யாழில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் நேற்று காலை 7 மணியளவில் தனக்கு தானே தீ மூட்டியபடி புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் 32 வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்மில் பலருக்கு ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்பது குறித்து பெரும் புதிராக உள்ளது.
முதலில் நாம் சிக்கலான தற்கொலைகள் (complex suicide) பற்றி பார்ப்போம். சிக்கலான தற்கொலை என்பது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப்பாவித்து ஒருவர் தற்கொலை செய்துகொள்வது ஆகும். இவர்கள் தங்களின் மரணத்தினை நூற்றுக்கு நூறு வீதம் உறுதிப்படுத்தும் முகமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை தெரிவு செய்கின்றார்கள். உதாரணமாக நஞ்சினை உண்ட பின்பு தூக்கில் தொங்கல் அல்லது நீரில் மூழ்கல். சிக்கலான தற்கொலையில் இருவகை உண்டு
1. திட்டமிடப்படாத சிக்கலான தற்கொலைகள் (unplanned complex suicides) – இதில் தற்கொலை செய்பவர் முதலில் ஒரு முறையினை பாவிப்பார் அதில் வெற்றி அடையாத சந்தர்ப்பத்தில் அவர் தொடர்ந்து தனது முயற்சியில் அதாவது இறக்கும் வரை பலமுறைகளை பாவிப்பார்.
உதாரணமாக ஒருவர் பூட்டிய அறையில் தனது மணிக்கட்டினை பிளேட்டினால் அறுப்பார், உடனடியாக இறப்பு நிகழாது அவர் இரத்தம் ஒழுக ஒழுக நடந்து திரிந்துவிட்டு, மேசையில் லாச்சியில் உள்ள இரு காட் பனடோல்களை விழுங்குவார். அப்பொழுதும் இறப்பு உடனடியாக நிகழாது, இறுதியாக கூரையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு இறந்து கொள்வார்.
பொதுவாக இச்சம்பவத்தினை பார்வையிடும் சாதாரண பொதுமகன் ஒருவர் இரத்த கறையினை பார்த்து இது கொலை என்றே கூறுவார்கள்.
2. திட்டமிடப்பட்ட சிக்கலான தற்கொலைகள் (planned complex suicides) இதில் தற்கொலையாளி ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளை ஒரே நேரத்தில் பாவிப்பர். உதாரணமாக அதிகளவு நித்திரை குளிசைகளை விழுங்கிய பின்னர் அவர் உயரமான கட்டிடங்களில் இருந்து விழுதல்.
இங்கு நடைபெற்றதுவும் அவ்வாறான ஓர் சம்பவமாக இருக்கலாம்.

மேலுள்ள படமானது Planned complex suicide இணை விளக்குகின்றது இங்கு அவர் penetrating captive-bolt gun மூலம் தன்னைத்தானே சுட்டும் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளார். (penetrating captive-bolt gunshot இணை பற்றி அறிய பின்வரும் லிங்கினை பின்தொடரவும் சத்தமின்றி ஒரு வேட்டு ).
முற்றும்
Category: சட்ட மருத்துவம்
சட்ட மருத்துவம், மருத்துவத்தின் கிளை சிவில் அல்லது கிரிமினல் சட்ட வழக்குகளில் உண்மைகளை நிறுவ மருத்துவ அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் நீதியினை நிலை நாட்டல்
பட்டம் விடுதல் ஆபத்தானதா?
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று பட்டம் ஏற்றுதல். குறிப்பாக வடமராட்சி பகுதியில் பல இளைஞர்கள் இதன்பால் அதித அக்கறை கொண்டுள்ளனர். இது தவிர வருடம் தோறும் நடைபெறும் இந்திர விழாவில் பட்டம் ஏற்றுவதற்காக போட்டி நடைபெற்று பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படுவது வழமை ஆகும். பட்டம் ஏற்றி விளையாடுவது பொதுவாக ஆபத்தில்லாத விளையாட்டு ஆகும். எனினும் தூரதிஸ்டவசமாக சில சந்தர்ப்பங்களில் உயிர் இழப்பினை பட்டம் ஏற்றுதல் ஏற்படுத்திவிடுகின்றது. நாம் எவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடைபெறுகின்றது என அறிந்து கொண்டால் அநியாய உயிர் இழப்புக்களை தடுக்கலாம். ஒவ்வோர் சந்தர்ப்பங்களாக நாம் நோக்குவோம்.

1. பொதுவாக பட்டம் விடல் ஆனது வயல் வெளிகளிலும் கடற்கரைகளில் கும் இடம் பெறுகின்றது. மேற்குறித்த பிரதேசங்களில் இருக்கும் பாதுகாப்பற்ற கிணறுகள், பாரிய குழிகள் போன்றவற்றில் இளைஞர்கள் தவறி வீழ்வதன் காரணமாக இறப்பு ஏற்படுகின்றது. மாரி காலங்களில் இவற்றில் நீர் தேங்கி நிற்பதன் காரணமாக நீரில் மூழ்கியும் இறப்பு ஏற்படலாம்.
2. இவ்வாறே சிலர் மரங்களின் உச்சி, வீடுகளின் கூரைகள், வெளிச்ச வீடு போன்றவற்றில் இருந்து பட்டத்தினை ஏற்றுவார்கள் இதன்பொழுது அவர்கள் தவறி வீழ்ந்து இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
3. சிலர் பட்டத்தினை ஏற்றுவதற்கு உலோகத்தினால் ஆக்கப்பட்ட அல்லது கண்ணாடியினால் ஆக்கப்பட்ட சிறிய கம்பிகளை நூல் போன்று பாவிப்பர். இவை மின்சார கம்பிகளை தொடும் பொழுது அதன் மூலம் மின்சாரம் கடத்தப்படும். இதன் காரணமாக பட்டன் விடுபவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளவர். அத்துடன் அவருடன் கூட இருப்பவரும் மின்சார தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியம் உண்டு.
