வெடித்து சிதறியது ஏன்?

அவள் அன்று அதிகாலையிலேயே எழுந்து சமைக்கத் தொடங்கிவிட்டாள். அவர்கள் வசிப்பது கொழும்பு மாநகரின் ஓர் சேரிப்புறம். அவளும் அவனும் காலை எழு மணிக்கு கொழும்பு மாநகர சபையின் வாகனத் தரிப்பிடம் ஒன்றிற்கு செல்ல வேண்டும். அங்கு தான் இருவருக்கும் மாலை வரை வேலை. வழமையாக இருவரும் சமைத்து பார்சல் செய்து எடுத்துச் செல்வார்கள். அவர்களது குடும்ப வறுமை காரணமாக அவர்கள் மண்ணெண்ணெய் குக்கர் ஒன்றினையே சமையலுக்கு பயன்படுத்தினார்கள் . அன்றும் சமையல் ஏறத்தாள முடிந்து விட்டது. கடைசி கறி அவிந்து கொண்டிருக்கும் பொழுது தான் அவள் அவதானித்தாள் குக்கர் வேலை செய்யவில்லை. அவள் குக்கரின் எண்ணெய் தாங்கியை திறந்து பார்த்தாள். அதில் மண்ணெண்ணெய் சிறிதளவு தான் இருந்தது. அவள் உடனடியாகவே அருகில் இருந்த கானில் இருந்த மண்ணெண்ணெய்யிணை எடுத்து குக்கரின் எரிபொருள் தாங்கியில் நிரப்பி விட்டு, எண்ணெய் தாங்கியின் முடியினை மூடி விட்டு திரும்பியதும் தான் தாமதம் பாரிய சத்தத்துடன் குக்கர் வெடித்து சிதறியது. அவள் பாரிய தீ்க்காயங்களுடன் உயிர் தப்பினாள்.
நாம் மேற்கூறியவாறன செய்திகளை பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் நாளாந்தம் பார்க்கின்றோம். பலருக்கு மண்ணெண்ணெய் குக்கர் ஏன் வெடிக்கிறது என்று தெரியாது. அதனை விளக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் இவ்வாறன சம்பவங்களை குறைக்கும் வகையிலும் இப்பதிவினை இடுகின்றேன்.
சாதாரணமாக மண்ணெண்ணெய்யில் வேலை செய்யும் குக்கர்கள் இரண்டு வகையில் உள்ளது
1. அமுக்கத்தில் வேலை செய்யும் குக்கர் இதில் எரிபொருள் தாங்கியில் அமுக்கம் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் மண்ணெண்ணெய் வளியுடன் கலந்து விசிறப்பட்டு எரிக்கப்படுவதன் காரணமாக வெப்பம் பிறப்பிக்கபடும். இவ்வகையான குக்கர் ஓரளவு பாதுகாப்பானது ஆனால் விலை கூடியது. மேலும் ஒப்பீட்டளவில் பராமரிப்பு செலவு கூடியது. இங்கு எரிபொருள் தாங்கியிலிருந்து மண்ணெண்ணெய் ஆனது குறிப்பிட்ட உயரம் வரை சென்று தான் எரிகின்றது இதன் காரணமாக வெப்பம் பெரிதளவில் எரிபொருள் தாங்கியினை அடைவதில்லை.

04

2. திரிகள் மூலம் வேலை செய்யும் குக்கர். இங்கு 25 தொடக்கம் 50 வரையான திரிகள் பயன்படுத்தப்படும். இது சாதாரண மண்ணெண்ணெய் கைவிளக்கு ஒன்று எவ்வாறு எரிகின்றதோ அவ்வாறே இந்த குக்கரும் வேலை செய்யும். வித்தியாசமான இங்கு பூரண தகனத்தினை உறுதி செய்யும் முகமாக burner பொருத்தபடிருக்கும். இவ்வகையான திரி குக்கர் அடுப்புகள் மிக மலிவானவை அத்துடன் ஆபத்து மிகுந்தவை.

03

இங்கு திரியாணது எரிபொருள் தாங்கியிள் இருந்து குறிப்பிட்ட அளவு உயரதிலேயே இருக்கும் ஏனென்றால் திரியானது மண்ணெண்ணெயிணை புவியீர்ப்பு விசைக்கு எதிராக குறிப்பிட்ட மிக குறைந்த உயரம் வரை தான் கொண்டுசெல்ல முடியும். இதன் காரணமாக எரிபொருள் தாங்கி நீண்ட நேர சமையலின் பொழுது வெப்பமடையும், மேலும் குக்கர் முழுவதும் உலோகத்தினால் செய்யப்பட்டு உள்ளதால் அவற்றின் மூலமும் வெப்பம் கடத்தப்பட்டு எரிபொருள் தாங்கியினை அடையும், மேலும் திரியானது தளர்வான நிலையில் பொருத்தப்பட்டிருந்தால் அது பொருத்தப்பட்டிருந்த ஓட்டையின் ஊடாக புகை மற்றும் வெப்பக் காற்று என்பன எரிபொருள் தாங்கியின் உட்புறத்தினை அடையும் இதன் காரணமாக தாமாகவே உட்புறம் உள்ள மண்ணெண்ணெய் தீப்பற்றி எரியக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. நீண்ட நேர சமையலின் பொழுது இடையில் மண்ணெண்ணெய் ஊற்றும் பொழுது இது மேலும் அதிகரிக்கும். மேலும் மண்ணெண்ணெய் பதிலாக பெட்ரோல் போன்ற எரிபற்று நிலை குறைந்த எரிபொருட்களை தவறுதலாக ஊற்றும் பொழுது சாத்தியககூறுகள் மேலும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு எரிபொருள் தாங்கியின் உட்புறத்தில் தீ ஏற்படும் பொழுது அதிகளவு CO2, CO போன்ற வாயுக்கள் அதிகளவு உண்டாகும் மேலும் எரிபொருள் தாங்கியின் உட்புறத்தில் உள்ள வாயுக்கள் அதிகளவு விரிவடையும் அதன் காரணமாக அதிகளவு அமுக்கம் உட்புறத்தில் உருவாகும் இதன் காரணமாகக் குக்கர் அதாவது எரிபொருள் தாங்கி வெடித்து சிதறி பாரிய சேதத்தினை விளைவிக்கும்.
மேற்குறித்த சந்தர்ப்பம் தவிர கீழ்வரும் சந்தர்ப்பத்திலும் தீ விபத்து ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. சிறிய மண்ணெண்ணெய் குக்கரில் ஒப்பீட்டளவில் பாரிய பாத்திரங்களை வைத்து அதிகளவு விசையுடன் சமையல் செய்யும் பொழுது குறிப்பாக அரிசி மா வறுத்தல் போன்றவற்றினை செய்யும் பொழுது குக்கர் தலைகீழாக விழுந்து சமையல் வேலை செய்பவரினை காயப்படுத்திய சந்தர்ப்பம் உண்டு.

