பில்டர் சிகரெட் பாதுகாப்பானதா?

எம்மில் பலரும் தப்பாக விளங்கி வைத்திருக்கும் விடயம் சுருட்டு மற்றும் பீடி போன்றவற்றினை விட சிகரெட் பாதுகாப்பானது ஏனெனில் சிகரெட்டில் பில்டர் எனப்படும் வடிக்கும் பஞ்சு உள்ளது என்பதே ஆகும். விஞ்ஞா ரீதியாக உண்மையில் அவ்வாறல்ல. இலங்கையில் சிகரெட் பில்டர்கள் (Cigarette Filters) தொடர்பாக மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) 2026 ஆம் ஆண்டு எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று தான். இலங்கையில் சிகரெட் பில்டர்களை முற்றாகத் தடை செய்ய NATA முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் 2025 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புகையிலை கட்டுப்பாட்டு மாநாட்டில் எடுக்கப்பட்ட சர்வதேச முடிவுகளுக்கு இணங்க, ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளன

இதற்கான முக்கிய காரணம் இலங்கையில் தினசரி சுமார் 60 லட்சம் முதல் 1 கோடி சிகரெட் பில்டர்கள் சூழலில் வீசப்படுவதாக NATA தெரிவித்துள்ளது. இவை உக்கி அழிவதற்கு நீண்ட காலம் எடுப்பதாலும், நீர் நிலைகளை மாசுபடுத்துவதாலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் சிகரெட் பில்டர்களை முற்றாகத் தடை செய்ய NATA அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அவை உலகளவில் அதிகம் காணப்படும் குப்பைகளில் ஒன்றாகும். சிகரெட் துண்டுகள் உலகளாவிய கடற்கரை மற்றும் சுற்றுச்சூழல் குப்பைகளில் முதலிடத்தில் உள்ளன.

சிகரெட் பில்டர்கள் ‘செல்லுலோஸ் அசிடேட்’ (Cellulose Acetate) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை காகிதம் அல்லது பருத்தி போலத் தோன்றினாலும், அவை பிளாஸ்டிக் என்பதால் இயற்கையில் எளிதில் சிதைவதில்லை. சிகரெட் பில்டர்கள் உக்கி அழிவதற்கு  எடுத்துக்கொள்ளும் காலம் சூழலைப் பொறுத்து மாறுபடும். இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் தற்போதைய தரவுகளின்படி, இதன் சிதைவு காலம் குறித்த விவரங்கள் இதோ:

  • சாதாரண சூழலில்: ஒரு சிகரெட் பில்டர் முழுமையாக மட்குவதற்கு பொதுவாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகிறது.
  • சூழல் மாறுபாடு: மண்ணின் ஈரப்பதம், சூரிய ஒளி மற்றும் பாக்டீரியாக்களின் அளவைப் பொறுத்து, சில இடங்களில் இது 18 மாதங்களில் சிதையத் தொடங்கலாம்; ஆனால் கடுமையான சூழலில் இது 30 ஆண்டுகள் வரை கூட அழியாமல் இருக்கும்.

பில்டர்கள் உக்கி அழிவடையும் பொழுது  அவை முழுமையாக மறைந்து போவதில்லை. மாறாக, அவை பல்லாயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் இழைகளாக (Microfibers), நுண்ணிய பிளாஸ்டிக் (Microplastics) ஆக  உடைந்து மண் மற்றும் நீர் நிலைகளில் கலந்து விடுகின்றன.

சிகரெட் பில்டர்களின் அமைப்பு மற்றும் வகைகள்

  1. செல்லுலோஸ் அசிடேட் பில்டர்கள்: 95% க்கும் அதிகமான வணிக ரீதியான சிகரெட் பில்டர்கள் பிளாஸ்டிக் செல்லுலோஸ் அசிடேட் இழைகளால் ஆனவை. இவை மெல்லிய இழைகளால் ஆனவை மற்றும் தார் (tar) மற்றும் நிகோடின் போன்ற சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் குறைக்க முற்றாக நீக்க அல்ல என்று வடிவமைக்கப்பட்டுள்ளன.
  2. ஆக்டிவேட்டட் சார்கோல் (Activated Charcoal) பில்டர்கள்: இந்த பில்டர்களில் செல்லுலோஸ் அசிடேட்டுடன் ஆக்டிவேட்டட் சார்கோல் சேர்க்கப்பட்டிருக்கும். சார்கோல் புகையிலுள்ள சில வாயு நிலை இரசாயனங்களை உறிஞ்சுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  3. பேப்பர் (கார்போர்டு) பில்டர்கள்: இவை பெரும்பாலும் கையால் சுருட்டப்படும் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை நுரை பில்டர்களை விட வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன மற்றும் பல வடிவங்களில் (கிளாசிக், கிங் சைஸ், கூம்பு வடிவம்) கிடைக்கின்றன.
  4. மற்ற வகைகள்: கண்ணாடி பில்டர்கள் போன்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய விருப்பங்கள், நுரை பில்டர்கள் மற்றும் பயோ டீகிரேடபிள் (biodegradable) பில்டர்கள் போன்றவையும் கிடைக்கின்றன.

தவறான புரிதல்

பில்டர்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், இவை எவ்விதமான கூடுதல் பாதுகாப்பையும் வழங்காது மற்றும் , இது புகையிலை நிறுவனங்களின் ஒரு வகையான ஏமாற்று வேலைஆகும். இவை  புகையிலிருந்து சில இரசாயனங்களை வடிகட்ட உதவுகின்றன. இருப்பினும், அவை புகைபிடிப்பதை பாதுகாப்பானதாக மாற்றுவதில்லை. அதாவது பில்டர்கள் சில இரசாயனங்களை வடிகட்டினாலும், அவை புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைக் கணிசமாகக் குறைப்பதில்லை. பில்டர் உள்ள சிகரெட்டுகள் பாதுகாப்பானவை என்பது ஒரு தவறான கருத்து ஆகும்.

  • உண்மையில், பில்டர்கள் புகையை மென்மையாக்குவதால், புகைப்பிடிப்பவர்கள் அதை மிக ஆழமாக உள்ளிழுக்க உதவுகின்றது மேலும் புகையிலை துண்டுகள் வாயில் நுழைவதைத் தடுப்பது மற்றும் சில தீங்கு விளைவிக்கும் பொருட்களை வடிகட்டுவதன் மூலம் புகைபிடிப்பது “பாதுகாப்பானது” என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.
  • ஈடுசெய்யும் புகைபிடித்தல் (Compensatory Smoking): பில்டர்கள் நிக்கோடின் அளவைக் குறைப்பதாகத் தோன்றினாலும், உடல் தனக்குத் தேவையான நிக்கோடினைப் பெற புகைப்பிடிப்பவரை அதிக முறை அல்லது அதிக அழுத்தத்துடன் புகையை இழுக்கத் தூண்டுகிறது. உண்மையில், பில்டர்கள் புகையை மென்மையாக்குவதால், புகைப்பிடிப்பவர்கள் அதை மிக ஆழமாக உள்ளிழுக்க நேரிடுகிறது, இது நுரையீரலின் உட்பகுதிகளில் புற்றுநோய் (Adenocarcinoma) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • பயன்படுத்தப்பட்ட பில்டர்களில் ஆர்சனிக், காரீயம் (Lead) போன்ற நச்சுப் பொருட்கள் படிந்திருக்கும். இவை மண்ணிலும் நீரிலும் கலந்து மனித ஆரோக்கியத்திற்கு மறைமுகமாகப் பெரும் தீங்கு விளைவிக்கின்றன.
  • மேலும் சிகரெட் புகைக்கும் பொழுது விரல் மற்றும் உதடுகளில் சுடாமல் இருக்க இந்த பில்டர் உதவுகின்றது அத்துடன் இந்த பில்டரில் தான் சிகரெட்டுக்குரிய சுவை ஊட்டிகள் கலக்கப்பட்டிருக்கும்.

எனவே, பில்டர் வைத்திருப்பதன் மூலம் புகைபிடித்தல் பாதுகாப்பானது என்று கருதுவது தவறு. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒரே வழி புகைபிடித்தலை முற்றாக நிறுத்துவது மட்டுமே.

