அவருக்கு 70 வயது. அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாதசாரி கடவையில் வீதியை கடந்து சென்ற பொழுது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவ்வயோதிபரினை மோதித்தள்ளியது. படுகாயமடைந்த அவர் வைத்திய சாலையில் சுயநினைவு அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் இரத்த கசிவு உள்ளதாக கூறி அவரின் தலைப்பகுதியில் இரு முறை சத்திர சிகிச்சை செய்தார்கள். ஆனால் அவருக்கு நினைவு மட்டும் திரும்பவில்லை. இவ்வாறு அவர் வைத்தியசாலையில் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்ற பொழுது அவருக்கு சுவாச குழாய்களில் சளி அதிகம் அடைப்பதாக கூறி வைத்தியர்கள் கழுத்து பகுதியில் ஒரு சத்திர சிகிச்சை மூலம் குழாய் ஒன்றினை பொருத்தினார்கள். மேலும் அவர்கள் அவருக்கு உணவு கொடுப்பதற்கு வசதியாக வயிற்று பகுதியிலும் குழாய் ஒன்றினை பொருத்தினார்கள்.
இவ்வளவு செய்தும் அவரின் உடல் நிலை முன்னேறவில்லை. உறவினர்கள் அவரினை தாம் வீட்டில் வைத்து பராமரிப்பது என்று முடிவெடுத்து வைத்தியர்களின் ஆலோசனைக்கு எதிராக வீடு கூட்டி வந்து அவருக்கு தேவையானவற்றினை செய்தார்கள். இவ்வாறு இருவாரங்கள் கழிந்த நிலையில் அவர் ஒருநாள் இரவு தீடீர் என மூச்சு விட கடினப்பட்டு இறந்து விட்டார்.
அவரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த விபத்தினை மறந்து அவர் வயோதிபம் காரணமாக இறந்ததாக கூறி கிராம சேவையாளரிடம் இருந்து கடிதம் ஒன்றினை பெற்று உரிய மரண சடங்குகளை செய்தார்கள். அப்பொழுது அப்பிரதேச போலீசார் அங்கு வந்து அவரது உடலினை பலாத்காரமாக கைப்பேற்றி அருகில் உள்ள வைத்தியசாலையில் உடற் கூராய்வு பரிசோதனைக்காக ஒப்படைத்தார்கள்.

அருகில் உள்ள வைத்திய சாலையில் நிகழ்ந்த உடற் கூராய்வு பரிசோதனையின் பின்னர் அவருக்கு நீண்ட காலமாக சுயநினைவு அற்ற நிலையில் படுத்த படுக்கையாக இருந்ததன் விளைவாக இரு நுரையீரல் களிலும் நிமோனியா கிருமித்தாக்கம் வந்ததன் காரணமாக அவர் இறந்ததாக அறியப் பட்டது.
மனிதர்களுக்கு பல்வேறுபட்ட காரணிகளால் காயங்கள் ஏற்படலாம். சிலசந்தர்ப்பங்களில் மரணம் உடனடியாக ஏற்படும். பலசந்தர்ப்பங்களில் பலர் காயப்பட்டு ஒருசில மாதங்கள் அல்லது ஒருசில வருடங்களின் பின்னரே இறக்கின்றனர். அப்பொழுது தான் பிரச்சனை எழும்புகிறது. நீண்ட காலம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருந்ததன் காரணமாக பெரும்பாலும் உறவினர் இந்நிலைமை ஏற்பட்டமைக்கான அடிப்படை காரணத்தினை மறந்து விடுவார்கள் அல்லது மிக விரைவாக இறுதி சடங்குகளை நடத்த முற்படுவர். இதன் பொழுது அவர்கள் உடற் கூராய்வு பரிசோதனை பற்றி மறந்து விடுவார்கள்.
உண்மையில் இவ்வாறன இறப்புகளின் பொழுது பின்வரும் வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும்
1. என்ன காரணத்திற்காக அவர் இறந்தார்?
2. அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் இறப்புக்கு எவ்விதத்தில் செல்வாக்கை செலுத்தியது?
3. அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கும் மரணத்திற்கான காரணத்திற்கும் நேரடித்தொடர்பு உண்டா?
4. அவருக்கு ஏற்பட்ட காயத்தால் அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய வருத்தம் அல்லது குருதி அழுத்தம் போன்ற நோய்கள் அதிகரித்து மரணம் அடைந்தாரா?
5. அவருக்கு ஏற்பட்ட காயம் அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நோய்கள் தவிர புதிதாக கண்டுபிடிக்க பட்ட நோய் நிலமை காரணமாக இறந்தாரா?
மேற்கூறப்பட்ட வினாக்களுக்கான விடை தெரியும் நிலையிலேயே ஓர் குற்றவியல் விசாரணையினை தொடர்ந்து முன்னெடுக்க முடியும். அதன் காரணமாகவே பொலிஸார் மரண வீட்டின் பொழுது அத்துமீறி உடலினை எடுத்து சென்று உடற் கூராய்வு செய்தனர்.
இவ்வாறு பாரிய காயங்கள் ஏற்பட்ட பின்னர் ஒருவர் உயிர் வாழும் காலம் ஆனது அவரின் வயது, ஏற்கனவே உள்ள நோய் நிலமை, காயத்தின் தன்மை, காயம் ஏற்பட்ட பிரதேசம், வழங்கப்ப ட்ட வைத்திய வசதிகள், வழங்க பட்ட தாதிய கவனிப்பு என்பவற்றில் தங்கியுள்ளது.

Txs a lot dr. For ur more details.
LikeLiked by 1 person