யாழ் மாவட்டத்திற்கு காற்று மாசுபடுத்தலினால் ஆபத்தா??

அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

11-11-2025 அன்றைய நிலவரம்

1.யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன?

 முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தினை  வந்தடைகின்றது. மேலும் இக்காலப்பகுதியில் நிலவவும் அதிகரித்த ஈரப்பதன் காரணமாக வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் குப்பைகளினை எரிப்பதினால் வரும் புகை என்பன வளிமண்டலத்தில் மேல் நோக்கி செல்லாமல் தரை மட்டத்தில் தங்குவதினால் மனிதர்கள் அதிகளவு மாசடைந்த காற்றினை சுவாசிக்க நேரிடுகின்றது.

2. வேறு என்ன காரணங்களினால் காற்று மாசடைகின்றது?

மேற்குறிய காரணங்கள் தவிர கட்டிட நிர்மாண பணிகளினாலும், வாகனங்கள் வீதியில் செல்லும் பொழுது வீதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் படிந்த தூசுக்கள் வளி மண்டலத்திற்கு வெளிக்கிளம்புவதினால் காற்று மாசுபடுகின்றது

3. கொழும்பு போன்ற நகரங்களில் காற்று மாசுபடுவதற்கான பிரதான காரணங்கள் என்ன?

பிரதானமாக வாகனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையே காரணம் ஆகும்

4. யாழில் தற்போது நிலவவும் அதிக மாசுப்பட்ட காற்று எவ்வாறு குறைவடையும்?

வட கீழ் பருவ காற்று முடிவடைந்து தென் மேல் பருவ காற்று (May to September) தொடங்கும் பொழுது இந்து சமுத்திரத்தில் இருந்து வரும் ஈரப்பதன் நிறைந்த காற்று இம்மாசுக்களை கழுவி செல்ல தற்பொழுது நிலவும் சூழ்நிலை மாறும். இடைப்பட்ட காலங்களில் உள்ளூரில் நிலவும் காற்று ஒட்டத்தினை  பொறுத்து காற்று மாசுபடல் இருக்கும்

 5. எவ்வாறான மாசுக்கள் இந்த மாசடைந்த காற்றில் இருக்கும்?

வாகன மற்றும் தொழில் சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளில் இருக்கும் கார்பன் துகள்கள், கார்பன் மோனோக்ஸ்சைடு, கந்தகம், நைட்ரோஜென் ஓட்ஸ்சைட், ஈயம், பிளாஸ்ட்டிக் துகள்கள் …. போன்ற பல்வேறு மாசுக்கள் இருக்கும்.

இவை தவிர பல்வேறு சிறு துணிக்கைகள் இருக்கும் இவை மிக மிக மெல்லிய துகள்களாக இருக்கும். முக்கியமாக 2.5 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில் இம்மாசுக்கள்  இருக்கும் இதன் காரணமாக இந்த மாசுக்கள் நுரையீரலின் சுவாச சிற்றறை வரை சென்றடையும் இவை பொதுவாக PM 2.5 என்றழைக்கப்படும். பல சந்தர்ப்பங்களில் இவை நுரையீரலினை தாண்டி இரத்தத்தில் கலக்கும்

PM 10 என்பது 10 மைக்ரோ மீட்டர் அல்லது அதிலும் குறைவான மைக்ரோ மீட்டரில்  இருக்கும் மாசுக்கள். உதாரணமாக வீதியோர தூசுக்கள், மகரந்த மணிகள் போன்றன இதில் அடங்கும். இவை எமது நாசிக்குழியுடன் நின்று விடும். எனவே PM 2.5 என்பது PM 10 என்பதினை விட ஆபத்தானது.

6. ஏன் மாசடைந்த காற்று மணக்கவில்லை?

சாதாரணமாக நாம் மாசடைந்த காற்றினை சுவாசிக்கும் பொழுது வித்தியாசமான மணமாக இருக்கும் ஆனால் தற்போதைய மாசடைந்த காற்று அதிகளவு ஈரப்பதன் மூலம் நிரம்பி இருப்பதினால் இவ்வாறான மணம் இருக்க மாட்டாது

7. மாசடைந்த காற்றினை சுவாசித்தினால் மனிதருக்கு எவ்வாறான சுகாதார சீர்கேடுகள் ஏற்படும்?

ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு அந்த நோய்கள் அதிகரிக்கும் அதாவது தீவிரத் தன்மை அடையும். சிலருக்கு புதிதாக சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் அதாவது இருமல் மற்றும் சுவாசிப்பதில் கடின தன்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்

8. எம்மை எவ்வாறு நாம் பாதுகாத்து கொள்ளலாம்?

வீட்டினை விட்டு வெளியில் செல்லும் பொழுது பொதுவாக போக்குவரத்தில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் எமது சூழலில் குப்பைகளை இருக்கது தவிர்க்க வேண்டும்.

9. எவ்வாறு காற்றின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்?

IQAir, World’s Air Pollution, AirNow App, Accu weather போன்ற சர்வதேச வலைத்தளங்களில் இருந்தும் இலங்கையின் AQ.LK, https://www.nbro.gov.lk/ வலைத்தளங்களில் இருந்தும் realtime முறையில் நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசுபட்டுள்ளது என்பதினை அறிந்து கொள்ளலாம்

இவ்வாறு மாசடைவதன் காரணமாக பாதிப்பினை எதிர்கொண்ட வைத்தியர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றினை தாக்குதல் செய்துள்ள நிலையில்  யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தைத் தயாரிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) மற்றும் யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 22, 2026 அன்று மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

வரமா? சாபமா?

சம்பவம் 1:

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 7 திகதி ஒரே நேரத்தில்  மூன்று பிள்ளைகளை பெற்ற  நிலையில்  அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார், ஆனால் மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த  யோகராஜா மயூரதி வயது 46 என்ற தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணம் செய்து   20 ஆண்டுகளாக குழந்தை இன்றி  பெரும் கஷ்டங்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு விட்டு  மூன்று பிள்ளைகளையும் பார்க்காமல்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் 2:

24-05-2025 அன்று  யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது

சம்பவம் 3:

கிளிநொச்சியினை சேர்ந்த 56 வயதுமிக்க கர்ப்பிணி  கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். குறித்த கர்ப்பிணி செயற்கை முறையில் கருத்தரித்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனுக்கு தெரியாமலேயே குறித்த பெண்மணி கருத்தரித்ததாக கூறப்படுகின்றது   

இவை இந்த வருடத்தில் முகநூலிலும் பத்திரிகைகளிலும் வெவ்வேறு காலப்பகுதிகளில்  வந்த செய்திகள். ஏன் இவ்வாறு கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது.

 இன்றைய காலப்பகுதியில் இலங்கையில் திருமணம் செய்யும் சோடிகளில் அண்ணளவாக நான்கில் ஒரு சோடிக்கு (23%) குழந்தைப்பேறு இன்மை ஓர் பிரச்சனையாக இருக்கின்றது. இதற்கு தீர்வாக பல்வேறு சிகிச்சை முறைகள் பெண்ணோயியல் மருத்துவத்தில் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானது IVF (In vitro fertilization) என்றழைக்கப்படும் வெளிச் சோதனை முறை கருக்கட்டல் அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் ஆகும். இந்த IVF சிகிச்சை முறையானது பல்லாயிரக்கணக்கான குழந்தை பேறு அற்றவர்களின் வாழ்க்கையில் வசந்தத்தினை வீசியுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனினும் இந்த IVF சிகிச்சையின் பொழுது பல்வேறுபட்ட மருத்துவ ஒழுக்கவியல் (medical ethics) சம்பந்தமான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக இவ்வாறான கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறான ஒரு சில பிரச்சனைகளை  இப்பதிவு விளக்குகின்றது

1. செலுத்தப்படும் முளையங்களின் எண்ணிக்கை (number of embryos)

IVF சிகிச்சையின் பொழுது வெளிச்சூழலில் கருக்கட்டபட்ட முளையம் தாயின் கருப்பையினுள் உட்செலுத்தப்படும். தாயின் வயது, முளையங்களின் தரம், தோல்வியடைந்த IVF சிகிச்சைககிளின் எண்ணிக்கை போன்றவற்றினை கருத்தில் கொண்டு முளையங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பொதுவாக தாயினது, பிறக்க போகும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டும் பல குழந்தைகள் பிறக்கும் பொழுது ஏற்படும் தீய விளைவுகளை கருத்தில் கொண்டும்  ஓர் முளையத்தினை கருப்பையினுள் உட்பதிக்கவே சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனினும் அரிதான சில சந்தர்ப்பங்களில் இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். உதாரணமாக தாயின் வயது அதிகம், குறைந்த தரத்திலான முளையம், பலமுறை தோல்வி அடைந்த சிகிச்சை முறைகள் என்பவற்றினை கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று முளையங்கள் உட்பதிக்கப்படலாம். எவ்வாறாயினும் 03 முளையங்களுக்கு மேல் உட்பதிக்க சிபாரிசு இல்லை.

