
அவள் 15 வயது நிரம்பிய பாடசாலை சிறுமி தனது தமக்கையாருடன் வயிற்று குற்றுக்காக வெளி நோயாளர் பிரிவில் மருந்து எடுப்பதற்காக வந்திருந்தாள். வரிசையில் காத்திருக்கும் பொழுது அவளுக்கு குத்து அதிகமாகியது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள் அங்கு ஒருசில நிமிடங்களில் அவள் ஓர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அதன் பின்னர் தான் பிரச்சனை ஆரம்பித்தது. வைத்தியர் இது தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தார். அவர்களும் சீருடையில் குழுவாக வந்து வைத்தியசாலையில் சக நோயாளிகள் முன்பாக விசாரணை செய்தார்கள். முக்கியமாக அவர்கள் சிறுமியிடம் இந்த கற்பத்திற்ற்கு யார் தான் காரணம் என்று அறிய முயன்றார்கள் ஆனால் முடியவில்லை. இது தவிர வைத்தியர்கள், மருத்துவ மாணவர்கள், தாதியர், தாதிய மாணவர், சிற்றுளியர் ஆகியோர் தாங்கள் ஏதோ பொலிசாருக்கு உதவ வேண்டும் என்று எண்ணியோ அல்லது தமது மன வக்கிரத்தினை தீர்க்கும் முகமாக பல்வேறு கேள்விகளை கேட்டு மனோ ரீதியில் துன்புறுத்தினர் இறுதியில் எல்லோருக்கும் ஏமாற்றமே. ஒரு சில நாட்களின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி ஆகிய என்னிடம் அச்சிறுமியை பொலிஸார் அழைத்து வந்திருந்தனர். அவர்களின் முதல் கோரிக்கை சேர், கர்ப்பத்திற்கு காரணமானவர் யார்? என்பதை கேட்டு சொல்லுங்கள் என்பது தான். நானும் முதல் நாள் இரு மணித்தியாலங்கள் விசாரித்தேன், பதில் காண முடியவில்லை.
இவ்வாறே இரண்டாம் நாளும் ஒரு மணி நேரம் விசாரித்தேன், பதில் பெற முடியவில்லை. பின்னர் சிறுமி மனரீதியில் மிகவும் பாதிக்கப் பட்டு இருந்தமையினால் மன அழுத்தத்தை குறைக்கும் முகமாக கவுன்சிலிங் கிளினிக்குக்கு அனுப்பினேன். அங்கும் பெண் கவுன்சிலர் ஒருவர் சில மணி நேரம் விசாரித்தார். அப்பொழுது தான் பல அதிர்ச்சி காரணமாக உண்மைகள் வெளிவந்தன. சிறுமியின் இரத்த உறவினர் ஒருவரே கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தார். குடும்பத்தாரின் அழுத்தம் காரணமாகவே சிறுமி உண்மையினை மறைத்து வந்தார்.
சிலசந்தர்ப்பங்களில் ஓர் சந்தேக நபரிடம் இருந்து அல்லது குற்றவாளியி் டம் இருந்து சில தகவல்களை பெற பல மணி நேரம் செலவிட வேண்டும். குறிப்பாக பெண்களிடம் இருந்து. இதன் காரணமாகவே 5 மணிநேரம் அல்லது 8 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார் என்று செய்திகள் வெளிவருகின்றன. இவ்வாறு பல மணிநேரம் பல நபர்களினால் ஒருவரிடம் இருந்து வெவ்வேறு வாக்கு மூலங்கள் பெறப்பட்டு இறுதியில் ஒன்றாக இருந்து அலசி ஆராயப்படும். இதன் பின்னரே விடயங்கள் தெரியவரும். சில சந்தர்ப்பங்களில் விசேட மனோ தத்துவ நிபுணர்களின் பரிசோதனைக்கு உட் படுத்தப்படுவர் .
















இதேபோன்று இந்திய சினிமாவில் பொதுவாக காட்டப்படும் இன்னொரு காட்சி தான் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச உதவியுடன் இருக்கும் ஒருவரை மின்சார ஆளியினை நிறுத்தி அல்லது அவரது சுவாச குழாயை கழற்றி கொலை செய்வது. அண்மையில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தனது தாயார் இலங்கையில் இவ்வாறான முறையில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக சந்தேகித்து என்னிடம் இதுபற்றி வினவியிருந்தார். இலங்கையில் அரச வைத்திய சாலையில் அல்லது தனியார் வைத்தியாலையில் இவ்வாறான சமல்வங்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஏனெனில் அதி தீவிர சிகிச்சை பிரிவுகள் பல வைத்தியர்கள், தாதியா உத்தியோகத்தர்கள், சிற்றோழியர்கள் போன்றோரின் கண்காணிப்பில் 24 மணிநேரமும் இருக்கும். இது தவிர வெளியில் பெரும்பாலும் ஓர் காவலாளி கடமையில் இருப்பார். பாஸ் அனுமதி நடைமுறை வேறு அமுலில் இருக்கும் அதுவும் ஒரு நாளைக்கு இருவர் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படும். மேலும் பல சந்தர்ப்பங்களில் CCTV கேமராவின் கண்காணிப்பு வேறு இருக்கும் . இந்நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற வாய்ப்புக்கள் மிக மிக அரிது.இவ்வாறே போதை மருந்து மற்றும் கஞ்சா போன்றவற்றை கடத்துபவர்களும் இலகுவில் மாட்டிக்கொள்கின்றனர்.

