுள் வெலிக்கடை சிறை காவலர்கள் இருவர் 50 வயது மதிக்கதக்க ஒருவரை கைத்தாங்கலாக தூக்கி வந்து எனக்கு முன்னாள் நிறுத்தினார்கள். என்ன பிரச்சனை என்று விசாரித்த பொழுது அவர்கள் சொன்னார்கள் “இவன் மரணதண்டனை கைதி, இவனுக்கு மெடிக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது”. நான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு அவனிடம் கேட்டேன் யார் அடித்தார்கள்? என்று அவன் சொன்னான் ஒருவரும் அடிக்கவில்லை. நான்  பயப்படவேண்டாம் என்று சொல்லி மீண்டும் கேட்டேன், யார் அடித்தார்கள்? என்று, அவன் சொன்னான் சேர் ஒருத்தரும் அடிக்கவில்லை. என்னால் நடக்க முடியாது. தயவு செய்து கிட்ட வந்து ஒருக்கா பாருங்கள் என்றான். அவனும் நின்றபடியே தனது சாரத்தினை மெதுவாக அவிழ்த்து காட்டினான். ஒருகணம் நான் திகைத்து விட்டேன். அவனுக்கு இரண்டு பக்கமும் ஹேர்னியா வந்து அவனது விதைப்பை தேங்காய் அளவு வீங்கி இருந்தது. அவன் தொடர்ந்து நடந்ததால் அது தேய்ப்பட்டு புண்ணாகி சீழ் பிடித்து மணத்தது. நான் கேட்டேன் உந்த ஹேர்னியா எவ்வளவு காலமாக இருக்கின்றது என்று? அவன் கூறினான் 6 வருடமாக. மேலும் அவரிடம் தொடந்து வினவிய பொழுது அவர் கூறினார் தான் முன்பு மெனிங்க் மீன் மார்க்கெட்டில் நாளாந்த கூலிக்கு மீன் வெட்டியதாகவும் வழமையாக வேலை முடிந்து வரும் பொழுது அவ் மார்க்கெட்டில் முதலாளியாக இருக்கும் ஒருவரின் முச்சக்கரவண்டியில் வந்து தனது வீட்டிக்கு அருகாமையில் இறங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் தான் சிகரெட் பாவிப்பதினை தவிர வேறு வகையான போதைப்பொருள் மற்றும் மதுபானம் ஒன்றுமே பாவிப்பதில்லை என்றார். அவ்வாறே ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்பு மாலை முச்சக்கரவண்டியில் வரும்பொழுது போலீசார் தமது வாகனத்தினை நிறுத்தி சோதனையிட்ட பொழுது போதைப்பொருள் இருந்ததாக தன்னையும் அம்முதலாளியினையும் கைதுசெய்ததாகவும் கூறினார். தொடந்து அவர் கூறுகையில் கைதினை தொடர்ந்து அம்முதலாளியினால் பலலட்சங்கள் போலீசாருக்கு கொடுக்க பட்டத்தினை தொடர்ந்து அப்போதைபொருளினை கொண்டுவந்ததாக தன்மேல் குற்றம் சுமத்தப்பட்டு, முதலாளியினாலும் போலீசாராலும்  தனக்கு எதிராக சாட்சி வழங்க பட்டதினை தொடர்ந்து தான் சிறையில் உள்ளதாக தெரிவித்தார்.இவ்வாறு கைதுசெய்யபடும் பெரும்பாலான குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் யாவரும் தம்மிடம் பிழை எதுவும் இல்லை என்றே கடைசிவரை சொல்வார்கள் என்பது வேறுவிடயம்.

அண்மையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதை பொருள் ஓழிப்பு வாரத்தினை அறிவித்து இலங்கை ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் பொழுது போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியோருக்கு  மரணதண்டனை வழங்கும் தனது முடிவில் மாற்றம் இல்லை தெரிவித்தார். எமது நாட்டில் போலீசாரின் நடுநிலைமையான செயற்பாடு யாவரும் அறிந்ததே. இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும்.    மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள்.

மேலும் மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பொலிஸாரினால் மனித உரிமை மீறல்கள் நிகழ சாத்திய கூறுகள் உண்டு. இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம்  ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர்.

One thought on “போதை மருந்து கடத்தலுக்கு மரணதண்டனையா?

Leave a reply to நிஜத்திலிருந்து..... Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.