ஆனால் இன்றைய வியாபார உலகில் மேற்குறித்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படாதன் காரணமாகவே இவ்வாறான மேற்குறித்த கர்ப்பிணி தாய்மாரின் மரணங்கள் நிகழுகின்றன. இவ்வாறு முளையங்கள் உட்செலுத்தப்பட்டு ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது தாயாருக்கு ஏற்படும் ஒரு சில  முக்கிய சிக்கல்கள்

1. உயர் குருதி அழுத்தம் அதன் காரணமான வலிப்பு நோய் மற்றும் ஈரல் செயலிழப்பு 

2. கர்ப்பகால சலரோகம்

3. அதிக மன அழுத்தம் மற்றும் மன நோய்கள்

4. குருதி சோகை

5. பிள்ளை பேறிற்கு பின்னரான குருதி போக்கு

ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் கருத்தரிக்கும் பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில  முக்கிய சிக்கல்கள்

1. குறை மாதத்தில் பிறத்தல்

2. நிறை குறைவாக பிறத்தல்

3. பிறந்தவுடன் முதிரா குழந்தைகள் பிரிவில் அனுமதியும் அதன் நீண்ட கால தீங்கான சுகாதார விளைவுகள்

4. இருதய, சுவாச தொகுதிகளில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகள்

5. தாயாரின் அன்பினை மற்றும் அரவணைப்பினை உரிய அளவில் பெற முடியாத நிலைமை

6. தாய்ப்பாலினை உரிய அளவில் அல்லது முற்றாக பெறமுடியாத நிலைமை        

இவ்வாறான IVF சிகிச்சைகள் தனியார் மருத்துவ மனைகளிலேயே மேற்கொள்ளப்பட்டு பிரசவத்திற்க்கு அரச வைத்தியசாலைகளில் பெரும்பாலும் அனுமதிக்கப்படுகின்றனர்.  இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதிரா நிலையில் குறை மாதத்தில் பிறக்கும் பொழுது முதிராக குழந்தைகள் நிலையத்தில் நெருக்கடி நிலை ஏற்படும் இதன்காரணமாக மற்றைய தாயாரின் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். முதிரா குழந்தைகள் நிலையத்தில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே கட்டில்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் எண்ணிக்கை காணப்படும்  

2. வயது கட்டுப்பாடு மற்றும் சம்மதம்

50 வயதினை கடந்த பெண்களுக்கு இவ்வாறான IVF சிகிச்சை முறைகளை வழங்க கூடாது என வைத்தியர்களுக்கான வழிகாட்டி வலியுறுத்துகின்றது. தாயினதும் கருவில் உருவாகும் குழந்தையினதும் நலத்தினை கொண்டே இந்த வயது எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கப்படும் பொழுது கணவன் மற்றும் மனைவி இருவரினதும்  எழுத்துமூலமான சம்மதம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேலும் இவ்வாறு அதிகரித்த வயதில் ஓர் பெண் கருத்தரிக்கும் பொழுது குறித்த பெண் மனோரீதியாக மற்றும் மருத்துவ ரீதியாக கர்ப்பத்தினை தாங்கி பிள்ளையினை பெற்று வளர்த்து எடுக்க தகுதி வாய்ந்தவளா என்று தீர ஆராய வேண்டும்.

இலங்கையில் IVF (MEDICALLY ASSISTED REPRODUCTIVE TECHNIQUES) பற்றிய இறுக்கமான சட்ட திட்டங்கள் ஏதும் இல்லை வெறுமனே வழிகாட்டுதல் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் இவ்வாறு மருத்துவ வழிகாட்டுதல்களை மீறி ஒன்றிற்கு மேற்பட்ட முளையங்களை தமது வியாபார நோக்கம் கருதி உட் செலுத்தி கர்ப்பிணி தாய்மாரின் உயிரினை ஆபத்திற்கு உள்ளாக்கும் மற்றும் பிறக்கும் குழந்தைகளின்  நலனில் அக்கறையில்லாத வைத்தியர்களை புறக்கணிப்பதே தீர்வாகும்.

குறிப்பு : இங்கு தலையங்கத்தில் வரமா? சாபமா? என குறிப்பிட்டது IVF சிகிச்சை முறையினையே ஆகும். மக்கட் செல்வம் என்றும் வரமே. 

“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்”……… திருக்குறள்

நன்றி

சுற்றுலாவும் உயிரிழப்புக்களும்

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு 05/11/2025 அன்று சுற்றுலா சென்றுள்ளனர்.  அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர். இவ்வாறு  நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த ஐவரின் சடலங்களும்  மீட்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் சோக அலைகளை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறு முன்பும் சுற்றுலா சென்றவர்கள் பல்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றார்கள். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றபொழுது கூட கடலில் மூழ்கி சிலர் இறந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் சுற்றுலாவின் பொழுது இவ்வாறான சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன மற்றும் இவ்வாறான சம்பவங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது

சுற்றுலாவின் பொழுது அல்லது களிப்பாட்டங்களின் பொழுது  நீரில் மூழ்கி இறப்பதற்கான காரணங்கள்

1. குறிப்பாக பொழுதுபோக்கு பயணங்களின் போது, ​​பாதுகாப்பற்ற அல்லது அறிமுகமில்லாத பகுதிகளில் குளித்தல். இலங்கை ஓர் தீவு எனினும் நாட்டின் எல்லா கடற்கரையிலும் நீராட முடியாது. சில கடற்கரைகள் மட்டுமே அதிக அலைகள் அற்றும், கடலடியில் பாறைகள் அற்றும் நீராட தகுந்தனவாக உள்ளன.

2. நீர் ஆழத்தில் ஏற்படும் மாற்றங்கள், வலுவான நீரோட்டங்கள் அல்லது நீருக்கடியில் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வு அல்லது அறிவு இல்லாமை. முக்கியமாக கடற்கரைகளை போன்றே ஆற்றின் எல்லா இடங்களிலும் நீராட முடியாது. ஆழம் குறைந்த, சீரான நீரோட்டம் உள்ள ஆற்றங்கரைகள் போன்றவற்றில் மட்டுமே நீராட முடியும். குறித்த சம்பவத்தில் இறந்தவர்கள் நீராடிய பொழுது ஆற்றில் உள்ள ஓர் பள்ளத்தில் வீழ்ந்ததாக உயிர் தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் வாசிகளுக்கே இவ்வாறான நீர்நிலைகளில் உள்ள ஆபத்துக்கள் தெரியும். வெளியூர் வாசிகளான சுற்றுலாவில் வந்து நீராடுபவர்களுக்கு இந்த ஆபத்துக்கள் தெரியாது 

3. ஆபத்தான நீர்நிலைகளைத் தவிர்க்க அல்லது உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு வழக்கமாக அறிவுறுத்தும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை புறக்கணித்தல். பலசந்தர்ப்பங்களில் இவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் சகோதர மொழியில் இருப்பதனால் சரிவர விளங்கிக்கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது மேலும் இவ்வாறான அறிவுறுத்தல் பலகைகள் பலசந்தர்ப்பங்களில் பல்வேறு தனி நபர்களினால் அகற்றப்பட்டுள்ளன.

4. நீரில் இவ்வாறான ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மூழ்கும் பொழுது  சிலர் போதிய நீச்சல் தெரியாது இருப்பார்கள். மேலும் நீச்சல் தெரிந்தவர்கள் கூட இவ்வாறு நீச்சல் தெரியாதவர்களை காப்பாற்றும் முயற்சியில், பதட்டமான சூழ்நிலையில், பயப்பீதியுடன் வினைத்திறனான முறையில் செயற்பட முடியாது.

5. பொதுவாக இவ்வாறான சுற்றுலாக்களின் பொழுது இவ்வாறு நீராடலின் பொழுது மது போதையில் அல்லது போதை மருந்துக்களின் பாவனையில் இருப்பதினால் அவர்களினால் வினைத்திறனான முறையில் செயற்பட்டு தப்பிக்க முடியாது.  

6. மேலும் ஆறுகளில் நீராடும் பொழுது நீருந்து பிரதேசங்களில் பெய்யும் மழை காரணமாக அல்லது வடிந்து செல்லும் மழை வெள்ளம் காரணமாக சடுதியாக நீர் மட்டம் அதிகரித்து இவ்வாறு நீராடுபவர்களை பலிகொண்டுள்ள சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறு கடலிலும் நீர் மட்டம் மற்றும் அலைகள் நேரத்திற்கு ஏற்ப கூடி ஆபத்தினை ஏற்படுத்தி இருக்கின்றன.  

