தரமற்றநிலக்கரி இறக்குமதி ஓர் சூழலியல் பேரனர்த்தம்

இன்றைய உலகில் மின் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை நேரடி தொடர்புடையவை. 2008ம் ஆண்டு சுன்னாகம் மின் நிலையத்தால் ஏற்பட்ட மாசுபாடு காரணமாக யாழ் குடாநாட்டின்  பலபகுதிகளில் நிலத்தடி நீர் ஆனது  எண்ணெய், கிரீஸ், பெட்ரோலிய கழிவுகள் மூலம் பாதிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றது. இதனால் சில கிணறுகள் குடிநீருக்கு உகந்ததல்லாத நிலையில் மாறியது மற்றும்  அருகிலிருந்த மக்கள் நீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதார பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது. 2019ம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றம் குறித்த மின்னிலையத்தின் செயற்பாடுகளை குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை நிறுத்தியதோடு மட்டும் அல்லாது பாதிப்பட்ட மக்களுக்கு நட்ட ஈட்டினை வழங்குமாறும் உத்தரவிட்டது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

ஆனால் சமீப காலங்களில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் அதன் மூலம் அதிகரிக்கும் பாதரசம் (Mercury) மாசுபாடு, சுற்றுச்சூழல் நச்சுத்தன்மை மற்றும் பொது சுகாதாரத்தில் தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது ஒரு மெதுவான, ஆனால் பரவலான விஷப்பாதிப்பு மாதிரியை உருவாக்குகிறது. இந்த நிலைமையை ஜப்பானில் பாதரச மாசுபாட்டினால் ஏற்பட்ட மினமாட்டா நோய் (Minamata disease) உடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதன் தீவிரமும் எதிர்கால அபாயமும் தெளிவாக புரிகிறது.

மினமாட்டா நோய் ஒரு வரலாற்றுச் சுற்றுச்சூழல் பாடம்

மினமாட்டா நோய் என்பது பாதரச நச்சுத்தன்மையால் ஏற்படும் ஒரு தீவிரமான நரம்பு மண்டல பாதிப்பு ஆகும். இது மனித வரலாற்றில் தொழில்துறை வளர்ச்சியால் ஏற்பட்ட மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1950-களில் ஜப்பானின் மினமாட்டா நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

ஜப்பானின் குமாமோட்டோ மாகாணத்தில் உள்ள மினமாட்டா நகரில் ‘சிசோ கார்ப்பரேஷன்’ (Chisso Corporation) என்ற ரசாயன ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலை அசிட்டால்டிஹைட் தயாரிப்பிற்காகப் பாதரசத்தை வினையூக்கியாகப் பயன்படுத்தியது. 1932 முதல் 1968 வரை, இந்த ஆலை நச்சுத்தன்மை வாய்ந்த மெத்தில் மெர்குரி (Methylmercury) கலந்த கழிவுநீரை நேரடியாக மினமாட்டா கடலில் கலந்தது. கடலில் கலந்த பாதரசம் உணவுச் சங்கிலி வழியாகப் பரவியது

  1. கடலில் உள்ள பாக்டீரியாக்கள் பாதரசத்தை மெத்தில்மெர்குரியாக மாற்றின.
  2. இந்த நச்சு முதலில் பாசிகள் மற்றும் சிறிய மீன்களின் உடலில் சேர்ந்தது.
  3. பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்டபோது, நச்சுத்தன்மை பலமடங்கு அதிகரித்தது (Bio-accumulation).
  4. அந்த நச்சு கலந்த மீன்களை மினமாட்டா நகர மக்கள் மற்றும் பூனைகள் உண்டபோது, அவர்களுக்குத் தீவிர நச்சு பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நோயால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; பல்லாயிரக்கணக்கானோர் வாழ்நாள் முழுவதும் முடக்கப்பட்டனர். பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு, 1968-ல் தான் ஜப்பானிய அரசு இந்த நோய்க்குக் காரணம் தொழிற்சாலைக் கழிவுதான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. 

இந்தத் துயரத்தின் நினைவாகவும், மீண்டும் இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் தடுக்கவும், 2013-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ‘மினமாட்டா உடன்படிக்கை’ (Minamata Convention)கையெழுத்தானது. இதில் இந்தியா உட்பட 140-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து பாதரசப் பயன்பாட்டைக் குறைக்க ஒப்புக்கொண்டன.