4. இவ்வாறு மெல்லிய கம்பிகளை பயன்படுத்தும் பொழுது சில சந்தர்ப்பங்களில் அது சிறுவர்களின் கழுத்தினை சுற்றி வளைத்து நெரிக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இவ்வாறு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கு மிகமிக மெல்லிய ஆனால் ஒப்பீட்டளவில் பலமான கம்பி பாவிக்கபடுவதினால் அது கழுத்து பகுதியில் வெட்டு காயங்களினை உண்டு பண்ணும். எமது கழுத்து ப் பகுதியில் தோலின் கீழ் பாரிய இரத்த நாளங்களில் குறிப்பிட அளவு அழுத்தத்தில் குருதி பாய்வதன் காரணமாகக் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வகையான மாஞ்சா நூல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது
5. சில சந்தர்ப்பங்களில் ஏறிய பட்டமானது திடீர் என நடு வீதியில் இறங்குவதன் காரணமாகக் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
6. சில சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் பட்டத்தினை ஏற்றுவதற்கு மோட்டார் சைக்கிளினை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலே உள்ள படத்தில் மாஞ்சா நூல்களை பயன்படுத்தி செய்த பட்டங்களினை போலீசார் பறிமுதல் செய்வதினையும், மாஞ்சா நூல் கழுத்தில் இறுக்கி இறந்த சிறுமியின் படத்தினையும் காணலாம்.
முற்றும்

சிசு மரணம் – வைத்தியர் காரணமா?
இது அவளுக்கு இரண்டாம் பிரசவம். முதல் பிரசவம் சுகப்பிரசவமாய் தான் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இம்முறை அவள் மகப்பேற்று நிபுணரை ஓர் தனியார் கிளினிக்கில் சந்தித்து காட்டியிருந்தாள். அவளின் கணவர் கூலி வேலை செய்பவர் என்பதால் அவர்களிடம் வெளியே உள்ள தனியார் வைத்திய சாலையில் பிரசவம் பார்க்க முடியவில்லை என்பதால் அரச வைத்திய சாலையில் அனுமதியாகியிருந்தாள். வெளியில் அவள் காட்டும் பொழுது ஒவ்வோர் முறையும் மகப்பேற்று நிபுணர் ஸ்கேன் செய்து சொல்லுவார் இம்முறை ஆண் பிள்ளை எதுவித பிரச்சனையும் இல்லை என்று, அதை கேட்டு அவளும் சதோசமாக இருந்தாள். அன்று மாலை அவளுக்கு மெதுவான வயிற்று குற்று தொடங்கியது. அவளும் உடனடியாக அரச வைத்திய சாலையின் குறித்த விடுதியில் அனுமதியானாள். அடுத்த நாள் அவளுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகுதான் பிரச்சனை ஆரம்பமாகியது. பிறந்து அரை மணித்தியாலங்களில் குழந்தை மூச்சு விட சிரமப்பட்டது. குழந்தை உடனடியாக பேபி ரூமில் அனுமதிக்கப்பட்டது, அடுத்த மணித்தியாலத்தில் குழந்தை இறந்த செய்தி தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு நுரையீரல் இல்லாமை காரணமாகவே இறந்தது என்று தாயாரிடம் கூறினார். குழந்தையின் உறவினர்களுக்கும் தந்தையாருக்கு பலத்த சந்தேகங்கள், மகப்பேற்று நிபுணர் ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை நன்றாக இருப்பதாக கூறினார்கள் இது எவ்வாறு? மற்றும் நுரையீரல் இல்லாமல் குழந்தை பிறக்கும் வரை 3kg நிறை உடையதாக குழந்தை வளர்ந்தது எவ்வாறு? இறுதியாக இறந்த குழந்தையினை உடற் கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையினை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் கடடளையிட்டது. பல இழுபறிகளுக்கு பின்னர் உடற் கூராய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உடற் கூராய்வின் பொழுது குழந்தையின் வயிற்று பகுதியில் உள்ள அங்கங்கள் பிரிமென்தகட்டில் இருந்த பாரிய ஓட்டை ஊடாக சென்று நெஞ்சறை பகுதியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வாறான நோய் நிலைமை மருத்துவத்தில் DIPHARMATIC HERNIA என்று அழைக்கப்படும். அதாவது இது ஓர் வகையான ஓர் ஹெர்னியா ஆகும். அத்துடன் குழந்தையின் இரு நுரையீரல்களும் பகுதியளவிலே தான் விருத்தி அடைந்திருந்தமை (HYPOPLASIA) கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது வயிற்று அங்கங்களின் நெருக்குவாரம் காரணமாக நுரையீரல் பொதுவாக விருத்தி அடையாமல் இருக்கும்.