இலங்கையில் இவ்வாண்டில் 230 பேர் இவ்வாறு நீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்று பொலிஸாரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கும் நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

எவ்வாறு இவ்வாறான விபத்துக்களை தடுக்கலாம்

  1. நீந்த தெரியாதவர்கள் மற்றும் குறிப்பாக சிறுவர்களை கண்காணிப்பில் நீராடலின் பொழுது வைத்திருக்க வேண்டும்
  2. குறிப்பாக சுற்றுலா குழுவில் உள்ள ஒருவரினை இந்த கண்காணிப்பு பொறுப்புக்கு வலியுறுத்தலாம்.
  3. குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராட வேண்டும் அதுவும் குறித்த நேரத்தினுள் நீராடவேண்டும் ஏன்னெனில் பல இவ்வாறான இடங்களில் மீட்பு பணிக்கு என விசேட பயிற்சி பெற்ற கடற்படையினர் கடமையில் இருப்பர். அவர்கள் கடமையில் இல்லாத பொழுது நீராடுவது உசிதமல்ல.
  4. நீராடலின் பொழுது உயிர் காப்பு கவசங்களை அணிவது சிறந்தது மேலும் சில இடங்களில் இவற்றினை வாடகை அடிப்படையில் பெறலாம்.
  5. குழுவாக நீந்தும் பொழுது தனியே ஒருவர் மட்டும் வேறு இடத்தில் இருந்து நீந்துவது உசிதமல்ல
  6. மது அல்லது போதை பாவனையின் பின்னர் நீந்துவது ஆபத்தினை விளைவிக்கும்
  7. உள்ளூர் வழிகாட்டல்களை பின்பற்றுவது சிறந்து
  8. துர்அதிஷ்டவசமாக குழுவில் உள்ள ஒருவர் நீரில் மூழ்க தொடங்கினால் நீச்சலில் அனுபவம் மிக்க ஒருவரே அல்லது பயிற்சிபெற்ற கடற்படையினரே அவரினை மீட்க்கும் பணியில் ஈடுபடவேண்டும்

மனிதர்களாகிய நாம் மிக சந்தோஷமான சூழ்நிலைகளில் மிக அவதானமாக இருப்பதன் மூலம் அனாவசியமான உயிரிழப்புக்களை தடுக்கலாம். மேலும் முக்கியமாக அறிமுகம் இல்லாத நீர்நிலைகளில் நீராடும் பொழுது நாம் மிக அவதானமாக இருக்க வேண்டும். சுற்றுலா போன்றன செல்லும் பொழுது அனுபவம் மிக்கவர்களின் அல்லது அப்பிரதேச வாசிகளின் அறிவுரைகளை கட்டாயம் செவிமடுப்பதன் மூலம் அனாவசியமான உயிரிழப்புக்களை தடுக்கலாம்.

நன்றி

கஞ்சாவின் வெவ்வேறு வடிவங்கள்

ஒருசில வருடங்களுக்கு முன்னர் போலீசார் எனது அலுவலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர். அவர்கள் சொன்ன தகவல் மாந்திரீகர் ஒருவரிடம் குறித்த பெண் சென்ற பொழுது குறித்த மாந்திரீகர் கஞ்சா கலந்த ரொட்டியை உண்ண கொடுத்து அந்த பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர். பொலிஸாருக்கு ஒரே ஆச்சரியம் எவ்வாறு கஞ்சாவினை ரொட்டியில் கலந்து கொடுத்தால் வெறிக்குமா என்று. இவ்வாறே ஹஷீஷ் என்ற போதைப்பொருளும் இன்றைய தினம் களுத்துறையில் ஓர் கடற்கரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவும் கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஓர் போதைப்பொருளே ஆகும். கஞ்சா செடியில் இருந்து எவ்வாறான போதைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறித்து இப்பதிவு விளக்குகின்றது

கஞ்சா செடியில்  உள்ள முக்கிய மூலப்பொருள் delta-9-tetrahydrocannabinol (டெல்டா-9-டெட்ராஹைட்ரோகன்னாபினோல்) (THC) ஆகும். இதுவே பெரும்பாலான மனக்கிளர்ச்சியினை (Psychoactive) ஏற்படுத்துகின்றது. மற்றைய முக்கிய மூலப்பொருள் cannabidiol  (கன்னாபிடியோல்) (CBD) ஆகும், இது சிகிச்சை பண்புகளைக் கொண்டுள்ளது. முக்கியமாக பதகளிப்பு, மனசோர்வு, நாடப்பட்ட வலி, நோய் அழற்சி போன்றவற்றிக்கு நிவாரணியாக தொழிற்படுகின்றது.  மேற்குறித்த இரு இரசாயனப்பொருட்களும் கஞ்சா செடியின் பூ, இலை, தண்டு , மொட்டு போன்ற அனைத்து பாகங்களிலும் காணப்படும் ஆனால் வெவ்வேறு செறிவில் காணப்படும். கஞ்சாவில் 100 க்கும் மேற்பட்ட பைட்டோகன்னாபினாய்டுகள் (phyto cannabinoids)  உள்ளன அவற்றில்  THC மற்றும் CBD ஆகியவை நன்கு ஆய்வு செய்யப்பட்டவை ஆகும் . சுருக்கமாக சொன்னால் வேறினைத்தவிர செடியின் அனைத்து பகுதிகளிலும் மேற்குறித்த இராசயன பதார்த்தங்கள் இருக்கும் முக்கியமாக பூக்களிலும் இலையிலும் கூடுதலாக காணப்படும். மேற்குறித்த இரசாயன பொருட்களே எமது உடலில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கஞ்சாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒவ்வொரு விளைபொருளிலும் மேற்குறித்த இரசாயன பொருட்கள் வெவ்வேறு செறிவில் இருக்கும் இதன் காரணமாகவே அவை வெவ்வேறான  தேவைகளுக்கு பயன்டுத்தபடுகின்றது. அடுத்து இவ்வாறு கஞ்சா செடியில் இருந்து தயாரிக்கப்படும் வெவ்வேறான விளைபொருட்கள் பற்றி பார்ப்போம்    

1. கஞ்சா / வீட் / Marijuana

இது செடியின் உலர்ந்த இலைகள் மற்றும் பூக்கள். பொதுவாக சிகரெட்டாக சுருட்டி புகைபிடிக்கின்றனர். இதில் THC சராசரி அளவில் இருக்கும்.

2. ஹஷீஷ் (Hashish / Hash)

 கஞ்சா செடியின் பூக்களில் இருந்து பெறப்படும் பிசின் (Resin). இது மிக நெருக்கமாக அழுத்தப்பட்டிருக்கும். கருப்பு / பழுப்பு நிறம், கட்டியாக அல்லது பந்தாக இருக்கும். கஞ்சாவினை விட THC மிக அதிகளவில் உள்ளது. புகைத்தல் மூலம் உள்ளிளுக்கப்படுகின்றது.

3. கிவ் (Kief)

கஞ்சா செடியின் பூக்களின் பவுடர். அதிகளவில் THC இணை கொண்டிருக்கும். முட்டுக்களில் வைத்து கட்டபடும்.

4.. ஹஷ் ஆயில் / கஞ்சா எண்ணெய் (Hash Oil / Cannabis Oil)

இது செடியிலிருந்து எடுக்கப்படும் திரவம். இதில் THC அளவு மிக அதிகம். மின் புகைத்தல் மூலம் (vape) அல்லது உணவு/பானத்தில் கலந்து பயன்படுத்தப்படலாம்.

5. கஞ்சா மெழுகு அல்லது  ஷாட்டர் அல்லது பட்டர் (Wax, Shatter, Budder)

இவற்றில் THC  60-90% காணப்படும் அத்துடன் இந்த இரசாயனங்கள் திண்ம வடிவில் காணப்படும். பொதுவாக vape pen அல்லது dab  ஆகிய புகைத்தல் கருவியில் பயன்படுத்துகிறார்கள்

6. உணவில் கலந்த வடிவம்

பேக்கரி உணவு பொருள், ரொட்டி, லொல்லி பப், சுவிங்கம், குளிர்பானம்  போன்றவற்றில் கஞ்சா செடியின் பல்வேறு பாகங்கள் அல்லது அதன் ஏனைய விளை பொருட்கள் கலந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. உணவில் கலந்து செய்வதன் காரணமாக உடனடியாக வெறி ஏறாது ஆனால் ஏறிய வெறி இறங்க நீண்ட நேரம் செல்லும். THC மத்திய தர அளவில் உள்ளது.