இலங்கையில் நிலக்கரி பயன்பாடு

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகள், மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரியை பெரிதும் நம்புகின்றன. இலங்கையின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் நாட்டின் முக்கிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையமாகும். அத்துடன் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டின் மிகப்பெரிய வெப்ப மின் நிலையமாகும். இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிக்கைகளின்படி, 2025–2026 காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட சில நிலக்கரி சரக்குகள் தரநிலைக்கு உட்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற நிலக்கரியின் பயன்பாடு காரணமாக குறைந்த மின் உற்பத்தி , அதிக சாம்பல் அளவு உற்பத்தி மற்றும் அதிகரித்த கனிம நச்சுப் பொருட்களின் வெளியேற்றம் என்பன நடைபெறுகின்றன. மேலும் குறித்த அளவு மின்சாரத்தினை பெறும் பொருட்டு அதிக அளவு நிலக்கரி எரிக்க வேண்டிய நிலை உருவாகிறது.

நிலக்கரிக்கும் பாதரசத்திற்கும் இடையிலான தொடர்பு

நிலக்கரி என்பது பூமிக்கடியில் உருவாகும் ஒரு இயற்கை எரிபொருள். இதில் இயற்கையாகவே மிகச்சிறிய அளவில் பாதரசம் கலந்திருக்கும்.  நிலக்கரி எரிக்கப்படும்போது வெளியேறும் பாதரசம் மூன்று முக்கிய நிலைகளில் இருக்கும். இதை ‘Mercury Speciation’ என்று அழைப்பார்கள்:

  1. ஆவி நிலை (Elemental Mercury )

      நிலக்கரியை எரிக்கும்போது, இந்த பாதரசம் ஆவியாகி நச்சுப் புகையாக வெளியேறுகிறது. மின் உற்பத்தி நிலையத்தில்  நிலக்கரி எரிக்கப்படும்போது, அதிலுள்ள பாதரசம் சுமார் 1000°C வெப்பநிலையில் ஆவியாகி வாயு நிலைக்கு (Elemental Mercury ) மாறுகிறது. இது காற்றில் மிக நீண்ட காலம் (6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை) தங்கியிருக்கும். இது காற்றோட்டம் காரணமாக உலகளாவிய அளவில் பரவக்கூடியது.

      2. ஆக்சிஜனேற்றப்பட்ட நிலை (Oxidized Mercury)

      இது நீரில் எளிதில் கரையக்கூடியது. எனவே, இது மின் நிலையத்திற்கு அருகிலேயே மழையுடன் கலந்து மண்ணில் படியும். மேலும் புகை வெளியேறும் குழாய்களில் (Flue gas) இந்த வாயு குளிர்ந்து மற்ற வேதிப்பொருட்களுடன் (உதாரணமாக குளோரின்) வினைபுரிந்து, நீரில் கரையக்கூடிய ஆக்சிஜனேற்றப்பட்ட பாதரசமாக மாறுகிறது.

      3. துகள் நிலை (Particulate-bound Mercury)

      இது நிலக்கரி சாம்பல் துகள்களில் ஒட்டியிருக்கும் பாதரசம் ஆகும்.

      இவ்வாறு சூழலுக்கு வெளியேறும் வெவ்வேறு வடிவங்களினால் ஆன பாதரசம் காரணமாகவே சூழல் மாசுபடுகின்றது

      நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் நடப்பது என்ன

      பொதுவாக ஒரு கிலோ நிலக்கரியில் 0.1 மி.கி (0.1 mg/kg) பாதரசம் இருக்கும். ஆனால் தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் நிலக்கரியில் 0.27 மில்லிகிராம் பாதரசம் இருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஆண்டுக்கு 2.2 முதல் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியைப் பயன்படுத்துவதால், இது ஆண்டுக்கு 600-650 கிலோ பாதரசம்  வெளியிடப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

      இந்த நிலக்கரி ஆலையில் இரண்டு வடிகட்டிகள் உள்ளன.  முதலாவது  Electrostatic Precipitator (ESP) ஆகும், இது பறக்கும் சாம்பலைச் சேகரிக்கிறது. எரிதலின்போது பாதரசம் ஆவியாகிவிடுவதால், ESP அந்தப் பாதரசத்தைச் சேகரிப்பதில்லை. நடத்தப்பட்ட ஆய்வில் பறக்கும் சாம்பலின் கன உலோகப் பகுப்பாய்விலும், அதில் பாதரசம் இருப்பது கண்டறியப்படவில்லை.