மேலும் முக்கியமாக எம்மவர் குக்கர் வாங்கும் பொழுது அதனோடு சேர்ந்து வரும் அறிவுறுத்தல் பட்டியலை வாசிப்பதே இல்லை என்பதுவும் இவ்வகையான விபத்துக்களுக்கு ஓர் முக்கிய காரணம் ஆகும்.

தொட்டால் குற்றமா?

தற்கால இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் தூக்கில் தூங்கி யாராவது இறந்தால், கொலை செய்து தூக்கியதாகவே செய்திகள் வெளியிடுகின்றனர். அதுவும் கால்கள் நிலத்தை தொட்ட நிலையில் அவர் தூங்கிக் காணப்பட்டால் சொல்லி வேலையில்லை. இவ்வாறான சம்பவங்களில் பலரும் பலவாறாக தமது அபிப்பிராயங்களினை முன்வைப்பர். முக்கியமாக பலர் கூறுவது யாதெனில் கால்கள் தொட்ட நிலையில் தூக்கில் தொங்கி இறக்க முடியாது, யாராவது அடித்து கொலை செய்துவிட்டு இழுத்து வந்து தூக்கில் கொழுவியிருப்பார்கள் என்பதே.

சட்ட மருத்துவ ரீதியாக தூக்கில் தொங்கி இறத்தல் என்பது என்பது இறப்பவர் தனது முழு அல்லது பகுதி அளவிலான உடல் எடையினை விசையாக பயன்படுத்தி கழுத்தினை நெரித்து இறத்தல் ஆகும். பகுதி அளவிலான உடல் எடையினை பயன்படுத்தல் Partial hanging எனப்படும். இதன்பொழுது பொதுவாக கால் தரையினை தொட்ட வண்ணம் இருக்கும். தூக்கில் தொங்கி இறத்தல் சம்பவம் ஒன்றின் பொழுது மரணம் ஏற்பட்ட முறை மற்றும் சந்தர்பம் (cause and circumstance of death) ஏனைய காரணிகள் விலக்குவதால் அடையப்படும் (exclusion of other conditions). சிறைச்சாலைகள், போலீசின் தடுப்பு அறைகள் போன்றவற்றில் இருக்கும் தடுப்பு கைதிகள் கதவின் கைபிடியில் தூக்கு மாட்டி இறந்த சம்பவங்கள் நிறைய உண்டு.

பணமும் பிணமும்

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் வடமாகாணத்தின் பிரதேச வைத்தியசாலை ஒன்றில் பிணப் பரிசோதனை ஒன்றினை நடாத்துவதற்கு அவ்வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் இறந்தவரின் உறவினரிடம் பணம் கேட்டமையினையும் அதனை இறந்தவர்களின் உறவினர்கள் கொடுக்க மறுத்ததினை தொடர்ந்து அவ்ஊழியர் விடுமுறையில் நின்றதினை தொடர்ந்து பிணப்பரிசோதனை ஒரு நாள் தள்ளி போனதோடு மட்டும் அல்லாது அவரது உடல் அழுகிய நிலையில் இரு நாட்களின் பின்னர் பிண பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
இப்பதிவின் மூலம் அரசாங்க வைத்தியசாலைகளில் நடைபெறும் மரணங்களும் அதனைத் தொடர்ந்து பிணப் பரிசோதனை நடைபெறும் பொழுது எவ்வாறு பொதுமக்களிடம் இருந்து அதாவது இறந்தவரின் உறவினரிடம் இருந்து எவ்வாறு பணம் மோசடியான முறையில் பெறப்படுகின்றது என்பதினை வெளிப்படுத்துவதே.
1. சில சந்தர்ப்பங்களில் இறந்தபின் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. பொதுவாக அடுத்த நாளே செய்யப்படும். இவ்வாறான சந்த்ப்பங்களில் வைத்தியசாலை ஊழியர் இறந்த உடலினை குளிர்ப் பெட்டியில் வைத்து பாதுகாக்க பணம் கேட்பார்கள் கொடுக்கவிடில் உடலினை வெளியே வைப்பார்கள். அது தானாகவே அழுகிய நிலையில் பின்பு உறவினரிடம் ஓப்படைக்கப்படும் அல்லது எலி மற்றும் கரப்பான் போன்ற விலங்குகள் சேதப்படுத்திய நிலையில் ஒப்படைக்கப்படும்.