சிகரெட் பில்டர் மற்றும் நீர் மாசுபடுதல்

சிகரெட் துண்டுகள் (Cigarette butts) மற்றும் பில்டர்கள்  உலகளவில் நீர் நிலைகளை மாசுபடுத்தும் முதன்மையான பிளாஸ்டிக் கழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவை நீர் நிலைகளில்  ஏற்படுத்தும் பாதிப்புகள் பின்வருமாறு

1. பிளாஸ்டிக் மாசுபாடு (Cellulose Acetate)

சிகரெட் ஃபில்டர்கள் பஞ்சால் ஆனவை என்று பலர் தவறாக நினைக்கிறார்கள், ஆனால் அவை உண்மையில் செல்லுலோஸ் அசிடேட் (Cellulose acetate) என்ற ஒரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. வெயில் மற்றும் அலையினால் இவை சிதைந்து நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களாக (Microplastics) மாறி நீர் நிலைகளில் கலந்து விடுகின்றன.

2. நச்சு இரசாயனங்கள் கசிதல்

ஒரு சிகரெட் துண்டில் நிகோடின், ஆர்சனிக், காரீயம் (Lead), காட்மியம் மற்றும் ஃபார்மால்டிஹைடு போன்ற 7,000-க்கும் மேற்பட்ட நச்சு இரசாயனங்கள் உள்ளன. மழையினால் அடித்துச் செல்லப்படும் சிகரெட் துண்டுகள் ஆறுகள் மற்றும் கடல்களில் சேரும்போது, அதிலுள்ள நச்சுகள் சில மணிநேரங்களிலேயே நீரில் கசியத் தொடங்குகின்றன. ஆய்வுகளின்படி, ஒரு லிட்டர் நீரில் ஒரு சிகரெட் துண்டு இருந்தால் கூட, அதில் இருக்கும் மீன்கள் 96 மணிநேரத்திற்குள் இறந்துவிடும் அபாயம் உள்ளது.

3. கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து

மீன்கள், ஆமைகள் மற்றும் கடற்பறவைகள் சிகரெட் துண்டுகளை அவற்றின் சிறிய அளவு மற்றும் மிதக்கும் தன்மையால் உணவு என்று நினைத்து உட்கொள்கின்றன. இவை விலங்குகளின் செரிமானப் பாதையை அடைத்து, பசி எடுக்காமல் செய்து இறுதியில் பட்டினியால் இறக்க நேரிடும்.

4. மனித ஆரோக்கியம்

மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் உட்கொள்ளும் நுண்ணிய பிளாஸ்டிக் மற்றும் நச்சுகள், உணவுச் சங்கிலி (Food chain) வழியாக மீண்டும் மனிதர்களையே வந்தடைகின்றன. இது மனிதர்களுக்கு நாளமில்லா சுரப்பி பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

இந்த மாசுபாட்டைத் தடுக்க, சிகரெட் துண்டுகளை நீர் நிலைகளிலோ அல்லது தெருக்களிலோ வீசாமல் முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்.

நன்றி

கசிப்பு உயிரை பறித்தது ஏன்?


வென்னப்புவ பகுதியில் சட்ட விரோத மதுபானமாகிய கசிப்பினை அருந்திய ஏழு பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் பலர் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கசிப்பு அருந்தியவர்கள் என்ன காரணத்திற்காக இறந்தார்கள் என்பதை சட்ட மருத்துவ ரீதியில் இப்பதிவு ஆராய்கிறது.

முதலில் இம்மரணங்களுக்கு காரணம் அவர்கள் பருகிய கசிப்பில் மெத்தனோல்   (methanol) என்ற நச்சு தன்மை கொண்ட ஆல்கஹால் (alcohol) இருந்தமையே ஆகும். சிலர் கேட்பார்கள் ஆல்கஹால்  என்றாலே நஞ்சுதானே, இது என்ன புது விசயம் என்று. இரசாயனத்தின் பிரகாரம் hydroxyl (―OH) என்ற கூட்டத்தினையும் alkyl group (hydrocarbon chain) கூட்டத்தினையும் கொண்ட சேதனச்சேர்வைகள் யாவும் அல்ஹகால் என்றழைக்கப்படும் (Any of a class of organic compounds characterized by one or more hydroxyl (―OH) groups attached to a carbon atom of an alkyl group (hydrocarbon chain)). இவற்றில் இரு கார்பன்களைக் கொண்ட எத்தனால் மட்டுமே மனித நுகர்விற்கு உகந்தது. மற்றைய அல்ஹகால் யாவும் மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல அதாவது நச்சுத்தன்மை உடையவை.

நாம் சாதாரணமாக அருந்தும் மதுபானத்தில் எத்தனோல் என்ற அல்கஹோல் தான் அதிக அளவில் காணப்படும். மெத்தனோல் ஆனது அறவே காணப்படாது அல்லது சிறிதளவில் காணப்படலாம். ஆனால் கசிப்பில் மெத்தனோல் என்ற அல்கஹோல் கணிசமான அளவில் காணப்படும் இதுவே மனிதர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.

கசிப்பானது உள்ளூரில் கிடைக்கும் பழங்கள், சீனி  போன்ற பல்வேறுபட்ட பொருட்களை நொதிக்க வைத்து காய்ச்சி வடிப்பதன் மூலமே பெறப்படுகின்றது.  ஏன் கசிப்பில் மெத்தனோல் அதிகளவில் இருக்கின்றது என்று ஆராய்வோமானால், இவ்வாறு நொதிக்க விடும் பொழுது எதனோலுடன் மெத்தனோல், அசிட்டோன் போன்ற பல்வேறு பட்ட இரசாயனப்பொருட்கள் உருவாகும். கசிப்பினை காச்சி வடிக்கும் பொழுது இந்த நச்சுப்பொருட்களும் எத்தனோல் உடன் சேர்ந்து வடிக்கப்படும். ஒவ்வொரு இரசாயன பொருட்களுக்கும் தனித்துவமான ஆவியாகும் வெப்பநிலை உண்டு. தொழில் முறையில் (industrial) மதுபானத்தினை உருவாக்கும் பொழுது உரிய வெப்பநிலை பேணப்பட்டு மெத்தனோல் உருவாகும் மதுபானத்துடன் கலப்பது தடுக்கப்படும். மேலும் உருவாகிய மதுபானமானது ஒன்று அல்லது இரு தடவைகள் வடிகட்டப்படும்.

ஆனால் உள்ளூரில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு  உற்பத்தி செய்யப்படும் பொழுது இவ்வாறு உரிய வெப்பநிலையினை பேணுவது ஒன்றிற்கு இரண்டு தடவை வடிகட்டுவதும் சாத்தியம் அற்றது. இதனால் தான் கசிப்பில் அதிக அளவு மெத்தனோல் உள்ளது.

உண்மையில் மெத்தனோல் ஆனது குறைந்தளவு நச்சுத்தண்மை உடையது ஆனால் அது எமது உடலில் அழிவடையும் பொழுது உருவாகும் பொருட்களான formic acid மற்றும் formaldehyde என்பவைதான் மிக்க நச்சுத்தன்மையனவை. நாம் 15 மில்லி லிட்டர் என்ற மிகச்சிறிதளவு மெத்தனோல் இணை அருந்தினாலே மரணம் சம்பவிக்கும்.

இவை தான் மனித உரிழப்புக்குக்கு காரணமாக அமைகின்றன. மேலும் மனிதனில் மெத்தனோல் நஞ்சாதல் நடைபெறும் பொழுது பார்வை குறைதல், அறிவு குறைதல், வாந்தி மற்றும் வயிற்று நோ என்பன ஏற்படும். இக்குணம் குறிகள் போதையில் ஏற்பட்டது என்று நினைத்து மக்கள் தாமதமாக வைத்திய சாலையினை நாடுவர் இதன்காரணமாக அதிக அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

அண்மைய காலங்களில் அதிகரிக்கப்படும் மதுபானங்களின் விலையும், பொலிஸாரின் மெத்தனமான போக்கும், நீதிமன்றங்களில் விதிக்கப்படும் குறைந்தளவானான தண்டனை போன்றவற்றினால்  கசிப்பு உற்பத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் என்றும் இல்லாதவாறு அதிகரித்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் இவ்வகையான மரணங்களை நாம் எதிர்பாக்கலாம்.
நன்றி

நாய் இறைச்சி கண்டறிவது எவ்வாறு??