7. மருந்து பயன்பாட்டிற்கான தயாரிப்புகள் (CBD Oil போன்றவை)

இது சில நாடுகளில் இது சட்ட அனுமதியுடன் வலி, பதட்டம், மயக்கம் போன்ற பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. CBD எண்ணெய் மயக்கம் தராது. தோலில் நேரடியாக பூச அல்லது பேண்டேஜ் மூலம் பூசப்படுகின்றது.

8. பாங் (Bhang)

பாங் (Bhang) என்பது ஓர் பானம் ஆகும் கஞ்சா செடிகளின் உலரவைக்கப்பட்ட இலைகள் மற்றும் மலர் மொட்டுகளிலிருந்து பாங் தயாரிக்கப்படுகின்றது

9. ஹெம்ப் (Hemp)

இதுவும் கஞ்சா செடிதான் ஆனால் இதில் THC இன் அளவானது 0.3% அளவிலும் (உலர் நிறையில்) குறைவாக இருக்கும் இதன் காரணமா இது போதை மற்றும் மனக்கிளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கங்களுக்காக பயன்டுத்தப் படுவதில்லை. மாறாக இதன் தண்டு மூலம் கயிறு, துணி, பேக், கட்டிட பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் விதைகள் மூலம் எண்ணெய் மற்றும் புரத உணவு  தயாரிப்பு, மற்றும் தாவர டீசல் (bio diesel) போன்ற தயாரிப்பிற்கு பயன்படுகின்றது.

10. குஷ் (Kush)
இதுவும் கஞ்சா தான். இந்த கஞ்சா செடியானது இந்தியாவின் இந்துகுஷ் மலைத்தொடர்களில் வளர்கின்றது. இதில் இருந்து பெறப்படும் இலைகள் மற்றும் பூக்கள் போன்றவற்றினை இரசாயன ரீதியாக பதப்படுத்தி குஷ் பெறப்படுகின்றது

முக்கியமாக கஞ்சாவில் இருந்து பெறப்படும் போதைப்பொருட்கள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்ட்டாலும் தோற்றுவாய் ஒன்றுதான் ஆனால் அவை மனிதனில் ஏற்படுத்தும் பாதிப்பு வேறுபடும் ஏனெனில் அவற்றில் அடங்கியிருக்கும் THC மற்றும் CBC செறிவுகள் வேறுபடிக்கின்றமையே ஆகும்.

நன்றி

17 வயது கிரிக்கட் வீரரின் மரணம் ஏன்??

அக்டோபர் 29, 2025 அன்று மெல்போர்னின் கிரிக்கட் பயிற்சியின்  பொழுது 17 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டினின் (Ben Austin) கழுத்து பகுதியில் பந்து தாக்கியதினால் மரணம் அடைந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பந்து வீசப்பட்டு கொண்டிருக்க துடுப்பாட்ட வலையினுள்  பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள T 20 போட்டிக்கான பயிற்சியின் பொழுதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயிற்சி அமர்வின் போது குறித்த வீரர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அவர் கழுத்துப் பாதுகாப்பு (ஸ்டெம் கார்டு) அணிந்திருக்கவில்லை. இதேமாதிரியாக  2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் (Phillip Hughes) என்பவர் பந்தினால் தாக்கப்பட்டு பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவினார். குறித்த இருவரினதும் மரணத்துக்கான காரணம் மூளைப்பகுதியில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த பதிவில் கழுத்து பகுதியில் ஏற்படும் காயங்களினால் எவ்வாறு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகின்றது  குறித்து விளக்கப்படுகின்றது.

இதற்கு முதற்படியாக மூளைக்கு இரத்தம் வழங்கும் நாடிகளின் அமைவிடம் பற்றி தெரிந்திருத்தல்  அவசியம் ஆகின்றது. எமது மூளைக்கு தேவையான இரத்தத்தினை இரு நாடிகள் வழங்குகின்றன

1.  Internal Carotid Arteries ( உட்கழுத்து நாடி )

2. Vertebral Arteries (முதுகெலும்பு நாடி )

இவற்றின் உடலின் அமைவிடத்தினை கீழ் உள்ள படம் விளக்குகின்றது.

படத்தில் முறையே நீலம்  ( உட்கழுத்து நாடி ) மற்றும் பச்சை (முதுகெலும்பு நாடி )  நிறங்களினால் கோடிடப்பட்டுள்ளது

இவற்றில் முதுகெலும்பு நாடியானது கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி அதாவது மூளையினை நோக்கி செல்கின்றது இவ்வாறு செல்லும் பொழுது கழுத்து பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் இருக்கும் துவாரங்களின் ஊடாகவே செல்லும். மேலும் கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து (Loop) பின்னர் மண்டையோட்டின் துவாரத்தின் ஊடக மூளையினுள் செல்கின்றது.

     இவ்வாறு வளைந்து வெளிநோக்கி செல்வதன் காரணமாகவே அதிக அசைவுகள் நடைபெறும் கழுத்து – மண்டையோட்டு பகுதியில் இந்த கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படாமல் இருக்க முடிகின்றது. எனினும் பின்வரும் காரணங்களினால் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது

1. கழுத்தின்  முள்ளந்தண்டுகளின் கிடையான முனைகளின் ஊடாக செல்லும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு என்புகளில் ஏற்படும் என்பு முறிவுகள், மூட்டு விலகல்கள் என்பவற்றின் காரணமாக கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது

2. கழுத்தின் மேற்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு என்புகள் ஊடாக செல்லாது கழுத்து முள்ளந்தண்டு என்புகள் 1 மற்றும் 2 இற்கு இடையே வெளி நோக்கி வளைந்து செல்லும் பொழுது நேரடியாக விசையின் தாக்கத்திற்கு உள்ளாகி கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் கழுத்து முள்ளந்தண்டு நாடியின் சுவரானது மெலிதாகவும் இலாஸ்டிக் தன்மை குறைந்தும்  காணப்படுவதன் காரணமாக காயப்படும் தன்மை அதிகமாகின்றது   

மேற்குறித்த காரணங்களினால் பந்து மற்றும் கராத்தே அடி ( karate blow) போன்ற மொட்டையான விசைகள் கழுத்து பகுதியில் தாக்கும் பொழுது கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படுகின்றது (Dissection of vertebral artery)

மேலுள்ள படத்தில் மேற்குறித்த காயங்கள் ஏற்படும் பகுதிகள் 1,2 குறிக்கப்பட்டுள்ளன

மேலும் சில சந்தர்ப்பங்களில் கழுத்து பகுதியில் கட்டாயம் விசை ஒன்று தாக்க வேண்டிய தேவை இல்லாமலேயே தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படும் வழமைக்கு மாறான எல்லை மீறிய அசைவு காரணமாகவும் கழுத்து முள்ளந்தண்டு நாடி காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது. மேலும் இவ்வாறான மொட்டையான விசையின் தாக்கத்தினால் களுத்துபகுதியில் உள்ள உட்கழுத்து நாடியும் காயப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும் கழுத்து முள்ளந்தண்டு நாடி கிழிந்து காயப்படுவதன் காரணமாக அக்கிழிவுக்காயமானது விசை தாக்கிய இடத்தில் மட்டும் உண்டாகாது நீண்ட தூரத்திற்கு செல்லும் இதன் காரணமாக கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டாலும் தலையினுள் இரத்த கசிவு உண்டாகலாம்   

நன்றி

மீனவர்களே அவதானம்!!

சில தினங்களுக்கு முன்னர் புத்தளம், நுரைச்சோலை பகுதியில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தினை மதுபானம் என பருகிய மீனவர்களில் இருவர் இறந்துள்ளனர் மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்வாறு சிலவருடங்களுக்கு முன்னர் (2021) வடமராட்சி கிழக்கு கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட கண்ணாடி போத்தல் ஒன்றினை கண்டெடுத்த மீனவர்கள் அதனை மதுபானம் என நினைத்து பருகினர். இதன் பொழுது ஏற்பட்ட அனர்த்தத்தில் இவ்வாறு பருகிய இருவர் இறந்தனர் மேலும் சிலர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது. மீனவர்களின் கருத்துப்படி வழமையாக இவ்வாறாக மதுபான போத்தல்கள், வைத்தியசாலையில் பாவிக்கப்படும் பொருட்கள் மற்றும் பொலித்தீனினால் பொதி செய்யப்பட்ட உணவு பொருட்கள் கரை ஒதுங்குகின்றமையும் அவற்றினை மக்கள் எடுத்து பாவிப்பது வழமை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏவ்வாறு  இவ்வாறான பொருட்கள் கரையொதுங்கின்றன??