2. உடலினை வைத்திய சாலை விடுதியில் இருந்து பிரேத பரிசோதனை அறைக்கும் அதிலிருந்து வைத்திய சாலையின் வெளிப்புறம் கொண்டு வந்து தருவதற்கு பணம் கேட்பார்கள்.
3. சில வேளைகளில் விரைவாக பிரேத பரிசோதனையை முடித்து தர சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிசாருக்கு பணம் தேவை என வைத்திய சாலை ஊழியர் பணம் பெற்ற சந்தர்ப்பம் உண்டு
4. மரண விசாரணையிணை மேற்கொள்ளும் பொலிஸார் தான் வேறு கடமையில் இருப்பதாகவும் அல்லது வேறு ஏதாவது காரணம் கூறி வர காலதாமதம் ஆகும் என்றும் விரைவாக முடிக்க வேண்டும் எனில் சப்பொட் பண்ணுமாறும் கேட்டதுண்டு.
5. மரண விசாரணைக்கு வந்த பொலிஸார் தான் சாப்பிடவில்லை எனக்கூறி உறவினர்களை அழைத்து சென்று விலை உயர்ந்த கடையில் கோழிப் பிரியாணி சாப்பிட்டதுடன் ஒரு சிகரெட் பாக்கெட்டை முழுமையாக வாங்கிய சம்பவமும் நடந்ததே.
6. சட்ட வைத்திய அதிகாரி போன்று பதில் கடமையாற்றும் சில வைத்தியர்கள் இறந்தவரின் உறவினரிடம் வைத்தியசாலை ஊழியர்கள் மூலம் கொத்து ரொட்டியும் மெகா சோடா போத்தல் ஒன்றும் வாங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது.
7. தீடீர் மரண விசாரணை அதிகாரி தனக்கு மரணம் நடந்த இடத்திற்கு வருகை தருவதற்கு பணம் வேண்டும், வாகன வசதி வேண்டும் என்று அடம் பிடித்த சம்பவங்கள் உண்டு. அவ்வாறு செய்ய மறுத்த நிலையில் வேண்டும் என்றே தாமதமாக வந்தமையும் போலீஸ் ரிபோட்க்கு என்று உறவினரிடம் காசு வேண்டியமையும் நடந்துள்ளது.
8. பெட்டிக்கடைகாரன் (சவப்பெட்டி ) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடையும் தருவாயில் இருக்கும் உறவினரிடம் வந்து விசிட்டிங் காட் கொடுத்து தன்னிடம் வரும்படி கோரிக்கை விடுத்த சம்பவமும் நடந்துள்ளது.
9. விடுதி வைத்தியர் ஒருவர் சட்ட மருத்துவ ரீதியாக தீடீர் மரண விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத மரணம் ஒன்றிற்கு உறவினரிடம் வேண்டும் என்றே மரண விசாரணையினை இல்லாமல் செய்ய காசு வேண்டும் என்று கேட்டமையும் நடந்துள்ளது.
10. பிரேத பரிசோதனை செய்த வைத்தியசாலை ஊழியர் பணம் கொடுக்க மறுத்த சந்தர்ப்பத்தில் உடலினை உரிய முறையில் தைக்காமல் கொடுத்த சந்தர்ப்பமும், அண்மையில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தவரின் உடலில் இருந்து பெறுமதியான தங்க ஆபரணம் இணை கொள்ளை இட்ட சம்பவமும் நடந்துள்ளது.
இவற்றிற்கு என்னதான் தீர்வு? இலங்கையின் அரசவைத்திய சாலைகளில் நடைபெறும் தீடீர் மரணவிசாரணை மற்றும் அதனோடு இணைந்த உடற்கூராய்வு பரிசோதனை போன்றவற்றிக்கு எவ்விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பதே. பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்…

கடந்த சில வருடங்களாக வட மாகாணத்தில் பல்வேறு காரணகளுக்காக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவற்றில் சில பின்வருமாறு செய்திகளில் தலைப்பில் வந்துள்ளன.
“ஆசிரியர் ஒருவர் மிகவும் ஏசியதால் மாணவர் தூக்கில் தொங்கி மரணம்”
“அதிபர் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்தமையால் ஆசிரியர் நச்சு அருந்தி தற்கொலை
“பிரதேச செயலகத்தில் உயர் அதிகாரியுடன் கடமை முரண்பாடு, அலுவலகத்தில் இளைஞன் தற்கொலை”
தனியார் துறைகளில் நடைபெற்ற இதேமாதிரியான பல்வேறு தற்கொலை பற்றிய செய்திகள் வெளிவரவில்லை.
இலங்கையில் தற்பொழுது நாளாந்தம் 8 வரையான பேர்கள் பல்வேறு வகையான காரணங்களினால் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். உலக அளவில் தற்கொலை செய்து கொள்வோர்களின் பட்டியலில் இலங்கை 29 வது இடத்தில் இருக்கின்றது. இலங்கையில் அதுவும் வடமாகாணத்தில் கணிசமாக தற்கொலைகள் பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெறுகின்றன. நாம் தற்கொலைகளுக்கான காரணங்களை ஆராய வேண்டும். அவ்வாறு ஆராய்ந்தால் தான் நாம் அவற்றினை தடுக்க முடியும். தற்கொலைக்கு ஏதுவான காரணங்களில் சிலவற்றினை எம்மால் இலகுவில் தடுக்க முடியாது. ஆனால் தற்கொலைக்கு ஏதுவான பல காரணங்களை எம்மால் இலகுவில் தடுக்க முடியும்.
இவ்வாறான தடுக்கப்பட கூடிய பல காரணங்களில் ஒன்றே வேலைத்தளங்களில் ஏற்படும் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொள்ளல் ஆதல் ஆகும்.

முக்கியமாக இவ்வகையான தற்கொலைகள் மிக்க மனஅழுத்தம் காரணமாக நடைபெறுகின்றது. முக்கியமாக மேலதிகாரிகள் அளவுக்கு அதிகமாக மன அழுத்தத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்வதாலும் அல்லது வன்மையான சொற் பிரயோகங்களை செய்வதாலும் மாணவர் மற்றும் ஏனையோர் இலகுவில் மனம் உடைந்து விடுகின்றனர். மேலும் மேலதிகாரிகள் பலர் இவ்வாறு அதிகாரத்தொனியுடனும் வன் சொல் பிரயோகத்துடனும் நிர்வாகம் செய்வது தான் சிறந்த நிர்வாகம் என்ற நினைப்பில் உள்ளனர். பாடசாலை மாணவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்கள் வெவ்வேறு சூழலில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்களின் எதிர்வினைத் தாக்கமும் வேறுபட்ட தாகவே அமையும். மற்றும் மேலதிகாரிகள் தமக்கு கீழே வேலை செய்பவர்களின் மனத் திடகாத்திரத்தினை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஊழியர்களின் திறமைக்கு ஏற்ப குறித்த வேலையினை வழங்க முடியும் அல்லது வேலையின் அளவினை மாற்ற வேண்டும். அதனை விடுத்து ஊழியருடன் கடிந்துகொள்வதில் பயனேதும் இல்லை. அவ்வாறே ஆசிரியரும் மாணவர்களின் மனநிலை, பொருளாதார நிலை மற்றும் குடும்ப நிலை போன்றவற்றினை அறிந்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஏற்றவாறு கற்பித்தலில் மாற்றங்களை செய்யவேண்டும். அதனை விடுத்து இயந்திரங்கள் மாதிரி எல்லா மாணவர்களுக்கும் பொதுவாக கற்பித்தலினால் பிரயோசனங்கள் பெரிதாக வந்து விடப்போவதில்லை.
இன்றைய தினம் உலக தற்கொலையாளர் தடுப்பு தினம், நாளை மகாகவி பாரதியார் நினைவு தினம் இவற்றினை ஒட்டி இப்பதிவினை இடுகின்றேன்.

இச்சிறுமியின் மரணத்திற்கு யார் காரணம்?

வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?