அண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு பகுதியில் இரு நாய்கள் கொல்லப்பட்டு தோலுரிக்கப்பட்ட நிலையில் அவற்றின் எச்சங்கள் மீட்கப்பட்டன. இது குறித்து பரவலான சந்தேகங்கள் எழுந்தன அதாவது குறித்த நாய்களின் இறைச்சி புதுவருட கொண்டாட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட வேறு இறைச்சிகளுடன் கலக்கப்பட்டு விற்பனை செய்பட்டிருக்கலாம் என்று. இது குறித்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதனை ஒத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் 2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றது. அதாவது பசுக்கன்று ஒன்று இறைச்சி ஆக்கப்பட்டுள்ளது என வதந்தியான தகவல் பரவியத்தினால் ஏற்பட்ட கலவரத்தில் ஒருசிலர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் துண்டுகளாக்கப்பட்ட இறைச்சியின் தோற்ற இயல்புகளை வைத்து இது இன்ன மிருகத்தின் இறைச்சி என்று கண்டு பிடிப்பது மிகமிக கடினம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இறைச்சி போன்றவற்றிற்கு DNA பரிசோதனை செய்யப்படும். மேலே விபரிக்கப்பட்ட இந்தியாவில் நடந்த சம்பவத்தில் குறித்த இறைச்சி மாதிரிகள் DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு அது ஆட்டின் இறைச்சி என நிரூபிக்கபட்டது.

ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் அல்லது இதனை ஒத்த சம்பவங்கள்  நிகழ்வது அதிகம். அதாவது தடைவிதிக்கப்பட்ட, அரிதான விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடல், உறுப்புக்களுக்காக விலங்குகளை கொல்லல் முக்கியமாக கொம்பிற்காக காண்டா மிருகம் (Rhino), செதில்களுக்காக எறும்பு தின்னிகள் (Pangolins) போன்றன சட்ட விரோதமான முறையில் கொல்லப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேட்டைகாரர்கள் அல்லது கடத்தல் காரர்கள் அவ்விலங்குகளின் இறைச்சிகளை சிறிய துண்டுகளாகவே கடத்துவார்கள் அல்லது காண்ட மிருக கொம்பு /எறும்பு தின்னியின் செதில் போன்றவற்றினை சிறு துகள்களாக அல்லது பவுடர் ஆகவே கடத்துவார்கள். ஏனெனில் இலகுவாக இனம் காண்பதினை தடுப்பதன் மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்ப ஆகும். மேலும் இவ்வாறன சட்ட விரோத செயற்பாடுகளில் கோடிக்கணக்கான பணம் புரளும் என்பது வெளிப்படையான விடயம்.

எனவேதான் மேற்குறித்த நாடுகளில் இவ்வாறன விலங்கு எச்சங்களை DNA பரிசோதனை செய்து அது எந்த விலங்கு, எந்த இனத்திற்கு உரியது போன்ற (உதாரணம் கறுப்பு காண்டா மிருகம், வெள்ளை காண்டா மிருகம், இந்திய காண்டா மிருகம்) போன்ற தகவலைகளை எல்லாம் கண்டு பிடித்து, தப்பிக்க முடியாதபடி சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குகின்றனர்.

RhODIS, அல்லது காண்டாமிருக DNA குறியீட்டு அமைப்பு என்பது  தனிப்பட்ட காண்டாமிருகங்களை விவரக்குறிப்பு செய்வதன் மூலம் காண்டாமிருக வேட்டையாடுதலை எதிர்த்துப் போராடுவதற்காக பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தின் கால்நடை மரபியல் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தடயவியல் DNA தரவுத்தளமாகும். சட்டவிரோத வர்த்தகம் மற்றும் வேட்டையாடுதல் வழக்குகளில் உயிரியல் மாதிரிகளிலிருந்து இனங்கள், தோற்றம் மற்றும் தனிநபர்களை அடையாளம் காண்பதன் மூலம் வனவிலங்கு தடயவியலில் DNA  சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. பதப்படுத்தப்பட்ட பொருட்கள், கருக்கள் அல்லது சிதைந்த எச்சங்கள் போன்ற உருவவியல் அடையாளம் தோல்வியடையும் போது இது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை வழங்குகிறது. இலங்கையில் மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ இவ்வாறன DNA தரவுத்தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி

மறியல் மரணங்கள்

ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுகிறார் அல்லது சிறை வைக்கப்படுகின்றார் என்றால் அவரது நலனுக்கும் பாதுகாப்புக்கும் சிறைத்துறை மற்றும் நீதி அமைச்சு உட்பட்ட நீதித்துறை பொறுப்பாகின்றது. இலங்கையில் பொதுவாகவே பொறுப்புக் கூறல் விவகாரம் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்பதால் சிறைத் துறையிலும் கைதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறைத் துறையோ நீதித் துறையோ நீதி அமைச்சோ பொறுப்பேற்பதில்லை. இந்தப் பின்புலத்தில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாத காரணத்தால் சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ – 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் நவம்பர் 2024 வரை இலங்கை சிறைகளில் குறைந்தது 168 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 155 பேர் நோய்களாலும், ஒன்பது பேர் தற்கொலையாலும் இரண்டு பேர் சிறைச்சாலைகளில் தாக்குதல்களாலும், இரண்டு பேர் சிறைச்சாலைகளில் விபத்துகளாலும் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில் சிறைச்சாலைகளில் பராமரிப்பு வசதிகளில் கடுமையான பலவீனம் இருப்பதாகவும் பெரும்பாலான இறப்புகள் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ நிலைமைகள் மற்றும் போதுமான மருத்துவ தலையீடு இல்லாததால் ஏற்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் கைதிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வலுக்கட்டாயமாக உட்கொள்வதும், அடிப்படை மருத்துவ சேவையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதும் இந்த நிலைமையை தீவிரமாக அதிகரிக்க வழிவகுத்துள்ளதாகவும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த மாதமும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் பொழுது சாவடைந்தார் மேலும் அதே பகுதியினை சேர்ந்த ஒருவர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக சகோதரியினால் கூறப்படும்  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு என்ன நடந்தது என்ற நிலவரம் இன்னமும் வெளிவரவில்லை.

“மறியல் சாலை மரணங்கள் (custodial deaths) ” என்பது ஒருவர் கைது செய்யப்பட்ட கணத்தில் இருந்து விடுதலையாகும் வரை சம்பவிக்கலாம்.  இலங்கையின் சட்ட திட்டங்களின் பிரகாரம் இவ்வாறான  மறியல்களில் நடைபெறும் சகல மரணங்களும் மஜிஸ்திரேட் நீதவானினால் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உடலங்கள் உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். எனவே தான்  சட்ட வைத்திய அதிகாரிகள் இவ்வாறு நடைபெறும் மறியல் மரணங்களை பற்றிய விசாரணைகளில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

மேற்குறித்த அறிக்கையின் பிரகாரம் பெரும்பாலான மரணங்கள் இயற்கை நோய்களால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒருவர் இவ்வாறான மறியல்களில் இருக்கும் பொழுது ஏற்படும் மன அழுத்தம், போதிய சிகிச்சை வசதி இன்மை… போன்ற பல்வேறு காரணங்களினால் அவருக்கு ஏற்கனவே இருக்கும் இயற்கை நோய் நிலைமை அல்லது இனம் காணப்படாமல் இருந்த நோய் நிலைமை அதிகரித்து மரணத்தினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறு மறியல் சாலைகளில் இருக்கும் பொழுது டெங்கு, கொரோனா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டும் இயற்கை மரணம் சம்பவித்து இருக்கின்றது.

மேலும் தற்போதைய காலப்பகுதியில் போதைப்பொருள் சார்ந்த குற்றங்களுக்காக கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை என்றும்மில்லாதவாறு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக போதைப்பொருள் அல்லது மதுபானத்திற்கு அடிமையானவர்கள் மறியலில் வைக்கப்படும் பொழுது அவர்களினால் போதைப்பொருள் அல்லது மதுபானத்தினை நுகரமுடியாமல் போகும் அதன்காரணமாக Delirium எனப்படும் சித்த பிரமை உருவாகும். இந்த நோய் நிலைமை உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசர சிகிச்சை நிலையாகும். தாமதமாகும் பொழுது மரணத்தினை ஏற்படுத்தும். மேலும் இவ்வாறான நோய் நிலைமையின் பொழுது ஏற்படும் நடுக்கம், பதட்டம், சமநிலை குழப்பம் என்பன காரணமாக நிலத்தில் வீழ்வதன் காரணமாக கூட மரணம் சம்பவிக்கலாம். மேலும் இவ்வாறானவர்களை கைது செய்யும் பொழுது அவர்கள் பலசந்தர்ப்பங்களில் தமது உடைமையில் மறைத்து வைத்திருக்கும் போதைப்பொருளினை பொலிஸாருக்கு தெரியாமல் விழுங்கிய நிலையில் அது அதிகளவு நஞ்சாதலினை ஏற்படுத்தி மரணத்தினை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கைது மற்றும் மறியல் என்பவற்றினால் ஏற்படும் அதீத மன அழுத்தம் காரணமாக பலர் சிறைச்சாலை மற்றும் போலீஸ் நிலையங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். உண்மையில் இவ்வாறன தற்கொலை மரணங்களை தடுப்பது என்பது சவால் மிக்கது. பல சந்தர்ப்பங்களில் தமது சேட்டினை கழற்றி கதவின் கைப்பிடியில் தூங்கிய சம்பவங்கள் நிறையவே உண்டு.