வழமையாக இவ்வாறு பொருட்கள் வட கீழ் பருவ பெயர்ச்சி காற்றின் பொழுது கரையொதுங்குகின்றன. இதற்கு பலகாரணங்கள் ஏதுவாகின்றன

1. புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக படகுகள் கவிழ்ந்து அதனுள் இருக்கும் பொருட்கள் பல மைல்கள் கடந்து நீரோட்டத்தின் வழியே வேறு பிரதேசத்தினை அடையலாம். இவ்வாறே வேறுநாடுகளில் கடற்கரையில் இருக்கும் கடைகள், குடிசைகள் என்பன அலைகளினால் அடிபடும் பொழுது இவ்வாறான பொருட்கள் கடலில் சென்றடையும்

2. முக்கியமாக மருத்துவ கழிவுகள் பங்களாதேஷ், இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளில் கடலில் கொட்டபடுகின்றன. பருவ பெயர்ச்சி காற்றின் பொழுது கடலின் அடியில் இருக்கும் பொருட்கள் மிதந்து கரையினை அடையும். மருத்துவ கழிவுகளை முறையாக கழிவகற்ற அதிகம் செலவு ஆகும் என்பதினாலேயே இந்த முறை கையாளப்படுகின்றது.

கரையொதுங்கும் போத்தல்களில் மதுபானம் இருப்பது உண்மையா?

இல்லை. கரையொதுங்கும் போத்தல்களில் பெரும்பாலும் மருத்துவ கழிவு பொருட்களே காணப்படுகின்றன. முக்கியமாக புண்களை சுத்தப்படுத்தும் ஸ்பிரிட் திரவம் மற்றும் ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படும் ஏனைய திரவங்கள் அடங்கிய போத்தல்கள் தான் அதிகமாக கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் போத்தலைகளினை திறந்த உடன் மதுபான வாசனை வருகின்றதே?

வைத்தியசாலையில் புண்களை சுத்தப்படுத்தும் ஸ்பிரிட் திரவம் மற்றும் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் திரவங்களில் அல்லது சேதன கரைப்பான்களில், methanol, isopropanol,propanol போன்ற  அல்கஹோல்  வகைகள் இருக்கும். இவை மனித நுகர்விற்கு உகந்தவை அல்ல மாறாக நஞ்சு. நாம் அருந்தும் மதுபானத்தில் Ethanol என்ற அல்கஹோல் தான் இருக்கும். எவ்வாறாயினும் isopropnanol, propanol, methanol மற்றும் Ethanol ஆகியன ஒரே இரசாயன வகையினுள் வருவதினால் propanol, methanol போன்றவை நாம் அருந்தும் மதுபானத்தை மணம் மற்றும் வெறிக்கும் தன்மையினை கொண்டிருக்கும்.

இப்பதிவில் எவ்வாறு ஓர் மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காண்பது என்பது பற்றி பார்வையிடுவோம். பொதுவாக வைத்தியசாலையில் புண்களுக்கு மருந்து கட்டிட பாவிக்கப்படும் திரவங்கள், விவசாயத்தில் பாவிக்கப்படும்  களை கொல்லிகள், பீடை நாசினிகள், நஞ்சு பதார்த்தங்கள் மற்றும் ஏனைய திரவ மருந்து வகைகள் கறுப்பு அல்லது மண்ணிற கண்ணாடி அல்லது பிளாஸ்ட்டிக்கினால் ஆன போத்தல்களில் இருக்கும். இவ்வகையான போத்தல்களினை கண்டவுடன் நாம் உசார் அடையவேண்டும். மேலும் இவ்வாறான போத்தல்களில் சிவப்பு, நீலம், பச்சை அல்லது மஞ்சளினால் ஆன லேபிள் இருக்கும். பொதுவாக ஆங்கில மொழியில் தான் போத்தலினுள் இருக்கும் பதார்த்தம் பற்றிய விபரங்கள் இருக்கும். ஆனால் மேற்குறித்த நிறங்களினை காண்பதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.

மேலும் சில போத்தல்களில் மண்டை ஒட்டு குறியின் உடனான கோட்டு படம் (நஞ்சு பதார்த்தத்தினை குறிக்கும்), ஆச்சரிய குறியின் கோட்டு படம் ( ஆபத்தான உடல் நலக்குறைவுகள் ஏற்படுத்தும் பதார்த்தம்) போன்றன இருக்கும் இவற்றினை வைத்தே மிக இலகுவாக போத்தலினுள் இருப்பது மனித நுகர்வுக்கு பொருத்தம் அல்லாத பதார்த்தத்தினை கொண்டிருக்கும் ( நஞ்சு பொருளினை ) போத்தலினை அடையாளம் காணலாம்.


மேலும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தத்தினை கொண்டிருக்கும் போத்தல் அல்லது வேறு பொதி செய்யபட்ட உணவு பொதி ஒன்று காணப்படுமாயின் கூட அதனை எடுத்து நாம் மனித நுகர்விற்கு பயன்படுத்தல் ஆகாது ஏனெனில் அவை நீண்ட காலமாக அதிக வெப்பநிலை, ஈரப்பதன் மற்றும் நீர் என்பவற்றுடன் தொடுகையில் இருப்பதன் காரணமாக அவற்றினுள் இருக்கும் மனித நுகர்வுக்கு பொருத்தமான பதார்த்தம் ஆனது மனித நுகர்விற்கு பொருத்தம் அற்றதாகவும் சிலவேளை நச்சு பதார்த்தம் ஆகவும் மாறி இருக்கலாம்.
நன்றி

உயிரினை பறிக்கும் வீடியோ கேம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் “பப்ஜி” என்ற வீடியோ கேமிற்க்கு அடிமையான ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் கூட இளைஞர் ஒருவன் வீடியோ கேம் ஆன “பப்ஜி” இற்கு அடிமையான நிலையில் தற்கொலை செய்து கொண்டார். . இவ்வாறான சம்பவங்கள் உலகின் பல இடங்களில் முன்னரும் நடைபெற்றுள்ளன. இப்பதிவில் வீடியோ கேம் பாவனையானது அதனை பாவிப்பவர்களிடத்து குறிப்பாக இளைஞரிடத்து எவ்வாறு மரணங்களை, மனரீதியான தாக்கத்தினை, பண இழப்புக்களை ஏற்படுத்துகின்றது பற்றி விளக்குகின்றது.

Player Unknown’s Battle grounds (PUBG) என்பதே தமிழில் “பப்ஜி” என்றழைக்கப்படுகின்றது. இந்த வீடியோ கேமில் பலர் தனியான தீவு ஒன்றில் பாராசூட் மூலம் தரை இறக்கப்படுவார்கள் அவர்கள் அத்தீவில் உள்ள ஆயுதங்களை கைப்பற்றி அங்குள்ளவர்களை கொல்ல வேண்டும். இதற்காக அவர்கள் குறித்த ஆயுதங்கள் போன்றவற்றினை பணம் செலுத்தி கொள்வனவு செய்யவேண்டும் . மேலும்  இந்த விளையாட்டிற்கு அடிமையாகியவர்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அதில் விளையாடவே செலவு செய்வார்கள் இதன் காரணமாக உணவு, தனி நபர் சுகாதாரம்,கல்வி, தொழில், குடுப்ப உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் விளையாட்டின் காரணமாக குறைந்தளவு நேரமே உறங்குவார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன சோர்வு உண்டாகும். அடுத்து இவ்வாறு கைத்தொலை பேசி அல்லது கணனியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடுபவர்கள் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இறந்துள்ளார்கள் என பார்ப்போம்.

1. தற்கொலை செய்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் குறித்த ஒரு காரணத்தினால் தொடர்ச்சியாக குறித்த வீடியோ கேம் இணை விளையாட முடியாத சூழ்நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உதாரணமாக பெற்றோர், ஆசிரியரின் கண்டிப்பு, இணைய வசதியினை பெற போதிய பணம் இன்மை….

2. தற்கொலை செய்து கொண்டவர்களில் ஒருசிலர் குறித்த வீடியோ கேம் இணை விளையாடியதன் பலனாக ஏற்பட்ட அதீத  மனஅழுத்தம் மற்றும் சிலவகை வீடியோ கேமில் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்படும் கட்டளைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

3. மேலும் சிலர் குறித்த வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தமது தொழிலில் ஒழுங்கான முறையில் ஈடுபட முடியாமையினால் கடன், அதீத வேலைச்சுமை போன்றவற்றினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

4. மேலும் வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் குறைந்த அளவிலான நீரினை நாளாந்தம் உள்ளெடுப்பதினால் அவர்களின் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டும் சோடியம் பொட்டாசியம் போன்ற அயன் பற்றாக்குறை ஏற்பட்டும் இறப்பு ஏற்பட்டுள்ளது .