அண்மைய செய்திகளில் இலங்கையில் சிறுநீரக வியாபாரம் அதாவது மனிதன் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு சட்ட விரோதமான முறையில் சத்திர சிகிச்சை மூலம் சிறுநீரகம் மாற்றீடு செய்யப்படுவதாக இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்வதே இப்பதிவின் நோக்கம் ஆகும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரத்தின் பிரகாரம் உலகில் நாளொன்றுக்கு சராசரியாக 60 பேர் அவயவ மாற்று சிச்கிசைக்கு உள்ளாகின்றனர். அதேவேளை 13 பேர் உரிய உறுப்பு கிடைக்காமை காரணமாகக் இறக்கின்றனர். இலங்கையின் பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டில் 400பேர் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்பட்ட வேளையில் ஏறத்தாழ 2000 பேர் உரிய சிறுநீரகம் கிடைக்காமல் மரணத்தினை தழுவினர். இதன் காரணமாகவே சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்றீடு சிகிச்சைக்காக பலர் அரச வைத்திய சாலையில் காத்து இருக்கின்றனர். இவ்வாறு உரிய உறுப்புகள் கிடைக்கமையே பல்வேறுபட்ட மோசடிகளுக்கு வழிவகுக்கின்றது. சாதாரணமாக முற்று முழுதாக சிறுநீரகம் பழுதடைந்த ஒரு நோயாளி தனக்குரிய சிறுநீரகத்தினை பின்வரும் வழிமுறைகளில் பெற்று கொள்ளலாம்

  1. இறந்த ஒரு நபரின் உடலில் இருந்து
  2. மூளை இறப்பு ஏற்பட்ட ஒரு நபரின் உடலில் இருந்து
  3. உயிர் உள்ள ஓர் நபரின் உடலில் இருந்து

இப்பொழுது பேசு பொருளாக இருப்பது இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட பிரதேசங்களில் இருந்து இளவயது இளஞர்களின் உடலில் இருந்துசிறுநீரகம் பலவந்தமாக அல்லது ஏமாற்று முறையில் அகற்றப்படுவது பற்றியதே.

இலங்கையில் இவ்வாறு ஒரு மனிதனின் இருந்து இன்னொரு மனிதருக்கு அவயவங்களினை மாற்றீடு செய்யும் பொழுது அவற்றின் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது Transplantation of Human tissues act No 48 of 1987 (certified on 11th December 1987) என்ற சட்டம் ஆகும் அத்துடன் சுகாதார அமைச்சின் சில சுற்றறிக்கைகள் Director General Health (DGHs) circulars of Ministry of health ஆகும்.

இங்கு முக்கியமாக உயிர் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து எவ்வாறு சிறுநீரகம் போன்ற அங்கங்கள் இன்னொருவருக்கு மாற்றீடு செய்யப்படுகின்றது என்பது பற்றி பார்ப்போம். பல்வேறுபட்ட காரணகளினால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் பொழுது நோயாளி ஒருவருக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்ய வேண்டிய தேவை ஏற்படும் அப்பொழுது சிகிச்சை அளிக்கும் வைத்தியர் நோயாளிக்கும் நோயாளியின் உறவினர்களுக்கும் சிறுநீரக மாற்றீடு செய்வதால் வரும் சாதக மற்றும் பாதக விளைவுகளை ஏற்படுத்து கூறுவார் அத்தோடு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிலாக மேற்கொள்ளும் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையின் சாதக பாதகங்களை எடுத்து கூறுவார் அதன் பின்னரே நோயாளி தனக்கு எந்தவிதமான சிகிச்சை வேண்டும் என்பதை தீர்மானித்து சிகிச்சையை பெறுவார். இங்கு வைத்தியர் உரிய மற்றும் தேவையான தகவல்களை தெரிவிக்க முடிவெடுப்பது நோயாளிதான்.

அடுத்த கட்டமாக நோயாளி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு விரும்பினால் அவர்தான் தனக்குரிய சிறுநீரக வழங்குநரை கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிடில் அவரின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர் முளை இறப்பு அடைந்த ஒருவரின் சிறுநீரத்திற்காக காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருப்பது என்பது நிச்சயமாக ஒருசில நாட்களோ மாதங்களோ அல்ல. நிச்சயமாக ஒருசில வருடங்கள் செல்லும் அந்த காலப்பகுதியில் நோயாளி ஒழுங்கான முறையில் வாரத்தில் ஒருசில தடவைகள் இரத்த சுத்திகரிப்பு சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். நோயாளி பல்வேறு காரணங்களினால் இறப்பினை சந்திக்கவும் நேரும். இவ்வாறான பாதக விளைவுகளை தவிர்க்கவே நோயாளி ஒருவர் தனது பழுதடைந்த சிறுநீரகத்திற்கு மாற்று சிறுநீரகத்தினை தேடுவர்.

முதலில் தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவரும் கொடுக்க முயற்சி செய்வார்கள். அது சரிவராது பட்சத்தில் வேறு ஓருவரிடம் இருந்து வாங்க முயற்சி செய்யவார் அப்பொழுதுதான் பிரச்சினைகள் எழுவதற்கு ஆரம்பிக்கும். இலங்கையில் தற்பொழுது உள்ள சட்டத்தின் பிரகாரம் உயிர் உள்ள ஒருவர் அல்லது இறந்து ஒருவரின் பின்னுருத்தாளிகள் வியாபார நோக்கம் கருதி உடல் உறுப்புக்களை விற்பனை செய்ய முடியாது. அன்பின் அல்லது பாசத்தின் காரணமாவே உறுப்புக்களை தானம் செய்யாலாம். எனவே வெளி நபர் ஒருவருக்கு பணத்தினை அல்லது வேறு பெறுமதியான பொருட்களை கொடுத்து அவரின் பூரண சம்மதத்துடன் அவரின் சிறுநீரகத்தின் பெறுவார்கள். இவ்வாறு சிறுநீரகம் போன்ற உறுப்புக்களினை பெறல் organ trafficking என்று சட்ட மருத்துவத்தில் அழைக்கப்படும். இவ்வாறு சிறுநீரகத்தினை பெற பத்திரிகைகள் மூலம் விளம்பர படுத்துவார்கள் அல்லது இதற்கான தரகர்களை அனுகுவார்கள்.

  1. எவ்வாறான மனிதர்கள் தமது சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை தானம் செய்வார்கள் ?

மிகவும் வறுமையில் இருப்பவர்கள் தமது வறுமையினை போக்க நினைத்து தமது சிறுநீரகத்தினை வழங்குவர் மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், மற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முளை வளர்ச்சி குறைந்தவர்கள் போன்றவர்கள் இவ்வாறு பணத்திற்காக வழங்க முற்படலாம். இதுபோன்றே சில பெண்கள் வாடகை தாயாக செயப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட வெளிவந்த செய்திகளின் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்கள் என்று ஒருவர் கூட இலங்கை போலீசில் முறைப்பாடு செய்யவில்லை.