இந்த நோய் நிலைமை உயிரோடு பிறக்கும் 10000 குழந்தைகளில் ஒருவருக்கு எற்பட வாய்ப்புக்கள் உண்டு. மேலும் குழந்தை தாயின் கருவறையில் வளரும் பொழுது சுவாசிக்க அதன் நுரையீரல் தேவைப்படாது. தொப்புள் கொடி மூலமே குழந்தைக்கு தேவையான ஓட்ஸிசன் போன்றவை கடத்தப்படும். குழந்தை பிறந்த உடனேயே சுவாசிக்க வேண்டிய தேவை இருப்பதால் அதற்கு நுரையீரலின் தொழில்பாடு அவசியமாகின்றது. இதனால் குழந்தை சாதாரண குழந்தைகள் போன்றே பிறக்கும் வரை வளர்கின்றன. மகப்பேற்று நிபுணர்கள் ஸ்கேன் செய்து இது போன்ற நோய் நிலைகளை கண்டுபிடிப்பதில் போதிய நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் அல்லர் மாறாக NEONATAL RADIOLOGIST/ RADIOLOGIST போன்றவர்களே இது போன்ற நோய் நிலைகளை கண்டுபிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
முற்றும்

வாகன விபத்தும் வாகன நெரிசலும்..
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் நான் வீதிவழியே பிரயாணித்து கொண்டிருந்த பொழுது, ஓர் நாற்சந்தியில் பெரும் வாகன நெரிசல். ஏராளமான மோட்டார் சைக்கிள்களும் மற்றைய வாகனங்களும் வீதியினை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நானும் வாகனத்தினை நிறுத்தி விட்டு நடந்து சென்று பார்த்தால், அது ஓர் விபத்து சம்பவம் மோட்டார் சைக்கிள் ஒட்டி இரத்த வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தார். அவரின் மோட்டார் சைக்கிளும் விபத்திற்கு உள்ளான மோட்டார் காரும் வீதியின் நட்ட நடுவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆம்புலன்ஸ் வேறு மிக சத்தத்துடன் சைரன் எழுப்பியபடி நோயாளியினை அணுக முடியாமல் சில நூறு மீற்றர் தூரத்தில் வந்துகொண்டிருந்தது. நான் அதில் மும்முரமாக வாக்குவாத பட்டு கொண்டிருந்த ஒருவரிடம் சொன்னேன் விபத்துக்குள்ளான வாகனங்களினை வீதியோரமாக நகர்த்தி ஆம்புலன்ஸ் வருவதற்கும், மற்றைய வாகனங்கள் செய்வதற்கு வழி விடும் படி கேட்டேன். அவர் சொன்னார் போலீசார் வந்த பிறகே வாகனத்தினை வீதி ஓரத்திற்கு எடுக்கலாம் என்று, நான் கூறினேன் நீங்கள் கைத்தொலைபேசி மூலம் விபத்துக்களான இரு வாகனங்களின் நிலையினினையும் போட்டொ எடுத்த பின்னர் வாகனங்களினை அப்புறப்படுத்தலாம் அல்லது வாகனங்களின் ரயரின் நிலையினை வெண்கட்டியினால் அல்லது அல்லது கல் வேறு ஏதாவது பொருள் ஒன்றினால் வீதியில் குறித்த பின்னர் அகற்றலாம் தானே என்று, அதற்கு குறித்த வாகனத்தின் சாரதி மறுத்த நிலையில் வீதி போக்குவரத்து போலீசார் வரும் வரை ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வீதியில் காத்திருக்க நேரிட்டது.
இவ்வாறு வீதியில் நிற்கும் பொழுது ஓர் போலீஸ் மேலதிகாரிக்கு கோல் பண்ணி சம்பவத்தினை சொன்னேன். அடுத்து அவர் கூறிய மறுமொழி தான் தூக்கி வாரிப்போட்டது. அவர் சொன்னார் வாகனங்களின் நிலையினை போட்டோ எடுத்த பின்னர் அல்லது வேறு விதத்தினால் அடையாளப்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தல் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் வடக்கு மாகாண மக்கள் அவ்வாறு செய்ய விட மாட்டார்கள். நீங்கள் வீதியில் பொறுமையாக இருங்கள் என்று, பிறகு சொன்னார் நீங்கள் உங்கள் வாகனத்தினை தயவு செய்து எடுக்க வேண்டாம் அவ்வாறு செய்தால் சிலவேளை அவர்கள் உங்கள் வாகன கண்ணாடியினை உடைத்து விடுவார்கள் எனவே பொறுமையாக இருங்கள் சேர் என்றார்.
மக்களின் அறியாமை காரணமாகவும் சில சந்தர்ப்பங்களில் போலீசாரின் பக்க சார்பான செயற்பாடுகள் காரணமாகத்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அறிவோம் தெளிவோம்.
முற்றும்

பெண்ணின் மனது ஆழ் கடல்

அவள் 15 வயது நிரம்பிய பாடசாலை சிறுமி தனது தமக்கையாருடன் வயிற்று குற்றுக்காக வெளி நோயாளர் பிரிவில் மருந்து எடுப்பதற்காக வந்திருந்தாள். வரிசையில் காத்திருக்கும் பொழுது அவளுக்கு குத்து அதிகமாகியது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள் அங்கு ஒருசில நிமிடங்களில் அவள் ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதன் பின்னர் தான் பிரச்சனை ஆரம்பித்தது. வைத்தியர் இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தார். அவர்களும் சீருடையில் குழுவாக வந்து வைத்தியசாலையில் சக நோயாளிகள் முன்பாக விசாரணை செய்தார்கள். முக்கியமாக அவர்கள் சிறுமியிடம் இந்த கற்பத்திற்ற்கு யார் தான் காரணம் என்று அறிய முயன்றார்கள் ஆனால் முடியவில்லை. இது தவிர வைத்தியர்கள், மருத்துவ மாணவர்கள், தாதியர், தாதிய மாணவர், சிற்றுளியர் ஆகியோர் தாங்கள் ஏதோ பொலிசாருக்கு உதவ வேண்டும் என்று எண்ணியோ அல்லது தமது மன வக்கிரத்தினை தீர்க்கும் முகமாக பல்வேறு கேள்விகளை கேட்டு மனோ ரீதியில் துன்புறுத்தினர் இறுதியில் எல்லோருக்கும் ஏமாற்றமே. ஒரு சில நாட்களின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி ஆகிய என்னிடம் அச்சிறுமியை பொலிஸார் அழைத்து வந்திருந்தனர். அவர்களின் முதல் கோரிக்கை சேர், கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பதை கேட்டு சொல்லுங்கள் என்பது தான். நானும் முதல் நாள் இரு மணித்தியாலங்கள் விசாரித்தேன், பதில் காண முடியவில்லை.
