ஈழத்தில் பலியாகும் சிறுவர்கள்

அண்மையில் தமிழ் நாட்டில் ஆழ் துளை கிணறில் தவறி வீழ்ந்த சுர்ஜித் என்ற சிறுவனுக்காக பலரும் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எம்மை சூழ அயல் கிராமங்களில், மாவட்டங்களில்  இதனை ஒத்த சம்பவங்களினால் பரிதாபமான முறையில் இறக்கும் சிறுவர்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஒவ்வோர் வருடமும் கார்த்திகை  மாதம் தொடக்கம் தை மாதம் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெய்யும் வட கீழ் பருவ பெயர்ச்சி மழையின் காரணமாக ஒவ்வொரு வருடமும் மேற்குறித்த மாகாணங்களில் குறைந்தது 5 சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறுகளில் தவறுதலாக வீழ்ந்து இறப்பர். இவ்வருடமும் அவ்வாறே நடைபெற்றுள்ளது.

sw9.jpg

மேலே உள்ள படமானது இலங்கையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளின்  தோற்றங்களினை காட்டுகின்றது.

பாதுகாப்பான கிணறு என்றால் என்ன? ஓர்  பாதுகாப்பான கிணறு என்பது தூய  குடிநீரினை வழங்குவதற்கும், தவறுதலாக நீரில் வீழ்ந்து உயிரிழப்புகளை தடுப்பதற்கும், வெள்ள நீர் போன்றன உட்புகாத வகையில் அமைக்கப்படுவது ஆகும். இங்கு  எவ்வாறு உயிரிழப்புகள் எவ்வாறு ஏற்படுகின்றது, எவ்வாறு அவற்றினை தடுக்கலாம் என்பது பற்றி விளக்குகின்றேன்.
பொதுவாக கிணறுகளுக்கு சுற்றிவர இருக்கும் சுவர் கட்டு இல்லாமல் இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. மழையின் காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால் கிணறுகளின் அமைவிடம் தெரியாமல் போவதினால் விபத்துகள் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அப்பிரதேசத்திற்கு அறிமுகமானவர்களும் அறிமுகமற்றவர்களும் விபத்திற்கு உள்ளாகின்றனர். கிணற்றின் சுற்று சுவர் ஆனது குறிப்பிட்ட அளவு உயரம் வரை (3 அடி – சில சந்தர்ப்பங்களில் 5 அடி  ) உள்ளதாக கிணறு முழுக்க சுற்றி   கட்ட வேண்டும் அப்பொழுது தான் சிறுவர்கள், ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள் தவறி விழுவதினை தடுக்கலாம். பொதுவாக கிணற்று நீரினை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் சுவரின் உயரத்தினை குறைப்பதோ அல்லது முற்றாக இல்லாமல் செய்வதோ விரும்ப தக்கது அல்ல.

Types-of-water-sources-in-the-study-site-A-Protected-well-B-Protected-well-with-lid

மேலே உள்ள படமானது உலகத்தில் உள்ள சில கிணறுகளின் தோற்றங்களினை காட்டுகின்றது
வயல் வெளிகள், கடற்கரைகள் போன்றவற்றில் உள்ள கிணறுகளில் பெரும் பாலும் சிறுவர்கள் பட்டம் ஏற்றி விளையாடும் பொழுதும், கிரிக்கெட் விளையாடும் பொழுதும் பின்னோக்கி நகரும் பொழுது தவறுதலாக வீழ்ந்து மரணத்தினை தழுவிக்கொள்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் மாரி காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கிணறுகளில் மீன் பிடித்து விளையாடும் பொழுது தவறுதலாக உள்ளே வீழ்ந்து இறக்கின்றனர், மேலும்  உள்ளே இறங்கி நீந்தி விளையாடும் பொழுதும் பூரணமாக கட்டிடபடாத காரணத்தினால் மண் மற்றும் பாரிய கல் போன்றன வீழ்ந்தும் இறப்புக்கள் நடைபெற்றுள்ளன.
வேறு சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற கிணறுகளில் இருந்து நீரினை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் குறுக்கே போடப்படும் மரங்கள் பொதுவாக தென்னங் குற்றி மழையினால் அதிக நீரினை உறிஞ்சி, நீர் அள்ளும் பொழுது பாரம் தாங்காமல் முறிந்து வீழ்ந்து மரணத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.
இனி எவ்வாறு இவ்வாறான அநியாய மரணங்களினை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் முதலில் கடற்கரை, வயல்வெளி போன்றவற்றில் உள்ள தேவையற்ற பாகாப்பற்ற கிணறுகளினை அல்லது குழிகளினை முற்றாக முடிவிடவேண்டும். மேலும் எதிர் கால பயன்பாட்டிற்கு தேவையான கிணறுகளை அடையாளம் கண்டு அவற்றினை பாதுகாப்பான கிணறுகளாக மாற்றி புனரமைக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச, அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளினை பெருகொள்ளலாம்.
வெள்ளம் காரணமாக மறைபடும் சாத்தியம் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளை அல்லது குழிகளினை சுற்றி தடிகளை நாட்டி சிவப்பு துணிகளையோ அல்லது பொலித்தினையோ பயன்படுத்தி தெளிவாக அடையாளம் இடவேண்டும். மிக வறுமையில் உள்ளவர்கள் குறைந்தது ஒவ்வோர் வருடமும் பாதுகாப்பற்ற கிணற்றின் குறுக்காக போடப்பட்ட மரத்தினையாவது மாற்றுவது நல்லது. மேலும் கிணற்றின் சுற்று சுவரின் உரம் குறைவாக இருந்தால் கிணற்றினை சுற்றி மூடி வைப்பது நல்லது

   சில சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அற்ற வாய்க்கால் போன்றவற்றில் வீழ்ந்து சிறுவர்கள் இறந்துள்ளனர். மேலும் பெற்றோர்  சிறுவர்களின் நடமாட்டத்தினை எப்பொழுதும்  அவதானித்த வண்ணம் இருக்க வேண்டும் அதனை விடுத்து தொலைக்காட் சி தொடரிலோ அல்லது கைத்தொலை பேசியிலோ மூழ்கி தன்னிலை மறப்பது சிறுவர்களின் உயிரிழப்புகளை மேலும் அதிகரிக்கும்.

sw8

மிக முக்கியமாக 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வீடுகளில் உள்ள பாரிய நீர் நிறைந்த பரல்கள், நீர்த்தாங்கிகள் என்பவற்றினுள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே இவ்வாறான சிறுவர்கள் தொடர்பாக அதிக அவதானமாக இருக்க வேண்டும்.

                                                                     முற்றும்

img-be9693bef67365dfebf86bdc61bee4d5-v6407616803344334748.jpg

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.