  1. ஏன் இதுவரை சட்ட நடவடிக்கைகளை பெருமளவில் எடுக்க முடியாது உள்ளது?

இங்கு கவனிக்கத்தத்தக்க விடயம் என்னெவெனில் இவர்கள் யாவரும் 18 வயதினை அடைந்தவர்களே மேலும் இவர்கள் சுயவிருப்பதின் பேரில் சிறுநீரகத்தினை வழங்குவதால் பொலிஸாரினால் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கமுடியாமல் போகும். பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு தானம் செய்யபவர்கள் உரிய பணத்தினை கொடுக்காமல் ஏமாற்றப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு அவற்றிலும் அவர்கள் போலீசில் முறைப்பாடு செய்வதில்லை. மேலும் இவ்வகையான செயற்பாடுகளில் பல உயர் அரச அதிகாரிகள், அரசியல் வாதிகள் ஈடுபடுவதினால் அவர்களை பொலிஸாரினால் இலகுவில் அடைய முடியாது.

  1. வைத்தியர்கள் கொமிசன் பெறுகின்றார்களா?

ஒரு சிறுநீரக செயலிழப்பு நோயாளி சிறுநீரக வழங்குநர் ஒருவரினை பலத்த சிரமத்தின் மத்தியில் அழைத்து வரும் பொழுது மருத்துவ நிபுணர்கள் வழங்குனரின் குருதி வகை, அவருக்கு எயிட்ஸ், ஹெப்பட்டைட்டிஸ் போன்ற பல நோய்கள் இருக்கின்றதா என பரிசோதிப்பார்(சிறுநீரகத்தினை மாற்றும் பொழுது ஒத்துபோகுமா என அறிய பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்). அவற்றில் பிரச்சனைகள் எதுவும் இல்லை எனில் தொடர்ந்து சத்திர சிகிச்சை நிபுணரிடம் சிபாரிசு செய்யப்படும். இலங்கையில் உள்ள பல நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரில் பெரும்பாலானோருக்கு போதிய மருத்துவ அறிவின்மையாலும், உரிய தீர்மானம் எடுக்கும் திறன் இன்மையாலும் வைத்தியரின் முடிவினையே ஏற்கின்றனர். மேலும் குறித்த வைத்தியருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் (success rate) நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே இவற்றினை கருத்தில் கொண்டு அவர் ஒரு சிறந்த சத்திர சிகிச்சை நிபுணரினை சிபாரிசு செய்வார். தொடர்பாடல் முறைகளில் ஏற்பட்ட தவறுகளினால் (Communication error) தான் பெரும்பாலான மக்கள் சிபாரிசு செய்யும் வைத்தியர்கள் ஆதாயம் அடைவதாக நினைக்கின்றார்கள். அது உண்மையில் தவறான எண்ணம் ஆகும்.

  1. உண்மையில் உறுப்பு மாற்றீடு சிகிச்சை முறையில் தவறுகள் நடக்கவில்லையா?

ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இந்தியர் சிலர் இலங்கையில் வந்து சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு இலங்கையரின் சிறுநீரகமே பொறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணைகளின் பின்பு இலங்கையில் வெளிநாட்டவரின் உறுப்பு மாற்று சிகிச்சை தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் சிறுநீரக மாற்றீடு சிகிச்சையினை பெறுவதற்காக காத்திருப்பிப்போர் பட்டியலில் உள்ளோர் தனிப்பட்ட ரீதியில் செல்வாக்கினை பாவித்தும், வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலஞ்சம் வழங்கி விரைவாக சத்திர சிகிச்சை செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் நடந்துள்ளன. ஆதாரங்கள் இன்றி குற்றசாட்டுகளினை சுமத்துவது இறுதியில் எதுவும் அறியா நோயாளிகளினையே இறுதியில் பாதிக்கும்.

கொலையும் தற்கொலையும்

அண்மைய காலப்பகுதியில் இலங்கையில் கொலை – தற்கொலை என்ற வகை மரணங்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றமையினை அவதானிக்க கூடியதாக உள்ளது. பல சந்தர்ப்பங்களில் பெற்ற தாயே தனது குழந்தைகளுக்கு நஞ்சினை கொடுத்து அவர்களின் உயிரினை மாய்த்தும் தானும் நஞ்சினை அருந்தி உயிரிழக்கும் நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ரயில் தண்டவாளத்தில் குழந்தைகளுடன் குதித்தல் மற்றும் கிணற்றில் குதித்தல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

7899

இவ்வாறான கொலை – தற்கொலை சம்பவங்களில் பெரும்பாலும் பலியாகுவோர் ஏதும் அறியா அப்பாவி சிறுவர்களும் பெண்களுமே. பெரும்பாலான இச்சம்பவங்களுக்கு கடன் தொல்லை , மற்றும் கணவன் மனைவி இடையே உள்ள தீரா பிரச்சினைகளே காரணமாகக் அமைகின்றன. இவ்வாறான சம்பவங்கள் காரணமாக அண்மைக்காலங்களில் சில குடும்பங்கள் முற்று முழுதாக கருவறுக்கப்பட்டு இல்லாமல் போனமை மனதினை நெருடவே செய்கின்றது. உண்மையில் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சினைக்கு அவர்களில் ஒருவரை பழி வாங்குவதற்காக அப்பாவி சிறுவர்கள் பலி எடுக்கப்டுகின்றனர்.
சட்ட மருத்துவத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் நடைபெறும் பொழுது குற்றம் நடைபெற்ற பிரதேசத்தில் நடைபெறும் புலனாய்வு முக்கியமானது ஆகும். இதன் மூலம் சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் மிக இலகுவாக மரணம் சம்பவித்த சூழ்நிலை மற்றும் மரணம் ஏற்பட்ட காரணம் என்பவற்றினை கண்டறிந்து விடுவார். இவ்வாறான சம்பவங்கள் அல்லது ஒரு இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்படும் பொழுது அவற்றினை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸாரிணை அழைக்கவேண்டும்.

https://www.youtube.com/watch?time_continue=91&v=gXXxJ8EY1C8

https://www.youtube.com/watch?time_continue=33&v=2v-McLtd5dE

பேஸ் புக் பார்ட்டி (Facebook party)

இந்த நூற்றாண்டின் வியத்தகு கண்டுபிடிப்புகளில் ஒன்றே முகநூல். முகநூலை பாவிப்பதினால் நன்மையா, தீமையா என்ற விவாதம் நீண்ட காலமாகக் நடைபெற்று வருகின்றது. உண்மையில் நன்மையோ தீமையோ தீர்மானிப்பது பாவிப்பவர்கள் தான். இன்றைய இளைஞர் சமுகத்தில் பலர் முகநூலை பல்வேறு தீமையான விடயங்களுக்காக பாவிப்பவர்களும் உள்ளார்கள். அவற்றில் ஒன்றே இந்த Facebook party என்பது. முகநூலில் உள்ள ஒத்த கருத்துடைய பெரும்பாலும் ஒரே வயதுடைய, குறிப்பாக பாடசாலை மாணவர்கள் அதுவும் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்த Facebook party இல் ஒன்று கூடுகிறார்கள் . இலங்கையில் அண்மைக்காலங்களில் இவ்வாறு ஒன்று கூடிய பல பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப் பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
உண்மையில் இந்த Facebook party இல் என்னதான் நடக்கிறது என்று ஆராய்ந்தால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும் .