இவ்வாறே இரண்டாம் நாளும் ஒரு மணி நேரம் விசாரித்தேன், பதில் பெற முடியவில்லை. பின்னர் சிறுமி மனரீதியில் மிகவும் பாதிக்கப் பட்டு இருந்தமையினால் மன அழுத்தத்தை குறைக்கும் முகமாக கவுன்சிலிங் கிளினிக்குக்கு அனுப்பினேன். அங்கும் பெண் கவுன்சிலர் ஒருவர் சில மணி நேரம் விசாரித்தார். அப்பொழுது தான் பல அதிர்ச்சி காரணமாக உண்மைகள் வெளிவந்தன. சிறுமியின் இரத்த உறவினர் ஒருவரே கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தார். குடும்பத்தாரின் அழுத்தம் காரணமாகவே சிறுமி உண்மையினை மறைத்து வந்தார்.
சிலசந்தர்ப்பங்களில் ஓர் சந்தேக நபரிடம் இருந்து அல்லது குற்றவாளியி் டம் இருந்து சில தகவல்களை பெற பல மணி நேரம் செலவிட வேண்டும். குறிப்பாக பெண்களிடம் இருந்து. இதன் காரணமாகவே 5 மணிநேரம் அல்லது 8 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இவ்வாறு பல மணிநேரம் பல நபர்களினால் ஒருவரிடம் இருந்து வெவ்வேறு வாக்கு மூலங்கள் பெறப்பட்டு இறுதியில் ஒன்றாக இருந்து அலசி ஆராயப்படும். இதன் பின்னரே விடயங்கள் தெரியவரும். சில சந்தர்ப்பங்களில் விசேட மனோ தத்துவ நிபுணர்களின் பரிசோதனைக்கு உட் படுத்தப்படுவர் .
ஈழத்தில் பலியாகும் சிறுவர்கள்
அண்மையில் தமிழ் நாட்டில் ஆழ் துளை கிணறில் தவறி வீழ்ந்த சுர்ஜித் என்ற சிறுவனுக்காக பலரும் கண்ணீர் வடித்தார்கள். ஆனால் எம்மை சூழ அயல் கிராமங்களில், மாவட்டங்களில் இதனை ஒத்த சம்பவங்களினால் பரிதாபமான முறையில் இறக்கும் சிறுவர்களை நாம் கண்டு கொள்வதே இல்லை. ஒவ்வோர் வருடமும் கார்த்திகை மாதம் தொடக்கம் தை மாதம் வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெய்யும் வட கீழ் பருவ பெயர்ச்சி மழையின் காரணமாக ஒவ்வொரு வருடமும் மேற்குறித்த மாகாணங்களில் குறைந்தது 5 சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறுகளில் தவறுதலாக வீழ்ந்து இறப்பர். இவ்வருடமும் அவ்வாறே நடைபெற்றுள்ளது.

மேலே உள்ள படமானது இலங்கையில் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளின் தோற்றங்களினை காட்டுகின்றது.
பாதுகாப்பான கிணறு என்றால் என்ன? ஓர் பாதுகாப்பான கிணறு என்பது தூய குடிநீரினை வழங்குவதற்கும், தவறுதலாக நீரில் வீழ்ந்து உயிரிழப்புகளை தடுப்பதற்கும், வெள்ள நீர் போன்றன உட்புகாத வகையில் அமைக்கப்படுவது ஆகும். இங்கு எவ்வாறு உயிரிழப்புகள் எவ்வாறு ஏற்படுகின்றது, எவ்வாறு அவற்றினை தடுக்கலாம் என்பது பற்றி விளக்குகின்றேன்.
பொதுவாக கிணறுகளுக்கு சுற்றிவர இருக்கும் சுவர் கட்டு இல்லாமல் இருப்பதன் காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகின்றன. மழையின் காரணமாக ஏற்படும் வெள்ளத்தினால் கிணறுகளின் அமைவிடம் தெரியாமல் போவதினால் விபத்துகள் ஏற்படுகின்றது. இதன் காரணமாக அப்பிரதேசத்திற்கு அறிமுகமானவர்களும் அறிமுகமற்றவர்களும் விபத்திற்கு உள்ளாகின்றனர். கிணற்றின் சுற்று சுவர் ஆனது குறிப்பிட்ட அளவு உயரம் வரை (3 அடி – சில சந்தர்ப்பங்களில் 5 அடி ) உள்ளதாக கிணறு முழுக்க சுற்றி கட்ட வேண்டும் அப்பொழுது தான் சிறுவர்கள், ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள் தவறி விழுவதினை தடுக்கலாம். பொதுவாக கிணற்று நீரினை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் சுவரின் உயரத்தினை குறைப்பதோ அல்லது முற்றாக இல்லாமல் செய்வதோ விரும்ப தக்கது அல்ல.