சில சந்தர்ப்பங்களில் போலீஸ் மற்றும் சிறைச்சாலை போன்றவற்றில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள், சித்திரைவதைகள் காரணமாகவும் இறப்பு நிகழ்ந்துள்ளது எனவே மறியல் மரணங்கள் நிச்சயமாக விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட வேண்டும் அத்துடன் இவ்வாறான மரணங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும்.

நன்றி

“விடுமுறை இருதய வருத்தம்” என்றால் என்ன?

வருட இறுதியில் பொதுவாக நீண்ட விடுமுறை நாட்களில் குறைந்த ஆளணியுடன் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வேலைசெய்யும் பொழுது அதிகளவு நான் அவதானித்த மரணம் Holiday heart syndrome எனப்படும் நோய் நிலையினால் ஏற்படும் மரணங்கள். இவை குறிப்பாக வருட இறுதியில் நடைபெறும் மதுபான விருந்துகளுடன் தொடர்புபட்டவை.  Holiday heart syndrome (ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம்) என்பது அதிக அளவு மது அருந்திய (binge drinking) பிறகு 12 தொடக்கம் 36 மணித்தியாலங்களில்  ஏற்படும் இதய துடிப்பு சீர்குலைவு (atrial fibrillation) நிலையாகும், இது பெரும்பாலும் விடுமுறை அல்லது பண்டிகை காலங்களில் தோன்றுவதால் இப்படி அழைக்கப்படுகிறது. முக்கியமாக மது அருந்தி போதையின் உச்சத்தில் இந்த நோய் நிலைமை வருவதில்லை. மேலும் நெஞ்சு படபடப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் பொழுது உறவினர்கள் மது அருந்தியமையால் தான் இவ்வாறு ஏற்படுகின்றது என்பதினை அறிவதில்லை இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்க காலதாமதம் ஏற்படுகின்றது அதனால் மரணம் சம்பவிக்கின்றது.

ஏற்படுவதற்கான காரணங்கள்

அதிக மது உட்கொள்ளல் இதய செல்களின் எலக்ட்ரோலைட்டுகளை மாற்றுவதன் மூலமும், கேட்டகோலமைன்களை அதிகரிப்பதன் மூலமும், இதய தசை மின் சமிக்ஞைகளை அதாவது கணத்தாக்கம் கடத்துதலை (cardiac conduction ) நேரடியாகப் பாதிப்பதன் மூலமும் இதய மின் இயற்பியலை (cardiac electrophysiology) சீர்குலைக்கிறது. எப்போதாவது மது அருந்துபவர்கள் கூட இந்த ஆபத்தை எதிர்கொள்கின்றனர், மது அருந்திய 12-36 மணி நேரத்திற்குப் பிறகு அறிகுறிகள் உச்சத்தை அடைகின்றன. நீரிழப்பு, அதிகமாக சாப்பிடுவது, அதிகமாக உப்பு உட்கொள்ளல், கொழுப்பு உணவுகள், தூக்கமின்மை மற்றும் குளிர் போன்ற காரணிகள் பண்டிகை காலங்களில் இந்த பாதிப்பை அதிகரிக்கின்றன.

அறிகுறிகள்

அதிகளவு மது அருந்திய பின்னர் இதய படபடப்பு, மூச்சுத்திணறல், சோர்வு, மார்பு வலி, மயக்கம் போன்றவை 12-36 மணி நேரத்தில் தோன்றும்; கடுமையான நிலைகளில் ஸ்ட்ரோக் அபாயம் உள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள்

ஹாலிடே ஹார்ட் சிண்ட்ரோம் தடுப்புக்கு முக்கிய நடவடிக்கைகள்

  • விடுமுறை காலங்களில் ஒரே நேரத்தில் அதிக அளவு மது அருந்துவதை தவிர்க்கவும்
  • ஒரே அடியாக மதுவினை தொடர்ச்சியாக அருந்தாமல் நேர இடைவெளிகளில் அருந்த வேண்டும் மேலும் அதிகளவு நீர் அருந்தல் வேண்டும்.
  • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் மருந்துகளை தவறாமல் சாப்பிடவும்.
  • அறிகுறிகள் (படபடப்பு, மூச்சுத்திணறல்) தோன்றினால் உடன் மருத்துவரை அணுகவும்.
  • உப்பு, கொழுப்பு உணவுகளை குறைத்து, பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்ளவும்.
  • உடற்பயிற்சி தொடர்ந்து செய்து, தூக்கத்தை 7-8 மணி நேரம் பெறவும்.
  • புகைப்பிடிப்பை முற்றிலும் நிறுத்தவும்

இவ்வாறான மரணங்களில் உடற் கூராய்வு பரிசோதனைகளின் போதுள்ள முக்கிய சவால் இரத்தத்தில் உள்ள மதுபானத்தின் அளவு மற்றும் ஏனைய முடிவுகள் யாவும் சாதாரண அளவில் அல்லது இல்லாமல் இருக்கும்.

நன்றி

அதீத செயற்கைவழி விவசாயமும்  நாட்பட்டசிறுநீரக செயலிழப்பு நோயும்

வடமாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்நோய் காரணமாக கணிசமானோர் பாதிக்கப்ட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக மல்லாவி, ஒட்டிசுட்டான் மற்றும் மணலாறு (வெலிஓயா ) பிரதேசங்களில் அதிகளவான நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் உள்ளனர். இவ்வாறே இலங்கையின் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டைகளின் ஒரு சில பகுதிகளிலும் இந்நோயானது கடந்த சில வருடங்களில் வேகமாக பரவி அங்கு வாழும் மக்களை குறிப்பாக விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பாமர மக்களை பாதித்து வருகின்றது.   இந்நோய் காரணமாக 15% வடமத்திய மாகாண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களாகிய எம்மையும் இக்கொடிய சிறுநீரக செயலிழப்பு நோய் வெகுவாக பாதிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

1. சிறுநீரக செயலிழப்பின் இருவேறு வடிவங்களும் எவை?

சடுதியான சிறுநீரக செயலிழப்பு (Acute Kidney Injury) – குருதி இழப்பு, நஞ்சினை உட்கொள்ளல், அதிக வயிற்றோட்டம்… போன்ற பல்வேறு காரணங்களினால் ஒருசில மணித்தியாலங்களில் தொடங்கி ஒரு சிலநாட்கள் வரையான காலப்பகுதியில் சிறுநீரகத்தின் தொழில்பாடானது முற்றாக நிறுத்தப்படல் சடுதியான சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு (Chronic Kidney Disease) –    நீரிழிவு, உயர் குருதி அழுத்தம்… போன்ற காரணிகளினால் எமது சிறுநீரகத்தின் செயற்பாடானது வருடக்கணக்கில் சிறிது சிறிதாக குறைந்து முற்றாக அற்றுப்போதல் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு எனப்படும்.

2. அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய்  என்றால்  என்ன?

அறியப்படாத காரணவியல் கொண்ட நாட்பட்ட சிறுநீரக நோய் (CKDu – Chronic kidney disease of unknown etiology ) என்பது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது பிற தெளிவான காரணங்கள் இன்றி ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக நோயின் ஒரு வடிவமாகும். இந்த நோய் மெதுவாக முன்னேறி, பின்னர் சிறுநீரகத்தில் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த நோய் அதிகமாக விவசாயிகளில் ஏற்படுவதன் காரணமாக   chronic interstitial nephritis in agricultural communities (CINAC) என்றும் இந்த நோய் அழைக்கப்படும்.