முக்கியமாக இந்த வகை பார்ட்டிகள் இளைஞர் குழு ஒன்றினால் ஒழுங்கமைக்கப்படும். அவர்கள் முதலில் இவ்வாறு நடைபெற்ற பார்ட்டிகளில் எடுக்கப்பெற்ற கவர்ச்சிகரமான படங்களை முதலில் முகநூலில் பதிவேற்றி வாடிக்கையாளர்களினை சேர்ப்பார்கள். பின்பு அவர்கள் உரிய இடத்தினை தெரிவு செய்வார்கள் அது பெரும்பாலும் கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டல் ஆக அல்லது காட்டு பிரதேசங்களில் உள்ள ஹோட்டல் ஆக இருக்கும். இவற்றில் மாலை தொடக்கம் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலரும் ஒன்று சேர்வர். இரவானதும் மதுபானத்துடன் தொடங்கும் பார்ட்டி போகப்போக போதைப்பொருள் ஐஸ் போன்றவற்றின் பாவனையுடனும் பெரும்பாலும் பாலியல் உறவுடனும் அடுத்தநாள் அதிகாலை முடிவுறும்.

இப்பொழுது இந்த வகை பார்ட்டிகளினால் என்னதான் பிரச்சனை? ஒவ்வொன்றாக பார்ப்போம்
1. இலங்கையில் தற்பொழுது அதிகளவு இளைஞர்கள் ஐஸ் என்ற methamphetamine என்ற போதைப்பொருளினை இங்குதான் பாவிக்க தொடங்குகின்றார்கள். சாதாரண பார்ட்டி தான் என்று முதலில் அழைக்கப்டும் மாணவர்கள் மற்றைய நண்பர்களின் வற்புறுத்தினால் போதைக்கு அடிமையாக தொடங்குகின்றனர்.மேற்குறித்த போதைப்பொருளினை தவிர சிகரெட் , மதுபானம் போன்ற பல்வேறுபட்ட போதைப்பொருள் பாவனையினை ஆரம்பிக்க இவ்வகையான பார்ட்டிகள் உதவுகின்றன.
2. இங்கு மேலும் குறிப்பிட தக்க விடயம் யாதெனில் பெண்கள் அதுவும் பாடசாலை மாணவிகள் இதனை பாவிக்க தொடங்கு கின்றார்கள்
3. உண்மையில் இவ்வகையான பார்ட்டிகள் போதைப்பொருள் வியாபாரிகள் , பாலியல் தொழில் செய்பவர்களின் போன்றோரின் மறைமுக அனுசரணையுடன் தான் நடைபெறுகின்றது. அவர்களின் நோக்கமே புதிய வாடிக்கையார் களை கண்டு பிடிப்பதே.
4. சில சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இவ்வாறான பார்ட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்கள் மூலம் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றலாம்
5. முக்கியமாக இவ்வகையான பார்ட்டிகளில் பொதுவாக யார் பங்குபெறுகின்றார்கள் என்று ஆராய்ந்தால் கிராமப்புறங்களில் இருந்து தொழில் மற்றும் கல்வி போன்றவற்றிக்காக நகர்ப்புறங்களிற்கு வரும் இளைஞர்களே.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறன பார்ட்டிகள் சிறிய அளவில் நடைபெற தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. எனவே விழிப்போடு இருந்து எதிர்கால சந்ததியினரை காப்பாற்றுவோம்

ஒரு முத்தம் ஒரு தப்பா?

அன்று காலையிலேயே எனது அலுவலகத்தின் முன்னால் வழமைக்கு மாறாக அதிகளவு மக்கள் கூட்டமாக நின்றார்கள். அவர்களை விலத்தியவாறு ஒருவாறு உள்நுழைந்தேன். அலுவலக உதவியாளர் தயங்கியபடி கூறினார், சேர் உங்களை சந்தித்து கதைக்க குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலையோடு சம்பந்தமானவர்கள் வந்திருக்கின்றனர் என்றார். அது வடமாகாணத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள ஓர் பாடசாலை அங்கு கடந்த வாரத்தில் அங்கு நடைபெற்ற ஓர் பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் தொடர்பாகவே அவர்கள் கதைக்க வந்திருப்பது தெரிந்தது. உடனே அலுவலக உதவியாளருக்கு கூறினேன் நான் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவியினை பரிசோதித்து விட்டேன். இது சம்பந்தமாக அவர்களுடன் கதைக்க வேண்டிய தேவையில்லை அவர்களை வெளியே அனுப்பும்படி கூறினேன். அலுவலக உதவியாளர் நீண்ட பகீர பிராயத்தனதின் பின்னர் அவர்களை வெளியே அனுப்பிய பின்னர் என்னிடம் கூறினார் சேர் இது அவர்களுக்கு ஒரு சின்ன கேஸாம் அதாவது அவர்கள் சம்பத்தப்பட்ட பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு முத்தமிட்டது தொடர்பானது. குறித்த ஆசிரியர் மிகவும் நல்லவராம் அத்துடன் பாடசாலை அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றுகின்றவராம். எனவே மருத்துவ அறிக்கையினை வடிவாக பார்த்து அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்து சென்றனர். மேலும் நான் எனது உதவியாளர் மூலம் அறிந்து கொண்டது யாதெனில் முத்தம் கொடுத்தல் என்பது பாலியல் துஷ்பிரயோகங்களில் பாரதூர மற்ற சாதாரண விடயம் எனவே இவ்வாறான விடயங்களை பெரிதாக்கவும் கூடாது, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கூடாது என்பதே.