      இரண்டாவது வடிகட்டி Flue Gas Desulfurization (FGD) ஆகும். இது அனல் மின் நிலையங்களில் (Coal Power Plants), நிலக்கரியை எரிக்கும் போது வெளிவரும் புகையில் கந்தக டை ஆக்சைடு (Sulfur Dioxide ) என்ற நச்சு வாயு இருக்கும். இந்த வாயுவை வெளியேற்றும் முன், அதிலுள்ள கந்தகத்தைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பமே . இது புகை வாயுவில் உள்ள SOx வாயுக்களை உறிஞ்சுவதற்காக, அதன் மீது கடல் நீரைத் தெளிக்கிறது. இருப்பினும், இந்த செயல்முறை கடல் நீருடன் வினைபுரியும்போது பாதரசப் புகையின் ஒரு பகுதியை மெத்தில் மெர்குரியாக மாற்றுகிறது. நுரைச்சோலை மின்நிலையத்தில் FGDயின் பின்னரான நீர் வெளியேற்றம், பாதரசத்தை அகற்றுவதற்கான எந்தவொரு சுத்திகரிப்பும் செய்யப்படாமல் மீண்டும் கடலுக்குள் வெளியிடப்படுகிறது.

      நுரைச்சோலை மின்நிலையத்தில் மீதமுள்ள பாதரசம் புகைபோக்கிகள் வழியாக வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. அவையும் மீண்டும் பூமிக்குத் திரும்புகின்றன. கடலுக்குள் எவ்வளவு சதவீதம் வெளியிடப்படுகிறது, வானத்திற்குள் எவ்வளவு சதவீதம் வெளியிடப்படுகிறது என்பதைத் தீர்மானிக்க இன்றுவரை எந்தவொரு உறுதியான ஆய்வும் நடத்தப்படவில்லை.

      விஞ்ஞான ரீதியான சான்றுகள்

      2019ம் ஆண்டு சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) வெளியிட்ட ஆய்வறிக்கையின் பிரகாரம் நுரைச்சோலை, பனியடியா, நாரக்கல்லியா மற்றும் புத்தளம் நகரத்தை ஒட்டியுள்ள நீரேரிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அபாயகரமான அளவில் பாதரச பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.தொழில் ரீதியாக பாதரசத்துடன் நேரடித் தொடர்பில்லாத 18 முதல் 44 வயதுடைய 28 பெண்களின் தலைமுடி மாதிரிகளில், அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்சில் நிர்ணயித்த பாதுகாப்பு அளவான 1ppm-க்கும் அதிகமான பாதரசம் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் ஒருவருக்கு அதிகபட்சமாக 15.584 ppm என்ற அளவில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளது.

      இந்த பாதிப்புக்கு நீரேரி மீன்களை உட்கொள்வதே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது, இது நொச்சோலை நிலக்கரி மின் நிலையத்திலிருந்து வெளியேறும் பறக்கும் சாம்பலுடன் (Fly ash) தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சூழல் மாசுபடல் தற்போதைய தரமற்ற நிலக்கரி பயன்பாட்டுடன் நிச்சயமாக அதிகரிக்கும் ஏனெனில் தரமற்ற நிலக்கரியில் அதிகளவு பாதரசம் போன்ற பார உலோகங்கள் அதிகளவில் மாசாக உள்ளமையே ஆகும்.

      சுற்றுச்சூழல் தாக்கம்

      வருடத்திற்கு 600 – 650 கிலோகிராம் பாதரசம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க வெளியேற்றமாகும், மேலும் இது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மின் நிலைய புகையிலிருந்து வெளியேறும் பாதரசம் நீர்நிலைகளில் கலந்தவுடன், அங்குள்ள நுண்ணுயிரிகளால் மெத்தில்மெர்குரி (Methylmercury) ஆக மாற்றப்படுகிறது.

      • குறிப்பாக கடலில் உள்ள மெத்தில் மெர்குரி. ஒரு அதிக நச்சுத்தன்மை கொண்ட நரம்பு நஞ்சாகும். அதனை சிறிய மீன்கள் இந்த நச்சை உட்கொள்ளும் (bioaccumulation).
      • பெரிய மீன்கள் பல சிறிய மீன்களை உண்பதால், அவற்றின் உடலில் நச்சுத்தன்மை பல மடங்கு அதிகரிக்கிறது. இவ்வாறு உணவுச் சங்கிலி வழியே பாதரசத்தின் அளவு அதிகரிக்கிறது (biomagnification)
      • இறுதியாக மனிதர்கள் இந்த மீன்களை உண்ணும்போது, மெத்தில் மெர்குரி மனிதனை அடைகின்றது. இதனால் மனிதர்களுக்கு மறைமுக விஷப்பாதிப்பு ஏற்படுகிறது.