3. இந்நோயின் தாக்கம் பற்றிய சில புள்ளி விபரங்கள்

இந்நோயானது முதன்முதலாக 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்ப காலப்பகுதிகளில் மதவாச்சி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்றுவரைக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 15% மக்கள் தொகையினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 10,000 வரையான மக்கள் இந்நோயிற்கான சிகிச்சையை தற்போழது பெற்ற வண்ணம் உள்ளனர்.

4. இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள் யார்?

இந்நோயானது ஏற்படுவதற்கு அச்சூழலில் காணப்படும்  பல்வேறுபட்ட காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. முக்கியமாக நீர், நிலம், ஆகியன மாசடைதல் ஆகும்.

இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகும் ஆபத்திற்கு கூடியவர்கள்

•          இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும் மக்கள்.

•          விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடும் கூலித்தொழிலாளர்கள்

•          சமூக பொருளாதர நிலைகளில் பின்தங்கி உள்ளோர்கள்.

•          குடிப்பதற்காக நிலத்தடி நீரினை கிணறு மூலம் பெற்றுக் கொள்ளும் மக்கள்

•          கடினத்தன்மையான (Hardness of water) நீரினை அருந்தும் மக்கள்.

•          கசிப்பு போன்ற சட்ட விரோத மதுபானங்களை அருந்தும் ஆண்கள்.

•          இந்நோயானது  பொதுவாக 55-60 வயதுகளில் வெளிக்காட்ட ஆரம்பிக்கும்.

•          பெண்களை காட்டிலும் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

•          ஆண்: பெண் விகிதசமம் 3:1 ஆகும்.

•          இந்நோய் பரவிய இடங்களில் பயிரிடப்படும் புகையிலை, மற்றும் மரக்கறிவகைகளை பயன்படுத்தும் மக்கள். 

5. விவசாயிகளுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும்  நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்?

1.         ஆசனிக்கு, கட்மியம், ஈயம் போன்ற பார உலோகங்கள் மனித உடலை அடைதல்

மனித உடலிற்கு தீங்கு பயற்கும் மேற்கூறப்பட்ட உலோகங்கள் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக மனித உடலை அடைகின்றன.

அ) பயிர்களிற்குப் பாவிக்கப்படும் அசேதன வளமாக்கிகள் மூலம்

குறிப்பாக பொசுபேற்று வகை வளமாக்கிகள் பார உலோகங்களான கட்மியம், ஆசனிக்கு, ஈயம் என்பவற்றை சிறிதளவில் கொண்டுள்ளன. எல்லா வகையான பொசுபரேற்று வளமாக்கிகளும் (Single Super Phosphate –SSP, Triple Super Phosphate – TSP, Epawella phosphate) ஆசனிக்கு என்ற உலோகத்தை சிறிதளவு கொண்டுள்ளது. இவ்வகை வளமாக்கிகளை அளவிற்கு அதிகமாக பாவிக்கும் போது மண்ணை அடையும் அவ்வுலோகம் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும். அங்கு நீரின் கடினத்தன்மைக்கு பொறுப்பான கல்சியம் மற்றும் மக்னீசியம் என்பவற்றுடன் தாக்கமடைந்து நீரில் கரையும் தன்மைக்கு மாற்றமடையும் பின்பு குடிக்கும் நீரின் ஊடாக உடலை அடையும். ஆசனிக்கு உலோகமானது உடலில் செறிவடையும் போது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆ) உணவுச்சங்கிலி மூலம்

நீர் நிலைகளை அடைந்த ஆசனிக்கு கல்சியம் போன்ற பார உலோகங்கள் தண்ணீர் மீன்கள் மற்றும் தாமரைக்கிழங்கு போன்றவற்றினால் செறிவடையும் அவற்றை மனிதர்கள் உண்ணும் போது அவை மனித உடலை அடையும்.

2.  அளவிற்கு அதிகமான பூச்சிகொல்லிகளைப் பாவித்தல்

சிலவகைகளான பூச்சி கொல்லிகளை விசுறும் போது (neonicotinoid) அவை நேரடியாக பழங்கள் மரக்கறிவகைகள் தானியங்களுடன் இணைந்து கொள்கின்றது. இவ்வுணவுகளை உண்ணும் மனிதர்களின் உடலில் செறிவடைந்து அவர்களின் சிறுநீரகத்தின் தொழிற்பாட்டைப் பாதிக்கும்.

குளோரோபிரிவோஸ் (Chloropyrifos) என்ற பூச்சிகொல்லியானது நேரடியாகவே சிறுநீரகத்தைப் பாதித்து இறப்பை ஏற்படுத்தும். உலக சுகாதாரநிறுவனம் நடத்திய ஆய்வுகளின் போது சிறுநீரக செயலிழப்பிற்கு உள்ளானவர்களின் 31 வீதமானவர்களின் சிறுநீர் மாதிரியில் பூச்சிகொல்லி மருந்துகள் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் காணப்பட்டது.

3.  களை கொல்லிகள் (Herbicide) இனை மிதமிஞ்சி பாவிப்பதால்

புரோப்பனில் (Propanil) போன்ற களை கொல்லிகளை விசுறும்போது அவை தோலின் ஊடாகவோ சுவாசத்தின் ஊடாகவோ அல்லது உணவுச்சங்கில் ஊடாகவோ மனிதஉடலை அடைந்து நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகின்றது.

முக்கியமாக பயிர்ச்செய்கைக்கு முன்பாக மண்ணை பதப்படுத்தும் போது விசிறப்படும் கிளைபொசேற் (Glyphosate) எனும் களை கொல்லியானது ஏனைய வளமாக்கிகள் மூலம் மண்ணை அடையும் ஆசனிக்கு கட்மியம் போன்ற பார உலோகங்களை மண்ணுடன் நிலையாகப் பிணைத்து வைத்திருந்து நீர்நிலைகளை சென்றடைய உதவுகின்றது.

4.  நீரின் கடினத் தன்மை (Hardness of Water)

உலகசுகாதார நிறுவனத்தின் ஆராச்சிகளின்படி அதிகளவு கடினத்தன்மை உள்ள நிலத்தடி நீரினை (>500mg/L) பாவிக்கும் பிரதேச மக்கள் அதிகளவில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கான காரணம் என்னவெனில் நீரிலுள்ள சிறுநீரகத்தைப் பாதிக்கும் நச்சுத்தன்மைப் பதார்த்தங்களின் அளவு நீரின் கடினத் தன்மைக்கு நேர்விகித சமனாகக் காணப்படுகிறது

மேற்கூறிய காரணிகளைத் தவிர பின்வரும் காரணிகளும் விவசாயிகளில் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயை ஏற்படுத்துகின்றன.

•          கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை

•          உள்நாட்டில் அதாவது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் பாதித்த பிரதேசங்களில் பயிரிடப்பட்ட புகையிலையின் பாவனை

•          அளவுக்கதிகமான வலிநோய் நிவாரணிப் பாவனை முக்கியமாக புரூவன் (Brufen)   போன்ற (NSAIDs) மருந்துகளின் பாவனை.

7. வடமாகாணமக்களாகிய நாம் இந்நோயினையிட்டு ஏன் கவலைப்பட வேண்டும்?

1. வடமாகாணத்தின் பெருமளவு நீர்வளம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று நிலத்தடி நீர்வளமாக காணப்படுகின்றமையும், நீரானது கடினத்தன்மையுள்ளதாக காணப்படுகின்றமையாகும். மற்றும் ஏறக்குறைய பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரினை தமது அன்றாடத் தேவைக்காகப் பாவிக்கின்றனர். மற்றும் நீரின் கடினத்தன்மை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபடுவதோடு நீரின் கடினத்தன்மையானது விவசாயிகளில் ஏற்படும் நாடப்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு நேர்விகித சமனாகவுள்ளது.

2.  வடமாகாணத்தின் பெருமளவு நிலம் பாதிக்கப்பட்ட ஏனைய பிரதேசங்களைப் போன்று உலர்வலயத்தில் காணப்படுகின்றமையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனோடு சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள்.