5. ஏற்கனவே மூளையின் இரத்த குழாய்களில் பலவீனமான அமைப்பினை உடையவர்கள்(AV malformation/ aneurysm)  வீடியோ கேமிற்கு அடிமையான நிலையில் தொடர்ச்சியாக அவர்கள் கேம் விளையாடும் பொழுது அதிகளவு அதிகரித்த இரத்த அழுத்தம் காரணமாக குறித்த இரத்த குழாய் வெடித்து மூளையில் இரத்த போக்கு ஏற்பட்டு இறப்பு ஏற்படும். இதனையே பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மூளை நரம்பு வெடித்து இறப்பு ஏற்படுவதாக செய்தி இடுகின்றன.

6. மேலும் சிலர் இவ்வாறு கேம் விளையாடியவண்ணம் வீதியினை கடத்தல், வாகனம் செலுத்துதல், உயரமான கட்டிடங்களின் விளிம்புகளில் நிற்றல் போன்ற செயற்பாடுகளை செய்யும் பொழுது விபத்துக்களை சந்தித்து மரணத்தினை தழுவியுள்ளனர்

வீடியோ கேம் எவ்வாறு மன அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றது

1. தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும் பொழுது அவர்கள் நிஜ உலக வாழ்க்கையில் இருந்து விடுபடுகின்றனர். சமூக நடவடிக்கைகளிலிருந்து விலகுதல், தூக்கமின்மை, ஆக்ரோஷமான நடத்தை மற்றும் பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது.

2. PUBG இல் அதிக ஈடுபாடு ஆனது தனிமை உணர்வுகளை மோசமாக்கும், குறிப்பாக அந்த நபருக்கு ஏற்கனவே மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநல பாதிப்புகள் இருந்தால் தனிமை உணர்வு மோசமாகும்.

3. விளையாட்டில் போட்டி மன அழுத்தம் மற்றும் தோல்வி, குடும்பத்தினரின் விமர்சனம் அல்லது கட்டுப்பாடுகளுடன் இணைந்து, கடுமையான உணர்ச்சி துயரத்தையும், அரிதான சந்தர்ப்பங்களில், தற்கொலை நடவடிக்கைகளையும் ஏற்படுத்தும்.

4. விளையாட்டில் ஆக்ரோஷமான மற்றும் வன்முறையான உள்ளடக்கம் போன்றவை சில  நபர்களில் உணர்ச்சி உறுதியற்ற தன்மை மற்றும் சுய-தீங்கு போக்குகளை அதிகரிக்கக்கூடும்.

சில தற்கொலை வழக்குகள், தற்கொலைக் குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, “பப்ஜி” மற்றும் ஏனைய வீடியோ கேம் இற்கு அடிமையாதல் மற்றும் தனிமைப்படுத்தும் தன்மையே அவர்களின் துயரத்திற்கு நேரடிக் காரணம் என்று கூறுகின்றன.

PUBG மற்றும் ஏனைய வீடியோ கேம்களில்  பணத்தை இழப்பதற்கான காரணங்கள்

1. குறித்த வீடியோ கேம் விளையாட்டுக்கள் பணம் செலுத்தியே வாங்க வேண்டும் மேலும் குறித்த வீடியோ கேமினை விளையாடும் பொழுது  மற்றும் ஆயுதங்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கு உண்மையான பணம் தேவைப்படும். சில சந்தர்ப்பங்களில் குறித்த வீடியோ கேமில் வென்றால் பண பரிசு உண்டு இவ்வாறான  போட்டி நன்மை அல்லது சமூக அந்தஸ்து மீதான ஆசையால் அதிக செலவு தூண்டப்படுகிறது.

2. பெரும்பாலான வீடியோ கேம்கள் ஒன்லைன் மூலமே விளையாட வேண்டும் இதன் பொழுது பிழையான விலை நிர்ணய மாதிரிகள்,  குழப்பமான நாணய மாற்று விகிதங்கள் மற்றும் தொகுக்கப்பட்ட விலை நிர்ணயம் பெரும்பாலும் வீரர்களை தேவைக்கு அதிகமாக வாங்கத் தள்ளுகிறது. மேலும் பயன்படுத்தப்படாத நாணயத்தை விட்டுவிடுகிறது அல்லது மீண்டும் மீண்டும் சிறிய கொள்முதல்களைத் தூண்டுகிறது. சில வீரர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – கட்டாய மற்றும் திட்டமிடப்படாத கொள்முதல்களைச் செய்கிறார்கள்.

3. தொடர்ச்சியாக விளையாடவேண்டும் என்பதற்காக ஐஸ் போன்ற போதை மருந்துகளின் பாவனை மற்றும் இணைய இணைப்பு செலவுகள்

4. விளையாட்டு மூலம் கிடைக்கும் சிறிய வெகுமதிகள், நண்பர்களின் தூண்டல்கள்  மற்றும் உளவியல் தூண்டுதல் காரணமாக செலவுகள் அதிகரிக்கின்றன

5. மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள்: மொபைல் சாதனங்களில் அட்டை அல்லது வங்கி விவரங்களைச் சேமிப்பது தற்செயலான கட்டணங்கள், மோசடி மற்றும் கணக்கு திருட்டு அபாயத்தை அதிகரிக்கிறது.

6.  வரையறுக்கப்பட்ட நேர சலுகைகள், கிரெடிட் கார்ட் சலுகைகள் மற்றும் சில நிறுவனங்களின் சலுகைகள் காரணமாக செலவு ஏற்படுகின்றது

நன்றி

போதை மருந்து கடத்தலுக்கு மரண தண்டனையா?

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசாங்கத்தினால் போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்கள் என பலதரப்படடவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என சில புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கையில் மரண தண்டனையினை நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என இப்பதிவு விளக்குகின்றது. மரண தண்டனையினை எதிர்ப்பதற்கான காரணங்களாவன

  1. இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்படும் பொழுது பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடக்க சாத்தியம் அதிகம் உள்ளது. சட்ட விரோத கைதுகள், வழக்குகள் போன்றவை நடைபெறும். இலங்கையின் தற்போதைய சட்டத்தின் பிரகாரம் 2 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தாலே மரணதண்டனை இந்நிலையில் (மிக சிறிய அளவு – இலகுவாக ஒளித்து வைக்கலாம்  ) தனது எதிரிகளை இல்லாது ஒழிக்க பலர் இச்சட்டத்தினை பாவிக்க முற்படுவர்
  2. போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரிகளான நபர்கள் மற்றும் அதில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் மற்றும் பண பலத்தினை பாவித்து நிச்சயம் தப்பிவிடுவார்கள். மேலும் அவர்களுக்காக சிறந்த சட்டதரணிகள் வாதாடி சட்டத்தில் உள்ள ஓட்டைகளால் அவர்கள் நிச்சயம் வெளிவந்து விடுவார்கள். பணவசதியற்ற ஏழைகளின் தலைகளே எதிர்காலத்தில் உருளும். மேலும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பெரும்பாலும் தமது வருமானத்திற்காகவே செய்வார்கள். அவர்களை இயக்கும் நபர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள்.   
  3. போதைப்பொருட்கள் தொடர்பான வழக்குகள் குற்றவியல் வழக்குகள் ஆகும். இவ்வாறன  ஒரு குற்றவியல் விசாரணையின் பொழுது சம்பந்தப்படும் பல தரப்புக்கள் தவறினை விடலாம். உதாரணமாக போலீசார் உரிய சந்தேக நபரினை கைது செய்யாமல் விடலாம், போலீசார் உரிய சாட்சியினை வழங்காது விடலாம், அதிகாரிகள் தவறான சான்று பொருட்களை சமர்ப்பிக்கலாம், போலீசார் நீதி மன்றினை தவறாக வழிநடத்தலாம் மற்றும்  சிறந்த  குற்றவியல் சட்ட தரணியின் சேவை சந்தேக நபருக்கு  கிடைக்காமல் விடலாம்.
  4. அரசியல்வாதிகளை பழிவாங்கவும், சிறுபான்மையினரை பழிவாங்கவும் மரணதண்டனை பயன்படலாம் மேலும் இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
  5. நீதித்துறையின் தவறு காரணமாக மரண தண்டனை வழங்கப்படலாம். அமெரிக்காவில் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மேற்பட்டவர்கள் பிற்பாடு நடந்த தீவிர விசாரணை மீளாய்வு காரணமாக மரண தண்டனையில் இருந்து கடந்த காலங்களில் விடுதலை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
  6. மரண தண்டனை போன்ற பாரிய தண்டனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டதாய் விஞ்ஞான ரீதியில் சான்றுகள் ஏதும் இல்லை.

எனவே மரண தண்டனையினை எதிர்ப்போம்.

