ஓர் பெண்ணானவள் மருத்துவ ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எப்பொழுது கன்னித்தன்மையை இழக்கின்றாள் என்பது பற்றிய பதிவு
முதலில் மருத்துவ ரீதியாக நோக்குவோம், பெண்ணின் யோனி என்பது சதைப் பற்றுள்ள, மீட்சித்தன்மையுடைய பெண் பிறப்புறுப்புப் பாதையாகும். இது கழுத்துப் போன்ற கருப்பையின் கீழ்ப்பகுதிக்கும் புறத்தேயுள்ள பெண்குறிக்கும் இடைப்பட்ட பாதையாகும். பொதுவாக வெளிப்புற யோனியானது கன்னிச்சவ்வு (HYMEN) எனப்படும் யோனிச்சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும். இதன் ஆழமான முடிவில் கருப்பையின் கழுத்துப்பகுதியான கருப்பை வாய் சற்றே புடைத்தபடி யோனிக்குள் காணப்படும்.
பெண்ணில் கன்னி சவ்வானது பல்வேறு பட்ட வடிவங்களில் (Various morphological shapes) காணப்படலாம். சாதாரணமாக முதன் முறை உடல் உறவு கொள்ளும் பொழுது மருத்துவ ரீதியாக இங்கு கன்னிச்சவ்வில் காயங்கள் ஏற்படலாம். அதன்காரணமாக பெண்ணிற்கு சிறிதளவு இரத்த போக்கு ஏற்படும். இதனை வைத்து கொண்டே எமது மூதாதையர் ஓர் பெண் கன்னி கழிந்தவளா? அல்லது கழியாதவளா? என்று கூறிவந்தனர்.

ஆனால் கன்னி சவ்வின் வேறுபட்ட வடிவங்கள் (especially in case of fimbriated hymen) காரணமாக முதன் முறை உடலுறவின் பொழுது கன்னிச்சவ்வு கட்டாயம் சேதமடைந்து இரத்தம் வரவேண்டிய தேவை இல்லை. மேலும் இவ்வாறு ஓர் பெண்ணின் கன்னித்தன்மையினை அளவீடு செய்வது ஓர் விஞ்ஞான ரீதியான ஏற்றுக்கொள்ளத்தக்க முறை அல்ல.
சட்ட ரீதியாக பின்வரும் சந்தர்ப்பங்களில் ஓர் பெண்ணானவள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபடலாம், ஏதாவது ஆள் ஒரு பெண்ணின் சம்மதமின்றி அல்லது வலுக்கட்டாயம்,பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக அல்லது அவளுக்கு கொலை அல்லது காயம் விளைவிப்பதற்கான அச்சத்தை ஏற்படுத்தி அல்லது அவளை சித்தசுவாதீனமற்ற நிலையிலுள்ளபோது அல்லது குடிபோதையில் உள்ளபோது அல்லது சட்டமுறையற்ற தடுத்துவைப்பிலுள்ள போது சம்மதம் பெற்று பாலியல் உறவு கொண்டால் அவர் பாலியல் வன்புணர்வு குற்றம் புரிந்தவராவார்.
சட்ட ரீதியாக பார்க்கும் பொழுது பாலியல் வன்புணர்வின்பொழுது கட்டாயம் கன்னிச்சவ்வு சேதமடைய வேண்டிய தேவை இல்லை. தற்போதைய இலங்கை சட்ட திட்டங்களின் பிரகாரம் ஆணின் இலிங்க உறுப்பானது பெண் யோனி வாசலில் வைக்க பட்டாலே (merely penetration) அது பாலியல் வன்புணர்வுக்கு சமனானது. ஆண் கட்டாயம் இலிங்க உறுப்பினை உட்செலுத்த வேண்டிய தேவை இல்லை.
சட்ட ரீதியாக பார்க்கும் பொழுதுஇவ்வாறே பாதிக்க பட்ட பெண்ணுக்கு கட்டாயம் வேறு உடற்காயங்கள் ஏற்படவேண்டிய தேவையும் இல்லை.
யார் தான் நிபுணர்?
பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஓர் பெண் உள்ளாகும் பொழுது அவள் வைத்தியசாலையில் அனுமதிக்க படுவாள். இதன் பொழுது பொதுமக்கள் யார் வைத்தியர் அவரினை பரிசோதிப்பார்கள் என்று தெரிந்து இருக்க வேண்டும். இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவரே இந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவர். அவரின் அறிக்கையினையே நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். அனுபவம் அற்ற வைத்தியர்கள் , மகப்பேற்று நிபுணர்கள் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர்கள் இவ்வாறனவர்களை பரிசோதித்து பிழையான அபிப்பிராயங்களினை தெரிவித்த பல சந்தர்ப்பங்கள் உண்டு.

அவசியமானால் சேதமடைந்த கன்னிசவ்வினை உரிய வைத்தியர்கள் மூலம் திருத்திக்கொள்ளவும் இலங்கையில் வசதிகள் உண்டு.