3. அண்மைக்காலமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக பொருளாதாரத்தடை நீக்கப்பட்ட பின்னர் வடக்கிலுள்ள விவசாயப் பெருமக்கள் அளவுக்கதிகமான அசேதனப் பசளைகள், பீடைகொல்லி மற்றும் களைகொல்லிகளை பாவித்து வருகின்றனர் யுத்த காலத்தில் 30வருட காலமாக இப்பாவனை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அல்லது முற்றாக இல்லாமல் இருந்தது. 1977ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாவும் மகாவலித் திட்டம் காரணமாகவும் வடமத்திய மாகாணத்தில் உரப்பாவனை அளவுக்கதிகமாக அதிகரித்ததன் விளைவே 1990ம் ஆண்டு மதவாச்சிப் பகுதியில் முதலாவதாக விவசாயி ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. யுத்த காலத்தில் இருந்த மட்டுப்படுத்தப்பட்ட உரப்பாவனை காரணமாகவே வடமாகாண மக்கள் இன்னமும் இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளாகவில்லை, ஆனால் வவுனியாவின் தென்பகுதியில் உள்ள சில பிரதேசங்களில் இந்நோய் பரவியுள்ளது இனங்காணப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவாக விளங்குவது எனில் கடந்த 30 வருடங்களாக நாம் யுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விவசாய இரசாயனப் பொருட்களை பாவித்த காரணத்தினாலேயே நாம் இன்னமும் பாதிப்படையவில்லை, மற்றும் இந்நோயானது 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பே வெளித்தெரியவரும். ஏன் எனில் பார உலோகங்களான ஆசனிக்கு, கட்சியம் போன்றன மெதுவான வீதத்திலேயே உடலில் சேர்கின்றமையும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் இறுதிக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படுகின்றமையும் ஆகும்.

4. இன்றைய வடமாகாண சனத்தொகையில் பெரும்பான்மையினர் பெண்கள் ஆனால் விவசாயிகளில் ஏற்படும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பானது பெரும்பாலும் பெண்களைவிட ஆண்களையே பாதிக்கும். குறிப்பாக 50 தொடக்கம் 60 வயதில் உள்ளவர்களை பாதிக்கும். ஏற்கனவே போரினால் ஆண்களை அதிகளவில் இளந்துள்ள வடமாகாணம் இன்று நடைபெறும் அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை காரணமாக எதிர்வரும் 12 தொடக்கம் 15 வருடங்களின் பின்பு குறிப்பாக உழைக்கும் குடும்பத் தலைவர்களின் உயிரிழப்பை அல்லது நோய்வாய்ப்பட்ட இயலாத நிலமையை எதிர்கொள்ள நேரிடும். இதன் காரணமாக குடும்பங்களின் பொருளாதாரநிலை மேலும் சரிவடையும்.

5.    வடமாகாணத்தில் தற்பொழுது கசிப்புப் போன்ற சட்டவிரோத மதுபாவனை அதிகரித்துள்ளது. அத்தோடு வடமாகாணத்தில் பலபிரதேசங்களில் புகையிலை பயிரிடப்பட்டு நுகரப்படுகின்றது. இதன்போது பூச்சி கொல்லிகள் புகையிலையின் மீது நேரடியாக விசிறப்பட்டு கழுவப்படாமல்  உடலை  அடைகின்றது. இவ்விரு காரணிகளும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பை விவசாயிகளில் ஏற்படுத்தும் சாத்தியக் கூறு அதிகம்.

6. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவடடங்களில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் உளச் சோர்வு (Depression) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உடல் உபாதைகளிற்காக புரூவன் (Brufen) போன்ற வலி நிவாரணிகளை (NSAIDs) வைத்திய ஆலோசனை இன்றி பாவிக்கின்றனர். இம்மாத்திரைகள் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பிற்கு வித்திடும்.

7. வடமத்திய மாகாணத்தில் உள்ள மக்கள் தான் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள், நெல், சோளம், நன்னீர் மீன்கள் போன்றவற்றில் இந்நோயினை ஏற்படுத்தும் ஆசனிக்கு மற்றும் கட்மியம் போன்ற பார உலோகங்கள் நேரடியாகவோ அல்லது உணவுச் சங்கிலி மூலமாகவோ நிச்சயம் செறிந்து இருக்கும்.

உலக சுகாதமார நிறுவனத்தின் ஆராய்ச்சி முடிவுகளின்படி வட மத்திய மாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்கள் (திலாப்பியா) தாமரைக்கிழங்கு, சிலவகை அரிசி என்பவற்றில் இப்பார உலோகங்கள் காணப்பட்டள்ளது. எனவே வடமத்திய, வடமேல் மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் ஏனைய மரக்கறிவகைகள் என்பவற்றில் இப்பார உலோகங்கள் அல்லது பூச்சி கொல்லிகள் காணப்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

8. இந்நோயின் பாதிப்பு, வராமல் தடுப்பதற்குரிய வழிமுறைகள்

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டு விட்டால் மருத்துவ  சிகிச்சைகளின் மூலம் இந்நோயினை முற்றாக குணமாக்க முடியாது. சிறுநீரகத்தின் செயற்பாடு செயலிழக்கும் வீதத்தினை குறைக்கலாம். செலவுமிக்க சிறுநீரக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சையையே இந்நோயினை முற்றுமுழுதாக குணமாக்கவல்லது. இக்காரணங்களினால் இந்நோயினை வருமுன் காப்பதே சிறந்தது ஆகும். இந்நோயில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவையாவன.

1)   தேவையான அளவில் அசேதன பசளைகள், பீடைகொல்லிகள், மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவித்தல் அல்லது முற்றாக பாவித்தலை தடைசெய்தல்.

2)   அசேதனப் பசளைகளிற்கு பதிலாக இயற்கயான பசளைகளை பாவித்தல்.

3) இரசாயன பீடைகொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லிகள் என்பவற்றை பாவிப்பதற்க பதிலாக இயற்கையான முறைகள் மூலம் அல்லது உயரியல் கட்டுப்பாட்டு முறை மூலம் அவற்றை கட்டுப்படுத்தல்.

4) விவசாயிகளுக்கு போதிய அறிவுட்டற் செயற்பாடுகளை செய்தல். குறிப்பாக அசேதன பசளைகளை அளவோடு பாவித்தல், பூச்சி நாசினிகளை விசிறும்போது கையுறை, காலணி, முகமூடி என்பவற்றை அணிதல்.

5)         புகையிலை மற்றும் கசிப்பு பாவனையை கட்டுப்படுத்தல்.

6) உள்ளுரில் இயற்கை பசளைகளை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கறிவகைகள் மற்றும் பழவகைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவித்தல்.

9. முக்கிய கேள்வி ஏன் ஒருசிலர் மட்டும் பாதிக்கப்படுகின்றனர்?
உதாரணமாக ஒரு குடும்பத்தினர் ஆண்டாண்டு காலம் ஒரு இடத்தில் வசித்து தமது கிணற்று நீரினை பருகும் பொழுது ஏன் அக்குடும்பத்தில் ஒருவர் மட்டும் இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நாட்பட்ட சிறுநீரக செயலிப்பிற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்த ஒரு காரணி மட்டும் தான் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினை உருவாக்கியது என்று திட்ட வட்டமாக கூறமுடியாது. உதாரணமாக அதிக நேரம் வெயிலில் இருக்கின்ற தன்மை, பிறப்பு நிறை குறைவாக இருக்கின்றமை, பாரம்பரியம், சிறுநீரக பாதிப்பினை ஏற்படுத்தும் மருந்துகளின் பாவனை, சிறுவயதில் அடிக்கடி ஏற்படும் கிருமி தொற்றுக்கள் … என பல்வேறு தனிநபருக்குரிய காரணிகள் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு செயலிழப்பு நோய் ஏற்படுவதினை தீர்மானிக்கும்.

10. ஆறுதல் தரும் விடயம்
2017ம் ஆண்டு மேற்படி நோய் நிலவும் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நீர் வழங்கும் வசதிகள் மற்றும் எடுக்கப்பட்ட தடுப்பு வசதிகள் காரணமாக 2024ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் குறித்த நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் காரணமாக நோயாளர்களின் ஆயுட் காலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குறித்த நோயின் காரணமாக சிறுநீரகங்களின் செயற்பாடு குறித்த அளவு குறைந்த குறைந்த பின்னரே நாட்பட்ட சீறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் எம்மில் வெளித்தெரிய வரும் எனவே அவதானத்துடன் இருப்போம். வரும் முன் காப்போம்.

