கொரோனா – உயிரிழப்பு எண்ணிக்கை உண்மையானதா?

வேகமாக பரவி வரும் கோரோனோவின் தாக்கத்தினால் இலங்கையில் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையும் குறுகிய காலப்பகுதியில் அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் பல செய்திகளில் இவ்வாறு இறக்கும் நோயாளர்கள் மாரடைப்பு, சலரோகம் , இருதய வருத்தம் போன்ற நாடப்பட்ட நோய்களை பல வருடங்களாக கொண்டிருந்தார்கள் என்றும் அவர்கள் அவ்வாறான நோய் நிலைமை காரணமாகவே இறந்தார்கள் எனவும் கொரோனா (கோவிட் 19) நோய்த்தொற்றால் அல்ல எனவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் நோயாளர் ஏன் மரணம் அடைந்தனர் என்பது பற்றி இக்கட்டுரை விளக்குகின்றது.
சாதாரணமாக ஒருவர் மரணம் அடையும் பொழுது அவரின் மரணத்திற்கான காரணம் (cause of death) உலக சுகாதார நிறுவனத்தின் சிபார்சுவிற்கு அமைந்த வகையில் சிகிச்சை அளித்த மருத்துவரினால் அல்லது உடற் கூராய்வு பரிசோதனை செய்த மருத்துவரினால் வெளியிடப்படும். அதன் மாதிரி வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

Improving the accuracy of death certification [CMAJ - May 19, 1998]

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் 1a என்பது உடனடியான மரணத்திற்கான காரணம் (immediate cause of death) 1b மற்றும் 1c என்பன உடனடியான மரணத்திற்கான காரணத்தினை ஏற்படுத்திய காரணிகள் (Antecedent causes) ஆகும். பகுதி 11 (part 11) என்பது மரணத்திற்கு பங்களிப்பு செய்த காரணிகளை குறிப்பதாகும்.
இனி விடயத்திற்கு வருவோம் PCR ரிப்போர்ட் பொசிட்டிவாக வரும் நோயாளி ஒருவர் பின்வரும் சந்தர்ப்பங்களில் இறக்கலாம்

  1. கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் (இங்கு நோயாளிக்கு வேறு எதுவிதமான நோய்களும் இல்லை ). இலங்கையில் இதுவரை இறந்த கொரோனா நோயாளிகளின் தரவுகளின் படி இவ்வாறு இறப்பவர்களின் மிக எண்ணிக்கை குறைவாக உள்ளது.
  2. வேறு நாட்பட்ட நோய்களின் தாக்கத்தினால் அதாவது கொரோனா நோயாளி ஒருவருக்கு இருதய வருத்தம், நீரிழிவு … போன்ற நோய்கள் காணப்படுமாயின் அவை கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் அல்லது அளிக்கப்படும் சிகிச்சையின் காரணமாக மோசமடையலாம். இதுவரை வெளியாகிய தகவல்களின் பிரகாரம் இவ்வாறு நாட்பட்ட நோயாளிகள் அதிகளவில் இறப்பதாக தெரிய வந்துள்ளது.
    இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கின்றது இவ்வாறு ஒரு நாட்பட்ட நோய்களுடன் உள்ள ஓர் கொரோனா தொற்றாளர் இறக்கும் பொழுது சிகிச்சை அளித்த வைத்தியரே குறித்த நோயாளி கொரோனா நோயின் நேரடித்தாக்கத்தினால் இறந்தாரா? அல்லது அவருக்கு ஏற்கனவே இருந்த நாட்பட்ட நோய்கள் மோசமடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பதை தீர்மானிப்பார். இதன்பொழுது அவர் நோயாளியில் காணப்பட்ட நோயின் அறிகுறிகள், உடற் பரிசோதனை முடிவுகள், ஆய்வுகூட அறிக்கைகள் போன்றவற்றினை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார். இதனையே பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கொரோனா நோயாளி மாரடைப்பினால் இறந்தார் என்று செய்தி வெளியிடுகின்றன.
    இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயியல் உடற் கூராய்வு (Pathological postmortem examination) பரிசோதனை இத்தகைய தீர்மானத்திற்கு மிக இலகுவில் உதவும். இந்த நிலையில் இவ்வகையான மரணங்கள் எதனால் ஏற்பட்டது என தீர்மானிப்பது ஓர் விஞ்ஞான ரீதியான செயற்பாட்டினை கொண்டிருக்காது. மேலும் இவ்வாறு மரணம் ஏற்பட்ட காரணத்தினை மாற்றி அமைக்க முடியும். சில உலக நாடுகள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களை இவ்வாறு மாற்றி அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே உள்ள படத்தில் இருந்து கொரானாவினால் நாடப்பட்ட நோய்களை உடையவர்கள் எவ்வாறு தீவிரமான முறையில் தாக்கத்திற்கு உட்பட்டார்கள் என்பதினை அறிந்துகொள்ளலாம்
  1. PCR பொசிட்டிவாக உள்ள நோயாளி ஒருவர் தற்கொலை செய்து அல்லது விபத்தின் பொழுது அல்லது மனிதர்களின் தாக்குதலின் பொழுது இறப்பாராயின், அவ்வகையான மரணங்கள் கொரோனாவினால் ஏற்பட்ட மரணங்களாக கொள்ளப்பட மாட்டாது.
  2. இலங்கையில் ருக்கும் முதியவர் ஒருவர் தனது வசிப்பிடத்தில் இயற்கையான முறையில் (natural)மரணத்தினை தழுவினால் பெரும்பாலும் அவரது உடல் எதுவிதமான மரண விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் ஏதும் இன்றி அடக்கம் செய்யப்படலாம். இந்நிலையில் அவர் கோவிட் 19 தொற்றினால் மரணத்தினை தழுவினாரா என்பது குறித்து தீர்மானிக்க முடியாது. இலங்கையில் கடந்த சில தினங்களில் இவ்வாறு வசிப்பிடங்களில் மரணத்தினை தழுவிய ஒருசில முதியவர்களில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலமே, அவர்கள் ஏன் இறந்தனர் என்பதினை அதாவது அவர்கள் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்திற்கு உட்பட்டு இறந்தனர் என்பதினை கண்டு பிடிக்க முடிந்தது.
  3. மேலும் இலங்கையில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனை மூலம் கோவிட் 19 வைரசுவின் தொற்றுக்கு உள்ளவர்களை வினைத்திறனான முறையில் அடையாளம் காண முடியாது. இப்பரிசோதனை மூலம் மூன்றில் இரண்டு பங்கு நோயாளரினை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் PCR பரிசோதனை முடிவு நெகட்டிவ்வாக இருந்தாலும் அதாவது நோயாளிக்கு கோவிட் 19 வைரசுவின் தாக்கம் இல்லை என்றாலும் அவர்களின் உடல்கள் தனிமைப்படுத்தற் சட்டத்தின் பிரகாரம் தகனம் செய்யப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறான காரணங்களினால் கோவிட் 19 வைரசுவின் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கையினை மிக சரியான முறையில் கணிப்பிட முடியாது உள்ளது என்பதே உண்மை ஆகும். முற்றும்

2 thoughts on “கொரோனா – உயிரிழப்பு எண்ணிக்கை உண்மையானதா?

Leave a reply to Skm Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.