இலங்கையில் உள்ள சட்ட திட்டங்களின் பிரகாரம் முத்தம் இடல், கட்டியணைத்தல் போன்ற பல்வேறு உடல் தொடுகைகளுடனான துஸ்பிரயோகம் பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகம் (Grave sexual abuse) என்ற வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாய்க்குள் அல்லது குதத்தினுள் அல்லது உடலின் வேறு எந்தப்பாகத்தினுள் எவரெனும் ஆள் தனது ஆண் உறுப்புக்களை அல்லது வேறு ஏதேனும் உடற்பாகத்தை பயன்படுத்தி பாலியல் திருப்தியை அடையச்செய்யும் செயலில் ஈடுபட்டால் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றம் புரிந்தவராகின்றார். (பிரிவு-365ஆ- குற்றவியல் கோவை)

இங்கு பாலியல் துஸ்பிரயோகத்தின் தன்மையினை விட அப்பெண்ணிற்கு இவ்வாறான சமூக, கலாச்சார விடயங்களுக்கு ஒவ்வாத செயற்பாடு மூலம் ஏற்படும் உளத்தாக்கம் அளவிடமுடியாது. இதன்காரணமாக பல ஆண்டுகள் கழித்தும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்கள் அதன் தாக்கத்தினை அனுபவிப்பர். மேலும் குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையும் விசேடமாக கருத்தில் கொள்ளப்படும். இவ்வாறன சந்தர்ப்பத்தில் பெண்ணின் மனநிலையானது விசேட மனநல வைத்தியர் ஒருவரினால் அலசி ஆராயப்படும். பாதுகாப்பான காவல் உள்ள இடங்களில் (custodial place ) அதாவது சிறுவர் அல்லது பெண் ஒருவர் வேறு ஒருவரின் அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் இடங்களான பாடசாலை, சிறைச்சாலை, புனர்வாழ்வு முகாம்… போன்றவற்றில் ஒருவர் தனது அதிகாரத்தினை பாவித்து அச்சுறுத்தி செய்யும் பாலியல் துஸ்பிரயோகங்கள் மிகவும் பாரதூரமானவை.

இறுதியாக பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் என்றாலே எல்லாம் பாரதூரமானவை தான். அவற்றில் மன்னிக்க கூடியது அல்லது மன்னிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. மேலும் இவ்வாறான குற்ற சாட்டுக்கள் எழும் பொழுது பாடசாலை நிர்வாகம் பூரணமான நடுநிலைமையான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஈரல் கறி  நல்லதா?

நம்மில் பலர் ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவற்றினை இறைச்சிக்காக வெட்டும் பொழுது ஈரலினை வேறாக எடுத்து கறி வைப்பார்கள். இவ்வாறே தற்பொழுது சூப்பர் மார்க்கெட்டுகளில் கோழியின் ஈரல் மற்றும் உள் அவயவங்கள் அடங்கிய பொதிகள் மற்றும் ஏனைய விலங்குகளின் ஈரல் போன்றவை விற்பனைக்காக வந்துள்ளன. நம்மவர் விலங்குகளின் ஈரலினை சிறுவர்களுக்கும், இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கும் மிக்க சத்து நிறைந்தது என்று விசேட கறி கொடுப்பார்கள். உண்மையில் ஈரல் விற்றமின் மற்றும் கனியுப்புக்கள் நிறைந்தது. குறிப்பாக விற்றமின் A,B,E மற்றும் K போன்றனவும் கனியுப்புக்களான இரும்பு, பொசுபரசு, செம்பு மற்றும் மக்னிசியமும் நிறைந்த அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் மனிதன் விலங்குகளின் ஈரலின் தொழில் என்னவென்றால் சமிபாட்டுத்தொகுதியில் இருந்து உடலில் உறிஞ்சுப்பட்டு வரும் உணவில் உள்ள எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றினை வடிக்கட்டி பித்தம் மூலம் மீளவும் சமிபாட்டுத்தொகுதிக்கு அனுப்பி அவற்றினை மலம் மூலம் உடலினை விட்டு வெளியேற்றுதலே ஆகும் (The liver  detoxifies chemicals and metabolizes drugs). இந்நிலையில் விலங்குகளின்  ஈரல் ஆனது எவ்வாறு மனித நுகர்விற்கு உகந்ததாக அல்லாமல் மாறியது என்பதே தற்போதைய கேள்வி ஆகும்.  மனிதன் எப்பொழுது வர்த்தக நோக்கம் கருதி கோழி, ஆடு மற்றும் ஏனைய விலங்குகளை உற்பத்தி செய்ய தொடங்கினானோ, அன்று தொடக்கம் இப்பிரச்சனை தொடங்கிவிட்டது. குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை அதாவது இலாபத்தினை பெறும் முகமாக மனிதனால் இவ்வாறு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு பல்வேறு இரசாயன பொருட்கள் உணவாகவும் மருந்தாகவும் கொடுக்கப்படுகின்றன.  தற்போதைய காலகட்டத்தில் எமது உடலுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன ஈரலில் தேங்கி அதிக அளவில் உள்ளதால் அவை மனித நுகர்வுக்கு உகந்ததா என்ற கேள்வி எழுகின்றது.  அண்மையில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் புரொயிலர் கோழிகளின் மற்றைய உறுப்புகளை விட ஈரலில் ஆசனிக்கு என்ற பார உலோகம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  வர்த்தக நோக்கம் கருதி வளர்க்கப்படும் விலங்குகளின் ஈரலில் எவ்வாறு மனிதனுக்கு தேவையில்லாத நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் மருந்துகள் போன்றன சேர்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.