நன்றி

ஆபத்தான பயணங்கள்

உலக சுகாதார நிறுவனம் மோட்டார் சைக்கிள், ஓட்டோ போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்பவர்களை “பாதிக்கப்படக்கூடிய வீதி பயனாளர்கள் (vulnerable road users)” என்று வகைப்படுத்தியுள்ளது. இதன் அர்த்தம் மேற்குறித்த வாகனங்களில் பிரயானிப்போர் அல்லது அவற்றின் ஓட்டிகள் வீதி விபத்தின் பொழுது அதிகளவு காயமடைவதற்கு அல்லது மரணமடைவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனபதே ஆகும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது போக்குவரத்து கொள்கையில் மேற்குறித்த வாகனங்களின் பாவனையை தமது நாடுகளில் ஊக்குவிக்காது ஏனெனில் பாதிக்கப்படப்போவது தமது நாட்டு மக்கள் என்ற படியாலேயே ஆகும். முக்கியமாக மேற்குறித்த வாகனங்களை கொள்வனவு செய்ய, பாவிக்க தடை செய்யப்பட்டிருக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இலகுவில் பெறமுடியாது  அல்லது அதிகளவு வரி விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நிரந்தர போக்குவரத்து கொள்கை இல்லை மற்றும் வறிய நிலைமை காரணமாக மேற்குறித்த வாகனங்களின் இறக்குமதி மற்றும் பாவனை ஊக்குவிக்கப்டுகின்றது.    

நம்ம பெண்களில் பலருக்கு உள்ள பிரச்சனை மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் பிரயாணம் செய்யும் பொழுது எவ்வாறு இருந்து பயணிப்பது என்பதே அதாவது ஒருபக்கமாக கால்களினை போடுவதா அல்லது இருபக்கமுமாய் போடுவதா என்பதே. குட்டை பாவாடை மற்றும் சேலை  அணிப்பவர்களுக்கு இருபக்கமும் கால்களை போட்டவாறு பிரயாணிப்பது கடினமாக இருக்கலாம் . மேலும்  பெண்களில் பலர் தங்களின் மேற்கால் அல்லது தொடை  தெரிந்து விடும் என்பதற்காக கால்கள் இரண்டையும் ஒரே பக்கமாய் வைத்தே பிரயாணம் செய்கின்றனர். இது உண்மையில் ஆபத்தானது ஏனெனில் இவர்கள் சடுதியான பிரேக் பிரயோகத்தின் பொழுது மோட்டார் சைக்கிளில் இருந்து வீதியில் விழக்கூடிய ஆபத்துண்டு. பொதுவாகவே மோட்டார் சைக்கிள் இலகுவில் சமநிலை குழம்ப கூடியது அவ்வாறான நிலைகளில் மோட்டர் சைக்கிளின் பின்புறத்தில் ஒரே பக்கமாக கால்களினை வைத்திருக்கும் பிரயாணி இலகுவில் விழுந்து விடுவார்.  மேலும் அவ்வாறு எதிர்பாராத விதத்தில் விழும் பொழுது பாரதூரமான காயங்கள் ஏற்படலாம். சில வேளைகளில் எதிர்திசையில் வரும் வாகனம் வீழ்ந்த நபரின் மீது ஏறிச்செல்லலாம். 

சில இதுபற்றி இலங்கையின் மோட்டார் வாகன சட்டம் ஏதாவது சொல்கின்றதா?

 இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஓர் பிரயாணி மோட்டார் சைக்கிளில் கால்களை இருபக்கமும் வைத்தவாறே பிரயாணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கின்றது . தென்னிலங்கையில் பொதுவாக போக்குவரத்து பொலிஸார் இதனை கடுமையாகக் பார்த்துக் கொள்வர். ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொதுவாக இதனைக் கண்டு கொள்வதில்லை.

(Motor Traffic Act. Section 158: Pillion riding: The driver of a motor cycle which has no side-car attached thereto shall not carry more than one person on the cycle when it is used on a highway, and such person shall not be carried otherwise than sitting astride the cycle on a seat securely fixed thereto behind the driver’s seat.)

எனவே தகுந்த ஆடைகளை அணிந்து மோட்டார் சைக்கிளின் இருபக்கமும் கால்களை வைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதன் மூலம் மோட்டார் சைக்கிள் ஒட்டியின் உயிரையும் எமது உயிரையும் பாதுகாப்போம்.

நன்றி   

மரணத்திற்கு பின்னரான உடனடி தசை விறைப்பு

முந்திய காலங்களில் சண்டைகளின் பொழுது குதிரையில் சென்ற போர்விரனின் தலை துண்டிக்கப்பட்ட பொழுதும் குதிரையானது வெறும் வீரனின்  இறுக்கப்பற்றிய  தலையில்லா உடலலோடு இருப்பிடம் திரும்பியது போன்ற சம்பவங்கள் விபரிக்கப்பட்டிருக்கும் முக்கியமாக கிரேக்க மற்றும் மேலைத்தேச கதைகளில் இது குறிப்பிடப்பட்டிருக்கும் .  அவ்வாறே தமிழ் புராண கதைகளில் “தலையற்ற முண்டம் குதிரையுடன் திரும்பிய” கதை முக்கியமாக அரவானின் தன்பலி நிகழ்வுடன் தொடர்புடையது, இது மகாபாரதத்தின் தமிழ் மரபுக் விரிவாக்கமாகும். அரவான், அர்ஜுனனின் மகன் (உலுப்பியின் மகன் ), குருச்சேத்திரப் போருக்கு முன் காளிக்கு தலையைத் தானே வெட்டி பலியளித்தான். அவனது  தலை போரை முழுவதும் பார்த்தது, தலையற்ற உடல் குதிரையில் தானாக பாண்டவர் பாசறைக்கு திரும்பியது.

இலங்கையில் வடமுனையில் நடந்த போரின் பொழுது தலையில் காயமடைந்த நிலையில் சடுதியாக இறந்த வீரனின் உடலானது ஆயுதத்தினை இறுக்க பற்றியிருந்தது. இவ்வாறன  பல சம்பவங்கள் நடைபெற்ற நிலையில்,  பலருக்கு இச்சம்பவங்கள்  எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து விரிவான விளக்கம் இல்லை.

Cadaveric spasm (கடாவெரிக் ஸ்பாசம்) என்பது உயிரிழந்த உடனே ஏற்படுகின்ற தசை விறைப்பு  நிலையினை  குறிக்கிறது. அதாவது மரணம் நிகழ்ந்த அடுத்த கணமே தசைகள் கடுமையாக விறைப்படைவது. இது சாதாரண மரண விறைப்பு  (Rigor Mortis) ஏற்பட முன்பே ஏற்படுகின்றது . பின்வரும் சூழ்நிலைகளில் இது ஏற்படுகின்றது   கடுமையான உடல் முயற்சி , அதிக மன அழுத்தம் அதாவது  தீவிரமான உடல் ரீதியான போராட்டத்திற்குப் பின் ஏற்படும் திடீர்  மரணங்களில் இது காணப்படுகிறது. மேலும்  சடுதியாக ஒருசில வினாடிகளில் ஏற்படும் மரணங்களில் இது பொதுவாக காணப்படும்.

சட்ட மருத்துவ ரீதியில்  இது மிகவும் முக்கியமானது ஏனெனில் மிக அரிதாகவே  இந்த வகையான சம்பவங்கள் நடைபெறும். உதாரணமாக, தற்கொலை செய்துகொண்டவர் கையில் துப்பாக்கியையோ அல்லது நீரில் மூழ்கி இறந்தவர் அங்கிருந்த செடிகளையோ இறுக்கமாகப் பிடித்திருப்பது இதன் மூலமே நடக்கிறது. மேலும் இந்த சம்பவத்தினை செயற்கையாக எம்மால் உருவாக்க முடியாது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு நபர் இறக்கும் போது என்ன நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் அவரது தசைகள் உடனடியாக உறைந்து போவதே Cadaveric spasm ஆகும்.

நன்றி

இனி கணவனின் சம்மதம் தேவையில்லை!!!

மருத்துவ உலகில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொழுது நோயாளிகளிடத்திலிருந்து பல்வேறுவிதமான சம்மதங்கள் பெறப்படும். சில சந்தர்ப்பங்களில் நோயாளியின் வேண்டுகோளின் அடிப்படையில் குறித்த சிகிச்சையினை வழங்காது விடும்பொழுது கூட சம்மதம் பெறப்படும். சட்ட சிக்கல்களில் இருந்து சுகாதார துறை ஊழியர்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சம்மதம் முக்கியமானது ஆகும். நோயாளியின் உரிய சம்மதம் இல்லாமல் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் வைத்திய பரிசோதனைகள் சட்ட ரீதியில் தனிநபர் தாக்குதலாகவே கருதப்படும்.