பிரஷர் குக்கர் சமையல் ஆபத்தானதா??

அன்று நான் கடமையில் இருந்த பொழுது 45 வயதுமிக்க ஓர் ஆண் நோயாளி முகத்தில் எரிகாயங்களுடன் எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார். என்ன நடந்தது என அவரிடம் வினாவிய பொழுது நான் அறிந்து கொண்ட விடயம் என்னவெனில் அவர் வெளிநாடு ஒன்றில் இருந்து நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தனது தாயாரினை பார்க்க வந்திருந்தார். அன்று அவரின் தாயாரினை பராமரிக்கும் பெண் வேலைக்கு வரவில்லை அதனால் குறித்த நபர் தனது தாயாருக்கு காலை உணவாக கஞ்சி காச்சி பரிமாற முற்பட்ட வேளையில் தான் அந்த அனர்த்தம் நிகழ்ந்தது. அவர் பிரஷர் குக்கரில் நீராவி அடங்க முன்னரே அதனை திறந்தமையினால் முகத்தில் பலமான எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முக்கியமாக அவரின் இரு கண்களும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. இறுதியில் அவரின் பார்வை வழமையான நிலைமைக்கு திரும்பாத நிலையில் தனது நாட்டிற்கு திரும்பவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டது.

   இன்றைக்கு எளிதாக சமையல் செய்வதற்கு பெரிதும் பயன்படும் பொருள் பிரஷர் குக்கர். உலகில் இது இல்லாத சமையல் அறைகளே இல்லை எனலாம். பிரஷர் குக்கர் இயங்குவது அதன் உள்ளே உருவாக்கப்படும் அழுத்தத்தால் தான். அப்படிபட்ட அந்த பிரஷர் குக்கர் அது தயாரிக்கப்பட்ட புதிதில் அதிக அழுத்தம் காரணமாக பல இடங்களில் வெடித்துச் சிதறியது. இதனால் அச்சம் காரணமாக மக்களிடையே குக்கர் பயன்பாடுகள் குறையத் தொடங்கின.குக்கரை பயன்படுத்தவே மக்கள் பயந்தார்கள்.இதை எப்படி சரி செய்வது என்று இந்தியாவின் பல குக்கர் நிறுவனங்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தன. பாதுகாப்பான குக்கர் என்பதை இலக்காக வைத்து மேற்படி ஆராய்ச்சியில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த குக்கர்கள் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான TTK நிறுவனமும் களத்தில் இறங்கியது.

அது அந்த நிறுவனம் வணிக ரீதியில் தள்ளாட்டத்தில் இருந்த காலகட்டம்.அதை சமாளிக்க இன்ஜினியரிங் படித்து விட்டு,பேராசிரியராகும் கனவில் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு படித்துக் கொண்டிருந்த “அவரை” அவரது தந்தையும், TTK நிறுவனத்தின் அப்போதைய தலைவருமான நரசிம்மன் அழைத்து வந்து பிசினஸில் இறக்கி விட்டார்.

AI உதவியுடன் ஓர் படம்

“அவர்” தொழிலில் நுழைந்த அந்த காலத்தில் அவர்களது TTK நிறுவனம் கடுமையான நெருக்கடியில் இருந்தது.அதோடு இந்த குக்கர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. தன் பொறியியல் அறிவையும்,ஆராய்ச்சி அனுபவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்தார்.

அது தான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் (Gasket Release System). அவர் கண்டுபிடித்த அந்த கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டத்திற்கு அவர் காப்புரிமையை பெறவில்லை. ஏன் என்று அவரிடம் கேட்டதற்கு, “நான் கண்டுபிடித்த இந்த பாதுகாப்பை காப்புரிமை செய்தால் எங்கள் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் லாபம் வரும்.ஆனால் அதை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.எனவே வேறு எந்த நிறுவனத்தின் குக்கர் வெடித்தாலும்,அதனால் ஒட்டுமொத்த குக்கர் என்ற கருவிக்கும் கெட்ட பெயர் உண்டாகும்.அதனால் தான் செய்யவில்லை…” என்ற பதிலைத் தந்தார்.

சமையலின் பொழுது பிரஷர் குக்கர் வெடித்து ஏற்பட்ட விபத்து

வீட்டில் இருக்கும் குக்கர் மூடியை எடுத்துப் பாருங்கள்.அதில் ஒரு சிறு துளை இருக்கும்.அதுதான் கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம்.குக்கர் மூடியில் “அவர்” போட்ட அந்த சிறிய ஓட்டை தான் குக்கரை பாதுகாப்பாக மாற்றியதுடன், TTK நிறுவனத்தையும் காப்பாற்றித் தந்தது. அந்த “அவர்” தான் TTK.ஜெகந்நாதன். இன்றைக்கும் கோடிக்கணக்கான வீடுகளில் பாதுகாப்பான குக்கர் சமையல் என்பதற்கு வித்திட்ட அந்த மாபெரும் மனிதரான டி.டி.கே.ஜெகந்நாதன் தன் 84 வது வயதில் பெங்களூருவில் அண்மையில் காலமானார்.

பிரஷர் குக்கரில் சமைப்பதினால் ஏற்படும் நன்மைகள்

1. நேர சேமிப்பு – பாரம்பரிய முறைகளினை விட 70% குறைவான நேரத்தினை எடுத்துக்கொள்ளும்

2. மின்சாரம் மற்றும் எரிவாயு சேமிப்பு

3. போசணைப்பொருட்கள் மற்றும் நுண்சத்துக்கள் இழக்கப்படாமல் சமைக்கலாம்

4. இங்கு ஆவியாதல் மிகக்குறைவாக நிகழ்வதால் உணவின் இயற்கை சுவை குன்றாமல் இருக்கும்

5. கடினமான இறைச்சி, வத்தல் , தானியங்கள் போன்றவற்றினை மிக இலகுவாக சமைத்து கொள்ளலாம்

6. சமையலுக்கு குறைந்த அளவிலான நீர் தேவைப்படும்

7. பிரஷர் குக்கரினை பயன்படுத்தும் பொழுது சமையலறையினை தூய்மையாகவும், இட நெருக்கடி இன்றியும் வைத்திருக்கலாம்

பிரஷர் குக்கரினை பயன்படுத்தும் பொழுது  கையாளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

1. பிரஷர் குக்கரில் பயன்படுத்தப்படும் இறப்பர் வளையத்தினை பரிசோதித்துக்கொள்ளவேண்டும், நெகிழ்வுத்தன்மை குறையும் பொழுது குறித்த காலஇடைவேளையில் அதனை புதிதாக மாற்ற வேண்டும். மேலும் அது ஒழுங்கான முறையில் உள்வைக்கபட்டிருக்குகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. பொதுவான உணவுகள் சமைக்கும் பொழுது நீர் மற்றும் உணவு பிரஷர் குக்கரின் 2/3 பங்கிற்கே நிரப்ப வேண்டும். மறுதலையாக 1/3 பங்கு வெறுமையாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உணவு அவிந்து விரிவடைய இடம் காணும். அரிசி போன்ற அதிகம் விரிவடையும் தானியங்களை அவிக்கும் பொழுது பிரஷர் குக்கரின் 1/2 பங்கிற்கே நிரப்ப வேண்டும்.

3. பாதுகாப்பான முறையில் நீராவி அமுக்கத்தினை வெளியேற்றல் – குக்கரினை ஆறவைத்து நீராவியினை ஒடுங்கி அமுக்கத்தினை இல்லாது செய்தல் அல்லது குக்கரின் மேல் உள்ள வால்வு இணை திறந்து வெளியேறல் அல்லது குக்கரின் மேல் நீரினை ஊற்றுவதன் மூலம் நீராவியினை சடுதியாக ஒடுங்க அனுமதித்து அமுக்கத்தினை இல்லாது செய்தல்.

4. நீராவி ஒடுங்கிஅல்லது வெளியேறி அமுக்கம் இல்லாது போன பின்னர் குறைந்த விசையினை பயன்படுத்தி திறக்க வேண்டும். ஒருபொழுது கடுமையான விசையினை பாவித்து திறக்க கூடாது.

5. நடுத்தர, சீரான வெப்பத்தில் சமைப்பதே சிறந்தது. அதிக வெப்பத்தில் சமைப்பது ஆபத்தினை உண்டாக்கும்.