மேலே உள்ள படமானது உலகத்தில் உள்ள சில கிணறுகளின் தோற்றங்களினை காட்டுகின்றது
வயல் வெளிகள், கடற்கரைகள் போன்றவற்றில் உள்ள கிணறுகளில் பெரும் பாலும் சிறுவர்கள் பட்டம் ஏற்றி விளையாடும் பொழுதும், கிரிக்கெட் விளையாடும் பொழுதும் பின்னோக்கி நகரும் பொழுது தவறுதலாக வீழ்ந்து மரணத்தினை தழுவிக்கொள்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் மாரி காலத்தில் இவ்வாறான பாதுகாப்பற்ற கிணறுகளில் மீன் பிடித்து விளையாடும் பொழுது தவறுதலாக உள்ளே வீழ்ந்து இறக்கின்றனர், மேலும் உள்ளே இறங்கி நீந்தி விளையாடும் பொழுதும் பூரணமாக கட்டிடபடாத காரணத்தினால் மண் மற்றும் பாரிய கல் போன்றன வீழ்ந்தும் இறப்புக்கள் நடைபெற்றுள்ளன.
வேறு சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற கிணறுகளில் இருந்து நீரினை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் குறுக்கே போடப்படும் மரங்கள் பொதுவாக தென்னங் குற்றி மழையினால் அதிக நீரினை உறிஞ்சி, நீர் அள்ளும் பொழுது பாரம் தாங்காமல் முறிந்து வீழ்ந்து மரணத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது.
இனி எவ்வாறு இவ்வாறான அநியாய மரணங்களினை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம் முதலில் கடற்கரை, வயல்வெளி போன்றவற்றில் உள்ள தேவையற்ற பாகாப்பற்ற கிணறுகளினை அல்லது குழிகளினை முற்றாக முடிவிடவேண்டும். மேலும் எதிர் கால பயன்பாட்டிற்கு தேவையான கிணறுகளை அடையாளம் கண்டு அவற்றினை பாதுகாப்பான கிணறுகளாக மாற்றி புனரமைக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச, அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளினை பெருகொள்ளலாம்.
வெள்ளம் காரணமாக மறைபடும் சாத்தியம் உள்ள பாதுகாப்பற்ற கிணறுகளை அல்லது குழிகளினை சுற்றி தடிகளை நாட்டி சிவப்பு துணிகளையோ அல்லது பொலித்தினையோ பயன்படுத்தி தெளிவாக அடையாளம் இடவேண்டும். மிக வறுமையில் உள்ளவர்கள் குறைந்தது ஒவ்வோர் வருடமும் பாதுகாப்பற்ற கிணற்றின் குறுக்காக போடப்பட்ட மரத்தினையாவது மாற்றுவது நல்லது. மேலும் கிணற்றின் சுற்று சுவரின் உரம் குறைவாக இருந்தால் கிணற்றினை சுற்றி மூடி வைப்பது நல்லது
சில சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அற்ற வாய்க்கால் போன்றவற்றில் வீழ்ந்து சிறுவர்கள் இறந்துள்ளனர். மேலும் பெற்றோர் சிறுவர்களின் நடமாட்டத்தினை எப்பொழுதும் அவதானித்த வண்ணம் இருக்க வேண்டும் அதனை விடுத்து தொலைக்காட் சி தொடரிலோ அல்லது கைத்தொலை பேசியிலோ மூழ்கி தன்னிலை மறப்பது சிறுவர்களின் உயிரிழப்புகளை மேலும் அதிகரிக்கும்.

மிக முக்கியமாக 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வீடுகளில் உள்ள பாரிய நீர் நிறைந்த பரல்கள், நீர்த்தாங்கிகள் என்பவற்றினுள் தவறுதலாக விழுந்து உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எனவே இவ்வாறான சிறுவர்கள் தொடர்பாக அதிக அவதானமாக இருக்க வேண்டும்.
முற்றும்

மரணித்த மனிதம்
ஒரு சில நாட்களுக்கு முன்னர் யாழில் இளைஞர் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு வாளால் வெட்டப்பட்டு வீதியோரம் தூக்கி வீசப்பட்டார். பொதுமக்கள் எவருமே அவனை தொடவும் இல்லை அவனை வைத்திய சாலையில் அனுமதிக்கவும் இல்லை. அவர்கள் பொலிசாருக்கு அறிவித்தனர். அதனை தொடர்ந்து அவ்விடத்தில் எற்கு வந்த பொலிஸார் குற்றியிராக இருந்த இளைஞனை வைத்திய சாலையில் அனுமதிக்காது, வீதியோரத்தில் குற்று உயிராக இருந்த அவனிடம் இருந்து வாக்கு மூலம் போன்று தகவல்களை ஏற்தாழ 30 நிமிடங்களுக்கு மேலாக பெற்றனர் அதன் பின்னரே வைத்திய சாலையில் அனுமதித்தனர். அதிக இரத்த போக்கு காரணமாக குருதி மாற்றீடு மற்றும் சத்திர சிகிச்சை போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்டான் . அதன் பின்னர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனை அவதானித்த ஊடகங்கள் அவன் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன அவ்வாறே இணையதளங்களும் செய்தி வெளியிப்பட்டுள்ளது.
ஊடக விதிகளின் அடிப்படையில் ஓர் சம்பவத்தினை தீர விசாரித்து உறுதி செய்யத பின்னரே செய்தியாக வெளியிட வேண்டும். அதாவது ஓர் சம்பவத்தினை கண்ணால் கண்டலும் காதினால் கேட்டாலும் போதாது. தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.