      சுகாதார விளைவுகள்

      இவ்வாறு சிறிது சிறிதான அளவில் மனிதனை அடையும் பாதரசம் நீண்ட காலப்போக்கில் மனிதனுக்கு பல்வேறு உடலியல் தீங்குகளை ஏற்படுத்தும். அவ்வாறான சில சுகாதார தீங்குகள் வருமாறு

      1. நரம்பு தொகுதி  

      பாதரசத்தின் சேர்க்கை காரணமாக அதிக பாதிப்பிற்க்கு உள்ளாவது நரம்பு மண்டலமே ஆகும். பாதரசம் நேரடியாக மூளை மற்றும் நரம்புகளைப் பாதிக்கிறது.

      • நடுக்கம் : கைகள், கால்கள், நாவுகள் மற்றும் கண் இமைகளில் லேசான நடுக்கம் தொடங்கும். இது ‘மெர்குரியல் ட்ரெமர்’ (Mercurial Tremors) எனப்படும்.
      • எரிதிசம் (Erethism): இது ஒரு மனநல பாதிப்பு. இதனால் அதிகப்படியான கூச்சம், கோபம், பதற்றம், ஞாபக மறதி மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.
      • உணர்வு இழப்பு : கை, கால் விரல்களில் ஊசி குத்துவது போன்ற உணர்வு (Paresthesia) அல்லது மரத்துப்போதல் ஏற்படும்.
      • தடுமாற்றம் (Ataxia): நடப்பதில் தடுமாற்றம் மற்றும் உடல் சமநிலையை இழத்தல். 

      2. சமிபாட்டு தொகுதி

      • மெர்குரியல் லைன் (Mercurial Line): ஈறுகளில் நீலநிற அல்லது கருமை நிறக் கோடுகள் தோன்றும்.
      • ஈறு வீக்கம் (Gingivitis): ஈறுகளில் வீக்கம், புண்கள் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும்.
      • அதிக உமிழ்நீர் (Ptyalism): வாயில் உமிழ்நீர் சுரப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கும்.
      • பற்கள் பாதிப்பு: பற்கள் தளர்வடைந்து விழக்கூடும் (Loosening of teeth).

      3. சிறுநீரக தொகுதி

      பாதரசம் சிறுநீரகங்களில் தங்கி அவற்றைச் செயலிழக்கச் செய்யும்.

      • நெப்ரோடிக் சிண்ட்ரோம் (Nephrotic Syndrome): சிறுநீரக வடிகட்டிகள் பாதிக்கப்படுவதால், சிறுநீர் வழியாக அதிகப்படியான புரதம் (Protein) வெளியேறும்.
      • சிறுநீரகச் செயலிழப்பு: நீண்ட கால பாதிப்பால் நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) ஏற்படலாம். 

      4. கண் மற்றும் பார்வை

      • பார்வை குறைபாடு: பார்வைத் திறன் குறைதல் மற்றும் பக்கவாட்டுப் பார்வை (Peripheral vision) மங்குதல் (Tunnel vision).
      • அட்கின்சன் அறிகுறி (Atkinson’s Sign): கண்ணின் லென்ஸின் முன்பகுதியில் பழுப்பு நிறப் படிவம் தோன்றுதல்.

      5. தோல் மற்றும் இதர பாதிப்புகள்

      • அக்ரோடினியா (Acrodynia): இது முக்கியமாக குழந்தைகளைப் பாதிக்கும். கை, கால்கள் சிவந்து வீங்குதல், அரிப்பு மற்றும் தோல் உரிதல் போன்றவை ஏற்படும். இது ‘பிங்க் நோய்’ (Pink Disease) என்றும் அழைக்கப்படும்.
      • அதிக வியர்வை: உடல் வெப்பநிலை மாறுபடுதல் மற்றும் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல். 

      6. கரு வளர்ச்சி

      • கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாதரச நச்சு ஏற்பட்டால், அது நஞ்சுக்கொடி வழியாகக் கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி தடைபடுதல், பார்வையின்மை மற்றும் கேட்கும் திறன் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

      மினமாட்டா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஒரு நாடாக, 2020 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பாதரச மூலங்களையும் ஒழிக்க இலங்கை கடமைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மினமாட்டா நோய் நமக்குக் கற்றுத்தந்த பாடம் என்னவென்றால், முறையற்ற கழிவு மேலாண்மை மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதாகும். பொருளாதார வளர்ச்சியை விடச் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மக்களின் ஆரோக்கியமுமே முதன்மையானது என்பதை இந்தச் சோகம் உலகுக்கு உணர்த்தியது.

      இலங்கையின் நுரைச்சோலை  ஜப்பானின் மினமாட்டா நகரம் போன்றதொரு பாரிய சுகாதார பேரழிவாக மாறுவதற்கு முன்னரே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாதிப்பின் மூலத்தைக் கண்டறிந்து தடுத்த நிறுத்த வேண்டும்.

      Leave a comment

      This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.