அது ஒரு விபத்து சம்பந்தமான உடற் கூராய்வு பரிசோதனை. போலீசார் கூறினர் சேர், இது அவனுடைய நான்காவது முச்சக்கர வண்டி, இறந்த நபர் 33 வருடங்களாக முச்சக்கர வண்டி ஒட்டி தான் பிழைத்தார் . நேற்றைய தினம் அவரது முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதிய நிலையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் கூறினர் சேர், இது மிக்க சந்தேகத்திற்குரியது ஏனென்றால் கழுத்தில் வெட்டு காயம் போன்று ஒரு காயம் காணப்படுகின்றது, நீங்கள் ஒருமுறை வடிவாக பாருங்கள் என்றார். மேலும் அவர் கூறினார் இறந்தவர் வாகனம் ஓட்டும் இருக்கையில் இருந்தவாறே இருந்தார்.
இவ்வாறான சம்பவங்களில் சட்ட வைத்திய அதிகாரி மிகத் திறமையாக செயற்பட வேண்டும் இல்லாவிடில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்கவேண்டிவரும். மிக கவனமாக காயங்களை ஆராய்ந்த பொழுது அவை உண்மையிலே கண்ணாடியினால் வெட்டுப்பட்டதனால் உண்டாகியது என்று தெரியவந்தது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக விபத்து நடந்த இடத்திற்கு குறித்த பொலிஸாரின் உதவியுடன் சென்ற பொழுது பல கண்ணாடி துண்டுகள் உடைந்த நிலையில் வீழ்ந்து காணப்பட்டன அவற்றில் இரத்த கறையும் கூடவே காணப்பட்டது.
வாகனத்தில் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறு வகையான கண்ணாடிகள் பொருத்தபட்டிருக்கும்.

இவ்வாறு சாதாரணமாக இரு வகையான கண்ணாடிகள் வாகனத்தில் பயன்படுத்தப்படுகின்றன
- LAMINATED WINDSCREEN GLASS
இங்கு முக்கியமாக இரு கண்ணாடி துண்டுகளுக்கு இடையில் ஒரு வகையான ஒளியினை ஊடுகடத்த கூடிய பிளாஸ்டிக் polyvinyl butyral (PVB) இடப்பட்டிருக்கும். இது மிக உயர்ந்த வெப்பநிலையிலும் அமுக்கத்திலும் தயாரிக்க படுவதால் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் பொழுது மிகச் சிறிய துண்டுகளாக உடைந்து விழும். இதனால் வாகனத்தினுள் இருப்பவருக்கு கண்ணாடி உடைவதால் ஏற்படும் காயங்கள் குறைவாக இருக்கும். இவ்வகையான கண்ணாடியே மிக பாதுகாப்பானது ஆகும்.

- TEMPERED GLASS
இவ்வகையான கண்ணாடிகள் சாதாரணமாக நாம் பாவிக்கும் கண்ணாடியை விட பலமானதும் உறுதி யானது ஆகும். இவையும் உடையும் பொழுது பெரிய கூர்மை அற்ற துண்டுகளாக உடையும் இதனால் வாகனத்தினுள் இருப்பவருக்கு கண்ணாடி உடைவதால் ஏற்படும் காயங்கள் ஓரளவு குறைவாக இருக்கும் .

ஆனால் இலங்கை போன்ற நாட்டில் அறியாமை, கஞ்சத்தனம் போன்ற காரணங்களினால் முச்சக்கர வண்டி போன்றவற்றிக்கு நாம் சாதாரண தேவைகளுக்கு பாவிக்கும் தடிப்பு குறைந்த கண்ணாடிகளையே பாவிக்கின்றனர். இவ்வாறன சந்தர்ப்பங்களில் வாகனம் விபத்துக்கு உள்ளாகும் பொழுது அதன் முகப்பு அல்லது பக்க கண்ணாடி உடைந்து உள்ளிருப்பவருக்கு பலத்த காயங்களை உண்டாக்கும். முக்கியமாக சாரதி ஆசனத்தில் இருப்பவருக்கு உயிர் ஆபத்தும் ஏற்படலாம்.

இங்கும் சாரதிக்கு அவரது முச்சக்கர வண்டியினுள் இருந்த முகப்பு கண்ணாடி உடைந்து கழுத்து பகுதியினை தாக்கிய பொழுது அவரது கழுத்து பகுதியில் தோலின் கீழாக காணப்படும் External Jugular Vein என்ற நாளம் வெட்டு பட்டதாலேயே இரத்த போக்கு நிகழ்ந்து இறக்க நேரிட்டது. இங்கு இறந்தவருக்கு கழுத்து பகுதியினை தவிர வேறு பகுதிகளில் பாரிய காயங்கள் இல்லை என்பது குறிப்பிட தக்கது. மேலும் இவ்வகையான கண்ணாடிகள் உடையும் பொழுது கண் போன்றவற்றிக்கும் பாரிய காயங்கள் ஏற்பட சந்தர்ப்பம் உண்டு.