நம்மில் பலர் இவ்வாறு தாக்கபடுபவர்களை அல்லது வீதி விபத்தில் சிக்குபவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க பின்னிற்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் தாங்கள் எதிர்காலத்தில் போலீசாரின் விசாரணை மற்றும் நீதி மன்ற விசாரணை போன்றவற்றை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதே. முதலில் நாம் ஒன்றினை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் நாம் சாட்சிகள் மட்டுமே. நாம் குற்ற வாளியோ அல்லது பாதிக்கபட்ட தரப்போ அல்ல. வாய்ப்பேச்சிலும் முகநூலிலும் தங்களை நியாயவான்களாகவும் அநியாயத்திற்கு எதிராக பொங்குபவர்களாகவும் இருப்பவர்கள் நியத்தில் அவ்வாறு இருப்பதில்லை. இவ்வாறு பிரச்சனைகளுக்கு பயப்டுபவர்கள் அவசர ஆம்புலன்ஸ் சேவையினை அழைத்து காயப் பட்டவர்களுக்கு உதவி செய்யலாம். தற்பொழுது இந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை நாடு பூராவும் உள்ளது . இங்கு அழைப்பவர்களின் விபரம் பொதுவாக பொலிஸாருக்கோ அல்லது வேறு யாருக்குமோ பொதுவாக தெரியப்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
உயிருக்கு போராடியவரை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் ….
முற்றும்

என்கவுண்டரினை எதிர்ப்போம்
இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டு வண்புணர்வுக் கொலை என சந்தேகிக்கப்பட்டு சந்தேக நபர்களாக நால்வர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்கள் பொலிஸாரின் காவலில் இருந்த நிலையில். அவர்கள் நால்வரும் பொலிசாரிடம் ஆயுதத்தை பறித்துக்கொண்டு தப்பியோட முயற்சித்ததாக அதேபொலிசாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு சமூக வலைத்தளங்களில் இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது திட்டமிட்ட கொலை என்று நன்றாகவே எல்லோருக்கும் தெரியும். நான்கு பேரில் ஒருவரைக் கூட பொலிஸாரினால் உயிருடன் பிடிக்க முடியவில்லை என்பதே மிகப்பெரிய புதினம் ஆகும் .
இந்திய நீதித்துறை வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய இடத்தில் மக்கள் சந்தோசமாக கொண்டாடிதீர்க்கின்றார்கள் , அது போதாததற்கு இலங்கையிலும் பலர் மற்றும் சில படித்தவர்களும் கூட பொலிசாரின் இந்த சட்டமீறலை நீதியென நம்பி மகிழ்ச்சி கொள்கின்றனர். இலங்கையில் கூட இவ்வாறு என்கவுண்டர் என்றழைக்கப்படும் முறையில் சந்தேக நபர்கள் பொலிஸாரினால், சிறை காவலர்கள் மற்றும் ஆயுத படைகளினால் கடந்த காலங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இனி நாம் ஏன் இவ்வாறான சம்பவங்களினை வன்மையாக எதிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

- ஒருவர் நீதிமன்றினால் நடாத்தப்படும் பூரண விசாரணையினை தொடர்ந்து தான் அவர் குற்றவாளியா அல்லது குற்றம் அற்றவரா என தீர்மானிக்க முடியும். அதுவரை அவர் சந்தேக நபராக தான் கருதப்பட வேண்டும். இங்கு நீதிமன்ற விசாரணைகள் எதுவும் முடிவுறாத நிலையில் போலீசார் நீதி வழங்கியுள்ளனர்.
- பொலிஸாருக்கோ, சிறைக்காவலருக்கோ அல்லது ஆயுத படைகளுக்கோ இவ்வாறு நீதி வழங்குவதற்கு எவ்விதமான அருகதையும் கிடையாது. அவர்கள் எப்பொழுதும் தங்களுக்கு சாதகமான இலாபம் தரக்கூடிய விடயங்களையே செய்வர். இந்தியாவின் காஸ்மீரில் இராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வேண்டும் என்ற ஆசையினால் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் இவ்வாறு நூற்றுக்கு கணக்கான இளைஞர்கள் கொல்லப்படடனர். இவ்வாறு சட்ட விரோத கொலைகளை செய்த பிடிபட்ட ஒருசில அதிகாரிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறே இலங்கையிலும் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட சகல சந்தேக நபர்களும் பயங்கர வாதிகளோடு தொடர்புடையதாக்கப்பட்டனர்.
- இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் போலீசார் விஞ்ஞான ரீதியான புலனாய்வுகளை (scientific investigations) பெரிதும் மேற்கொள்வதில்லை. உதாரணமாக ஓர் சம்பவத்தில் பாரிய குற்ற செயல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவர்கள் அநேகமான சந்தர்ப்பத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பொய் வாக்கு மூலம் பெறப்பட்டு அப்பாவியான ஒருவர் குற்றவாளியாக்கப்படுவர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் இருந்த பலர் பல வருடங்களில் பின்னர் குற்றவாளி அல்லர் என விடுதலை செய்யப்பட்ட சம்பவங்கள் எமது நாளாந்த வாழ்க்கையில் நடைபெறும் நிலையில் ஒருவரினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் அவருக்கு மரண தண்டனை அளிப்பது எவ்விதத்திலும் நியாயமாகாது.
- போலீசார் அரசியல் செல்வாக்குள்ள அல்லது பண வசதியுள்ள சந்தேக நபர்களினை கைது செய்தால் இவ்வாறு செய்யவர்களா? என்றால் பதில் நிச்சயம் இல்லை என்பதே ஆகும். எனவே இவ்வாறான சம்பவங்களில் நிச்சயம் பாதிக்கப்படுவது ஏழைகளும், அரசியல் செல்வாக்கற்ற சாதாரண பொதுமக்களும். இன்று பலர் தனக்கு வந்தால் இரத்தம் மற்றவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னி என்ற மனநிலையில் தான் உள்ளனர்.