6. நீருக்கு பதிலாக எண்ணெய் போன்றவற்றினை பயன்படுத்தி பெரிய இறைச்சி துண்டங்களை deep-fry செய்வது ஆபத்தினை உருவாக்கும். ஏன்னெனில் பிரஷர் குக்கர் நீரில் சமைப்பதற்கு என்றே வடிவமைக்கப்பட்டுள்ளது எண்ணெயினை பாவிக்கும் பொழுது அதிக வெப்பநிலை காரணமாக இறப்பர் வளையம் உருகி ஆபத்தினை விளைவிக்கலாம் மேலும் வால்வு ஒழுங்காக வேலை செய்யாது

7. பாதுகாப்பு வால்வு மற்றும் சாதாரண வால்வு என்பவற்றினை குறித்த காலத்தில் மாற்ற வேண்டும்.

8. முக்கியமாக பிரஷர் குக்கரினை அடுப்பில் வைக்கும் பொழுது பாத்திரத்தின் கைபிடியும் முடியின் கைப்பிடியும் ஒரே நேராக ஒன்றாக இருத்தல் வேண்டும். வேறுவேறு கோணங்களில் இருக்கும் பொழுது சமையலின் பொழுது அதிக அமுக்கம் காரணமாக முடி கழன்று ஆபத்தினை உருவாக்கும். சிறந்த தரக்கட்டுப்பாடு பெற்ற பிரஷர் குக்கரில் முடியினை பொருத்தும் பொழுது அதன் பிடியானது  அது நேராக பாத்திரத்தின்பிடியுடன் பொருந்தும் அத்துடன் குறித்த சுழியில் மேலும் அசைக்க முடியாதவாறு குறித்த பிரஷர் குக்கர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நன்றி        

மலசலக்குழியில் வெடிப்பு சம்பவம் ஏன்??

இலங்கையில், கல்சியம் கார்பைட் என்ற இரசாயனப்பொருள் பெரும்பாலும் மலசல கூட மற்றும் சமையலறைக்  கழிவு குழாய்களில் ஏற்படும் அடைபாடுகளை நீக்க பயன்படுகிறது. துயர சம்பவம் நடந்த பகுதி,கொழும்பு மாநகரின் புறநகர் பகுதி அக்குடும்பத்தினரின் மலசலகூடம் ஆனது வீட்டுடன் இணைந்த நிலையில் இருந்தது. ஆனால் கழிவுத் தொட்டியானது (Septic tank) ஏறத்தாழ 30 அடி தூரத்தில் வளவின் பின்புறத்தில் அமைந்திருந்தது. அதிக தூர காரணமாக அடிக்கடி அவர்களது மலக்கழிவு கொண்டுசெல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும். வழமையாக அவர்கள்  கல்சியம் காபைட் இணை பாவித்து அடைப்பு எடுப்பார்கள். அன்று மாலையும் அவ்வாறே ஏற்பட்டது. வீட்டு தலைவன், அவரது மச்சான் மற்றும்  பிள்ளைகள் உடனடியாக காரியத்தில் இறங்கினர். தலைவர் கல்சியம் காபைட் கல்லுகளை மலக்குழியினுள் (Toilet pan) போட்டு இறப்பர் குழாய் மூலம் கழிவுத்தொட்டியினை நோக்கி தள்ளினார். மற்றவர்கள் கழிவுத்தொட்டியின் மேற்பகுதியில் உள்ள சிறு துவாரம் மூலம் அடைப்பு எடுபடுகின்றதா? என்று மாறிமாறி அவதானித்து வீட்டு தலைவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தனர். வெகுநேரம் ஆகியும் அடைப்பு எதுவும் எடுபட்ட மாதிரி தெரியவில்லை. இருளும் சூழ தொடங்கிவிட்டது. கடைசியாக மச்சான்  தனது பொக்கற்றில் இருந்த சிகரற்று லைட்டறினை எடுத்து பற்றவைத்து பார்த்தார். ஒரு சிலவினாடிகள் தான் பெரும் வெடியோசை ஒன்று கேட்டது. மலசல கழிவுத்துத்தொட்டியினை சுற்றி நின்ற சிறுவர்கள், லைட்டரினை பற்ற வைத்து பார்த்த மச்சான் ஆகியோர் பலதூர அடிகளுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டனர். மலசல கழிவுத்தொட்டியின் சிமெந்து மூடியும் தூக்கி வீசப்பட்டது. அவர்களில் மச்சான் தலையில் ஏற்பட்ட அதிக காயம் காரணமாக உடனேயே மரணித்தார்.  இராணுவமும் போலீசாரும் குவிக்கப்பட்டு ஏதாவது வெடிபொருள் வெடித்ததா? என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது.

12/10/2025 இல் நடந்த சம்பவம்

2020 இல் நடந்த சம்பவம்

கல்சியம் காபைட் ஆனது நீருடன் தாக்கம் அடையும் பொழுது அசற்றலின் வாயு வெளிவரும் இவ்வாயுவானது மிகஎளிதாக தீப்பற்றி எரியும் தன்மை யுடையது மற்றும் இவ்இரசாயனத் தாக்கம் ஒரு புறவெப்பத் தாக்கம் இதன் காரணமாக தானாகவே தீப்பற்றும் சாத்தியக்கூறு உள்ளது. இங்கு மலசலக்கழிவுத்துதொட்டியானது ஓர் இறுக்கமான மூடிய அறை ஆகும் இங்கு அசற்றலின் வாயு தீ பற்றி ஏரியும்பொழுது  அதனுள் இருந்த வாயுக்கள் சடுதியாக பெருமளவில் விரிவடையும் அப்பொழுது எவ்வித வெடிபொருளும் இன்றி வெடிப்பு (Blast) சம்பவம் நிகழலாம்.

இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி பலவீடுகளில் அடிக்கடி  நடைபெறுகின்றது இந்த நிலையில் இவ்வாறு ஏற்படும் அடைப்புக்களை கார்பைட் பாவித்து எடுக்க முயற்சிக்க கூடாது. மாறாக வேறு பின்வரும் வழிமுறைகளில் ஒன்றினை கைக்கொள்வதன் மூலம் தேவையற்ற உயிரிழப்புக்களை தடுத்து கொள்ளலாம்

1. டிஷ் சோப்பும் வெந்நீரும்

கழிப்பறை காகிதம் அல்லது மலக் கழிவுகளால் ஏற்பட்ட அடைப்புகளை நீக்க இது உதவும். செய்முறை,  அரைக்கட்டி  அளவு டிஷ் சோப்பை டாய்லெட் பேசினில் போடவும் பிற்பாடு ஒரு வாளி நீரில், சூடான, ஆனால் கொதிக்காத (போர்சிலின் உடையாமல் இருக்க) நீரை எடுத்துக் கொள்ளவும். அதை இடுப்பு உயரத்திலிருந்து டாய்லெட் பேசினில் ஊற்றவும். இந்த கலவையை 15–30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். சோப் அடைப்பை இளக்கிவிடும். பிறகு, தண்ணீர் ஊற்றி  ஃபிளஷ் செய்யவும்.

2. பேக்கிங் சோடா மற்றும் வினிகர்

பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையின் இரசாயனத்தாக்கம் ஆபத்தில்லாத காபனீர்ஓட்ஸைட் வாயுவினை உருவாக்கும், இது அடைப்புகளை உடைக்க உதவும். செய்முறை,  ஒரு கப் பேக்கிங் சோடாவை டாய்லெட் பேசினில்  ஊற்றவும். பிறகு, இரண்டு கப் வெள்ளை வினிகரை மெதுவாக ஊற்றவும். நுரைக்க 30–60 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர், டாய்லெட்டை ஃபிளஷ் செய்யவும்.

3. பிளன்கர்  (Plunger) முறை

சாதாரண அடைப்புகளுக்கு, பிளன்கர் மிகவும் பயனுள்ள கருவியாகும். செய்முறை,  பிளன்கரின் ரப்பர் முனை முழுவதுமாக நீரில் மூழ்கியிருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால், கூடுதல் நீரை ஊற்றலாம். பிளஞ்ச் செய்யுங்கள். பிளன்கரைக் கொண்டு, பம்ப் செய்வது போல, அழுத்தி மேலும் கீழும் வேகமாகக் குலுக்கவும். இதை 15 முதல் 20 வினாடிகள் செய்யுங்கள். அடைப்பு நீங்கிவிட்டதா என்பதைச் சோதிக்க, பிளன்கரை அகற்றிவிட்டு, தண்ணீர் வடியும் வேகத்தைப் பார்க்கவும்.

4. விசேடமாக வடிவமைக்கப்பட்ட கம்பிகளை கொண்டு சீர்செய்யும் முறை (Flexible grabber claw)

மேற்குறிய முறைகளில் அடைப்பு எடுபடவிட்டால் அடைப்பு மிகவும் கடுமையானதாக இருந்தால், நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க வேண்டியிருக்கலாம்.அடைப்பை நீக்கும் முன், டாய்லெட் பேசினில்  தண்ணீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க, ஃபிளஷ் செய்ய வேண்டாம்

நன்றி