சம்பவம் 1:
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 7 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார், ஆனால் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு மூன்று பிள்ளைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் 2:
24-05-2025 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது
சம்பவம் 3:
கிளிநொச்சியினை சேர்ந்த 56 வயதுமிக்க கர்ப்பிணி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த கர்ப்பிணி செயற்கை முறையில் கருத்தரித்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனுக்கு தெரியாமலேயே குறித்த பெண்மணி கருத்தரித்ததாக கூறப்படுகின்றது
இவை இந்த வருடத்தில் முகநூலிலும் பத்திரிகைகளிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில் வந்த செய்திகள். ஏன் இவ்வாறு கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் திருமணம் செய்யும் சோடிகளில் அண்ணளவாக நான்கில் ஒரு சோடிக்கு (23%) குழந்தைப்பேறு இன்மை ஓர் பிரச்சனையாக இருக்கின்றது. இதற்கு தீர்வாக பல்வேறு சிகிச்சை முறைகள் பெண்ணோயியல் மருத்துவத்தில் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது IVF (In vitro fertilization) என்றழைக்கப்படும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் ஆகும். இந்த IVF சிகிச்சை முறையானது பல்லாயிரக்கணக்கான குழந்தை பேறு அற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தினை வீசியுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனினும் இந்த IVF சிகிச்சையின் பொழுது பல்வேறுபட்ட மருத்துவ ஒழுக்கவியல் (medical ethics) சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இவ்வாறான கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறான ஒரு சில பிரச்சனைகளை இப்பதிவு விளக்குகின்றது
1. செலுத்தப்படும் முளையங்களின் எண்ணிக்கை (number of embryos)
IVF சிகிச்சையின் பொழுது வெளிச்சூழலில் கருக்கட்டபட்ட முளையம் தாயின் கருப்பையினுள் உட்செலுத்தப்படும். தாயின் வயது, முளையங்களின் தரம், தோல்வியடைந்த IVF சிகிச்சைககிளின் எண்ணிக்கை போன்றவற்றினை கருத்தில் கொண்டு முளையங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பொதுவாக தாயினது, பிறக்க போகும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல குழந்தைகள் பிறக்கும் பொழுது ஏற்படும் தீய விளைவுகளை கருத்தில் கொண்டும் ஓர் முளையத்தினை கருப்பையினுள் உட்பதிக்கவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரிதான சில சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். உதாரணமாக தாயின் வயது அதிகம், குறைந்த தரத்திலான முளையம், பலமுறை தோல்வி அடைந்த சிகிச்சை முறைகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். எவ்வாறாயினும் 03 முளையங்களுக்கு மேல் உட்பதிக்க சிபாரிசு இல்லை.
ஆனால் இன்றைய வியாபார உலகில் மேற்குறித்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படாதன் காரணமாகவே இவ்வாறான மேற்குறித்த கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறு முளையங்கள் உட்செலுத்தப்பட்டு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது தாயாருக்கு ஏற்படும் ஒரு சில முக்கிய சிக்கல்கள்
1. உயர் குருதி அழுத்தம் அதன் காரணமான வலிப்பு நோய் மற்றும் ஈரல் செயலிழப்பு
2. கர்ப்பகால சலரோகம்
3. அதிக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள்
4. குருதி சோகை
5. பிள்ளை பேறிற்கு பின்னரான குருதி போக்கு
ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில முக்கிய சிக்கல்கள்
1. குறை மாதத்தில் பிறத்தல்
2. நிறை குறைவாக பிறத்தல்
3. பிறந்தவுடன் முதிரா குழந்தைகள் பிரிவில் அனுமதியும் அதன் நீண்ட கால தீங்கான சுகாதார விளைவுகள்
4. இருதய, சுவாச தொகுதிகளில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகள்
5. தாயாரின் அன்பினை மற்றும் அரவணைப்பினை உரிய அளவில் பெற முடியாத நிலைமை
6. தாய்ப்பாலினை உரிய அளவில் அல்லது முற்றாக பெறமுடியாத நிலைமை
இவ்வாறான IVF சிகிச்சைகள் தனியார் மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டு பிரசவத்திற்க்கு அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதிரா நிலையில் குறை மாதத்தில் பிறக்கும் பொழுது முதிராக குழந்தைகள் நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்படும் இதன்காரணமாக மற்றைய தாயாரின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். முதிரா குழந்தைகள் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கை காணப்படும்
2. வயது கட்டுப்பாடு மற்றும் சம்மதம்
50 வயதினை கடந்த பெண்களுக்கு இவ்வாறான IVF சிகிச்சை முறைகளை வழங்க கூடாது என வைத்தியர்களுக்கான வழிகாட்டி வலியுறுத்துகின்றது. தாயினதும் கருவில் உருவாகும் குழந்தையினதும் நலத்தினை கொண்டே இந்த வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படும் பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரினதும் எழுத்துமூலமான சம்மதம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இவ்வாறு அதிகரித்த வயதில் ஓர் பெண் கருத்தரிக்கும் பொழுது குறித்த பெண் மனோரீதியாக மற்றும் மருத்துவ ரீதியாக கர்ப்பத்தினை தாங்கி பிள்ளையினை பெற்று வளர்த்து எடுக்க தகுதி வாய்ந்தவளா என்று தீர ஆராய வேண்டும்.

இலங்கையில் IVF (MEDICALLY ASSISTED REPRODUCTIVE TECHNIQUES) பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் ஏதும் இல்லை வெறுமனே வழிகாட்டுதல் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் இவ்வாறு மருத்துவ வழிகாட்டுதல்களை மீறி ஒன்றிற்கு மேற்பட்ட முளையங்களை தமது வியாபார நோக்கம் கருதி உட் செலுத்தி கர்ப்பிணி தாய்மாரின் உயிரினை ஆபத்திற்கு உள்ளாக்கும் மற்றும் பிறக்கும் குழந்தைகளின் நலனில் அக்கறையில்லாத வைத்தியர்களை புறக்கணிப்பதே தீர்வாகும்.
குறிப்பு : இங்கு தலையங்கத்தில் வரமா? சாபமா? என குறிப்பிட்டது IVF சிகிச்சை முறையினையே ஆகும். மக்கட் செல்வம் என்றும் வரமே.
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”……… திருக்குறள்
நன்றி

Really knowledgeable. Appreciate you.
thank you sir
LikeLike
Thanks
LikeLike