- இன்று பலரும் கூறிக்கொள்வது யாதெனில் சந்தேக நபர்களினை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினால் அவர்கள் பெரும்பாலும் தப்பிவிடுவார்கள் என்பதே ஆகும். இவர்கள் இவ்வாறு தப்புவதற்கு ஏதுவான முக்கிய காரணிகளில் ஒன்று பொலிஸாரின் பிழையான விசாரணைகள், சாட்சியங்கள் மற்றும் சான்றுப்பொருட்டுகள் ஆகும். போலீசார் முதலில் மேற்குரியவற்றில் ஏற்படும் பிழைகளை திருத்துவத்தினை விடுத்து அப்பாவிகளை பழி வாங்குவது அல்லது அவர்களினை தமது பதவி உயர்வுக்கு பாவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடு. பொலிஸாரின் விசாரணை செயற்பாட்டுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
- இவ்வாறு கூட்டு வன்புணர்வு கொலை நடைபெறும் பொழுது அதில் சந்தேக நபர்களாக பெயரிடுபவர்கள் யாவரும் அந்த கொடூர செயலினை செய்திருக்க மாட்டார்கள். ஆனால் குற்ற செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்திருப்பர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு நீதி மன்றத்தில் வாதாடாமல், தீர்ப்பெழுதாமல் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதி போன்றோர் செயற்படவேண்டும். இல்லாவிடில் உரிய நீதியினை நாம் எதிர்பார்க்க முடியாது. இதன் காரணமாகவே வளர்ச்சியடைந்த மேலைத்தேச நாடுகளில் இவ்வாறன சம்பவங்களின் பொழுது பெரும்பாலும் விஞ்ஞான ரீதியான சான்றுகளை (scientific evidence) சமர்ப்பிக்கின்றனர். அதனை பெரும்பாலும் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். தேவை ஏற்படும் பொழுது எவ்வாறு சான்றுகள் சேகரிக்கப்பட்டன , ஆராயப்பட்டன என்று நீதிமன்றில் மீளுருவாக்கம் (reproducible) செய்யப்படுகின்றது.
- தண்டனை வழங்க முதல் உண்மையான குற்றவாளி அவர்கள் தானா என்று உறுதி செய்ய வேண்டும். அதற்கு நீதிமன்றமே எமக்குள்ள ஒரேயொரு தெரிவாகும். குற்றவாளிகளுக்கு போலீசாரே தண்டனை வழங்குவது என்றால் நீதிமன்றம் எதற்கு நீதிபதிகள் எதற்கு அவர்களுக்கு வீணாக சம்பளம் எதற்கு? சட்டம் குற்றவாளிகளுக்கு ஒழுங்காக தண்டனை வழங்குவது இல்லை என்றால் ஒழுங்கான சட்டத்தை உருவாக்கவும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கவும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனை விடுத்து இவ்வாறு நடைபெறும் சட்ட விரோத கொலைகளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்க கூடாது.
எனவே வெறும் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறான சட்ட விரோத கொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அறிவு பூர்வமாக சிந்திப்போம் செயற்படுவோம்.
முற்றும்

சாவுக்கு பயந்தவன்
அன்று காலையில் இருந்தே பல தொலை பேசி அழைப்புக்கள், அவை யாவும் ஒரு இளைஞனின் மரணத்துடன் தொடர்பானது. தொடர்பு கொண்டவர்கள் எல்லோரும் சொன்னார்கள், இது ஓர் சந்தேகத்திற்குரிய மரணம் ஆதலால் நன்றாக ஆராய்ந்து தீர்மானிக்கும் படி. நானும் அந்த குற்றம் நடைபெற்ற பிரதேசத்தினை போலீசாரின் உதவியுடன் சென்றடைந்தேன். அது ஓர் கட்டிட தொகுதியின் பின்புறம் உள்ள ஓர் சிறிய வெளி. அதில் ஓர் மரம் அதில் தான் அவனது உடல் தூங்கிக் கொண்டிருந்தது. நான் சென்ற உடனேயே அங்கு கூடி இருந்தவர்கள் சொன்னார்கள் அவனின் தலையினை பார்க்கும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். நானும் அவதானித்தேன் அவனது தலை மற்றும் முகம் ஓர் தடித்த துணியினால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் தூக்கினை மாட்டுவதற்கு எந்தவொரு ஓர் உபகரணமும் இல்லை மேலும் சம்பவம் நடைபெற்ற பிரதேசம் ஓர் திறந்த வெளி. இவை நிலைமையினை மேலும் சிக்கலாக்கியது. கூட இருந்த உறவினர்களின் குற்றசாட்டு அவன் முகத்தில் துணி போடப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் தான் தூக்கிலிடப்பட்டான் என்பது ஆகும்.
குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெற்ற புலன் விசாரணைகளும் உடற் கூராய்வு பரிசோதனை முடிவுகளும் எதுவிதமான கொலை நடைபெற்றமைக்கான எதுவிதமான சாதகமான முடிவுகளையும் காட்டவில்லை. அவ்வாறே இரத்த மற்றும் சல பரிசோதனைகளும் எதுவிதமான கொலை நடைபெற்றமைக்கான சாதக முடிவுகளையும் காட்டவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில் தான் இறந்தவரின் உளவியல் உடற் கூராய்வு (psychological autopsy) பரிசோதனை தகுதி வாய்ந்த சட்ட மருத்துவ மனோதத்துவ நிபுணர்களினால் (Forensic psychiatrist) நடத்தப்பட்டது. இதற்காக இறந்தவரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் விரிவான வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன் இறந்தவரின் தொலை பேசி கலந்துரையாடல்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. முடிவாக நிபுணர்களின் குழு இறந்தவர் மரணத்துக்கு பயந்து தான் முகத்தினை மூடிக்கொண்டு தூக்கில் தொங்கினார் என்று கூறியது. இவ்வாறே சிலசந்தர்ப்பங்களில் வாயினுள் துணி போன்றவற்றினை அடைந்து கொண்டும் தொங்குவார்கள் ஏன்னெனில் சத்தம் வெளியில் வருவதனை தடுப்பதற்கு என்ற மனோவியலே காரணம் .