பல சந்தர்ப்பங்களில் இலங்கை போன்ற கீழைத்தேச நாடுகளில் சிக்கலான சத்திர சிகிச்சைகள், நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை போன்றவற்றினை மேற்கொள்ளும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தும் சம்மதம் வேண்டப்படும் ஏனெனில் இலங்கை போன்ற நாடுகளில் குடும்பம் என்பது சமூகத்தில் ஓர் முக்கியமான கட்டமைப்பு ஆகும். மேலும் குறித்த நோயாளியினை வைத்தியசாலையில் இருந்து விடுவித்த உடன் குடும்ப உறுப்பினர்களே பாரமெடுத்து பராமரிப்பார்கள் மாறாக மேலைத்தேச நாடுகளில் தனிநபர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும் இதன் காரணமாக நோயாளி விரும்பும் பொழுது தான் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் நோயாளியின் நோய்நிலைமை, சிகிச்சை முறைகள் பற்றி அறிவிக்கப்படும். மேலும் மேலைத்தேச நாடுகளில் நோயாளிகளை குடும்ப உறுப்பினர்கள் பராமரிப்பது குறைவு.

இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் இதுவரை காலமும் கணவன் அல்லது மனைவிக்கு நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சையினை மேற்கொள்ளும் பொழுது கணவனாயின் மனைவிக்கும், மனைவியாயின் கணவனுக்கும் தெரியப்படுத்தி வைத்தியசாலையில் அவர்களின் சம்மதமும் வாங்கப்படுவதே வழமை. ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை வாசெக்டமி எனவும் பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சை LRT (Ligation and Recession of Tubes) எனவும் அழைக்கப்படுவது யாவரும் அறிந்தமையே.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுதார அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் இவ்வாறு நிரந்தர கருத்தடை சத்திர சிகிச்சைக்கிளை மேற்கொள்ளும் பொழுது வாழ்க்கை துணையின் சம்மதத்தினை அதாவது வாழ்க்கைத்துணையின் சம்மதத்தின் பொருட்டு அவர்களின் கையெழுத்தினை  பெறத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட முன்னர் சட்ட மா அதிபரின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை பெண்களின் உரிமைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என பெண்ணியல் வாதிகளினால் கூறப்படுகின்றது .

சுற்றறிக்கையின் எதிர்கால தாக்கம்

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தனிநபர் உரிமைகளினை அதாவது பெண்களின் உரிமைகளை விட குடும்பத்திற்கு சமூக, கலாச்சார மற்றும் சமய ரீதியில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே பல குடும்ப பெண்கள் எவ்வளவோ வேதனைகள், அவமானங்கள்… போன்றவற்றினை தாங்கி வாழ்ந்து வருகின்றனர். மேலைத்தேச நாடுகளில் “My Car My Petrol” என்று கூறுவார்கள் அதன் அர்த்தம் எனது கார் எனது பெற்றோல் அதாவது நான் உழைத்து வாங்கிய கார் மற்றும் பெற்றோல் நான் அதனை எவ்வாறும் பயன்படுத்துவேன் அல்லது பயன்படுத்தாமலும் விடுவேன். அதனை மற்றவர்கள் யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறு மேலைத்தேச நாடுகளில் தனிநபரின் உரிமைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு தனி நபரின் உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரணமாக குடும்ப அமைப்பு குறித்த நாடுகளில் சிதைவடைந்துள்ளது. இந்நிலையில் கண்முடித்தனமாக மேலை நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை கண்முடித்தனமாக பின்பற்ற தொடங்கினால் நிச்சயம் விபரீதமான சமூக விளைவுகள் ஏற்படும்.

குடும்ப திட்டமிடல் என்பது இலகுவாக சொல்வதானால் எத்தனை பிள்ளைகள் வேண்டும், பிள்ளைகளுக்கு இடையே எத்தனை வயது வித்தியாசம் விட வேண்டும் போன்ற விடயங்களே ஆகும். அதன் ஒரு பகுதியே தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை. குடும்ப திட்டமிடல் என்பது குடும்பத்தில் கணவனும் மனைவியும் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவு. இவ்வாறான ஓர் முக்கியமான விடயத்தில் தனி ஒருவர் தீர்மானம் எடுப்பது பிரச்சனையிலேயே முடியும்.  

நன்றி

பாம்பு கொலை செய்யுமா??

அண்மையில் தமிழ் நாட்டில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது. அது குறித்து தெரிய வருவதாவது திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என்ற 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் நெசவுத் தொழிலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வந்துள்ளனர்.


அக்டோபர் மாதம் 22ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்ததாக கூறி அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாம்பு கடித்து இறந்த கணேசன் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது 11 காப்பீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கணேசன் மீது மட்டும் கடந்த 6 மாதங்களில் ரூ.3 கோடி அளவுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த காப்பீட்டு நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது. அந்த புகாரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த தனிப்படை, கணேசனின் இரு மகன்களின் செல்போன் உரையாடல்கள் அவர்களின் தொடர்புகள் குறித்து தகவல்கள் சேகரித்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் வெளிவந்தன.

தந்தையை கொலை செய்ய சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கட்டுவிரியன் பாம்பை வைத்து கடிக்க வைப்பதற்கு ஒரு வாரம் முன்பாக அதே ஆட்களை வைத்து நாகப்பாம்பை கொண்டு வந்து கடிக்க வைத்துள்ளனர். ஆனாலும் அவர் பிழைத்துக் கொண்டதால் இந்த முறை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து இறப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சதி திட்டம் போட்டுள்ளனர். அதன்படி இரண்டாவது முறையாக கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை கொண்டு வந்து கழுத்து பகுதியில் கடிக்க வைத்து கணேசன் இறந்ததை உறுதி செய்துள்ளனர். இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இனி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் ஒருவர் பாம்பு அல்லது ஓர் ஏனைய விலங்கின் தாக்குதலினால் உயிர் இழப்பார் எனில் அவரது மரணம் இயற்கை அல்லாத மரணத்தினுள் அடங்குவதினாலும் சட்ட திட்டங்களின் (குற்றவியல் சட்ட கோர்வை) பிரகாரம் விலங்கின் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என்ற வகையில் கட்டாயம் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக பாம்பு கடித்தல் என்பது தவறுதலாகவே நடைபெறும் எனினும் விதிவிலக்காக ஒருசில சந்தர்ப்பத்தில் பாம்பு கொலை செய்யும் கருவியாகவும் தற்கொலை செய்து கொள்ளும் கருவியாகவும் பாவிக்கப் பட்டுள்ளது.
உடற் கூராய்வு பரிசோதனையின் பொழுது பாம்பு கடிப்பதினாலே ஏற்படும் அடையாளம் இருப்பதை கொண்டும் பாம்பின் விஷத்தினால் உடலின் அங்கங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டும் பாம்பு கடித்தமை உறுதிப்படுத்தப்படும். இலங்கையில் இறந்தவரின் இரத்தத்திதினை பரிசோதித்து பாம்பு கடித்தமையினை உறுதிப்படுத்தும் முறைமை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்த அடையாளம் தெளிவாக தெரியாது இதன் காரணமாகவும் இவ்வாறு இறந்தவரின் உடற் கூராய்வு பரிசோதனை சவால் மிக்கதாக அமையும்.
சில சந்தர்ப்பத்தில் உறவினர்கள் இறந்த பாம்பினையும் கொண்டுவருவார்கள், அத்தகைய சந்தர்ப்பத்தில் பாம்பின் கொட்டும் பற்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் உடலில் காணப்படும் காயத்தில் இருக்கும் பற்களின் அடையாளங்களுக்கு இடைப்பட்ட தூரத்தினையும் ஒப்பீடு செய்வதன் மூலம் கடித்த ஓரளவிற்கு பாம்பினை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.
சில சந்தர்ப்பங்களில் பாம்பு கடித்தவர்கள் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த மாரடைப்பு போன்ற இயற்கை நோய் நிலைமைகள் மோசமடைவதன் காரணமாகவும், பாம்பின் விஷத்தினை இல்லாமல் செய்வதற்காக கொடுக்கப்படும் மருந்தின் ஒவ்வாமை காரணமாகவும் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களில் யாருக்காவது பாம்பு கடித்து இறப்பு ஏற்பட்டால் நிச்சயம் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
முற்றும்