  1. விலங்குகளின் குறிப்பாக வர்த்தக நோக்கத்தில் வளர்க்கப்படும் கோழிகளின் ஈரலில் உணவுச்சங்கிலி மூலமாகவும், வழங்கப்படும் உணவுகள் மூலமும் ஆசணிக் , கட்மியம் போன்ற பார உலோகங்கள் செறிவடைகின்றன. இவ்வாறே நீர்கொழும்பின் கடல்நீரேரியில் உள்ள மீன்களிலும், உள்ளூரில் விளைந்த சில அரிசி இனங்களிலும் மேற்குறித்த அதிகளவு பார உலோகங்கள் இருப்பது கன்டுபிடிக்கப்படுள்ளது.
  2. விலங்குகளுக்கு நோய் வராமல் தடுக்கவும் வந்த நோயினை குணப்படுத்தவும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் அதிகளவில் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாவிக்கப்படும் மருந்துகளின் பக்கவிளை பொருட்கள் (metabolic products ) அதிகளவில் ஈரலில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக levamisole (drugs used to treat parasitic worms) என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் புரொயிலர் கோழியின் ஈரலில் அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பென்சிலின், டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் விலங்கு இறைச்சி அதிலும் ஈரல் மூலம் மனிதனை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.
  3. குறிப்பாக பன்றி மற்றும் ஏனைய மிருக வளர்ப்புகளில் அவற்றில் கொழுப்பின் அளவினை குறைத்து தசையின் அளவினை அதிகரிப்பதற்காக பல்வேறுபட்ட ஹோர்மோன் வகைகள் பாவிக்கப்படுகின்றன. முக்கியமாக zeranol என்ற செயற்கை ஹோர்மோன் மற்றும்  17β-oestradiol என்ற இயற்கையாக காணப்படும் ஹோர்மோன்கள் உள்ளடங்கும். முக்கியமாக இவை விலங்குகளின் ஈரல் மூலம்  மனிதனை அடைந்து புற்று நோய் உட்பட்ட பல்வேறுபட்ட தாக்கங்களினை விளைவிக்கும் (Studies have shown that growth hormone residues in animal liver adversely affect human health including neurobiological, genotoxic and carcinogenic effect).
  4. விலங்குகளின் ஈரலில் அதிகளவு விற்றமின் A உள்ளது இதன் காரணமாக அதிகளவில் மற்றும் அடிக்கடி விலங்கு ஈரலினை உணவாக உட்கொள்ளுபவர்கள் விற்றமின் A நச்சாக்கத்திற்கு உட்பட்டதினை மருத்துவ அறிக்கைகள் மூலம் அவதானிக்க கூடியதாக உள்ளது. மேலும் கர்ப்பிணி தாய்மார் இவ்வாறு உட்கொள்ளும் பொழுது அவர்களின் கருப்பையில் இருக்கும் குழந்தையும் விற்றமின் A நஞ்சாக்கத்தினால் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு. மேலும் கொலஸ்ரோல் அதிகம் உள்ளவர்களும் விலங்கு ஈரல் உணவினை தவிர்ப்பது நல்லது.

இறுதியில், ஈரல் கறி சாப்பிடலாமா அல்லது சாப்பிட கூடாதா என்னதான் முடிவு? விடை இதுதான், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.  

இது அதற்கு சரிப்பட்டு வருமா?

அவர் அரச உத்தியோகத்தில் அதிகாரமிக்க பதவியில்  உள்ளவர். அவருக்கு சிறுவயது முதலே சலரோகம் உள்ளது. அதாவது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சலோரகம் உள்ளது. ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் வரவில்லை. ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக அவருக்கு நீண்டகாலமாக சலரோகம் இருந்ததன்காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் வரத்தொடங்கியது. காலில் கிருமித்தொற்று, சிறுநீரில் கிருமித்தொற்று.. என்றவாறு பல்வேறு பட்ட பிரச்சனைகள், அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலையில் அனுமதியாகி தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய நிர்ப்பந்தம்.

இவ்வாறு அவர் ஒருமுறை நான் வேலை செய்யும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற பொழுது எனது உறவினர் ஒருவர் அவரினை போய்ப்பார்த்து வரும்படி வேண்டுகோள் விடுத்தார். வைத்தியராக வேலை செய்யும் பொழுது இவ்வாறன அன்புக்கோரிக்கைகள் சிலவேளைகளில் தவிர்க்க முடியாதனவாகிவிட்டன.

நான் அவரினை பார்வையிட சென்ற பொழுது வைத்தியசாலையின் கட்டிலின் அருகில் உள்ள சிறு அலுமாரியின் மேல் புதிய ஏழு நெஸ்டோமோல்ட் டின்கள் அடுக்கப்பட்டிருந்தன. நானும் என்னை அறிமுகப்படுத்தி அவரினை சுகம் விசாரிக்கும் பொழுது கேட்டேன். நீங்கள் நெஸ்டோமோல்ட் பாவிக்கக் கூடாது தானே என்று. அடுத்து அவர் கூறிய பதில் தான் ஆச்சரியத்தினை தந்தது. புதிதாக உள்ள நெஸ்டோமோல்ட் அனைத்தும் அவரது உறவினர்களும் மற்றும் அவரது அலுவலகத்தில் வேலை செய்யபவர்களும் தான் கொண்டுவந்தவை.  மேலும் அவர் கூறியதாவது தான் அவற்றினை பாவிப்பதில்லை என்றும் இவ்வாறு தன்னை பார்க்க வருபவர்கள் தருபவற்றினை தான் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மனிதனாக பிறந்துவிட்டால் நோய்வாய்ப்படுவதும் காயங்களுக்கு உள்ளாவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளே. இவ்வாறே மனிதன் ஒருவன் வாழ்நாளில் ஒருமுறையாவது வைத்தியசாலை செல்லவேண்டிய தேவை ஏற்படும்.

எம்மில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை பார்வையிட செல்லும் பொழுது எவ்வாறான உணவு பொருட்களை அல்லது பால்மாவகைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவதில்லை. பலர் ஏனொதானோ என்ற வகையில் வெறுமனே கடமைக்காக எதாவது ஒரு பொருளினை வாங்கிக்கொண்டு செல்வார்கள். வேறுசிலர் இலகுவாக எந்த பொருள் கிடைக்கின்றதோ அதனை வாங்கிக்கொண்டு செல்வார்கள். சிலர் கணக்கு பார்த்து வாங்குவார்கள். மேலும் சிலர் பழவகை போன்றவற்றினை வாங்கிச்செல்ல அது கௌரவக்குறைவு என்று நினைக்கின்றனர். பெரும்பாலான  சந்தர்ப்பங்களில் நான் வாங்கிக்கொடுக்கும் உணவு அல்லது பொருட்களை நோயாளி பயன்படுத்துவாரா? என்று கூட நாம் சித்திப்பதில்லை. இதனால் நாம் செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராகவே போகும். தகுந்த பொருட்களை தெரிவுசெய்ய நாம் அதிகம் படித்திருக்க தேவையில்லை. நோயாளியின் நோய் பற்றி அறிந்திருந்தாலே போதுமானது. தேவையேற்படின் நோயாளியினை அல்லது அவர்களின் உறவினர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவர்களின் தேவையினை கண்டறிந்துகொள்ளலாம்.

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

குறிப்பு – மேற்குறித்த நிறுவனங்களின் உற்பத்தியினை அல்லது நற்பெயரினை பாதிக்கும் நோக்கில் இப்பதிவு இடப்படவில்லை.