முற்றும்

ஆபத்தான அழகு …
அண்மையில் பிரேசில் நாட்டினை சேர்ந்த யுவதி ஒருவர் HIV நோய் தொற்றலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வைத்தியசாலை சென்றார். அவரிடம் வைத்தியர்கள் அவருக்கு எவ்வாறு HIV தொற்றியது என்பது பற்றி கேட்ட பொழுது, யுவதி தான் ஒருவருடனும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளவில்லை என தெரிவித்தாள். முதலில் வைத்தியர்கள் நம்பவில்லை, இதனை தொடர்ந்து அவள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த பட்டபொழுது அவள் கன்னி கழியாதவள் என தெரியவந்தது. மேலும் அவள் பச்சை குற்றவில்லை அத்துடன் அவள் போதைப்பொருள் பாவனையாளரும் அல்ல. அதனை தொடர்ந்து வைத்தியர்கள் அவளுக்கு எவ்வாறு HIV தொற்றி இருக்க முடியும் என ஆராய்ந்த பொழுது தான் அவள் அதனது சிறுவயதில் HIV தொற்றுக்கு உள்ளான உறவினர் ஒருவரின் manicure செய்யப்படும் உபகரணங்களை பாவித்தமை தெரிய வேண்டி வந்தது. எனினும் வைத்திய நிபுணர்கள் இதனை நம்பவில்லை. அவர்கள் இருவரினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அதில் உள்ள HIV வைரஸின் DNA ஆனது ஒப்பீட்டு ஆராயப்பட்டது. அப்பொழுது தான் வைத்தியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது அதாவது இருவரின் இரத்த மாதிரியில் உள்ள வைரஸின் DNA யின் சில பகுதிகள் மிக நெருங்கிய ஒற்றுமையினை வெளிக்காட்டின. இதன் மூலம் இதுவரை காலமும் manicure போன்ற அழகு ஆக்கல் செயன்முறையின் பொழுது HIV தொற்றாது என நம்பப்பட்டு வந்தமை பொய்யானது.
அவளின் தாயாரும், ஆண் நண்பரும் கூடவே HIV பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அதன் முடிவாக அவர்களுக்கு குறித்த நோய் நிலை இல்லை என்பதுவும் அவளின் தாயார் தான் உண்மையான தாயார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவின் CDC (Centers for Disease Control and Prevention) நிறுவனமானது சுகாதாரமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் அக்குபஞ்சர், பச்சை குத்துதல் மற்றும் உடல் உறுப்புகளில் துளை இட்டு ஆபரணங்கள் அணிதல் போன்றவற்றினால் HIV தொற்றும் ஆபத்துள்ளது என்று ஏற்கனவே பட்டியல் இட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே சுகாதாரமற்ற அழகு ஆக்கல் சாதனங்களினாலும் HIV வைரசு ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு தொற்ற சாத்தியம் உள்ளது. இலங்கையில் சுகாதார துறையினர் அழகு ஆக்கல் நிலையங்களினை கண்காணித்து நெறிப்படுத்துகின்றனரா? என்பதே தற்போதுள்ள கேள்வி.
உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் முதலாம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. “சமூகங்கள் நிலைமையை மாற்றலாம் (Communities make the difference)”என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 3,507 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2,391 ஆண்களும், 1,116 பெண்களும் காணப்படுகின்றனர். இலங்கையின் பொறுத்தவரை இங்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக பாதுகாப்பற்ற உடலுறுவு காணப்படுகின்றது. அது தவிர நோய்தொற்றுள்ள தாயிடம் இருந்து பிள்ளைக்கு தொப்புள் கொடி மூலமாகவும் கடத்தப்படுகின்றது. இலங்கையில் குருதி மாற்றீடு சேவை மிக சிறந்த தரத்தில் இருப்பதால் அதாவது குருதி வழங்குனரின் குருதியில் HIV, MALARIA, HEPATITIS போன்ற நோய்நிலைகளை உண்டாக்கும் கிருமிகள் உள்ளனவா என்று பரிசோதித்த பின்னரே இன்னொரு நோயாளிக்கு வழங்கப்படும் இதன் காரணமாக குருதி மாற்றீடு காரணமாக இலங்கையில் எச்ஐவி தொற்றுவதற்கான சந்தர்ப்பம் அரிதான ஒன்றாகும். இவ்வாறே இலங்கையில் சகல வைத்திய சாலைகளிலும் நோயாளிகளுக்கு ஒருமுறை மட்டும் பாவிக்கும் ஊசி பாவிக்கப்படுவதினால் இவ்வாறு ஊசிகள் மூலம் தொற்றுவதும் அரிது.
இலங்கையில் மாவட்ட அரச வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய், மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில், பொதுமக்கள் தாமாகவே வந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். இது தொடர்பாக நோயாளிகள் பயப்பட வேண்டிய தேவையில்லை.
முற்றும்









